எண்ணங்கள் மாறலாம்
ஞாயிற்றுக் கிழமையின் அதிகாலை உறக்கத்தைக் கலைப்பதைப் போல அறைக் கதவைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள் அரவிந்தனின் மனைவி அர்ச்சனா. போதாக்குறைக்கு பீரோவின் கதவும் டமால் டிமீல் தான். சென்னையில் தான் அரக்கபரக்க ஓட வேண்டியிருக்கிறது. ஊருக்கு வந்திருக்கோம். கொஞ்சம் அக்கடான்னு இருப்போம்னு பார்த்தால் முடியுதா? அதுவும் ஞாயிற்றுக் கிழமை வேறு. தூங்க விடாமல் இப்படி சவுண்ட் விடறாளே என்று அந்த தூக்கத்திலும் மனசுக்குள்ள நமநமவென இருந்தது அரவிந்தனுக்கு. அரைக் கண்ணைத் திறந்து பார்த்து “ஷ்” என்று சத்தமாகவே முனகினான். அவ்வளவு நேரமும் இருந்த சத்தமும் ஓய்ந்து அர்ச்சனாவின் அலப்பரைகளும் அடங்கி நிசப்தமாக இருந்தது அறை. ஏசியின் மெல்லிய ரீங்காரத்தைத் தவிர.
இத்தனை சத்தத்திலும் ஷ் ஷ் என்று முனகி விட்டு தூக்கத்தைத் தொடர்ந்தவனுக்கு இந்த திடீர் நிசப்தம் தூக்கத்தை முற்றிலுமாக கலைத்து விட்டது. கண்களைத் திறந்து பார்த்தான். பால்கனியின் அருகில் இருந்த இருக்கையில் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா. அழுகிறாளா என்ன? ஏன்? அதுவும் இந்த அதிகாலை நேரத்தில்? படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தான். இவன் அசைவைக் கண்டவள் இடத்தை விட்டு எழாமல் இருந்த இடத்திலேயே அமர்ந்து கண்களை துடைத்து விட்டு மீண்டும் ஜன்னலின் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். எழுந்து முகம் கழுவி விட்டு அவளெதிரில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான் அவன்.
“காலங்காலையில் ஒரே தடாபுடான்னு சவுண்ட். மனுஷன் இன்னைக்கு ஒருநாள் தான் தூங்கறான்னு கொஞ்சமாவது இருக்கா?” என்று பேச்சை ஆரம்பித்தான்.
“நான் ஏற்கனவே வாங்கறது போதாது என்று நீங்க வேற ஆரம்பிக்காதீங்க” என்றாள் பட்டென்று.
“ஓஹோ. காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா உங்க அக்கப்போரை?”
“எப்போதுமே அக்கப்போரை ஆரம்பிப்பது உங்க அம்மா தானே”
“நீ அதை தொடராமல் இருக்கலாம் இல்லே”
“அதனால் தான் சிவனேன்னு இங்கே வந்து உட்கார்ந்து கொண்டு விட்டேன்”
“சிவனேன்னு?” என்று அவளைப் பார்த்தவன் “தடால்புடால்னு” என்று கேலி செய்தான்.
அவனுடைய கேலியை ரசிக்கவோ அல்லது இது போன்ற சமயங்களில் வழக்கமாக செய்வதைப் போல விளையாட்டாக வம்பிழுக்கவோ அவனோடு வார்த்தைக்கு வார்த்தை மல்லு கட்டவோ முடியாத மனநிலையில் இருந்தாள் அவள். “ஆமாம். அப்புறம் நான் வேற என்ன செய்ய?” சொன்னவளின் கண்கள் மீண்டும் கலங்கத் தொடங்கியது.
“சரி விடு” அவள் அழுவதைப் பார்க்கப் பொறுக்காமல் “தினப்படி மண்டகப்படி தானே. இதில
இன்னைக்கு என்ன புதுசா?” என்றான் பரிவுடன்.
“தினப்படி மண்டகப்படி இல்லை”
“அப்புறம்?”
“உங்களுக்கு நிஜமாகவே தெரியாதா? இல்லே தெரியாத மாதிரி இருக்கீங்களா?”
“நான் இப்போ தானே தூங்கியே எழுந்தேன்”
“இன்னைக்கு எல்லாரும் வராங்க”
“ஓ”
“ஆமாம். ஓ தான்” என்றவளுக்கு இப்போது கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.
“பஞ்சாயத்து..?” என்று நெடுமூச்செரிந்தான் அவன்.
“ம்” என்று அவளும் பெருமூச்செறிந்தாள்.
அரவிந்தனின் சொந்த ஊர் அம்பாசமுத்திரம் பக்கம் ஒரு குக்கிராமம். இவன் படித்து சென்னையில் மத்திய அரசு நிறுவனத்தில் உயர்நிலை அதிகாரியாக வேலை வாங்கிக் கொண்டு இங்கேயே செட்டில் ஆகி விட்டான். அர்ச்சனாவின் குடும்பமும் திருநெல்வேலியில் மிகப் பெரிய ஜவுளி ஸ்தாபனதுடன் தங்க வைர நகைகள் வியாபாரம் செய்யும் பெரிய தலைக்கட்டுக் குடும்பம் தான்.
அரவிந்தனுக்கும் அர்ச்சனாவுக்கும் திருமணம் முடிந்து வருகிற மாதம் பத்தாம் தேதியுடன் பத்து வருஷம் ஆகிறது. வழக்கம் போல திருமணம் முடிந்ததும் உடனே வாரிசை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர் அரவிந்தனின் பெற்றோர்கள் கோபாலனும் பூமாவும். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பை இந்த பத்து வருஷமும் பொய்யாக்கிக் கொண்டுதானிருந்தார்கள் இளம் தம்பதிகள் இருவரும்.
அரவிந்தனின் அக்கா ஆனந்தி பள்ளிப் படிப்புடன் இளம் வயதில் திருமணம் முடித்து கையோடு பெண் ஒன்றும் ஆண் ஒன்றுமாக இரு பிள்ளைகளை பெற்றவள். உள்ளூரில் திருமணம் முடிந்தவள். அர்ச்சனாவின் தந்தை சிவநேசனின் குடும்பம் இருவத்தி ஐந்து தலைக்கட்டுக் குடும்பம். எல்லார் வீட்டிலும் அடுத்தடுத்து பிள்ளைகள் பிறந்து குடும்பம் இன்னும் பலுத்துக் கொண்டுதானிருந்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் சிவநேசனின் குடும்பத்தில் மட்டும் வாரிசு இல்லை. அது மிகப் பெரிய குறையாக மாறியிருந்தது.
இந்த பத்து வருசத்தில் பிள்ளையில்லாத ஏனைய தம்பதிகள் போல உலக வழக்கப்படி எல்லா தெய்வங்களுக்கும் உடல் வருத்தி விரதமிருந்து கோயில் கோயிலாக சுற்றி அங்கபிரதட்சணம் செய்து, மண்சோறு உண்டு அவர்கள் சொன்னார்கள் அதை செய் என்று இவர்கள் சொன்னார்கள் இதை செய் என்று எவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் மனதார முழு நம்பிக்கையுடன் செய்து கொண்டும் தானிருந்தாள் அர்ச்சனா. தனிப்பட்ட வகையில் அவளுடைய வேண்டுதல்களுக்கும் அந்த தெய்வம் செவி சாய்க்கவில்லை. இருந்தாலும் அவள் நம்பிக்கை இழக்கவில்லை.
ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக வீட்டினரின் பொறுமையும் அக்கறையும் குறைந்து போய் அவளை பார்க்கும் பார்வையில் இளக்காரம் ஏறி அவள் மனதை மிகவும் நோகடித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அவள் அதை எதையும் சட்டை செய்யாமல் தன் போக்கில் தான் வாழ்ந்து கொண்டிருந்தாள்.
தன்னுடைய மகளை சென்னையில் திருமணம் செய்து வைத்து அவளுக்கு பேறு பார்த்து ஒரு அழகான பேரனை பெற்று விட்ட திமிரில் ஆனந்தியின் ஆட்டம் கொஞ்சம் அதிகப்படியாகவே இருந்தது. மகளின் வீட்டிற்கு வரும் போதெல்லாம் பொண்ணு வீட்டில் தங்க முடியுமா என்று இங்கே தம்பி வீட்டில் தான் தங்குவாள் கணவர் சந்திரமௌலியுடன். தங்குபவள் சும்மாயிருப்பதில்லை. நேற்று பிறந்து இன்று திருமணம் முடித்த தன் மகள் கூட ஈன்று விட்டாள். ஆனால் இன்னும் அர்ச்சனாவின் வயிற்றில் ஒரு புழு பூச்சி வைக்கவில்லை என்று ஏதேனும் சொல்லிக் கொண்டேயிருப்பாள்.
அத்தனையும் அவளும் அவள் தாய் பூமாவும் சேர்ந்து செய்வது தான். மாமியாரின் விமர்சனத்தில் நாத்தனாரின் எண்ணங்கள் இருக்கும். அதேப்போல நாத்தனாரின் விமர்சனங்களில் மாமியாரின் நொடிப்பு இருக்கும். அது தெரியும் அரவிந்தன் அர்ச்சனா இருவருக்கும். அர்ச்சனாவிற்கு நேரிடும் துன்பங்களில் ஒரு விஷயத்திற்காக ஒருவரை மட்டும் கோபிக்க இயலாது. தாயும் மகளும் இருவரும் இணைந்தே தான் மருமகள் அர்ச்சனாவை வார்த்தையாலும் பார்வையாலும் துன்புறுத்திக் கொண்டிருந்தனர்.
அவனை வேறு திருமணம் செய்து கொள்ள சொல்லி தனிமையில் கணவனிடம் சொல்லி விட்டாள் அர்ச்சனா. பிறக்காத பிள்ளைக்கான அன்பையும் சேர்த்து தனக்கு அளவிட இயலாத வகையில் அக்கறை கொள்ளும் மனைவியின் அருகாமை பழகி விட்டிருந்த அரவிந்தனுக்கு அர்ச்சனா இல்லாத ஒரு வாழ்க்கையை கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை. வீட்டினரின் நச்சரிப்பையும் சமாளிக்க வகை தெரியவில்லை. தனக்கு எதிரில் இருப்பவர்களிடத்தில் காட்ட முடியாத கோபத்தை தனக்குரியவளிடம் காட்டுவான். ”நீ அமைதியாக இரேன். யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகட்டும்” என்று.
அக்காவோ அம்மாவோ எல்லை மீறி பேசும் போது “இப்போது எங்களுக்கு என்ன அப்படி வயசாகிப் போச்சுன்னு இப்படி குதிப்பீங்க?” என்று அவர்களையும் ஒரு சாடு சாடி வாயடைக்க வைத்து விடுவான்.
கடந்த மாதம் வந்த போது அரவிந்தனின் அக்கா “இதெல்லாம் வேலைக்கு ஆகாது. ரெண்டு பேரும் மருத்துவரிடம் போய் டெஸ்ட் பண்ணிக்கணும்” என்று ஆர்டரே போட்டாள்.
“அது தான் நான் போய்க்கிட்டு தானே இருக்கேன்” என்றாள் மெல்லிய குரலில் அர்ச்சனா.
“உனக்கு ஒன்னும் குறையில்லை என்று சொன்னாரா?” என்று கிண்டலாக கேட்டாள் ஆனந்தி.
“அப்படியில்லை..” என்று இழுத்தாள் அவள்.
“வேறு எப்படியாம்?”
“கொஞ்சம் தாமதமாகும் என்று சொன்னார். மருந்து மாத்திரை கொடுத்திருக்கிறார். சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்”
தன்னுடைய அக்கா மனைவியை மிகவும் அதிகமாக நோகடிப்பதைப் பொறுக்க மாட்டாமல் “நான் கூட செக்கப் போனேன் அக்கா” என்றான் கூர்மையாக.
“உனக்கென்னடா சிங்கக்குட்டி. நம்ம வம்சத்தில யாருக்கு பிள்ளை பிறக்காம போயிருக்கு” என்று அவன் கோலத்தில் பாய்ந்தால் அவளோ தரையில் பாய்ந்தவளாக.
“இருந்தாலும் செக்கப் பண்ணிக்கிட்டேன் அக்கா”
“சரி தான். என்ன சொன்னாங்க?”
“அவருக்கு ஒன்னும் குறையில்லையாம்” என்றாள் அர்ச்சனா. அந்த குரலின் பொருள் எனக்குத் தான் குறையிருக்கிறது என்று அர்த்தமானது.
“அவனுக்கு குறையிருக்காது என்று தான் தெரிந்த விஷயமாச்சே” என்று பெருமையுடன் சொன்னவள் “உன் விஷயம் என்னாச்சு?” என்று இதயத்தின் நடுவில் ஒரே குத்து குத்தினாள்.
“கொஞ்சம் தாமதமாகுமாம்” என்றாள் அர்ச்சனா கிளிப்பிள்ளையைப் போல சொன்னதையே மீண்டும் சொல்லி.
“அது தான் சொன்னேன். இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு. அடுத்த மாசம் வரும் போது உங்க மக்க மனுஷாளை வைத்துக் கொண்டு பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும்” என்று கண்டித்து சொல்லி விட்டாள் ஆனந்தி.
“என்னம்மா இது?” என்று போனில் தாயிடம் கோபப்பட்டான் அரவிந்தன்.
“என்ன என்னம்மா? அக்கா சொன்னதில் என்ன தப்பிருக்கு? ஊரில் உலகத்தில் இல்லாத விஷயமா ரெண்டாம் கல்யாணம் கட்டறது”
“அதுக்காக?”
“நாங்க ஒன்னும் அவளை தள்ளி வைக்க சொல்லலையே. அவ பாட்டுக்கு ஒரு பக்கத்துல இருந்துட்டுப் போகட்டும்”
”கொழந்தையில்லேன்னு விவாகரத்து பண்ண முடியாது. சட்டத்துல இடமில்ல. இன்னொரு கல்யாணம் கட்டினா நான் ஜெயிலுக்குப் போகணும்” என்று மிரட்டினான்.
அதெற்கெல்லாம் அஞ்சுபவளா அவனைப் பெத்த பூமா. “மேற்கொண்டு ஞை ஞைன்னு பேசிக்கிட்டு இருக்காதே.அடுத்த மாசம் நீங்க இங்கே வரும் போது அவுங்களையும் வரவழைப்போம். பேசி ஒரு முடிவுக்கு வந்துடுவோம். அவ்வளவு தான்” என்றாள்.
அந்த நாளும் இந்த நாளோ!
காலையில் எழுந்ததும் சூடாக காப்பிப் போட்டுக் கொண்டு வந்து கையில் தந்த மருமகளை ஏதோ ஒரு எரிச்சலில், ஏதோ என்ன ஏதோ? எதுக்கு அப்படி இப்படின்னு பூசி மொழுகுவது? பிள்ளை இல்லாத மலடியை என்ன சொன்னா தான் என்ன? அப்பவாவது ரோஷம் வருதா பாரு அந்த வறண்டு போன வரளச்சிக்கு? என்று சிடுசிடுத்துக் கொண்டாள் பூமா.
காலங்காலையில் புருஷனிடம் போய் கண்ணைக் கசக்கி கொண்டு போய் நிற்பாள். உடனே அவன் கிளம்பி வந்துடுவான் என்னிடம் சண்டை போட. வரட்டும். இன்னைக்கு அவன் ஏதாவது சொல்லட்டும். வெச்சிகிறேன். நான் என்ன வெச்சிக்கறது? அது தான் அவுங்க வீட்டு மனுஷாளையும் வரச் சொல்லியிருக்கோமே. அவர்களும் தான் வரப் போறாங்களே. வரட்டும். அவுங்க வீட்டு சரக்கு நல்லது இல்லேன்னு அவுங்களுக்கும் தெரியும் தானே. அவுங்களே இதுக்கு ஒரு முடிவு சொல்லட்டும். அதை விட்டுட்டு கீழேயும் மேலேயும் பார்த்துக்கிட்டு உக்காந்திருந்தா எப்படி? நாமளும் மீன மேஷம் பார்த்துக்கிட்டு இருக்காம உடச்சி பேசிடனும் என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டாள் பூமா.
பின்னே பாவம் புண்ணியம் பார்த்துக் கொண்டிருந்தால் ஆச்சா? அக்கம்பக்கம் பங்காளிங்க முன்னெல்லாம் அரசபுரசலா கேட்டுட்டு இருந்தவங்க இப்போல்லாம் மூஞ்சிக்கு நேராவே கேக்கிறாங்க என்ன பூமா எப்பத் தான் நீ பாட்டியா ஆவப் போறேன்னு. அது தான் ஆயிட்டேனே என் மவ தான் பெத்து வெச்சிருக்காளே ஒரு மாணிக்கத்தை. இப்போ அதுவும் ஒரு முத்தை பெத்திருச்சே. இன்னும் என்ன என்று சொன்னால் ஊரான் வூட்டு சரக்கெல்லாம் உன்னுதுன்னு ஆவுமான்னு பதிலுக்கு கேக்கறாங்க. என்ன செய்ய?
மேலே போன வரளச்சி இன்னும் கீழே இறங்கலை. இன்னைக்கு சமையல் அவ்வளவு தான். மதியத்திற்கு மேல் அவுங்க வீட்டாளுங்க வந்துடுவாங்க. அதுக்குள்ள என்னத்தையாவது சமச்சி வைப்போம் என்று எண்ணமிட்டவாறு எழுந்து அடுக்களைக்குள் போனாள் பூமா. இன்னைக்கு இருக்கும் மனநிலையில் வீட்டில் யாருக்கும் சாப்பிடப் பிடிக்காது தான். நமக்காக இல்லையென்றாலும் மருமகனோடு மகள் வந்து விடுவாளே மதிய சாப்பாட்டிற்கு. அதற்காகவாவது சமைக்கணுமே. சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தவளின் பார்வை வீட்டின் பின்னால் இருக்கும் மாட்டுத் தொழுவத்திற்கு போனது.
பழனி மாட்டுக் கொட்டகையில் எல்லா மாடுகளுக்கும் தீவனம் வைக்கும் வேலையாக இருந்தான். அவள் பார்வை வட்டத்தில் சிவப்பி பட்டது. தஞ்சாவூர் பக்கத்தில் கிடைக்கும் உம்பளச்சேரி நாட்டுப்பசு. உள்ளூர் கறவை மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று கவலைப்பட்ட
கோபாலன் அதிகப்படியான காசு கொடுத்து இதை வாங்கிக் கொண்டு வந்து கட்டியிருந்தார்.
சிவப்பி நன்றாக பால் கறக்கக் கூடியது. என்ன தான் பளபளவென இருக்கும் ஜெர்சி பசுக்களின் அதீத பால் உற்பத்தி அதிக வரும்படியைக் கொடுத்தாலும் கோபாலனுக்கு இந்த நாட்டுப் பசுவின் மீது அலாதி பிரியம். அதிலும், சிவப்பாக அழகாக கண்களில் மையிட்டதைப் போல குறுகுறுவென பார்த்துக் கொண்டு வாலை வீசி வீசி கொசு விரட்டிக் கொண்டு, தீனி வைக்கவோ பால் கறக்கவோ அருகில் போகும் போது ஆசையுடன் அவள் முகத்தை நாவால் நக்கி அவள் மனதை நெகிழ்த்தி சாதுவாக நிற்கும் சிவப்பியிடம் பாசம் அதிகம் தான் பூமாவிற்கும்.
வாங்கி வந்து கட்டிய புதிதில் கன்று ஈன்று பால் கறந்ததோடு சரி. அந்த கன்றும் போன வருஷம் பெஞ்ச பெரு மழையின் போது இறந்து போயிற்று. அடுத்தடுத்து கன்று ஈனவில்லை என்ற பெரும் குறையும் உண்டு இருவருக்கும். என்னன்னவோ முயற்சிகள் செய்தும் அது கருத்தரிக்கவேயில்லை. சரி பாலுக்காவது இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு வைத்திருந்தார்கள். இப்போது பாலும் வறண்டு போய் விட்டது. மடி காய்ந்து கிடக்கிறது. உக்கும். பாலுக்கு கூட ஆகவில்லை என்று தாயும் மகளும் முணுமுணுத்துக் கொண்டிருந்ததை கேட்க சகிக்காமல் நேற்று தான் அதை விற்று விட சொல்லி விட்டார் கோபாலன். அந்த சிவப்பிக்கு மட்டும் பழனியப்பன் தீனி வைக்கவில்லை.
இங்கேயிருந்து பார்த்துக் கொண்டிருந்தவள் அடுக்களையை விட்டு வெளியே வந்து “பழனி, சிவப்பிக்கு தீனி வைக்கவில்லையா?” என்று கேட்டாள்.
“வைக்கணும்மா”
“அப்படியே அதுக்கு உடம்பைக் கழுவி நெத்தியில் ஒரு பொட்டும் வெச்சிட்டு அப்புறம் தீனி வை பழனி”
“இன்னைக்கு அதை ஏத்திக்கிட்டுப் போக வண்டி வருதும்மா”
“அதுனாலே”
“தீனி வைக்கிறேன்”
“குளிக்க வை பழனி”
“அது தான் போகப் போவுதே”
“போனால் என்ன பழனி? அதை நல்லபடியா அனுப்பி வைக்க வேண்டாமா?”
“போவரதுன்னு ஆகிப் போச்சு. குளிச்சிட்டு தான் போகணுமா. விடுங்கம்மா” என்றான் இவர்கள் வீட்டில் சிறு வயதிலிருந்தே வேலை செய்யும் உரிமையில்.
“மனுஷனோட மவுசே அப்படித் தான் போல” என்றாள் வருத்தமாக பூமா.
“பிரயோசன்மில்லைன்னா தள்ளி விட்டுடறது தானே நல்லதும்மா”
“ஏன் பழனி இப்படி பேசறே?” என்றாள் ஆதங்கத்துடன். அவன் சொல்வது உண்மை என்பதால் அது சொன்னவனையும் கேட்டவளையும் சுட தானே செய்யும். ஆனால் இங்கே சொன்னவனை அது சுடாது. ஏனெனில் அது அவனுடையது அல்லவே. அதனால் அவனுக்கு பாவமுமில்லையே. உடமைப்பட்டவர்கள் எடுக்கும் முடிவின் பலாபலன்கள் உரியவர்களுக்குத் தானே!
“இதை மேய்ச்சலுக்கு கூட்டிக்கிட்டுப் போகும் வெள்ளைத்துரை கிழம் கூட கேட்டுச்சி. இன்னுமா இதை வெச்சிக்கிட்டு இருக்கீங்கன்னு” என்றான் பழனி இகழ்ச்சியாக.
“அவனுக்கு என்னவாம்?” என்று கேட்டாள் நெற்றிப் புருவம் சுருங்க.
“உலக வழக்கம் அது தானே.”
“எது தானே?”
“காலுக்கு உதவாத செருப்பைக் கழட்டி விடறது”
“செருப்பும் மாடும் ஒண்ணா?”
“செருப்பும் மனுஷனுமே ஒன்னு என்னும் போது மாடு எம்மாத்திரம்?”
“மனசுக்கு கஷ்டமாயிருக்கு பழனி”
“அப்போ இதை இங்கேயே வெச்சிக்கலாமா?’
“அய்யாட்ட விக்க சொன்னதே நான் தானே”
“அப்புறம் என்னம்மா? மனசை தேத்திக்கிட்டு போவீங்களா” என்றவாறே சிவப்பிக்கு தீனி வைத்தான் பழனியப்பன்.
“பூமா, பூமா” என்று குரல் கொடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள் பூமாவின் ஓர்ப்படி சங்கரி. அருகே குடியிருக்கிறாள். கோபாலனின் அண்ணன் மனைவி. ஓய்வுப் பெற்ற தமிழாசிரியை. ”இங்கேயா இருக்கே?” என்று தான் கையில் கொண்டு வந்திருந்த மாங்காயை அவள் கையில் கொடுத்தாள். “இந்தா, போன தடவை அரவிந்தன் வந்த போதே மாங்கா பச்சடி கேட்டான். செஞ்சிக் கொடு பூமா” என்றாள்.
“ஏதோ அவன் பொண்டாட்டி மாங்கா கேட்கலைன்னாலும் இவனாவது கேட்கிறானே” என்று நொடித்தாள் பூமா.
நான் இந்த ஆட்டத்திற்கு வரலையடி ஆத்தா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட சங்கரி
“பழனியோடு என்ன கந்தாயம்(பஞ்சாயத்து)?” என்று கேட்டாள்.
“இதோ இந்த சிவப்பியை இன்னைக்கு வண்டி ஏத்தறோம்மா. அதை குளிக்க வெச்சி தீனி போட்டு அனுப்புன்னு சொல்லுறாங்க எங்க அம்மா”
“நல்லது தானே” என்றாள் சங்கரி.
“போற மாட்டுக்கு என்ன வயணம் வேண்டிக் கிடக்குது?” என்றான் பழனி.
“மனசுக்கு சங்கடமாயிருக்கு அக்கா” என்றாள் பூமா.
சங்கரி இந்த மாட்டின் விவரம் அறிந்தவள் ஆதலால் “ஒரு கண்ணு கிண்ணு ஈனலை. சரி பாலுக்காவது இருந்துட்டுப் போகட்டும்னு பார்த்தா அதுவும் இல்லை. அப்புறம் எதுக்கு தீனிக்கு வெட்டி செலவு?” என்றாள் சமாதானமாக.
“இத்தனை நாள் பிரயோசனமா தானே இருந்துச்சு” என்றாள் பூமா நியாய புத்தியோடு.
“அதுக்கு பார்த்தா ஆகுமா?” என்றான் பழனி.
“என்ன பழனி, அப்பா அம்மா பிரயோசனமா இல்லை. தீனிக்கு கேடுன்னு வீட்டை விட்டு விரட்டிடுவியா என்ன?” என்று கேட்டாள் சங்கரி.
“மனுஷாளும் மாடும் ஒண்ணா?” என்று கேட்டான் பழனி.
“இதுநாள் வரைக்கும் அப்படித் தானே பராமரித்தோம்” என்றாள் பூமா.
“அது நம்மளோட நல்ல புத்தி” என்றான் பழனி.
“இப்போ அந்த நல்ல புத்தி எங்கே போச்சு?” என்று கேட்டாள் சங்கரி.
“நேரத்துக்கு தகுந்த மாதிரி தானே இருக்கணும்” என்றான் பழனி.
“நிமிஷத்துக்கு நிமிஷம் மாறுவதுக்கு நாம என்ன பச்சோந்தியா? மனுஷனா இருந்தா என்னைக்கும் ஒன்னு போல இருக்கனும்டா பழனி” என்றாள் சங்கரி.
ஏனோ சங்கரியின் இந்த வார்த்தைகள் பூமாவை சுருக்கென்று குத்தியது. பழனி அவளுக்கு பதிலேதும் சொல்லாமல் சிவப்பியைப் பிடித்துக் கொண்டு போனான். அதுவோ பூமாவை திரும்பி ஒரு பார்வைப் பார்த்து விட்டு அவன் பின்னோடு அமைதியாக நடந்தது.
“:அதை எங்கே இழுத்துக்கிட்டுப் போறே?” என்று கேட்டாள் பூமா.
“பின்னாடி மரத்தில கட்டி வைக்கிறேன்மா” என்றான் அவன்.
“ம்மா..ம்மா..ம்மா” என்று குரல் கொடுத்தது சிவப்பி.
அதன் குரல் பூமாவின் அடிவயிற்றை பிசைந்தது. நெஞ்சை என்னவோ செய்தது. தினசரி கருக்கலில் எழுந்ததும் பின்கதவை திறந்து கொண்டு இவள் வரும் சத்தம் கேட்டு அந்த இருட்டிலும் ம்மா..ம்மா என்று குரல் கொடுக்கும். மனதிற்குள் இருட்டைக் கண்டால் இருக்கும் பயம் அதன் குரலில் தெளிந்து விடும் பூமாவுக்கு. எத்தனை நாட்கள்? இல்லையில்லை பத்து வருடங்கள். அர்ச்சனாவைப் போல. அதிலும் அதிகாலையில் காப்பியுடன் தன்னை நாடி வந்து கையில் கொடுக்கும் அர்ச்சனாவைப் போல. மனசு என்னவோ செய்தது பூமாவுக்கு.
“சமையல் ஆகிப் போச்சா?” என்று கேட்டாள் சங்கரி.
“ஆச்சுக்கா. இன்னைக்கு சாயங்காலம் சம்பந்தி வீட்ல எல்லாரும் வராங்க இல்லே”
“ஓ ஆமாம். இன்னைக்குத் தானா அது?”
“ஆமாம். மதிய சாப்பாட்டுக்கு மாப்பிள்ளையும் ஆனந்தியும் வந்துடுவாங்க”
“சரி தான். நான் போயிட்டு சாயங்காலமா வரேன்” என்று எழுந்தாள் சங்கரி.
“காப்பியை குடிச்சிட்டுப் போக்கா”
அவள் கொடுத்த காப்பியை வாங்கிக் கொண்டு “எங்கே அர்ச்சனாவைக் காணோம்?” என்று கேட்டாள்.
“அவளுக்கு கோபம். மேலேயிருந்து இன்னும் இறங்கி வரலை. இந்த வெட்டி ரோஷத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை. அது போகட்டும். நேத்தே பெரியவன் ஆஸ்திரேலியாவிலிருந்து போன் பண்ணலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தியே. இன்னிக்காவது கூப்பிடுவானா?”
“அவன் வேலையா இருக்கானாம். சமயம் கிடைக்கும் போது கூப்பிடுவானாம்” என்று பெருமூச்செறிந்தாள் சங்கரி.
“ஓஹோ. அம்மாவை விட எல்லாம் முக்கியமா போச்சு இந்த காலத்து பிள்ளைங்களுக்கு”
“நாலு பிள்ளைகளைப் பெத்தேன். இன்னைக்கு நாளும் நாலு திசையில் இருக்குதுங்க. உங்க மாமா போனதுக்கு அப்புறம் நான் தனியாத் தான் இருக்கேன். பெத்ததுங்களா என்னோடு இருக்குதுங்க? இல்லை நான் தான் வீடு வாசலை விட்டுப் போட்டு அதுங்களோடு போய் இருக்கிறேனா?”
“ஏன் இப்படி அலுத்துக்கறே?”
“என்னத்தை சொல்வது? புள்ளைப் பெத்தவன்னு தான் பேரு. அதுவும் ஒன்னு இல்லை நாலு. ஆனா இன்னைக்கு யாரை நம்பி நான் பொழைக்கிறேன்? பெத்தா தான் பிள்ளையா? இதோ இந்த பழனியோட பொண்டாட்டி தான் தினம் வீடு கூட்டி பாத்திரம் விளக்கி வெச்சிட்டு தலை தேய்த்து குளிப்பாட்டி விட்டுட்டு போவுது. நீயும் அப்பப்போ எதையாவது சமைச்சிக் கொடுத்துடறே. இந்த வெங்காயத்துக்கு பிள்ளைகளை பெக்காமலே இருந்திருக்கலாம்”
“நமக்குன்னு வாரிசு வேணும்னு தானே பிள்ளை வேணும்னு மல்லாடுவது” பூமாவின் பதிலில் தொக்கி நிற்கும் கேள்வியானது சங்கரிக்கானது இல்லை. தனக்கானது. தன்னுடைய மனப் போராட்டத்திற்கானது.
“எதுக்கு வாரிசு வேணும்?”
“நம்ம சொத்தை அனுபவிக்க வாரிசு வேண்டாமா?”
“வேண்டாம்” என்றாள் சங்கரி கூர்மையாக.
“என்னக்கா இப்படி சொல்றே?”
“அன்னைக்கு ஒரு புத்தகத்தில் படிச்சேன் பூமா. கடவுளுக்கு யாரிடம் பிரியம் இல்லையோ அவுங்களுக்கு ஒரு தண்டனை கொடுப்பாராம்”
“தண்டனையா? என்ன தண்டனை?”
“தன் காலத்துக்குப் பிறகு தன் சந்ததிகளுக்கு சொத்து சேர்த்து வைக்கும் தண்டனை தான்”
“ஓஹோ”
“கடவுளுக்கு யாரிடம் பிரியம் இருக்கோ அவனுக்கு என்ன ஆசீர்வாதம் தெரியுமா?”
“ஆசீர்வாதமா?”
“ஆமாம்”
“என்னக்கா?” என்று கேட்டாள் சுவாரஸ்யமாக.
“தான் உழைச்சி சம்பாதிச்சதை தான் அனுபவிக்கிறது தான்”
“உங்காமல் கொள்ளாமல் சேர்த்து வைக்க வேண்டாம் இல்லையா?”
“அப்படித் தான்”
“அப்படின்னா ஊரு உலகத்தில எல்லோரும் எதுக்கு பிள்ளை பெத்துக்கணும்?”
“ஏதோ நம்ம சந்தோஷத்துக்கு பெத்துக்கறது தான்” என்றாள் தீர்மானமாக.
“நாம செத்ததுக்கு பொறவு?”
“செத்தா கொள்ளி போடணும்னு தானே கஷ்டப்பட்டு பெத்துக்கறது” என்றாள் சங்கரி.
“உம். அது தானே. நல்லபடியா நம்மை தூக்கிப் போட நமக்குன்னு ஆளு வேணும் இல்லே”
“உன்னிடம் சொல்வதில என்ன இருக்கு பூமா” என்று கண் கலங்கினாள் சங்கரி.
“ஏனக்கா?” என்று அவளை பரிதாபமாகப் பார்த்தாள்.
“வாரத்துக்கு ஒரு நாள் பேசவே மீன மேஷம் பாக்குறாங்க நம்ம பிள்ளைங்க. இவுங்களா வந்து நமக்கு பாடு பாக்கப் போறாங்க. செத்துட்டேன்னு தெரிஞ்சா நல்லபடியா தூக்கிப் போட்டா போதும்னு தான் நெனப்பேன்” என்று கலங்கிய கண்களை புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டவளைப் பார்க்க பாவமாக இருந்தது பூமாவுக்கு. எனவே ஆறுதலாக அவள் தோளை தொட்டாள்.
“எனக்கு ஏதாவது ஆகிப் போச்சுன்னா என் பிள்ளைங்களா வந்து எனக்கு கொள்ளி வைக்கப் போறாங்க. உன் மவன் தான் செய்யணும்”
“ஏனக்கா?” என்றாள் மேற்கொண்டு என்ன சொல்வது என்று புரியாமல்.
“இல்லை பூமா, என் மனசு கிடந்து அடிச்சிக்கிது. என்ன பெத்து என்ன பிரயோசனம்? அதுக்கு பிள்ளையில்லாத மலடின்னே இருந்திருக்கலாம். நாலு பேத்துக்கு நம்மைக் கண்டா ஐயோ பாவம்னு இருக்கும்”
மதிய உணவிற்கு கீழே இறங்கி வந்தாள் அர்ச்சனா. ஆனந்தியும் அவள் கணவரும் கூட வந்து விட்டனர். அர்ச்சனாவின் முகம் சரியில்லை. இருந்தாலும் எல்லாருக்கும் பார்த்து பார்த்து பரிமாறினாள். ஆனந்தி எப்போதும் போல வளவளவென்று பேசிக் கொண்டிருந்தாள். ஆனால் நேர்மாறாக பூமா அமைதியாக இருந்தாள். மனசுக்குள் என்னென்னவோ ஓடிக் கொண்டிருந்தது அவளுக்கு.
பால் கறந்து கொண்டு வந்த பழனி அம்மா என்று குரல் கொடுத்தான். பின்புறம் போனவள் கண்ணில் சிவப்பி பட்டாள். முகம் தெளிவாக இல்லை. அதற்கு வாய் தான் இல்லையே தவிர மனசு என்று ஒன்று இருக்கும் தானே. அதன் வேதனை அதற்கு. அடிமாடாக அனுப்பபட்டிருந்தால் கூட பரவாயில்லை. மலட்டு மாடு என்று தானே நம்மை விரட்டி விடுகிறார்கள் என்று நினைத்ததோ! பார்வையில் அத்தனை ஏக்கம்.
“அம்மா, வண்டி இன்னைக்கு வரலையாம். நாளைக்குத் தான்” என்றான் பழனி.
“என்னைக்கும் வேண்டாம்” என்றாள் பூமா சிவப்பியைப் பார்த்துக் கொண்டே.
“அம்மா” என்றவன் திகைத்தான்.
“ஆமாம் பழனி. அது பாட்டுக்கு இருந்துட்டு போகட்டும்”
“என்னம்மா தீனிக்கு பிடிச்ச கேடுன்னு சொல்லிட்டு இருந்தே. இப்போ இப்படி சொல்றே?” என்று கேட்டவாறே வந்தாள் ஆனந்தி.
“பிரயோசனம் இல்லைன்னா துரத்தியா விட முடியும்?” என்று எங்கோ பார்வையாக சொன்னவளின் முகம் மிகுந்த யோசனையாக இருந்தது.
“சிவப்பிக்கு ஒரு பிரி வைக்கோல் வெச்சிடு” என்ற பூமாவை பழனி விநோதமாக பார்த்தான்.
இந்த சிவப்பிக்கு வைக்கோல் திங்கத் தான் வயிறு இருக்கு. ஒரு கண்ணு ஈன இல்லே என்று எத்தனை நாள் சொல்லியிருப்பாள் இந்த பூமா. இன்று நேர்மாறாக சொல்கிறாளே என்று ஆச்சரியமாக பார்த்தான். சிவப்பியும் தான். அதுக்கு வாய் இல்லாவிட்டால் என்ன? மனசு இருக்கே. அந்த மனசுக்கு எதிரில் இருக்கும் மனிதர்களின் மனசு புரியாதா என்ன? அந்த மனதில் ஊறும் அன்பை புரியாதா என்ன! அதன் கண்களில் கண்ணீர் தான் கசிந்ததோ அல்லது நன்றி தான் ஊறியதோ! அண்ணாந்து அவள் முகத்தை நக்கிக் கொடுத்தது. கண்கள் கசிந்தது பூமாவுக்கு.
உள்ளே வந்த பூமாவுக்கு இன்றைய கந்தாயத்தின் அவசியம் தேவையில்லாமல் போய் விட்டது. மனது தெளிவாக இருந்தது. பார்வையில் இருந்த விசாலம் மனதில் இருந்த எண்ணங்களை மாற்றி விட்டது.
சம்பந்தி வீட்டினர் வந்து விட்டிருந்தனர். யார் முகத்திலும் ஈ ஆடவில்லை. விரும்பத்தகாத நிகழ்வை எதிர்பார்த்தவர்கள் இல்லையா! அந்த இடமே கனமான மௌனமாக இருந்தது. முதலில் யார் பேச்சை ஆரம்பிப்பது என்று தயக்கம் இருந்தது. ஆனந்தி தான் இருபுறமும் மாறி மாறி பார்த்து விட்டு பேச்சை ஆரம்பித்தாள்.”அர்ச்சனாவுக்கு..”என்று அவள் தொடங்கும் போதே
இந்த அக்கப்போருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பதை காட்டிக் கொள்ள விரும்பியவனாக அரவிந்தன் சொன்னான்.”அர்ச்சனாவுக்கு என்ன?” என்று.
அவனை ஒரு முறை முறைத்து விட்டு “ஒன்னும் தெரியாதவனைப் போல பேசறே?” என்று கேட்டாள்.
“நான் சொல்றேன்ம்மா” என்று முந்திக் கொண்டு அர்ச்சனா தொடங்கினாள்.
“அர்ச்சனா போய் எல்லாருக்கும் டிபன் எடுத்து வை. அரவிந்தா நீயும் அவளுக்கு ஒத்தாசை செய்” என்று ஆணையிடும் குரலில் சொன்னாள் பூமா.
இருவரையும் உள்ளே அனுப்பி விட்டு அம்மா அர்ச்சனாவை அழைத்துக் கொண்டு போக சொல்லப் போகிறாள் என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டவளாக “ஆமாம். அது தான் சரி” என்று ஆமோதித்தாள் ஆனந்தி.
“சம்பந்தி..” என்று தொடங்கினார் அர்ச்சனாவின் தந்தை.
“எங்க மக கிட்ட தான் தப்பிருக்குன்னு சொன்னாங்க அவுங்க பாக்கற டாக்டர் அம்மா. என்னன்னு சொல்றது? நாங்க எங்க பெண்ணை அழைச்சிக்கிட்டு போறோம்” என்று நேராக விஷயத்திற்கு வந்தாள் அர்ச்சனாவின் தாய்.
“அது..அப்படியில்லை. அழைச்சிக்கிட்டு எல்லாம் போக வேண்டாம். அவளும் இங்கேயே இருக்கட்டும்” என்றாள் ஆனந்தி.
“எதுக்கு?” என்று கேட்டது கோபாலன்.
“எதுக்குன்னா? தம்பிக்கு வேறு ஒரு பெண்ணைப் பார்த்து கட்டி வைக்கலாம் என்று நாம் ஏற்கனவே முடிவு செஞ்சது தானே அப்பா”
“கல்யாணம் ஆகி பத்து வருஷம் தானே ஆகியிருக்கு. உனக்கு அப்புறம் பத்து வருஷம் கழிச்சி தான் உன் தம்பி பிறந்தான்” என்றார் கோபாலன்,
“முதலில் நான் பிறந்துட்டேனே அப்பா” என்றாள் பொறுமையிழந்தவளாக ஆனந்தி.
சிகப்பி கூட வந்த புதிதில் கன்று ஒன்று போட்டது. கோமாரி வந்ததில் கண்ணு இறந்து விட அதன் பின் கோமாரி வந்த சிவப்பிக்கு வேறு கண்ணு நிற்கவில்லை என்றது பூமாவின் மனது.
“அதுக்கு என்னம்மா பண்றது? ஒவ்வொருத்தர் உடம்பு வாகு அப்படி” என்றார் கோபாலன்.
அவர்களே பேசி ஒரு முடிவிற்கு வரட்டும் என்பது போல பேசுகின்ற முகத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர் அர்ச்சனாவின் பெற்றோர்களும் உறவினர்களும்.
“இவ்வளவு பெரிய தலைக்கட்டு உள்ள குடும்பம் இது. எங்க வீட்ல மட்டும் அடுத்த வாரிசுன்னு ஒன்னு இல்லையா என்று எல்லாரும் கேட்கறாங்க” என்றாள் ஆனந்தி.
“கேட்கத் தானே செய்வாங்க” என்று ஒப்புக் கொண்டார் அர்ச்சனாவின் தந்தை.
“சில பேருக்கு கொஞ்சம் தாமதமாகத் தான் பிறக்கும்” என்று இழுத்தாள் அர்ச்சனாவின் தாய்.
“பிறந்தால் நல்லது தான். ஆனால் அதுவரைக்கும் காத்திருக்கனுமே” என்றாள் ஆனந்தி.
“ஆனந்தி, அதுவரைக்கும் நாமும் காத்திருக்கத் தான் வேணும்” என்றாள் பூமா.
திடுக்கிட்டது ஆனந்தி மட்டுமல்ல கோபாலனும் தான். ஏனெனில் நல்ல நாள் கிழமை என்று வரும் போதெல்லாம் இந்த வீட்டில் ஒரு குழந்தையில்லையே என்று வருந்தி வருந்தியே எல்லாரையும் வருத்தப்பட வைத்துக் கொண்டிருந்தவள் மனைவி பூமா. இப்போது அவளா காத்திருக்க சொல்கிறாள். பரவாயில்லையே. எப்படி இந்த மனமாற்றம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்
கோபாலன்.
“அம்மா என்னம்மா சொல்றே?” என்று திடுக்கிட்டு கூவினாள் ஆனந்தி.
கையில் டிபன் தட்டுக்களுடன் ஹாலுக்கு வந்த அரவிந்தனும் அர்ச்சனாவும் கூடத் தான் பூமாவின் வார்த்தைக்கு அதிசயித்து நின்று விட்டார்கள்.
எதிர்பாராமல் நடக்கும் காரியங்கள் நம்பக் கூடியதாக இருந்தால் அது அதிசயம். நம்பவே முடியாத காரியங்கள் நடந்தால் அது அற்புதம். இப்போது அற்புதம் தான் நடந்திருக்கிறது. அம்மாவாவது ஒரு குழந்தைக்காக காத்திருக்கலாம் என்று சொல்வதாவது? என்று மலைத்து நின்றான் அரவிந்தன்.
அர்ச்சனாவை விவாகரத்து செய்து விட்டு அரவிந்தனுக்கு வேறு ஒரு திருமணம் செய்து வைக்கலாம் என்று தாயும் மகளுமாக சேர்ந்து திட்டமிட்டிருக்கும் போது அர்ச்சனாவை தள்ளி வைக்காமல் அரவிந்தனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கலாம் என்று அம்மா சொல்லியிருந்தால் அது அதிசயம். இது எதுவுமே இல்லாமல் எல்லாம் பழையபடி இருக்கப் போவதாக அம்மா சொல்வது அற்புதமே அல்லாமல் வேறு என்னவாம் என்று திகைத்து நின்றாள் ஆனந்தி.
“ஆமாம் ஆனந்தி. நல்லா யோசிச்சு தான் சொல்றேன்” என்றாள் பூமா.
“நீ தானே அம்மா சொந்தக்காரவுங்க கேட்கறாங்க இந்த வீட்டுக்கு இன்னும் வாரிசு வரலையேன்னு கேட்கறாங்கன்னு”
“சொன்னேன் தான். ஆனால் யோசித்துப் பார்த்தேன் ஆனந்தி. பிள்ளைங்களை பெத்துட்டா மட்டும் அதுங்க நம்ம கூடயே இருந்துடப் போறாங்களா என்ன?” சொன்னவள் சங்கரியைப் பார்த்தாள். அவளும் ஆம் என்பதைப் போல தலையை ஆட்டினாள்.
“அவுங்க அவுங்க வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு போய்டப் போறாங்க. நாம தனியாத் தான் நிக்கப் போறோம். அதுக்கு எதுக்கு இருப்பவங்களை கஷ்டப்படுத்தறது” என்று தெளிவாக சொன்னாள் பூமா.
“அப்படின்னா இந்த வீட்டுக்கு வாரிசு..?” என்று கோபாலன், மனைவியின் மனநிலையை நாடி பிடித்துப் பார்க்க கேட்டார். ஏனெனில் நாளைப் பின்னே இது ஒரு பிரச்சினையாக இருந்து விடக் கூடாது இல்லையா ! தெளிவு படுத்திக் கொள்வது அதி முக்கியமாயிற்றே!.
“இந்த வீட்டுக்கு வாரிசா இல்லை. நம்ம ஆனந்தியின் மகள், அவளோட குழந்தை என்று அடுத்த தலைமுறைக்கும் வாரிசு தான் இருக்கே” என்றாள் பூமா.
“அம்மா என் பிள்ளைங்க இந்த வீட்டு வாரிசாக எப்படிம்மா ஆகும்?” என்று கேட்டாள் அப்போதும் தன் வீம்பை விட்டுக் கொடுக்காமல் ஆனந்தி.
“ஏன் ஆகாது?” என்று கேட்டார் அவள் கணவர். “என் பெற்றோருக்கு எத்தனை பாத்தியதை
உண்டோ அத்தனை பாத்தியதை உன் பெற்றோருக்கும் நம் பிள்ளைகள் மீது உண்டு. நீ இன்னும் எந்த காலத்தில் இருக்கே ஆனந்தி” என்றார் நச்சென்று.
“சம்பந்தி என்ன சொல்றீங்க?” என்று நெகிழ்ச்சியில் விக்கித்து நின்ற அர்ச்சனாவின் தாய் சுதாரித்துக் கொண்டு கேட்டாள்.
“நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. குழந்தை வேணும் வேண்டாம் என்று முடிவு எடுக்க வேண்டியது அரவிந்தன் தான். அவன் முடிவு தான் என் முடிவும்”
எல்லார் பார்வையும் அரவிந்தன் மீது விழுந்தது. திடீரென தாய் தன் பக்கம் பந்தை தள்ளி விட்டதில் திடுக்கிட்டவன் சுதாரித்துக் கொண்டான்.
அதற்குள் முந்திக் கொண்டு அர்ச்சனா “உங்களுக்கு குழந்தை வேண்டும் என்பது நியாயமான ஆசை தான். நீங்க வேறு ஒரு கல்யாணம் செஞ்சிக்கறதில் எனக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லை என்று விடுதலை பத்திரம் எழுதிக் கொடுத்து விடுகிறேன்” என்றாள்.
என்னடா இவள் வெண்ணை திரண்டு வரும் போது தாழியை உடைத்தார் போல பூமாவே சும்மாயிருக்கும் போது இவள் உறண்டையை இழுக்கிறாளே என்று அவளை உறுத்துப் பார்த்து முறைத்தாள் அவள் தாய். அவள் முறைப்பிற்கு இங்கேயிருந்தே “நியாயம் தர்மம்ன்னு ஒன்னு இருக்குல்லம்மா” என்றாள் அர்ச்சனா.
“அதே தான். உனக்கு மட்டும் தான் நியாயம் தர்மம் இருக்கா அர்ச்சனா? எனக்கில்லையா?” என்று அவளிடம் கேட்டான் அவள் கணவன்.
“இல்லைங்க..அது..அது” என்று தயங்கி தடுமாறினாள் அர்ச்சனா.
“அது..அது தான். நிறுத்து. எனக்கே இப்படி ஒரு குறையிருந்தால் நீ என்னை விட்டுட்டு வேறு கல்யாணம் பண்ணுவியா?” என்று கேட்டான் அவளை.
“ச்சை. என்னங்க இது?”
“ம். அதைப் போலத் தான் இதுவும்.உனக்கொரு நியாயம். எனக்கொரு நியாயமா?”
“உங்க முடிவு என்ன மாப்பிள்ளை?” என்று கேட்டார் அர்ச்சனாவின் தகப்பன்.
“ஒரே முடிவு தான் மாமா. என் மனைவியைத் தவிர வேறு ஒரு கல்யாணம் எனக்கு வேண்டாம்”
“அப்படின்னா குழந்தை?” என்று கேட்டாள் அர்ச்சனாவின் தாய்.
“திரும்ப முதலில் இருந்து ஆரம்பிக்காதீங்க. இந்த விவகாரம் முடிஞ்சிப் போச்சு” என்று எண்டு கார்ட் போட்டாள் பூமா.
எல்லாரும் மனமகிழ்ச்சியுடன் விடைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டார்கள். “என்னை நடுவீட்டில் கூப்பிட்டு வெச்சி மூக்கை அறுத்துட்டே” என்று கோபித்துக் கொண்டு போய் விட்டாள் ஆனந்தி. கோபம் ஆறியதும் தன்னால அவள் திரும்பி வருவாள் என்று தெரியாதா அவளைப் பெற்ற தாய்க்கு.
எல்லாரும் போன பின்பு தன் மாமியாருக்கு காலில் விழுந்து வணங்கி நின்றாள் அர்ச்சனா.”அத்தை இன்னைக்கு என் வாழ்க்கையை எனக்குத் திருப்பிக் கொடுத்திடீங்க. என்னைக்கும் நன்றி மறக்க மாட்டேன்” என்று அழுதாள்.
‘அசடு. நான் என்ன செஞ்சேன்?” என்று அவளை ஆதுரத்துடன் தழுவிக் கொண்டாள் பூமா.
“நீங்க ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் என் வாழ்க்கை மாறிப் போயிருக்கும்”
“இந்த சமூகத்தை நினைத்து உன்னை கஷ்டப்படுத்தி விட்டேன். என்னை நீயும் மன்னித்து விடு அர்ச்சனா” என்றாள் அவள்.
“அம்மா, சிங்கப்பூரில் ஒரு ஸ்பெசல் மருத்துவரிடம் பிக்ஸ் பண்ணியிருக்கேன். பத்து லட்சம் செலவாகுமாம். பார்த்துக்கலாம். எப்படியும் குழந்தை பிறந்து விடும்மா” என்று அவளை தோளுடன் அணைத்து ஆறுதல் சொன்னான் அரவிந்தன்.
“யாருக்காவோ, யாராவது ஏதாவது சொல்றாங்களே என்பதற்காகவோ அல்லது நம்முடைய எதிர்பார்ப்புகளுக்காகவோ குழந்தையைப் பெற்றுக் கொள்ளக் கூடாது அரவிந்தா. நம்முடைய சந்தோஷத்திற்காக மட்டும் தான் குழந்தைப் பெத்துக்கணும். புரிந்ததா” என்றாள் பூமா.
இந்த சமூகத்திற்கு பயப்படாமல் உற்றார் உறவினருக்கு பயப்படாமல் அவர்கள் யார் பேசுவார்களோ என்று பொருட்படுத்தாமல் நம் சந்தோசம் ஒன்று மட்டும் தான் முக்கியம் என்று முடிவெடுத்த பூமா நிச்சயம் சிங்கப் பெண் தானே!
நன்றி
Super super😍😍
Ipdi mamiyarrr yellarukum kedachaaa nalla erukkum antha veetuku vantha marumagal life…. Nice