Skip to content
Home » இரசவாதி வித்தகன்-15

இரசவாதி வித்தகன்-15

இரசவாதி வித்தகன்-15

    மஞ்சரியின் பேச்சில் அமலாவோ, “எதுக்குடி இப்படிப் பேசற. இதுக்குத் தான் உங்கப்பா கூடச் சண்டை போட்டு வந்து என்னை ஜெயில்ல சந்திச்சியா?. என் பையனையே பார்க்காத என்னை. உன்னைப் பார்க்க வச்சி, பேச வச்சி, உங்கப்பா கூடவே வந்து என் மனசுல ஒர் இடத்தைப் பிடிச்சிட்டு. இப்ப இப்படிப் பேசற? எனக்கு இதைக் கேட்டு கஷ்டமாயிருக்காதா?” என்றவர் சப்டென இதயத்தைப் பிடித்து, “மஞ்சரி.. மயூரனை விரும்பினியா?” என்று தாடை தொட்டு கேட்டார்.

    “அச்சோ அத்த அதெல்லாம் இல்லை. எனக்குக் கல்யாணம் பிடிக்காது. பெரிசா காரணம் எதுவுமில்லை” என்று மஞ்சரி உரைத்தாலும், இதே சொற்கள் பார்வதி முன்பு கூறியதை நினைவேடுகளில் தோன்றி மறைந்தது.

  ‘அய்யோ அண்ணி.. அதெல்லாம் இல்லை. எனக்குக் கல்யாணமே வேண்டாம்’ என்று பார்வதி உதித்த வார்த்தைகள் தற்போது மஞ்சரி உச்சரிப்பது அமலாவுக்கு என்னவோ போல மனம் பதட்டத்தை விதைத்தது.

     “ஏன் அத்த… நான் பார்க்க வந்த மாதிரி, மயூ அத்தானும் உன்னைப் பார்க்க அப்பா பின்னாடி ஒளிஞ்சிட்டு வந்தாரே. பிறகு ஏன் பின்னாடி ஒரு பையன் வர்றான் என்றதும் வேகமா பார்க்க மறுத்துட்டு ஜெயிலுக்குள் ஓடின.” என்று ஐயத்தைக் கேட்டாள்.

    “எப்பவும் மயூரன் வயசுல பசங்க இருந்தா நான் வரமாட்டேன். ஜெயிலர் அக்காவிடம் யார் யார் வந்திருக்கானு கேட்பேன் அவங்க சொல்வாங்க.

   பொதுவா… ஜெயிலில் தேவையற்ற ஆண்களை உள்ள விடமாட்டாங்க. அதனால ஆண்கள் வந்தா தெரிந்திடும். அதனால மயூரன் வர்றான் என்றாலே அண்ணாவை பார்க்காம தவிர்த்திடுவேன். ஆனா நீ தான் வேற யாரையோ பார்க்க வந்தது மாதிரி வந்து பார்த்துட்ட. அதோட அடுத்தடுத்து வரவும் செய்த. சேட்டை பிடிச்சவளா, நான் அத்தையை விட்டு போகமாட்டேன்னு அடம் பண்ணின. அப்பப்பா… நீ போனப்பிறகும் அடுத்த மாசம் வரை அந்த ஜெயிலர் அக்கா, ஜெயிலில் காவலுக்கு இருந்த போலிஸ், சிறை கைதிங்க எல்லாருமே உன்னைப் பத்தி பேசவச்சிட்ட.

    மயூரனும் நான் பார்க்க மாட்டேன்னு சொன்னதும் புரிஞ்சுக்கிட்டான். என்னயிருந்தாலும் வித்தகனுக்குத் தெரியாதது சில மயூரனுக்குத் தெரியுமே.” என்று கூறவும் மஞ்சரி அன்றைய நிகழ்வில் சிரித்தாள்.

   மண்ணில் புரண்டு அழுச்சாட்டியம் செய்து மஞ்சரி என்ற பெயரை பதிய வைத்து விட்டாளே.
  
    “ஏன் அத்த எங்கம்மா எதுக்குக் கல்யாணம் வேண்டாம்னு சொன்னாங்க?” என்று கேட்டாள்.

    “தெரியலையே டா. அப்ப அவ சின்னப் பொண்ணு. அதனால இருக்கலாம்.” என்று கூறவும் பார்வதி நெருங்கி வந்து, “நேரத்துக்குச் சாப்பிட்டு தூங்கு” என்று மஞ்சரியை விரட்டினார்.

     ஐயப்பனோ தோளிலிருந்த துண்டை உதறிவிட்டு வீட்டுக்குள் சென்றிருந்தார்.

    அமலவோ கட்டாந்தரையில் பாயை விரித்துப் படுத்தார்.
 
    வித்தகன் இன்று சென்றாலும் எப்படியும் என்னிடம் பேசி காரணம் கேட்பான். மேலும் வளர்ந்த பிள்ளை காரணம் கேட்டால் கூற வேண்டிய கட்டாயம் உள்ளது. சிறுவயதில் கொழுந்தனாரிடம் வளர்ந்ததற்குக் கேள்வி கேட்காமல் இருப்பானா? என்று வழமையாய் கண்ணீர் கன்னத்தில் புரள உறங்கினார்.

   வித்தகனோ பாட்டியிடம் கதை கேட்டவனாய் காலாட்டி நிலவை ரசித்தான்.

   “ஏன் மீனு… மஞ்சரி தான் தினமும் சாப்பாடு கொண்டு வருவாளா? அவ என்ன படிச்சா?” என்று சின்ட்ரெல்லா கதையாக அவளைப் பற்றிக் கேட்டான்.

    “அவ என்ன படிச்சாளோ? எனக்கு என்ன தெரியும். எப்பபாரு ஒரு பெட்டியை வச்சி தட்டுவா” என்று கொட்டாவி விடுக்க, வித்தகனோ “போய்த் தூங்குங்க” என்று கடுப்பாய் உரைத்துவிட்டு நிலவை ரசிப்பதை தொடர்ந்தான்.

      ‘என்னை விட்டா நிலா சாட்சியா வச்சி உன் பேத்தியை தூக்கிட்டு போயிடுவேன். என்ன பண்ணறது மிஸ்டர் ஐயப்பன் குறுக்கே இருக்கார்.’ என்று அறைக்குச் சென்று கண்ணயர்ந்தான்.

     இந்த எண்ணத்திற்குப் பெயர் என்ன என்றெல்லாம் அவன் சிந்திக்கவில்லை.

   அடுத்த நாள் அதிகாலையில் உறக்கம் கலைந்து எழுந்தவன் வாசலில் தண்ணீர் சத்தம் கேட்க, ஜன்னலருகே வந்து எட்டிபார்த்தான்.

       மஞ்சரி தான் பெருக்கி வைத்த இடத்தில் நீரை தெளித்துக் கோலமிட தயாராவதை அறிந்தான்.

   வேகவேகமாகப் பல் விலக்கி, கைக்குக் கிடைத்த டீஷர்டை அணிந்து தலைக்கோதி அவள் முன் வந்தான்.

   அவளோ ஓரெட்டு விழிநிமிர்த்தி வித்தகனை கண்டு பொறுமையாய் புள்ளி வைக்கக் குனிந்து கொண்டாள்.

    ‘ஏதாவது ரியாக்ஷன் தருதா பாரு. ‘கொலுசொலி'” என்றவன் அவளது பாதத்தைக் காண, சின்னதாய் மெல்லிய கொலுசில் மூன்று முத்து மட்டும் இருக்கக் கண்டான்.

      அன்னைக்கு வேற கொலுசு மாதிரி தெரிந்ததே? என்று யோசனையில் திளைக்க, “காபி மேக்கர்ல காபி போடுங்க” என்று கடிந்தாள்.

   தன்னிடம் கேட்கின்றாளென வேகமாய்க் கிச்சனில் பூனை போல உருட்டி காபியை மெஷினில் இயக்கி தயாரித்தான்.
  
    இரண்டு கப்பை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தான்.

   கோலம் போட்டு நிமிர்ந்தவள் எதிரே தன் நெஞ்சிற்கு அருகே சூடான காபியை நீட்டவும், “நான் உங்களுக்குப் போட்டுக் குடிக்கச் சொன்னேன். எனக்குக் கேட்கலை” என்று திரும்பினாள்.

     “ஓ… பச் பரவாயில்லை… நீ உங்க வீட்ல காபி குடிக்கலைனா, நான் கலந்ததை டேஸ்ட் பண்ணலாம்” என்று நீட்டினான்.

    அவள் கையை ஸ்கர்ட்டில் துடைத்துவிட்டு காபி மக்கை வாங்கினாள்.

    திண்ணையில் அமர்ந்து மெதுவாகப் பருகிட, அவளது அருகே தள்ளி அமர்ந்தான்.

    “காபி எப்படி இருக்கு?” என்று ஆர்வமாய்க் கேட்டான். “காபி காபி மாதிரி இருக்கு.” என்றவள் குடித்து விட்டு வாசல் பக்கமே கவனித்தாள்.

    “என்னோட பேசறது பிடிக்கலையா?” என்றதும் மஞ்சரி “காபிக்கு தேங்க்ஸ்.” என்றவள் வீட்டுக்குப் புறப்படத் தயாரானாள்.

    “மஞ்சு… மஞ்சு… மீனா பாட்டி உன்னைக் கூப்பிடறாங்க” என்று மயூரன் கூப்பிடவும், மலர்ந்த முகமாய் வீட்டுக்குள் ஓடியவளை கண்டு மேகவித்தகன் மனம் முதல் முறை துவண்டது.

தனக்கெதற்கு வேதனை என்று அறியாதவன், வேதனையை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் மறைத்தான்.

மஞ்சரி காபி கலந்து மீனாவிற்குக் கொடுத்துக் கன்னத்தில் கைவைத்து, “பாப்கட், ஆங்கிலோ இன்டியன் டிரஸ், ரோட்ல சுருண்டு படுத்திருந்த கிழவி மாதிரியே இல்லை. வாழ்வு தான்.” என்று வம்பு அளந்தாள்.

“ஏன்டி… உனக்குப் பொறாமையா இருந்தா என் பேரனிடம் சொல்லி நீயும் மாறிக்கோ. உங்கப்பன் தான் உன்னை இங்க வந்தா பாவாடை தாவணி போடு, கக்கம் தெரியாம சட்டை போடனும், கணுக்கால் தெரியாம பேண்ட் போடணும் சொல்வான். எனக்கென்னடி என் புருஷன் மேல போய்ப் பல வருஷமாச்சு. என் பேரனுக்கு இப்படித் தான் இருக்கணுமாம். அவனுக்காக முடியையே தானம் பண்ண இருந்தேன். இது பண்ண மாட்டேனா.?” என்று மீனாம்பாள் மிகத் தெளிவாய் பேசினார்.

“அவன் போனதும் எங்க வீட்டு வாசல்ல வந்து மஞ்சு மஞ்சுனு ஏலம் போடு. அப்ப கவனிச்சுக்கறேன்.” என்று எழுந்து போனிடெயிலை கொண்டையாய் மாற்றினாள்.

“நான் ஏன்டி இங்க இருக்கப் போறேன். இதுநாள் வரை உங்களை எல்லாம் நேர்ல பார்த்துட்டேன். இனி சாகற காலத்துலயாவது என் சின்னப் பேரனோட இருந்து கழிச்சிடுவேன். யாருமில்லாம எப்படி வளர்ந்தானோ? என்னயென்ன கஷ்டப்பட்டானோ. யாரும் நம்மளை தேடிவரலையேனு துடிச்சிருப்பான்” என்று கண்ணீர் நீர்த்துவலை உதிர பேசினார்.

“ஆமா ஆமா… அப்படியே துடிச்சிட்டான். இங்கயிருந்து போனதுமே இரண்டு வருஷம் சோகமா சுத்தியிருப்பான். அதுக்குப் பிறகு அந்த ஊர் தட்பவெட்ப நிலைக்கும், நாகரீகத்துக்கு ஏற்றமாதிரி பொண்ணுங்க கூட டேட்டிங் சாட்டிங்னு இருந்துயிருப்பான்.

டேட்டிங் சாட்டிங் பத்தி உன்னிடம் பேசறேன் பாரு.

நான் கிளம்பறேன். மதியம் உன் பேரனை அழைச்சிட்டு வீட்டுக்கு சாப்பிட வா. தனியா வெத்தலை பாக்கு வச்சி அழைக்க முடியாது.” என்று நொடித்துக் கொண்டு வெளியேறினாள்.

வாசலில் “இல்லை சவீதா… இன்னமும் தனி வீடு எதுவும் கிடைக்கலை.” என்று போன் பேசும் மயூரனை கண்டாள்.

“மயூ அத்தான் கிளம்பறேன்” என்றாள் மஞ்சரி. மயூரன் தலையாட்ட, வித்தகனோ ஒர் அக்னி பார்வையை வீசியபடி, மஞ்சரியை நோக்கினான்.

அவளோ அப்படியொருவன் இருப்பதையே மறந்து அவள் வீட்டின் பாதையில் விறுவிறுவென நடந்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

2 thoughts on “இரசவாதி வித்தகன்-15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *