அத்தியாயம்-13
வருணி தன் அத்தை ஷீலாவை கட்டிபிடித்து அழ, ஷீலாவோ, “உன்னை இப்படி நம்ப வச்சி கழுத்தறுத்துட்டானேடி தங்கம். அந்த பாவி மக, தொலைந்து போனவ தொலைந்தவளாவே இருக்க கூடாதா? உன் வாழ்க்கைக்குள் வந்து இப்படி பண்ணிட்டாளே.
அவ நல்லாவே இருக்க மாட்டா. நீ வேணுமின்னா எழுதி வச்சிக்கோ. கூடிய சீக்கிரம் செத்து சின்னாபின்னமா ஆவா.” என்று சாபத்தை வழங்க, “அத்தை… அக்காவுக்கும் மகிழ் அத்தானை கட்டிக்க உரிமையிருக்கு தானே?!” என்று கேட்டாள் வருணிகா.
தனக்கு எப்படி உரிமையோ அப்படி தானே வநீஷாவிற்கும் இருக்கும். ஏன் சாபம் வழங்குகின்றார் என்ற நல்லெண்ணத்தில் கேட்டாள்.
“உரிமை… பொல்லாத உரிமை. உனக்கு தானே மகிழ் குச்சி கட்டினான். உனக்கு தானே நிச்சயம் செய்தது. உனக்கு தானே கல்யாண பத்திரிக்கை அடிக்க எல்லாம் தயாரா இருந்தது.
அவ நடுவுல வந்து எல்லாத்தையும் மாத்திட்டு அவனை இழுத்துட்டு ஓடுவாளா?
அவளை இல்லை… நான் பெத்த நாயை சொல்லணும். எப்ப பாரு உங்க வீட்டுக்கு வந்துட்டு, இங்க வந்து புலம்புவானே.
அம்மா.. ஏன்மா மாமா என்னை முன்ன மாதிரி வருணி கூட பேச விடமாட்டேங்குறார், பழக விடமாட்டேங்குறார்.
மாமா வீடுன்னு போனா ஏதோ மூன்றாவது மனுஷாளா பார்த்து என்னை வெளியேத்தறதையே குறியா வச்சியிருக்கார்.
நான் அங்க போனா வருணியை ரூமுக்குள்ள துரத்திடறார்.
இந்த காரணத்துக்காகவே அவளை காதலிச்சு இந்த வீட்டு மருமகளா மாத்தறேன் பாருன்னு வக்கணையா சாவலிட்டு பேசுவானே. இப்ப உன்னை உதறி தள்ள எப்படி மனசு வந்துச்சு. அடேய் மகிழா… என் வயித்துல வந்து இப்படியொரு பாவத்தை செய்துட்டியே” என்று கத்துவது, மகிழனின் வீட்டு காம்பவுண்டில் சுவரோட்டி நிறுத்திய சாஹிர் செவியில் துள்ளியமாய் விழுந்தது.
‘தேங்காட்… மகிழ் உன் அம்மாவுக்கு கணீர் குரல். எனக்கு அவங்க என்ன பேசிக்கறாங்கன்னு தெரிந்துக்க ரொம்ப வசதியா இருக்கு’ என்று போனில் ரெக்கார்ட் வேறு செய்திருந்தான் சாஹிர்.
என்னவொரு குறை வருணி பேசுவது இம்மியளவும் கேட்கவில்லை.
“அத்தை… இப்படி பேசின நான் இனி இங்க வரமாட்டேன். ஏற்கனவே அப்பா என்னை மேல் படிப்புக்கு காலேஜ் சேர்க்க நினைச்சார். நான் இங்க இருக்க பிடிக்காம ஊட்டி காலேஜ்ல அட்மிஷன் எழுதி போட்ட கையோட இங்க வந்திருக்கேன்.” என்று தான் ஊட்டி செல்ல போவதை உரைத்தாள்.
“படி டி தங்கம். உன் மகிழ் அத்தானை நினைச்சி முடங்கிடாத.
பாவி… நீயாவது நல்லா படிச்சி நல்லவனோட வாழப்பாரு.” என்று ஆசிர்வதித்தார்.
‘மகிழனை விட நல்லவன் இந்த உலகத்தில் இருப்பானா? அப்படியே இருந்தாலும் தன் மனதில் இடம் பிடித்த மகிழ் அத்தானை எப்படி வெளியேற்றுவது? என்ற எண்ணம் போன போக்கில் புறப்படுவதாக கூறினாள்.
மகிழனின் தந்தை நடராஜனுக்கு பெண் குழந்தை தான் இறந்து போனது. ஆண் வாரிசாவது ஆளப்பிறந்தவனாக எண்ணியிருக்க, தங்களை பற்றி கவலைப்படாமல் சென்றதாக எண்ணி நொந்தார்.
இதில் அவர் வருணியிடம் பேசவே இல்லை. அத்தனை தயக்கம் தாய்மாமாவான அவர் முகத்தில் இருந்தது.
சேலையால் மூக்குறிந்து அவளை வழியனுப்பி வைத்தார் ஷீலா.
“இந்த உலகத்துல நமக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும். இனியாவது என் பையன் மகிழனை நினைக்காம, உன்னை தேடி எவனாவது காதலிக்கறதா வந்தா, அவன் நல்லவனா இருந்தா. நீயும் காதலி. மகிழனை நினைச்சி வாழ்க்கையை முடக்கிடாத” என்றார் பொத்தம் பொதுவாய்.
ஷீலா அத்தையிடம் பதிலுக்கு சரியென்று கூறாது இருசக்கர வாகனத்தை கிளப்பி ஓட்டினாள்.
அப்படியே இந்த இருசக்கர வாகனத்தை எதிரில் வரும் வண்டியில் மோத விட்டு இறப்போமா? என்றவள் வேறு எதுவும் சிந்திக்காமல், செயல்படுத்த துவங்கினாள் வருணிகா.
எதிரே வந்த கார்களில் இடிக்கும் விதமாக செல்ல எதிரே வந்த கார்கள் சட்டென திருப்பி வேகமெடுத்து.
சாஹிரோ, “ஸ்டுப்பிட் வருணி. இப்படியா வண்டி ஒட்டுவாங்க? வேணுமின்னே சாக ட்ரை பண்ணறா. கடவுளே..” என்று உயிரை கையில் வைத்து பின் தொடர, ஒரு அரசு பேருந்தில் மோத சென்றாள்.
அரசு பேருந்து ஓட்டுனருமே லாவகமாக ஓட்டி சுதாரித்து விட்டார்.
வண்டியை நிறுத்தி எட்டி பார்த்து ”ஏம்மா. சாகணும்னா வீட்ல மருந்து வாங்கி குடி. இப்படி பஸ்ல வந்து மோதுற. பிறகு டிவி பேப்பர்னு ‘அரசாங்க பஸ் டிரைவர் கவன சிதறலால் கல்லூரி மாணவி பலி’னு இஷ்டத்துக்கு எழுதவா? இல்லை என் குடும்பம் என்னை பார்த்து காறி உமிழவா. போய் எங்கயாவது சாவு” என்று தலையில் அடித்தபடி திட்டினார்.
வருணிக்கு கண்ணீர் சுரந்தது. இறப்பு கூட தனக்கு சாதகமாக இல்லையே என்று. ஆனால் காண்போருக்கு டிரைவர் திட்டுவதால் அழுவதாக தோன்ற, வண்டியை ஒரமெடுத்து இயக்கினாள்.
சாஹிரோ கடவுளிடம் ‘ஏ பகவான் இவளுக்கு எந்த ஆபத்தும் வராம என்கிட்ட கொடு” என்று ‘இன்ஸ்டன்ட்’ வேண்டுதல் விடுத்தான்.
அதன் பின் வருணி வீட்டுக்கு சென்றதும், சாஹிரோ ‘ஊட்டில வேற தங்க இடம் பார்க்கணும்.’ என்று அவளது கல்லூரிக்கு செல்லும் வழியில் ஏதேனும் பங்களா, அல்லது தனி வீடு, தனித்து இருக்கின்றதா என்று ஆராய்ந்தான்.
பணம் செலவழிக்க முன் நிற்பவனிடம் மற்றவை தானாக வந்து காலில் விழும். அப்படி தான் வீடும் கிடைத்தது.
ஊட்டிக்கு சென்று தான் தங்க தோதான அறையை தேர்ந்தெடுத்தான். கூடுதலாக பலபடங்களில் பார்த்த தந்திரமோ, ரகசிய அறையை போல ஒன்றை உருவாக்கினான். அதற்கு தனியாக பார்த்து பார்த்து அவனே வடிவமைத்தான்.
தனது திட்டத்தில் எந்தவிதமான ஓட்டையும் விழாமல் காத்திட, தனியறையில் சிறு ஓட்டையும் இல்லாமல் பார்த்து பார்த்து வடிவமைத்தான்.
வருணி தன்னை காதலிக்காத பட்சத்தில்… தன்னை யாரென அறிந்து ஒதுக்கும் பட்சத்தில்…
வலுக்கட்டாயமாக அவளோடு வாழும் வாழ்க்கைக்கு இந்த அறை போதுமானதாக அமையவேண்டுமென்று பார்த்து பார்த்து வடிவமைத்தான்.
மனமோ ‘அவள் அப்ப உன்னை விரும்ப மாட்டான்னு உனக்கு கன்பார்மா தெரியுது’ என்று கேலி செய்ய, ‘காதலிக்க வைக்கறேன். நான் யாருன்னு தெரியப்படுத்திக்காம என்னை காதலிக்க வைக்கிறேன்.’ என்று மனதோடு சூளுரைத்தான்.
மகிழனை மனதில் நினைத்து வளர்ந்தவளுக்கு மாற்றம் நிகழுமா?
இதோ மாதங்கள் நகர ,பெட்டி படுக்கை எல்லாம் வைத்து ஊட்டிக்கு தயாரானாள் வருணிகா.
தந்தை மகேஸ்வரன் மகள் முன் வந்து நின்றார். மகள் தன்னை பொருட்படுத்தாமல் செல்வதற்கு தயாராகவும், அவளருகே அமர்ந்தார்.
வருணிகா தந்தை அமரவும், நினைவுகளின் தாக்கத்தில் இருந்தவள் எழமுற்பட்டாள்.
”உன்கிட்ட பேசணும்.” என்றார் மகேஸ்வரன்.
என்ன என்பது போல பார்த்து விட்டு திரும்ப, “நீ நினைக்கிற மாதிரி நான் இல்லை. உனக்கு தெரிந்தவரை நான் உன்னை கட்டுப்படுத்தி, கட்டாயப்படுத்தி வளர்த்தவன். அதனால் நான் இப்ப எது சொன்னாலும் உனக்கு என்னை பிடிக்காது. என் பேச்சும் கேட்க கூடாதென்ற முடிவுல இருப்ப, இருந்தாலும் சொல்லுறது பெத்தவன் கடமை.
வநீஷா மகிழனை காதலிச்சு கல்யாணம் செய்துக்க ஓடியதாக போலீஸ் சொல்லுது.
அது உண்மைன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். உன் அக்கா என்னைக்காவது வீட்டுக்கு வந்தா அவளை மனதார வரவேற்பேன். ஆனா அதுக்காக அவளை தேடி போய் சந்திக்க என் மனசுல திடமில்லை.
உனக்கானவனை தேடி கண்டுபிடிச்சு என் கடமையை முடிக்க நினைச்சேன். அதுல பெரிய அடி. மகிழன் இப்படி செய்வான்னு நினைக்கலை. உடனே உன்னால மகிழனை மறக்க முடியாதுன்னு எனக்கு புரியுது. ஆனா இப்படியே இருந்துடாத. அவனை மறந்துடு. அப்படியே அப்பாவை மன்னிச்சிடு.” என்று தழுதழுத்தார்.
மகிழன் மகளிடம் முத்தமிட்டு இருந்ததை நேரில் பார்த்தவராயிற்றே. ‘மறந்துவிடு’ என்று சாதாரணமாய் சொல்ல முடியவில்லை. உடலாய் உயிராய் இணைந்தார்களோ என்று பயந்தவராய் கேட்கவும் தயங்கினார். ஏனெனில் அடிக்கடி வெளியே சந்திக்க அழைத்து சென்றானே மகிழன்.
ரேணுகா இரண்டு மூன்று முறை நாசூக்காய் ‘மகிழன் உன்னோட வேலி தாண்டி பழகலையேடி?’ என்று அவன் வநீஷாவோடு ஓடியதாக கேள்விப்பட்டதும் கேட்டார். வருணி எதற்கும் பதில் தராமல், பிடித்து வைத்த பிள்ளையாராய் இருந்தவளே.
மறுமுறை அழுதவாறு இருந்தவளிடம் துருவி துருவி கேட்டதற்கு கேட்டதற்கு வருணிகாவே “நான் அந்தளவு இடம் கொடுக்கலைம்மா. பரிசுத்தமா தான் இருக்கேன். என் உடம்பு சுத்தமா கற்பு கெடாம இருக்கு. மனசு தான் கற்பு கெட்டு போச்சு. மகிழனை புருஷனா நினைச்சிட்டேன்.” என்று அழுதாள்.
ஆனாலும் தாய் தந்தையருக்கு என்ன கூறி மகிழன் மீதான எண்ணத்தை கலைக்க தெரியவில்லை. படிக்க செல்வதாக தங்களிடமிருந்து பிரிந்து செல்லும் முடிவில் யார் தடுப்பார். அவளுக்கும் தனிமை தேவைப்படுகின்றதே.
புறப்படும் நேரம் ரேணுகா பூஜையறைக்கு அழைத்து சென்று விபூதியிட்டார்.
கூடவே கறுப்பு கயிற்றை மகளின் கையில் கட்டி விட்டார். ‘இனி அந்த கடவுள் தான் உனக்கு துணையென்பது போல கயிறு அவளை பற்றிக்கொண்டது.
எதற்கும் மறுத்து சொல்லி பழகாததால் அமைதியாக நின்றாள் வருணிகா.
வாசலை தாண்டும் நேரம், ”வநீஷா அக்கா மாதிரி மொத்தமா உங்களை உதற மாட்டேன். உங்க கூடவே இருந்ததால உங்க மேல நிறையவே அன்பு இருக்கு. என் மனசு மகிழ் அத்தானை மறந்து, கொஞ்சம் தேறும்னு நம்பறேன். சும்மா அடிக்கடி போன் போட்டு தொந்தரவு பண்ணாதிங்க” என்று கையெடுத்து கும்பிட்டு கிளம்பினாள்.
யாரும் கூட வரவேண்டாமென சொல்லிவிட்டு தனியாக சென்றாள்.
ஊட்டிக்கு செல்லும் ஏசி பஸ்ஸில் ஏறவும், சாஹிர் தன் காரை இயக்க ஆரம்பித்தான்.
பின்னால் மகிழனை காரில் சாதாரணமாய் படுக்க வைத்திருந்தான். வேலைக்கு என்று வைத்திருந்த பையன் மடியில் படுஜோராக படுத்திருந்தான் மகிழன். மருத்துவ உபகரணங்களை தேவைக்கு மட்டும் மாட்டியிருந்தான். மற்றவை கழட்டியிருந்தான் சாஹிர்.
வேலையாளிடம் ஊட்டியில் தம்பியை வைத்து பார்த்துக் கொள்வதாக கூறியிருந்தான்.
உடன்பிறப்பின் நலனுக்காக ஊட்டிக்கு புறப்படுவதாக காட்டிக் கொண்டான்.
மகிழனை கொல்ல நினைத்து தான் இங்கிருந்து கிளம்பும் நேரம் நினைத்தான். ஆனால் வருணி ஒரு கட்டத்தில், தன்னை அறிந்தும் வரமறுத்தால் அவளிடம் காய் நகர்த்த துருப்பு சீட்டாக மகிழன் இருக்கட்டுமென எண்ணியதும் ஒரு காரணம்.
ஊட்டியில் வாங்கிய பங்களாவில் தனியாக மர்ம அறையை வருணிகாவுக்கு தயார்படுத்தியதில், தற்போது மகிழனை அடைத்து வைப்போம் என்ற மிதப்பு.
தன்னை மீறி எதுவும் நடக்காது என்று உறுதியாக இருக்க, பேருந்தை பின்தொடர்ந்தான் சாஹிர்.
அடிக்கடி மகிழன் மீதும் கண்பதித்தான்.
செக் போஸ்டில் ஒருதடவை நிறுத்திய போது, போலீஸ் மகிழனை பற்றி கேட்க, ஊட்டியில் சிச்சைக்கு அழைத்து செல்வதாக உரைத்தான். இதில் வேலையாளும் ஆதரவாய் பேச, போலீஸ் பெரிதாய் கண்டுக் கொள்ளவில்லை. தவறு செய்பவன் இப்படியா நின்று நிதானமாய் பதில் சொல்வான் என்ற எண்ணம். அதோடு பெண் மயங்கி இருந்தால் தோண்டி துருவலாம். மூச்சு விட்டு மலைமாடு போல பின் சீட்டில் மகிழன் படுத்திருக்க வேறு காரணம் தேடவில்லை.
சீட்டி அடித்தபடி சாஹிர் ஊட்டி நுழைவு வாயிலில் காரை இயக்கினான்.
முதலில் தான் வசிக்கும் பங்களாவில் மகிழனை மருத்துவ உபகரணங்களை பொறுத்தி, தகுந்த பாதுகாப்பை போட்டு விட்டான்.
பிறகு வருணியை மெதுவாய் சந்திக்க போகலாம் என்று முடிவெடுத்தான்.
வேலையாளை இங்கு வந்ததும் நன்றி கூறி பணத்தை தந்து அனுப்பிவிட்டான். மொத்தமாக தொகை வரவும் சின்ன கடை வைத்து பிழைக்க அவனும் நன்றி கூறி பறந்துவிட்டான்.
ஏற்கனவே வருணி தங்க நேரிட்டால் என்ற எண்ணத்தில் வடிவமைத்ததால் மெத்தையும் அறையும் விசாலமாக, அதே நேரம் வசதி கொண்டு இருந்தது. இதில் மகிழனுக்கு மருத்துவமனையில் இருந்தால் எத்தகைய தேவைகள் தேவைப்படுமோ அத்தனையும் செய்தான். முன்னரே கிரணிடம் தெளிவாக சாதகம் பாதகம், மருந்துகள் ஏதேனுமா மாற்றம் ஏற்பட்டால் செய்ய வேண்டியவை என்று கேட்டுக் கொண்டானே.
சிசிடிவி இணைப்பை மகிழன் அறியாத வகையில் வைத்துவிட்டு, கதவை தாழிட்டான். மகிழனுக்கு என்ன ஆனாலும் இந்த சாஹிர் கவலைப்படவா போகின்றான்.
செத்தாலும் உருத்தெரியாமல் புதைத்திடுவான் அவ்வளவே. அதனால் மகிழனை பற்றி பெரிதாக யோசிக்கவில்லை. இந்த மருத்துவ பாதுகாப்பே மகிழனுக்கு அதிகமே.
மின்கதவு பேட்டர்ன் சாஹிர் மட்டுமே அறிந்திருக்க தனக்கான ஓய்விற்கு தனியறை வந்தான்.
குளித்து முடித்து நீண்ட நெடிய தூக்கம் போட்டான்.
சாஹிருக்கும் உடலெல்லாம் வலித்தது. அதீத பயணம், அலுப்பு, இதில் மருந்து மாத்திரை என்றதில் அவனுக்குமே ஓய்வு தேவைப்பட்டது. இனி வருணியை வேறு காதலிக்க வைக்க, அவளை கல்லூரி மாணவன் போல், பின் தொடர வேண்டும்.’ என்று தற்போது நன்கு ஓய்வெடுத்தான்.
-தொடரும்.
ivan matanum panrathuku ellam
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Nice epi👍
💜💜💜💜
👌👌👌