Skip to content
Home » ஆலகால விஷம்-3

ஆலகால விஷம்-3

அத்தியாயம்-3

2024 நிகழ்காலம்

வருணிகாவின் சிகையில் நெருக்கமாய் தொடுத்த மல்லிகைப்பூவை, ரேணுகா சூடிவிட்டு அலங்கரித்தார்.

“என்‌ அண்ணன்‌ மகளுக்கு இந்த அலங்காரம் எதுவும் தேவைப்படாது. துடைச்சி வச்சி குத்துவிளக்காட்டும் இருக்கா.” என்று ஷீலா உச்சி முகர்ந்து தனக்கு வரப்போகும் மருமகளை மெச்சிக்கொண்டார்.

   உறவுகளில் நெருக்கமானவர்களுக்கு மட்டும் உரைத்து, மகிழன்-வருணியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியை வீட்டிலேயே நடத்தினார்கள்.

    அதற்கான அலங்கார தேவதையாக தயாரானாள் வருணிகா.

   மகிழன் அவன் வீட்டில் எப்பொழுதும் போல இருக்கையில் வீற்றிருந்தான். எந்த சுபநிகழ்ச்சிகள் ஆனாலும் பெண்கள் அங்கே காட்சிப் பொருளே. ஆண்கள் மட்டும் வெகுயியல்பாய் காட்டி கொள்வார்கள். அவனும் அப்படி தான் இருந்தான்.

    இரு வீட்டு பெற்றவர்களும் ஆளுக்கு ஒரு வேலையை பார்த்து பரபரப்பாய் சபையில் நின்றியிருக்க, திருமண தேதி வாசிக்கப்பட்டது.

   மகிழன் வருணியை நிதானமாய் பெற்றவர்கள் எதிரே ஏறிட்டு பார்க்க, வருணிகாவும் மலர்ந்த முகமாய் வீற்றிருந்தாள்‌

    “மோதிரம் மாத்திக்கணும்னா மாத்திடலாம்” என்று தந்தை நடராஜன் கூறவும், வருணிகாவிற்கு என்று பார்த்து பார்த்து வாங்கியதை பேண்ட் பேக்கேட்டிலிருந்து எடுத்தான் மகிழன். 

ரூபி நிறத்தில் வண்ணமயமாக இருந்தது. அதனை வருடி கையில் அணிவிக்க முயலும் போது, அவள் சடங்கான பொழுது ஷீலா அணிவித்த மோதிரம் இருப்பை உணர்த்தியது.

   அவசரமாய் அதனை உருவ முயன்றாள் வருணிகா.

  சிறுவயதில் என்றால் எளிதில் உருண்டு கழண்டு விட்டிருக்கும். தற்போது கல்லூரி காலத்திலிருந்து கையிலேயே அணிந்திருந்த மோதிரம் கனகச்சிதமாக விரலை கவ்வியிருந்தது.

   “முதல்லயே இதை கழட்டியிருக்க கூடாதா வருணிகா?” என்று ரேணுகா சபையில கடிந்திட, “சாரிம்மா மகிழ் அத்தான் மோதிரம் போடுவார்னு நினைக்கலை” என்றுரைத்தாள்.

   “என்னத்த நினைச்சிட்டு இருந்தியோ” என்று ரேணுகா மகளின் கைவிரலில் இருந்ததை உருவ முயன்றார்.

   “அவசரப்படாதிங்க அத்தை.” என்று மகிழன் மெதுவாக வருணிகா கரத்தை பற்றி மோதிரத்தை உருவ முயன்றான்.

   பெண்ணவள் அவனது பார்வைக்கே மெழுகாக கரைபவள். அவன் தீண்டலில் நெகிழ மாட்டாளா?! அவன் உருவ முயன்றும் வரமறுத்தது.

   அங்கே வலது இடதென சுற்றிப்பார்த்தான். சபையில் இனிப்பு பெட்டியில்‌ மாட்டி வைத்திருந்த பிளாஸ்டிக் இழுவை ரப்பரை எடுத்தான். அதனை இழுத்து துண்டாக்கி, பெண்ணவளின் மோதிரத்தில் நுழைத்து, மெதுமெதுவாக ரப்பர்பேண்டை இழுத்தான்.

   கொஞ்சம் கொஞ்சமாய் மோதிரமும் மேலே எழும்பியது. எல்லாம் யூடுயூப் மூலமாக காணொளியில் கண்டது.

   அதனை சமார்த்தியமாக சமயம் பார்த்து உபயோகிக்க மோதிரம் உருவி எடுத்தான்.

   “புத்திசாலி மாப்பிள்ளை. பாருங்க எங்க எப்படி நடந்துகணும்னு விவரம் தெரிந்தப்புள்ள” என்று வந்திருந்தவரில் ஒருவர் கூற, ஷீலா மகனை எண்ணி கர்வமாய் நினைத்தார்.

    மகேஸ்வரனோ, “கண்ணா நீ வாங்கின மோதிரத்தை போட்டுவிட்டா சொந்தக்காரங்க கை நனைக்க போவாங்க ஏற்கனவே போட்டோ எல்லாம் சேர்ந்து எடுத்தாச்சு” என்றதும் ரூபி மோதிரத்தை அணிவித்தான்.

   கைதட்டலும் கத்தலும் இனிமையான அமைந்தது.

   மகிழன் நெடு மூச்சு விட்டு வருணியை வருடும் பார்வை பார்க்க, மேல் சட்டை பாக்கெட்டிலிருந்த அவனது தொலைப்பேசிக்கு யாரோ அழைத்தனர்.

    அதனை ஏற்று காதில் வைத்து, “ஹலோ” என்றதும் மறுபக்கம் பேசியதை கேட்டு, “ஆமா அண்ணா.. ஆர்டர் பண்ணிருந்தேன். அதே தெருவுல வந்திங்கன்னா ப்ளூ கலர் பில்டிங். பந்தல் போட்டிருக்கும் பாருங்க” என்றதும் யாருக்கோ வழி கூறுவதை அறிந்தனர்.

  கூடியிருந்த கொஞ்சநஞ்சு உறவுகளும் சாப்பிட மாடிக்கு சென்றதால் ரேணுகா வருணிகா, மகிழன் மூவர் மட்டுமே கீழே இருந்தார்கள்.
 
  மகேஸ்வரன் நடராஜன் இருவரும் மேலே பந்தியில் சாப்பிட வந்தவர்களுக்கு குறைவில்லாது பரிமாற மேற்பார்வையிட்டார்கள்.

    ரேணுகாவும் இங்கிருந்தால் வருணிகா நினைப்பை தாண்டி வநீஷா நினைப்பு வரும்‌.

  கண்ணீர் சுரந்து அந்த காட்சி மற்றவர் பார்வைக்கு அகப்பட்டு நல்ல நாளை சோகமாக மாற்ற வேண்டாமென்று மாடிக்கு சென்றார்.‌

   ஷீலாவுக்கு மாடி ஏறியிறங்க இயலாது. மூட்டுவலி காரணமாக கீழே இருந்தவர் மருமகளை பூரித்து மகிழ, மகிழன் வாசலுக்கு போவதை கண்டார்.

    “மகிழ் என்னப்பா?” என்று கேட்டதும், “ஜஸ்க்ரீம் ஆர்டர் செய்தேன்மா வாங்கணும்” என்றான்.

   “புது சட்டை போட்டியிருக்க, அதுவும் விழா நாயகன், நீ அட்டைப்பெட்டியை தூக்காத. சட்டையில அழுக்குபடியாம இருந்துக்கோ” என்று கூறவும் அன்னை சொல் தட்டாத தனையனாக தலையாட்டி கொண்டான்.

   ஐஸ்க்ரீம் கொண்டு வந்தவரையே மேலே எடுத்து செல்ல கோரிக்கை வைத்தான்.

   மேலே சென்றவன் வந்ததும் பணத்தை கொடுத்து வழியனுப்ப மகிழன் காத்திருக்க, ஷீலா சத்தமில்லாமல் பூஜையறையில் மாட்டப்பட்டிருந்த தன் மகள் மணிமொழியின் புகைப்படத்தை காண சென்றார்.

   புகைப்பட பிரேம்மில் செயற்கை மலரால் மாலை மாட்டியிருந்தது மணிமொழிக்கு.

  “உங்கண்ணாவுக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தம் மொழி. சிம்பிளா நம்ம வீட்லயே நடந்தது. இதையெல்லாம் பார்க்க நீ உயிரோட இல்லையே.” என்று தழுதழுத்தார்.

  மகிழன் ஐஸ்கிரீம் கொண்டு வந்தவரிடம் பணத்தை கொடுத்துவிட்டு, வீட்டில் நாலாபக்கமும் பார்வையிட்டான்.

    அன்னை ஷீலாவோ பூஜையறையில் இருக்க, தன் அறைக்குள் நிழலாட, அது வருணி என்றறிந்து, தன் நடையை தூரிதப்படுத்தி சென்றான். அவனுக்கு தன்னை மணக்க இருக்கும் வருணியை தனியே சந்திக்க அமைந்த வாய்ப்பு அல்லவா?!
 
   அங்கே வருணிகா பதின்பருவத்தில் இருந்த, மகிழன் புகைப்படத்தை இமை கொட்டாமல் பார்த்தாள்.

    “அதுக்குள்ள என்ன அவசரம். இங்க வந்துட்ட?” என்று மகிழன் குரலில், “ஆங்… ஒ..ஒன்னுமில்லை அத்தான்.” என்று தடுமாறினாள்.
 
    “இங்கெல்லாம் வரக்கூடாதுன்னு தெரியாதா? மாமா சொல்லி சொல்லி  வளர்த்திருப்பாரே” என்றான் கிசுகிசுப்பாய்.

   “நான்.. நான் டிரஸ் மாத்திக்க வந்தேன். அம்மா இங்க தான் என்னோட டிரஸ் வச்சியிருப்பதா சொன்னாங்க” என்று கண்களை சுழட்டினாள்.

“மாத்திக்கோ” என்றவன் கையை மார்பில் கட்டி பார்வையாளராய் மாறும் விதமாக நின்றான். ஆடை மாற்றும் நேரம் இப்படியா மகிழ் அத்தான் நிற்பார்? 

வருணிக்கு திகைப்பாக, மகிழன் விளையடுவதை தொடர்ந்தான்.   “அதுக்குள்ள அவசரமா சேலையை கழட்ட” என்றவன் குறும்பு பேச்சில் வருணி திகைப்பின் உச்சிக்கு போனாள். 

  “என்ன மிரண்டுட்டு இருக்க? அந்த கப்போர்ட்ல உன்னோட சுடிதார் இருக்கு. அத்தை கட்டில்ல வச்சாங்க. நான் தான் எடுத்து உள்ள வச்சேன்” என்று கூறவும் அவனது செயலில் பேச்சில் குறுகுறுப்பு உருவானது.

  இல்லையா பின்ன….

‌  பேசிக்கொண்டே நெருங்கி வந்த மகிழன் அவளது கரத்தை பற்றி மோதிரத்தை தடவுவது போல அவள் விரலையும் தடவினான்.
  
    “பிடிச்சிருக்கா?” என்றான்.‌

   ‘ஙே’ என்று விழித்தவள் அவன் தீண்டலை கேட்கின்றானா? என்று அதிர்ந்தாள்.

  மகிழனோ கள்ளச்சிரிப்பில் “நான் மோதிரத்தை கேட்டேன்” என்று கேட்டதும், மயிர்கூச்சம் அடைந்தது.

   அதனை ரசித்தவன் “எப்படியும் சாப்பிட்டு சொந்தக்காரங்க போகறவரை அம்மா உன்னை சேலை மாத்த விட மாட்டாங்க. அது வரை எனக்கு லாபம்” என்றவன் பெண்ணவளின் இடையை வளைத்து தன் பக்கம் நெருக்கினான்.

   “அம்மா… அத்தை.. யாராவது வருவாங்க” என்று நடுங்கியவள் அவன் நெஞ்சில் கைவைத்து தள்ள முற்பட்டாள். ஆனால் இம்மியும் தள்ள முடியாது தன்னை இன்னும் நெருங்கிட கூடாதென்ற நினைப்பில் இமை முடி துடித்தாள். அவளது பயமறிந்து தன் கைகளை அவளது தேகத்திலிருந்து எடுத்துவிட்டான்.

   அதற்குள் அவள் மதிமயங்கி  உதடுகள் தந்தியடிக்க, “நான் ஹாலுக்கு போகணும்” என்றாள் கெஞ்சலாய்.

    “நான் என்ன பிடிச்சி வச்சிட்டு இருக்கேன்னா?” என்று எதிர் வினா கேட்டதும், அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளை சுற்றி படரவிட்டிருந்த கைகளை, அவன் பேண்ட் பேக்கெட்டில் விடுத்து ஒய்யாரமாக பெண்ணவளை ரசித்தான்.

இரு வினாடிக்கு முன் கையை தன் இடையில் வைத்திருந்தவன், இமை முடி திறக்க விடுவித்து ஜாலமாய் பேசியதில், தன்னை விட்டால் போதுமென்று வருணி ஓட்டமெடுத்தாள். 

 மகிழனோ  “வநீ… உன்னை மாதிரி இல்லைடி வரு” என்று மகிழன், மணிமொழி, வருணிகா, வநீஷா என்று நால்வர் இருந்த புகைப்படத்தில் வநீஷா திமிராய் நிமிர்ந்து இருந்ததை கண்டு தனியாய் எப்போதும் போல் பேசினான்.

மகிழனுக்கு வநீஷா எப்பொழுதும் வநீ. வருணிகாவை வரு என்பான் செல்லமாய்.

—-

மும்பை

     சொகுசு மெத்தையில் ஆடைகள் களைந்திருக்க, ஒவ்வொன்றாய் தேடி எடுத்தாள் நீஷா.

    அப்பொழுது அவளிடம் நேராக பாய்ந்து தன் தேவையை தீர்த்து கொண்ட நாற்பது வயது ஆடவன், “நிஷா இந்த உடையை நான் வச்சிக்கவா?” என்று அல்பமாய் அவனது தாய் மொழி ஹிந்தியில் கேட்டு நின்றான்.

  “நிஷா இல்லை மேன் நீஷா.” என்று கெத்தாக ஆரம்பித்து, உள்ளாடையின் இழுவை கொக்கியை சரிப்படுத்தி அணிந்தவள், கீழே அணியும் இளஞ்சிவப்பு உள்ளாடை ஒன்றின் விலையே ஆயிரமென்று அவன் பாஷையில் உரைத்தாள் சாட்சாத் இங்கே தொலைந்து சென்ற வநீஷா.
   
   வாயெல்லாம் பல்லாக ஆயிரத்தை கொடுத்து விட, தலையிலடித்தபடி தனது மற்ற உடைகளான பாவாடை, ஜாக்கெட், சேலை அணிந்தாள்.‌

  அவள் கைப்பையை எடுத்திடும் நேரம் “நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கவா?” என்று அந்த ஹிந்திக்காரன்‌ கேட்டு பணத்தை திணிக்க, நகைச்சுவையை கூறியது போல அவ்விடம் அதிர நகைத்தாள் நீஷா.

   “உன்னால என்னை திருப்திப்படுத்த முடியாது” என்று தமிழில் கூறினாள்.

   “கியா?” என்று தமிழ் புரியாத ஹிந்திக்காரனோ விழிக்க, “வந்தியா உன் வேட்கையை என்னிடம் திணித்து தணிச்சியா. இதோட நம்ம உறவு துண்டிச்சிப்போம். அதை தவிர  காதல் கல்யாணம் என்று என் பின்னாடி வந்தா, அடுத்த முறை என் மேல கூட கை வைக்க விடமாட்டேன்.

   அப்பறம் உள்ளதும் போச்சுன்னு புலம்பக்கூடாது புரியுதா?” என்று அவனுக்கு புரியும் ஹிந்தியிலேயே  உரைத்து பணத்தை எண்ணினாள்‌.  கரன்சி நோட் அவளிடம் பேசிய பேரத்தை விட கொடுத்த பணம் அதிகமாகவே இருந்தது. 

    இங்கு வந்து சேர்ந்த பொழுது நீஷாவுக்கு மொழி தெரியாமல் கலங்கினாள்.

  தன்னை தீண்டி, துரத்தி, வேட்டையாடிய ஆண்களை கண்டு கலங்குவாளென்று தான் அந்த இடத்தினை நடத்தும் நிர்வாகி நினைத்தார். சின்னப் பெண் யாரின் கைப்படாமல் வளர்ந்து, இங்கு சமர்ப்பணமானவள் என்று நினைக்க, மாறாக தன் வாழ்க்கை இப்படி இருட்டில் பயணமாக போவதை அப்பொழுதே யூகித்தாள் ஞானி அவள்.

அதற்கு காரணம் தனிக்கதையே…

    அவள் வயதும், அழகும், இளமையும் போட்டி போட்டு ரசிகர்களை சேர்த்திட, நீஷாவுக்கு இந்த தொழிலில் மவுஸ் உண்டு.
 
   அவள் பயந்து கலங்கியது எல்லாம் இந்த மொழியை கண்டே‌.

   இப்பொழுது அந்த ஹிந்தியிலும் பேசி வாடிக்கையாளரை அசத்தி அதிர வைப்பாள். 

   தன்னை கொண்டாட ஆட்கள் உண்டு என்றதில் கர்வம் உண்டு. நீஷா இங்கு வந்த, இந்த ஒன்பது வருடத்தில் பலரும் மணக்க கேட்டு விட்டனர். காதலிப்பதாக காலடியில் பொன்னும் பொருளும் கொட்டிவிட்டனர்.
 
    ஏனோ நீஷாவிற்கு யாரை பார்த்தாலும் தன்னோடு கூடலுக்கு ஒத்துழைத்துக் கொள்வாளே தவிர, தன் இதயக் கூட்டில் நெருங்க விடுவதில்லை.

   இதயக் கூட்டில் அதையும் மீறி  சிம்மாசனபிட்டு அமர்ந்தவனும் உண்டு. அவன் சாஹிர்.

  இதே மும்பை மாநகரில் யாருக்கு பிறந்தான் என்று வரலாறு கண்டறியப்படவில்லை.
 
அவன் கண்டறிந்திடும் விருப்பமின்றி திரிபவன். தன் தந்திர புத்தியாலும், பழகும் மனிதரின் பேச்சுக்கு பதில் கொடுக்கவும், ஆங்கிலத்தை கற்றறிந்தான்.

   கற்றுத் தேர்ந்த அறிவாளியின் புத்திசாலித்தனம் உள்ளவன்.

    பெண்கள் மயங்கும் கட்டுமஸ்தான உடல். மேற்சட்டையை அகற்றிவிட்டு நின்றால், படிக்கட்டு தேகங்கள், கற்பனைக்கு கடிவளமிடாமல் கள்ளத்தனமாய் கண்களிலேயே அழகை களவாடும். இவ்வாறு அழகும் அறிவும் ஆற்றலும் கொண்டவன்.

   பெண்களின் கனவுக்கு கால்ஷீட் தருபவன், ஒரே பெண்ணிடம் மன்றாடி விழும் இடமென்றால் நீஷாவின் பாதத்தில் மட்டுமே. மத்தபடி அவன் ஒன்றும் உத்தமன் இல்லை.

   அவனுக்கு நீஷா வாழ்க்கை முறை அத்துப்படி. அவள் யார் யாரோடு இருப்பாள், எத்தனை முறை ஹோட்டலுக்கு வந்து சென்றால் என்ற புள்ளிவிவரம் முதற்கொண்டு அறிந்தவனே.

    அதை தாண்டி ஆசைப்பட்டு அடிமை கொண்டான்.

   காரணம்‌.. பாம்பின் கால் பாம்பு அறியும் என்பது போல தனக்கு ஏற்ற ஜோடி இவளாக இருக்க மணக்க ஆசைப்பட்டான் சாஹிர்.

   நீஷா அவனிடம் முடியாதென்று பாதகமாக மறுக்காமல், அதே நேரம் அவனுக்கு சாதகமாக சம்மதிக்காமலும் சுற்ற வைப்பாள்.

    சாஹிருக்கு எப்படியும் நீஷா தன்னை மணக்க சம்மதிப்பாளென்று ஆருடம் தெரிந்தவனாக அடித்து கூறுவான். நீஷா பெரும்பாலும் லேட்நைட் என்றால் சாஹிரை மட்டுமே அழைப்பாள்.

   அவனும் அங்கேயிங்க சுற்றிதிரிந்தாலும் வந்து சேர்பவன்.

இன்றும் அப்படியே நீஷா அழைக்க, சாஹிர் வருவதாக கூறினான்.

   அவன் வரும் முன் ரோட்டில் நின்றவளிடம் பத்து பேர் பேரம் பேச வந்தார்கள்.

   மற்ற நேரமென்றால் பேரத்தினை வைத்து விலை கூட்டுவாள். அதே அவளுக்கு விருப்பமின்றிய தருணமாய் போனால், யாரிடமும் பதில் கூறாமல் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல நிற்பாள்.

இந்த நொடியும் பதிலின்றி அலட்சிய பாவணையில் திரிந்தால் சண்டிகுதிரை அவள்.

    சாஹிர் காரை கொண்டு வந்து அவள்முன்னே நிறுத்த, அதில் முன்பக்கம் ஏறினாள்.

   “எங்க உன் வீட்ல விடவா? என் வீட்டுக்கா” என்று தொடையில் கை வைத்து அழுத்தினான். பலதரப்பட்ட மொழியை கற்றதனால் தமிழிலும் பேசுவான். நீஷா இடம் கொடுக்க மேனியில் அவன் உடல் மொழியாளும் பேசிடுவான். 

  நீஷாவோ “எங்க… அந்தாளு பணம் மட்டும் தான் திருப்தியா கொடுத்தான். மத்ததுல திருத்தி படுத்தலை சுத்த வேஸ்ட்.” என்று கூற அவளது ஆசை புரிந்தவனோ, “அப்ப என் வீட்டுக்கு காரை விடறேன்” என்று கண்சிமிட்டி காரை கிளப்பினான்.

   தோகை மயில் போல விரிந்த கூந்தலை சண்டைக்கு போவது போல அள்ளி முடித்தாள்.

   “இப்ப எதுக்கு கொண்டை. என்னத்தை வாறி முடிச்ச? அதான் அங்க உன்னை தொட்டவன் ஒன்னும் பண்ணலையே. ஃப்ரீ ஹேரே இருக்கட்டும் மஜாவா” என்று களைத்து விட்டான்.

   நீஷாவுக்கு இடை தொடும் கூந்தல், அதை பிடித்து இழுக்க, அவன் மீது சரிந்தாள்.

   “பச் சாஹிர்… முதல்ல குளிக்கணும் கண்டயிடத்தில் எச்சிபடுத்திட்டான்.” என்றாள்.

   “வீட்டுக்கு போய் சேர்ந்தே குளிச்சிடுவோம்” என்று சரசமாய் கதைத்தான்.

-தொடரும்.

6 thoughts on “ஆலகால விஷம்-3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *