மருத்துவமனையில் மூன்றாம் தினத்தின் காலை..
உறங்கிக் கொண்டிருந்த அன்னைக்கு இடையூறு ஏற்படாத படி, ஒலித்த ஜோதியின் கைப்பேசியை எடுத்துக் கொண்டு அறையில் இருந்து வெளியே வந்தாள் திவ்யா.
“ஹலோ..”
“ஹலோ.. அம்மா நான் செல்வம் பேசுறேன்.”
“செல்வமா? ராஜ கோபாலன் பட்டியில இருந்து ம்மா.”
“ஹான்.. சொல்லுங்க மிஸ்டர் செல்வம்.”
“நீங்க, ஜோதி அம்மா தான?”
“இல்லங்க. நான் அவங்களோட பொண்ணு திவ்யா. நீங்க ஜெயில்ல..” என அவள் தயங்கி நிறுத்த, “நேத்து தான்பா ரிலீஸ் ஆனேன். அம்மா, விபரம் சொன்னாங்க. அதான், பேசலாம்னு ஃபோன் போட்டேன். அம்மா, எங்கப்பா? அவங்கக்கிட்ட பேசணுமே?”
“இப்பப் பேச முடியாதுங்க!”
“சரிப்பா, சாயங்காலமா கூப்பிடுறேன்!”
“ஸாரி, அப்பவும் பேச முடியாது!”
“ஏன்பா?”
“அம்மாக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்ல. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கேன்!” என்றவள் விபரத்தை உரைக்க, “என்னம்மா? எவ்வளவு பெரிய விசயம் நடந்துருக்கு? இப்படிச் சாதாரணமா சொல்லுற? எந்த ஹாஸ்பிடல்ல இருக்க.?”
“அது..” என அவள் தயங்க, “ஹாஸ்பிடல்ல துணைக்கு யாரும் இல்லாம என்னப்பா செய்யிவ? நீ முதல்ல சொல்லு, நான் வர்றேன்.”
“இல்ல பரவாயில்ல. இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க.”
“அட.. சரிப்பா! முடியாதவங்கள ஒரு எட்டு நான் வந்து பார்த்துக்கிறேனே? ஏன்பா, என்மேல நம்பிக்கை இல்லையா? தனியா எல்லாம் வரலப்பா. என்னோட சம்சாரத்தையும் அம்மாவையும் கூட்டிட்டுத்தான் வர்றேன்!” என்றிட, அதற்கு மேல் தவிர்க்க இயலாது முகவரியை உரைத்தாள்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் அன்னை மற்றும் மனைவியுடன் மருத்துவமனைக்கு வந்து விட்டான் செல்வரத்னம்.
திகைத்துப் போனாள் திவ்யா.
திருமணம் வரை பேசிவிட்டு, மனதில் உருவான அந்த உறவையே ஒருவன் வெட்டிக் கொண்டு சென்றுவிட, இதுவரை ஒருமுறை கூடப் பேசிடாத ஒருவன் ‘தனியாய் என்ன செய்வாய்’ என்று கேட்டு, உதவி செய்வதற்காக வந்து நிற்கிறான்.
“அம்மா.. எந்த ரூம்ல இருக்காங்க ப்பா.?” எனக் கேட்டவனுக்கு அறையைக் கைக்காட்டியவளுக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வர, மற்றொரு கையால் வாயை மூடியபடி தரையில் சரிந்து அமர்ந்தாள்.
“என்னப்பா ஆச்சு?” எனப் பதறியவன் அன்னையைப் பார்க்க, திவ்யாவின் அருகே சென்று அவளின் தோளில் தட்டிக் கொடுத்தார் அன்னப்பூரணி.
“சின்னப்பிள்ள இல்ல? ரெண்டு நாளா துணைக்கு யாரும் இல்லாம, தனியா எவ்வளவு சிரமப்பட்டுச்சோ? அதான், ஆளுங்களைப் பார்த்ததும் அழுகை வந்திடுச்சு போல.?” என அந்தத் தாயுள்ளம் சரியாய் நிலையை ஊகிக்க, மெலிதாய்ப் புன்னகைத்தான் செல்வம்.
“ஜோதி அம்மா இருக்கிற ரூமுக்குக் கூட்டிட்டுப் போ கார்த்திமா. நான், இப்ப வந்திடுறேன்!” என்று விட்டு சென்றவன், சிறிது நேரத்தில் ஐந்து தேநீர் குவளைகளுடன் அங்கு வந்து சேர்ந்தான்.
ஜோதியும் விழித்திருக்க ஆளிற்கு ஒன்றைக் கையில் கொடுத்தவன், சிறிது நேரம் பேசிவிட்டு, மருத்துவரை காணச் சென்றான்.
பேச்சின் மூலமாக அவர்களைப் பற்றி ஓரளவிற்குத் தெரிந்து கொண்டாள் திவ்யா. முன்னரே சுந்தரம், அவனைப் பற்றிச் சில விசயங்களை உரைத்து இருந்தார்.
கிராமிய மிதிவண்டி இயக்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் செல்வரத்னம், கார்த்திகா, சுப்புரத்னம் மூவரும்.
செல்வத்தின் தந்தையினது இறப்பிற்குப் பின்னர்.. அவன் பயிலும் பள்ளிக்கு வந்து மரக்கன்றுகளை நட்டு ‘இயற்கையைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் அந்த இயக்கத்தினர் நடத்திய நாடகமும், விழிப்புணர்வு கூட்டமும் அவனை வெகுவாய் ஈர்க்க, சிறுவயதிலேயே தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்டான்.
விடுமுறை தினங்களில் இயக்கத்தினருடன் இணைந்து தெருக்களைச் சுத்தம் செய்வது, பிளாஸ்டிக்கால் உண்டாகும் பாதிப்புகளை மக்களிடம் கொண்டு செல்வது, மரக்கன்றுகளை நடுவது, தெருவோரம் இருக்கும் காய்ந்த மரங்களுக்கு நீர் ஊற்றி தொடர்ந்து அதனைப் பாதுகாப்பது போன்ற பணிகளைச் செய்வான்.
தேர்தல் காலங்களில் ஓட்டுப் போடுவதின் முக்கியத்துவம், பெட்ரோல் டீசலால் உண்டாகும் காற்று மாசுபாட்டை வலியுறுத்தி உடல் நலத்தைப் பாதுகாக்க மிதிவண்டியை பயன்படுத்துவது போன்றவற்றை, பேரணி மூலமும் பிரசுரங்களை விநியோகித்தும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதை முக்கியப் பணியாகக் கொண்டிருந்தனர் இவர்கள்.
தமையனைப் பார்த்து தம்பி சுப்புரத்னமும் அதில் இணைந்து கொண்டான். இவர்கள் படித்த அரசுப் பள்ளியை இன்றளவும் இவர்கள் தான் சுத்தம் செய்து வருகின்றனர். எவரையும் எதிர்பார்ப்பது இல்லை. சில மாணவர்கள் தாங்களாய் முன்வந்து ஆர்வத்துடன் இவர்களிற்கு உதவுவர்.
கல்லூரியில் படித்த பொழுது இந்த இயக்கத்தில் இணைந்தாள் கார்த்திகா. துவக்கத்தில் நட்பு ரீதியாய் செல்வத்திற்கும் அவளிற்கும் உண்டான பழக்கம் நாளடைவில் காதலாய் உருமாறியது.
இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன், அவர்களது இயக்கத்தின் உறுப்பினர்களின் முன்னிலையில் ஐந்து ஆண்டுகளிற்கு முன்னர்த் திருமணம் செய்து கொண்டனர். இவர்களிற்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
இராஜ கோபாலன் பட்டியில் பள்ளி எதுவும் இல்லாததால், ஆண்டிப்பட்டியில் இருக்கும் ஒரு பள்ளியில் சேர்த்து, அங்கிருக்கும் தனது பிறந்தகத்திலேயே மகனை விட்டிருக்கிறாள் கார்த்திகா. வார விடுமுறை தினங்களில் தாய்த்தந்தையருடனும், வார நாட்களில் அன்னையை ஈன்ற பெற்றவர்களிடமும் இருப்பான் சிறுவன்.
செல்வம் வருமானத்திற்காக, கூலி வேலை செய்து வருகிறான். விவசாயம் முதல் சுவரிற்கு வண்ணம் பூசுவது வரை அனைத்துப் பணிகளையும் செய்வான்.
இயக்கத்தினருடன் சேர்ந்து அடிக்கடி வெளியூர் செல்வது, விவசாயிகளுக்கு ஆதரவாய் போராட்டம் செய்வது என்று இருப்பதால் அவனால் நிரந்தரமாய் ஒரு வேலையைச் செய்ய முடிவதில்லை. போராட்டங்களில் ஈடுபடுவதன் காரணமாக, அவ்வப்போது சிறைக்குச் சென்று வருவதால் அவனிற்கு வேலை கொடுப்பதற்கும் ஊரார்கள் தயங்கினர். ஆகையால் கிடைக்கும் பணியைச் செய்தான்.
கார்த்திகா அவனைப் பற்றித் தெரிந்தே மணந்து கொண்டதால், கணவனிடம் குறை என்று எதையும் உரைக்க மாட்டாள். அவளைப் பொறுத்த வரை, செல்வம் மிக மிக நிறைவானவன். இருவருமே இருப்பதைக் கொண்டு நிறைவடையும், ஒருவருக்காக ஒருவர் என்று படைக்கப்பட்ட இணைகள்.
சுப்புவுமே, தமையனின் குணத்தவன் தான். அவர்களின் தந்தை உணவகம் நடத்தி வந்தததாலோ என்னவோ, இவனிற்கு ஹோட்டல் தொழிலில் ஆர்வம் அதிகம்.
வேறு ஒருவரிடம் வேலைக்குச் சென்றால் நினைத்த பொழுது விடுப்பு எடுக்க இயலாது என்று, சொந்தமாய்த் தள்ளுவண்டி ஒன்றில் சிற்றுண்டி உணவு வகைகளை வைத்து விற்பனை செய்து வருகிறான்.
அன்னை அன்னபூரணியும் அண்ணி கார்த்திகாவும் இணைந்து இல்லத்திலேயே உணவைத் தயாரிக்க, இவன் ஆண்டிப்பட்டி வரை சென்று விற்பனை செய்துவிட்டு வருவான். கொழுந்தனிற்குத் துணையாக, கார்த்திகாவும் சென்று வருவாள்.
வேகவைத்த பாசிப்பயறு, சுண்டல், முளைகட்டிய இதர பயறு வகைகள், வேக வைத்த மரவள்ளி கிழங்கு, கருப்பட்டி பணியாரம், எள் கொழுக்கட்டை, உப்புக் கொழுக்கட்டை, சீரகக் கொழுக்கட்டை என்று முப்பது வகைச் சிற்றுண்டிகளைத் தயாரித்து விற்பனை செய்வர். பெரும்பாலும் அவர்களது இரவு நேர உணவு இதுவாகத்தான் இருக்கும்.
இல்லத்தில் மூவருமே ஓரளவுக்கு வருவானம் ஈட்டுவதால், தேவைக்கு அது போதுமானதாகவே இருந்தது. அத்தோடு உணவகம் ஒன்றை திறக்க வேண்டும் என்று தனிப்படையாய் அதற்காகப் பணத்தைச் சேமித்துக் கொண்டிருந்தான் சுப்புரத்னம்.
செல்வம் இணைந்திருந்த மிதிவண்டி இயக்கமும் இயற்கையின் மீது கொண்டிருந்த ஆர்வமும் தான், ஜோதியின் நிலத்தில் அவ்வளவு பணிகளை அவனைச் செய்ய வைத்திருந்தது. அவனோடு இணைந்து, அன்னபூரணி, கார்த்திகா, சுப்பு என்று மற்றவர்களுமே அம்மண்ணிற்காக உழைத்து இருந்தனர்.
இவை அனைத்தையும் அவர்களது பேச்சின் மூலம் அறிந்து கொண்டாள் திவ்யா. ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு நிறம். ஒவ்வொரு குணம். ஆனால் செல்வத்தின் சிறுகூட்டில் அனைவரும் ஒரே குணமாகவும் நிறமாகவும் இருந்தனர். அது அன்பும், புரிதலும் ஆகும்.
மருத்துவரிடம் பேசிவிட்டு வந்தவன், மனைவி மற்றும் அன்னையிடம் விபரத்தை உரைத்தான்.
“அடடா! இந்தப் பிள்ளைக்கு ஏன்தான் இவ்வளவு பிரச்சனை வருதோ? ஒண்ணு மாத்தி ஒண்ணுனு இப்படித்தான் ஏதாவது ஒண்ணு நடந்துகிட்டே இருக்கு!” என அன்னப்பூரணி வருத்தம் கொள்ள, “எல்லாம் சரியா போயிடும்மா. வருத்தப்படாதீங்க!” என்று ஆறுதலாய் மொழிந்தாள் கார்த்திகா.
“டாக்டர் சொன்னாருப்பா, நீ கிட்னி தர்றதுக்கு ரெடியா இருக்கனு. சின்னப்பொண்ணா இருந்தாலும், எவ்வளவு தைரியமா முடிவு எடுத்திருக்க. எப்பமா ஆப்பரேஷன்.?” எனச் செல்வம் திவ்யாவிடம் விசாரிக்க, ஜோதி மகளை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“திவி, என்னம்மா இது?” என விசாரிக்க, “சான்ஸ் இருக்குதானு டெஸ்ட் பண்ணிப் பார்த்தோம் ம்மா. மேட்ச் ஆகிடுச்சு.”
“எனக்காக, நீ ஏன் உன்னோட வாழ்க்கையை வீணாக்கிக்கிற? விசயம் தெரிஞ்சா, யாரு உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கச் சம்மதிப்பா.?”
“யாருனே தெரியாத ஒரு உறவுக்காக, இவ்வளவு வருஷம் எனக்காகவே வாழ்ந்த உன்னை, இழக்க நான் தயாரா இல்லம்மா. என்ன பெரிய கல்யாணம்? கல்யாணம் ஆன எல்லாருமே சந்தோஷமாவா இருக்காங்க? ஆனா, நான் உன்கூடக் கடைசி வரைக்கும் சந்தோஷமா இருப்பேன் ம்மா.” என்றிட, அறையில் ஒருவித ஆழ்ந்த அமைதி நிலவியது.
ஜோதி கண்களில் நீரோடு வேண்டாம் என்பதா௧ மறுத்து தலையசைத்து மகளின் கையைப் பற்ற, அவள் புன்னகை மட்டும் சிந்தினாள்.
“ஆப்பரேஷன் செஞ்சா உங்க ரெண்டு பேருக்குமே துணைக்கு ஆள் வேணும்ல? டாக்டர் எப்ப, என்ன ஏதுனு விபரம் எதுவும் சொன்னாங்களா?”
இடவலமாய்த் தலையசைத்த திவ்யா, “ஆப்பரேஷனுக்குத் தேவையான பணம் இல்ல. அதுனால என்ன செய்யிறதுனு தெரியாம முழிச்சுக்கட்டு இருக்கேன்!” என்றிட, சிந்தனையுடன் அவளைப் பார்த்தான் செல்வம்.
வெளியே வந்தவன் தனது இயக்கத்தைச் சார்ந்தவர்களிடம் விபரத்தை உரைக்க, அடுத்தச் சில நிமிடங்களில் தகுந்த மருத்துவக் கோப்பு நகல்களுடன் புலனச் செய்தியாக மாறி, அனைவருக்கும் சென்றடைந்தது விசயம்.
நல்மனம் கொண்ட மனிதர்கள் பலர் பண உதவி செய்வதற்காக முன்வர, செல்வம் தம்பிக்கு அழைப்பு விடுத்தான்.
மறுபுறம், “சொல்லு அண்ணே!”
“தெரிஞ்சவங்களோட டிரீட்மெண்டுக்குப் பணம் வேணும்டா. நீ, எவ்வளவு சேர்த்து வச்சிருக்க?”
“ரெண்டு இலட்ச ரூபா இருக்கு அண்ணே.”
“சரி, பணத்தை எடுத்துக்கிட்டு மதுரைக்கு வா!” என உரைத்தவன் மருத்துவமனையின் முகவரி மற்றும் வழித்தடத்தையும் சுப்புவிற்குக் குறுஞ்செய்தியாய் அனுப்பினான்.
ஒரு வாரத்தில் பணம் தயாராகி விட.. திவ்யாவும் ஜோதியும் மறுத்தும் கூட, பணத்தைக் கட்டி அறுவை சிகிச்சைக்கான நாளினைக் குறித்து விட்டான் செல்வம்.
தாயிற்கும் மகளிற்கும் மறுக்க வழி இல்லாமல் போனது. அன்னப்பூரணியும் கார்த்திகாவும் இருவருக்கும் துணையாய் இருக்க, நல்முறையில் ஜோதிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.
மீனாட்சி சுந்தரத்துடன் ஏற்பட்ட பழக்கத்திற்காகவும், மூத்தவரிடம் கொண்டிருந்த மரியாதைக்காகவும், அவர் கற்றுத் தந்த விவசாயத்திற்காகவும், தன்னால் இயன்ற உதவியை அவரின் மகளிற்குச் செய்து, மனதளவில் திருப்தி அடைந்திருந்தான் செல்வரத்னம்.
ஜோதியும் திவ்யாவும் இல்லம் வந்து சேர்ந்தனர். செல்வத்தின் குடும்பத்தார் தான், உடனிருந்து கவனித்துக் கொண்டனர். இரு குடும்பங்களிற்கும் இடையே ஒரு நல் உறவு உண்டாகி இருந்தது.
“முன்னாடி நிலத்துல வேலை செஞ்ச மாதிரியே, தொடர்ந்து செய்யிங்க! எனக்குக் குத்தகைப் பணம் எல்லாம் எதுவும் வேண்டாம்.” என உரைத்திருந்தாள் ஜோதி. ஆகையால், சுந்தரத்தின் மண்ணில் மீண்டும் விதைப்பு துவங்கியது.
அரை ஏக்கர் தோட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு, செங்கல் காளவாசலிற்குக் கொடுத்த அரை ஏக்கர் நிலத்தை விற்க ஏற்பாடு செய்தாள் ஜோதி. தரகரை அழைத்து வந்து இடத்தைக் காட்டி, செல்வம் தான் அதற்கும் உதவினான்.
“தேனியில இருந்து வந்து உன்னைப் பொண்ணுப் பார்த்துட்டுப் போனாங்களே.?” என்று ஒருமுறை ஜோதி மகளிடம் பேசிப் பார்க்க, “நமக்கும் அவங்களும் ஒத்து வராதுமா. அதுனால, இனிமேல் அவங்களைப் பத்திப் பேச்சு வேண்டாம்!” எனச் சதீஷைப் பற்றிய பேச்சிற்கு மட்டும் அல்ல அவனை நினைப்பதற்கும் கூட முற்றும் போட்டாள் திவ்யா.
உடல்நிலை இயல்பிற்கு மாறியதும், மீண்டும் பணிக்குச் செல்லத் துவங்கினாள். ஜோதி குத்தகைப் பணம் வேண்டாம் என்றுவிட்டதால், நிலத்தில் அறுவடை செய்வது எதுவாகினும் அதில் ஒரு பங்கை அவளிடம் கொடுப்பதை வழக்கமாய்க் கொண்டான் செல்வம்.
அனைவரது வாழ்வுமே பழைய ஓட்டத்திற்கு மாறி இருந்தது. ஜோதிக்கு, மகளின் திருமணத்தைப் பற்றிய கவலை மட்டும் தீர்ந்த பாடில்லை. தற்போதைய சுழலில், மாப்பிள்ளை பார்க்கவே அச்சமாய் இருந்தது, ‘பெண் ஒரு சிறுநீரகம் அற்றவள் என்பது தெரிந்தால், என்ன ஆகுமோ?’ என்று.
நான்கு மாதத்திற்குப் பின்னர், ஜோதியின் நிலத்தை வாங்க ஒருவர் வர, செண்ட் முப்பத்து ஆறாயிரம் என்ற விலைக்கு அதனை விற்றனர்.
பணம் கைக்கு வந்ததுமே.. வாங்கிய கடன்களை அடைத்துவிட்டு, செல்வம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் கட்டிய பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்து விட்டாள் ஜோதி.
“எதுக்கு அக்கா இது? இந்தப் பணத்தை வச்சு உங்க பொண்ணு கல்யாணத்தைச் செய்யலாம்ல?” என உரைக்க,
“இல்லாத பட்டவங்கனு நினைச்சு, நல்ல மனசோட நிறையப் பேர் பண உதவி செய்யிறாங்க. அன்னைக்கு நிலைமைக்கு நான் அப்படித்தான் இருந்தேன். ஆனா, இப்ப அப்படி இல்லேல? ஒண்ணு இந்தக் காசை, அவங்கக்கிட்டயே திருப்பிக் கொடுத்துடு. இல்லேனா என்னை மாதிரி சிரமப் படுறவங்களுக்கு இதைக் கொடுத்து உதவு!” என்று செல்வத்திடம் சொன்னாள் ஜோதி.
தை இரண்டாம் நாள். மாட்டுப் பொங்கல் தினத்தன்று, பாப்பாத்தி அம்மனுக்குக் கோலாகலமாய் விழா நடந்தது.
வேண்டிக் கொண்டதைப் போலவே பொங்கல் வைத்து, கலவை உணவைத் தயாரித்து, இறை வழிபாட்டிற்கு வந்திருந்த அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தாள் ஜோதி. முன்பு போல் இல்லாமல், ஊரிற்கு அடிக்கடி வந்து சென்றாள். வரும் பொழுதெல்லாம் அவள் தங்குவது செல்வத்தின் இல்லத்தில் தான்.
உடன்பிறந்த உறவுகளை விட உதவிக்கரம் நீட்டியவர்கள் நெருங்கிய உறவுகளாய் மாறிப் போயினர்.
மதுரை ஆண்டிப்பட்டி பிரதான சாலையில் இராஜ கோபாலன் பட்டிக்குச் செல்வதற்காகப் பிரிந்து செல்லும் பாதைக்கு நேராய், தனது விருப்பப்படியே உணவகம் ஒன்றை துவங்குவதாய் இருந்தான் சுப்புரத்னம். அதற்காக அனைவரையும் அழைத்திருந்தான்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால், அன்று அன்னையோடு திவ்யாவும் விழாவிற்கு வந்திருந்தாள்.
அனைவருக்கும், தனது அன்னை தயாரித்த சிற்றுண்டி வகைகளை உண்ணக் கொடுத்தான். திவ்யாவிடம் வந்து தட்டைக் கொடுக்கும் பொழுது, ‘கங்கிராட்ஸ்’ எனக் கையை நீட்டினாள் அவள். அவனும் கைப்பற்றிக் குலுக்கி, ‘தேங்க்ஸ்’ என்றுவிட்டு நகர்ந்தான்.
அதனைப் பார்த்திருந்த ஜோதிக்கு திடீரென அந்த எண்ணம் தோன்ற, மகளின் அருகே வந்து அழைத்தாள்.
‘என்னம்மா?’ என்றிட, “ஏன் திவிமா, செல்வத்தோட தம்பியைக் கட்டிக்கிறியா.?”
திகைப்புடன் அன்னையைப் பார்த்தவள், “அம்மா, என்ன இது? நீ பாட்டுக்கு, கண்டதையும் கற்பனை பண்ணிக்கிட்டு இருக்காத!” என்றுவிட்டு நகர்ந்தாள்.
என்னதான் மகள் சொல்லிவிட்டு சென்றாலும், ஜோதியால் அந்தச் சிந்தனையில் இருந்து வெளிவர இயலவில்லை.
விழா முடிந்ததும் ஒவ்வொருவராய் கிளம்பிச் செல்ல, திருமண விஷயத்தைப் பற்றி அன்னப்பூரணியிடமே நேரடியாய் பேசினாள். அவருக்குமே அது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
“அம்மா.. நீங்க எங்க? நாங்க எங்க? உங்க பொண்ணை எப்படி.?”
“யாரும் இல்லாம தவிச்சப்ப, நீங்களும் உங்க பிள்ளைகளும் தான்மா வந்தீங்க. அது கடைசி வரைக்கும் தொடரணும்னு நினைக்கிறேன். யாரோ முன்னபின்ன தெரியாதவங்கக்கிட்ட என் பொண்ணைக் கொடுக்கிறதுக்கு, நல்லா தெரிஞ்ச உங்கக்கிட்ட கொடுக்கலாம்னு தான். அவளை, நல்லா பார்த்துப்பீங்க இல்ல? ஒருவேளை இந்தக் கிட்னி விசயத்தால உங்களுக்குத் தயக்கம் இருந்தா, வெளிப்படையாவே சொல்லுங்க. பரவாயில்ல!” என்றாள் ஜோதி.
அவளின் சொற்களால், அன்னப்பூரணிக்குள் ஒருவித வலி உண்டானது.
நல்லப்பெண் தான் திவ்யா. பொறுப்பு, பொறுமை, அன்பு, அக்கறை, குணம் என அனைத்தும் நிறைந்தவள். ஆனாலும் முடிவை அவரால் மட்டுமே எடுக்க இயலாதே? மற்றவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஒரு பெருமூச்சை வெளியிட்டவர் மூத்த மகனை அழைத்து விசயத்தை உரைக்க, அவனிற்குமே அதே அதிர்ச்சிதான். இருந்தும் தம்பியை அழைத்துப் பேசினான்.
குடும்பத்தாரை ஒருமுறை ஆழ்ந்து பார்த்த சுப்பு, ‘உங்க எல்லாருக்கும் ஓகேனா, எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல!’ என்று தனது முடிவை உரைத்தான்.
ஜோதியிடம் அன்னப்பூரணி சம்மதம் சொல்லிவிட, மகளிடம் பேசுவதற்காகச் சென்றாள் அவள்.
“திவிமா..”
“திரும்பவும், கல்யாண விசயத்தைப் பேசாத. அவ்வளவு தான், சொல்லிட்டேன்.”
“அந்தப் பையனை இன்னும் நினைச்சுக்கிட்டு இருக்கியா?”
அதிர்ச்சியுடன் அன்னையின் புறம் திரும்பியவள், “என்னம்மா இப்படிக் கேட்கிற?”
“எனக்குத் தெரியும், உனக்கு அவனைப் பிடிச்சிருந்துச்சு! ரெண்டு பேரும் ஃபோன்ல எல்லாம் பேசிக்கிட்டீங்க. ஆனா, ஏதோ காரணத்தால நான் கேட்டப்ப வேணாம்னு சொல்லிட்ட. அதுக்காக, உன்னை அப்படியே விட முடியுமா?”
“நான் பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்மா. ஆமா, பிடிச்சிருந்துச்சு. ஆசைப் பட்டேன். ஆனா இப்ப அந்த மாதிரி, எந்த நினைப்பும் எனக்கு இல்ல.”
“அது, எனக்கும் தெரியும். அதுனால தான் கல்யாண பேச்சையே ஆரம்பிச்சேன். நல்ல பையன் திவி. குணமும் தான். குடும்பத்தைப் பத்தி சொல்லவா வேணும்? உன்னை நல்லபடியா பார்த்துப்பாங்க முத்தம்மா. அம்மாவுக்காக.?”
மற்ற அனைத்தையும் காட்டிலும், ‘அம்மாவுக்காக’ என்ற சொல் அவளுள் ஒருவித தவிப்பை உண்டாக்க, “சரிம்மா, உனக்காகக் கல்யாணம் செஞ்சுக்கிறேன்!” என்று தனது சம்மதத்தைத் தெரிவித்தாள்.
பெரியவர்கள் பேசி நிச்சயித்த உறவாய், திவ்யா மற்றும் சுப்புரத்னத்தின் திருமணம் எளிமையாய் நடந்து முடிந்தது.
இருவருமே எதார்த்தம் அறிந்தவர்கள் என்பதால், கணவன் மனைவி உறவுக்குள் வலுக்கட்டாயமாய்த் தங்களைத் திணிக்காது இயல்பாகவே கையாண்டனர்.
அன்னப்பூரணி நகையோ பணமோ எதுவும் தங்களிற்கு வேண்டாம் என உரைத்து விட, பெண்ணிற்குச் சீராய், தனது தந்தையின் மண்ணை அளித்தாள் ஜோதி. திவ்யாவின் பெயரில் அதை மாற்றி எழுதிக் கொடுத்து விட்டாள்.
செல்வத்தின் குடும்பத்தார் இருந்தது சிறியவீடு என்பதால், புதுமணத் தம்பதியருக்கு அருகிலேயே தனியாய் ஒரு வீடு பார்த்துக் குடி வைத்தனர் பெரியவர்கள்.
முதலில் நட்பில் துவங்கி, பின் மெல்ல மெல்ல ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயன்றனர். சுப்புவின் உணவக தொழிலிற்கு, அன்னப்பூரணி மற்றும் கார்த்திகாவுடன் இணைந்து தன்னால் ஆன உதவிகளையும் செய்தால் திவ்யா. முன்பு பணி செய்ததால், இல்லத்தில் அமர்ந்திருக்க இயலாது, கணவனுடன் உணவகத்திற்குச் சென்று வர துவங்கினாள்.
மனைவியைக் கல்லாவில் அமர வைத்த சுப்பு, அதைப் பற்றிய கவலையை விடுத்து, மற்ற பணிகளைக் கவனிக்கச் சென்றான்.
நாள்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன. திருமணமான இரண்டு வாரங்களில், கிராமிய மிதிவண்டி இயக்கத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட, ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்திற்குச் செல்வமும் சுப்புவும் கிளம்பினர்.
மாமியாரையும் மகனையும் அத்தோடு நிலத்தையும் கவனிக்க வேண்டும் என்பதால், கார்த்திகா அவர்களோடு செல்லாது ஊரிலேயே இருந்து கொண்டாள்.
வீட்டுப் பெண்கள் தனித்தனியாய் இருக்க வேண்டாம் என்று, “நீ துணியை எடுத்துட்டு நம்ம வீட்டுக்கு வந்துடுப்பா. எல்லாரும் சேர்ந்தே இருங்க!” எனச் சொல்லிச் சென்றிருந்தான் செல்வம்.
பெண்கள் ஒன்றாய் இணைந்து விட்டால், பேச்சு இல்லாமலா.? தனது மகன்களின் சிறுவயது குறும்பு முதல், திருமணத்திற்கு முன்பு தோட்டத்தின் கிணற்றில் குதித்து மீன் பிடித்தது வரை அனைத்தையும் கதை கதையாக உரைத்தார் அன்னப்பூரணி. தான் அறிந்த வித்தியாசமான உணவு வகைகளை எல்லாம், இரு மருமகள்களிற்கும் கற்றுக் கொடுத்தார். அதனால் மூவருக்கும் இடையே, மேலும் நெருக்கம் அதிகரித்தது.
காலையும் இரவிலும் நேரம் தவறாது மனைவிக்கு அழைத்துப் பேசும் தமையனைக் கண்ட சுப்பு, தானும் அதையே பின்பற்றத் துவங்கினான்.
காலையில் ஊரில் இருந்து இயக்கத்தினருடன் கிளம்பி வந்தவன், இரவு பத்து மணியைப் போல் மனைவிக்கு அழைத்தான்.
மாமியாருக்கும் குடும்பத்தின் மூத்த மருமகளிற்கும் இடையே படுத்திருந்த திவ்யாவின் கைப்பேசி அதிர, அதனை எடுத்துப் பார்த்தாள்.
திரும்பிப் படுத்த கார்த்திகா, “என்ன, கொழுந்தனார் காலிங்கா.? போ.. போயி பேசிட்டு வா.” என்று சமையல் அறையின் புறம் அவளை அனுப்பி வைத்தாள்.
மெல்லிய சிரிப்புடன் எழுந்து சென்றவள் தொடர்பை இணைத்து, “ஹலோ..” என்றிட,
மறுபுறம் இருந்தவன், “எதுக்கு இப்படி ஹஸ்கி வாய்ஸ்ல பேசுற?” என்று சிரித்தான்.
“ஏன், இன்னும் கொஞ்சம் லேட்டா கால் பண்ண வேண்டியது தான? எல்லாரும் படுத்திருக்கும் போது வேற எப்படிப் பேசுறதாம்.?”
“சரிதான். நான் இப்பதான் ஃபிரீ ஆனான். அதான்.”
“ம்ம்..”
“சாப்பிட்டியா திவி..?”
“சாப்பிட்டேன், நீங்க?”
“இப்பதான்!”
அருகிலேயே இருந்த பொழுது தொடர்ந்த வேலைகளினால், இருவரும் சரியாய் பேசக்கூட இல்லை. ஆகையால் தற்போது, ஏதேதோ நிறையப் பேசிக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள இயலாத பொழுது, தொலை தூர உறவில் அனைத்தையும் பேசிப் பேசித்தானே பகிர வேண்டிய உள்ளது.
“படுத்துட்டீங்களா.?” என, என்ன பேசுவது என்று புரியாது அவன் வினா எழுப்ப, “இல்ல. நான் மட்டும் எந்திரிச்சு வந்து உட்கார்ந்து இருக்கேன்!” என்று சின்னதாய்ச் சிரித்தாள்.
“இன்னைக்கு டே எப்படிப் போச்சு.?”
“சொல்லிக்கிறது மாதிரி எதுவும் இல்ல. அக்காவும் அத்தையும் கூட வந்து ஹோட்டலைப் பார்த்துக்கிட்டாங்க.”
“ம்ம்.. தேங்க்ஸ். நான் வந்ததுக்குப் பின்னாடியும் நீ போயி கடையைக் கவனுச்சுக்கிற.”
மெலிதாய்ச் சிரித்தவள், “சரி, வச்சிடட்டுமா?”
“ஏன்?”
“டைமாச்சு. தூங்கணும்ல?”
“சரி, தூங்கு. குட்நைட்” என்றவன் இணைப்பைத் துண்டித்து விட, திவ்யாவும் எழுந்து வந்த படுக்கையில் விழுந்தாள்.
முதல் நாள் ஐந்து நிமிடங்களாய் இருந்த அவர்களின் உரையாடல், பத்து நாட்களில் ஒருமணி நேரத்தை எட்டி இருந்தது. காலையில் எழுவது முதல் உடுத்தும் உடை வரை அனைத்தையும் பரிமாறிக் கொண்டனர். இந்த இடைவெளி அவர்களுக்கு இடையேயான மன நெருக்கத்தை அதிகப்படுத்தி இருந்தது. இருவருமே திகட்டத் திகட்டப் பேசினர்.
இருபது நாள்கள் கடந்து, சகோதரர்கள் இருவரும் இல்லம் வந்து சேர்ந்தனர். இல்லத்தவர்கள் ஊரிற்கு நடுவே இருந்த காளியம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர்.
கைப்பேசியில் விசாரித்துக் கொண்டு, செல்வமும் சுப்புவும் பின்னோடு கோவிலிற்கு வந்து சேர்ந்தனர்.
இருபது நாள் கழித்துக் காண்பதால், திவ்யாவிற்கும் அவனுக்கும் ஒருவித எதிர்பார்ப்பு கலந்த அவஸ்தை இருந்தது. அதை பார்வையாலேயே மட்டும் பரிமாறிக் கொண்டனர்.
இரு மகன்களின் பயணத்தைப் பற்றியும் விசாரித்தபடி அன்னப்பூரணி நடக்க, இளையவர்கள் பின்தொடர்ந்து சென்றனர். பத்து நிமிடங்களில் தோட்டம் வந்துவிட, “சுப்பு மோட்டாரைப் போடு, இன்னைக்குத் தண்ணிக்கு நம்ம முறை!” என்றுவிட்டுச் செல்வம் முன்னால் செல்ல, அவனிற்கு உதவிட மற்றவர்களும் நிலத்திற்கு உள்ளே இறங்கினர்.
முற்றும்
யாருக்கு கொடுத்து வைச்சிருக்கோ அவங்க கைக்குத்தான் போய் சேருமாம் பூர்வீக சொத்து, நிலம், காற்று, மண் எல்லாமே..!
ரொம்ப ரொம்ப நன்றி மா..❤️❤️❤️
அருமை அருமை….
காதம்பரி லோகு போன்றோரும் நம்மோடு தான் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போதே வலிக்கிறது…. அன்பு பாசம் இவற்றை விட பணமே பிரதானமாய் மாறுவதை நினைத்தால் வருத்தமாக உள்ளது….
அதே சமயம் செல்வம் குடும்பத்தாரை போலவும் மனிதர்கள் இருப்பதாலையே மனிதம் வாழ்கிறது…
காதம்பரி லோகு போல் நம் உறவினர்கள் இல்லை என்று நிம்மதியாக உள்ளது..
இது போன்ற நல்ல கதையை தந்ததற்கு நன்றி….
நிறைவான கருத்துப் பகிர்வு. ரொம்ப ரொம்ப நன்றி மா..💕💕💕
நந்தினி சுகுமாரனின் தந்தை மண் எனது பார்வையில். ஜோதி கணவனை இழந்த பெண் தன் ஒற்றை பெண்ணுடன் வாழ்ந்து வரும் அவளுக்கு அவள் அப்பா கொடுத்த நிலம் வாழ்க்கையின் நிதர்சனம் மற்றும் உறவுகளின் உண்மைத் தன்மையை உணர்த்துகிறது. நிலத்தை ஏமாற்ற நினைக்கும் உறவுகள் இடையே இயற்கையை மதிக்கும் மனிதர்களின் உதவியால் வாழ்வின் அடுத்த கட்டத்தை அமைதியாக பயணிக்கும் நிதர்சனக் கதை. நன்றாக இருக்கிறது மா.
நிறைவான விமர்சனம். ரொம்ப ரொம்ப நன்றி மா..
Really super story sis👏👏