Skip to content
Home » இரசவாதி வித்தகன்-20

இரசவாதி வித்தகன்-20

இரசவாதி வித்தகனே-20

      மஞ்சரி போகும் வரை ஹாலில் கர்ம சிரத்தையாக பணியை கவனித்தான்.

     அவள் ஆப்பமும் தேங்காய் பாலும் எடுத்து செல்லவும் சாப்பிட வந்தான்.

    மீனாம்பாள், வித்தகன் அமலா மயூரன் நால்வரும் சாப்பிடவும் அமலா சின்ன மகனின் சிகையில்  கைவைத்து “தேங்க்ஸ் வித்தகா… நான் என் கூட்டை விட்டு வெளிவரவே முடியாதுனு நினைச்சேன். ஆனா ஓரளவு வந்துட்டேன். இங்க வந்தது, பழையபடி சமைச்சது, அத்தையோட பேசினது, தெம்பா இருக்கு. என் பையன்  மயூரன் கல்யாணத்துக்கு நான் முன்ன நின்று நடத்த மனதளவில் தயாராகலை. இப்ப என் பையன் திருமணத்தை எதிர்பார்த்து நடத்த ஆசையா இருக்கேன்.” என்று பூரித்து கூறினார்.

   “நல்லதும்மா” என்று வித்தகன் மிகவும் சிறு வார்த்தையோடு முடித்து கொண்டான்.

   மயூரனோ ‘எவ்ளோ கஷ்டமான காரியம்னு நினைச்சிட்டு இருந்தேன். அம்மாவே இப்படி பேசறாங்க. பக்கம் பக்கமா டயலாக் பேசுவான்னு பார்த்தா நல்லதும்மானு ஒரு வார்த்தையில முடிச்சிட்டான்.

    என்னவோ அம்மா வந்துட்டாங்க. என் மேரேஜுக்கு ஒரு வழியா ஹாப்பியானா போதும். என்று வெளியேறினான்.

   மஞ்சரியும் மீனாம்பாளும் திண்டில் அமரவும், வித்தகன் அருகே ஹாலில் மெதுவாய் அமலா வந்து அமர்ந்தார்.

    “வேலையிருக்காப்பா?” என்று கேட்டார்.

    “இன்னும் ஆபிஸ் கால்ஸ் வர ஒருமணி நேரம் இருக்கும்மா. ஏதாவது பேசணுமா?” என்று தானாக வலைக்குள் விழும் அம்மாவின் நிலையை எண்ணி மனதில் சிரித்தான்.

    “பேசணும்… நிறைய… ஆனா அதுக்கு முன்ன ஒரு கேள்வி. அம்மா மேல கோபமா கண்ணா?” என்று கேட்டார்.

     “கோபம் இல்லை… ஆனா எதையும் ஷேர் பண்ண மாட்டேங்கறிங்க. என்னை விட உங்க அண்ணா. உங்க முதல் பையன் முக்கியமா போயிட்டானேனு கவலை.” என்று பேசிவிட்டு போனில் வீடியோ கேம் எடுத்து விளையாட ஆரம்பித்தான்.

   “உண்மையை சொல்லணும்னா மயூரனாவது எங்கண்ணா வீட்ல இருக்கான். அடிக்கடி மஞ்சரியிடம் அவனை பத்தி கேட்டு விசாரிப்பேன்.

    ஆனா நீ சேதுபதியிடம் இருக்கவும்,  மனசு உன்னையே சுத்தும்.

    அண்ணாவிடம் அவனை அழைச்சிக்க கூடாதானு கேட்டு சண்டை போட்டிருக்கேன்.

    அண்ணா தான் மயூரனை நான் வளர்க்கறேன். மச்சான் சைட்ல வித்தகனை அவர் தம்பி வளர்க்கட்டுமேனு சமாதானம் பண்ணிட்டார்.
    என்னாலையும் அதுக்கு மேல எதையும் திணிக்க முடியலை.
     உன்னை பார்க்க கேட்டாப்ப, உங்க சித்தப்பா சேதுபதி எதுவும் போட்டோ கூட தரமாட்டார்னு பொய் சொன்னார்.” என்றதும் வித்தகன் கண் இடுங்க ஆரம்பித்தது.

     “மஞ்சரி ஆல்ரெடி என்னிடம் நீ என்னை எப்படி நினைச்சிருக்கனு சொல்லிட்டா.” என்று கூறவும் வித்தகனோ ‘கொலுசொலி’ என்று முனங்கினான்.

      மஞ்சரியை பிறகு பார்த்துபோமென “சரிம்மா… என்னதான் ஆச்சு?” என்று கேட்டான்.

    பத்து நிமிட அமைதிக்கு பிறகு “என்னனு சொல்லறது. உங்கப்பாவுக்கு மூன்று நண்பர்கள். ஒன்னு எங்கண்ணா. இரண்டாவது இறந்து போன கதிரவன். மூனாவது வினுசக்கரவர்த்தி.

    எப்பவும் நால்வரும் ஒன்னா தான் ஊர் சுத்துவாங்க. உங்கப்பாவுக்கு என்னை பிடிக்கவும் அத்தையிடம் சொல்லி என்னை பெண் கேட்டாங்க. ஆக்சுவலி நானும் உங்கப்பாவும் விரும்பி மணக்கலை. அத்தைக்கு என்ன பிடிச்சிருந்தது. அண்ணாவிடம் பொண்ணு கேட்டதும் அவனும் கட்டி வச்சிட்டான்.

    எனக்கு உங்கப்பாவை ரொம்ப பிடிக்கும். மரியாதை தெரிந்தவர். எந்த ஒரு சின்ன விஷயமென்றாலும் வீட்ல பொண்டாட்டிக்கிட்ட கேட்டு முடிவெடுக்கணும்னு நினைப்பவர்.

     முதல் குழந்தை பெத்துக்கலாமா? உனக்கு சம்மதமானு கேட்டவர், அடுத்து இரண்டு வருடம் முடிந்தப்பிறகு தான் இன்னொரு குழந்தையை பத்தியே பேசினார். எப்பவும் பெண்களை பேசவிட்டு ரசிப்பார். சுருக்கமா பெண்களுக்கு மதிப்பு கொடுப்பார்.

     பார்வதியை எங்கண்ணாவுக்கு கட்டிக்கொடுக்கறது கூட கேட்டார். பார்வதி சம்மதத்தோட கேட்டுக்கோங்கனு சொன்னேன். பார்வதியும் எங்கண்ணாவுக்கும் கல்யாணமானதும் ரொம்ப நெருக்கம் ஆனாங்க.

   கதிரவன் வினுசக்கரவர்த்தி இரண்டு பேரும் அரசியல் என்ற வட்டத்துல ஒன்னா தான் இருந்தாங்க.

        ஆனா வினுசக்கரவர்த்தி மனசுல அரசியல் ஆர்வமும் உயர போகணுமென்ற வெறியும் அதிகமா இருந்திருக்கு. அது யாருக்கும் தெரியலை.

    வினுசக்கரவர்த்தி அடிக்கடி எங்கண்ணா வீட்டுக்கு வந்து “அவன் எல்லாம் குறுக்குல முன்னேறிட்டான். அரசியல்வாதி பொண்ணை கட்டிட்டு வசதியா வாழறானு பேசறப்ப, ஐயப்பன் அண்ணா அவனிடம் ஏத்தி விடமாட்டார். கதிரவனுக்கு அரசியல் ராஜயோகம். இப்படி தான் பேசுவார்.

   வினுசக்கரவர்த்தி அதை ஏத்துக்கலை. மனசு முழுக்க வன்மத்தை தான் வளர்த்துக்கிட்டார்.

   சமயம் பார்த்து பழிவாங்கயிருந்தவர், எனக்கும் கதிரவனுக்கும் எதுக்கு கள்ளத்தொடர்புனு பேசினாரோ? இன்னைக்கு வரை தெரியலை.  கதிரவன் இறக்கறதுக்கு ஒரு மணி நேரம் முன்ன தான் அந்த பேச்சை பரவவிட்டிருந்தார்.

    நான் அழுதுட்டு இருந்தப்ப உங்கப்பா தான் கதிரவனோட வளர்ச்சி பிடிக்காம யாரோ ஒருத்தங்க இப்படி கிளப்பி விடறாங்க அமலா. நாம கதிரவனோட பேசிடலாம்னு சொன்னார்.

    அப்ப தான் கதிரவன் அண்ணா பக்கத்தூர் போறதா தகவல் கிடைச்சது. நானும் உங்கப்பாவும் வந்தோம். அத்தை நடுவுல வந்து ‘என்னய்யா அமலாவையும் கதிரவனையும் வச்சி தப்பா பேச்சு வருதுனு உங்கப்பாவிடம் கேட்டார். உங்கப்பா தான் நீ போ கதிரவனை நிற்க சொல்லு. நான் அம்மாவிடம் பேசிட்டு வர்றேன்னு சொன்னார்.

   உங்கப்பா எப்படியாவது கதிரவனை நிறுத்திடு. கள்ளத்தொடர்பு என்ற சந்தேகத்தை பத்தி பேசறதை விட அதிமுக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னார்.

   நானும் கிளம்பினேன். ஆனா கதிரவன் அண்ணா அருகே நெருங்கி போகவே முடியலை. அதனால தான் வினுசக்கரவர்த்தி வீட்டுக்கு வாங்கிட்டு போன காய்கறி கூடையிலயிருந்து வெங்காயத்தை எடுத்து அதை அவன் பக்கம் வீசும்மா. எப்படியும் உன்னை பார்த்துட்டா அவனா வந்து பேசுவான்னு தான் கையில காய்கறியை எடுத்து நீட்டினார்.

   நானும் காய்கறினு தான் நினைச்சேன். ஆனா வீசியெறிந்த அடுத்தநொடி வெடிச்சது.

   அங்கிருந்தவங்க நான் தான் கொன்றுட்டேன்னு அரசியலாட்கள் நினைச்சிட்டு என்னை கல்லால் அடிக்க வந்துட்டாங்க.

    உங்கப்பா வெடி வெடிக்கவும் அதிர்ச்சில அப்படியே நின்றார்.” என்றதும் கண்கள் தானாய் கண்ணீரை சுரந்தது.

    “உங்கப்பா நின்ற இடம் டிரெயின் வருதுனு கத்தினேன். அத்தை கத்தினாங்க. ஆனா யார் சொல்லியும் காதுல வாங்காம நிற்கவும் இரயில்.. இரயில் வேகமா வந்து மோதிடுச்சு” என்று அழுது குலுங்கினார்.

      வித்தகனுக்கோ எதையும் கிரகிக்க இயலாமல் தவித்தான்.

வினுசக்கரவர்த்தி தான் அனைத்திற்கும் காரணமா? என்றவன் யோசனை ஆபிஸ் கால் வரவும் “பேசிட்டு வர்றேன் மா” என்று காதில் ஹெட்செட் வைத்து பணியை தொடர்ந்தான்.

   அமலாவோ ஏதோவொரு வெறுமை உணர்ந்து வெளியே வந்தார்.
   
   மயூரனாவது ரிப்போர்ட்டர், வித்தகன் லண்டனில் வேலை செய்பவன். அவனால் இந்த தாயின் கண்ணீரை கேட்கவே நேரம் இல்லை. இதில் வினுசக்கரவர்த்தியை என்ன செய்திட போகின்றான் என்று மெதுவாய் வாசலில் சோகமாய் கடந்தார்.

   வித்தகனோ காதில் ஹெட்செட் செட் வைத்திருந்தவன் அன்னையை ஒரு ஆழப்பார்வையை வீசினான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
   
    
   
 

4 thoughts on “இரசவாதி வித்தகன்-20”

  1. Avatar

    வித்தகன் தானே வினுசக்ரவர்த்தி க்கு செக் வைப்பார்? ஏன் என்றால் மயூரன் ஜர்னலிஸ்டாக இருந்தும் ஒன்றும் செய்யவில்லையே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *