இக்கதையில் பெயர்கள், நிகழ்ச்சிகள் யாவும் என் கற்பனையே. யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தியாயம்-1
கோடைக் காலம் எப்படி இருக்கப் போகிறது என முன்னோட்டம் காண்பித்துக் கொண்டிருக்கும் பங்குனி மாதப் பகலவன் மெல்ல விடைபெறும் அந்திப் பொழுது.
அந்த நேரத்தில் உலகத் தமிழ் நேயர்களில் அநேகம் பேர் தொலைக்காட்சியின் முன் அமர்ந்திருந்தனர். டி.ஆர்.பி ரேட்டிங் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான தரவரிசையில் முன்னிலை வகிக்கும் நிகழ்ச்சியின் இறுதிக் கட்டம் இன்றைக்கு ஒளிபரப்பாகிறது. அதனைக் காண ஆயிரமாயிரம் கண்கள் காத்துக் கிடந்தன.
நிகழ்ச்சி ஆரம்பித்தது. முதலில் நிகழ்ச்சியின் தொகுப்பாளாரான ஒரு காலத்தில் காதல் மன்னன் என்றழைக்கபட்ட நடிகர் ஆதித்யாவை மக்கள் எதிர்பார்க்க, வந்ததோ அந்த சேனலின் புகழ் பெற்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரவீந்திரன். அரங்கத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் முகத்தில் ஏமாற்றம் தெரிய, அதைக் கண்டு கொண்ட தொகுப்பாளர்,
“வணக்கம் நேயர்களே. நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் நாயகன் தான் இறுதி நாள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார். நான் தற்போது வந்தது, இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தை மேலும் சிறப்பாக்க, நம்மோடு மற்றும் ஒரு செலிப்ரிட்டி இணைகிறார். அவரை வரவேற்கவும், அவரோடு சில வார்த்தைகள் உரையாடவும் மட்டுமே வந்திருக்கிறேன்.” எனக் கூற, மீண்டும் அந்த அரங்கம் கலகலப்பாக மாறியது.
எந்தக் காரணத்தினாலும் தான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் சுவாரசியம் கெடாமல் பார்த்துக் கொள்வதே ரவீந்திரனின் மிகப்பெரிய பலம். அதுவே அந்த சேனல் மட்டுமில்லாமல், பொது வெளியிலும் அவருக்கு ஒரு தனி மரியாதையைத் தேடித் தந்திருந்தது.
“சரி. அந்த செலிப்ரிட்டிய மேடைக்குக் கூப்பிடலாமா?” என ரசிகர்களிடம் ரவீந்தர் வினவ, நேயர்கள் ஓ என்ற குரல் எழுப்பினர்.
“அந்த செலிப்ரிட்டி பற்றி ஒரு சின்ன அறிமுகம். நமது ஆதர்ச நாயகன் ஆதித்யா அவர்களின் பெருமை மிகு அறிமுகம் அவர். வெகு சில படங்கள் மட்டுமே நடித்தவர். வில்லன், கேரக்டர், ஹீரோ என எந்த வேடத்தில் நடித்தாலும் தனது தனி முத்திரையைப் பதித்தவர். குறிப்பாக தனக்கென தனிக் கொள்கைகளைக் கொண்டவர். தன் கொள்கைகளை எந்த இடத்திலும் சமரசம் செய்து கொள்ளாதவர். நடிக்கும்போதே பட்டயக் கணக்காளர் துறையிலும் கோலோச்சி, அனைத்தையும் பேலன்ஸ் செய்தவர். முன்னணி நடிகராக இருக்கும் காலத்திலேயே திரைத்துறையில் இருந்து விலகி, அவரின் தந்தையின் அர்ச்சகர் வேலையைப் பார்க்கச் சென்று விட்டவர். நம் சேனல் மற்றும் ஆதர்ச நாயகன் அழைப்பிற்கு இணங்கி இன்றைக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொள்ள வந்திருக்கிறார்.” எனும்போதே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரம் எழுந்தது.
“இதற்குள் நீங்கள் அறிந்து இருப்பீர்கள். இதோ உங்கள் அனைவரின் உள்ளங்களைக் கவர்ந்த நாயகன் அபிமன்யு. அவர் திரைத் துறையை விட்டுச் சென்று சில வருடங்கள் ஆன போதிலும், இன்றும் அதே உற்சாகத்ததுடன் நம்மோடு “ஆயிரம் கண்கள்” இறுதி நாள் நிகழ்ச்சியைக் காண வந்துள்ளார். நேயர்களே, உங்களின் மகிழ்ச்சி, அரங்கம் அதிரும் கரவொலியில் தெரியட்டும்” என ரவீந்தர் கூற, ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டும் ஒலி அரங்கை அதிரச் செய்தது.
தொகுப்பாளர் அறிவித்த அந்த நாயகன் அபிமன்யு மேடைக்கு வரும் முன், நூறு நாட்கள் கடந்து தற்போது இறுதிக் கட்டத்தில் நிற்கும் ஆயிரம் கண்கள் நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வுளைக் குறும்படம் எனும் விதமாக தொகுத்து நேயர்களுக்கு மறு ஒளிபரப்புச் செய்யப்பட்டது. நமது கதையின் நாயகனுக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் தொடர்பு உண்டு என்பதால், நாமும் அந்த நிகழ்வுகளைக் காண்போம்.
—-
நான்கு மாதங்களுக்கு முன் வெற்றி தொலைக்காட்சியில் பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை கீழ்க்கண்ட விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது.
“உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக தொலைக்காட்சி நேயர்களுக்கு வெற்றி சேனல் வழங்கும் வாய்ப்பு! டிஆர்பி தர வரிசையில் முதல் நிகழ்ச்சியாக வரும் ஆயிரம் கண்கள் நிகழ்ச்சியில் நேயர்களான உங்களில் ஒருவர் பங்கு கொள்ளும் வாய்ப்பு.! நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்களைப் பற்றிச் சில வரிகள் மற்றும் சுய விவரங்களை எங்கள் சேனலுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். பதினைந்து போட்டியாளர்களில் ஒருவராக நீங்களும் இருக்கலாம்!”
என மீண்டும் மீண்டும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் இடையேயும் காட்டப்பட, விமல் யோசித்துக் கொண்டே இருந்தான்.
விமல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு பேர் சொல்லக் கூடிய இண்டஸ்ட்ரி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறான். மத்திய வர்க்கத்தினருக்கு அவன் வாங்கக் கூடியது நல்ல வருமானமே.
விமலுக்குச் சிறு வயதில் இருந்தே மென் பொறியியல் மேல் மோகம் அதிகம். அவனின் கட்ஆப் மதிப்பெண்ணிற்கு கவர்ன்மெண்ட் கல்லூரிகளில் சாஃப்ட்வேர் கிடைக்க வாய்ப்பு இல்லை. தனியார் கல்லூரிகளில் படிக்கும் வசதி அவனுக்கு இல்லை. எனவே மெக்கானிக்கல் படித்து கேம்பஸில் தேர்வாகி இன்றைக்கு நல்ல நிலையில் தான் இருக்கிறான்.
என்றாலும் கம்ப்யூட்டர் அவனை விடாமல் பிடித்து இழுக்க, சில கணினி மென்பொருள் மொழிகளைத் தனியாகப் படித்தான். அதைக் கொண்டு சோசியல் மீடியாக்களில் சில பல டிடிபி வேலைகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்குத் தனியாகச் செயலிகள் எனச் செய்து கொடுத்து வருகிறான். அவனின் வேலைகளால் அந்த நிறுவனங்களுக்கு மதிப்பும், வரவும் கிடைக்க, விமலை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டனர். ஆனால் அதற்காக பாடுபடும் அவனைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை.
விமல் மனதில் சில நாட்களாக தானும் நாலு பேர் கவனிக்கப்படத் தக்க பெரிய ஆளாக வேண்டும் என்ற எண்ணம் வலுப் பெற்று இருந்தது. அந்த நேரத்தில் சேனல் அறிவிப்பு அவனின் ஆவலை மேலும் தூண்டியது.
இந்த வெற்றி சேனல் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டால் தானும் கவனிக்கப் படக்கூடிய நபர் ஆகிவிடுவோம். அதுவே அவனின் வேலைகளுக்கான அங்கீகாரங்கள் கிடைக்கப் பெற நல்ல வாய்ப்பாகும் என்ற சிந்தனை அவனுள் ஓடிக் கொண்டிருந்தது.
எதற்கும் இருக்கட்டும் எனத் தன் விவரங்களை அவன் மின்னஞ்சல் செய்து அனுப்பி விட்டு, அந்த நிகழ்ச்சிப் பற்றிய பரவலானக் கருத்துக்களை சோசியல் மீடியா மூலம் தெரிந்துக் கொள்ள ஆரம்பித்து இருந்தான்.
சில நாட்கள் சென்று இருக்க, அன்றைக்கு அவனின் மின்னஞ்சலில் அந்த நிகழ்ச்சிக்கான நேர்காணலில் கலந்துக் கொள்ளச் செய்தி வந்து இருந்தது. இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்த விமல், இந்த முறை தன் விருப்பம் நிறைவேறக் காலம் கனிந்து இருக்கிறதோ என மகிழ்ச்சிக் கொண்டான்.
தன் பெற்றோரிடம் இந்தச் செய்தியைப் பகிர மகிழ்ச்சியுடன் வந்தவன், தாய், தந்தையாரின் உரையாடல் கேட்டு அப்படியே நின்றான்.
விமலின் தந்தை “ஏண்டி , இந்த விளம்பரம் எத்தனை தடவை போட்டுண்டு இருக்கான்? அதையும் வச்ச கண்ணு வாங்காம அத்தனை தரம் நீயும் பாக்கறியே வேலையில்லையா நோக்கு?” என வினவ,
அவன் அன்னையோ “நேக்கு சீரியல், சினிமா எல்லாம் பிடிக்கிறதில்ல. இந்தப் பாட்டுப் போட்டி மட்டும் தான் பார்க்கறேன். அதிலும் இந்த விளம்பரம் மட்டும் நொடிக்கு நூறு தரம் போட்டா நான் என்னப் பண்ணட்டும்?” என்று பதில் கூறினார்.
அப்படி என்ன விளம்பரம் என்ன என்று எட்டிப் பார்த்த விமல், அங்கே ஆயிரம் கண்கள் நிகழ்ச்சிப் பற்றிய விளம்பரமே ஓடிக் கொண்டிருந்தது. அவர்களின் சம்பாஷணை மேலும் தொடர, அதில் தன் கவனத்தைத் திருப்பினான் விமல்.
“கலி காலம். ஒரு வீட்டுக்குள்ளே பத்துப் பதினைஞ்சுப் பேரை அடைச்சு விட்டு, அவா தும்மினா, இருமினா, அங்கே போனா, இங்கே போனான்னு இருபத்தி நாலு மணி நேரமும் காமிக்கிறானாம். அதைப் பார்க்கக் லட்சம் பேரு. ஓட்டுப் போடக் கோடி பேரு. இத்தனை நாள் சினிமா மோகமும், பிரபலமாகனும்னு நினைக்கிறவனும் கலந்துண்டான்னுப் பார்த்தா இப்போ சாமானியனையும் விட்டு வைக்கறது இல்லை. சாமானியனுக்கு இது எல்லாம் சரிப்பட்டு வருமோ? அவன் அவனுக்குள்ளே ஆயிரம் ரகசியங்கள் இருக்கும். அதை எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டிட்டா அப்புறம் எப்படி வாழக்கைப் போகும்? சுத்த மடத்தனம்.” என்று அவன் தந்தை கூற,
தாயோ “நன்னா சொன்னேள்! இதை எல்லாம் யாரு கேட்டுக்கறா? ஏற்கனவே பேஸ்புக், இன்ஸ்டாகரம்னு வயசு வித்தியாசம் இல்லாமல் மோகம் பிடிச்சுண்டு திரியறதுகள். இதில் இதுப் போலப் புரோகிராமில் கலந்துக் கொள்வது எப்படின்னு அதுக்கும் கிளாஸ் எடுத்து, ஒரு தலைமுறையே உருப்படாம விடப் போறது” என்றார்.
இதைக் கேட்ட விமல், பெற்றோர்களிடம் தானும் இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல விரும்புகிறேன் என்று கூறுவது சரி வராது என அப்படியே தனக்குள் மறைத்துக் கொண்டான்.
தன் பெற்றோர் அறியாமல் ஆடிஷனில் கலந்துக் கொண்டு வந்தவன், யாரிடமும் அதைப் பற்றி கூறவில்லை.
விமல் பொதுவாக இன்ட்ரோவேர்ட் எனப்படும் தனக்குள் சுருங்கிக் கொள்ளும் ரகம். நெருங்கிய நண்பர்கள் என யாரும் கிடையாது. ஆனால் பார்க்கும் யாரையும் எளிதில் வசியப்படுத்தி விடுபவன் என்பதால் மற்றவர் அவனை தன் நண்பன் எனக் கூறிக் கொள்வார்களே அன்றி அவன் அந்த அளவு வெளிப்படையாகக் கூறியது கிடையாது.
இப்படிப்பட்டவன் ரியாலிட்டி ஷோவில் கலந்துக் கொள்ளத் தேர்வானால் என்ன நடக்கும்?
-தொடரும்-
Nice start.
Current situation ku thevaiyaana topic.
But first episode laye hero, another hero and innum oru person nu varuthe.
Finally yaar indha kadhaiyin her?
Waiting to know
Arambamey oru yethir paarpu…. Nice epi…. Keep rocking 🥳🥳
Good start
Good starting