Skip to content
Home » உன்னில் தொலைந்தேன்-21

உன்னில் தொலைந்தேன்-21

                                                                        💟21

                          மெல்ல மெல்ல லத்திகா எழுந்து அமர்ந்து அறையின் எல்லா மூலையிலும் சுற்றி பார்க்க ப்ரஜன் இருக்கும் சுவடே இல்லாமல் போக, எங்கே சென்றிருப்பான் என யோசிக்க நேற்றைய நினைவு கனவு போல பாவிக்க, ப்ரஜன் போல குழப்பம் இல்லாமல் மென்னகை புரிந்தே குளிக்க சென்றாள்.
                             குளித்து முடித்து தாய் சகுந்தலா கூறியது போலவே இன்றும் சேலை கட்டி தலையை உலர்த்த துவங்கினாள்.


           நேற்று ஜுரம் இன்றும் தலைக்கு குளிச்சு இருக்கேன் என்னை ஏன்னு கேட்பார்களோ?! சே எல்லாம் இந்த ப்ரஜன் வேலை கீழே இருப்பானோ? அவனின் பார்வையை நேராக சந்திக்க முடியுமா? என்று நினைக்க ட்ரெஸ்ஸிங் டேபிளில் காற்றில் படபடத்து கொண்டுயிருந்த காகிதம் கண்ணில்ப்பட்டது.


            எடுத்து பார்த்தவள் அதில் சாரி என்ற ப்ரஜன் கையெழுத்து இருந்ததை கண்டு கொஞ்சம் கோவம் வரத்தான் செய்தது. எதுக்கு சாரி கேட்டான். என்னை அப்போ அவனோட பாதியா ஏற்றுக்காம தான் இருக்கானா? சே நான் கூட சோபாவில் படுத்து தூங்கி ஏசி ஒத்துக்கொள்ளாமல் ஜுரம் வந்தபொழுது இது என் வீடு அப்படி உரிமையா நினைச்சு இருந்தா இப்படி காய்ச்சல் வந்து இருக்காது என்று எண்ணி இருந்தேன்… அதுக்கு ஏற்றார் போல ப்ரஜன் என்னை முத்தமிட்டப்ப முதலில் பயந்தாலும் அவன் எனக்குரியவன் என்றே அவனை மனநிறைவோடு ஏற்றுக்க செய்தேன்… ஆனா இப்போ சாரிகேட்டு அப்படி இல்லை என்று உணர்ந்துறானா? எப்போவும் போல அவசரக்குடுக்கை இதுலயும் அவசரம் அதுக்கு பிறகு யோசிச்சு இருப்பான்… இவனை….

 நான் வேற அவன் என்னை அவனோட பெட்டெர் ஆப் என்று எல்லாவற்றிலும் ஏற்றுகிட்டான் என முடிவு பண்ணிட்டேன்…’ என யோசித்தவள் வயிறு காந்த பசியினை முன் வைத்து அந்த பேப்பர் அங்கேயே அதேயிடத்தில் வைத்து விட்டு கீழே இறங்க அங்கே ப்ரஜன் இல்லை என்பதை உணர்ந்தாள்.


        ”வா லத்திகா இப்ப காய்ச்சல் இருக்கா?” என்று பவானி கேட்டு முடிக்க,
       ”நீங்க இப்படி கவனிச்சா காய்ச்சல் இருக்குமா? ஓடியே போயிடுச்சு அத்தை.” என்றாள். 
       ”சாப்பிட உட்கார் சுட சுட இட்லி எடுத்து வைக்கிறேன் சாப்பிடு”
       ”அத்தை இது என்ன சட்னி செம டேஸ்ட்” என்றவள் பார்வை ஹாலில் அறையில் எல்லாம் நாயகனை தேடினாள். 
       ”அதுவா மல்லி சட்னி நீ உடல் சோர்வா இருந்தா கஞ்சிக்கு சைடு டிஷ் ஆ கொடுக்க நினைச்சேன், இட்லிக்கும் மேட்ச்சா இருக்கும் அதான்… பிவேருக்கு பெஸ்ட்” என்றார். 
       ”யம்மி அத்தை” என்று கூறினாலும் அவள் ப்ரஜனை தேடினாள். 


       ”சரி… மதியம் என்ன பண்ண… உனக்கு என்ன உணவு பிடிக்கும் சொல்லு அதையே வைத்திடலாம்.”
        ”எப்பவும் போல வையுங்க அத்தை.”
       ”எப்பவும் பிருத்வி பிடிச்ச சமையல் தான் அதான் இன்னிக்கு உனக்கு பிடிச்ச மாதிரி…”
      ”இல்லை நீங்க கடுகு… அ…..து அவருக்கு பிடிச்ச மாதிரியே பண்ணிடலாம்”
என கடுகு என்று சொல்லி முழிக்க,
      ”சரி அகிலா பிருத்வி பிடிச்ச மாதிரியே சமைச்சுடு” என உத்தரவு போட்டு விட்டு, லத்திகா பார்வை பிருத்வி தேட கண்டுப்பிடித்துவிட்டார். 


         ”லத்திகா பிருத்வி வெளியே போனது சொல்ல சொன்னான் நீ தேடவேண்டாம் சரியா” என சொல்லி ஓய்வு எடுக்க கிளம்பினர் .
                            ‘நல்ல வேளை சகு இல்லை, அப்படில்ல ப்ரஜனை கடுகு என்று சொல்லியதற்கு எனக்கு அட்வைஸ் மழை கொட்டி இருப்பாங்க. பவானி அத்தைக்கு புரியாததினால் தப்பிச்சேன். இந்த ப்ரஜன் எங்க போய் தொலைஞ்சான்’ என போனில் சகுந்தலாவிற்கு அழைத்தாள்.
      ”ஹலோ லத்திகா…” என்று சகுந்தலா பாசமாய் ஆரம்பித்தார். 


      ”ஆமா அம்மா…”
      ”இப்ப உடல் நிலை எப்படி இருக்கு? ஏன் திடீருனு காய்ச்சல்?”
      ”அம்மா இங்க AC அதிகமா இருந்தது அதான்.”
     ”நீ மாப்பிள்ளை தம்பிகிட்ட சொல்லி இருக்க வேண்டியது தானே?”
     ”அது….அது ப்ரஜன் சாருக்கு ஏசி தேவைப்பட்டால் அதான் சொல்லலை” என்று சார் என்ற வார்த்தையை விடுத்தாள்.
      ”லத்திகா இன்னும் என்ன சார் மோர் சொல்லிக்கிட்டு நல்லவேளை கடுகு சிடுமூஞ்சி என்று சொல்லாம விட்டியே…” என்று பொரிந்தார். 
      ”ஐயோ சாரி ம்மா.” என்றவள் மனதிற்குள் கடுகு தான் சொல்லிட்டேனே என்றாள்.


      ”உனக்கு ஏசி ஒத்துக்காது என்று சொல்லிடு கொஞ்சமா குறைச்சு வைச்சுக்கிட்டா போச்சு… இப்ப பாரு சம்மந்தி அம்மாவுக்கு தான் ரெண்டு நாள் கஷ்டம் கொடுத்துட்ட.”
                         அதற்குள் அந்தப்பக்கம் ஜீவானந்தம் இருக்க, ”லத்திகாவா?” என்று போனை பெற்று பேச,
      ”என்னமா இது உடம்பை கவனிக்க கூடாதா? நாங்க வரலாம் என்று கூட நினைச்சோம் அப்பறம் நீ போன உடனே வருவதும் அழகு இல்லை என்று விட்டுட்டோம்.” என்று உரைத்தார். 
       ”இப்ப எல்லாம் சரியாகிடுச்சு ப்பா. கவலைப்படாதீங்க”
                                       மேலும் சிறிது நேரம் பேசி தனது செல்லை துண்டித்து டிவி ஆன் செய்து பாடலை இசைக்க விட்டாள்.


                                         மதியம் அத்தையும் புது மருமகளும் சேர்ந்தே உண்டு முடித்தனர். ப்ரஜன் வந்த பிறகு சாப்பிட்டு கொள்கின்றேன் என்று சொல்லியவளை மணி இப்பொழுதே இரண்டை தாண்டுகிறது சாப்பிடு என வற்புறுத்தி சாப்பிட வைத்தார் பவானி.
                    மாத்திரை கட்டுப்பாட்டில் பவானி அரை மயக்கம் ஏற்படுவதாக கூறி உறங்க சென்றனர். புதிதாக மாத்திரை உண்பதாலும் அவ்வாறு ஏற்படுவதால் பவானி சென்றிட மீண்டும் ஹாலில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்பாய் கடத்தினாள்.


            டிவி பார்ப்பது வெளி கதவை பார்ப்பது என்று நொடிக்கு ஒரு முறை பார்த்து ஏமாறினாள்.
         சே இது என்ன ப்ரஜன் வருகையை இப்படி ஆவலை எதிர் கொள்கின்றேன். மேரஜ் ஆனா இப்படி எல்லாம் எண்ணம் வந்துவிடுமோ?! என யோசிக்க ஹாலில் சோபாவில் அமர்ந்து டிவியை காணாமல் எங்கோ வெறித்து யோசிப்பவளை பார்த்து கொண்டே வந்தான் அவளின் நாயகன் ப்ரஜன்.
         ஆஹா இவ என்ன யோசிக்கரா என்றே தெரிலையே…. வீட்டுக்கு வந்தது தப்போ…  இவன் யோசிக்க…


                                                                                               மீண்டும் வெளிக்கதவை பார்க்கும் நேரம் ப்ரஜன் பார்வையை மாற்றி கொள்ள, இவள் அவனை பார்த்து எழுந்து நின்றாள். ‘நேரா என்னை பார்க்காம வர்றான். சாப்பிட்டாளா இல்லையா ஒரு கேள்வி இல்லை சிடுமூஞ்சி… ஆனா நேற்று மட்டும்… என் பர்மிஷன் இல்லாமல்… உன்னை… எதுவும் சொல்ல முடியாமல் நின்றாள்.
     ”அகிலா அக்கா சாப்பாடு எடுத்து வைங்க” என்று பிருத்வி குரல் கொடுக்க,
     ”நான் பரிமாறுறேன். அத்தை என்கிட்ட சொல்லிட்டு தான்….” என உள்ளே சென்ற குரலில் சொல்லிட, அவனுக்கோ கரண்டியை வச்சி என்னை மொத்துவாளா…? இல்லை இந்த பூரி கட்டை மத்து அப்படி ஏதாவது வச்சி அடிப்பாளா? ஐயோ இதெல்லாம் நான் டிவி காமெடி சீன்ல பார்த்தேன் எனக்கே நாடக்கும் என்று நினைச்சு கூட பார்த்துஇருக்க மாட்டேன். 


     ”உனக்கு பிவேர்… அதான்” என்றான் திணறலோடு அவளோ கரண்டியை பிடித்து ஒரு பார்வை வீசி பரிமாறினாள். 
     ”சரியாகிடுச்சு” என்றவளை பார்க்கும் திறணின்றி தலை கவிழ்ந்தே கிடந்தான். இவ ஒரு வேளை அஜித் ரசிகையா சோறு போட்டு அப்பறம் அடிப்பாளா? கடவுளே நேற்று செய்த வேளைக்கு இது தேவை தான்… என்ன இருந்தாலும் அவள் பர்மிஷன் இல்லாமல் நடந்தது தான்…. ஆனா இவளுக்கு எதுவும் நினைவு இல்லையா?’ என கவலையில் ஆழந்தான்.
      ”எதுக்கு சாரி எழுதி வைச்சீங்க” என்று லத்திகா கேட்க, ‘ஒ காட் அப்ப சுயநினைவு இல்லாதவளையா நான் வசப்படுத்தியிருக்கேன்.. என்ன காரியம் பண்ணிட்ட பிருத்வி’ என்று மனச்சாட்சி கேட்க அமைதியாக வருத்தம் கொண்டான்.


     ”சாரி எதுக்குன்னு கேட்டேன்” என்றாள் வீம்பாக. 
    ”அ.. அது.. உ… உனக்கு ஞா…பகம் இ….ல்லையா” என தந்தி அடித்தான்.
    ”நீங்க என்கிட்ட… ” கடவுளே எப்படி சொல்ல, என லத்திகா விழிக்க,
    ”உனக்கு எதுக்கு சிரமம் நானே சாப்பாடு எடுத்து வச்சிக்கிறேன்” என்று அவளை அனுப்ப முயன்றான். 


    ”அத்தை தான் உங்களை கவனிச்சுக்க சொன்னாங்க. எனக்கு எல்லாம் உரிமையும் இருக்காம்”
      ”ம்” என ஏறிட்டவன் குழம்பியே மீண்டும் உண்ண துவங்க,
      ”அதனால என்கிட்ட சாரி கேட்காதீங்க” என்றவளால் தலையை நிமிர்த்த இயலாது கூறிட, ஒருவித குழப்பத்தோடு அவனையும் அறியாமலே
      ”எல்லா ரைட்ஸ்ஸும் இருக்கா?” என்றான் பாவமாய்.
     ”ம்… நேற்று நடந்ததுக்கும்” என்று கூறியவளை பார்க்க அவளுக்கு நேற்று நடந்த நிகழ்வு சுயநினைவோடு நிகழ்ந்ததை அறிந்து கொண்டான். 

அவளோ ”அம்மாவுக்கு கால் பண்ணனும்” என அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.
                                        பிருத்விக்கு ஓரளவு எல்லாம் தெளிவானது. ‘யாகூ’ என்று கத்த வேண்டும் போல தோன்ற பூரிப்போடு சாப்பிட துவங்கினான்.
              ஊரில் உள்ள தெய்வங்களுக்கு எல்லாம் நன்றி கூறி அப்பாடி பூரி கட்டையில் அடி வாங்குவேன் என்றே நினைச்சேன்….. இப்போ தான் நிம்மதி… இருந்தாலும் பிருத்வி உன்னை ஒரு நிமிஷம் கதி கலங்க வச்சிட்டா…. என்றே எண்ணி வேகமாக சாப்பிட்டான்.


                             சாப்பிட்டு முடித்து டிவி ஆன் செய்தவன் லத்திகா யாருடனும் பேசாமல் தனித்து நிற்பது புரிந்தது அவள் தன்னிடம் இருந்து செல்லவே அப்படி சொல்லி கிளம்பி இருக்கின்றாள் என யூகித்தான். அவளின் புது வெட்கம் அவனுக்கு மேலும் சிறகை விரிக்க செய்தது.
                                மாலை நேரம் பவானி லத்திகா கேட்காமலே பிருத்வி பற்றி அவனின் சிறு வயது சேட்டையை முதல் ஒப்பிவித்தாள். கேட்க கேட்க லத்திகா ஆர்வமானாள்.


           உறங்கும் நேரம் பிருத்வி மேலே சென்றிட, பவானி பிருத்வி எப்பொழுதும் குடிக்கும் பாலை லத்திகாவிடம் கொடுத்து அனுப்பினாள்.
      ”அத்தை கொடுத்து விட்டாங்க” என்று நீட்ட பெற்று கொண்டு,
     ”உனக்கு…?”
     ”அய்ய எனக்கு பால் பிடிக்காது” என்றவளை பார்த்து தோளை குலுக்கிக் கொண்டான்.
                       லேப்டாப்பில் முழ்கியவன் லத்திகா உறங்க கண்டு மெல்ல அவள் காதில் விழும் அளவிற்கு,
     ”எனக்கு நேற்றைய உரிமை இருக்கா? இருந்தா எடுத்துக்கலாமா?” என கேட்டு முடித்து பதிலை எதிர்ப்பார்க்க,
     ”ம்….” என ஒற்றை பதிலை வெட்கமாக கொடுத்தவள் அடுத்த நொடி அவனின் ஆளுமையில் இருந்தாள்.


                                                                   இரு தினம் இனிமையாக இதே போல கழிந்தது. லத்திகா வீட்டில் சனி ஞாயிறு என்றதும் அங்கே செல்ல ஆசை வர, அதை அறியாதவனா பிருத்வியும்  பவானியும் அவர்களாகவே அனுப்பி வைக்க பிருத்வியும் ஜாலியாக கிளம்பினான்.
                             சகுந்தலா ஜீவானந்தம் ராஜ உபசரிப்பு கொடுக்க ரொம்பவே கடுப்பானாள் லத்திகா. தான் லேட்டா வந்தாளே பதறும் அம்மா இன்றோ காய்ச்சல் வந்து இருதினம் கழித்து வந்த தன்னை கண்டுகொள்ளாமல் இந்த ப்ரஜனை வரவேற்று என்னை வெறுப்பேற்றுகின்றாரே!? என்று சினமுற்றாள்.


                  இந்த அம்மா இப்படி தான் ஆனா இந்த அப்பா அவர் கூட என்னை சட்டை பண்ணலையே? இருக்கட்டும் இருக்கட்டும் பார்த்துக்கறேன்.
                                  ருசியாக சமைத்து பரிமாறுவதில் இருந்து டிவி சேனல் பார்ப்பது வரை எல்லாம் அவன் இஷ்டமாக இருக்க பயங்கர கடுப்பானாள்.
               ஒரே பிள்ளையாய் வளர்ந்த மனம், பகிர ஆசை பட்டாலும் முதலில் மறுப்பதே நீதி அல்லவா… லத்திகா அந்நிலையில் தான் இருந்தாள்

2 thoughts on “உன்னில் தொலைந்தேன்-21”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *