இரசவாதி வித்தகன்-10
“இப்ப என்ன… நீ எனக்கு அத்தான். போதுமா…?
அம்மா கொடுத்த புட் சாப்பிட்டிங்களா அத்தான். நல்லாயிருந்துச்சா அத்தான். உங்களுக்காகத் தான் அப்பா அம்மா இறால் வாங்கப் போயிருக்காங்க அத்தான். போரடிக்குனா எங்கண்ணா உங்களோட ஊர்ச்சுத்தி காட்டுவான் அத்தான்.” என்று வார்த்தைக்கு வார்த்தை அத்தான் எனப் பேசிவிட்டு சென்றவளை கண்டு துளியும் நேசம் பிறக்கவில்லை. மாறாகக் கோபமே வழிந்தது.
‘மயூரன் அத்தான்’ என்ற வார்த்தையில் அத்தனை பணிவும் நேசமும் இருந்தது.
இந்த அத்தானில் ஏகப்போக நக்கல் தெரிய, அங்கிருக்கப் பிடிக்காமல் தோட்டத்துப் பக்கம் சென்றான்.
அங்கே…
மயூரனோ போனில் சவீதா, ரித்விக், இளஞ்செழியன் மூவரின் போட்டோவை காட்டி வித்தகனுக்கு அறிமுகம் செய்தது போல வரப்போகும் துணையை ரிப்போர்டர் என்றும், மாமனார் இளஞ்செழியன் அரசியல்வாதி என்றும் அமலாவுக்கு விவரித்தான்.
அமலாவோ, “நான் ஏன் ஜெயிலுக்குப் போனேன்னு தெரிந்தும் அரசியல்வாதி பொண்ணை விரும்பியிருக்க?” என்று குற்றம் சுமத்தும் பேச்சை ஆரம்பித்தார்.
“விரும்பறப்ப தெரியாதும்மா. ஒருத்தரால எல்லாரையும் தப்பா பார்க்க முடியாதே.” என்று மயூரன் பேசவும் அதிருப்தியாக மாறினார் அமலா.
அன்னை முகம் மாறவும், “எனக்கு இப்பவும் அந்தாளு மேல கோபமிருக்கு. நான் தான் முன்னயே ஏதாவது பண்ணறேன்னு நின்றேன். நீங்க தான் என்னை எதுவும் பண்ண வேண்டாம்னு கட்டிப்போட்டிங்க” என்று மயூரன் கூறவும் அமலா மகனை உறுத்தி விழித்தார்.
“எதுவும் பண்ணாதேனு நான் சொன்னேனா? உன்னால அந்த வினுசக்கரவர்த்திச் செத்தா சந்தோஷப்பட்டு உன்னைக் கொண்டாடியிருப்பேனே தவிர எதுவும் செய்யாதனு கட்டிப்போட்டிருக்க மாட்டேன்.” என்று அமலா அனலாகப் பேசவும் மயூரன் குழம்பினான்.
எத்தனையோ முறை முதல்வரான வினுசக்கரவர்த்தியை பழிவாங்க முயன்றான். ஆனால் மாமா ஐயப்பனோ ‘உங்கம்மா பழி பாவம் வேண்டாம்னு சொல்லிட்டாயா உன்னை நல்லவனா வளர்த்தா போதும்னு சொல்லறா. நீ எதுவும் பண்ணிடாதே’ என்று தான் கூறினார்.
வித்தகனோ அண்ணனும் தாயும் இயல்பாய் இல்லாதது பார்வைக்குத் தென்படவும் “ஹாய்… ஏன் இப்படி இருக்குப் பேஸ். என்னாச்சு அண்ணா? உங்களுக்கு எதுக்குக் கோபம்?” என்று வரவும் அமலாவோ முகத்தை இயல்பாக்கினார்.
“ஒன்னுமில்லை மேகவித்தகா… மயூரனை கட்டிக்கப் போற பொண்ணு குடும்பம் எல்லாம் எப்ப வருவாங்கனு கேட்டேன். கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்ன வருவாங்களாம். அதான் கோபம்.
நாலு நாள் இருக்கற மாதிரி வந்தா நாம பழகலாமேனு” என்று மாற்றினார்.
“அவங்க பொறுமையாவே வரட்டும். நாம பழகலாம். இவ்ளோ நாள் எங்கயிருந்திங்க?” என்று கேட்டு பதிலுக்காக ஆசையாய் தவித்தான்.
“மேகன் அத்தான்… வந்ததும் வராததுமா ஏன் கஷ்டமான பதிலுக்குக் கேள்வி கேட்கறிங்க.
உங்கம்மாவிடம் நீங்க ஷேர் பண்ண நிறைய விஷயம் வச்சிருந்தா பேசுங்க. அவங்களை ஊட்டி விடச் சொல்லலாம். அவங்க மடில தலைசாய்ந்து தூங்கலாம். அவங்க தேவை என்னவோ நிறைவேற்றலாம். பிறகு நீங்க கேட்டா… பதில் சொல்வாங்க” என்றாள் மஞ்சரி.
அவளின் ‘மேகன் அத்தான்’ என்ற ஐஸ் மழையில் அவளை ரசித்துக் கொண்டு, அமலா அருகே அமர்ந்தான்.
“போதுமா கொலுசொலி…?” என்று அமலாவின் கால் பக்கம் அமர்ந்து மடியில் தலைசாயவும் அமலாவுக்குப் பொசுக்கெனக் கண்ணீர் சுரந்தது.
ஆனந்தத்தில் ஆறாய் பெருகிய அன்பில் அவளது கண்ணீர் மைந்தனின் மீது பட்டுத் தெறிக்கக் கூடாதென்று சட்டெனத் துடைத்து அவன் தலைக்கோதவும், “ம்மா… நானும்” என்று மயூரன் மற்றொரு தொடையில் மடியில் தலை வைத்து முடித்தான்.
அமலாவின் மடியில் இரு வளர்ந்த பிள்ளைகளும் தலைசாயவும் இருவரினையும் சிகை கோதி முத்தமிட்டார் அமலா.
‘என் பசங்க… என் பசங்க. என் மேல பாசமா வந்து சேர்ந்தாச்சு’ என்று மனதில் மகிழ்ந்தார் அமலா.
இதைத் தான் எதிர்பார்த்தேன் என்பது போல மஞ்சரி கையைக் கட்டி மென்னகை புரிந்து அக்காட்சியை ரசித்தாள்.
சப்தமில்லாமல் மஞ்சரி தனது பணியைப் பார்க்க செல்லவும், மேகவித்தகனோ, “இவயென்ன சட்டுனு போயிட்டா. ‘அவளுக்கு அம்மாவை பிடிக்குமோ?’ என்று புரியவும் அன்னையை அணைத்துக் கொண்டான்.
சற்று நேரம் கழித்து மேகவித்தகனோ, “என்னோட வந்துடறியா அம்மா? இதுவரை நீ தனியா இருந்த. இனி என்னோட வந்துடு” என்று அழைத்தான்.
“இல்லைப்பா… காலம் பூரா உங்கப்பாவோட வாழ்ந்த இந்த இடத்துலயே இருந்துடுவேன்” என்று அமலா முதலாய் முடிவாய் மறுத்தார்.
மேகவித்தகனுக்கோ ‘அங்க அவ்ளோ பெரிய வீடு இருக்கே அங்க அம்மா அப்பா வாழலையா? இங்கயே வாழ்ந்துடுவேன்னு சொல்லறாங்க. அப்பறம் இவ்ளோ நாள் எங்கயிருந்தாங்க?’ என்று மனதில் வந்து செல்ல அவர்களிடமே கேட்கவில்லை. அதே போலத் தந்தை இறப்புக்கு அம்மா காரணமென எண்ணியதற்கு மாறாக அம்மா தந்தையை அல்லவா நேசம் வைத்து பேசுவது புரிந்தது.
யாரும் சொல்லாமல் விடுப்படும் புதிருக்கு அவனும் தயாராய் அறிய இருந்தான்.
மஞ்சரி என்ற ஒருத்தியால் மற்றவரின் குறைகளாக அவன் நினைத்தவையைக் ‘குறைகள் தானா?’ என்று ஆராயும் முடிவில் கவனிக்க ஆரம்பித்தான்.
முன்பு சுற்றும் உறவும் கண்டுக்கொள்ளாதவன் அமலா மயூரன் மஞ்சரி என்று ஒவ்வொரு செய்கையையும் நுணுக்கமாய் நோட்டமிட்டான்.
அதில் முதலில் புரிய துவங்கியது. அமலாவிடம் கனிவாய் நடந்தால் மஞ்சரிக்கு பிடிக்கின்றதென்ற ஒன்றே முதலில் தெளிவடைய, அதனைப் பிடித்துக் கொண்டான்.
அவனுக்குள்ளும் அன்னை நேசம் உண்டு. மயூரனோ “அம்மா… கோபமா?” என்றான்.
‘இல்லை’யென்று மயூரன் தாடை பிடித்துக் கொஞ்சவும் அவனும் நிம்மதியானான்.
ஐயப்பன்-பார்வதி வரவும் அவர்களோடு அமலா மடியில் பேசி ரசித்தான்.
“மஞ்சு… இந்த இறாலை உறிச்சு தாடி” என்று பார்வதி கூப்பிட, “அப்ப என்னோட லண்டன் க்ளைண்ட் கூடயிருக்கற மீட்டிங்ல நீ பேசறியா?” என்றதும் பார்வதியோ “போடி” என்று வேலையைப் பார்த்தார்.
மேகவித்தகனோ ‘இவயென்ன வேலை பார்க்கறா? இவளை பத்தி வேற தெரிஞ்சுக்கணுமே.’ என்றவன் மயூரனை சுரண்டினான்.
அவனோ சவீதாவிடம் கடலை வறுக்க, “சவீ கூடப் பேசறியா?” என்று கேட்டான்.
வேகமாய் மறுத்துவிட்டு “நீ பேசிட்டு வா” என்று அமலா பின்னால் ஓடினான்.
அமலாவும் பார்வதிக்கு உதவியாகச் சமையலில் புழங்கினார். இருமகன்களுக்கும் பிடித்தவகையில் சமைத்தார். சமைக்கும் பொழுது தேங்காய் துருவவும், கண்கள் பனித்தது.
“என்னாச்சு மதினி.” என்று பார்வதி கேட்க, ரொம்ப வருஷம் கழிச்சு சமைக்கவும் கண்ணு கலங்குது.” என்று உரைத்தார்.
வித்தகனோ காதில் வாங்கியவன் யாரிடம் முடிச்சுக்களைக் கேட்டு விடைக்கிடைக்குமென நோட்டமிட்டான்.
அவனுடைய கண்கள் மயூரன், ராஜாராம், மஞ்சரி, பார்வதி ஐயப்பன் என்று சோலிபோல உருட்டி மஞ்சரியையே நாடியது.
மஞ்சரி அப்பொழுது சும்மா இருக்கவும் அவளைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றான் வித்தகன்.
ஐயப்பன் வித்தகனின் செய்கையைக் கண்டு திடுக்கிட்டார்.
தனது தங்கையின் கணவர் இறப்பும் தங்கையின் சிறைவாசமும், வித்தகனின் ஜாதகத்தாலென்று ஆணித்தரமாக நம்பும் ஐயப்பனுக்கு லேசாய்க் கிலியுண்டாகியது. அதைத் தாண்டி வேறொரு எண்ணமும் பிரவாகித்தது.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
என்ன ஜோசியம் மற்றும் ஜாதகம் எல்லாம்?