இரசவாதி வித்தகன்-18
மயூரன் தான் ஆச்சரியப்பட்டு அன்னையை அழைத்து வந்தான். வித்தகனோ இதை எதிர்பார்த்தேன் என்பது போலக் கடந்திடவும், அமலாவோ கிச்சன் பக்கம் சென்றார்.
அங்கே கிச்சனே பாதிக் காலியாக இருந்தது.
வித்தகனிடம் கேட்க தயங்கி மயூரனிடம் ஆப்பத்திற்கு வேண்டிய அரிசியை ஊறவைக்கக் கேட்கவும், வேகமாய்க் கடைக்கு ஓடினான்.
எப்பவும் திருமணம் முடிக்கும் வீட்டில் மாப்பிள்ளை பையனுக்கு அநேகமாய் வேலையிருக்காது. நண்பர்களுக்குப் பத்திரிக்கை வைத்து பேட்சுலர் பார்ட்டி வைக்கவே சரியாகயிருக்கும்.
இங்கோ மயூரன் மாப்பிள்ளை என்றதை தாண்டி வீட்டு வேலையைப் பார்க்க ஓடினான்.
வித்தகன் தான் மாப்பிள்ளை போல ஜம்பமாய் வீட்டில் இருந்தான்.
காபி போட்டு வித்தகனிடம் கொடுக்க, புன்னகையோடு வாங்கி “தேங்க் யூ மாம்” என்றான்.
மயூரனும் அன்னையின் கைவண்ணத்தில் பருகி, ஆனந்த கண்ணீர் வடித்தான்.
காபி பாத்திரங்களை விளக்கும் போது, தன் கணவன் பரமேஸ்வரனை எண்ணாமல் இருக்க முடியவில்லை.
இதே சமையலறையில் அமலாவிடம் பரமேஸ்வரன் இனிமையான நேசத்தில் உதவியவர்
மனதில் நல்ல எண்ணங்கள் சிலவும் வந்து செல்ல தானாய் முறுவலித்தார்.
மயூரன் வரும் நேரம் அமலா எதையோ நினைத்து சிரிக்கவும், அப்படியொன்றும் அன்னை இங்கு வந்து கவலைப்படவில்லை என்பது புரிய நிம்மதியானான்.
இரவுக்குக் கோதுமை உப்புமா செய்தவர், இரு மகனுக்குப் பரிமாறினார்.
மயூரனோ “ஏன் வித்தகன் அம்மாவை இங்க வரவச்சியிருக்க. அப்ப என் திருமணம் முடிஞ்சப்பிறகு இங்க இருப்பியா?” என்று கேட்டான்.
வித்தகனோ யோசிக்காமல், “ஒன்னு அம்மா உன்னோட சென்னையில ஸ்டே பண்ணணும். இல்லையா என்னோட லண்டனுக்கு வரணும். இந்த இரண்டு எது நடந்தாலும் நான் சந்தோஷப்படுவேன். அதை விட்டு அண்ணனோட தங்கிக்கறேன்னு திரும்ப ஓட்டு வீட்ல போறேன்னு சொன்னாங்கன்னா அது அவங்க இஷ்டம். நான் தடுக்க மாட்டேன். ஆனா… அதோட இந்தியா பக்கமே வரமாட்டேன். அவ்ளோ தான்” என்று கோதுமை உப்புமாவை ருசிக்க ஆரம்பித்தான்.
அமலாவோ வித்தகனின் பேச்சு பழகியதால் தன் பணியை மட்டும் கருத்தில் ஏற்றார்.
இப்பொழுதே வருகின்றேன் வரவில்லை என்ற இரண்டையும் கூறாமல் வித்தகனுக்குத் தாயாரெனக் கமுக்கமாய் இருந்தார்.
மயூரனோ இருவரையும் பார்த்து திகைத்து வித்தகன் பாடு, அன்னை பாடு என்ற முடிவில் இருந்தான்.
மீனாம்பாளும் திருட்டுத் தனமாக மருமகளை ஏறிட்டார். சின்னப் பேரனை போல முகத்தை வைத்து நின்றவரிடம் என்ன நினைக்கின்றாளென எடைப்போட இயலாது தவித்தார்.
இரவு அமலாவும் மீனாம்பாளும் ஒரே அறையில் உறங்கினார்கள். மயூரனும் தனி அறைக்குச் சென்றுவிட்டான். வித்தகனோ கண்களை மூடி மீனாம்பாள் தன்னிடம் உரைத்த பழைய சம்பவங்களை அசைப்போட்டான்.
அப்பொழுது அவனுக்குப் பதினொன்று வயது இருக்கும். ஒரளவு வித்தகனுக்குப் பெரியவர்களின் பேச்சுச் சரியாகப் புரிந்திடும் பக்குவ வயது. ஆனாலும் சிறு சிறு சின்னப் பிள்ளை போல நிறையத் தொக்கி நிற்கும் காட்சிகள் கண்முன் நின்றது.
மீனாம்பாள் கூறியது:
‘உங்கப்பா பரமேஸ்வரன் உங்க அத்தை புருஷன் ஐயப்பன், அப்பறம் அந்த வினுசக்கரவர்த்தி அதோட கதிரவன் நான்கு பேரும் நல்ல நண்பர்கள்.
எப்பவும் கதிரவன் ஐயப்பன் இருவருக்கும் அரசியல் என்றால் அலாதி ப்ரியம்.
கதிரவன் பெரும்பாலும் உங்கப்பா கூடவே சுத்துவான். ஆனா அரசியல் என்று பேச்சு போனா ஐயப்பனோட தான் கதிரவன் பேச்சு கூட்டு சேர்ந்துக்கும்.
உங்கம்மா அமலாவை பரமுக்கு பிடிக்கவும், பொண்ணு கேட்டு கட்டி வச்சேன். ஐயப்பன் நட்பு அதிகமாச்சு. ஐயப்பன் சொல்லறதை அதிகப்படியா கேட்பான்.
அப்படித் தான் ஒரு நாள் ‘உன் தங்கையை நான் கட்டிக்கறேன் பரமு’னு ஐயப்பன் கேட்டான்.
பரமு பார்வதியிடம் கூடக் கேட்காம ‘உனக்கு கட்டிக்கொடுக்காம யாருக்கு டா கட்டித்தருவேன்’னு வாக்கு தந்துட்டான்.
பார்வதி கல்யாணமே வேண்டாம்னு கத்தின, ஆனாலும் திருமணத்தப்ப மேடையில குனிந்த தலை நிமிராம வந்து உட்கார்ந்துட்டா.
ஐயப்பனும் பரமேஸ்வரனும் மாமன் மச்சானா மாறினாங்க.
உங்கப்பாவுக்கு மயூரன் பிறந்தான், ஐயப்பனுக்கு அடுத்த வருடம் ராஜாராம் பிறந்தான்.
அதுக்கு அடுத்த வருடம் நீ பிறந்த, அதோட ஐந்து வருடம் கழிச்சு மஞ்சு பிறந்தா.
அவங்கவங்க வாழ்க்கை ரொம்ப அழகாப் போச்சு.
சின்னச் சின்ன அரசியல் வேலையைக் கத்துக்கிட்டு திரிந்த கதிரவன், ஊர்ல தேர்தல் வரவும் அரசியல்ல நின்றான். நல்லது செய்தானோ கெட்டது செய்தானோ, மடமடனு வளர்ந்தான்.
கதிரவன் சென்னையில தென்னிந்திய முன்னேற்ற கழகத்தோட (தெ.இ.மு.கா) மகள் ஆர்த்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டான்.
அதுக்குப்பிறகு தமிழகத்தில், குறிப்பிட தகுந்த அரசியலில் வலம் வந்தான்.
உங்கப்பா கதிரவனோட வளர்ச்சில பெருமையா தான் உணர்ந்தான்.
கதிரவன் ஐயப்பனையும் அரசியலுக்குக் கூப்பிட்டான். ஐயப்பன் மறுத்திட்டார். பிறகு வினுசக்கரவர்த்தி தான் கதிரவனோட அரசியல்ல துணைக்கு நின்றான்.
கதிரவனும் வினுசக்கரவர்த்தியும் அரசியல் என்ற குடைக்குக் கீழே இருந்ததால, ரொம்ப நெருக்கமானாங்க.
நம்ம ஊர்ல மறுபடியும் தேர்தல் வந்த நேரம் கதிரவன் பெயரை கொடுத்தான்.
அதே நேரம் தான் ஐயப்பன் அவனோட ஜாதகத்தை நம்பூதரி ஒருத்தரிடம் காட்டி ஜாதகம் பார்க்கப் போனார். அப்படியே வீட்ல இருக்கற குழந்தைகள் நால்வரோட ஜாதகமும் எடுத்துட்டு, உங்கம்மா அமலா, பார்வதி, ஐயப்பன் மூன்று பேரும் போனாங்க.
அங்க யாராருக்கு என்ன சொன்னாங்களோ, அமலா முகத்தைத் தொங்கப்போட்டுட்டு வந்திருந்தா.
நான் கேட்டதுக்கு ‘வித்தகன் எங்க கூட இருக்கக் கூடாதாம் அத்தை. அப்படியிருந்தா உயிருக்கு ஆபத்துனு சொல்லறாங்க?’னு அழுதா.
‘யார் உயிருக்கு ஆபத்து?’னு கேட்டா ‘நம்பூதரி எதுவும் சொல்லலை. அது பையனுக்காகவும் இருக்கலாம். உங்களுக்ககவும் இருக்கலாம்’னு பேசி மழுப்பியதா சொன்னா.
அதுலயிருந்து அமலா முகம் வாடிடுச்சு.
பரமேஸ்வரன் முதல்ல ஜோசியத்தை மூட்டை கட்டு. ‘பெத்த பிள்ளையை எங்க அனுப்பறதாம்’ அப்படினு திட்டினான்.
அமலாவும் நானும் ஏன் உங்கப்பா கூட ஜோசியத்தை நம்பலை. ஆனா அடுத்தடுத்த நாளே வியாபாரத்துல பெருத்த நஷ்டம், இரண்டு வாரத்துல பரமேஸ்வரனுக்கு நெஞ்சுவலி வந்துச்சு. அமலாவுக்கும் மாடியேறின ஏணிப்படில உருண்டிட்டா.
இப்படி தொடர்ச்சியா வேண்டத்தகாத விஷயமா வரவும், எனக்கு லேசா பயம் வந்து உன்னைத் திட்டிட்டு இருந்தேன்.
அப்பறம் ஒருநாள் நாங்கயெல்லாம் சாப்பிட்டு தூங்கறப்ப கடைசியா உங்கப்பா வந்து சாப்பிட்டான்.
என்னாச்சோ நைட்டுல நுரை தள்ள, ஹாஸ்பிடலுக்குப் போனா, பல்லி விழுந்த சாப்பாடு சாப்பிட்டதா ரிப்போர்ட் வந்துச்சு.
நாங்களும் அதே சாப்பாடு தான் சாப்பிட்டோம். பிறகு எப்படின்னு துடிக்க, நீ உங்கப்பா பக்கத்துல இருந்து அவரை அணைச்சிட்டு அழுதிருந்த.
ஒரு பெத்தவளா நான் என்ன நினைப்பேன். பேரனோட ஜாதகத் தோஷம் தான் என் பையனுக்கு ஏழரையா பிடிச்சிட்டு இருக்குனு பயந்தேன். நான் உன்னை மொத்தமா வெறுத்தேன்.
அப்பக்கூட அமலா பரமேஸ்வரன் உன்னை வெறுக்கலையா’
ஏதோ கதிரவனுக்கும் உங்கம்மாவுக்கும் கள்ளத்தொடர்பு என்றும் அதைத் தெரிந்துட்டு உங்கப்பா பரமேஸ்வரன் கதிரவனை சாகடிக்க வெடிமருந்தை வாங்கி வைச்சார்னு வினுசக்கரவர்த்தி சொன்னான்.
என்ன ஏதுனு நான் போறதுக்குள்ளல, அமலாவே அந்த வெடிமருந்தை கதிரவன் வர்றப்ப வீசினா. அவளைக் கைது செய்தாங்க.
என் பையன் பரமேஸ்வரன் எதுக்கு ஓடிவந்தானோ, எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி வர்றப்ப முன்னாடி நின்றுட்டான்.
உங்கப்பா இறந்துட்டான். அப்ப தான் உன்னை நான் கரிச்சு கொட்டி மொத்தமா ஒதுக்கினேன். அமலா என் பையனுக்கு துரோகம் பண்ணிட்டானு முடிவுக்கட்டிட்டேன். உன்னையும் மயூரனையும் வெறுத்தேன்.
ஐயப்பனும் உன்னைச் சேர்த்துக்கலை, சேதுபதி என் பேச்சை கேட்காம உன்னைக் கூட்டிட்டுப் போனான்.
நீ உன் அம்மாவை பார்க்க ஐயப்பன் வீட்டுக்கு போனியே. அப்ப அவ அங்கயில்லையா. அவ அப்பவே ஜெயிலுக்குப் போயிட்டா.” என்று கூறியிருந்தார்.
இதில் யாரை எப்படிப்பட்டவரென என்று கணிக்கச் சற்று சிரமமாய் இருந்தது.
அம்மா என்னவென்றால் வினுசக்கரவர்த்தி மீது கோபமாக இருந்தார்கள். பாட்டியும் வினுசக்கரவர்த்தி தான் அவர்களிடம் அம்மாவையும் அந்த இறந்து போன கதிரவனையும் இணைத்து பேசியதென்று கூறினார்.
இது மீனாம்பாள் அவருக்கு தெரிந்த வகையில் கூறிய கதை. இதிலும் நிறைய புதிர்கள் ஒளிந்து இருப்பதை மேகவித்தகன் அறிவான்.
மொத்த புதிரும் விடுபட வேண்டுமென்றால் வினுசக்கரவர்த்தி வேண்டும். அதற்கு முன் அன்னையிடம் பேசி அவரிடம் சில தகவலை அறிய வேண்டும்.’ என்று முடிவெடுத்தான்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Nice sis twist vachi mudichiirukiga waiting for next ud 🤩🤩🤩🤩🤩🤩
பரபரப்பான சஸ்பென்ஸ்.
அடுத்த எபி எப்போது வரும் மேம்?
காதல் கல்வெட்டு 59 வரைதான் பிரிதிலிபியில் வாசித்தேன். லிங்க இல்லை. கதை ரீரன் ஆகுமா?