Skip to content
Home » அலப்பறை கல்யாணம்-3

அலப்பறை கல்யாணம்-3

அத்தியாயம்-3
  
   தமிழரசன் வாழ்க்கையில் மேட்ரிமோனியால் எந்தவித மாறுதலும் ஏற்படவில்லை. தெரிந்தவரிடம் தரகர் மூலமாக வரனை சொல்லி வைத்தும் பிரயோஜனமின்றி நாட்கள் கழிந்தது.

சுமார் இரண்டு மாதம் இந்த நிலுவை மட்டுமே.

ஐடி ஜாப், டீம் லீடர் பொஷிஸன் என்று ஆசையாக வரும் ஆட்கள், அனாதை, யாருமற்ற உறவு சொந்த வீடு இல்லை என்றதும் வந்த வழியே சென்று விடுவதாக தரகர் கூறினார்.

தரகர் கூட, “ஏன் தம்பி உங்களை மாதிரி யாரும் இல்லாத பொண்ணை மணக்கலாமே” என்று அறிவுறுத்த, “இங்க பாருங்க சார்… நான் தான் தனியா வாழ்ந்துட்டேன். இனி வர்ற காலம் சொந்தம் பந்தம்னு வீடே நிறையணும். எனக்கு அப்படியொரு பொண்ணும், பொண்ணு குடும்பமும் வேண்டும்” என்று ஆணித்தரமாக தன் எதிர்பார்ப்பை உரைத்தான்.

தரகரோ, “ம்ஹூம் நீயே இந்தளவு எதிர்பார்த்தா, பொண்ணு கொடுக்கறவன் எதிர்பார்ப்பு இதுக்கு மேல இருக்கும். அட்லீஸ்ட் சொந்த வீடாவது இருக்கா?” என்று நிதர்சனத்தை கேட்டதும் தமிழரசனுக்கு கவலையானது.

உண்மை தானே… இவனுக்கு இது போல எதிர்பார்ப்பு இருக்க, பொண்ணு கொடுக்கும் வீட்டு ஆட்களுக்கு வரப்போகும் மருமகன் வீடு, வாசல் வேண்டும், நாளைப்பின்ன ஒரு சொந்தம் வேண்டும், இன்னார் உறவு, இன்னார் வழி என்று சொல்லி உறவை விரிவாக்க வேண்டாமா? என்று தோன்றாமல் இல்லை. ஆனாலும் தமிழ் பெரிய உறவுகள் சூழ்ந்த குடும்பத்தில் பெண் வேண்டுமென்ற முடிவை மட்டும் மாற்றிக்கவில்லை.

அதனால் நிறைய வரன் தட்டி கழிந்தது.

  அன்று டீம் லீடராக அலுவலகம் வந்ததும் அவனை சுற்றி ஆட்கள் கவலையாக ஏறிட, ‘என்ன எல்லாரும் ஒன்னு போல பார்க்கறாங்க’ என்று சுவாதனமாக வர, தமிழ் மூலமாக செய்யப்பட்ட வேலைகள் எல்லாம் யாரோ கணிணியில் அழித்து(டெலீட்) விட்டிருந்தனர்.

இரண்டு மாதம் செய்த வேலைகள் மீண்டும் பெறயியலாத தனக்கு மேலிருந்தவர் திட்டி தீர்க்க, இது எப்படி சாத்தியம் என்று பதில் தரமுடியாத இடத்தில் தமிழ் நின்றிருந்தான். இவனின் கடவுச்சொல் இல்லாமல் அவன் கணினியை திறக்க இயலாதே.

“ஒரு டீம் லீடர் இத்தனை கவனக்குறைவா இருப்பிங்கன்னு நான் எதிர்பார்க்கலை தமிழ். உங்களை டீம் லீடரா மாத்தினப்ப ரொம்ப பெருமையா இருந்தது. இப்ப தகுதியேயில்லாத ஒருத்தனிடம் பதவி போனதா வெட்கப்படறேன். ஆறு மாச புராஜக்ட். இரண்டு மாச வேலை எல்லாம் எரர் காட்டுது. எதுவும் ரீகலெக்ட் பண்ண முடியலை. உங்க கம்பியூட்டர்ல சேவ் பட்டி வைக்கலையா? எங்களுக்கு எரர் காட்டுது.” என்று கூறவும், “நான் என்னனு பார்க்கறேன் சார்” என்று தமிழ் அவனது கணினியை திறந்து பார்க்க முயன்றான்.

ஆனால் யாரோ அவன் கணினியில் மொத்தமாய் அழித்திருந்தனர். திரும்ப திரும்ப முயன்று கணினி வேலை செய்யவில்லை ஹாக் பக் என்று ஏதோ யாரோ செய்திருப்பது அப்பட்டமாய் தெரிய நன்கு மேலே இருப்பவரிடம் மன்னிப்பை நாடினான்‌.

“உங்களால் மத்தவங்களோட வேலை, உழைப்பு எல்லாம் போச்சு. இன்னும் நாலு மாசத்துல முடிக்கணும். இந்த மாசத்துல நிறைய அரசாங்க லீவு, மழை புயல் வேற வருது. அவனவன் சாக்கு சொல்லிட்டு வீட்ல இருப்பான். இதுக்கு பதில் என்ன?” என்று கேட்டு சட்டையை பிடிக்காத குறை.

தமிழரசன் இதுவரை பிளாக் மார்க் வாங்கியதே இல்லை. இன்று அவமானம் அடைந்தான். மேலிடத்தில் பேசி விரைவில் வேலையை முடிப்பதாக அவகாசம் கேட்டான். 

அதன் பின் பெயருக்கு தான் டீம் லீடர். தலைமை பொறுப்பு கை மாறியது போன்று ஒப்புக்கு சப்பானிய ஆக இருந்தான்.
ஒருமாதம் ஆறு பேரின் வேலையை இரவு பகலும் நேரத்தை கடத்தாமல் நண்பன் சதிஷ் துணையோடு ஆங்காங்கே சேமித்தவையை ஒன்று திரட்டி மீண்டும் ஒருவழியாக கொண்டு வரவே ஒன்றரை மாதம் ஆனது.

இதில் நற்பெயர் சேமித்தவை எல்லாம் காற்றோடு சென்றது, அதீத வேலை, சோர்வு ஆட்கொண்டது. நண்பர்களிடம் அரட்டை கூட தவிர்த்தான். அதோடு தனக்கு பெண் பார்க்கும் எண்ணத்தை கூட கைவிட்டான்.

ஒரு வழியாக ஆறாம் மாதம் முடிவடையும் முன் கொடுத்த பணியை சிறப்பாய் முடித்தான். தனியாளாக செய்துவிடவில்லை. தன்னோடு சிலரை அழைத்து தான் வேலையை பகிர்ந்து கொண்டான். ஆனாலும் அந்த அவமானம் அவனை இமை மூடி நிம்மதியாக உறங்க விடவில்லை.

ஒர்க் பிரஷர் என்று அவன் மனதை அழுத்த ஆரம்பித்தது. இன்று அந்த பணி முடியவும் வாழ்த்து தெரிவித்து கொண்டாட, தமிழரசன் பேப்பர் போட்டு விட்டு வந்தான்‌.

தனியாக காரணம் இல்லை‌. அவனது தவறு என்று அனைவர் முன்னிலையில் பேசிய வார்த்தைகள் அவனுக்கு இனி அங்கே வேலையில் இருக்க பிடிக்கவில்லை.

ஆளாளுக்கு இதெல்லாம் ஒரு மேட்டரா மச்சி வேலையிலருந்து போகாத” என்று கூறினாலும், மறுத்துவிட்டான்.

சதிஷ் கூட, “ஏன்டா… அதான் சொன்ன நேரத்துல முடிச்சி கொடுத்துட்டியே‌‌. மேலதிகாரி பேசி திட்டியது, நடந்து நாலு மாசத்துக்கு மேல ஆகுது. அதை மனசுல வச்சிக்காத” என்று கூறினான்.

தமிழரசனோ இல்லை சதிஷ். இந்த இடைப்பட்ட நாளில் கம்பியூட்டர் மட்டும் தான் என் கண்ணுல தெரியுது. வொர்க்கர் பிரஷர் கழுத்தை நெறிச்சிடுச்சு. அப்பவே முடிவு பண்ணிட்டேன். இந்த புராஜெக்ட் முடியவும் பேப்பர் போட்டுட்டு போயிடணும்னு.” என்று முடிவாக உரைத்தான்.

“வேலையில்லைன்னா என்னடா பண்ணுவ? உனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு வேற பார்க்கற? ஏற்கனவே சொந்த பந்தம் அப்பா அம்மா இல்லைன்னு பொண்ணு கிடைக்கலை. இதுல வேலையும் போனா? மச்சி நீ ரிஸ்க் எடுக்கற? நீ இங்கிருந்து போனா மட்டும் திரும்ப வெளியே இதே வேலை தானே பார்க்கணும்?” என்று தமிழை வேலையை விடாமல் இருக்க நச்சரித்தான்.

“இல்லைடா… நான் சேர்த்து வச்ச பணம் வச்சி ஒரு இடம் வாங்கி முதல்ல ரிலாக்ஸா இருக்கணும். அடுத்து ஏதாவது யோசிக்கறேன். கல்யாணத்துக்கு பொண்ணு வேண்டும்னு என் நிம்மதி இழக்க முடியாது. இந்த நாலு மாசம் வேலை அழுத்தம் மட்டும் தான்‌. ஏதோ அங்கயிங்க சிஸ்டம்ல முதல்ல சோகரிச்ச விஷயம் கலெக்ட் பண்ணி கால நேரம் பார்க்காம முடிச்சதே பெரிய விஷயம். அதோட சொந்த வீடு இன்வஸ்ட் தானே டா. பொண்ணு பார்க்கறவனுங்க எல்லாம் வேலை என்னனு கேட்டாலும், சொந்த வீடானும் கேட்கறாங்க. முதல்ல வீடு வாங்கணும் ” என்று முடித்தான்.

இதற்கு மேல் சதிஷ் சொல்வதற்கு என்ன இருக்கின்றது என்று அமைதிக்காத்தான்.

தமிழ் சொல்லி வைத்தது போலவே வேலை விட்டுவிட்டான். ஆளாளுக்கு சோகமாய் தட்டி கொடுத்தனர். மேலதிகாரியோ, அப்படியொன்றும் வற்புறுத்தவில்லை‌.

தமிழரசன் அதன் பின் திருவள்ளூர் மாவட்டத்தையும் தாண்டி ஒரு கிராமத்தில் தன் சேமிப்பில் ஒரு பழைய வீட்டை வாங்கினான்.

இதே சென்னை என்றால் கோடிக்கணக்கில் கூட இவ்விடம் விலை போகலாம். ஆனால் கிராமம் என்பதாலும் பழைய வீடு என்றதாலும், சொற்பமான விலையில், 30 லட்சத்தில் வீடு வாங்கினான்.

வீடு என்றால் அடுக்குமாடி அல்ல. தனி வீடு. சுற்றி செடி கொடி மரங்கள் என்று புதர் போல மண்டியிருந்தது. அதை சீர்ப்படுத்தவே ஆட்கள் வேறு இதோ வருகின்றேன் அதோ வருகின்றேன் என்று நாட்களை கடத்தி கொஞ்சம் போல தூய்மை செய்திருந்தனர்.

அப்பெரிய மண்டபம் போலிருந்த வீட்டில் ஏற்கனவே பெயிண்ட் அடித்து சுத்தப்படுத்தியிருந்தார்கள்.

சமையல் அறையையும், தங்க ஒரு அறையையும் இவனாக மீண்டும் சுத்தம் செய்துவிட்டு தமிழரசனே சீர்படுத்த துவங்கினான். என்ன இருந்தாலும் மற்றவர்கள் கடமைக்கு சுத்தமாக பார்ப்பார்கள்‌. இது அவன் வீடு அவனுக்கு ஏற்றது போல மாற்றி அமைத்து புகைப்பட சட்டங்களை மாற்றினான். பூஜாடியை வைத்தான். திரைசீலையை பார்த்து பார்த்து வாங்கி அணிவித்தான்.

கணினியில் தலையை விட்டு கண்ணிற்கு சோர்வாய் வாழ்ந்தவன். வெட்ட வெளிச்சம் மேலே நீல நிற ஆகாயம், சுற்றி சுத்தமான காற்று, கண்ணுக்கு எட்டியவரை பச்சை பசேல் என்ற செடி கொடிகள். புது அனுபவத்தை தந்தது.

என்ன சீர்ப்படுத்தி செடி கொடியை பராமரித்தால் கண்ணுக்கு அழகாய் காட்சி அளிக்கும்.

அதன் காரணமாக காலை முதல் மாலை வரை செடிகளை வெட்டும் மெஷின் மூலமாக கத்தரித்தான். மரங்களின் கிளைகளை கூட தேவையற்றது வளர்ந்தவையை வெட்டினான்.

அங்கு போவோர் வருவோர் யார் என்று விசாரிக்க பெயரையும் ஒன்டிக்கட்டை என்றும், முன்பு வேலை பார்த்த இடத்தின் பெயர் என்று பேசினான். பக்கத்தில் வீடு இல்லாததால் யாராவது இப்படி விசாரித்தால் முகம் சுழிக்காமல் பதில் தந்தான்.

ஏற்கனவே ஒரளவு வீடு விற்கும் போது சுத்தப்படுத்தியிருந்தாலும், அது பாதைக்கு மட்டுமே வழிவிட்டு இருந்தது.
அனைத்தும் முடித்து விட்டு ஒரு குளியல் போட்டுவிட்டு, தெருமுனையில் இருந்த ஹோட்டலில் இட்லி வாங்க சென்றான்.

காலை மாலை இந்த இட்லி கடை மட்டுமே‌. மதியம் மட்டும் போனில் உணவை ஆர்டர் செய்திடுவான்.

நன்றாக குளித்து சாப்பிட்டு வீட்டு கதவை அடைத்து, ஜன்னலை சாற்றி தனக்கான மெத்தையில் உறங்க படுத்தான்‌.

அறையில் நள்ளிரவில் அங்கும் இங்கும் கொலுசுகால்கள் சப்தம் எழுப்பியது.

இன்று உடல் அலுப்பு காரணமாக தமிழோ கண்ணை திறவாமல் அடித்து போட்டது போல உறங்கினான்.
இத்தனை நாள் இல்லாத தூக்கம் இன்று வருவதாக அவனுமே உறங்கினான்.

‘மாப்பிள்ளை பையனுக்கு இந்த பட்டு வேஷ்டி எடுத்து வச்சாச்சு.’

‘கோவிலுக்கு போயிட்டு வந்து கல்யாண மண்டப வாசல்ல பொண்ணு வீட்ல செயின் போடுவாங்க. ஆனாலும் நம்ம சார்புல இந்த செயின் பையன் கழுத்துல இருக்கணும்.’

‘பொண்ணை விட மாப்பிள்ளை அவசரப்படறார்’

‘கல்யாண பையன் மேடையில் உட்காருற நேரம் வந்துடுச்சு.’

‘அந்த நாதஸ்வர ஆளை கொஞ்ச நேரம் ஊத சொல்லுங்க. சினிமா பாட்டை அமத்துங்க’

‘பொண்ணு எங்க… ஒரு முறை கண்ணுல காட்டுங்க’ என்று காதில் பல குரல்கள் கேட்க, தமிழரசனோ “எனக்கும் பொண்ணை ஒருமுறை பார்க்கணும். எனக்கும் பொண்ணை காட்டுங்கயா” என்று தூக்கத்தில் உலறி சிரித்தான்.

-தொடரும்‌
-பிரவீணா தங்கராஜ்

5 thoughts on “அலப்பறை கல்யாணம்-3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *