Skip to content
Home » ஆலகால விஷம்-20

ஆலகால விஷம்-20

அத்தியாயம்-20

   ஹாஸ்டலில் கல்லூரிக்கு தயாராக இருந்தவள் வெறும் கையில் வேறொரு வாட்ச்சை மாட்டினாள். மறுகையில் ரேணுகா அணிவித்த சாமி கயிறு மட்டும் இருந்தது. கல்லூரி பையை மாட்டிக்கொண்டு அமைதியாக நடந்தாள்.

   ஹாஸ்டல் வாசலில் ரஞ்சித் சாஹிர் கார் சற்று தள்ளியிருந்தது.

  அதனை கடக்கும் போது, “ரஞ்சித்?” என்று பேசும் முன், “கார்ல ஏறு நான் கூட்டிட்டு போறேன்” என்றான்.

   “ம்ம்.. ஒரு நிமிஷம். மார்னிங் சாப்பிடலை‌. மில்க் ஷேக் ஏதாவது வாங்கிட்டு வந்துடறேன்” என்று அருகேயிருந்த ஒரு கடையில் இவளுக்கு ஸ்டாபெர்ரி மில்க் ஷேக்கும், ரஞ்சித்திற்கு பாதம் மில்க் ஷேக்கும் வாங்கினாள்.

  ரஞ்சித் குடிக்க கையை நீட்ட, “சமோசா சாப்பிடு. மில்க் ஷேக் அப்பறமா” என்று மௌனமாய் அமர்ந்தாள்.

‌வருணிகா அமைதியாக வரவும், “என்னாச்சு டல்லா இருக்க?” என்று கேட்க, “காலேஜ் போக பிடிக்கலை. வீட்டுக்கு போகணும் போல இருக்கு. இங்க நினைச்ச நேரம் யார் வீட்டுக்கு போக? ஜனார்த்தனன் அங்கிள் வீடெல்லாம் நோ சான்ஸ். மனசெல்லாம் குழப்பமா இருக்கு.” என்று சமோசாவை சாப்பிட்டு உரைத்தாள்.

   “ஏன்.. என்னாச்சு?” என்று சாஹிர் வண்டியை ஓட்டி கேட்டான்.
  
   “நேத்து நீ பேசியதையே நினைச்சிட்டு இருந்தேன். தூக்கமே வரலை இப்ப வீட்டுக்கு போகணும்னு தோணுது.” என்றாள்.

   “இப்ப காலேஜ் போக வேண்டாமா?” என்று கேட்டதும் வேண்டாம். வெளியே எங்கேயும் கூட்டிட்டு போகாத. நேத்தே அசிங்கமா பேசுவாங்கன்னு சொன்னியா.” என்றதும் சாஹிர் ‘அப்ப எங்க கூட்டிட்டு போக?’ என்பது போல முழித்தான்.

    “நீ எங்க தங்கியிருக்க?” என்றதும் காரை ஓரமாய் நிறுத்தி, வருணியை பார்த்தான்.
 
  “இல்லை.. எனக்கு வீட்டுல இருக்கற உணர்வு தேவைப்படுது. என்னை உன் வீட்டுக்கு அழைச்சிட்டு போ” என்று கேட்டாள்.
  வருணிகா வாயை திறந்து கேட்டப்பின் மறுக்கும் மனம் ரஞ்சித் சாஹிருக்கு இல்லை.

   காரை மீண்டும் உயிர்பித்து அவன் தங்கியிருக்கும் இடத்துக்கு புறப்பட்டான்.

  லேசாக ரஞ்சித் சாஹிர் முகமும் மௌனத்தை தத்து எடுத்து கொண்டது.

   ஊட்டியிலிருந்து தனித்து செல்லும் பாதையில் கார் சென்றது.
  சற்று தொலைவு போகவும் ஆள் அரவம் குறைந்திருக்க வருணிகா முகம் வேர்த்தது.

      தனி வீடு ஆறடிக்கு உயரமான சுவர், காரை நிறுத்தி இரும்பு கேட்டை திறந்து காரை உள்ளே நிறுத்தினான்.

  வருணிக்கு நடுக்கம் கூட, அன்னை கட்டிய கயிறை மட்டும் பிடித்து நடந்தாள்.

   “உள்ளவா வருணி” என்று கதவை திறந்து அழைத்தான்.

  வருணிக்கு சற்று பயம் கூடியது. இது சரியா தவறா? அவசரப்பட்டு வந்துவிட்டோமா? இதயவோட்டம் எக்குத்தப்பாக துடித்தது.

  ஆனால் மகிழ் அத்தான் எங்கே என்று அறியாமல் இனி விடப்போவதில்லை என்ற முடிவு திடத்தை வரவழைத்து கொண்டாள்.

  வருணிக்கு முதலில் வநீஷா மகிழ் அத்தானை விரும்பி அழைத்து காதலித்து மணந்து வாழ்கின்றனர் என்று எண்ணினாள். ஆனால் மகிழ் தந்த இதழ் முத்தம் ஒவ்வொரு இரவும் இம்சித்து, மகிழனின் காதல் உனக்கு தான் வநீஷாவுக்கு இல்லை என்று கூச்சலிட்டு உணர்வு கொந்தளித்தது.

   சரி அக்காவோ மகிழ் அத்தானோ நேரில் சந்திப்பார்கள். இங்கே அப்பா இருக்க வர தயங்கலாம். ஊட்டியில் யாருமில்லை யென்றால் காண வருவார்கள் என்று காத்திருந்தாள். முதல் வாரம் எதிர்பார்த்து ஏமாந்து போக, அடுத்த சந்திப்பு வாய்த்தது என்னவோ ரஞ்சித் என்பவனோடு.

  முதலில் யாரோ ஒரு வழிப்போக்கன் என்று எண்ணினாள்.‌ ஆனால் காதல் அம்புகள் தன்னை வீழ்த்த ரசித்தவன் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்றதும் எங்கோ இடித்தது.

  அதிலும் தன்னை பற்றி அறிந்து வைத்து பேசுவது ஒரு உறுந்தலாகவே தோன்றியது.

  ஆனால் யாரிவன்? என்னை ஏன் வட்டமிட வேண்டும்? என்று புரியாது குழம்பினாள்.
 
   தோழிகள் எல்லாம் வருணி மாதிரி அழகா இருந்தா அழகான பையன் தேடி வருவான் என்று பெருமூச்சு விட்டு பேச, வருணிக்கு அப்பேச்சு எரிச்சலை தந்தது.
  
  இதில் வநீஷா பற்றி உரைத்தால் எவ்வித எதிர்வினையின்றி ஏற்கனவே தெரிந்த கதை வேற புதுசா சொல்லு’ என்பதாய் ரஞ்சித் முகத்தின் உணர்வு.

  போலீஸ் வந்ததும் ரஞ்சித் மறைந்ததை வருணிகா பார்த்துவிட்டாள். இதில் போலீஸ் காட்டிய புகைப்படத்தில் வநீஷா சாஹிர் என்று இருவர் இருந்தனர்.

   ஆனால் இவன் யார் ரஞ்சித்? இது தான் வருணிக்கு புரியவில்லை. அன்று மட்டும் போலீஸ் காட்டிய புகைப்படத்தில் இந்த ரஞ்சித் புகைப்படம் இருந்தால் அன்றே கைகாட்டி மாட்டி விட்டிருக்கலாம். அன்று அவளோடு மூன்று போலீஸ் உதவிக்கு இருந்திருப்பார்கள்.

ஆனால் அந்த புகைப்படத்தில் தான் இந்த ரஞ்சித் முகம் இல்லையே. அப்படியெனில் இந்த ரஞ்சித் யார்? ஏன் என்‌ பின்னால் வருகின்றான்.
  வநீஷா-சாஹிர்- மகிழன் இவர்கள் காணாமல் போனதற்கும் இந்த ரஞ்சித்திற்கும் சம்மந்தம் உண்டா? இதை எவ்வாறு கண்டறிவது? இதே மனவுளைச்சல் உண்டானது.

   இதில் ஷங்கரிடம் தெரிவித்து உதவியை நாடினாள்.
  தாய் தந்தையிடம் கூறாமல் தனக்காக உதவுவதாக முன் வந்தான். ஒரு கோரிக்கையை முன் வைத்து.
  மகிழன் இந்த தேடுதலில் வநீஷாவை மணந்திருந்தாலோ, அல்லது மகிழனுக்கு வேறு ஆபத்து வந்து காணாமல் போயிருந்தாலோ ஷங்கரை மணக்க வேண்டும் என்பதே.

   தன் இதயத்தை கல்லாக மாற்றி சம்மதித்து தலையாட்ட, நேற்று ரஞ்சித் வருணி தனியாக இருக்கும் போது மயக்கமருந்து ஸ்பிரே செய்து நகை பணம் போன் என்று திருடப்பட்டதாக நாடகம் நிகழ்த்தி ரஞ்சித் போன் கைப்பற்றப்பட்டது.

  ரஞ்சித்சாஹிர் ஹாஸ்டலில் விட்டுவிட்டு சென்றதும், ஷங்கர் வீட்டுக்கு முக்காடு போட்டு‌ வந்து போனை ஓபன் செய்ய முயன்றாள். பேட்டர்ன் கேட்டு பிடிவாதம் பிடித்தது.
  
  அதன் பின் வருணி அவள் பிறந்த நாள் எண்ணை கடவுச்சொல்லாக போட விசுக்கென்று திறந்தது.

அதில் மகிழன் முகம் காணொலி கிடத்தது. ஏனோ அதிக நேரம் போன் நோண்டவிடாமல், போனை எங்கிருந்தோ ஹாக் செய்து மடமடவென எரர் காட்டியது. அதை செய்தது ரஞ்சித்தாக தான் இருக்க வேண்டும் என்று ஷங்கர் கூறினான். அவன் போன் யார் கையில் கிடைத்தாலும் உடனடியாக இவ்வாறு ஆதாரம் அழிய செய்திருந்தான்.
 
  “போலீஸ்ல கம்பிளைன் பண்ணி ரஞ்சித்தை உள்ள தள்ளுவோம்” என்று ஷங்கர் கூற, “அவன் போனை எரர் காட்டிடுச்சு.  இனி இந்த போன்ல எதுவும் ஓபன் ஆகாது. மகிழ் அத்தான் அவன் கூட தான் இருக்கான்னு எப்படி சொல்லறது. ஆதாரம் இல்லை. அதோட மகிழ் அத்தானை பார்த்தியா? படுத்த படுக்கையா ஏதோ ரூம்ல இருக்கார்” என்று அழுதாள்.

  ஷங்கர் தான் “இதுக்கு அப்ப என்ன தீர்வு?” என்று கேட்க, “நாளைக்கு அந்த ரஞ்சித்தை  நானே பார்த்துக்கறேன்.” என்று மட்டும் கூறினாள்.

   அவனும் நாளை பேசுவோம் என்று ஹாஸ்டலுக்கு செல்பவளை வழியனுப்பி வைத்தான்.

   இன்று ரஞ்சித் ஹாஸ்டல் வாசலில் வந்து அழைத்து வர இதோ திட்டம் போட்டு வந்துவிட்டாள்.
  
உள்ளுணர்வு மகிழ் அத்தான் இங்கு தான் இருப்பதாக கூறுகின்றது. ஆனால் சுற்றி திறந்திருக்கும் அறைகள் காலியறை என்று பிரகடனம் செய்கின்றதே.

  எப்படியும் அடைத்து வைத்து படுக்க வைத்திருப்பதை பார்த்ததால் பயம் வாட்டியது.

  “மார்னிங் சாப்பிடலைன்னு சொன்னல்ல, உட்காரு டூமினிட்ஸ் மேகி பண்ணி தர்றேன்” என்று கிச்சனுக்குள் சென்றவனை பார்த்து நடுங்கி போனாள்.

  வீட்டின் அமைப்பு பெரிதாக இருந்தது. வெளியே சுற்றி மரம் செடி கொடி என்று பச்சை பசேல் என்ற பசுமை. மலர்கள் மலர்ந்து கண்ணுக்கு விருந்து படைத்தது.

  வீடு கூட பங்களா போல தோன்றியது. தூணும் இடத்தின் அமைப்பும், ஆங்காங்கே மாட்டியிருந்த விலங்கு தலைகள் என்று ரசிப்பதற்கு பதிலாக திகிலை உருவாக்கியது.

   “வீட்டை சுத்தி பாரு” என்று ரஞ்சித் கூற, இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தாள்.

   இங்கிருந்து திரும்ப உயிரோடு போவதற்கு வாய்ப்புண்டா என்ற திகிலில் நிற்பவள் அசைவாளா?

      கண்ணாடி பௌலில் நூடுல்ஸை போட்டு, முள் கரண்டியை அதில் வைத்து, “வா சாப்பிட்டுட்டே, சுத்தி பார்த்து பேசுவோம்” என்று அழைத்தான் ரஞ்சித்.
  
   அவனாக வாய் திறந்தால் பார்ப்போம். இல்லை இப்படியே வெளியே சென்று போலீஸை அழைப்போம் என்ற முடிவோடு சிறு சிரிப்பை வலுக்கட்டாயமாக ஒட்டிக்கொண்டு ரஞ்சித் கூடவே வந்தாள்.

   ஒவ்வொரு அறையும் திறந்து சுட்டி காட்டினான்.

  “ஆக்சுவலி இங்க வர எனக்கு ஐடியாவே இல்லை. நீ இங்க படிக்க வரவும், அடுத்த செகண்ட் இந்த சுற்று ஏரியால வீடு பார்த்தேன். இந்த வீடு தான் நான் எதிர்பார்த்த மாதிரி தனியா…. அமைதியா… யாரும் தொந்தரவு செய்யாம… தனி தீவா இருந்தது.” என்று இழுத்து அவளை கடைக்கண்ணால் பார்த்து பார்த்து மொழிந்தான்.

  “நூடூல்ஸ் சாப்பிடு. உனக்கு ரொம்ப பிடிக்குமே?” என்று கூற வருணி கைகள் நடுங்கியது.

    அவள் நடுக்கம் உணர்ந்த ரஞ்சித், அவளிடமிருந்து பௌலை வாங்கி அவளை சோஃபாவில் அமர வைத்து அவனும் அருகே அமர்ந்து, ஊட்டி விட்டான்.
 
   எந்திரம் போல வாயை திறந்து வாங்கினாள்.

    ”மகிழனை தேடி இவ்வளோ தூரம் வந்துட்ட வருணி. அவன் மேல அவ்ளோ லவ்வா?” என்று கேட்க பேயறைந்தது போல மாறி ரஞ்சித்தை பார்க்க, அவனோ வருணிக்கு நூடூல்ஸை ஊட்டுவதில் மும்முரமானான்.

  “யார் நீ… ஏன் என்னையும் மகிழ் அத்தானையும் பிரிக்கற?” என்று வார்த்தைக்கு வலிக்காமல் மென்குரலில் பயத்தில் கேட்டு நின்றாள்.

  சிறு குழந்தைக்கு ஆசிரியர் பக்கத்தில் குற்றம் புரிந்து அடக்கமாய்  அசையாமல் அமர்ந்திருந்ததை போல வீற்றிருந்தாள்.

   ரஞ்சித் அவன் பாட்டிற்கு நூடுல்ஸை ஊட்டி விட்டு தண்ணீர் புகட்டி, மீண்டும் நூடுல்ஸை ஊட்டி கடைசியாக நாக்கில் நூடுல்ஸ் சுவை ஒட்டியிருக்க வைத்து, தன் கையாலே வருணிகா உதட்டை தொட்டு தடவி துடைத்து விட்டான்.

   ஏனோ இந்த தொடுகை, ஏதோ நெருட துவங்கியது. ஆனால் தள்ளிவிட்டு எழவும் முடியாது பாலியல் கொடுமைக்கு அகப்பட்ட குழந்தை போல விழித்து ரஞ்சித் பக்கத்திலேயே இருந்தாள்.
 
   மெதுமெதுவாக கைகளை தீண்டி, “போலீஸுக்கு சொல்லிட்டு வந்தியா? சொல்லாம வந்தியா வருணிகா?” என்று உள்ளங்கையில் முத்தமிட்டு கேட்டான் ரஞ்சித்.
 
   ரஞ்சித் செய்கையிலும், பேச்சிலும் அழுகை வெடித்தது.
   கொஞ்சம் கொஞ்சமாய் விசும்பல் அதிகரித்து “நீ யாரு? மகிழ் அத்தான் எங்கே? ஏன் எங்களை பிரிக்க பார்க்கற? நீ யாரு… சொல்லு” என்று அழுதாள்.
 
  “போலீஸுக்கு சொல்லிட்டு வந்தியா இல்லையா?” என்று கேட்க யாரிடமும் சொல்லாமல் வந்த மடத்தனத்தை எண்ணி குமறினாள்.

   ”அப்ப… யாரிடமும் சொல்லாம வந்திருக்க? எப்படி வருணி? உன்னால அந்த மகிழனுக்காக என்னை மாதிரி ஆள் இருக்கற இடத்துல தனியா வந்த? இது தப்பாச்சே மகிழனுக்கு சேப்டி இல்லை. 
  உனக்கு எப்பவும் என் அருகேயிருந்தா சேப்டி தான். சோ உன்னை நினைச்சு பயப்படாத” என்று முதுகை நீவி விட்டான்.

  ஒவ்வொரு தீண்டலும் நெருப்பை அள்ளி வழங்கும் விதமாக இருந்தது வருணிக்கு.

  “நீ யாரு?” என்று கேட்க, ரஞ்சித்தோ “இன்னுமா தெரியலை.” என்று வருணியின் கண்ணை பார்த்து கதைத்தான்.

   இந்த நீல நிறக் கண்கள், உடைநடை, யாரென்று துளியும் நினைவில்லாமல் தள்ளாடினாள் வருணி.
வருணிகா கன்னம் ஏந்தி ரஞ்சித் “நான் தான் உன்னோட…” என்று இழுத்து அந்த பெயரை உச்சரித்தான்.

  அப்பெயரை கேட்டு விழிகள் வெளியே விழும் அளவிற்கு திகைத்தாள் வருணிகா.

-தொடரும்.

6 thoughts on “ஆலகால விஷம்-20”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *