Skip to content
Home » இரசவாதி வித்தகன்-14

இரசவாதி வித்தகன்-14

இரசவாதி வித்தகன்-14

     வித்தகன் பார்வை மறையும் அளவிற்குத் தள்ளி வந்தப்பின்  “மயூரன் தப்பு பண்ணிட்டப்பா. நீ வித்தகனை அழைச்சிருக்கக் கூடாது. எனக்கென்னவோ பழசை மறக்க வந்த என் தங்கையிடம் அதையே பேசி இவன் கஷ்டப்படுத்துவானோனு தோன்றுது.” என்று சஞ்சலமாய்ப் பேசினார்.

    “என்ன மாமா இப்படிச் சொல்லறிங்க. எத்தனை வருடம் கழித்து வந்திருக்கான். பாருங்க வந்த இரண்டாவது நாளே பாட்டியை எப்படி உரிமையா மாத்திட்டான்னு.

  நானும் தான் இந்த ஊர்ல வளர்ந்தேன். அடிக்கடி இங்க வர்றேன். என்ன யூஸ். பாட்டியை பார்த்துட்டு சொல்றதை கேட்க மாட்டிங்கனு நானே கடந்துட்டேன்.

   நானும் அவங்களோட இருந்து இரண்டு வார்த்தை பேசியிருந்தா முன்னவே குடும்பம் ஒன்னு சேர்ந்திருக்கும்.” என்று கவலையாய் கூறினான் மயூரன்.

    “அட நாங்க என்ன அத்தையை அம்போனு விட்டோமா என்ன? அவங்க தான் இந்த வீட்டுக்கு வரலை. பெத்த மகள் சமைச்சி கொடுத்தா, தோட்டத்து வீட்ல இருந்து உங்க மூன்று பேரையும் பார்த்து ரசிச்சுயிருக்கலாம்ல.” என்று ஏற்றிவிட்டார்.

    “இல்லை மாமா… என்னதான் அத்தை பார்த்துக்கிட்டாலும், அவங்க வரலைனா அப்படியே விட்டுட்டோம்” என்று முதல் முறையாக மயூரன் பேசவும் ஐயப்பன் கோபம் கொண்டார். ஆனால் மயூரனிடம் காட்டிக்கவில்லை.

    “சரி சவீதா சவீதாவோட தம்பி தங்க இடம் பார்த்தியா?” என்று நாசூக்காய் மாற்றினார்.

   “இல்லை மாமா இனி தான் பார்க்கணும்.” என்று கூறியதும் மஞ்சரி சாயா கொண்டு வர, இருவரும் எடுத்து சுவைத்தார்கள்.
 
    சூடாக வாழைக்காய் பஜ்ஜி வேறு கொண்டு வர, “மயூ அத்தான் இதையும் எடுத்துக்கோங்க” என்றாள் மஞ்சரி.
   “தேங்க்ஸ் மஞ்சு” என்று எடுத்துக் கொண்டான்.

    மஞ்சரி சென்றதும் ஐயப்பன் கவலையாய், “உங்களுக்கும் மஞ்சரிக்கும் கல்யாணம் பண்ணலாம்னு கனவெல்லாம் கண்டேன்.” என்று பேசவும் மயூரனோ, “மாமா… ஒரே வீட்ல வளர்ந்திருக்கோம். எப்படி மாமா தப்பா பார்க்க முடியும். அதுவுமில்லாம இரண்டு பக்கமும் உறவு முறை. சொந்தத்துல கல்யாணம் வேண்டாம் மாமா.
  அதை விட முக்கியம் எனக்குச் சவீதாவை பிடிச்சிருக்குனு சொன்னேனே.” என்று தவித்தான்.
 
   ஐயப்பனுக்கு மகள் மஞ்சரியோடு மயூரனை சேர்த்து வைக்க ஆசை. ஆனால் கானல் நீராகப் போனதே.

     மஞ்சரியும் மயூரனுக்காகப் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. அன்பும் பாசமும் மயூ அத்தான் மேல் உண்டு. இந்தக் காதல் நிச்சயம் வராது என்று தந்தையிடம் உரைத்தவளாயிற்றே.
 
   இப்படியே நேரம் கழிய, இரவு உணவை பாட்டியோடு சாப்பிடவும் கேளிக்கையாய்ச் சென்றது நிமிடங்கள்.
   
   இரவு உணவையும் சாப்பிட்ட வித்தகன் கிளம்பும் போது பாட்டியை கையோடு அழைத்துச் சென்றான்.

    அமலா அருகே வந்தவன், “நீ எப்பம்மா நம்ம வீட்டுக்கு வருவ?” என்று கேட்டு அன்னையின் பதிலை கேட்க ஆவலாயிருந்தான்.

     “அந்த வீட்டுக்கு நான் வரமாட்டேன் வித்தகா.” என்று மென்று விழுங்கி பேச கடினப்பட்டு வார்த்தையை உதிர்த்தார்.

    “ஏன்மா?” என்றதும் ஐயப்பன் இடைப்புகுந்து “என் மச்சானும் தங்கையும் வாழ்ந்த வீடு. அங்க வந்தா பழைய நினைவு வந்து கஷ்டப்பபடுத்தாது.” என்று பதில் தந்தார். மட்டி போலப் பேசுகின்றானேயெனக் கோபம் கொண்டார்.

   வித்தகனோ தாயிடம் நெருங்கி, “இப்ப மட்டும் நீ சந்தோஷமா நடந்ததை மறந்து வாழறியா அம்மா. இல்லை தானே? சரிம்மா… நீ இங்கயிரு… எப்ப உனக்கு இந்தப் பையனோட இருக்கணும்னு ஆசையோ அப்ப சொல்லு” என்று அன்னையிடம் பேசிவிட்டு, “ப்யூட்டி வா போகலாம்” என்று மஞ்சரி பக்கம் பார்த்து கையசைத்து கூப்பிடவும் ஐயப்பனுக்கு இதயபாதிப்பு நேர்ந்திடாத நிலை.

    “இரண்டு நிமிஷம் ராசா” என்று மீனாம்பாள் கூறவும் ஐயப்பன் முகத்தின் பயத்தில் வித்தகனுக்குச் சிரிப்பு உதித்தது.

      ‘மஞ்சரி பக்கம் நான் பார்த்தா மாமாவுக்குப் பிபி வந்து ஹார்ட் அட்டாக்கே வந்துடும் போலயே… வித்தகா… விளையாடுடா ஜாதகமா பார்க்கறிங்க ஜாதகம்.’ என்று ”ஏய் ‘கொலுசொலி’ மீன்குட்டியை அனுப்பு” என்று கத்தவும் ஐயப்பனுக்குச் செல்லப்பெயர் வேறயா’ என்று நொடித்தார்.
 
     சேதுபதி தனது நண்பர் வீட்டுக்கு சென்று அங்கே உணவருந்தி வீட்டுக்கு வருவதாகக் கூறியிருந்தார். அதனால் மயூரன், மீனாம்பாள், வித்தகன் மூவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

   பார்வதி எவ்வளவு சொல்லியும் மீனாம்பாள் கேட்காமல் சின்னப் பேரனோடு செல்ல முடிவெடுத்தார்.

    “எத்தனை நாள் சின்னப் பேரன் இங்க இருப்பான். அவன் தொழிலை கவனிக்க லண்டன் போயிடுவான். இவங்க மறுபடியும் கோவில் மரத்தடி குளம்னு சுத்தப்போறாங்க. எப்படியும் நம்மளை நாடி வந்தாகணும்.” என்று மிதப்பில் திரிந்தார் ஐயப்பன்.

      அமலாவோ மகனின் பேச்சில் உழன்றாலும், தனது வீட்டுக்கு செல்ல இயலுமா? இதையே யோசிக்க மஞ்சரி வந்தாள்.

   “என்ன அத்தை பையனோட போகணும்னு மனசு தடுமாறுதா?” என்றாள்.

    “ஆசையா இருக்குடா ஆனா அந்த வீட்டுக்கு போக முடியாதே.” என்று அழுதார்.

    “மயூ அத்தான் கல்யாணம் முடியவும் லண்டன் போயிடுங்க” என்று ஆலோசனை அளித்தாள்.

    “நான் இதுவரை எதையும் யோசிக்கலை மஞ்சரி. ஜெயிலிருந்து வந்தப்ப அண்ணா மயூரனுக்குக் கல்யாணம் என்றதும் உனக்கும் அவனுக்கும் தான் திருமணம்னு தப்பா நினைச்சிட்டேன்.” என்று சோகமானார்.

    மஞ்சரியோ “அத்தை… என்னை ஜோடி சேர்க்கலைனு தான் கவலையா இருக்கியா? உங்க பையனுக்குக் கல்யாணம் அத்தை. இப்படியா முகம் டல்லடிக்கணும்.

   யாருக்கு யார் முடிச்சி போடுவாங்கனு தெரியாது. நீ உன் அண்ணன் பாசத்தை மூட்டை கட்டி வச்சிட்டு, பையனுக்குக் கல்யாணம் என்று வேலையைப் பாரு.

சவீதா அக்காவோட நாலைந்து முறை பேசியிருக்கேன். நல்லா பழகறாங்க. இந்த ஊரோ லண்டனோ பிடிக்கலைனா என்ன? நீ பேசாம மயூ அத்தானோட சென்னைக்குப் போயிடு” என்று ஐடியா கொடுத்தாள்.

“எனக்கு அரசியல்வாதி மகளே பிடிக்கலை. இதுல அவங்களோட இருக்கறதாவது. மயூரனுக்குத் தெரியும் நான் அவளோட சேர்ந்து வசிக்க மாட்டேன்னு.” என்று பேசவும், மஞ்சரியோ அமலா கையைப் பிடித்துத் தனது கைக்குள் வைத்து, “எங்கயும் போகப் பிடிக்கலைனா என்ன? நீ என்னோட வந்துடு.” என்று செல்லம் கொஞ்சினாள்.

அமலாவோ, “ஏதேது உனக்குனு வர்றவன் வந்தா நீ அவன் வீட்டுக்கு போகணும். நான் வரமுடியுமா? காலத்துக்கும் இந்தத் தோட்டத்து வீடு மட்டும் தான். சாகறவரை வெளியே யார் கண்ணுக்கும் படாம மூலையில் ஒரமாய் இருந்துப்பேன்” என்றதும் மஞ்சரியோ “எனக்குனு எவன் வருவான். நான் கல்யாணம் பண்ணற ஐடியால இல்லையே அத்தை.” என்று பேசவும் ஐயப்பன் பார்வதி திடுக்கிட்டு திரும்பினர்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

2 thoughts on “இரசவாதி வித்தகன்-14”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *