Skip to content
Home » இரசவாதி வித்தகன்-8

இரசவாதி வித்தகன்-8

இரசவாதி வித்தகன்-8

தன் ஜடை கொத்தாக வித்தகன் கையில் இருக்கவும் மஞ்சரியோ, “உன்னை எதிர்த்து பேசிட்டேன்னு மொத்தமா பழிவாங்கிட்டல.. மத்தவங்க பார்க்க என் முடியை பிடிச்சி அசிங்கப்படுத்திட்ட…” என்றதும் சுற்றி முற்றி பார்த்தான். சிலர் சிரிப்பதும் கிசுகிசுப்பதும் தெரிய, அசடு வழியே நின்றான்.

“சேசே… சத்தியமா அசிங்கப்படுத்தலை. நான் பழிவாங்க பிடிச்சி இழுக்கலை. எனக்கு இது ஒரிஜினல்னு நினைச்சு தான் இரசித்தேன். இது இப்படிக் கையோட வரும்னு தெரியாது.” என்று அவன் கையில் நீட்டவும் அருகே அவன் தங்கியிருக்கும் இடம் வரவும் அந்த வீட்டுக்குள் வந்துவிட்டாள்.

அவனும் கையோடு முடியை தோளில் போட்டுவிட்டு பின்னாலே வந்தான்.

தோள்வரை பின்னிய முடியை எடுத்து விட்டாள். அதுவே தோளைத்தாண்டி அலையலையாய்ப் புரண்டது.

“ஏய்… இதுவே அழகாயிருக்கு. எதுக்கு எக்ஸ்ட்ரா?” என்று அவள் அமர்ந்த திண்ணையில் வந்து அமர்ந்தான்.

எதுவும் பேசாமல் அமைதியாக விசும்பும் நேரம், வித்தகன் ‘இவளிடம் வந்ததுலயிருந்து முட்டிட்டே இருக்கேன் சரி பிரெண்ட்லியா பேசலாம்னு பார்த்தா நமக்கு நாமளே குழித்தோண்டிட்டோமே.’ என்று கவலையடைந்தான்.

மஞ்சரியோ ‘அவமானமாய்ப் போச்சு. நாம மயூரன் அத்தானையும் இவரையும் ஒரே மாதிரி நினைச்சிட்டோம். இனி இவரிடம் எட்டியே நின்றுப்போம்’ என்று எழுந்தாள்.

“மஞ்சரி… மஞ்சரி… கிளம்பறியா?” என்று பின்னால் வரவும், அவன் போன் அடித்தது.

மஞ்சரியோ நிற்காமல் வேகமாக நடக்கவும் அலுவலக அழைப்பு என்று ஏற்றுப் பேச ஆரம்பித்தான். அவளைக் கொஞ்ச நேரம் கழித்துச் சமாதானம் செய்ய முடிவெடுத்தான்.

அலைப்பேசி அழைப்பே ஒரு மணி நேரத்தை கடத்திவிட்டது. பேசி வைத்து சுற்றும் முற்றும் பார்க்க ராஜாராம் வீட்டின் விளக்கை போட்டு ஒளிர வைத்திருந்தான்.

“பேசிட்டியா வித்தகா… இந்தா சாயா.. அருமையா இருக்கும். அப்பறம் இது வாழைப்பழ புட்டிங்” எனக் கொடுத்தான்.

“மஞ்சரி இல்லையா?” என்று கேட்க, “அவ அப்பவே போயிட்டா. காலையில வருவானு நினைக்கிறேன். எதுனா தேவைப்பட்டா போன்ல கேளுங்க” என்று நம்பரை தெரிவிக்கக் குறித்துக் கொண்டான்.

‘மஞ்சரி நம்பர் தெரிந்தா நல்லாயிருக்கும் இப்ப கேட்டா இவன் தினுசா பார்ப்பான்.’ என்று வழியனுப்பி வைத்தான்.

லேப்டாப்பை எடுத்து லாகின் செய்து பொறுமையாக நேரம் கழித்தான்.

ஏழு முப்பதிற்குச் சேதுபதி வந்தார். கூடவே மயூரனும் வந்தான். கையில் உணவு கூடையோடு எடுத்து வைத்தான்.

“நாம அங்க போய்ச் சாப்பிட போவதில்லையா?” என்று ஏமாற்றமாய்க் கேட்டான் வித்தகன். இரவு சென்றால் மஞ்சரியிடம் பேசிடலாமென்ற தவிப்பு.

“நாங்க அங்கயே சாப்பிட்டோம் வித்தகா. நீ மட்டும் தானே. அதனால மயூரன் ஹாட் பாக்ஸில ஆப்பமும், தூக்குல குருமாவும் கொண்டு வந்துட்டான்.” என்று சேதுபதி கூறினார்.

வித்தகனுக்கோ மணி எட்டானதும் சாப்பிட எடுத்து வைத்தான். மதிய உணவை மஞ்சரி தான் பரிமாறினாள். அதனால் அவன் மனம் அவளை நாடியது.

“ஏன் ஸ்கூல் பையன் மாதிரி பேக் பண்ணி கொண்டு வந்த. நாமளே போய்ச் சாப்பிட்டுயிருக்கலாம்ல” என்றான் வித்தகன்.

“இல்லைடா.. எனக்காக நீ கல்யாணத்துக்கு வந்ததே போதும். உன்னை அங்க அத்தை மாமாவோட அறிமுகப்படுத்த நினைச்சேன். ரொம்ப வருஷத்துக்குப் பிறகு வந்ததால மாமா வீட்ல விருந்து சாப்பிட்ட. இனியும் உன்னை அங்க இருக்கச் சொல்லி சங்கடப்படுத்த விரும்பலை. நீ இங்கயே தனியா உன்னிஷ்டப்படியிரு வித்தகா.

உனக்காக அவங்களையோ, அவங்களுக்காக உன்னையோ இழக்க முடியாது. உனக்கு அத்தை-மாமா, அம்மா, மஞ்சரி யாரையும் பிடிக்கலைனு தெரியுது.

அத்தை மாமா முன்ன மஞ்சரியும் நீயும் சண்டைப் போட்டா நல்லாயில்லை. அம்மாவுக்காக மஞ்சரி எதிர்த்து பேசுவா. உனக்கு அம்மாவை பிடிக்கலை.

பதினைந்து நாள்ல ஒருநாள் முடிந்தது. மீதி பதினாலு நாள் நீ உன்னிஷ்டபடி இருக்கலாம். நான் இனி உன்னைப் போர்ஸ் பண்ணி எங்கயும் இருக்கச் சொல்ல மாட்டேன்.

நீயே என் கல்யாணத்துக்கு விருப்பமில்லாம வந்த.” என்று சோகமாய்ப் பதில் தந்து விட வித்தகனோ கடைசி வில்லை விழுங்கினான்.

வித்தகனுக்குப் புரிந்தது. அதிகப்படியாக ஏதோ பேசி அங்கிருப்பவரை நோகடித்துவிட்டோம். இதில் செல்லப் பெண்ணின் ஜடையை இழுத்து அவளை அசிங்கப்படுத்தியதாகத் தன் செயல் மற்றவர் பார்வைக்குப் பட்டிருக்கும்.

சேதுபதி சட்டென உறங்கவும் காலையில் மஞ்சரி இருந்த அறையில் நுழைந்தான். காலையில் சந்தித்தவளை ஒரே நாளில் காயப்படுத்தி விட்டோமோ என்று தோன்றியது.

இரவெல்லாம் உறக்கம் வரவில்லை. முதலில் இந்த உறவுகள் தனக்கு வேண்டுமா? வேண்டாமா? என்று யோசனைக்குள் சென்றான்.

இத்தனை வருடம் யாருமின்றி வளர்ந்தாயிற்று. இனி உறவுகள் வேண்டுமென்று மனம் எதிர்பார்த்தது.

பதினைந்து வருடம் பார்க்காத தாயை பார்த்ததும் கோபமாய் இருந்ததே தவிர, பேசாமல் வந்துவிட்டோமே. அவர்கள் பக்க நியாயம் ஏதேனும் இருக்குமா? என்று பெற்றவளையும், பெற்றவளுக்காகத் தன்னிடம் சண்டைக்குச் சிலிர்த்தவளையும் மாறி மாறி மனதில் நினைத்தபடி கண்ணயர்ந்தான்.

இரவில் அந்தக் குரல் அவனை உலுக்கி எடுத்தது.
‘ உங்கப்பாவை ரயிலுக்குத் தாரை வார்த்து கொடுக்கவா பத்து மாசம் சுமந்தேன்’ என்ற அழுகுரல், வித்தகனை கண் இமை திறக்க வைத்தது.

ஆனால் பிரயான களைப்பு மீண்டும் இமை உறங்கவே துடிக்க, தலையணையைக் காதில் வைத்து அழுத்திக் கொண்டு நித்திரையிலேயே நீந்தினான்.

அதிகாலை எழுந்து கொட்டாவி விடுத்து, உடலை சோம்பல் முறிக்கவும், இது லண்டன் அல்ல என்று ஊர்க்குருவி கத்தி ஊர்ஜிதப்படுத்தியது.

பேஸ்ட் பிரஸ் என்று வாயில் நுரையோடு வெளியே வர, வாசலில் வண்ணக் கோலம் நேற்று போலவே அவன் கண்ணுக்கு விருந்து படைத்தது.

வண்ணக்கோலமென்றதும் மஞ்சரி வந்திருக்கின்றாளென மடமடவென முகம் அலம்பி, வீடு முழுக்கத் தேடினான்.

ஆனால் எங்கும் அவளிருக்கும் சுவடு தான் தெரியவில்லை. கிச்சனில் காபி தயாரித்து இருப்பாளோ என்று தேட அங்கும் வெற்றிடமே வரவேற்றது.

ஆனால் காபி மேக்கர் அருகே சூடான பானம் அவனை இழுத்தது.

மயூரனோ பேப்பரை படித்துக்கொண்டு, “குட்மார்னிங் டா” என்று கூறவும் , “குட்மார்னிங் அண்ணா. அண்ணா… காபி யார் போட்டா?” என்று கேட்டான்.

“காபி மேக்கருக்கு யார் வந்து போடணும். நான் தான் நீ ப்ரஷ் பண்ணவும் கலந்து வச்சேன்.” என்றான் மயூரன்.

“கோலம்?” என்று வினாத்தொடுக்க, “அதுவா… ரங்கோலி நான் தான் போட்டேன். நல்லாயிருக்குல?” என்றதும் “ரொம்ம்ம்ம்பபபபப நல்லாயிருக்கு” என்று கடுப்போடு மொழிந்து விட்டு எங்கோ சுருட்டியிருந்த பேப்பரை எடுத்தான்.

அதனை விரித்து வாசித்தான்.

“பிரபல நடிகர் ப்ரனித்திற்கு இரட்டை குழந்தை பிறந்தது.

பள்ளி வாகனம் கவிழ்ந்து இரண்டு சிறுமிகள் பலி.

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி முதல்வர் வினுசக்கரவர்த்தித் தொன்மையான கோவில்களை அழிய விடாமல் பாதுகாக்க வேண்டுமென்று அறத்துறைக்கு வேண்டுகோளிட்டார்.

உலகத்திலேயே அழகானவர்களை அதிகமாக வாழும் நாடு என்று இந்தியா முதலிடத்தில் வகிப்பதாக'” என்று வித்தகன் வாசிக்க, மயூரன் பேப்பரை பறித்துத் தூரயெறிந்தான்.

“முதல்ல குளிச்சிட்டு வா. சாப்பிடலாம். நீ ஊரை சுத்தி பார்க்க போறியா… வண்டி ஏற்பாடு பண்ணவா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் வேண்டாம். நான் ஏற்கனவே இந்தியாவுக்கு டூர் வந்தப்ப, ஆலப்புழா, கொச்சி, மூனார் சுத்தி பார்த்திருக்கேன். நிறைய வாட்டர் பால்ஸ் போயிருக்கேன். ஏன் போட் ஹவுஸ்ல கூடத் தங்கியிருக்கேன்.

இந்தியால பெஸ்ட் சுற்றி பார்க்கற இடமெல்லாம் வருஷத்துக்கு ஒரு மாசம் வந்து முப்பது நாள்ல கோவா, மும்பை, டெல்லி, சென்னை, மகாராஷ்டரா ராஜஸ்தான் இப்படிச் சுத்தி பார்த்திடுவேன்.

எனக்கு யாருமில்லை பணத்தை எப்படிச் செலவழிக்கறதாம். அதனால என் டார்கெட்டே உலகத்தை முடிஞ்சளவு லீவுல சுத்தி பார்க்கணும்.” என்று கூறினான் மேகவித்தகன்.

“அப்போ இங்க வந்தப்ப எனக்கு ஒரு போன் பண்ணிருக்கலாம்ல.. நான் உன்னைச் சந்திச்சிருப்பேன். சித்தப்பா கூடச் சொன்னதில்லை.” என்று வருந்தினான் மயூரன்.

“நான் சித்தப்பாவுக்கே போயிட்டு வந்து தான் இன்பார்ம் பண்ணுவேன். முதல்லயே சொன்னா அவர் இந்தியானா மறுப்பார். ஒவ்வொரு முறையும் போயிட்டு வந்து தான் சொல்வேன்.” என்று காபியை குடித்துக் காலி கோப்பையைக் கீழே வைத்தான்.

“இப்பவும் பதினைந்து நாள் சுற்றுலா மாதிரி தானே வந்த. சப்போஸ்… என் கல்யாணம் முடிந்து இனி இந்தியா வந்தா எனக்கு இன்பார்ம் பண்ணுவியா?” என்று கேட்டான் மயூரன்.

வித்தகனோ “இதுக்கான பதிலை பதினைந்தாவது நாள் இங்கிருந்து கிளம்பறப்ப சொல்லறேன்” என்று குளிக்கச் சென்றான்.

மயூரனோ கையில் கிடைத்த பத்திரிக்கை பேப்பரை கிழித்து எறிந்தான். பேச்சுக்காவது ‘உன் கல்யாணத்துக்குத் தான் வந்தேன். இனி இங்க வந்தா இன்பார்ம் பண்ணி உன்னைப் பார்த்துட்டு தான் போவேன்’ என்று ஆறுதலுக்காகக் கூட தம்பி கூறாதது மனதை அறுத்தது.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

1 thought on “இரசவாதி வித்தகன்-8”

  1. Avatar

    மயூரன் பாவம். தம்பி பாசத்திற்கு ஏங்கி இருப்பான் போல. வித்தகன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுகிறான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *