Skip to content
Home » இருளில் ஒளியானவன்-14

இருளில் ஒளியானவன்-14

இருளில் ஒளியானவன் 14

லட்சுமி வைஷ்ணவியின் அறைக்கு வந்து மகளை பார்த்தார். அவள் உறங்குவதைக் கண்டு சற்று நேரம் ஓய்வு எடுக்கட்டும் என்று சத்தமில்லாமல் கதவை சாற்றிவிட்டு சென்றார்.

அவர் சென்ற பிறகு கண் திறந்த வைஷ்ணவி, தன் தாய் தந்தையரைப் பற்றித்தான் நினைத்தாள். அவள் பிறந்ததிலிருந்து அவளின் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள் என்று நன்கு உணர்ந்தவள் தானே? ஆனால் இப்பொழுது அவர்களுக்கு தான் கவலையை அளித்துக் கொண்டிருக்கின்றோம் என்று நினைத்து வருந்தினாள்.

இன்னும் நடந்ததை நினைத்து நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அவர்களும் அப்படியே தான் இருப்பார்கள். இன்று மதிய உணவின் பொழுது எல்லோருடனும் மகிழ்ச்சியாக இருந்ததை நினைத்துப் பார்த்தாள். அவர்களின் இந்த மகிழ்ச்சிக்கு காரணம் தன் முகத்தில் தோன்றிய சிறு புன்னகை தான் என்பதையும் நன்கு உணர்ந்தாள். வயதான காலத்தில் அவர்களுக்கு இனி துன்பம் கொடுக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்ட வைஷ்ணவி, இனிமேல் எப்பொழுதும் நடந்ததை நினைத்து வருந்தவும் கூடாது என்ற முடிவுக்கு வந்தாள்.

அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மனதிற்கு திட்டம் போட்டாள். இப்படியே யோசித்துக் கொண்டிருக்க அப்படியே உறங்கியும் விட்டாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வைஷ்ணவி, திடீரென்று கேட்ட சத்தமான சிரிப்பில் மெதுவாக தூக்கம் கலைந்து எழுந்தாள்.

வெகு நாள் கழித்து தங்களின் வீட்டில் சத்தமான சிரிப்பு சத்தம். எப்பொழுதும் அவளது தந்தை டிவியில் சின்னதாக ஒரு நகைச்சுவை காட்சி வந்தால் கூட விழுந்து விழுந்து சிரிப்பார். அப்படிப்பட்டவரின் வீடு இத்தனை நாட்கள் மிகவும் அமைதியாக இருந்தது.

இன்று இவ்வளவு சுத்தமாக சிரித்த தந்தையின் குரலுக்கு இணையாக கேட்கும் விஷ்ணுவின் குரலையும் கேட்டு அவளுக்குள் சிறு புன்னகை தோன்றியது. எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த வைஷ்ணவி தந்தையின் அருகே, “என்னப்பா? அப்படி என்ன பெரிய நகைச்சுவை கேட்டு விட்டீர்கள்? இப்படி சத்தமாக சிரிக்கிறீர்கள்!” என்று கேட்டுக் கொண்டே அமர்ந்தாள்.

“ஐயோ குட்டிமா, நான் சத்தமா சிரிச்சு உன் தூக்கத்தை கெடுத்துட்டேனா!” என்று மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டார் அன்பரசு.

“ச்சே ச்சே, இல்லை. அப்பா எழுந்திருக்கும் நேரம் தானே” என்று தந்தையிடம் சொல்லிவிட்டு விஷ்ணுவை பார்த்து “வாங்க” என்றாள்.

அவன் தலையை ஆட்டிக் கொண்டு “பரவாயில்லையே, ரொம்ப சீக்கிரமா வாங்க என்று கேட்டு விட்டாய்” என்றான் நக்கலாக.

அவளும் புன்னகையாக “அப்பாவின் குரலுக்கு இணையாக உங்கள் சத்தமும் காதில் கேட்டது. அப்படி என்றால் நீங்கள் எப்பவோ வந்து விட்டீர்களா தானே? தூங்கிக் கொண்டிருந்தவள், தூக்கத்திலேயா உங்களை வரவேற்க முடியும். எழுந்து வரும் பொழுது தான் கேட்க முடியும்?” என்றாள்.

அன்பரசுக்கு மகளின் பேச்சு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. அவள் பழையபடி பேச ஆரம்பிக்கிறாள் என்று நினைத்துக் கொண்டார்.
ஆனால் அதற்காக பழையபடி விஷ்ணுவை எதிர்த்து பேசுவது போல் பேசி விடக்கூடாது என்றும் சிறு எண்ணம் அவர்க்குள் ஓடியது.

வைஷ்ணவி அவன் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு, தந்தையிடம் திரும்பி, “அப்பா, நான் நாளிலிருந்து நம்ம ஆபீஸ்க்கு வருகிறேன்” என்றாள்.

அது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், அவளுக்கு இப்பொழுது ஓய்வு தேவை என்று உணர்ந்த அன்பரசு “ஏன்மா? இவ்வளவு சீக்கிரம். இன்னும் ஒரு வாரம், பத்து நாள் ஓய்வெடுத்துக் கொள்ளலாமே!” என்றார்.

“பரவாயில்லைப்பா. இப்பொழுது நன்றாகத் தான் இருக்கிறேன். அங்கு வந்து மட்டும் என்ன கடின வேலையா பார்க்கப் போகிறேன். உட்கார்ந்து பார்க்கும் வேலை தானே, ஒன்றும் பிரச்சனை இல்லை. நீங்களும் என் கூடவே தானே இருப்பீர்கள்” என்றாள்.

விஷ்ணு “அவள் சொல்வதும் சரிதான் மாமா. வீட்டுக்குள்ளேயே இருந்தா அவளுக்கும் போர் அடிக்கும் அல்லவா? அலுவலகம் சென்று வரட்டும், அவள் சொல்லுவது போல நீங்களும் அவள் அருகிலே தானே இருப்பீர்கள். பார்த்துக் கொள்வீர்கள் தானே!” என்றான்.

இருவரும் சொல்லும் பொழுது அவரால் மறுக்கவும் முடியவில்லை. “உன்னால் முடியும் என்றால் வாமா, எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை” என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது லட்சுமி அனைவருக்கும் குடிப்பதற்கு கொண்டு வந்தார்.

அனைவரும் பேசிக்கொண்டே இருக்க, அப்பொழுது வீடியோ காலில் சாரங்கனும் சங்கீதாவும் வர தேநீர் நேரம் விஷ்ணுவின் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சென்றது. அதன் பிறகு இரவு உணவை முடித்துவிட்டு அவன், அவன் வீட்டிற்கு செல்ல லட்சுமி தான் “இங்கேயே இருக்கலாமே!” என்றார்.

“இருக்கலாம் தான் அத்தை ஆனால் அது இப்பொழுது முறையில்லை” என்றான்.

“முறையா?” என்று அவர் அவனைப் பார்க்க,
“இல்லை அத்தை, சரியில்லை என்று சொல்ல வந்த. இப்பொழுது நான் தங்கினால் யாராவது ஏதாவது பேசுவார்கள்” என்று கூறிவிட்டு ‘வைஷ்ணவியின் கணவனாக நான் கண்டிப்பாக இங்கு தங்கும் காலம் வரும் அல்ல அத்தை’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டு அனைவருக்கும் புன்னகையுடன் தலையசைத்து தனது வீட்டிற்கு சென்றான்.

காலையில் அலுவலகம் செல்வதற்காக தயாராகி வந்த மகளிடம், தனக்கு வெளியே ஒரு முக்கியமான வேலை இருப்பதாக கூறி, விஷ்ணு உன்னை நம் அலுவலகத்தில் விட்டு விட்டு செல்வான். உனக்கு பரவாயில்லையாம்மா?” என்றார் அன்பரசு.

“அவருக்கு வேலை இருக்குமே அப்பா. அவருக்கு பிரச்சனை இல்லை என்றால் எனக்கும் ஒன்றும் இல்லை. அவரிடம் கேட்டு விடுங்கள்” என்று காலை உணவை சாப்பிட அமர்ந்தாள்.

தனது வீட்டிற்கு வந்த அன்பரசுவை வரவேற்று “மாமா நான் எப்படியும் அங்கு தானே சாப்பிட வருவேன். நீங்க வந்து கூப்பிட வேண்டுமா? நான் கிளம்பி கொண்டு தான் இருக்கிறேன். நீங்க ஏன் அங்கும் இங்கும் அலைகிறீர்கள்?” என்ற படியே கிளம்பி கொண்டே இருந்தான் விஷ்ணு.

“இல்லை விஷ்ணு. உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும். அதற்காகத்தான் வந்தேன்” என்றார்.

என்ன? என்று அவர் எதிரில் அமர்ந்தபடியே கேட்க, “இன்று வைஷ்ணவி விவாகரத்து விஷயம் ஆக வெங்கட் கூறிய வக்கீலை பார்க்க போகிறேன். அதனால் நீ மருத்துவமனை செல்லும் பொழுது வைஷ்ணவியை அலுவலகத்தில் விட்டு விடுகிறாயா?” என்றார் தயக்கமாக.

“மாமா, இதுக்கெல்லாம் நீங்கள் என்னிடம் இப்படி தயக்கமாக கேட்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சின்ன வயதில் இருந்தே உங்க வீட்டு பையனாக தானே வளர்ந்தேன். அப்பொழுது எப்படி பேசினீர்களோ அதே போலவே என்னை பாருங்கள் நீங்கள்” என்று கூறி “விஷ்ணு இதை செய், விஷ்ணு இதை செய்யாதே! என்று எனக்கு நீங்கள் நேரடியாகவே சொல்லலாம் மாமா” என்றான் புன்னகையுடன்.

அவரும் புன்னகைத்துக் கொண்டு “சரிப்பா இனிமேல் அப்படி தயக்கமாக எதுவும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன். சரியா, சரி வா சாப்பிடலாம்” என்று கூறி தன் வீட்டிற்கு சென்று மனைவியிடம், “விஷ்ணு வந்தால் சாப்பிட வை லட்சுமி. குட்டிமா வை கூட்டிட்டு போகச் சொல்லு, சரியா?” என்று சொல்லிவிட்டு, மகளிடமும் “பத்திரமா அவனுடன் போம்மா. நான் என் வேலை முடித்துவிட்டு அலுவலகத்திற்கு வந்து விடுகிறேன், சரியா?” என்று மகளின் தலையை மென்மையாக தடவி விட்டு, தனது காரை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

அவர் கிளம்பிய சிறிது நேரத்தில் விஷ்ணுவும் இங்கு வர, அவனுக்கு காலை உணவை கொடுத்துவிட்டு கணவன் கூறியதை கூறினார் லட்சுமி.
“அங்கு என்னிடமும் சொல்லிட்டாங்க அத்தை. அவள் தயாராக இருந்தால் கிளம்பலாம்” என்றான் சாப்பிட்டு முடித்து.

அன்பரசு கூறியது போலவே வைஷ்ணவியை அவர்களது அலுவலகத்தில் விட்டுவிட்டு மருத்துவமனைக்கு சென்றான் விஷ்ணு.

  • தொடரும்..

6 thoughts on “இருளில் ஒளியானவன்-14”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *