Skip to content
Home » அலப்பறை கல்யாணம்-15

அலப்பறை கல்யாணம்-15

  அத்தியாயம்-15

  ஆவேசமாய் மலரின் வீட்டிற்கு வந்து சேர, அங்கே தமிழரசன் கண்ட காட்சியில் உறைந்து போனான்.

  “ஏன்ப்பா.. என் உசுரை வாங்கற. சாகணும்னு நிதமும் துடிக்கற. இப்படி மெத்தையில் இருந்து விழுந்தா செத்து போக மாட்ட. என்ன தான் பிரச்சனை உனக்கு?

  தினம் தினம் என்ன தான் நினைப்ப. நானும் பத்து வருஷமா பார்த்துட்டு இருக்கேன். விவரம் தெரியறதுக்கு முன்னயிருந்து உன்னை நல்லா தானே பார்த்துக்கறேன்.” என்று கீழே விழுந்தவரை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு, அவர் யூரின் பெய்ததால் அங்கே அவ்விடத்தை கழுவி கொண்டிருந்தாள்.

பெரும்பாலும் கழுவி விட்டதும் சந்தில் வீட்டிற்கு வெளியே செல்லும் விதமாக வீட்டில் ஒரு சிறு ஓட்டையில் கழுவி வெளியேற்றும் விதமாக அமைத்திருக்க, டெட்டால் போட்டு துடைத்து விட்டு நிமிர, அங்கே அரசன் நின்றிருப்பதை கண்டாள்.

  கூடவே ஒருவர் வந்திருப்பதை கண்டதும் பார்வை இருபக்கம் பார்த்து “இங்க எதுக்கு சார் வந்திங்க? யாராவது பார்த்தா என்ன…” என்றாள்.

  முகத்தில் வேண்டாவெறுப்பை காட்டி வார்த்தையை முடிக்கும் முன், “உங்கப்பா செந்திலா? ரொம்ப வருஷத்துக்கு முன்ன ஒரு கல்யாண வீட்ல வேலை பார்த்தாரானு கேட்கணும். அந்த கல்யாண மாப்பிள்ளை வீட்ல விசுவாசமா இருந்திருக்கார். அந்த கல்யாணம் விமர்சனமா நடக்கும் போது, கல்யாண பொண்ணு நைட்டோட நைட் ஓடிப்போயிருக்கா. பொண்ணு வீட்ல ஓடிப்போனதை மறைக்க, மாப்பிள்ளை பையனோட மொத்த குடும்பத்துக்கும் விஷம் கலந்திட சொல்லிருக்காங்க. அதை மாப்பிள்ளை வீட்ல விசுவாசமா இருந்த செந்தில் தான் செய்திருக்கார். அந்த செந்திலுக்கு நகை பணம் தருவதா நம்பிக்கை தந்து பொண்ணோட அப்பா பேஷா திட்டம் போட்டு தர செந்தில் காரியத்தை கச்சிதமா செய்திருக்கார்.
   பொண்ணு ஓடிப்போனது மெதுவா தெரிந்து கலங்கியிருந்தவங்க, அடுத்த செகண்ட் இறந்திருக்காங்க. தான் ஏன் இறந்தோம் எதுக்கு இறந்தோம் எப்படி இறந்தோம்னு கூட தெரியாம மாப்பிள்ளை வீட்ல இருக்கற ஆட்கள் தினம் தினம் அந்த வீட்ல நாலு டூ ஆறு வந்துட்டு போறாங்க.
  இத்தனையும் செய்த அந்த செந்திலாவது பணம் வசதினு வாழ்ந்தாரா இல்லை. பக்கவாதம் வந்து படுத்தபடுக்கையா இருக்கான். யாருக்காக அந்த பெரிய பாவத்தை செய்தானோ அந்த பொண்ணு அவ அப்பாவுக்கு படுத்த படுக்கையில் ஒரு  நர்ஸ் மாதிரி சேவை செய்யறா.

  பை திவே மிஸ்டர் செந்தில் உங்க பழைய முதலாளி. இறந்தது தெரியாம ஆன்மாவா பையன் கல்யாணத்தை பார்க்க விரும்பி தினம் தினம் சுத்திட்டு இருக்கார்.” என்று அறிமுகப்படுத்தும் விதமாக பேச, செந்தில் கண்ணுக்கும் உதித்நாராயணன் தெரியவும் கண்ணீர் வழிய கைகள் ஆட்டம் கண்டது. வணக்கம் வைத்து மன்னிப்பு கேட்க துடித்ததை மலர் அறிவாள்.
 
  ஆனால் இதை இப்பொழுது விளக்கும் பக்குவம் அவளுக்கு இல்லை.

  அரசனை முதல் முதலில் கல்யாண வரன் தேடி ஆப்பில் பதிவு செய்தவனை புகைப்படத்தில் கண்டாள்.

  ஒரு அனாதைக்கு தான் அதிகப்படி என்ற இறுமாப்பு இருந்தது. நேரில் அவனை கண்டதும் இவ்வளவு பெரிய வீட்டை வாங்கி அதில் செடி கொடியை நட்டு விளைவிப்பதை கண்டதும் கூடவே வேறு தொழிலையும் கவனிப்பதை கண்டு பெருமையாக கவனித்து மரியாதையாக நடந்தாள். நடுவில் அரைகால் டவுசரை அணிந்து பால் வாங்க வந்தவனை கண்டு நகைப்புக்குரியவனாக தான் நினைத்தாள்.

  உறவுகள் சொந்தங்கள் வேண்டுமென்று பேசியதும் அதிகப்படியான மதிப்பு உருவானது. கூடுதலாக மதிப்பு காதலாக அரும்பியது. இதில் பேயாக பலரை கண்டும் அஞ்சாமல், ‘வாங்களேன் பழகுவோம்’ என்று அசாரது அங்கேயே பயப்படாமல் தங்கியவனை கண்டு வியந்தாள்.

  என்ன தான் பேய் அச்சுருத்தவில்லை என்றாலும் பேய் என்றால் படையே அஞ்சும் அல்லவா. அப்படியிருக்க, இவனின் அன்பு பேயாக அலைபவருக்கு விடுதலை கொடுக்கும் விதமாக, இன்று ஆதியும் அந்தமும் கண்டறிந்துவிட்டான்.
இதே மற்ற நேரமாக இருந்தால் சபாஷ் அரசு’ என்று பாராட்டியிருப்பாள். காதலில் மூழ்கியதால் கட்டிபிடித்தாலும் ஆச்சரியமில்லை‌. ஆனால் அனைத்திற்கும் காரணம் தன் தந்தை என்றதில் ஆடிப்போய் விட்டாள்.

  தந்தை நன்றாக திடகாத்திரமாக இருந்தவர், திடீரென பக்கவாதத்தில் விழுந்தவர் அதன் பின் பத்து வருடத்திற்கு மேலாக அவருக்கான தண்டனையாக படுக்கையிலேயே உணவு படுக்கையிலேயே மலம் மூத்திரம் பெய்து விடுவது, அதைவிட கொடூரம் தன் மகளே தன்னை பார்த்து கொள்கின்றாளே என்ற வருத்தம் செந்தில் முகத்தில் அவள் கண்டுள்ளாள்.

  இன்று தான் விடைக் கிடைத்தது. திடீரென பக்கவாதம் வந்ததன் காரணம். கொலை செய்தவர்கள் நேரில் வந்ததை பார்த்து பயந்து முடங்கியது முடக்குவாதம்.
 
    இதில் தவறுக்கான தண்டனை என்று எடுத்துக்கொள்வதா? அல்லது எந்த தவறுமே செய்யாத தனக்கும் சேர்த்து தண்டனை தந்து விட்டாரா என்று குற்றவுணர்வில் அரசனை கண்டாள்.‌

    உதித்நாராயணனை கண்டு, கையெடுத்து கும்பிட, “நாளைக்கு காலையில் அரசன் என்னை பிடிச்சி வச்சிக்கலைன்னா எனக்கு இன்று நடப்பது எதுவும் நினைவிருக்காதும்மா. என்ன செய்ய எங்க ஆன்மா எல்லாம் எங்க பையன் கல்யாணம் நடக்கலை என்ற ஒரே காரணத்துக்காக தான் அலைந்துட்டு இருக்கு.” என்றவர், தமிழ்மலர் மீது கையை வைத்து, “உன் பெயர் தமிழ்மலர்ல? சின்ன வயசுல பெயர் வச்சப்ப கண்ணுல தண்ணீரோட கையில் இருந்த குழந்தைம்மா நீ.

   நல்லாயிரு” என்று கூறிவிட்டு உதித்நாராயணன் மகனான அரசனை அழைத்து புறப்படலாம் என்றார்.

“போகலாம் அப்பா” என்று தமிழரசன் தமிழ்மலரை காணாது சென்றான்.

  தமிழ்மலரின் நெஞ்சமோ அனலில் இட்ட புழுவாக துடித்தது.
 
   இந்த காதல் வராமல் இருந்தாலாவது வலி சற்று குறைவாக இருக்கும். இன்று காதலன் முன்னிலையில் அனைத்தும் தரைமட்டமானதில் வலுவிழந்த கொடியாக அப்படியே சரிந்தாள்.

   இரவு சோறாக்கவில்லை, தந்தைக்கு ஊட்டவேண்டுமென்று எழுந்தாள்.

  அவரோ சாப்பிட மறுத்து விட, தட்டிலேயே கையை கழிவி, “ஒரு குடும்பத்தையே கொல்லணும்னு எப்படிப்பா மனசு வந்துச்சு.” என்று கேட்க, காது மடல் வரை வந்த கண்ணீர் மட்டுமே அவரின் பதில்.
 
     இங்கு  தந்தையின் கைப்பற்றி தமிழரசன், “அப்பா… செய்த தப்புக்கு அவருக்கு தண்டனை என்னவோ குறைவு தான். ஆனா பெத்த பொண்ணு தினமும் சாப்பாடு ஊட்டி விட்டு மலத்தை அள்ளி குளிபாட்டி பாத்துக்கறப்ப அவர் தினம் தினம் இதுக்கு செத்திருக்கலாம்னு தான் துடிப்பார். பக்கவாதம் மட்டும் இல்லாம இருந்தா அவர் சூசைட் பண்ணிருக்க சான்ஸ் உண்டு.” என்று பேச, “கடைசியில் ஒரு குடும்பத்தையே அழிச்சும் அவனும் சந்தோஷமா வாழலை பாரேன் அரசு. இதுக்கு ஒரு வார்த்தை என்னிடம் ஐயா பொண்ணு வீட்ல நகை பணம் கொடுத்து, என்னை வச்சி விஷம் கலக்க சொன்னாங்கன்னு சொல்லிருந்தா அவனை அன்னைக்கு மன்னிச்சிருப்பேன். குடும்பமும் செத்திருக்காது, அவனும் விசுவாசியா வாழ்ந்திருப்பான். இப்ப பாரு யாருமே வாழலை. காலையில் நீ என்ன சொன்ன. அந்த ஓடிப்போன பொண்ணோட கார் ரயில் தண்டவாளத்தில் சிக்கி மூவ் ஆகாம ஸ்பாட் அவுட்னு சொன்ன. பொண்ணோட குடும்பத்துல இருந்தவங்களும் இந்த பத்து வருஷத்துல உடல்நிலை சரியில்லாம இறந்துப் போயிருக்காங்க. இவனுமே வாழலை.

   இந்த உலகத்தில் வாழவும் தெரியலை. யாரையும் வாழவும் விடமாட்டேங்கறாங்க இல்லையா அரசு. ” என்று வருத்தமாய் பேசினார்.

  “அதென்னவோ உண்மை தான் அப்பா… இப்ப இருக்கற உலகத்தில் வாழவும் தெரியலை, நல்லா வாழ தெரிந்தவங்களையும் வாழ விடமாட்டேங்கறாங்க.” என்றவன் கண்ணீர் லேசாய் துளிர்த்தது.

அதிகாலை எழுந்த போது, பக்கத்தில் உதித்நாராயணன் இல்லை. ஹாலில் வந்து பார்க்க, ஆளாளுக்கு கல்யாண வீட்டில் சந்தோஷமாய் பேசி கிளம்ப, கல்யாண பொண்ணு ஓடிட்டா என்றதும், சோகமாகி பொத்தென்று விழ, ஆளாளுக்கு மறைந்தனர்.

  அதையெல்லாம் பார்த்த தமிழரசனுக்கு, சோர்வாய் மாறினான்.

  எப்பொழுதும் வரும் தமிழ்மலர் வரவில்லை. அவன் வாசலில் எதிர்பார்க்கவும் இவ்லை.
 
    மெதுவாக முகம் அலம்பி பல் விலக்கி, டீக்கடையை நோக்கி விரைந்தான்.
  
  “என்ன சார் இங்க டீ குடிக்க வந்துட்டிங்க. மலர் பால் ஊத்த வரலையா?” என்று கேட்டார் டீக்குடிக்க வந்தவரில் ஒருவர்..

   “எங்க சார் இப்ப எல்லாம் அடிக்கடி பால் ஊத்த வர்றதில்லை. மாடு கண்ணு போட்டதிலயிருந்து நடுவுல நடுவுல சாக்கு போக்கு சொல்லுது.” என்று டீக்கடைக்காரர் புகார் பட்டியலை வாசித்தார்.

  எனக்கும் அவளுக்கும் சம்பந்தமில்லை என்பது போல தமிழரசன் டீ குடித்து பணத்தை வைத்துவிட்டு வீடு திரும்பினான்.

   வீட்டுக்கு வந்து தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வளர்ந்திருந்த புற்களை அழகாக வெட்டி பாதையை சீர்ப்படுத்தினான்.

  அப்பொழுது சின்னதாக செருப்பு சப்தம். அது தமிழ்மலரின் காலடி செருப்பு சப்தம் என்று அறிந்துக்கொண்டான்.

  அவளை திரும்பி பார்க்க நினைத்தவனுக்கு, கண் முன் பெரிய வீடும் அதிலிருந்த மனிதர்களும் நினைவுக்கு வர, திரும்பவில்லை.

   உதடுகள் தந்தியடிக்க, கண்கள் குளமாக, பேருந்தில் ஏறி கண்ணீர்‌மடையை சத்தமின்றி உடைத்தாள்.
 
    இப்படியே பல நாட்கள் அமைந்தது. சொல்லப் போனால் இருபது நாட்கள் தாண்டியிருக்கும்.

  தமிழரசன் வீட்டில் தினமும் கல்யாண கோலம் காட்சியளிக்க, மற்றவர்களோடு தானும் அந்த நாடகத்தில் கலந்திட, பட்டுடையுடுத்தி வருவான். எப்படியும் பொண்ணு காணாமல் போனதாக உரைத்து அடுத்தடுத்து மற்ற உறவுகள் சரிந்து மாயமாகி விடுவதை பார்த்து விட்டு தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

இதற்கு தீர்வு, என்ன? இந்த வீட்டில் ஒரு திருமணம் அதுவும் அவர்கள் பையனுக்கு நடைப்பெற்றால் மோட்சமடைவாரா?! என்று சிந்தித்தான்.

  தன் மனதில் இருப்பவள் தமிழ்மலர் என்றதும், அவள் இந்த குடும்பத்தில் எந்த தவறும் செய்யவில்லையே. தந்தை செய்த பாவம் அவர்களது பிள்ளையை சேரும் விதமாக அவள் காதல் வலியோடு கொலை பழியையும் நெஞ்சில் வைத்து அல்லாடுகின்றாள்.

   தன்னை பெற்றெடுத்தவர்கள் யாரோ? அவர்கள் செய்த பாவமா தான் அனாதை என்ற இடத்தில் இருக்கின்றோம்‌ அவரவர் தலைவிதி என்று புரிய, எதையும் யோசிக்காமல் அவளை தேடி சென்றான்.‌

ஆனால் அங்கே கண்ணீரை துடைத்து, மாலைக்கு காசுன்னா, ப்ரீஸர் பெட்டி வேண்டாம். ஏற்கனவே ரொம்ப உடம்பு சரியில்லை. அதனால் எடுத்திடலாம் என்று எதிரே இருப்பவனிடம் பேச, செந்தில் இறந்து கிடப்பதை கவனித்து, மெதுவாக இறந்தவருக்கான மரியாதை செலுத்தும் விதமாக டீக்கடைக்காரர் அருகே தேமேயென நின்று கொண்டான்.‌

-தொடரும்.

15 thoughts on “அலப்பறை கல்யாணம்-15”

  1. M. Sarathi Rio

    அலப்பறை கல்யாணம்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 15)

    அச்சோ..! கடைசியில முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையுங்கிற மாதிரி, விதை ஒன்று விதைத்தால், சுரை ஒன்றா முளைக்கும். செய்த பாவம் அவரை வைச்சு செஞ்சிடுச்சு போல. இதுல பொண்ணுக்கு வேற தண்டனை கிடைச்சிடுச்சு. இப்ப அவர் இறந்தது, மலருக்கு தண்டனையா, சாப விமோசனமா…? தெரியலையே ?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    pethavanga panra pavam pillaingalukum varuthu la athu ethukune theriyama anupavichita malar ipo senthil um eranthutaru itha ninache . tamil konjam purinjikittan malar ah ipo papom eppadi pesi sammathika vaika poran therila

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *