Skip to content
Home » உன்னில் தொலைந்தேன்-18

உன்னில் தொலைந்தேன்-18

💟18
                    இருவரது உறக்கத்தையும் எழுப்பும் விதமாக ஐந்து மணிக்கே நாதஸ்வர ஓசை இசைத்தது. ஒன்பது மணிக்கு தானே கல்யாணம் நான் ஏழுக்கு எழுந்துக்கறேன் என பிருத்வி உறங்க, அதே போல சொல்லிய லத்திகாவை சகுந்தலா விடவில்லை.


       ”ஏண்டி கல்யாண பொண்ணு இப்படி இருக்க போய் குளி, மேக்அப் காரங்க ஏழு மணிக்கு வந்து விடுவாங்க” என கத்த,
        ” என்னை தூங்க விட மாட்டியே சகு… ” என சலித்து கொண்டு குளிக்க சென்றாள். அதிகாலை சுடும் நீரில் ஷவரில் குளித்து சிகையை உலர்த்தி கொண்டு இருக்க சகுந்தலா ஜீவானந்தம் வந்து சேர்ந்தனர் .


        ” ம்மா பசி வயிற்றை கிள்ளுது” என்றதும் ஜீவானந்தம் போனில் பாலை வரவழைத்து பருக கொடுத்தார்.
                                        அதற்குள் ஏழு மணி நெருங்க அலங்காரம் செய்ய ஆட்களும் வந்து விட்டனர் .
        ”மேம் உங்களுக்கு அலங்காரம் செய்யலனாலும் பேஸ் பிரைட்டா இருக்கு. இருந்தாலும் நாங்களும் கொஞ்சம் அழகை அதிகப்படுத்தறோம் என்றபடியே அவளுக்கு மேக்அப் செய்து கொண்டு இருந்தனர்.


                                               அங்கு வேஷ்டி கட்டமாட்டேன் எப்படியும் எனக்கு நழுவும் வேண்டாம் என தவிர்க்க நினைக்க ‘ டேய் இது ஒட்டிக்கோ கட்டிக்கோ டைப் வேஷ்டி சோ ஈஸியா இருக்கும்’ என ராஜன் எடுத்து கூற ஒரு வழியாக வேஷ்டி கட்டி முழு கை சட்டையை பாதி மடித்து விட்டு கண்ணாடியில் பார்த்தவன் ‘ம் ஓகே ஓகே நாட் பேட்’ என தந்தை தாயிடம் மொழிந்தான்.
      ”டேய் பிருத்வி என் கண்னே பட்டுடும் டா ராஜா மாதிரி இருக்க” என்றாள் பவானி.


      ” ம்மா இந்த கதை விடாதீங்க, பக்கத்து ரூமுக்கு போய் இதே டயலாக் விடுவீங்க என் கண்னே பட்டுடும் ராஜாத்தி என்று எனக்கு தெரியாதா” என பவானியை கிண்டல் செய்து கேலி செய்ய ,
      ”டேய் சொன்னாலும் சொல்லாட்டினாலும் என் மருமக உன்னை விட அழகு தான்” என்று முடிக்க ,
       ”இப்பவே எனக்கு மெஜாரிட்டி போச்சா ”என சற்று போலியாக முறைக்க,


       ”அவளை பார்த்தா இப்படி பேச மாட்ட” என சொல்லி வந்தவரை வரவேற்க கிளம்பினாள் பவானி.
                                            ‘ம் இந்த அம்மா பயங்கரமா பில்ட் அப் கொடுக்கறாங்க லத்திகா எப்படி இருப்பா என்று போய் பார்த்துடலாமா!? என மனம் கேட்க சே சே வேண்டாம் எப்படியும் கொஞ்ச நேரத்துல என் பக்கத்துல தானே வந்து நிற்க போகின்றாள் அப்ப பார்த்து கொள்ளலாம் ‘ என விட்டு விட்டான்.


                                        வரவேற்பு முதல் உணவு பரிமாறும் இடம் வரை எல்லாம் ஆட்கள் ஏற்பாடு செய்து இருந்தாமையால் எளிதாக போனது.
                                    நேற்று போலவே ரெஜினா இன்று முதலில் வந்து லத்திகாவிற்கு தோழியாக அருகில் இருந்து பார்த்து கொண்டாள். லத்திகா இன்று கூடுதல் அழகா இருக்க என்று சொல்லவும் செய்தாள்.


      நேரம் நெருங்க நெருங்க ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட பின் ஐயர் மந்திரம் ஓதுவதோ பக்கத்தில் இருக்கும் நபர்களையோ பிருத்வி மறந்தே போனான் . லத்திகா கூட எப்பொழுதும் இருக்கும் கோட் சூட் அணிந்து இருக்கும் அவனை பார்த்து இருக்க இன்று ராஜ கம்பீரமாக வேஷ்டி சட்டையில் இருந்தவனை கண்டு மனதிற்குள் உனக்கு பிருத்விராஜன் பெயர் பொருத்தமாக இருக்கு  இவன் எனக்கானவன்’  என்று சொல்லி கொண்டாள்.


                              ஐயர் தாலி எடுத்து கொடுக்க ஒரு மாயா உலகத்தில் நிகழ்வது போல கழுத்தில் தாலி கட்டினான். ‘இனி இவள் எனக்கானவள்’ என்ற கர்வம் அவனுக்குள்ளும் நிகழ்ந்தது.
              நேரம் நகர பரிசு பொருட்கள் கொடுத்து புகைப்படம் எடுத்து சாப்பிட்டு காரில் ஏறி வீட்டிற்கு வந்து இறங்கும் வரை மாயா உலகத்தில் இருப்பதாக இருவருமே உணர்ந்தனர்.
                      காரில் இருந்து பிருத்வி வீட்டில் கார் நின்றது லத்திகா மலைத்து நின்றாள். அன்றே அப்பா அம்மா சொன்னார்கள். ஆனால் அவள் கிண்டல் செய்தாள் இன்றோ வீட்டை பார்த்து பிருத்விக்கு தான் பொருத்தமானவளா என்ற கேள்வி பிறந்தது.


                  முதலில் பிருத்வி ‘என் வீட்டை பார்… என்னை பிடிக்கும்..’ என்று வாரண ஆயிரம் பாடலை பாடி பில்ட் அப் செய்ய நினைத்தவன் அவளின் வெளிறிய முகம் கண்டு புரிந்து போனது . அவளுக்கு அந்த வீடு அவளுடையதும் என புரிய வைக்க மெல்ல யோசித்தான்.
                    லத்திகா அவள் பெற்றோரை பார்க்க அவர்கள் ஏற்கனவே அதனை சிந்தித்து முடித்து தெளிந்ததால் ஏதும் தோன்றாது இருந்தனர்.
                               உள்ளே வந்த சிறிது நேரம் விளக்கேற்றி வழிபட்டு அமர்ந்த போது அகிலா எனும் பணிப்பெண் குடிக்க பழச்சாறு கொடுக்க பெற்று கொண்டு ”தேங்க்ஸ்” என சொல்லி புன்னகை புரிய செய்தாள்.


      ”பிருத்வி லத்திகா சோர்வா இருக்கா உங்க அறைக்கு கூட்டிட்டு போ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்” என பவானி கூறிட லத்திகா திருதிருவென விழித்து கொண்டு வேறு வழியின்றி மெல்ல மெல்ல தயங்கிய அவனை பின் தொடர்ந்திட அவனோ எவ்வித அசௌகர்யம் இன்றி முன்னே நடந்தான்.
                           மாடியில் எஸ் வடிவ படியில் ஏறி இரண்டாவது அறையினை திறந்து நுழைந்தவன் ”உள்ள வா ” என அழைத்து மெத்தையில் தொப்பென விழுந்து ஆயாசமாக மொபைலை எடுத்து முகநூலில் வந்த வாழ்த்து பதிவிற்கு நன்றி கூறிகொண்டு இருந்தான்.


                                 லத்திகாவிற்கோ ரெஸ்ட் எடுக்க சொன்னது என்னை இங்க வந்து அவன் மெத்தையில் படுத்துகிட்டான். நான் என்ன பன்றதாம் இவன் இப்படி நீட்டி படுத்துக்கிட்டா எப்படி நான் இங்க…. சரியான நெட்ட மரம் என எண்ணி பால்கனி பக்கம் இருந்த சேரில் சாய்ந்து வானத்தை பார்த்தவள் அப்படியே சற்று கண் அயர்ந்தாள்.
                               பிருத்வியோ இங்க எவ்ளோ இடம் இருக்கு இங்க வந்து உட்காரலாம் இல்லை கொஞ்ச நேரம் பேசலாம் அத விட்டு பால்கனி போய் உட்கார்ந்து இருக்கா ராட்ஸசி என மொபைலை அப்படியே வைத்து விட்டு பொறுத்து பார்த்து எழுந்து வந்து பார்க்க லத்திகா உறங்குவதை கண்டான். சே இவ்ளோ நேரம் தூங்கிட்டா இருந்தா தெரிஞ்சு இருந்தா கட்டிலில் படுத்து தூங்க சொல்லி இருக்கலாம். இவ கூட பேசினா சண்டை வரும் என்று தான் கல்யாணம் வரை பேசாம இருந்தேன்.. ஆனா இனிமேலும் எப்படி ரியாக்ட் பண்ண…. இப்படி அமுல்பேபி மாதிரி கன்னம் இருந்தா கடிக்க தோணும் அப்பறம் எந்நேரமும் வாய் ஓயாம பேச ரோஸி லிப்ஸ்….. கடவுளே இது எனக்கு கொடுக்கற சோதனையா… பிருத்வி நேற்றே மூக்கை உடைச்சா முதலில் அதுக்கு சாரி கேட்கவேயில்லை… நீ மானக்கேட்டு இருக்க…’ என மனச்சாட்சி கேலி செய்தது.


                                                  பிருத்வியின் அலைப்பேசி மணி அடிக்க எடுத்தவன்
    ”ஆஹ் அம்மா …”
    ” …… ”
    ”இதோ வர்றேன் மா” என கட் செய்தவன் உறங்கும் அவளை எப்படி எழுப்ப என குழம்பி வேறு வழியின்றி லத்திகா… லத்திகா… லத்திகா என கூப்பிட்டு பார்க்க அவள் எழுந்தபாடுயில்லை. மெல்ல அவளின் கன்னத்தை கடிக்க சென்றவன் வேண்டாம் அப்பறம் தூக்கத்திலே எழுந்ததும் என் கன்னத்தில் நாலு அறை விட்டாலும் விடுவா… என மெல்ல கன்னத்தில் தட்டி லத்திகா லத்திகா… என எழுப்ப வில்லில் இருந்து பாய்ந்த அம்பு போல எழுந்தவள் பேந்த பேந்த விழிக்க , அவனோ இரண்டு அடி பின்னால் எடுத்து


      ”அம்மா கீழே வர சொன்னாங்க. ஸ்னாக்ஸ் ரெடியாம். சாப்பிட கூப்பிட்டாங்க” என்றதும் ”ஹ்ம்” என தலையை ஆட்டியவள் அங்கே இருந்த வாஷ்பேஷனில் முகம் அலம்பி வந்தாள்.


               அவளை எப்பொழுதும் போலவே வம்பு இழுக்க மனம் சொல்ல
     ” ப்ப்பா ….” என நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் விஜய் சேதுபதி பாணியில் சொல்ல, லத்திகா முறைக்க பிருத்வி விடு ஜூட் என தனக்கு தானே சொல்லி கொண்டு கதவை திறந்து வெளியே போக இவளும் அவனை பின் தொடர செய்தாள்.


         ‘கொழுப்பு ‘என்னை போய் ”ப்ப்பானு” சொல்லிட்டு போறான் என மனதில் அர்ச்சனை செய்தாள். மேலும் ஒரு வேளை மேக் அப் களைந்து அசிங்கமா இருக்கா என அங்கிருந்த கண்ணாடியில் பார்க்க அப்படி ஒன்றும் இல்லை என்றே தோன்றியது.
                                கீழே இறங்க நெய் வாசனை மூக்கை துளைக்க கேரட் அல்வாவும் முந்திரி பக்கோடாவும் சுட சுட தட்டில் வைத்து பருக காப்பியும் நீட்டி சாப்பிட பவானி கொடுத்தனர் .
          ”அம்மா லத்திகா உனக்கு இங்க என்னவேணுமோ தயங்காம என்கிட்ட கேளு எனக்கு நீயும் பிருத்வி போல ஒரு பிள்ளை தான் சரியா” என்றாள்.


          தலையை ஆட்டியவாறு சகுந்தலாவையும் ஜீவாவையும் பார்க்க அவர்கள் புன்னகையுடன் மனம் பூரிப்பது உணர்ந்தாள்.
                   தன்னிடம் பேசும் போது ராஜன் மாமாவும் பவானி அத்தையும் பரிவோடு பழகுவது அவளுக்கு ஓரளவு தெம்பை தந்தது. அந்த ஆராய்ச்சியாளன் எப்படியோ!? இதுநாள் வரை அவனோடு மல்லுக்கு நின்றதை மனதில் வைத்து தனியாக சந்திக்கும் நேரத்தில் வன்மம் காட்டுவானோ…?!
           சே சே என் ப்ரஜன் அப்படி கிடையாது ஹி இஸ் ஜெம் ஆப் பெர்சன் … ஆனாலும் புதுசா கல்யாணம் பண்ணினவங்க மாதிரி மானே தேனே னு கொஞ்சவும் இல்லையே!


       ” லத்திகா காப்பி ஆறிடப்போகுது குடிம்மா” என்றாள் பவானி.
                                         யோசிக்க விட்டு இருந்தால் அவன் தன்னையே சுற்றி சுற்றி வருவதை அறிந்து இருப்பாளோ என்னவோ?!
        ”அண்ணி இப்ப கிளம்பினா நேரத்தோட வீட்டுக்கு போக சரியா இருக்கும்”
       ”பிருத்வி கிளம்ப சொல்றேன் அண்ணி” என மாறி மாறி பாசமழை பொழிந்திட,
      ”அண்ணி நீங்க கிளம்பறதா சொன்னிங்க இப்ப மாப்பிள்ளை தம்பி மட்டும்…?”
       ”நாங்க வந்தால் அவன் எங்ககிட்ட தான் பேசுவான். தனியா ரெண்டு நாள் அங்க பழகட்டும். நாங்க இன்னோருனாள் வருகின்றோம்” என சொல்லிட லத்திகா அமைதியாகவே இருந்தாள்.


                                      அவளது தோளில் கையை பதித்து பவானி தாடையை பிடித்து,
        ”எங்கள் உலகமே பிருத்வி தான். எங்க சந்தோஷமே அவன் மட்டும் தான். என்ன ஒரே பிள்ளையா இருந்துட்டான். இப்ப மகள் கிடைச்சு இருக்கற திருப்தி. ஆனா இது போதாது அங்க இங்க ஓடி ஆடி விளையாட இந்த வீட்டுக்கு ரெண்டு குழந்தைகள் வேணும். அப்ப தான் முழு சந்தோஷம்” என்றதும் லத்திகா மெல்ல தலையை தாழ்த்த,


     ”சரி நேரம் ஆகுது நீயும் கிளம்பு” என பூஜை அறையில் சென்று திருநீறு பூசி குங்குமம் இட்டு வணங்கினர்.


               ‘ என்னது அதுக்குள்ள அத்தை ரெண்டு குழந்தை அப்படி இப்படி என்று பேசறாங்க என்று பெரு மூச்சை வெளியிட மனசாட்சி குறுக்கே வந்து ஏய் லத்திகா நேற்று வரவேற்பில் தனியா நிற்கும் போது நீ மட்டும் ஒன் இல்லை ரெண்டு இல்லை மூணு குழந்தை பெத்துக்கணும் என்று நினைச்ச அதை விட அத்தை கேட்டது குறைச்சல் தான். அது அவங்க நியாயமான ஆசையும் கூட.
             ஆனா இந்த ப்ரஜன் கூட நான் நார்மலா பேசியது கூட இல்லை… அவன் என்ன நினைக்கிறான் என்றே புரியலை…. இதுல நேத்து மூக்கை வேற உடைச்சு இருக்கேன்… முதலில் சாரி கேட்கணும்….. என எண்ணி கொண்டாள்.


                                                                         பின்னர் காரில் பிருத்வி லத்திகா சகுந்தலா அமர்ந்திட ஜீவானந்தம் முன் பக்கம் அமர்ந்து வர லத்திகா வீட்டைநோக்கி கார் கிளம்பியது.
               வீட்டில் ஏற்கனவே ரெடியாக வைத்து விட்டு வந்த ஆரத்தியை எடுத்து வந்து திருஷ்டி கழித்து அழைத்து உள்ளே சென்றனர்.


          சற்று நேரத்தில் போய் டிரஸ் மாற்றி கொள் லத்திகா என தாய் சொன்னதும் தான் அப்பாடி என ரிலாக்ஸ் ஆகி தனது அறைக்கு சென்றாள். ஹாலில் அமர்ந்து பிருத்வியிடம் ஜீவனந்தம் பேசி கொண்டு இருந்தார். அவனும் சளைக்காமல் அவரோடு பேசினான். லத்திகாவோ நைட்டி எடுத்துவிட்டு சே சே ப்ரஜன் முன்னால இதுவா நோ நோ என ஸ்கிர்ட் எடுக்க ஹ்ம் அன்னிக்கே ஸ்கிர்ட் அணிந்த அன்னிக்கு என்னை சின்ன குழந்தை மாதிரி பார்த்தான் இதுவும் வேண்டாம் என சுடிதாரே எடுத்து திரும்ப ,
     ”லத்திகா சுடிதார் எதுக்கு எடுத்த இந்தா இந்த சேலை கட்டு என ஒரு அழகிய சேலை நீட்ட,
     ”ம்மா நான் என்ன வெளியான போறேன் டிரஸ் கிராண்டா…” என ஆரம்பித்தவள் இரவு சடங்கு நினைவு வர அப்படியே வாயை மூடி சகுந்தலா நீட்டிய சேலையை பெற்று கொண்டாள்.
     ”குளிச்சுட்டு இதை கட்டிக்கோ, உங்க அத்தை பேசியது நினைவு இருக்குல்ல” என சென்றிட கதவை தாழிட்டவள் அப்படியே கட்டிலில் அமர்ந்து தலைக்கு முட்டு கொடுத்து அதிர்ந்து அமர்ந்திருந்தாள்.

3 thoughts on “உன்னில் தொலைந்தேன்-18”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *