Skip to content
Home »   அ-அம்மா ஆ-ஆதிரா

  அ-அம்மா ஆ-ஆதிரா

        அ-அம்மா ஆ-ஆதிரா

        “தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி சூர்யா அவள் கைப்பட எழுதிய கடிதம் கண்டு பெற்றோர் களங்கிய காட்சி மனதை ரணப்படுத்தியது.

    சமூக ஆர்வலர் பலரும் அந்த மாணவி படித்த பள்ளியில் ஆசிரியராக பதவி வகிப்பவரை பணிநீக்கம் செய்ய கோரி கண்டனம் செய்து கொண்டிருந்தனர்.

    மேலும் இது போன்ற பாலியல் கொடுமைகள் எதிர்த்து பலரும்…” என்று செய்தி போய்கொண்டிருக்க அதனை அனைத்து வைத்து தலையை தாங்கி அமர்ந்தாள் ஜானவி.

      இது போன்ற செய்தி வருடத்துக்கு பல தடவை வந்து அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதுவும் பெண் பிள்ளை பெற்றெடுத்தவர்களை கதிகலங்க வைத்து கவலை கொள்ள செய்கின்றது.

     எத்தனை விழிப்புணர்வு பதிவுகள் கொடுத்து பள்ளியிலேயே குட் டச்,
பேட் டச் என்று பாடம் நடத்துவதாகட்டும், வகுப்பில் இது போன்று பேசி புரியவைக்கும் முயற்சியாகட்டும், அடிக்கடி கதை நாவல், குறும்படம், சினிமா நாடகம் என்று எத்தனை விதங்கள் மூலம் விழிப்புணர்வு அடைந்தாலும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் வருடத்தில் புள்ளிவிவரத்தில் கூடுதலாகிறது.
   
     எத்தனை பெற்றோர் குழந்தையிடம் தற்போது தோழிகளாக மாறி போனாலும், பலன் என்னவோ குறிப்பிட்ட பெற்றோரிடம் சறுக்கிவிடுகிறது இச்செய்திகள்.

    பெற்றோரிடம் கூறியிருந்தால் இந்த மரணத்தை தவிர்த்திருப்பார்கள், அல்லது தீர்வு கூறியிருப்பார்களே. ஏன் இப்படி நடந்தது என்ற ஒன்றே ஜானவி மனதை குடைந்தது.

    மணி நான்கு ஆனதும் தன் மகள் ஆதிராவை அழைத்து வரும் நேரம் வந்ததும் தனது ஸ்கூட்டியை உயிர்பித்து பள்ளிக்கு கிளம்பினாள்.

     ஆதிரா ஆறாம் வகுப்பு மாணவி. ஜானவி தோள் உயரம் வரை வளர்ந்தவள். எந்நேரமானாலும் வயதுக்கு வரும் தோற்றத்தில் இருந்தாள்.

      ஜானவிக்கு பொதுவாகவே பெண் குழந்தைகளை பிடிக்கும் அதுவும் தனக்கு பெண் குழந்தையாக ஆதிரா பிறந்த பொழுது வெகுவாய் மகிழ்ந்தாள். அதிலும் அவளின் செயல்கள் ஒவ்வொன்றும் நாள் முழுக்க இரசித்து கொண்டே இருக்கலாம்.

      பள்ளியில் சென்று காத்திருந்த நொடியில் அங்கே தொலைக்காட்சியில் பார்த்த செய்தியை தான் அங்குள்ள பெற்றோர்கள் பேசி விவாதித்து கொண்டிருந்தார்கள்.

    ஜானவி அமைதியாக மற்றவர் பேசுவதை உள்வாங்கி கொண்டிருந்தாள். பெரும்பாலும் பெற்றோர்கள் “எங்க நம்ம பிரெண்டா ட்ரீட் பண்ணினாலும் ஒரு வயசுக்கு வந்ததும் மறைக்க பார்க்கறாங்க. அப்படி மறைக்காம பேசினா தானே” என்று இக்கால குழந்தைகளை குற்றம் சுமத்தினார்கள்.
 
      “ஆமா அப்படியே சொன்னாலும் என்ன ஏதுனு கேட்டிருக்கணும் சில பேரண்ட்ஸ் நின்று கேட்க நேரமில்லை” என்று பெற்றோரை குறை கூறியிருந்தனர்.

        மணியடிக்க வரிசையாய் பிள்ளைகள் வகுப்பு வாரியாக பெற்றோர் அழைத்து சென்றனர்.

    ஆறாம் வகுப்பு செல்லும் நேரம் ஜானவி பள்ளிக்குள் சென்று கிரவுண்டில் ஆதிரா வகுப்பு அமர்ந்திருக்கும் இடத்தில் சென்றாள்.

   தூரத்திலேயே ஆதிரா ஜானவியை கண்டு விட்டு, “மேம் மை மதர் இஸ் தேர் ஷல் ஐ கோ” என்று கேட்டுவிட்டு ஆசிரியரின் தலையசைப்பில் ஜானவியை நோக்கி நடையிட்டாள்.

       ப்ரீ.கே.ஜி சேர்த்தது போன்று உள்ளது அதற்குள் ஆறாம் வகுப்பு என்று பூரித்திருக்க வரும் பொழுது  மனதில் தங்கியதும் ஒருசேர புன்னகையை வெறுமெனே உதிர்த்தாள்.

      “லன்ச் ஒழுங்கா சாப்பிட்டியா… தண்ணி நிறைய குடிச்சியா” என்று முதலில் எப்பொழுதும் கேட்கும் வழமை கேள்விகளை கேட்டாள்.

       “யா மம்மி. நீ கொடுத்த சென்னா(மூக்கடலை) சாப்பிட்டேன். என் பிரெண்ட்ஸ் சாக்கோ பை குக்கீஸ் எடுத்துட்டு வந்தாங்க” என்றாள்.

     “டேய்லி அதையெல்லாம் சாப்பிட்டா என்ன சத்து கிடைக்கும். நான் தான் உனக்கு கொடுக்கற உணவு முறையோட பயன், சிறப்பு சொல்லி தானே கொடுக்கறேன்.” என்றாள் ஜானவி.

      “எஸ் மம்மி. நீ தான் யம்மியா செய்துடறியே எனக்கு இதே பிடிக்குது. ஜஸ்ட் சொன்னேன்.” என்றாள் ஆதிரா தோளைக் குலுக்கி.

     இருவரும் பார்க்கிங்கில் இருந்த தங்கள் வண்டியை அடைந்தனர்.
அதில் ஏறியதும் ஆதிரா ஆரம்பித்தாள்.

    “மா இன்னிக்கு சோசியல் மேம் லீவு. அதுக்கு பதிலா மேத்தமெடிக்ஸ் மேம் வந்து கிளாஸ் எடுத்தாங்க.

   அப்பறம் மா.. தமிழ்ல மார்க் வந்திடுச்சு சாரி மா பாட்டிக்கு(40) தெர்டி ஒன்(31) வந்திருக்கு” என்றாள் ஆதிரா.

     “என்ன ஆதிரா இது. நம்ம தாய் மொழி அதுல இப்படி பண்ணற. அட்லிஸ்ட் நாற்பதுக்கு முப்பத்தேழு வாங்க வேண்டாமா. முப்பத்திரெண்டு” என்று சலித்து கொண்டாள்.

     “கிளாஸ்லயே நான் இரண்டாவது மார்க். நீ என்ன குறை சொல்லற. போமா. நீ தமிழ் மீடியம் நான் அப்படியா. எனக்கு கஷ்டம் தான்.” என்றாள்.

     இதையே ஜானவி கொஞ்சம் மாற்றி சொல்வாள். நீ இங்கிலிஷ் மீடியம் டி இப்பவே இங்கிலிஷ் அள்ளி விடற. நான் தமிழ் மீடியம் எனக்கு இங்கிலிஷ் கொஞ்சமா தான் பேச வரும்” என்பாள்.
  
    “மா எங்க இங்கிலிஷ் கிளாஸ் மேம் இன்னிக்கு உங்க அம்பிஷன் என்னனு கேட்டாங்க. நான் சொன்னேன். அப்பறம் அவங்களும் ஸ்டூடண்ட் தானாம் மா. அவங்க பி.ஏ எம்.ஏ எம்.பில் பி.எச்.டி படிச்சிட்டு இப்ப வேற ஏதோ ஒரு கோர்ஸ் படிக்கிறாங்களாம்.”

     “படிக்கணும்னு இருந்துட்டா அதுக்கு எல்லையே இல்லை ஆதிரா.” இருவரும் வண்டியில் பேசி கொண்டே போவது தான். என்ன தான் தொலைக்காட்சியில் செய்தியை பார்த்ததிலிருந்து தோன்றிய ஐயத்தை எவ்வாறு இவளிடம் கேட்டு தெளிவுப்படுத்திட என்று தான் யோசனை சுழன்றது.

     “மா இந்த விண்முகில் பேய் கதை சொல்லறதை இன்னமும் நிறுத்தலாமா. பிரேக் டைம்ல பேசி பயமுறுத்த பார்த்தான்.” என்றதும் “ம்.” கொட்டினாள் ஜானவி.
     
      “ஆதிரா… வேற ஒரு ஸ்கூல் கேர்ள் இறந்துட்டா.” என்றாள் ஜானவி.

     “மா… சூர்யானு ஒரு டென்த் படிக்கிற அக்கா தானே.” என்று கேட்டாள்.

     “ஆமா உனக்கு தெரியுமா.” என்றாள் ஜானவி.

     “ஸ்கூல் பிரேயர்ல எல்லாம் ப்யூ மினிட்ஸ் மவுனஞ்சலி செய்ய சொன்னாங்க. அந்த அக்காவுக்காக.” என்றாள் ஆதிரா.

     “ஏன் ஆதிக்குட்டி உனக்கு ஏன் இறந்தாங்கனு ஸ்கூல்ல சொன்னாங்களா?” என்று கேட்டு பார்த்தாள்.

    “இல்லை மா. எங்களை அனுப்பிட்டு சில பெரிய அக்காவுக்கு என்னவோ ஸ்பீச் கொடுத்தாங்க. பட் என்ன காரணம்னு எனக்கு தெரியும்.” என்றாள்.

      பாதையில் மேடுபள்ளம் இருக்க ஒரு அதிர்வை தந்து வண்டி சென்றது. ஜானவி மனதிலும்.

   “என்ன தெரியும்.” என்றாள்.

     “குட் டச் பேட் டச் மாதிரி ஏதோ சொன்னாங்க. பேட் டச் ஆகி அந்த அக்கா கஷ்டமாகி இறந்துட்டதா. ஏதோ புரிந்தது. ஆனா  புரியலை.” என்றாள்.

     “ஆதிரா அந்த அக்காவை அவங்க ஸ்கூல் சாரே பேட் டச் செய்தாராம் அதனால இறந்துட்டா. அவள் யாரிடமாவது சொல்லிருந்தா அவ அப்பா அம்மா கம்பிளென் செய்து அந்த பேட் சாரை உள்ள தள்ளிருப்பாங்க. பட் அவ அப்படி செய்யலை.” என்றாள் ஜானவி.

     “உங்க ஸ்கூல்ல எத்தனை லேடி ஸ்டாப் எத்தனை ஜென்ஸ் ஸ்டாப்” என்று கேட்டதும் ஆதிரா யோசனை வயப்பட்டவள் இரண்டு பேர் தான் மா. ஒன்னு பிடி சார். மற்றொன்று சயின்ஸ் சார். அவ்ளோ தான்.” என்றாள்.

     “சார் எல்லாம் எப்படி பழகுவாங்க.”
 
     “அம்மா… நீ இதை மாதிரி என்னிடம் ஏற்கனவே பேசிட்ட. யாராவது பேட் டச் செய்தா வீட்ல சொல்லணும்னு. முன்னவே எத்தனை சார், செக்யூரிட்டி அங்கிள்? வேன் டிரைவர் அண்ணா எல்லாரையும் என்னிடம் பழகறதை சொல்லிருக்கேன். ஏன் மா அந்த அக்கா இறந்துட்டதா நியூஸ் வந்ததும் அகைன் பயமா.” என்றாள் ஆதிரா.

   ஆம் ஆதிராவிடம் சின்ன வயதிலிருந்தே குட் டச், பேட் டச் சொல்லி தான் வளர்த்தாள். வெளியுலகத்தில் பழகும் ஆட்களையும் கேட்டு வைப்பாள். இதுவரை அம்மா மகள் என்பதை எல்லாம் தாண்டி நல்ல தோழியாக தான் இருப்பார்கள்.

    ஜானவிக்கு வந்த சந்தேகம் அது தான். எல்லா பெற்றோரும் தோழிகளாக தான் பாவித்து இருப்பதாக பேசிக் கொள்கின்றனர். ஏன் தொலைக்காட்சியில் இறந்த சூர்யா பெற்றோர் உட்பட, பின்னர் ஏன் அந்த சூர்யா இறந்திட வேண்டும் தன்னை ஒரு ஆசிரியர் தவறாக தீண்டுகின்றான் தவறாக பேசி நெருங்குகின்றான் என்றால் முதலிலேயே கூற வேண்டியது தானே.

     “ஏன் ஆதிரா… உனக்கு மம்மி ஏற்கனவே சொல்லிருக்கேன். அது மாதிரி பேட் டச் செய்தா அம்மா அப்பாவிடம் சொல்லணும்னு. அப்பறம் ஏன் பிரெண்ட்லியா இருந்தாலும் சொல்ல மாட்டேங்கறாங்க. அம்மாவுக்கு அதான் டவுட்.

  இது உன்னை மாதிரி குட்டி பாப்பாவிடம் தானே ஆன்சர் கிடைக்கும். பேரண்ட்ஸ் எந்த இடத்துல தோழியா இல்லாமா மாறிப்போறாங்கனு.” என்றதும் பாதி தூரத்தை அடைந்திருந்தார்கள்.

      “அம்மா.. பேரண்ட்ஸ் எப்பவும் பிரெண்டா இருக்கணும். இந்த சோஷியல் மீடியால தலை காட்டுறப்ப வாட்ஸப் ஸ்டேடஸ் வைக்கிறப்ப இது மாதிரி இருக்க கூடாது.

    நான் எல்லாம் கடகட இரயில் வண்டி மாதிரி டெய்லி இன்சிடெண்ட் உங்களிடம் சொல்லறேன். ஏன்…?” என்று கேட்டு அவளாகவே “ஏன்னா நீங்களும் என்னிடம் உங்களோட ரொட்டின் ஒர்க் ஷேர் பண்ணறிங்க. மூவி, புட் ஐயிட்டம், ரிலேட்டிவ்ஸ் இது மாதிரி எதையும் மேலோட்டமா சொல்லிட்டு விடாமாட்டிங்க.

    ஏன் மம்மி நான் இந்த மூவி பார்க்க கூடாதுனா அதுல ஏஜ் மென்ஷன் பண்ணிருக்கு டா. லவ் சீன் அதிகமா வரும். கொலை சீன் மனசு பாதிக்கிற இப்படி வரும் மாத்து குட்டி பாப்பா கொஞ்ச நாள் கழித்து பார்த்துக்கோ சொல்லுவிங்க.

  புட் என்றால் அதோட பயன், சிறப்பு தேவையில்லாத புட் என்றால் அதோட தீமை எடுத்து சொல்லுவிங்க அதனால என்னால எளிதா அக்சப்ட் பண்ணறேன்.

   அதை விட முக்கியம் பேரண்ட்ஸ் நீங்க என்னிடம் உங்க ஷேரிங் பண்ணறப்ப எனக்கும் மாம் கிட்ட எல்லாம் ஷேர் பண்ணணும் என்ற உணர்வு தானா வருது. நீங்க நான் பேசறப்ப உஷ் வாயை மூடு என்று சொன்னா. அச்சோ மம்மிகிட்ட இனி இந்த டாபிக் ரிலேட்டிவா எதையும் பேசக்கூடாதுனு பயம் வரும்.

    நீங்க தான் எதுனாலும் எனக்கு தேவையானவரை சொல்லி தெளிவாக்கறிங்க. அப்போ என்னால எதுனாலும் சொல்லலாம்னு பயம் இல்லை. இதே போல நீங்க இருங்க. நானும் சேம் இதே போல பிக் கேர்ள் ஆனாலும் இருக்க போறேன்.

    நீங்க ஸ்ட்ரிட் இருந்தாலும் என்னோட பிரெண்ட் என்று முழு நம்பிக்கையை கொடுத்திருக்கிங்க.

    எல்லா பேரண்ட்ஸும் அச்சச்சோ இனி பிரெண்டா இருப்போமா என்று மாற முயற்சி பண்ணறாங்க. முதல்ல எல்லாம் இதுக்கு திட்டு, அதுக்கு திட்டு, இது பேசாதே, அது பேசாதேனு சொல்லிட்டு புதுசா பிரெண்டுனா எல்லா குழந்தையும் முழிக்கும். சொல்ல வேண்டியதை கூட தடுமாறி குழம்பி சொல்ல மாட்டாங்க.

   எதுக்கும் அ ஆல இருந்து நட்பு தொடரணும் மா” என்று ஸ்கூட்டியின் நிறுத்தம் பெற்று வீட்டை அடைந்த ஆதிரா தாயின் மூக்கை ஆட்டி படைத்து மாடிக்கு தந்தையை தேடி ஓடினாள்.
 
      ஜானவிக்கு தெளிவானது நிறைய பெற்றோர் ஒன்று சிறுவயதிலிருந்து நட்பாக குழந்தைகளோடு குழந்தையாக நட்பை ஆரம்பிப்பதில்லை.

    அப்படியே ஆரம்பித்தால் சில தவறான தகவல் பிள்ளைகள் அறியாது கேட்டு விட்டால் அதற்கு சடசடவென திட்டிவிட்டு அடுத்த நாள் தோழியென்று கூறினால் அங்கே குழந்தை குழப்பமடைகிறது. எது முக்கியம் எது முக்கியமின்மை என்று  அவர்களாகவே சிலதை மறைக்க முயல்கின்றனர்.

    இன்னும் சில பெற்றோரோ வயதின் ஏற்றத்தில் டீன் ஏஜ் படத்தை பார்த்தாலே என்னவோ கொலை குற்றமாக அதட்டி உருட்ட, தாமாகவே குழந்தைகள் ‘ஓ அப்படியெனில் இது போன்றவை தாயிடம் பேசுவதை தவிர்க்க வேண்டுமென பதிவாகிவிடுகிறது.

   ஆதிரா போன்ற அ ஆ வில் இருந்து கொடுக்கப்படும் நம்பிக்கை காணாமல் போக குழந்தைகள் தங்கள் மனதை திறக்கமாட்டாமல் பூட்டி வைக்கின்றனர் என்று புரிந்திட ஆதிராவுக்கு தான் எல்லா நிலையிலும் தோழி என்றதில் இருந்து சரிந்திட கூடாதென மகளை தேடி ஓடினாள்.

-சுபம்.
-பிரவீணா தங்கராஜ்.

  (பிரதிலிபி நடத்திய ‘அழகு குட்டி செல்லம்’ என்ற போட்டியில் வெற்றி பெற்ற வரிசையில் இடம் பிடித்தவை.)

1 thought on “  அ-அம்மா ஆ-ஆதிரா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *