இரசவாதி வித்தகன்-19
அதிகாலை விடியலில் அமலா வாசல் தெளித்து வண்ணக் கோலத்தை வரைந்துக் கொண்டிருந்தார். நடுவில் இடமிருக்க அமலா கைகள் தானாக ‘பரமு’ என்று வெள்ளை மாவில் எழுதினாள்.
அந்த பெயரை கண்டு ரசித்தவள், மீனாம்பாள் வரவும், வேகமாய் ‘பரமு’ என்ற பெயரை அழித்தார்.
மீனாம்பாளோ அமலாவை பார்த்து மெதுவாய் திண்ணையில் வந்து அமர்ந்தார்.
“காபி” என்று நீட்டவும் அமலா வாங்கி கொண்டாள்.
“நான் கோலம் போட்டுட்டு காபி போடலாம்னு இருந்தேன் அத்தை. மன்னிச்சிடுங்க தாமதமாயிடுச்சு” என்று புதுப்பெண்ணாக பதில் தந்தாள்.
“அந்த வினுசக்கரவர்த்தி சொன்னதை கேட்டு, என் மகன் இறந்ததுலயும், போலிஸ் உன்னை பிடிச்சிட்டு போனதும், ஜாதகம் வேற உறுத்திட்டே இருக்கவும் மொத்தமா எல்லாரையும் வெறுத்துட்டேன்.
ஜெயிலுக்கு வந்து உன்னிடம் ஒரு தடவையாவது என்ன நடந்துச்சுனு கேட்டிருக்கணும். பரமு இறந்ததை தூரத்துல இருந்து பார்த்து என் மூளை மழுங்கிடுச்சு.
பெத்த பிள்ளை கண்ணெதிரில பறிக்கொடுத்ததுல நிஜமாவே எனக்கு நிதானமா யோசிக்கற புத்தியே இல்லாம போயிடுச்சு. என்னை மன்னிச்சிடு.” என்று கண்ணீர் வழிய மீனாம்பாள் மன்னிப்பு வேண்டினார்
“நான் ஒழுக்கமானவள்னு இப்ப எப்படி அத்தை நம்பறிங்க?” என்று அமலா கேட்டாள். பெண்ணுக்கு முதலில் துடைத்தெறியும் கறை இது தானே. கொலைபழிக்கூட பிறகு துடைத்தெறிவாள். முதலில் தன் மேல் அபாண்டமாய் விழுந்த, ஒழுக்கம் கெட்டவளென்ற பழியை அல்லவா துடைக்க வேண்டும்.
“அன்னைக்கு உங்க அண்ணன் வீட்டுக்கு முன்ன வந்து நான் கத்தினேனே. அன்னைக்கு என் மக பார்வதி என்கூட பேச வந்தா.
எப்பவும் உங்க அண்ணனுக்கு தெரியாம என்னை வந்து பார்த்தப்ப அப்ப எதுவும் சொன்னதில்லை. சாப்பிடும்மா.. பேசும்மா… என் கூட வாம்மா. என் பசங்க உனக்கு பேரன் பேத்தியில்லையானு அழுவா.
என்னை தேடி அன்னைக்கு ஐயப்பனும் பார்வதியும் வந்தாங்க. நாயர் வீட்டு திண்டுல இருந்தேன். பார்வதி வந்து ‘அம்மா.. வினுசக்கரவர்த்தி தான் பிளான் பண்ணி கதிரவனை கொல்ல சதி செய்தான். கதிரவன் இறந்தா நம்மூர்ல அடுத்து அந்த கட்சி சார்பா நிற்கறது வினுசக்கரவர்த்தி தானே. அதனால… காய்கறிவடிவில் இருந்ததை அண்ணி கையால தூக்கி போட வச்சிட்டான்னு சொன்னா. பரமு அண்ணா தான் அண்ணியை விட்டு கதிரவனை நிற்க சொல்ல அனுப்பினாரு. மத்தபடி அண்ணி மேல தப்பில்லைனு விவரிச்சா.
எனக்கும் வினுசக்கரவர்த்தியோட வளர்ச்சி மேல சந்தேகம் வந்தது. இப்ப முதல்வரா இருக்கான். அதுக்கு மூலக்காரணம் நம்மூர் தேர்தல் தானே?
இப்ப புரிந்து என்ன புரோஜனம். என் மகன் இல்லையே. என் மருமக இளமையை தொலைத்து கோலமாவுல என் பையன் பெயரை போட்டு ஏங்கறாளே” என்று அழுதார்.
“அத்த.. அத்த.. அழாதிங்க. ஏதோ இப்பவாது ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்து ஒன்னு சேர்ந்தோமே. காலம் அந்த வினுசக்கரவர்த்திக்கு தண்டனை கொடுக்கும்.” என்று ஆறுதல் உரைத்தாள்.
“அது சரி மாமியாரும் மருமகளும் எப்ப நடந்த விஷயத்துக்கு எப்ப புரிஞ்சுக்கறிங்க.. விளங்கிடும்.. ஏய் கிழவி… நீ முன்னவே செத்திருந்தா இந்த விஷயம் தெரியுமா?” என்று மஞ்சரி இருவரையும் மார்க்கமாய் பேசியபடி வந்தாள்.
“மஞ்சு… பெரியவங்களிடம் இப்படியா பேசறது?” என்று அமலா அதட்டு போட்டார்.
“அத்த… உனக்கு தெரியாது.. அம்மா என்னிடம் சோற்று வாளியை கொடுத்து விட்டா.. இந்த கிழவி வாங்கி திண்ணாம என்னை எத்தனை முறை திட்டியிருக்கு தெரியுமா. விவரம் புரியாத நேரத்துல இதுக்கிட்ட ஏகப்பட்ட ஏச்சு பேச்சு வாங்கியிருக்கேன். இந்த மஞ்சரி அதையெல்லாம் வட்டி முதலுமா பைசல் பண்ணாற. அவ்ளோ தான்.” என்று கூறினாள்.
மீனாம்பாளுக்கு மகள் வழி பேத்தியிடம் பேசியது வாட்டவும், “உங்கிட்டயும் மன்னிப்பு கேட்கறேன் தாயி.” என்று கூறவும் மஞ்சரியோ “ஆஹ்… இந்த பவ்யம் எல்லாம் என்னிடம் வேண்டாம். நீ சாகறவரை உன்னை கிழவினு தான் கூப்பிடுவேன்.” என்று ஜம்பமாய் பேசினாள்.
வித்தகன் இதுவரை ஜன்னல் வழியே நின்று கேட்டவன் வெளியே வந்தான். மஞ்சரி ஆசையாய் திரும்பி மயூரன் இல்லையென்றதும், திரும்பி கொண்டாள்.
மயூரன் அப்பொழுது தான் தேங்காய் உரிக்கும் கருவியை தோளில் சுமந்து வந்து, ஈரமண்ணில் நிறுத்தினான்.
பின்னர் தேங்காயை அந்த கத்தியில் குத்தி நாரை பிரித்தெடுத்தான்.
மேகவித்தகன் அதனை கண்டு சின்ன வயதில் இப்படி உரிக்க மயூரனோடு போட்டி போட்டு விளையாட, கையில் கத்தி கீறிவிட்டு இரத்தம் வர தந்தை தன்னை மடியில் வைத்து கட்டு கட்டிய நிகழ்வை எண்ணிப்பார்த்தான். தானாக பக்கவாட்டு பக்கம் திரும்பி நிழற்படக்காட்சியாய் நினைத்து பார்க்க கண்கள் லேசாய் துளிர்த்தது.
”மயூ அத்தான்” என்று மஞ்சரி பதறவும், மயூரன் கையில் லேசாய் கத்தி உரசி சென்றதையும் கண்டான்.
“பார்த்து செய்ய மாட்டிங்களா மயூத்தான்.” என்று கலங்கியவளாக மஞ்சரி தவித்திட, “அச்சோ என்னப்பா இது இரத்தம் வருதே… கடவுளே..” என்று அமலா வாசலுக்கு தெளித்து மீதியிருந்த நீரில் மகனின் கையை அலச சொன்னார். இரத்தம் நீரில் கலந்திடவும், அதற்குள் மீனாம்பாள் அங்கிருந்த செடியினை நசுக்கி அவன் கையில் அழுத்தமாய் பிடித்தார்.
“ரொம்ப நாள் ஆச்சு… இதெல்லாம் இயல்பா செய்து. பேனா பிடிக்க ஆரம்பிச்சு… கத்தியெல்லாம் பிடிக்கவே மறந்துட்டேன். ஆப்பத்துக்கு தேங்காய் பால் எடுக்கணும். இன்னும் கொஞ்சம் தான் தேங்கா நாரை கையோட உறிச்சிடறேன்” என்று எழுந்தான்.
வித்தகனோ அண்ணனை அமரவைத்து சிறுவயது நினைவோடு தேங்காயை உறித்தான்.
“வித்தகா.. உனக்கு எதுக்கு சிரமம். நீயும் காயப்பட்டுடுவ” என்று அமலா எடுத்துரைக்க, மீனாம்பாளும் “ஆமாயா… கத்தியெல்லாம் உனக்கு ஆகாது” என்று பேரனை நிறுத்த கூறினார்.
“மீனு… இது கத்தியை மறந்த கை தான். ஆனா வலியை சுமந்த மனசு. எதையும் தாங்கும்” என்றவன் மடமடவென உறித்து, உடைத்து தேங்காய் மூடியிலேயே கொஞ்சம் தேங்காய் தண்ணீரையும் வைத்தபடி அமலாவிடம் கொடுத்தான்.
அமலாவோ, “மஞ்சு உனக்கு தான் தேங்காய் தண்ணீ பிடிக்கும் இந்தா” என்று கொடுத்தார்.
மயூரனுக்கு அதற்குள் இரத்தம் நிற்கவும் வீட்டுக்குள் சென்றான். மஞ்சரியோ தேங்காய் தண்ணீயை குடித்து கொண்டே வீட்டுக்குள் அமலா மீனா பாட்டியோடு வந்தாள்.
அமலா ஆப்பமும் தேங்காய் பாலும் சமைக்க மஞ்சரி உதவி புரிந்தாள்.
“ஏன்டி நீ இங்க வந்து சமையல்ல உதவுறியே.. அங்க உங்கப்பா திட்டமாட்டார். என் மக தனியா கஷ்டப்பட மாட்டா?” என்று கேட்டார் மீனாம்பாள்.
எங்கண்ணா கோவைக்கு போயிருக்கு. அப்பா ஏதோ வெளியூர் போயிருக்கார். அம்மாவுக்கும் எனக்கும் தான் சமைக்கணும். நான் தான் சமைக்காத இங்க அத்தை சமைச்சிருக்கும் எடுத்துட்டு வர்றேன்னு சொல்லிட்டேன்.” என்று மஞ்சரி நீட்டி முழக்கி பேசினாள்.
மயூரனோ ஹாலில் எதையோ தேடி அலைந்து சோர்ந்து போய் வெளியேறினான்.
கிச்சனில் இருந்து மஞ்சரி வெளியே வந்து மயூரனை பார்க்க, நடுவே நந்தி போல வித்தகன் வந்து சேர்ந்தான்.
“மயூ அத்தான் எங்க போறார்?” என்று கேட்டாள்.
“அவன் எங்கண்ணியோட பேச போறான். ஏன் அவனையே சுத்தற?” என்று இகழ்ச்சியாய் நோக்கவும், “உன்னிடம் கேட்டேன் பாரு?” என்று மஞ்சரி அவள் தலையிலடித்து அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
Nice sis❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Nice epi👍