உணர்வுடன் இயைந்த பயணம்
பொதுவாக நாம் வீட்டை விட்டு வெளியே போவது என்பது, முதல் காரணம் அக்கம் பக்கம் கடைகளில் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விலைக்கு வாங்கி வருவதற்காக தான்.
இரண்டாவது, நம் சொந்த பந்தகளின் வட்டத்தில் கல்யாணம், காது குத்து மொட்டை சடங்கு போன்ற சுபகாரியங்களுக்கும் இறப்பு போன்ற துக்க நிகழ்வுகளுக்குமானதாக இருக்கும்.
அடுத்த கட்டமாக நம் ஊரில் நடக்கும் தேர் திருவிழாவிற்கானதாக இருக்கும். குறைந்தது பத்து நாட்களுக்கு வெளியே தெருவிலே ஏகக் கொண்டாட்டமாக இருக்கும்.
வேண்டுதல்கள், காணிக்கை செலுத்துதல், பரிகார பூஜை என்று ஆன்மீகம் சார்ந்ததாகவும் சில நேரங்களில் நாம் பிரயாணிப்பது உண்டு.
குடும்பத்துடன் விடுமுறையை ஓய்வாக கழிப்பதற்கு சுற்றுலா செல்வதும் உண்டு.
நாலு இடங்களுக்கு போக வேண்டும். நான்கு விஷயங்களைப் பார்க்க வேண்டும். நான்கு விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணி பயணம் மேற்கொள்வது ஒன்று உண்டு.
இத்தகைய பயணம் என்பது வீட்டுக் கவலையற்ற, நல்ல பொருளாதார நிலை, நல்ல உடல் நலம் என்பதை பொறுத்தே மேற்கொள்ளக் கூடிய ஒன்று. எல்லோருக்குமே பிடித்தமான ஒன்று. ஆனால் எல்லோருக்கும் அதுப் போல போவதற்கு இயல்வதில்லை. மனதிற்குள் அதற்கான சிறு ஏக்கம் இருந்து கொண்டேதானிருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக சிலருக்கு சில நேரங்களில் இத்தகைய சந்தர்ப்பங்கள் வாய்ப்பதுண்டு. அதைப் போல எனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.
எங்கேயோ போவதற்கு கிளம்பி, எங்கே போவது என தெரியாமல், எதையோ பார்த்து,
எதையெதையோ செய்து என்று ஒரு அதிரி புதிரியான ஒரு பயணமாக இருந்து விடக் கூடாது. மனசிற்கு நிறைவைக் கொடுக்கக் கூடியதாக. வாழ்நாள் காலமெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளத் தகுதியான, அடுத்தவருக்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி கொள்ளக் கூடிய வகையில் இருக்கக் கூடிய ஒரு பயணத்தை திட்டமிடுதல் வேண்டும்.
அதனால், நம் பயணத்தை எங்கே தொடங்குவது என்பதை விட எதன் அடிப்படையில் தொடங்குவது என்று தீர்மானித்துக் கொள்ளுதல் நலம். நானும் அதைப் போல தீர்மானித்தேன். பண்டைய தமிழகத்தின் வளமை மிக்க சரித்திரத்தைப் பின்புலமாக கொண்ட அமர காவியமான கல்கியின் பொன்னியின் செல்வனே அன்றி எது நம்மை மனம் நிறைய வைக்கும்? வந்தியத்தேவனின் பாதையில் மட்டுமன்றி சோழனின் சரித்திரம் சொல்லும் இடங்களையும் பயணித்தேன். என்னுடன் என் கணவரும் அவர் சகோதரியும் என் தோழியுமானவளும் உடன் வந்தார்கள்.
சிதம்பரம் மேலக்கடம்பூர், கீழக்கடம்பூர், திருப்புறம்பயம் சாட்சிநாதர் கோயில், பிரதீபவியின் பள்ளிப்படை கோயில் என வந்தியத்தேவனுடனும் ஆழ்வார்க்கடியானுடனும் பயணித்து தாராசுரம் பழையாறை திருசக்திமுற்றம், பட்டீஸ்வரம் கோபிநாத பெருமாள் கோயில் மேற்றளி எனப்படும் கைலாசநாதர் கோயில், பிரும்ம நந்தீஸ்வரர் கோயில் வடதளி எனப்படும் தர்மபுரீஸ்வரர் கோயில் தென்தளி எனப்படும் பரசுநாதசாமி கோயில், கீழ்தளி எனப்படும் சோமேஸ்வரர் கோயில் கும்பகோணம் அரசலாற்ரங்கரை, என குந்தவையுடனும் வானதியுடனும் உரையாடி விட்டு நந்திபுர விண்ணகரத்தில் செம்பியன் மாதேவியாரை, ஆழ்வார்க்கடியானுடன் நானும் தரிசித்து விட்டு ராஜராஜனின் பள்ளிப்படை கோயிலில் கண் கலங்க நின்று விட்டு, பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலில் ராஜேந்திர சோழனுடன் வணங்கி விட்டு திருவையாறில் வந்தியத்தேவனுடன் நானும் நந்தினியை கண்டு மலைத்துப் போய் நின்று விட்டு நாகப்பட்டினத்தில் ராஜாராஜா சோழன் தங்கியிருந்த புத்த விகாரை பார்த்து விட்டு, கோடியக்கரையில் குழகர் கோயிலில் திருவிடங்கரை கண்டு வணக்கம் சொல்லி விட்டு பூங்குழலியிடம் என்னையும் இலங்கைக்கு படகில் கொண்டு போக வேண்டிக் கொண்டால் விசா இல்லாமல் அங்கே போக முடியாதே என்று அவள் கை விரிக்க, அன்று வந்தியத்தேவனைக் கொண்டு சென்றாயே என்று கேட்டதற்கு அன்று நான் இந்த பரந்து பட்ட சோழ சாம்ராஜ்யத்தின் மகாராணி ஆச்சுதே என்று பொய்க் கோபம் காட்டிட, வேதாரண்யம் திருவாஞ்சியம் நாச்சியார்கோயில் பூம்புகார் தரங்கம்பாடி திருக்கடையூர் திருநள்ளாறு ஒப்பிலியப்பன் என நான்கு நாட்கள் முடிந்து தஞ்சையை நோக்கிக் கிளம்பினேன்.
போகும் வழியில் திருப்புறம்பயம் என்னும் ஊரில் பொன்னியின் செல்வனில் வரும் கங்க மன்னன் பிரதீபவியின் பள்ளிப்படைக் கோயிலையும் சாட்சிநாதர் கோயிலையும் பார்த்து விட்டு தஞ்சை செல்லலாம் என முடிவெடுத்து அந்த கிராமத்து சாலையில் வண்டியை திருப்பினோம்.
நாங்கள் போன போது மாலை மணி ஐந்தரை. சாதாரண கிராமத்து மண்சாலை. சாலையின் இருபுறமும் பச்சைபசேல் என்று விளைந்து நிற்கும் நெற்பயிர்கள். பாலைப் பிடித்திருந்த நெற்கதிரின் வாசமும், கிராமத்து மண்சாலையில் தூறல் விழுந்ததினால் உண்டான மண் வாசமும், சாணி வாசம், ஆட்டாம்புழுக்கை வாசனை என்று மொத்தமும் கிராமத்தின் மண் வாசனை காற்றில் பரவியிருந்தது. மூக்கை விரித்து காற்றை இழுத்து நெஞ்சை நிரப்பிக் கொண்டேன். அப்பா..! மாசு மருவில்லாத காற்று. மாலையும் இரவும் சந்திக்கப் போகும் அந்திப் பொழுது. இளம் வெளிச்சம். பகலெல்லாம் இரையெடுக்க சென்றிருந்த பறவைகள் திரும்ப தங்கள் இடத்திற்கு வந்து அடையும் கண் கொள்ளாக் காட்சி. பட்சிகளின் ஒலி அந்த அமைதியான பிரதேசத்தில் மிகுந்த சப்தமாகவே ஒலித்தது.
தஞ்சையில் தளிக்குளத்தார் கோயில், இன்று வடபத்ரகாளியம்மன் கோயில் என்னும் பெயரில் இருக்கும் நிசுபசூதனி கோயில், எல்லாவற்றுக்கும் மேலாக வானை இடித்து கீழே தள்ளி விடுமோ என பிரமிக்க வைக்கும் பெருவுடையார் கோயிலை காண வேண்டி தஞ்சை பயணமானேன்.
நான் இந்த பயணத்தை மேற்கொண்டது டிசம்பர் மாதத்தின் இறுதியில் நல்ல மழை பொழிந்து காவேரி ஆற்றிலும் மண்ணார்றிலும், காவேரியின் உபநதிகளிலும் வாய்க்கால்களிலும் தண்ணீர் கரை தொட்டு ஓடிக் கொண்டிருந்தது. காற்றும் மண்ணின் ஈரபதத்தையும், பாலைப் பிடித்த நெற்கதிர்களின் மற்றும் கிராமத்து சாணி வாசனையும் கொண்டு நெஞ்சை நிரப்பியது.
ஜன்னலோரம் அமர்ந்திருந்த நான் வெளியே பச்சை பசேலென்ற நெற்வயல்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தேன். இது நான் பிறந்த ஜில்லா. என் மண். நெஞ்சை நிரப்பிய உணர்வுகளின் ஊடே ஏதேதோ பழைய நினைவுகள் என்னை நிரப்பியது. அருமையான சிறு பிராயம். எத்தனை கற்றுக் கொண்டிருக்கிறேன்.யாரிடமெல்லாம் கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த ஆறும் மண்ணும் வயலும் காற்றும் கரையும் பனையும் எத்தத்தனை விஷயங்களை வாழ்க்கைப் பாடங்களை அனுபவங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறது.
சொல்லிக் கொடுத்தவர்களில் முக்கியமானவர் யார்?
தஞ்சை பிரகாஷ் என்று இலக்கிய உலகம் இன்றும் கொண்டாடும் ஒரு மாமனிதர்.
அவருக்கும் எனக்குமான உறவு என்பது தந்தைக்கும் மகளுக்குமான ஒரு உணர்வு.
இந்த உணர்வு எங்கே எப்போது தொடங்கியது என்றதில் என் நினைவுகள் பின்னோக்கி போக ஜன்னல் வழியே சாலை முன்னோக்கி போய்க் கொண்டிருந்தது.
இது என் உணர்வுகளுடன் இயைந்த பயணம். என் வாழ்க்கை முழுமைக்குமான ஒரு பயணம்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்தி என்பத்தி ஒன்று ஏப்ரல் மாதம் திருமதி. மங்கையர்க்கரசி பிரகாஷ் அவர்களுடன் என் உயிர்தோழி ஹெலன் பெர்னாண்டஸ் பணியில் சேர்ந்தாள். அவளால் எனக்கும் திருமதி. மங்கை பிரகாஷ் அறிமுகமாகி பின்பு அவர்கள் கணவர் திரு. தஞ்சை பிரகாஷ் அறிமுகமானார்கள். அவர்களை நாங்கள் பாவா என்று தான் அழைப்போம்.
தஞ்சாவூர் எல்லையம்மன் கோயிலில் அவர்கள் வீட்டிற்கு ஹெலன் வசந்தா மற்றும் நான் மூவரும் அடிக்கடிப் போவது வழக்கம். கண்டிப்பாக எல்லா ஞாயிறுகளிலும். மேல் மாடியில் கிட்டத்தட்ட ஒரு வாசகசாலை வைக்குமளவிற்கு அதாவது இருவத்தி ஐந்தாயிரம் புத்தகங்களுக்கும் மேல் வரிசை கிரமமாக மர அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதில் வங்க, மலையாள புகழ் பெற்ற எழுத்தாளர்களின் மொழிப் பெயர்ப்பு நூல்களும் அடக்கம். எத்தனை விதமான புத்தகங்கள். எத்தனை எத்தனை தலைப்புகளில். பழங்கால புத்தகங்கள் என சிறியதும் பெரியதுமாக. இன்றும் மனதிலிருந்து விலகாத காட்சி அது. அந்த புத்தகங்களின் மணம் இன்னும் என் நாசியில் மணக்கிறது.
புத்தகங்கள் மட்டுமன்றி சமையலிலும் அவருக்கு அசாத்திய பாண்டித்தியம் உண்டு. ரகரகமான கேக்குகள், பேக்கரி உணவு வகைகள் எல்லாமே அத்துப்படி. ஞாயிறுக்கிழமைகளில் நல்ல மதிய உணவுடன் இதைப் போன்ற விசேஷ தின்பண்டங்கள் அவரின் கை வண்ணத்தில் எத்தனை நாட்கள் எங்கள் நாவில் சுவைத்திருக்கிறது.
கதை சொல்லிகள் என்ற ஒரு கூட்டம் தஞ்சைக் கோயிலின் அருகில் இவர் தலைமையில் நடக்கும். அதில் சொல்லப்பட்ட கதைகளின் சுவையை விட அக்கா செய்து அனுப்பும் சுண்டலின் சுவை அதிகமோ அதிகம். உண்டவர் விண்டதில்லை. விண்டவர் உண்டதில்லை.
தஞ்சையின் என்சைக்கிலோபிடியா தஞ்சை பிரகாஷ் என்று ஒரு கட்டுரை கல்கியில் பிரதானக் கட்டுரையாக வந்தது. வருடம் எனக்கு ஞாபகம் இல்லை. நாற்பது வருடங்களுக்கு முன்பு தஞ்சை பெரிய அளவிலான கிராமமாகத்தானிருந்தது. தஞ்சையின் ஒவ்வொரு வீதியைப் பற்றியும், அதில் இருக்கும் சிறு சிறு கோயில்கள் பற்றியும் விளக்கமாக சொல்வார். தஞ்சை பெரிய கோயிலில் நாம் இன்று கண்டதாக சொல்லும் தொப்பி வைத்த அந்நிய நாட்டினன், மற்றும் கோபுரத்தில் இருக்கும் கோபியர் சேலைகள் திருடிய கண்ணன் மரத்தின் மீது அமர்ந்திருப்பது போன்ற சிலைகளைப் பற்றியும் ஒவ்வொரு எழுத்துக்களையும் ஒவ்வொரு செங்கலையும் பற்றி விளக்கியது இன்னும் என் நினைவில் இருக்கிறது. தஞ்சையிலிருந்து வந்த இலக்கியவாதிகள் திருமிகு. பாலகுமாரன் உட்பட இவருடைய புத்தகசாலையில் இருந்த புத்தகங்களைப் படித்தும் இவருடன் விவாதித்தும் தான் தஞ்சையைக் கடந்திருப்பார்கள் என்பது நிச்சயமான உண்மை.
முதலில் அவர் ஒரு எழுத்தாளர் என்று விஷயம் எனக்கு தெரியாது. சாதரணமாக ஒரு கடை வைத்துக் கொண்டிருப்பவர் என்ற அளவிலான வகையில் தான் எனக்கு அவர் அறிமுகம். அவருடன் பழகவும் அவருடைய மொழிப்பெயர்ப்பு நூல்களையும் அவருடைய எழுத்துக்களையும் படிக்கவும் நேரிட்ட போது தான் அவர் எத்தகைய சிந்தனையாளர் என்று புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் தான் ஏகலைவனைப் போல அவரிடமிருந்து எப்படி சிந்திப்பது என்பதை கற்றுக் கொண்டேன். ஆமாம். உண்மையான நேர்மையான சிந்தனைகளையும் அதை எவ்வாறு சுவைப்பட பேசுவதையும் எழுதுவதையும் திறம்பட கற்றுக் கொண்டேன். இன்று நானும் ஒரு எழுத்தாளர் என்று அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக.
நல்லதொரு படைப்பு விரிவான விவாதத்திற்கு இடம் கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதை விவாதிப்பதற்கு நல்ல இலக்கிய ரசனை கொண்ட நண்பர்கள் வட்டம் இருக்க வேண்டும். அப்படி அமைந்து விட்டால், அத்தகைய விவாதங்கள் நமக்குள் நல்ல சிந்தனையை வளர்க்கும். அந்த சிந்தனையானது படித்த புத்தகத்தின் தாக்கத்தை நம்மில் பெரிய மாறுதலை உருவாக்கும். சிந்தனையிலும் எண்ணங்களிலும் உண்டாகும் மாற்றம் புதிய சிந்தனைகளை நமக்குள் தோற்றுவிக்கும். அதை நயம்பட இயம்பிட இயலும். எனக்கு என்னுடைய வளர்பருவத்தில் என் ஆசான் தஞ்சை பிரகாஷின் அன்பு கிடைத்தது பெரிய பொக்கிஷமான விஷயம். எத்தனை திரைப்படங்களைப் பார்த்து எத்தனை கதைப் புத்தகங்களை படித்து எத்தனை திரை இசைகளைக் கேட்டு எங்களுக்குள் எத்தனை தர்க்கம் செய்திருப்போம். அவைகள் இன்றும் எனக்கு ஒரு விஷயத்தை அதன் அடி ஆழம் வரை சென்று அந்த விஷயத்தின் கருப்பொருளின் மெய்ப்பொருளை அறியவும் அதை மென்மேலும் சிந்திக்கும் போக்கையும் கொடுத்திருக்கிறது.
தஞ்சை பிரகாஷ் என்ற பெயர் தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை நீடித்திருக்கும். அவருடன் நட்பு கொண்ட இலக்கியவாதிகளின் நினைவு இருக்கும் வரை அவர் இருப்பார் நிரந்தரமாக.
ஒருநாள் சென்னையில் என் வீட்டிற்கு பாவாவும் அக்காவும் வந்திருந்தார்கள். பேருந்தில் பாவாவின் கைப்பையை எவனோ பிக்பாக்கெட் அடிப்பவன் பிளேடால் கிழித்திருக்கிறான். அதிலிருந்து ஒன்றையும் அவனால் எடுக்க முடியவில்லை. வீட்டிற்கு வந்தவர் தன்னுடைய கைப்பையை காட்டினார். கைப்பையின் அடிப்பாகம் கிழிப்பட்டிருந்தது. எதையாவது எடுத்திருக்கிறானா என்று பாருங்கள் என்றோம். பாவா மேஜையின் மீது பையைக் கவிழ்த்தார்கள். அதில் சில பேனாக்கள் ஊசி நூல் பிளேட் கத்தி இவைகளுடன் ஒரு சுத்தியும் இருந்தது. “இதெல்லாம் எதற்கு?” என்று பாவாவிடம் கேட்டதற்கு “எதற்கும் இருக்கட்டும் என்று வைத்திருக்கிறேன்” என்றார். அதற்கு அக்காவோ, “அந்த திருடன் நினைத்திருப்பான். நான் வெறும் பிளேட் தான் வைத்திருக்கிறேன். இந்த ஆளோ கத்தியும் சுத்தியும் வைத்திருக்கிறான். இவன் நம்மை விட பெரிய திருடனாக இருப்பான் போலும்” என்று. நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். அக்காவிற்கும் பாவாவிற்கும் இடையிலான காதலும் அன்னியோன்னியமும் இளம் பெண்களுக்கு ஒரு வாழ்க்கை வழிகாட்டி என்றால் அது மிகையல்ல.
பாவா அவர்கள் உடல் நோய்வாய்ப்பட்டு அமைந்தகரையில் உள்ள தனியார் இயற்கை வைத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அவருடன் அதே அறையில் இருந்த ஏனைய நோயாளிகள் இந்த ஒரு வாரமாக அவரிடம் கதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள். இவர் தான் மிகச் சிறந்த் கதை சொல்லியாயிற்றே. கேட்கவா வேண்டும். இந்த ஒரு வார காலத்தில் அவருடன் அன்னியோனியமாக பழகி விட்டிருந்தனர்.அவரைப் பார்க்க போயிருந்தேன். தேகம் மெலிந்திருந்தாலும் அதில் இருந்த நிமிர்வு இருக்கிறதே. அடடா. பாரதியாரே நீர் எங்கேயும் போய் விடவில்லை அய்யா! அதே அறிவு சுடர் விடும் பளிச்சென்ற கண்கள். வாய் நிறைய சிரிப்பு. என்னைக் கண்டதும் முகம் மலர்ந்த மலர்ச்சி. எனக்கோ அவரை அப்படிக் காண இயலவில்லை. அப்படியே அவர் மேல் சாய்ந்து கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதேன்.
அவருடன் அந்த அறையில் இருந்த மற்ற நோயாளிகள் என்னைக் காட்டி அவரிடம் கேட்டார்கள். “‘உங்கள் மகளா என்று?” நான் அழுகையுடன் அவரை நிமிர்ந்து பார்த்தேன். அவர் வாஞ்சையுடன் என்னைப் பார்த்து புன்னகைத்து என் தலையை தொட்டு ஆசீர்வதிப்பதைப் போல் அன்புடன் தடவி சொன்னார்.”ஆமாம். இது என் மகளைப் போல” என்று.
படிக்காத மேதைப் படத்தில் எங்கிருந்தோ வந்தான் என்ற பாரதியாரின் பாடல் வரிகளை கண்ணதாசன் மாற்றி எழுதியிருப்பார். அது தான் இங்கே பொருத்தமானதாக இருக்கும்.
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்! பற்று மிகுந்து வரப் பார்க்கிறேன் கண்ணனால் பெற்று வரும் நன்மைகளை பேசி முடியாது. நண்பனாய், நல்லாசிரியனாய் மந்திரியாய்…எல்லாவற்றுக்கும் மேலாக எந்தையே என் தந்தையாய் அல்லாமல் பிறிதொன்றில்லை.
தஞ்சை வந்தடைந்தோம். மங்கையக்கா அவர்கள் வீட்டில் தங்கியிருந்த நான்கு நாட்களும் அவர்களுடன் சேர்ந்து தஞ்சையின் ஒவ்வொரு தெருவும் ஒவ்வொரு சிறு கோயில்களும் தெற்கு தெருவில் கிந்தனார் போட்டோ ஸ்டூடியோ இருந்த இடத்தையும் பார்த்து விட்டு நெஞ்சம் நிறைந்து வந்தேன். இந்த கிந்தனார் ஸ்டூடியோ போட்டோகிராபர் அன்றைய காலகட்டத்தில் மிகவும் திறமையான புகழ் பெற்ற நபர். அவர் எடுக்கும் போட்டோக்கள் மிகவும் தத்ரூபமாக இருக்கும். அதனால் அவரிடம் எல்லோரும் காத்துக் கிடந்து போட்டோ எடுத்துக் கொள்வார்கள். ஆனால் முகத்தில் ஜீவகளையற்ற மனிதர்களை மட்டும் அவர் போட்டோ எடுக்க மாட்டாராம். அவர்கள் எத்தனை தான் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும் ஊஹூம் சம்மதிக்க மாட்டாராம். இந்த விஷயத்தை இரண்டு மூன்று சம்பவங்களுடன் பிரகாஷ் விவரித்த போது நாங்கள் நட்டநடு சாலை எனவும் பாராமல் விழுந்து விழுந்து சிரித்தது இன்றும் கண் முன் நிற்கிறது. மூச்சை நன்றாக இழுத்து நெஞ்சில் நிறைத்துக் கொண்டேன் அந்த காற்றையும் அன்பையும் நினைவுகளையும்.
தஞ்சையிலிருந்து மறுநாள் காலை திருச்சிக்குப் புறப்பட்டோம். ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த நான் அதிகாலை வெளிச்சம் பரவ தொடங்கியிருந்த வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரிய கோயிலின் கோபுரம் கண்ணில் பட்டது. எங்கள் வண்டி செல்ல செல்ல அப்படியே அந்த கோபுரமும் உடன் வந்தது. பிறந்த வீட்டிற்கு போய்த் திரும்புகையில் பேருந்து நிலையம் வரை வழியனுப்ப வரும் என் தந்தையைப் போல. மனம் மிகவும் நெகிழ்ந்து கிடந்தது.
உடன் வந்து கொண்டிருந்த கோபுரம் ஒரு புள்ளியில் விடைப் பெறும் கட்டம் வந்த போது என்னிடம் கேட்டது. “இனி மீண்டும் எப்போது வருவாய்?” என,
“சமயம் வாய்க்கும் போது” என்றேன் நான்.
“மறந்து விடுவாயோ?” என்று ஆதங்கப்பட்டது.
“முடியுமோ?” கண்ணீராய் கசிந்தேன்.
பூமி வாழும் காலமெல்லாம் இந்த பெருவுடையார் கோயில் இருக்கும். நான் இருக்கும் காலமெல்லாம் என் உணர்வுகளிலும் நினைவுகளும் இந்த தமிழ் இருக்கும் வரை அதன் இலக்கிய செப்பேட்டில் தஞ்சை பிரகாஷ் என்ற பெயர் பொறித்து வைக்கப்பட்டிருக்கும். நிரந்தரமாக!
சோழர்களின் ஆதி தகப்பன் கரிகால் பெருவளத்தான் கட்டிய கல்லணையைப் பார்த்து விட்டு அங்கேயிருந்து சென்னை செல்ல தேசிய நெடுஞ்சாலையைப் பிடித்தோம். நண்பகல் வேளையில் அந்த நீண்ட சாலை அமைதியாக இருந்தது என்னைப் போல. தூறத் தொடங்கியிருந்த வானம் சாரலாய் ஆரம்பித்து மழையாய் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது என் உணர்வுகளைப் போல.
நன்றி.
G. Shyamala Gopu