Skip to content
Home » அவன் பெயர் அஜித்

அவன் பெயர் அஜித்

நீண்ட நாட்கள் கழித்து கால் பதிக்கிறேன். பெருமிதம் கொள்கிறேன். மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்று நான் பிறந்து வளர்ந்த மண்ணின் வாசனை சற்றும் மாறாமல் இன்றும் கலப்படமின்றி அதே வாசனையுடன் இருந்தது. நான் வீட்டின் வாசற்படியில் அடியெடுத்து வைத்த மறுநொடியே கடந்து போன பல இனிய நினைவுகள் என் சிந்தனையைக் கிள்ளிச் செல்ல ஆரம்பித்தன.

நான் வீட்டில் ஒரே பிள்ளை. தாய் தந்தையரின் அரவணைப்போடும் பாசத்தோடும் வளர்ந்து வந்தேன். உடன் பிறந்தோர்கள் எவரும் இல்லாததால் சற்று அமைதியான சுபாவத்துடனே வளர்ந்து வந்தேன். கூட்டத்தைக் கண்டால் ஒதுங்கிச் செல்வேன். எவரேனும் பேச முன்வந்தால் நான் பின்தங்கிச் சென்று என் அன்னையின் பின்னால் ஒழிந்து கொள்வேன்.

பெரியோர்கள் என்னைக் கண்டு சிரிப்பார்கள். “பொத்தி பொத்தி வளர்த்த மணிமேகலை ரொம்ப வெட்கப்படுது போல” என்று பல முறை அவர்கள் என் அன்னையிடம் கூறியதும் உண்டு. அவரும் அவர்கள் கூறுவதைக் கேட்டுச் சிரித்து அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைப்பார்.

ஆனால் இன்றோ, வீட்டிற்குள் நுழைய என் மனம் இடம் கொடுக்கவில்லை. அம்மாவின் நினைவுகள் என்னை வருத்தி எடுத்தன. வீட்டின் வாசலை மிதித்த நொடியே அம்மாவின் நினைவு. மீண்டும் பின்வாங்கினேன்.

திடீரென்று, தூரத்தில் இருந்து யாரோ என்னை அழைக்கும் சத்தம் கேட்டது.

“அஜித் ! எப்படிப்பா இருக்க? இப்போ தான் இங்க வர வழி தெரிஞ்சதா?” என்று கிராமத்துத் தலைவரின் குரல் என் செவிகளைத் துளைத்தது.

“அப்படி இல்லை ஐயா. சற்று வேலைப்பளு காரணத்தால் இங்கு வர முடியவில்லை” என்றேன்.

“சரி என்னா விசயமா இங்க வந்துருக்க? கல்யாணம் ஏதும் பண்ண போறியா தம்பி”, மீண்டும் மீண்டும் அவர் வினா எழுப்பிக் கொண்டே இருந்தார்.

” இல்லை ஐயா வீட்டு விசயமா தான். நான் இந்த வீட்ட வித்துட்டு வேற இடத்துக்குப் பொலாம்ன்னு இருக்கேன். அப்பறம் இந்த தோட்டத்துல உள்ள நிலத்தையும் குறைந்த விலைக்கு வித்துட்டுப் போகப் போறேன்” என்றேன்.

“என்னா தோட்டத்து நிலத்தயும் வீட்டையும் விக்கப் போறியா? உங்க அம்மா அப்பா இதெல்லாம் உனக்கு தான வாங்கி சேத்து வச்சிட்டு போய்ருக்காங்க” என்று மீண்டும் பதிலளித்தார்.

நான் ஏதும் கூறவில்லை. அவ்விடத்தைவிட்டகன்றேன். என் கண்கள் குளமாகின. அம்மாவின் நினைவுகளுடன் சேர்ந்து அப்பாவின் நினைவுகளும் என்னை வருத்தி எடுத்தன.

வீட்டிற்குள் நுழைந்தேன். சுவரில் மாட்டப்பட்டிருந்த எங்களின் இறுதி குடும்பப் படத்தைப் பார்த்தேன். சிலந்தி அப்படத்தைச் சுற்றி வலைகளைப் பிண்ணி வைத்திருந்தது. நான் அப்படத்தில் படிந்திருந்த தூசுகளைத் தட்டிவிட்டு சிலந்தி வலைகளை அப்புறப்படுத்தினேன்.

என் எண்ண அலைகள் பின்நோக்கிச் செல்ல ஆரம்பித்தன. 2016−ஆம் ஆண்டில் தீபாவளி பண்டிகைக் காலம். கிராமத்து மக்கள் அனைவரும் தீபாவளி கொண்டாட்ட ஏற்பாட்டில் மும்முரமாய் இருந்தனர். அப்பா அக்கொண்டாட்டத்திற்கு தலைமை வகித்தார். ஏழை மக்களுக்கு பண்டிகை நிதி வழங்க அங்கும் இங்கும் சென்று நன்கொடை திரட்டி வந்தார். அப்பாவிற்கு ஏழை மக்களுக்கு உதவ மிகவும் பிடிக்கும். பணப் பிரச்சனையால் அவதியுறும் மக்களுக்கு நன்கொடை திரட்டி அவர்களுக்கு வழங்கி ஏழை முகத்தில் புன்னகையைப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.


அம்மாவோ பண்பாட்டினை முற்றும் கடைப்பிப்பவர். ஆதிகால மரபுகள் அனைத்தையும் பின்பற்றியே ஒவ்வொரு பண்டிகையையும் கொண்டாடுவார். தீபாவளியின் போது முன்னோர்களுக்குச் சமைத்து படையல் வைத்து கிருஷ்ண பகவானை வழிப்பட்டு மகிழ்வார். வீட்டில் அழகிய நெய்தீபம் ஏற்றி வாசல் தெளித்து அரிசி மாவு கோலமிட்டு பட்சிகளுக்கும் சேர்த்து அன்னம் வைப்பார்.

அந்த இனியக் காட்சிகளை இனி காணமுடியாதே என்ற ஏக்கம் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. எனக்காக அவர் செய்து வைக்கும் பலகாரங்கள், எனக்காக வாங்கி வைத்த புத்தாடைகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக என் சிந்தனையைத் துளைத்தன.

மாலை வேளைகளில்யில் எங்கள் வீட்டில் கோலாகலமான தீபத்திருநாள் கொண்டாடப்படும். மத்தாப்பு வெடிச் சத்தம், பாட்டு சத்தம், உறவினர்களின் பேச்சு சத்தம் மற்றும் சிறுவர்கள் விளையாடும் சத்தம் அனைத்தும் எங்கள் வீட்டுச் சூழலையே மாற்றி அமைக்கும். ஆனால் இன்றோ, ஆரவாரத்துடன் இருந்த வீட்டில் மயான அமைதி மட்டுமே நிலவியது. வீட்டிற்குள் மனிதனின் நடமாட்டம் இல்லாமல் சிலந்தி, பல்லி மற்றும் பூச்சிகளின் நடமாட்டமாய் இருந்தது.

தலையில் கைவைத்த வண்ணம் வரவேற்பறையில் போடப்பட்ட நாற்காலியில் சாயந்தேன். ஒரு வேளை நான் வெளிநாட்டிற்கு செல்லாமல் இருந்திருந்தால் பெற்றோரைக் காப்பாற்றி இருக்கலாமோ என்று வருந்தினேன்.

மேல் படிப்பு முடித்தவுடன் எனக்கு துபாயில் மருத்தவர் வேலை கிடைத்தது. நானும் என் பெற்றோரிடமிருந்து விடைப்பெற்று வானூர்த்தியின் மூலம் துபாய் சென்றடைந்தேன். அங்கிருந்த சூழ்நிலை தமிழ் நாட்டின் சூழ்நிலையைக் காட்டிலும் முற்றிலும் மாற்றமாய் இருந்தது. முதலில் சற்று சிரமப்பட்டேன். அதன்பின் பழகிக் கொண்டேன்.

நான் துபாயில் வேலைக்குச் சென்ற 6 மாதங்களிலே வீட்டில் எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். விரைவாக திருமணம் முடிந்தவுடன் பேரக் குழந்தைகளைக் கண்ணில் காட்டும்படி கூறி என்னை கிண்டல் செய்தனர். ஆனால், எனக்கோ அம்மா அப்பா பார்த்தப் பெண்ணின் மீது நாட்டம் வரவில்லை. ஏனெனில், நான் வேலைக்குச் சேர்ந்த முதல் 3 மாதத்திலே எனக்கு ஒரு வாழ்க்கைத்துணை கிடைத்தது.

நான் வேற்று மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தேன். அதை வீட்டிலும் எடுத்துக் கூறினேன். இருப்பினும், என் பெற்றோருக்கு என் முடிவில் உடன்பாடில்லை. அவர்கள் என்னை தடுத்தனர். என் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். என்னை வீட்டிற்கு திரும்பும்படியாகவும் நான் செய்யும் செயல் பண்பாட்டிற்கு எதிரானது என்றும் கூறினார்கள்.

நான் அவர்களின் பேச்சைத் தட்டிக் கழித்தேன். என் முடிவில் குரங்குப்பிடியாக இருந்தேன். என் பெற்றோருக்கு என் பிடிவாதம் மன வருதத்தை தந்தது. தமிழ் பெண்ணை திருமணம் செய்யும்படி வற்புறுத்தினார்கள். நான் அவர்களின் சொல்லைக் கேட்கவே இல்லை. என் முடிவை மாற்றும் எண்ணத்தில் அப்பொழுது நான் இல்லை.

என் சொற்போர் பெற்றோரிடம் செல்லாது என்று உணர்ந்து ஒரு நாள் நான் என் வெள்ளைக்கார காதலியை இரகசியமாக திருமணம் செய்து கொண்டேன். திருமணம் செய்த பிறகு வீட்டிற்குச் சென்றால் அம்மா ஏற்றுக் கொள்வார் என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால், அனைத்தும் கானல் நீராகிப் போனது.

நான் வெள்ளைக்காரியைத் திருமணம் செய்துவிட்டதை அறிந்த என் பெற்றோர் கடும் சினத்துக்குள்ளாகினர். என்னை சராமாரியாக திட்டித் தீர்த்தனர். என்னை இனி வீட்டிற்கு வர வேண்டாம் என்றும் எனது பணம் ஏதும் இனி அவர்களுக்குத் தேவையில்லை என்றும் கூறி தொடர்பைத் துண்டித்துச் சென்றனர். அன்று தான் நான் என் பெற்றோரின் குரலை இறுதியாகக் கேட்ட நாள்.


நிலைமை மோசமடைந்துவிட்டதை உணர்ந்தவனாய் நான் என் மனைவியுடன் நாமக்கல்லுக்குத் திரும்பினேன். என் பெற்றோரிடம் பங்கிரங்கமாக மன்னிப்புக் கேட்டேன். அவர்கள் என்னை ஏற்றுக் கொள்வதாக இல்லை. என் முகத்தில் விழிக்க கூட விருப்பம் இல்லை என்று கூறி துரத்திவிட்டனர்.

நானும் என் மனைவியும் மன வருத்தத்துடன் துபாய் திரும்பினோம். என் பெற்றோரின் நினைவுகள் எனக்கு வந்து கொண்டே இருந்தாலும் நான் செய்த செயலை எண்ணி வருந்தினேன். பண்பாட்டின் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கும் அம்மாவிற்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துவிட்டோமே என்று எண்ணி மனமுடைந்து போனேன்.

நான் பல முயற்சிகள் எடுத்தும் என் பெற்றோர் மனம் இறங்கி வரவில்லை. நான் அவர்களுக்காக அனுப்பிய பணத்தையும் அவர்கள் பெற்று கொள்ளாமல் திருப்பி அனுப்பியது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சியது போல இருந்தது. இப்படியே 4 ஆண்டுகள் கழிய திடீரென்று ஒரு நாள் என் உறவினர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அவரின் மகளுக்குத் திருமணம் என்றும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

அப்படியே என் பெற்றோரைப் பற்றியும் விசாரித்தேன். அப்பொழுது தான் எனக்கு ஓர் உண்மை தெரியவந்தது. அப்பா என்னை நினைத்து மனக்கவலையில் தவறிவிட்டதாகவும் அம்மாவோ அப்பாவின் பிரிவின் வருத்தத்தை தாங்கமுடியாமல் அவரும் என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார் என்பதை அறிந்தேன். மேலும், தாங்கள் இறந்தால் கூட என்னிடம் கூற வேண்டாம் என்றும் என் முகத்தைப் பார்ப்பதே அவர்களுக்கு அவமானம் என்றும் கூறியதை என் தூரத்து உறவினரான மாமா மனவருத்தத்துடன் கூறியது என் மனதை சுக்குநூராக உடைத்தது.

இந்த ஞாபகங்கள் என்னை ஒருபுறம் வருத்தி எடுக்க என் மனைவி என்னை விவாகரத்துச் செய்து விட்டு சென்றது என்னை நோக வைத்தது. காதல் கண்களை மறைத்ததால் தமிழனின் பண்பாட்டையும் இழந்து வெளிநாட்டு மோகத்தில் மூழ்கி என் அன்பான பெற்றோர்களையும் இழந்துவிட்டேனே என்றெண்ணி பெருத்த அவமானத்திற்குள்ளானேன்.

“இந்த வீடு அப்பாவோடது. என்ன வளர்த்த வீடு. இதுல நான் வாழ்ந்தாலும் என் குற்றவுணர்ச்சியே என்னை கொன்றுவிடும்.” இந்த ஊரைவிட்டு செல்வது தான் சரி என்று முடிவெடுத்தேன். வீட்டுப் பிரச்சனையைத் தீரக்கும் வழக்கறிஞரைக் கண்டேன். வீட்டை விற்றுத் தர உதவி கேட்டேன்.

“இந்த மாதிரி தமிழர்கள் தங்கள் நிலத்த விட்டு போறதால தான் இன்னிக்கு சொத்து பத்து ஏதும் இல்லாம கஷ்டப்படுறாங்க. நம்ம மூதாதையர்கள ஒப்பிட்டுப் பாத்தா அவங்கள விட நம்ம இப்போ ஏழையா வாழ்ற காரணமே இதுதான் சார்”, என்றார் வழக்கறிஞர்.

“நான் ஏதும் கூறவில்லை. சிலையாய் நின்றேன். என் பெற்றோர் என் மீது எத்துணை அன்பு வைத்திருந்தால் அனைத்தையும் எனக்காக செய்திருப்பார்கள் என்று எண்ணி கலங்கினேன். காதல் போதையால் உண்மையான அன்பை இழந்துவிட்டோமோ என்று என் மனசாட்சி உருத்தியது.

“சார்…என்ன யோசிக்கிறிங்க” என்று வழக்கறிஞர் கூறியதும் சுயநினைவுக்கு வந்தேன்.

“கொஞ்ச காலம் அவகாசம் கொடுங்க சார் நான் யோசிச்சி சொல்றேன்” என்றேன். விரைவாக அலுவலகத்தை விட்டு வெளியேறினேன்.

வீட்டிற்கு புறப்பட்ட போது ஒரு சிலர் ஏதோ கிசுகிசுத்தது என் காதில் விழுந்தது.

“டேய் சுகுமார் இப்போ உள்ள பிள்ளைங்க தமிழ் பண்பாட்டையே மறந்துட்டு வெளிநாட்டு போதையில இருக்குங்க…கஷ்டப்பட்டு பெத்த வயிறு வீட்டுல துடியா துடிக்குது…ஆனா இதுங்க..” என்னு ஒருவன் கூற

சுகுமாரோ ” அதான் நம்ம நல்லகண்ணு பையன் அஜித்தும் அப்படி தானே….அவங்க அம்மா அப்பாவையே மறந்துட்டா வெள்ளைக்கார பொன்டாட்டி வந்தோன” என்றான்.

அவர்களின் பேச்சு எனக்கு வெறுப்பைத் தூண்டியது. விரைவாக வீட்டிற்குள் நுழைந்தேன். கோபத்தில் வீட்டுப் பத்திரங்களை வேகமாக மேஜை மீது வைத்துவிட்டு துபாய்க்கு கிளம்ப ஆயத்தமானேன். “இனி இந்த வீடே எனக்கு தேவையில்ல இந்த சொத்தும் எனக்குத் தேவையில்ல. அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வச்சிடுறேன். இது நான் செஞ்ச தப்புக்கு நானே கொடுத்துக்குற தண்டனை” என்று கூறிவிட்டு வேகமாக திரும்பினேன்.

சுவரில் மாட்டப்பட்டிருந்த அப்பாவின் படத்தின் பின்னால் இருந்து ஒரு கடிதம் கீழே விழுந்தது. வேகமாய் பிரித்துப் பார்த்தேன். அதில்..

*அன்புள்ள மகனே,

உன்னை பாலூட்டி சீராட்டி வளர்த்தோம். ஆனால் நீ எங்களுக்கு கொடுத்தது பெருத்த ஏமாற்றம்.

“பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு”

என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருந்தன.

6 thoughts on “அவன் பெயர் அஜித்”

  1. CRVS2797

    இப்ப அவன் திரும்பவும் துபாய்க்கு போறதை சரி
    என்கிறார்களா…? இல்லை, தவறு என்கிறார்களா…?
    புரியலையே…???

    1. Avatar

      அவன் நாமக்கல்லில் இருந்தால் அவனின் குற்றவுணர்ச்சியே அவனை வாழ விடாது என்பதை உணர்ந்து அவன் மீண்டும் துபாய்க்கே செல்கிறான் சகி. மேலும், அவன் மருத்துவ பணி துயாய்யில் செய்வதால் அவன் அங்கு சென்றுதான் ஆக வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *