📖 Premium தளத்தில் கதைகள் வாசிக்க, 🛒 Amazon Kindle‑இல் கதைகள் வாசிக்க, ▶️ YouTube Channel‑இல் Audio novel கேட்க👇
Skip to content
Home » உயிரில் உறைந்தவள் நீயடி-15

உயிரில் உறைந்தவள் நீயடி-15

அத்தியாயம்-15

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

ஜீவிதா கர்ப்பம் தரித்து மருத்துவமனை சென்று வந்தப்பின் பெட்ரெஸ்ட் என்று கூறவும், பொழுது போகாமல் இருந்த இடத்திலேயே (பீட்ஸ் க்ராப்ட் ஒர்க்) குட்டி குட்டி மணிகளான கலை வேலைப்பட்டினை தான் செய்கின்றாள்.

வீட்டுக்குள்ளேயே அதுவும் அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பது கஷ்டமானது. யுகேந்திரன் வாசலை தாண்ட கூடாதென்று கட்டளை வேறு இயற்றிவிட்டான்.

அதனால் இந்தப் பொழுது போக்கை தான் ஜீவிதா தீவிரமாகச் செய்வது.

முதலில் கழுத்தில் அணியும் பெரிய மணியை வைத்து செயின் தயாரித்தாள். அது போரடிக்க, கூடத்தில் அழகிற்காக, மணிகளான திரைச்சீலையை வடிவமைத்தாள்.

அதுவே மூன்று மாதத்திற்கு மேலாக நேரத்தை அபகரித்தது.

மெதுவாகச் செய்து முடித்தவள் தன் திருமண நாளுக்கென்று யுகேந்திரனுக்குப் பரிசளிக்க அவன் உருவ அமைப்பு குட்டி குட்டி மணிகளில் செய்யத் துவங்கினாள். முதலில் எம்பிராய்டரி செய்து வைத்த உருவத்தில், குட்டி குட்டி மணியால், வண்ண மணிகளை வடிவத்திற்குத் தகுந்தது போலக் கோர்த்து முடிப்பது.

யுகேந்திரன் கதவை திறக்கவும், தன் வீற்றிருக்கும் மெத்தைக்குப் பின் வைத்து போர்வையால் மறைத்தாள்.

“எப்பப்பாரு மணியை வச்சிட்டு இருக்க, அந்த மணியெல்லாம் கீழே சிதறி கால் வழுக்கிடும்னு சொன்னா கேட்கறியா?” என்று சட்டை பொத்தானை கழட்டினான். இந்த வார்த்தை தினமும் கூறி விடுகின்றான்.

குட்டி குட்டி மணி கீழே சிதறி அதில் ஜீவிதா அவளை அறியாமல் காலை பதித்து விழுந்திடுவாளோயென்ற அச்சம் யுகேந்திரனுக்கு.

‘ஆமா… கட்டில்லயிருந்தா எத்தனை தடவை இறங்கறேன், கீழே காலை வச்சாலே மூக்கு வேர்த்து ஆளாளுக்கு வந்துடறிங்க.’ என்று கூறமுடியாது அமைதியானாள்.

அவள் மௌனம் கண்டு, சட்டையைக் கழற்றியவன், பனியன் பேண்ட் அணிந்த தோற்றத்தில் அவளருகே அருகே வந்தான்.

“என்னோட பேசுடி. உம்முன்னு இருந்து கொல்லாத. நான் தெரியாம அடித்துத் தள்ளி விட்டேன்.” என்று கன்னம் ஏந்தினான். இந்த இடைப்பட்ட நாளில் யுகேந்திரன் தான் அதிகம் பேசுவது. ஜீவிதா வாயை திறப்பதில்லை. அவளுக்குக் கர்ப்பம் என்றதும் கணவர் தாங்குவதாகத் தவறாய் எண்ணினாள்.

இந்த அன்பெல்லாம் பிள்ளை உண்டானதால்… வாரிசு பிறக்க யுகேந்திரனுக்குதன்னிடம் நேசம் மலர்கின்றதென்று.

”உங்களுக்கு உங்க குழந்தை முக்கியம் அதுயிதுன்னு சொல்லி என்னை வதைக்காத. உண்மையில எனக்கு உன்னைப் பிடிக்கும்” என்றான்.‌

பட்டாம்பூச்சியாக இமைகள் படபடவென அடிக்க, அவள் எண்ணத்தைக் கூறிவிட்டானே என்று ஆச்சரியப்பட்டாள்.

“நிஜமா… பிடிக்கும். ஏன் ஆச்சரியமா பார்க்குற” என்று இவனாகத் தான் பேசினான்.‌ எதிரேயிருந்த ஜீவிதா தான் ஆச்சரியத்தில் வாயடைத்து இருந்தாளே. பேச்சு வராமல் சதி செய்தது.

“உனக்கு எப்படிப் புரியவைக்க?” என்றவன் அவளருகே தோதுவாய் அமர்ந்து, ”எங்கப்பா கோவிலில் வச்சி உங்கக்காவுக்கு என்னை முடிச்சிட்டு கதிரவன் மாமாவோட பேசிட்டு வந்துட்டார்.

நான் ஆல்ரெடி வினிதாவை ரோட்டுல பார்த்திருக்கேன். அத்தை கூட நடந்து போறப்பவும் கவனிச்சியிருக்கேன். அதனால் பொண்ணு பார்க்க நான் போகலை. அம்மா அப்பா மட்டும் தான் போனாங்க. இது உனக்குத் தெரியும்.

வினிதாவுக்கும் எனக்கும் கல்யாணம் பேசிட்டாங்க. பொண்ணு பார்க்கவும் போகலை. கோவில் திருவிழா அப்ப வினிதா நீயும் அரசமரத்தடியில கல்லு திண்டுல உட்கார்ந்து கரும்பு கடிச்சி, கோவிலில் மாட்டு வண்டியெல்லாம் வேடிக்கை பார்த்திங்க. சரி இனியாவது கிட்ட போய்ப் பேசுவோம்னு நினைச்சேன்.

நான் கோவில்ல முதல் சுத்து தான் சுற்றியது. அதனால் பாக்கி இரண்டு சுற்று சுற்றி முடிக்கவும், நீங்க இடத்தைக் காலிப்பண்ணிட்டா… அதனால் என் பிரெண்ட் ஜெகனை உங்களிடம் அனுப்பி அங்கேயே இவங்களை நிற்க சொல்லுடா, நான் வந்து பேசறேன்னு இன்பார்ம் பண்ண அவனை அனுப்பினேன்.

ஒரு வேளை அப்படி ஒரு சந்திப்பு அமைந்திருந்து, உங்கக்கா இந்தத் திருமணத்தையே விரும்பலை என்று எனக்குத் தெரிந்திருந்தா நானே தவிர்த்திருப்பேன்.

பச்….

ஜெகன் உங்க பக்கத்துல வந்து பேச முயன்றப்ப, நீ என்னைச் சுட்டி காட்டி பேசயிருக்க. நீ என்ன பேசினனு உனக்கு நினைவு இருக்கா?” என்றான்.

மெதுவாகக் கண்ணை உருட்டி இல்லையென்று தலையாட்டினாள்.

“உங்கக்காவிடம் என்னைப் பார்த்து இவரா இவரான்னு கேட்ட அது நினைவுயிருக்கா?” என்றான்.

“ம்ம்ம்” என்றாள் ஜீவிதா.‌

“அதுக்கு உங்க அக்கா‌ ஆமா அவர் தான்னு சொல்லிட்டு, ‘இந்த ஊர்ல இவரை என் பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் தெரிந்துயிருக்கு. என்‌ காலேஜ்மேட் இரண்டு பேர் இவரை விரும்பறதா பிரப்போஸ் பண்ணிருக்காளுங்க. ஆனா இவர் நேரா அந்தப் பொண்ணுங்களைக் கூட்டிட்டு, அவளுங்க அப்பா முன்ன நிறுத்தினார்.

அதோட ‘உங்க பொண்ணு என்னை விரும்புறதா பேசறா. கொஞ்சம் புத்திமதி செல்லுங்க. இல்லை யாருக்காவது கல்யாணம் பண்ணி வையுங்கன்னு’ கத்தி விட்டிருக்கறதா உங்கக்கா பேசினாளா?” என்று கேட்கவும், ஜீவிதா நினைவை மீட்டெடுத்து “ம்ம்ம்” என்றாள்.

“கரும்பை கடித்துத் துப்பி நீ என்ன சொன்ன?” என்றான் யுகேந்திரன்.

“சத்தியமா நினைவில்லை.” என்றாள்.

யுகேந்திரனுக்கு அவள் அப்படிக் கூறியதும் பாவமாக இருந்தது. அவள் வாயிலிருந்து உதிர்த்த வார்த்தை அவளுக்கே நினைவில்லாமல் போக அந்த வார்த்தையை வைத்து வதைத்தோமே? என்று வெட்கினான்.

இன்று சொல்ல ஆரம்பித்ததால் நிறுத்திடவில்லை. “சொல்லறேன்… அன்னிக்கு நீ என்னை என்ன பேசின தெரியுமா? ஆள் பார்க்க சும்மா அழகா இருக்கார்ல. அந்தத் திமிருக்கா. எங்கயாவது அடிபட்டு, அவமானப்பட்டு, அசிங்கப்பட்டா அடக்கவொடுக்கமா இருப்பார். இல்லைன்னா இப்படித் தான் ஓவரா ஆடுவார்.

மோஸ்டா பணமும் புகழும் இருக்குல்ல, அந்த ஏத்தம்.

நீ வேண்டுமின்னா பாரு யாரிடமாவது அடிவாங்கி அவமானப்பட்டுத் திருந்துவார்.’ என்று கூறி சிரிச்சியா இல்லையா?” என்றதும் ஜீவிதாவோ, ”நான் ஏதோ விளையாட்டுக்கு பேசினேன்.” என்றாள்.

கையால் அவள் கூற வந்ததைத் தடுத்து, “என் பிரெண்ட் ஜெகன் உங்க பேச்சை கேட்டு உங்களை நிற்க வைக்கலை. அவனுக்கு என்னைப் பத்தி பேசவும் ஒரு மாதிரி அப்செட் ஆகிட்டான். அதோட பக்கத்துல தான் தள்ளி போயிருந்திங்க.

நான் வந்தப்ப, நீங்க இரண்டு பேர் பேசியதை சொன்னான். வினிதா எல்லாம் உன்னைப் பார்த்துப் பயப்பட்டுத் தலைகுனிந்து இருந்தாடா.

சில்வண்டு தான் ரொம்பத் துள்ளுச்சு. ஆனா அழகான மச்சினிச்சிடானு கேலி செய்தான்.

எனக்கு நீ சொன்னதைக் கேட்டு அந்த நேரம் உங்களிடம் பேச வரவும் பிடிக்கலை. அங்கிருந்து வந்துட்டேன்.

ஆனா இந்தச் சில்வண்டு இப்படிப் பேசுது. இதுவரை என் கண்ணுல பட்டதேயில்லை. ஊட்டில படிக்கப் போயிருக்கா. பார்றேன்… லட்டு மாதிரி இரண்டு அத்தை பொண்ணு. அதுவும் ஜீவி ஆவ்சம். துடுக்கு வாய்டா. இப்படி உன்னைப் பத்தி நிறைய ஜெகனிடம் பேசினேன்.

அவன் கூட, ‘மச்சி அக்காவை விட்டு தங்கைக்கு ரூட் போடாதடா’னு என்னைக் கேலி செய்தான்.

பத்திரிக்கை அடிக்கும் முன்னவே வினிதா ஓடிப்போனதாகத் தெரியவும், நிஜமாகவே எனக்கு அடிவாங்கிய உணர்வு. அவமானம்… அடிப்பட்ட வலி…

அசிங்கமா மற்றவர்கள் பேசுவாங்களோனு தோன்றுச்சு. இதுல நீ பேசியதை சம்பந்தப்படுத்தி மூளை மடத்தனமான யோசிச்சது.

வினிதா ஓடிப்போனதை விட நீ பேசியது என்னை ரொம்பப் பாதிச்சிடுச்சு.

கல்யாணம் வரை வந்த பொண்ணு ஓடியதாகத் தான் ஊர் பேசும். அவமானம் அடிபட்ட வலி, நீ சொன்னை வலி.” என்றதும் ஜீவிதா தலையாட்டி மறுத்தாள்.

நான் வன்மத்துடன் எந்த வார்த்தையும் உதிர்க்கவில்லை என்று‌.

“அதான்.. உன்னை மணந்து, பழிவாங்க முடிவெடுத்தேன். உண்மையில் வினிதாவால் உன்னைப் பழிவாங்கலை. நீ பேசியதற்காக மட்டுமே… நீ வீசிய வார்த்தை… என்னைக் காலம் கடந்து காயப்படுத்துச்சு” என்றான்.‌

ஜீவிதா முகம் பொத்தி, உடைந்து அழுதாள்.‌

“அச்சோ.. நான் விளையாட்டுக்கு பேசியது. மனசுல வன்மம் வச்சி பேசலை.” என்றாள்.

“ஏஏஏய்ய்ய் அழுது தொலைக்காத. வயிறு குலுங்க போகுது.

நான் அதைத் தாமதமா தெரிஞ்சுக்கிட்டேன்.

அதனால் தான் கல்யாணத்துக்குப் போன்ல சம்மதம் கேட்டப்பவும், கல்யாணமான முதல் மூன்று நாளும் கொஞ்சம் அதிகப்படியா நடந்துக்கிட்டேன். ரொம்பக் காயப்படுத்தி வார்த்தை வீசினேன்.அதுக்குப் பிறகு எப்பவாது உன்னைக் காயப்படுத்தலை.” என்றான்.

ஜீவிதா முறைக்க, “சரி… உங்கக்கா கூட நீ பேசவும் வந்து அடிச்சு தள்ளி விட்டுட்டேன்.” என்று கூறவும், ஜீவிதா “இப்பவும் என்‌மேல கோபமா இருக்கிங்களா? இந்தக் குழந்தை என் வயிற்றுல வளர்றதால மட்டும் தான் என்னைத் தாங்கறிங்களா?” என்று கேட்டாள்.

“லூசாடி… நான் கோபமா இருந்தப்பவே உன் சேலை முந்தானையில் சுத்திட்டு இருந்தேன்.

இப்ப இந்த நிலையில் உன்னை நெருங்கினா சரியா வருமா? அதான் விலகி நின்று வேடிக்கை பார்க்கறேன். மத்தபடி உன்னைப் பிடிச்சிருக்கு.” என்று வார்த்தையை உதிர்த்தான்.‌

கதவு திறக்கும் சப்தம் கேட்கவும் ஜீவிதாவின் கன்னம் ஏந்திய கையை எடுத்தான்.

உமாதேவி தட்டில் ஆவிப்பறக்க சாதம் கொண்டு வந்தார்.

“நீ கேட்ட பருப்புச் சாதம் தாளிச்சா வாந்தி வருதுன்னு சொன்னதால தாளிக்காம கொண்டாந்துட்டேன். ” என்று உமாதேவி வந்தார். பொன்னம்மாவோ “ரொம்பச் சூடாயிருக்கு. கொஞ்சம் மிதமான சூட்டில சாப்பிடுங்க” என்று அறிவுறுத்தினார்.

“டேய் சாப்பிடா வராம இங்க என்ன பண்ணற? போய் உட்காரு பரிமாற வர்றேன்” என்று உமாதேவி அதட்டிட, யுகேந்திரன் ஜீவிதாவை பார்த்தான்.‌

அவளோ பரிதவிப்பாகப் பார்க்க, அவள் நேரத்திற்குச் சாப்பிடவும் வெளியேறியிருந்தான். கர்ப்பிணி பெண் உணவையும, மாத்திரையையும் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டுமே.

முழுமையடையாத பேச்சில், யுகேந்திரன் மட்டுமல்ல ஜீவிதாவுமே தவித்தாள்.

ஆனால் வேறு வழி.

அவன் மனதை திறக்க ஒரு நேரம் அமைந்தது போல இவள் மனதை திறக்கவும் நேரம் அமைய வேண்டுமல்லவா?!

தான் மணிகளால் கோர்த்து வைத்த சட்டத்தைப் பார்வையிட்டாள்.

எண்பது சதவீதம் மணிகளான யுகேந்திரன் உருவம் கோர்த்தாயிற்று.

இன்றும் நாளையும் எப்படியும் முடித்திடும் வேகம் அவளுக்குள்.

அப்படி முடித்துவிட்டால் யுகேந்திரன் மறந்ததாக நினைத்திருக்கும் தங்கள் திருமண நாளில் அவனுக்கு இந்தச் சட்டத்தை வழங்கி திருமணவாழ்த்து கூறி, தன்‌மனதை திறக்க நினைத்தாள்.

இது நல்ல திட்டமாகத் தோன்ற மடமடவெனச் சாப்பிட்டு முடித்தாள்.

பொன்னம்மா வந்து சாப்பிட்ட தட்ட எடுக்க வந்தார்.

அடுத்த நிமிடமே சாப்பிட்டுக் கை அலம்பிய ஈரத்துடன் யுகேந்திரன் வந்தான்.

எப்படியும் இன்று தன் மனதை திறக்க கூடாதென்று, செய்த மணிகளான வேலை பாட்டினை ஒதுக்கி மூடி வைத்து படுத்தாள்.‌

“நான் என் மனதை திறந்து மன்னிப்பு கேட்டு, உன்னைப் பிடிச்சி கல்யாணம் பண்ணிருக்கேன்னு சொல்லிருக்கேன். நீ பாட்டுக்கு என்னைப் பார்த்து சலனமேயில்லாம தூங்கப்போற?” என்றான் யுகேந்திரன்.

இவ்வளோ நேரம் பேசியது வேஸ்டா?’ என்பது போல நின்றான்.

“வினிதா அக்காவால, பழிவாங்க என்னைத் தாலி கட்டியதாக நினைச்சேன். இப்ப என்னைப் பழிவாங்க என்னைக் கல்யாணம் பண்ணியதை சொன்னிங்க.

இப்ப பழிவாங்கற எண்ணமேயில்லை என்பதையும் சொல்லிட்டிங்க. இனி நான் என்ன சொல்லணும்.

நீங்க விட்ட கதையில் சட்டுனு தூக்கம் வருது.” என்று தலையணையை இறுக்கினாள்.

‘அடிங்க’ ரியாக்ஷனே இல்லாம தூங்குது’ என்று வந்தான்.

ஜீவிதாவை தன் நெஞ்சில் படுக்க வைத்தான்.

எப்பொழுதும் மதிய நேரத்துக்குத் தூங்க வைக்கும் வேலை அவனுடையது. அவன் நெஞ்சில் சாய்ந்தால் சட்டென உறக்கம் கொள்வாள்.

இன்றோ, “உனக்குப் பதிலுக்கு, என்கிட்ட பேச எதுவும் தோணலையா?” என்று தாடை நிமிர்த்திக் கேட்டான்.

அவளோ ஆஸ்கார் அவார்ட் வாங்கும் முனைப்பில், “கன்சீவா இருக்குறதால, சாப்பிட்டதும் தூக்கம் தூக்கமா வருது.” என்று அவன் கையை எடுத்து விட்டு தலைக்குனிந்தாள்.

தலைக்குனிந்தவள் சத்தமின்றி முறுவல் புரிந்தாள்.

யுகேந்திரனோ ‘என்ன இப்படிப் பேசறா. நம்ம மேல அந்தளவு கோபமா இருக்கா’ என்று தவறாய் எண்ணினான்.

என்னயிருந்தாலும் அவன் விரும்பியது பொய்யில்லை. அதனால் அவளை உறங்க வைக்கக் கொஞ்ச நேரம் இதயத்துடிப்பு கேட்கும் பக்கம் அவள் செவியைச் சாய்ந்தான்.

தினசரி அவன் இதயத்துடிப்பின் சங்கீதத்தில் உறங்கிடும் ஜீவிதா. இன்று யுகேந்திரனுக்கு மணிகளான மாலையில் அவன் புகைப்படத்தைத் தன் கையால் சட்டத்தில் கோர்ப்பவளுக்கு உறக்கம் வரவில்லை. தான் உறங்கியதாக அவன் எண்ணினால் மட்டும் அவன் பேக்டரி கிளம்புவானென நடித்தாள்.

அவனும் உறங்கியதாக நேரம் பார்த்துத் தலையணையில் சாய்த்துவிட்டு சப்தமின்றி வெளியேறினான்.

எப்பொழுதும் உறங்கியப்பின் யுகேந்திரன் செல்வது. இன்று அவன் கதவை சப்தமிடாமல் தாழிட்டதும் தலையைத் திருப்பிப் பார்த்து அவன் சென்றதை ஊர்ஜிதப்படுத்தி ஆனந்தப்பட்டாள்.

‘யுகி மச்சான்… நீங்க என்னை விரும்பறிங்க. நானும் உங்களை விரும்பறேன்.‌ ஆனா அதை இப்ப சொல்ல மாட்டேன். நாளை மறுநாள் இந்த மணியில் உங்க முகம் வடிவமைச்சு, நிறைவா முடிச்சதும் காதலிப்பதாகச் சொல்லறேன். அதுவரை பழைய யுகேந்திரனா உலாத்துங்க’ என்று சிரித்தாள்.

இங்கு அரை மணி பெரும் கழித்து, யுகேந்திரன் முன்னே ஜெகனும் சிரித்துக் கொண்டிருந்தான்.

நண்பனை கேலி செய்யும் எண்ணத்தோடு “ஓ.. ஓ..ஒன்னும் சொல்லலையா?” என்று வயிற்றைப் பிடித்துச் சிரிக்க, “டேய் சிரிச்ச பல்லை தட்டி கையில கொடுத்திடுவேன். நானே சோகமா இருக்கேன்.” என்று யுகேந்திரன் மொழிந்தான்.

“ரொம்பச் சந்தோஷமா இருக்கு யுகேந்திரா. உன்னை இப்படிப் பார்க்கறது” என்று கூறவும், ”வேலை செய்ய‌ சம்பளம் வாங்கற தானே. இங்கிருந்து ஓடிடு. அடிச்சி முகத்தைப் பேத்துட போறேன்” என்று நண்பனை விரட்டினான்.

”சரிசரி போறேன். எக்ஸ்போர்ட் துணி எல்லாம் பேங்கிங் முடிஞ்சுதான்னு பார்க்க போகணும்.

நீ அடிக்க முகத்தைக் காட்டற ஒரே ஜீவன் தங்கச்சி ஜீவிதா தான். பாவம் இப்ப உண்டாயிருப்பதால நீ விரதமிருக்க. அந்தக் கடுப்புல பேசுற புரியுது.. புரியுது…” என்று நண்பனை மீண்டும் வாறிவிட்டு ஓடினான்‌.

யுகேந்திரனோ ‘நண்பன் பேச்சில், என்னை விரதம் இருந்து என்ன புரோஜனம். அவளை விரும்பறேன்னு சொல்லியும் அங்க ஒரு‌ ரியாக்ஷனும் இல்லையே.’ என்று சலித்தான்‌. அவனைப் போல ஜீவிதாவும் மனதில் காதல் பூகம்பம் நிகழ்ந்த துள்ளளில் திரிவதை அறியாமல்….

-தொடரும்.

7 thoughts on “உயிரில் உறைந்தவள் நீயடி-15”

  1. M. Sarathi Rio

    உயிரில் உறைந்தவள் நீயடி..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 15)

    ரெண்டு பேரும் திருமண நாளுக்கு பெருசா சஸ்பென்ஸ் கொடுக்கலாம்ன்னு ப்ளாக்
    எல்லாம் போட்டு வைச்சிருக்காங்க. இந்த ரைட்டர் மேடம் கோக்குமாக்கா எதுவும் பண்ணாமல் இருந்தால் சரி
    தான். திடீர் பாயாசம் மாதிரி, திடீர் கலவரம் ஏதாச்சும் பண்ணாமல் இருக்கணும்.
    நீங்க என்ன சொல்றிங்க..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!