அத்தியாயம்-2
இரவெல்லாம் புரண்டு புரண்டு படுத்த வநீஷாவிற்கு உறக்கமில்லை.
கண்கள் இமை மூடாமல் வருணிகாவையே கவனித்தது. ‘பொண்ணா பிறந்தா இவளை மாதிரி பிறந்திருக்கணும். எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்னால எதையும் சகித்து வாழ முடியும்னு தோணுது. ஆனாலும் தனியா இருக்கறப்ப எதையும் சகித்துக்க முடியலை. இப்படி ஆளாளுக்கு பேசறப்ப செத்து போயிடலாம்னு தோணுது. கடவுளே ஏன் என் மனசுக்குள்ள இந்தளவு பாரபட்சமான எண்ணங்களை விதைச்ச?’ என்று மறுகினாள்.
சில நாட்களாக யாரும் அறியாமல் விடும் கண்ணீர். அழுவதை பழகிக்கொண்டாளா? அல்லது அனலை விழுங்கி கொண்டிருக்கின்றாளா அது அவள் மனமே அறியும்.
அருகேயிருந்த மணிமொழி வநீஷா மீது கால் போட்டு கையை மேலே போட திடுக்கிட்டாள்.
பிறகு தங்கை போல பெண் தானே என்று அவளை அரவணைத்து தட்டிக் கொடுத்தாள்.
அடுத்தடுத்த நாளில் மணிமொழி மகிழன் கிளம்பவும், வருணிகா வநீஷா வழியனுப்பினார்கள்.
மகிழன் கண்ணில் வநீஷா மீதான பார்வை நிலைத்திருக்க, அத்தை மாமாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள்.
வருணிகா வீட்டுக்குள் இருக்கவும் ஜன்னல் வழியாக விடைப் பெறுவோருக்கு டாட்டா காட்டினாள். இப்பொழுது தானே பெரியவளானாள் என்று அவளை வெளியே வராது தடுத்துவிட்டனர்.
வருணிகாவுக்கு அத்தை, மாமாவை தவிர்த்து மகிழன், மணிமொழி பார்வை வநீஷா மீது இருக்க உதடு சுழித்து கதவை மூடிக்கொண்டாள்.
அவள் கோபமெல்லாம் மணிமொழி மகிழன் மீது இருந்தது.
குறிப்பாய் மகிழன் மீது, ஊர் மக்களில் வந்திருந்த சிலரும் மகிழனை வைத்து தான், இவளிடம் கிண்டல் பேச்சை பேசினார்கள்.
‘குச்சி கட்டினவன் தான் மாமன் மகனா? உன்னை கட்டிப்பானா உங்க அக்காவை கட்டிப்பானா?’ என்று ஏற்றிவிட்டவர்கள், ‘வருணிகா மகிழன் ஜோடி நல்லாயிருக்கும்’ என்று கூறி மடத்தனமாய் சிரித்தனர்.
ஊர் மக்களுக்கு இதுவொரு பேச்சு. சொந்தம் பந்தமென்றால் இணைத்து கிசுகிசுத்து விடுவார்கள். அதிலும் பெரிய மனுஷியாக நிற்கும் நேரம் இப்படி யாராவது லூசுத்தனமாக பேசி சென்றிட, பூப்பெய்திய சிறுமி உள்ளம் தித்திப்பாய் கனவு கண்டுவிடும்.
கள்ளத்தனமாய் மகிழனை கண்டதும் பெருத்த ஏமாற்றம். அதற்காக அக்கா மீது வெறுப்பு கூடியதில்லை. எப்பொழுதும் வநீஷா மீது பேரன்பு உண்டு.
இருவரும் சென்றப்பின் அக்கா தங்கை பந்தத்தில் எந்தவிதமான இடையூறும் இருந்ததில்லை.
பெரும்பாலும் வநீஷா வருணிக்கு விட்டு கொடுத்திடும் குணம்.
எதுவென்றாலும் வருணி கேட்டால் தனக்கில்லையென்றாலும் தாரை வார்த்திடுவாள் வநீஷா.
அதனாலே வருணிக்கு அக்கா மீது கூடுதலாக பாசம் உண்டு.
தந்தை தங்கள் வீட்டிற்கென, விலை கேட்டு வாங்கிய புதிதான தேக்கு கட்டிலில் கூட, அக்கா தங்கை இருவரும் ஒன்றாக இரவில் ஒட்டிக் கொள்வார்கள்.
அக்காவை தாய் ஏதேனும் திட்டினால் ஆதரவுக்கு வந்து நின்றிடுவாள் வருணிகா.
வநீஷா வளர வளர நிறைய திட்டு வாங்குவதுண்டு.
அப்படி தான் கால்மேல் கால் போட்டு அமர்ந்து டிவி பார்த்தாள்.
“இப்படி உட்காராதே” என்று அன்னை கூற, வநீஷா அடிக்கடி அப்படியே அமரவும், சொல்லி சொல்லி பார்த்து, ரேணுகா தோசை கரண்டியால் வநீஷா காலிலேயே சூடுவைத்தார்.
வருணிகா தான் அக்காவை கண்டு அழுது துடித்தாள்.
வநீஷா எதற்கும் கண்ணீரை விடவில்லை. கடினமாய் மாறி வேண்டுமென்றே அமருவாள். எத்தனை முறை திட்டி அடித்து வைப்பது.
ரேணுகாவிற்கும் வநீஷாவிற்கும் ஏழாம் பொருத்தம். மாமியார் இல்லாத குறையாக தினமும் பிரச்சனை வம்பிழுத்து நிற்பாள்.
ஒன்று சொன்னால் அதற்கு நேர்மாறாக செய்வாள்.
வநீஷா வளர வளர தன்னை ‘தான் இப்படி தான்’ என்று காட்டிக்க முற்பட, அதற்கான வெகுமானம், தான் பெற்றவர்களின் அன்பு குறைவாக மாறியது.
வருணிகா எல்லாம் முதலிலேயே கேட்டுக்கொள்ள பாராட்டு பெற்றவளாய், பெற்றவர்களின் உள்ளம் குளிர்ந்த மகளாக இருந்தாள்.
வநீஷாவிற்கு கோபமெல்லாம் தாய் தந்தை மீது தானே தவிர, வருணிகா மீது திரும்பவில்லை. அந்தளவு தெளிவாக இருந்தாள்.
இப்படியாக ஒரு வருடம் முடிய, மணிமொழிக்கு பள்ளி விடுமுறை என்று அத்தை வீட்டுக்கு வந்தாள்.
டிவி பார்க்கலாமென்று வருணிகா கூற, கண்ணாம்பூச்சி ஆடலாமென்று வநீஷா கூற, மணிமொழியோ கண்ணாம்பூச்சி ஆட முடிவெடுத்தாள்.
பெண்கள் மூவரும் ஓடியாடி விளையாடினார்கள். கண்ணாமூஞச்சி ஆட்டம் வெகுவாய் சூடுபிடித்தது.
ஒவ்வொரு ஆட்டத்திலும் வநீஷா ஒவ்வொரு இடத்தில் ஒளிந்துக் கொள்ள, மணிமொழி இதனை நோட்டமிட்டாள்.
தேக்கு கட்டிலில் பலகையை தூக்கி விட்டு வநீஷா படுத்துக்கொண்டாள்.
அது உள்ளே தலையணை போர்வை பைகள், பொருட்களை போட்டுக்கொள்ள உதவும் வகையில் செய்யப்பட்டது. பலகையை தூங்கிவிட்டால் கட்டிலில் படுத்துக்கொள்வது போல் அதிலும் படுக்கலாம். என்ன சுவாசிக்க சிரமம். கொஞ்ச நேரம் தாக்கு பிடிக்கலாம். மூச்சு விட சிரமம் என்றால் வநீஷா சட்டென கட்டில் பலகையை தூக்கிடுவாள். வநீஷா சற்று வேலைகளை செய்து பலம் கொண்ட கைகள்.
இது தெரியாமல் மணிமொழி அவளை போலவே படுத்துக் கொண்டாள்.
ஆனால் கூடுதலாக சுவாசிக்க முடியாது பலகையும் குச்சி கைகளால் தூக்க முடியாமல் திணறினாள். அதன் பலன் சுவாசிக்க போராடி உயிர் நீத்தாள் மணிமொழி.
இதை அறியாத இருவரும் மணிமொழியை வீடு முழுக்க தேடினார்கள்.
கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் முதலில் பதுங்கியிருப்பதாக தேடி களைத்தனர் வருணிகா, வநீஷா.
நேரம் கூடவும் ‘விளையாடியது போதும் மொழி வா சாப்பிடலாம்’ என்று அவளை கத்தி கூப்பிட்டு பார்த்தனர். ஆனால் சத்தமில்லாமல் போக, பெரியவர்கள் பதட்டமானார்கள்.
வீடு முழுக்க மணிமொழி பெயரை கூப்பிட்டு ஏலம் விட்டது தான் மிச்சம். அவள் வீட்டில் இருப்பதாக தெரியாததால், ரேணுகா மகேஸ்வரன் இருவரும் மணிமொழியின் பெற்றவர்களிடம் போனில் தெரிவித்தார்கள். பெற்ற மனம் பதறியவர்களாக, ஷீலா நடராஜன் வந்து சேர்ந்தார்கள்.
வநீஷா வருணிகாவிடம் தான் ‘உங்களோட தானே விளையாடினா எங்கப் போனா?’ என்று கேட்டு துடித்தார் ஷீலா.
மகேஸ்வரனும், நடராஜனும் போலீஸில் புகார் தர சென்றனர்.
போலீஸும் எஃப்.ஐ.ஆரை பதிவு செய்துக்கொண்டார்கள்.
அதன்பின் வீட்டிற்கு இரண்டு போலீஸ் வந்து அலசினார்கள்.
வருணிகா வநீஷாவிடம் முதல் விசாரணையாக தன்மையாகவே கேட்க, மூவரும் கண்ணாம் பூச்சி விளையாடியதை பகிர்ந்தார்கள். அங்கேயிருந்த கிணறு, போர் போட்ட குழி, பக்கத்தில் உள்ள ஆறு என்று தேடியவர்கள் வீட்டிலும் ஒருயிடம் விடாமல் பார்த்தார்கள்.
அப்படி தேடிய போது கட்டிலின் பலகையை தூக்க, குப்பென்ற லேசான வாடையுடன் மணிமொழி இறந்து கிடந்தாள். காலையில் இறந்தவள் மாலைவரை நேரம் எடுக்க லேசான குமட்டல் ஏற்பட்டது.
வீடு அடுத்த சில மணித்துளியில் கலவர களமாகியது.
போலீஸ் பாரன்சீக் ஆட்களையும், மற்றவர்களையும் அழைக்க பெற்றவர்கள் கதறலில் துடித்தனர்.
இது தவறுதலாக விளையாட்டால் ஏற்பட்ட விபத்து என்று போலீஸ் தரப்பில் முடிவாகி கேஸ் மூடப்பட்டது.
மாவட்ட செய்தி தாளில் ‘கண்ணாம்பூச்சி விளையாடி கட்டில் தலையணை போர்வை என்று வைக்க உதவும் பதுக்கல் அலமாரியில் குழந்தை ஒளிந்து விளையாடி மரணம் சம்பவிக்கப்பட்டது’ என்று நொடிக்கொருமுறை வெளிவந்தது.
அடுத்த நாள் வருணிகா சடங்கிற்கு வந்த கூட்டத்தை விட அதிகமாய் மணிமொழி இறப்புக்கு வந்தார்கள். அந்த சிறுமியின் இறுதி ஊர்வலத்திற்கு ஊரே ஒன்று திரண்டார்கள். இரங்கல் அஞ்சலி செலுத்துவதற்கு.
ஷீலா-நடராஜன் இருவரும் ஒற்றை பெண்ணை, எமனுக்கு கொடுத்து விட்டு கதறி துடித்தார்கள்.
காண்போர் யாவருமே காணும் காட்சியில் கண்ணீர் மழைகள்.
இதில் ரேணுகாவோ, “எங்க வீட்டுக்கு வந்த குழந்தைக்கு இப்படி ஆகிடுச்சே ஆண்டவா” என்று தலையில் தலையில் அடித்து அழுதாள்.
ஷீலாவோ, “ஆம்பளை பிள்ளை விட அவருக்கு மணிமொழின்னா உசுரு அண்ணா. நம்ம வருணிகா சடங்கானப்ப, அவளை பார்த்து ரசித்ததை விட, எம்மக அடுத்த இரண்டு வருஷத்துல குத்த வச்சிடுவா, நான் சத்திரம் பிடிச்சு என்மகளுக்கு திருவிழா கணக்கா செய்யணும்னு, நானும் அவரும் கனவெல்லாம் கண்டோமே. எங்க கனவெல்லாம் கனவாகவே, காண வச்சிட்டு படுத்துக் கிடக்காளே, எம்மக மொழி… அம்மா மொழி…. என்னை பெத்த தாயி. இப்படி பாடையில் படுக்க வச்சி அலங்கரிக்க வச்சிட்டியே.” என்று அழ, நடராஜனும் குலுங்கி குலுங்கி அழுதார்.
உண்மையில் தன் உயரத்திற்கு வளர்ந்த பிள்ளையை காலனுக்கு தூக்கி தாரை வார்த்த பெற்றவர்களுக்கு அதன் வலி புரியும்.
அதுவும் கடைக்குட்டி என்றால் தாய் மனம் கூடுதலாய் துடிக்குமே.
இறுதி சடங்கு செய்தாலும் ஒப்பாரிகள் ஓய்ந்து போகவில்லை. அந்த வீடு சூன்யம் பிடித்ததாக மாறியது.
தலைவிரி கோலத்தில் பத்து பதினைந்து நாட்கள் அவ்வீடு அலங்கோலமாக கிடந்தது.
வநீஷா தான் வேலைகளை இழுத்து போட்டு நடமாடினாள்.
மகிழனுக்கு தங்கையில்லை என்ற கவலை, ஆண்மகன் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த காலம்.
அவன் வார்த்தையில் ஒப்பாரி வைக்கவில்லை. ஆனால் வெறித்த பார்வையோடு திண்டில் வீற்றிருந்தான்.
வருணிகாவோ ‘நான் அப்பவே டிவி பார்க்கலாம்னு சொன்னேன் அத்தை. வநீஷா அக்கா தான் கண்ணாம்பூச்சி ஆடலாம்னு அடம் பிடிச்சா.
வநீஷா அக்கா ஒளியற இடமெல்லாம் நோட் பண்ணிட்டு மணிமொழியும் அங்க ஒளிந்துப்பான்னு நினைக்கலை அத்தை.” என்று தேம்பினாள்.
சிறுமி வருணிகா கள்ளமின்றி உரைத்தது.
அதை கேட்ட ஷீலாவிற்குள் அக்கணம் முதல் வநீஷா என்றாலே காரணமின்றி கோபம் பிறந்தது. ஏற்கனவே பெரியவள் பிறந்த பொழுது கடனும், கவலையும் என்று முத்திரை வைத்துவிட்டனரே. தற்போது இந்த காரணம் தேவையேயின்றி பிடித்து கொண்டார்.
யார் இறப்பு யாரால் நிகழும் என்று யார் அறிவார்? இப்படி ஆகுமென்று எவருக்கு தெரியும்?
பதினாறாம் காரியம் முடிந்தது. ஷீலாவோ “இனி இந்த வீட்டுக்கு நான் வரமாட்டேன் அண்ண. வீட்டை வித்துடு.” என்றார் சுரத்தையின்றி.
மகேஸ்வரன் தங்கையின் வார்த்தைக்கு சம்மதமாய் தலையாட்டினார்.
ரேணுகாவோ நெஞ்சை பிடித்தபடி வெறிக்க, ஷீலா செல்லும் போது வநீஷாவை விரோதியாக பார்த்து கடந்தார்.
ஒரு தாயின் மனம் அறியாதா? பார்வையின் பொருளை… நாத்தனாருக்கு வநீஷா மீது வெறுப்பு உருவாகிவிட்டதென்று.
அவர்கள் சென்றதும் ரேணுகா கணவரிடம், சென்று பேசினார்.
வநீஷா மீது ஷீலாவின் பார்வை விழுகிறது மகளை ‘மற்றவர் கண்காணாமல் படிக்க வையுங்கள்’ என்று கல்நெஞ்சாக மனதை மாற்றி பேசினார்.
மகேஸ்வரனுக்கும் மகளை தனியாக இருப்பதே நல்லதென்று முடிவெடுத்தார்.
முதலில் வீட்டை விற்றுவிட்டு வேறுயிடம் பெயரவும் முடிவெடுத்தனர்.
மகளை ஊட்டி கான்வெண்டில் சேர்த்திடுவதாக வநீஷாவை கிளம்ப கூற, “ஏன் அக்கா மட்டும் தனியா ஊட்டி கான்வென்ட் ஸ்கூல்ல போகணும்? அவ நம்ம கூடவே இருக்கட்டுமே” என்றாள் வருணிகா
பெரியவர்களின் புதிரான எண்ணங்கள், சிறியவர்களுக்கு புரிந்திடதே.
பிரிவென்று அழுதது வருணிகா வநீஷா மட்டுமே. ரேணுகா மகேஸ்வரன் இரும்பு இதயமாக மாறினார்கள்.
அதிலும் மகேஸ்வரன் வநீஷாவின் கைகளை இழுத்து பிடித்து தரதரவென ரயிலில் ஏறினார்.
வநீஷா தந்தையின் இறுக்கமான முகத்தில் மேலும் கவலையை தரவில்லை. வருணிகாவை பிரிந்ததும் நல்லதுக்கு தானோ? ஊட்டியில் பள்ளி படிப்பு முடியவும் எல்லாம் மாற்றம் பெறும்?! தனக்கான அன்பு பெற்றவர்களிடம் திரும்ப கிடைக்குமென்று நம்பினாள்.
அந்த நிம்மதி வரவும் உறங்கினாள்.
நான்கு நாட்கள் கழித்து வநீஷா தொலைந்து விட்டாளென்ற கவலையும் அழுகையோடும் மகேஸ்வரன் வந்தார்.
இப்பொழுது தானே ஒரு குழந்தை இறைவனடி சேர்ந்தாள்.
இப்பொழுது இன்னொரு குழந்தை தொலைந்து போய் விட்டாளா? என்ற அதிர்ச்சி.
ரேணுகா மயக்கமுற்று மயங்கி சரிந்தாள்.
ஒரு குழந்தை இறந்துவிட்டால் என்றால் கூட நிம்மதி அடையலாம். ஏதோ கடவுளின் குழந்தையாக மாறி விட்டது மறுபிறவி எடுத்து பிறக்கும் என்று தேற்றிக் கொண்டு மீளலாம்.
ஆனால் தொலைந்த குழந்தையை எப்படி தேடுவது? எங்கே தேடுவது? அவள் சாப்பிட்டாளா? தூங்கினாளா? எங்கு வாழ்வாள்? இந்த பூமியில் பெண்களை, அதுவும் பதினாறு வயது அடியெடுத்தவளை எங்கனம் விட்டு வைக்குமென்ற திகிலோடு தினம் தினம் மனதோடு போராட வேண்டுமே.
-தொடரும்.
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
♥️♥️♥️♥️♥️♥️♥️
acho ena achi vanisha ku
💜💜💜💜💜
Nice epi👍
Interesting
Acho romba emotional epi sis 😢 paavam pethavangaluku kuzhandhiya ezhandha valiya yaaralum eedupadutha mudiyadhu🥺