Skip to content
Home » இருளில் ஒளியானவன்-17

இருளில் ஒளியானவன்-17

இருளில் ஒளியானவன் 17

வைஷ்ணவியின் பேச்சு, அவள் பழைய நிலைமைக்கு வெகு விரைவில் வந்து விடுவாள் என்று நிம்மதியே அளித்தது பெற்றோராகிய அன்பரசுக்கும் லட்சுமிக்கும். அதில் மகிழ்ச்சியாக அவனுக்கும் வடையையும், சூடாக டீ கொடுத்து, “கோயிலுக்கு போகிறோம் விஷ்ணு. நீயும் வருகிறாயா?” என்று ஆர்வமாக கேட்டார் லட்சுமி.

“இல்லை ஆன்ட்டி, இப்பொழுதுதான் ஒரு அறுவை சிகிச்சை முடித்துவிட்டு வந்திருக்கிறேன். போய் குளித்துவிட்டு கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும். இரவு மீண்டும் ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வரணும்” என்றான்

அவனுக்கு அவர்களுடன் கோயிலுக்குச் செல்ல ஆசை தான். ஆனால் இப்படி உரிமை இல்லாமல் செல்வதற்கு அவன் விரும்பவில்லை. அவளை எப்படியாவது திருமணம் செய்து கொண்டு மனைவி என்ற முறையில் தான் அவளுடன் வெளியே செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். சரி நீ போய் ஓய்வெடு என்று கூறிவிட்டு, இவர்கள் மூவரும் கோயிலுக்கு கிளம்பினார்கள்.

வீட்டிற்கு அருகில் இருந்த அம்மன் கோயிலுக்குத் தான் சென்றார்கள். அங்கு லட்சுமி அடிக்கடி வந்து போவதால், பூசாரியும் இவர்களை கண்டதும் புன்னகையாக வரவேற்று, அர்ச்சனை தட்டை வாங்கி, “வைஷ்ணவி பாப்பா பெயருக்குத் தானே” என்றார்.

அவரும் “ஆமாம் பூசாரி” என்று கூறி, வைஷ்ணவியின் பெயரையும் நட்சத்திர ராசிகளையெல்லாம் சொல்லி, சக குடும்பத்தினர் பெயரைச் சொல்லியும் அர்ச்சனை செய்து கற்பூரம் காண்பித்தார்.

சாமியை மனதார கும்பிட்டு கோயிலை மூன்று முறை சுற்றி விட்டு வந்து ஓரிடத்தில் அமர்ந்தனர் குடும்பமாக.

அன்பரசுவிற்கு மனதிற்கு ஏதோ மிகவும் லேசாக இருப்பது போல் ஒரு உணர்வு. உடனே அதை மனைவியிடம் “ரொம்ப அமைதியாக இருக்கு லக்ஷ்மி” என்றார்.

“அதற்காகத்தான் நான் அடிக்கடி உங்களை இங்கு வாருங்கள் என்று அழைப்பேன். நீங்கள் தான் எதற்கும் பிடி கொடுக்காமல் இருப்பீர்கள்” என்று வருந்தினார்.

“இனிமேல் நீ கூப்பிட்டா கண்டிப்பா வருகிறேன் மகாராணி. கோயிலில் வைத்து வருத்தப்படாதே” என்றார் கிண்டலாக.

“போதும் உங்கள் நக்கல் எல்லாம்” என்று கூறி, சிறிது நேரம் கழித்து, நிம்மதியாக வீட்டிற்கு வந்தார்கள்.

அதன் பிறகு தினமும் தந்தையுடன் அலுவலகம் சென்று வர ஆரம்பித்தாள் வைஷ்ணவி. பழையபடி அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் அவளது இயல்புத்தன்மை வரத் தொடங்கியது. இதற்குள் இரண்டு மாதங்கள் ஓடி இருக்க சாரங்கனும் சங்கீதாவும் தங்கள் வேலைகளை முழுவதையும் மாற்றிக் கொண்டு சென்னைக்கு குடியேறி விட்டார்கள்.

அவர்கள் வந்தது லட்சுமிக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், இனி விஷ்ணு இங்கு சாப்பிட வர மாட்டேனே என்று வருந்தினார். அதை சங்கீதவிடம் வருத்தமாக தெரிவித்தார். நீ வந்தது சந்தோஷமாக தான் இருக்கு சங்கீதா. ஆனால் இனிமேல் விஷ்ணுவுக்கு நான் சமைச்சு போட முடியாதே! அவனும் எங்கள் வீட்டிற்கு வரமாட்டான்” என்று வருத்தமாக கூறினார்.

தாயின் தோளில் சாய்ந்து அமர்ந்திருந்த விஷ்ணு “ஐயோ அத்தை, நீங்க கவலைப்படாதீங்க. இந்த சங்கீதா சமையல்ல இருந்து எப்படா தப்பிக்கலாம் என்று இருந்தேன். இப்பதான் ரெண்டு மாசம் நல்லா சாப்பாடு கிடைச்சுது. அதை நான் கெடுக்க விரும்பலை. கண்டிப்பா உங்க வீட்டிலேயே வந்து சாப்பிட்டுக்குறேன். முடிஞ்சா இவங்களுக்கும் கொஞ்சம் உங்க சமையலை சொல்லி கொடுங்க” என்று கிண்டலாக கூறினான்.

அதில் அவன் காதை பிடித்து திருகிய சங்கீதம் “ஓஹோ, உங்க அத்தை சமையல் அவ்வளவு புடிச்சு போச்சுதோ! இனிமேல் அம்மா மெல்லிசா தோசை சுட்டு, வெங்காயம் சட்னி வச்சு தாங்க, உங்க கையால.. அப்படின்னு வருவ இல்ல, அப்புறம் இருக்கு உனக்கு” என்றார் விளையாட்டு கோவமாக. பின்னர் “ஆன்ட்டி எப்போடா அத்தையா மாறியது” என்று ஒரு மார்க்கமாக அவனைப் பார்த்தார் சங்கீதா.
தாயின் கேள்வியில் திருதிருவென விழித்தான் விஷ்ணு.
சங்கீதா கேட்ட பிறகுதான் அன்பரசு, லட்சுமி இருவரும் அதை கவனித்தனர். முன்னர் அவர்களை அங்கிள், ஆன்ட்டி என்று தான் அழைப்பான். ஆனால் இப்போ சென்னை வந்தபிறகு, அதுவும் அவன் வீட்டிற்கு வந்தபிறகு தான் அத்தை மாமா என்று அழைப்பதை உணர்ந்தார் அன்பரசு.

அவர் குழப்பமாக விஷ்ணுவை பார்க்க, அதே நேரத்தில் விஷ்ணுவும் அவரைத்தான் பார்த்தான். அவர் பார்த்ததும் அவன் பார்வையில் சிறு தடுமாற்றம் தோன்றியதை கவனித்தார் அன்பரசு.

ஆனால் இதை எதையும் கவனிக்காத வைஷ்ணவி, தாயும் மகனும் செல்லமாக பேசி விளையாடுவதை, தந்தையின் அருகில் அமர்ந்து மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதன் பிறகு அவர்களது வாழ்க்கை இனிமையாக கழிந்தது.
இதற்கு இடையில் இரண்டு முறை நீதிமன்றத்தில் இருந்து அழைப்பு வர, வைஷ்ணவியை விடுத்து லட்சுமியும் அன்பரசுமே சென்று வந்தனர்.

இன்று கடைசியாக செல்ல வேண்டிய நாள். காலையிலேயே எழுந்து குளித்து பூஜை அறையே கதி என்று இருந்தார் லட்சுமி. வைஷ்ணவியும் அன்பரசுவும் கிளம்பி தயாராக வர, பூஜை அறையில் இருந்து வராத அம்மாவிடம், “அம்மா சாமியை போட்டு ரொம்ப படுத்தாதீங்க. உங்கள் இருவரின் குணமும் அவருக்கு தெரியும். உங்களுக்கு எந்த கெடுதலும் அவர் செய்ய மாட்டார். நம்பிக்கையாக வாங்க” என்று தெளிவாக பேசினாள் வைஷ்ணவி.

காலையிலேயே விஷ்ணுவும், தன் தாய் தந்தையிடம் விஷயத்தை கூறி, நீங்களும் அவர்களுக்கு துணையாக போயிட்டு வாருங்கள் என்று கூறியதால், அவர்களும் கிளம்பி அன்பரசுவின் வீட்டிற்கு வந்தார்கள்.

அவர்களை கண்டதும் ஆராய்ச்சியாக “என்ன ஆன்ட்டி, காலையிலேயே இந்த பக்கம்?” என்றாள் வைஷ்ணவி.

வெறுமையாக புன்னகைத்த சாரங்கன், “அன்பு கோர்ட்டுக்கு போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தான்ல. அதான் நாங்களும் வருகிறோம்” என்றார்

பெருமூச்சு விட்ட வைஷ்ணவி “இங்கு ஏற்கனவே அம்மா பூஜை அறையை விட்டு வெளியே வர மாட்டேங்கிறாங்க. இப்போ ஆன்டியும் சேர்ந்துக்குவாங்க. அவ்வளவுதான், அந்த சாமி பாடு திண்டாட்டமாக போகிறது” என்று கூறி மென்மையாக சிரித்தாள்.

அவளின் கூற்றில் சங்கீதா வந்து அவளது காதை மென்மையாக திருகி “வாயாடி, எங்களை பார்க்க உனக்கு கிண்டலாக இருக்கிறதா?” என்றார்.

“அச்சோ ஆன்ட்டி, காதை விடுங்க. வலிக்குது… அதெல்லாம் ஒன்றுமில்லை. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” என்றாள் அவளும் வலிப்பது போல் நடித்துக் கொண்டு.

சாரங்கன் வண்டி ஓட்ட அருகில் அமர்ந்து கொண்டார் அன்பரசு. பின் இருக்கையில் வைஷ்ணவியை நடுவில் வைத்து பெரியவர் இருவரும் அருகில் அமர்ந்து கொண்டனர்.

நீதிமன்றத்தை நோக்கி கார் பயணிக்க காருக்கு ஒருவித அமைதி நிலவியது. அதை கலைக்கும் விதமாக “அப்பா ஏதாவது பாட்டு போடுங்க. இரண்டு ஜெயிலருக்கு நடுவுல மாட்டிக்கிட்ட மாதிரி எனக்கு இருக்கு” என்றாள் பயந்தவாறு.

சங்கீதா அவள் தலையில் செல்லமாக கொட்டி “எங்களை பார்க்க உனக்கு என்ன அப்படியா தெரியுது?” என்றார்.

அன்பரசுவும் புன்னகைத்துக் கொண்டே, மகளுக்கு பிடித்தது போல் பாடலை ஒலிவித்தார்.

நீதிமன்றத்திற்குள் வந்ததும் அன்பரசு, “நீங்கள் எல்லோரும் காரிலேயே உட்கார்ந்து இருங்கள். நான் சென்று வக்கீலை பார்த்துவிட்டு வருகிறேன்” என்று செல்ல,
சாரங்கனும் மனைவியிடம் “இங்கேயே இரு, நானும் அன்புவுடன் போய்விட்டு வருகிறேன்” என்று சென்றார்.

வக்கீலின் அறை வாயிலில் வெங்கட், தந்தை மற்றும் தம்பியுடன் நின்றிருந்தான். இவரை கண்டதும் கண்களில் மன்னிப்பு வேண்டி விட்டு, தன் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.

தங்கள் வந்துவிட்டது வக்கீலிடம் தெரிவித்த அன்பரசு, வெங்கட்டிடம் வந்து “உங்க மேல எனக்கு ரொம்ப கோபம் இருந்தது தம்பி. ஆனால் இப்பொழுது அதெல்லாம் இல்லை. நீங்கள் எங்கிருந்தாலும் நன்றாக இருங்கள்” என்றார்.

அவன் எந்த பதிலும் கூறாமல், அவரைத் தவிர மற்ற இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்தான்.
பின்னர் அவனது தந்தையிடமும் “நான் உங்களிடம் ஏதாவது கோபமாக பேசி இருந்தால் மன்னித்து விடுங்கள். இதற்குப் பிறகு நம் குடும்பம் சந்திக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வக்கீல் வந்து “அனைவரையும் நீதிபதி அழைக்கிறார், நீங்களும் மிஸ்ஸஸ் வைஷ்ணவியை அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்று கூறி வேகமாக செல்ல பார்க்க,

அவர் தோளில் கை வைத்து நிறுத்திய வெங்கட் “மிஸ் வைஷ்ணவி என்று மட்டும் சொல்லுங்கள் வக்கீயில் சார்” என்றான் அதட்டலாக.

அவன் குரலில் சற்று பயந்து “சரி” என்று தலையாட்டி விட்டு, “சீக்கிரம் வாருங்கள், உங்களுக்காகத்தான் நீதிபதி காத்திருக்கிறார்” என்று கூறி, வேகமாக அவர்களை அழைத்துக் கொண்டு சென்றார் வக்கீல்.

  • தொடரும்..

4 thoughts on “இருளில் ஒளியானவன்-17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *