இருளில் ஒளியானவன் 16
தங்களது அறைக்கு வந்த அன்பரசு, சோபாவில் சாய்ந்து அமர்ந்து மகளிடம் எப்படி பேசப்போகிறோம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். நடந்த விஷயத்தை கேசவனிடமும் சொல்லிவிட்டு தான் வந்திருந்தார். அவர்தான் இனிமேல் தாமதிக்க வேண்டாம் என்றும், வைஷ்ணவிடம் இன்றே பேசி விடு என்று கூறி அனுப்பி இருந்தார்.
சோபாவில் அமர்ந்திருந்த அப்பாவை பார்த்தபடியே எதிரே கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள் வைஷ்ணவி. லட்சுமியும் பின்னாடியே வந்து மகளின் மறுபுறம் அமர்ந்து கொண்டார்.
சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. வைஷ்ணவி தாய் தந்தை இருவரது முகத்தையும் பார்த்தாள். தந்தை எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பமாக அமர்ந்திருப்பது தெரிந்தது. “அப்பா” என்று மென்மையாக அழைத்தாள்.
அவரும் மகளை நிமிர்ந்து பார்க்க, “வக்கீல் என்னப்பா சொன்னார்” என்றாள் நேரடியாக
அவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டு நடந்ததை கூற தொடங்கினார்.
“வக்கீல் என்ன சொன்னார் என்று சொல்வதற்கு முன்பாக, வெங்கட் என்ன சொன்னான் என்று சொல்கிறேன்” என்று ஆரம்பித்தார்.
“நீ மருத்துவமனையில் இருக்கும் பொழுது வெங்கட்டும் அங்கு அட்மிட் ஆகி இருந்தார்” என்றார்.
அவள் முகத்தில் எந்த உணர்வும் வரவில்லை. அமைதியாக தந்தையின் முகத்தை பார்த்திருந்தாள்.
‘என்ன ஆயிற்று’ என்று கேட்பார் என்று நினைத்த அன்பரசுக்கு மகளின் அமைதி ஆச்சரியமாக இருந்தது.
அதை “என்ன நடந்தது என்று கேட்க மாட்டாயா?” என்று அவளிடம் கேட்ட பின்பு தான் உணர்ந்தார்.
“நீங்கள் தான் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே அப்பா. நான் ஏன் நடுவில் பேச வேண்டும். நீங்களே சொல்லுங்கள்” என்று அமைதியாக தந்தையின் முகத்தை பார்த்தாள்.
அவரும் அன்று வெங்கட் சொன்ன அனைத்தையும் கூறினார்.
“அதன்படியே இன்று நான் அவர் கூறிய வக்கீல் இடமே சென்றேன். அவரும் விவாகரத்து பதிவு செய்வதாக சொல்லிவிட்டு, மேலும் நீதிபதியிடம் நீ என்னென்ன பேச வேண்டும் என்பதையும் கூறினார் எனக்கு” என்று அவர் சொல்லிய அனைத்தையுமே கூறி முடித்தார்.
மௌனமாக அனைத்தையும் கேட்ட வைஷ்ணவி, “இதையெல்லாம் கண்டிப்பாக சொல்ல வேண்டுமா அப்பா?” என்றாள்.
“இதைத்தான் நானும் வக்கீலிடம் கேட்டேன்மா. ஆனால் வெங்கட் எல்லாவற்றையுமே சொல்ல சொல்லி இருக்கிறாராம். அப்படி சொன்னால் தான் உடனே உனக்கு விவாகரத்து கிடைக்குமாம்” என்றார்.
“ஓ” என்று சொல்லி மௌனமாக சிறிது நேரம் இருந்தாள்.
“விவாகரத்து கிடைத்ததும் உனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்க வேண்டுமாம்” என்றார்.
விரக்தியாக சிரித்த வைஷ்ணவி “அதைப் பற்றி அவர் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள் அப்பா” என்று கூறிவிட்டு தாயின் மடியில் அப்படியே சாய்ந்து படுத்தாள்.
அவளது தலையை கோதிவிட்ட லட்சுமிக்கு. கண்களில் இருந்து தண்ணீர் வடிந்தது. அது வைஷ்ணவியின் கன்னத்தில் விழ, தாயின் முகத்தை நிமிர்ந்து பார்த்து, “நிச்சயம் உங்களுக்கு பிடித்தது போல் வாழ்வேன் அம்மா. ஆனால் அதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியவில்லை” என்றாள்.
தன் கண்களை துடைத்துக் கொண்ட லட்சுமி, “நாங்கள் யாருக்கும் தெரிந்து எந்த பாவமும் செய்யவில்லை குட்டிமா. ஆனாலும் எங்களது ஒரே மகள் உன்னுடைய வாழ்க்கை ஆரம்பிக்கும் பொழுதே மரித்து விட்டதே! அதை நினைத்து தான் வேதனையாக இருக்கிறது” என்றார்.
அவரும் மகள் திருமணத்தில் வெங்கட் நடந்து கொண்டதை நினைத்து கணவனிடம் தினமும் புலம்பிக் கொண்டே தானே இருப்பார். இப்பொழுது மகள் வந்த பிறகு அத்தனை புலம்பல்களையும் தன் மனதிற்குள்ளேயே போட்டு புதைத்துக் கொண்டார் அல்லவா? அது கண்ணீராக இப்பொழுது வெளிப்பட, மகளிடம் வாய் திறந்து பேசி விட்டார்.
பெற்றோரின் நிலையை புரிந்து கொண்ட வைஷ்ணவிக்கு, வயதான காலத்தில் அவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டும். இப்படி தன்னைப் பற்றி மனதிற்குள்ளேயே புலுங்கிக் கொண்டிருந்தால், அவர்களது உடல் நலம் என்னத்திற்கு ஆகும் என்று நினைத்து வருந்தினாள்.
“அம்மா, நிச்சயம் நான் உங்கள் ஆசைப்படி வாழ்வேன். அதை நினைத்து நீங்கள் மனதிற்குள் வருத்தப்படாதீர்கள். எது என்றாலும் என்னிடம் வெளிப்படையாக பேசுங்கள். நீங்கள் இருவரும் பக்கத்தில் இருப்பது தான் எனது பலமே.
கண்டதையும் நினைத்து உடலையும் மனதையும் வதைத்து கொண்டீர்கள் என்றால் நான் என்ன செய்வேன்” என்று தாயை வயிற்றுடன் அணைத்துக் கொண்டாள்.
மகளின் முதுகை தடவி விட்ட லட்சுமி, “இல்ல குட்டிமா, இனிமேல் நான் அழ மாட்டேன். கொஞ்ச நேரம் தூங்கு. சாயங்காலம் கோயிலுக்கு போயிட்டு வரலாம்” என்றார்.
தாய் கூறியதும் அவர்கள் இருவருக்குமே ஓய்வு வேண்டுமே என்று நினைத்த வைஷ்ணவி, “சரி அம்மா நீங்கள் இருவரும் இங்கு ஓய்வு எடுங்கள். நான் எனது அறைக்கு போகிறேன்” என்று எழுந்தாள்.
“இல்லை குட்டிமா, கொஞ்சம் தள்ளி படு. நாம் இங்கு ஒன்றாகவே படுப்போம்” என்று மகளை நடுவில் படுக்க வைத்து தாயும் தந்தையும் இரு புறம் படுத்துக்கொண்டனர்.
தாயை அணைத்தபடியே படுத்து, இனிமேல் எதற்கும் கலங்கக்கூடாது என்று யோசித்துக் கொண்டே, அப்படியே கண்ணயர்ந்து விட்டாள் வைஷ்ணவி. உறங்கிய மகளின் தலையை மென்மையாக தடவி விட்ட அன்பரசு, மனைவியிடம்
“நம்மை மனதிற்குள் வைத்து வருத்திக் கொள்ளாதீர்கள் என்று சொல்லிவிட்டு, இவள் அனைத்தையும் அவளது மனதிற்குள்ளேயே போட்டு புதைத்து விடுகிறாள்” என்று வேதனையாக கூறினார்.
லட்சுமியும் மௌனமாக தலையாட்டினார்.
நீண்ட நாள் கழித்து மிகவும் ஆழ்ந்து தூங்கினாள் வைஷ்ணவி. சாயங்காலம் தாய் டீ குடிக்க எழுப்பும் பொழுது தான் எழுந்தாள். தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வர, தாயும் தந்தையும் உணவு மேஜை நாற்காலியில் அமர்ந்து, அவளுக்காக காத்திருப்பது தெரிய, இருவரின் நடுவே வந்து, இருவரின் தோளிலும் கை போட்டு, “ரொம்ப நாள் கழித்து நிம்மதியாக தூங்கியது போல் உணர்கிறேன்” அம்மா என்று அம்மாவின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.
வடையும் தேங்காய் சட்னியும் இருக்க, “என்னம்மா இன்று விசேஷம். வடை செய்திருக்கிறீர்கள்” என்று கூறிக்கொண்டே ஒரு வடையை எடுத்து கடித்தாள்.
அவள் தலையில் செல்லமாக கொட்டியபடி வந்து அமர்ந்த விஷ்ணு, “உனக்காக ஒன்னும் அத்தை செய்ய வில்லை. எனக்காக செய்திருக்காங்க” என்றபடியே அவளின் அருகில் அமர்ந்து, அவள் தட்டில் இருந்த மற்றொரு வடையை எடுத்து கடித்தான்.
“டேய் நெட்டை கொக்கு, அங்க தான் அவ்வளவு வடை இருக்கு இல்ல? என் தட்டிலிருந்து ஏன்டா எடுக்கற? என்று அவனது தோளில் வேகமாக அடித்தாள் வைஷ்ணவி.
அவள் செயலில் மூவருமே இன்பமாக அதிர்ந்து விட்டனர்.
அதில் “குட்டிமா! பெரியவங்கள மரியாதையா பேசணும்னு சொல்லி இருக்கேன் இல்ல” என்று அதிர்ச்சி குறையாமல் மகளை கண்டித்தார் அன்பரசு.
அவர் கூறிய பிறகுதான் தான் பேசியதை நினைத்து நுனி நாக்கை கடித்துக் கொண்ட வைஷ்ணவி, “சாரிப்பா” என்று சொல்லிவிட்டு வடையை சாப்பிட ஆரம்பித்தாள்
பெரியவர்கள் நிலைமை எப்படி இருக்கிறதோ தெரியவில்லை. ஆனால் விஷ்ணுவின் நிலைமை படு மோசமாகிவிட்டது.
“நெட்டை கொக்கு” என்று அவள் கூறியதில் இன்ப அதிர்ச்சியில் இருந்து வெளிவர அவனுக்கு தாமதமாகியது. கடித்த வடை அப்படியே வாயில் இருக்க அதிர்ச்சியாக அமர்ந்திருந்தான்.
அவன், அவளிடம் வம்பு செய்து பூசணி என்று சொல்லும் பொழுதெல்லாம், அவள் நெட்டை கொக்கு என்றுதான் யாருக்கும் தெரியாமல் திட்டுவாள்.
இன்று அவள் அனைவரும் முன்னாடியில் கூறியதில் இனிமையாக மகிழ்ந்தான். முன்பு போல் தன்னிடம் பேசுவதிலும் அதிர்ச்சியாக, அப்படியே அமர்ந்திருந்தான் விஷ்ணு.
- தொடரும்..
Nalla maatram…
💛💛💛💛💛
Vaishu konjam konjam ah normal aah aagura ah
Appa amma kaga manasu marinalum un manasula irukurathu veliya varanum vaishu etho konjam konjama santhosa iruka ippadiye sari aganum
ஆனால் அப்படி என்ன பிரச்சினை வெங்கட்குன்னு சொல்லவே இல்லையே