Skip to content
Home » எந்தன் உயிரமுதே-3

எந்தன் உயிரமுதே-3

அத்தியாயம்-3
 
     ரங்கநாதன் அதெல்லாம் வேண்டாமென்று கூற வாயெடுக்கும் நேரம். ரங்கநாதன் தாயார் தெய்வானை “தாராளமா பேசுங்க தம்பி” என்று கூறவும் தாய் கூறியதில் ரங்கநாதன் மறுக்கவில்லை.

Thank you for reading this post, don't forget to subscribe!

    சுதாவோ “கமலி அவரை பால்கனிக்கு அழைச்சிட்டு போய் பேசு” என்று உந்தினார்.‌ வேறு வழியின்றி கமலி பால்கனி பக்கம் பார்க்க ஈஸ்வரனே முன்னெடுத்து நடந்தார்.

     கமலி பின்னால் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.

   பால்கனி வந்து சேரவும் எடுத்ததும் பேச்சை ஆரம்பிக்கவில்லை ஈஸ்வரன்‌.

    “மணி பிளாண்ட் நல்லாயிருக்கு” என்றான்.

  மணி பிளாண்ட் பார்த்து மெதுவாக தலைகவிழ்ந்தாள். இதேயிடத்தில் விடுமுறைக்கு வரும் போதெல்லாம் விஷ்ணுவிடம் காதல் பேச்சை போனில் பேசியிருந்தாள். அந்நினைவு உருத்த விஷ்ணு அணிந்த மோதிரத்தை கவனித்தாள்.

  ஈஸ்வரன் தொண்டையை செருமி, “நான் ஈஸ்வரன், பேங்க்ல உத்தியோகம், சொந்த வீடு, இதெல்லாம் ரங்கநாதன் அண்ணன் சொல்லிருப்பார். எங்கண்ணா ராம்  அண்ணி தேவியை பத்தியும் சொன்னாரா?” என்று கேட்க, கமலி மொட்டு விரிந்தது போல “ஆன்லைன் சூதாட்டத்துல பணத்தை இழந்து சூசைட் பண்ணியதா சொன்னார். உங்கண்ணியும் அண்ணா கூடவே இறந்துட்டாங்கன்னு சொன்னார்.” என்று கூறவும் ஈஸ்வரன் தலையாட்டி ஆமோதித்தான்.

“அப்ப எங்க வீட்டு நந்தினி பாப்பா பத்தியும் சொல்லியிருப்பாங்களே?” என்றதும் புருவம் சுருக்கி விழித்தாள் கமலி.

   “ஓ… நந்தினி பாப்பாவை பத்தி எதுவும் சொல்லலையா? இட்ஸ் ஓகே. நந்தினி என் அண்ணன் ராமோட பொண்ணு. அதோ அம்மா கை வளைவில் இருக்காளே அவள் தான்.

   ஆக்சுவலி அண்ணா அண்ணி தனி வீட்ல இருந்தாங்க‌. இறக்கறதுக்கு முன்ன அம்மாவிடம் நந்தினியை விட்டுட்டு வந்திருந்தான் அண்ணா.

  அண்ணா இன்னொரு குழந்தைக்கு அடிப்போடுவதா நினைச்சு குழந்தையை அம்மா வீட்ல வச்சிக்கிட்டாங்க. ஆனா அவங்க தற்கொலை செய்துக்க தான் நந்தினியை அம்மாவிடம் ஒப்படைத்து இருப்பது லேட்டா தான் புரிஞ்சுது.

     காலையில் அம்மா அண்ணனுக்கு போன் போடவும் அண்ணா எடுக்கலை. அண்ணியும் எடுக்கலை என்றதால வீட்டுக்கு போனாங்க.
   ஆட்டோவுக்கு காசு கொடுத்துட்டு வர்றதுக்குள்ள நந்தினி வீட்டுக்குள் ஓடவும் ரூம்ல தற்கொலை செய்த பெத்தவங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துட்டா.

   அந்த அதிர்ச்சியில பேச்சு லேசா திக்க ஆரம்பிச்சிடுச்சு. ஒரு வருஷமா நந்தினி பாப்பா சரியா பேசறதில்லை. ஒருமாதிரி திக்பிரம்மை பிடிச்சது போல மாறிட்டா‌.” என்றதும் கமலி பார்வை ஐஸூ போல இருந்த சிறு குழந்தை மீது பதிந்தது.

   இந்த வயதில் பெற்றவர்களின் இறப்பை நேரில் பார்த்த குழந்தை‌ என்ற பரிதாப பார்வை வீசினாள்‌ 

   “நான் கல்யாணம் பண்ணற ஐடியாவே இல்லாம சுத்தினேன்.  வேலைக்கு ஐயர் பொசிஷன் வர்ற வரை கல்யாணமே வேண்டாம்னு முடிவுல இருந்தேன்.

   ஆனா நந்தினியை அம்மாவால் பார்த்துக்க முடியலைனு சொன்னாங்க.

இப்ப…. நந்தினி குட்டிக்காக கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.” என்றதும் புரியாமல் விழித்தாள் கமலி.

   “நான் நந்தினிக்கு சித்தப்பாவா இருக்கறது பெரிசில்லைங்க. என்னை கல்யாணம் செய்துக்கற பொண்ணு, நல்ல சித்தியா இருக்கணும்‌. நீங்க நந்தினிக்கு நல்ல சித்தியா இருப்பிங்களா?” என்று கேட்டதும் கமலிக்கு பதில் கூறமுடியவில்லை‌.

    ‘இதென்ன நான் இவரை மணக்கவே சம்மதிக்கவில்லை. இதில் சித்தியாக பார்த்துக் கொள்வீர்களா?’ என கேட்கின்றார்.

   “நீங்க உங்க அக்கா குழந்தை மேல வச்சிக்கற அதே பாசம் தான். நான் என் அண்ணன் குழந்தை மேல வச்சிருக்கேன். நிச்சயம் ஆப்டர் மேரேஜ் நீங்க நந்தினியை நல்லா பார்த்துப்பிங்க தானே?” என்று ஈஸ்வரன் கேட்க, கமலி மௌவுனமானாள்.

   “இங்க பாருங்க… நான் கட்டாயப்படுத்தலை. என்னை மட்டும் ஏற்றுக்கற பொண்ணு எனக்கு வேண்டாம்‌. என் அண்ணன் மகளையும் ஏற்றுக்கற பொண்ணு வேண்டும். உங்க பதிலை வெளிப்படையா சொல்லுங்க” என்று அழுத்தம் கொடுத்தார் ஈஸ்வரன்.

   சத்தம் வெளிகாட்டாமல் மெதுவாக கமலி, “குழந்தையை பார்த்துகறது பெரிய விஷயமேயில்லைங்க‌ ஆனா நான் ஒருத்தரை விரும்பறேன். எனக்கும் அவருக்கும் சண்டை. அவரா வந்து எங்க காதலை சொல்வார்னு பார்த்தேன். ஆனா கடைசிவரை மறுத்துட்டார்” என்று தான் காதலித்த விவகாரத்தை, அக்கா மாமாவிடம் கூறாததை கூட, ஈஸ்வரனிடம் உரைத்திட ஆரம்பித்தாள்.

   “அட காதலிச்சது தப்பில்லைங்க. அதுக்காக காதலிச்சவனையே கட்டிக்கணும்னு அவசியமும் இல்லை.” என்று பேச கமலி உதடு துடித்தது. கண்கள் கலங்கி அழுது குலுங்கினாள்.

   “ஓகே ஓகே… உங்க அக்கா மாமாவிடம் நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீங்க உங்க காதலனிடம் மறுபடியும் பேச ட்ரை பண்ணி பாருங்க. அவர் ஒட்டு மொத்தமா உங்களை ஒதுக்கினா என்னை மணக்க சம்மதிப்பிங்களா?

  அதுவரை ப்ரீயா இருங்க. இப்ப நான் ஒருவாரம் டைம் கேட்டுட்டு போறேன்.

  உங்களுக்கு கல்யாணத்துல சம்மதம் என்றால் நாம மீண்டும் சந்திப்போம்‌” என்று கைகுலுக்க நீட்ட, கமலியும் அவனோடு கைகுலுக்கினாள்.

    கமலி கைகுலுக்க அவர்களையே வைத்த கண் பாராது பார்த்த பெரியவர்கள் கல்யாண பேச்சை ஊர்ஜிதமாக பேசினார்கள்.

   அவர்கள் சென்றதும் சுதா தங்கையை கட்டி அணைத்து, “என்‌ ராசாத்தி முதல் வரனே நல்லபடியா முடிவாகுது.” என்று கொஞ்சினார்.

   கமலியோ அக்காவிடம் எதுவும் காட்டி கொள்ளாமல் தனியாக வந்து விஷ்ணுவிற்கு அழைத்தாள்.

   அவன் எடுக்கவில்லை என்றதும் கார்த்திகாவிற்கு அழைத்து தன்னை பெண் பார்த்து சென்றதை விவரித்தாள்.

   “கமலி சொல்றேன்னு தப்பா நினைக்காத, ஈஸ்வரன் நல்ல கேரக்டரா தெரியுது. பேசாம கல்யாணம் பண்ணிக்கோ. இந்த விஷ்ணு எல்லாம் பலமான தோல்வியை, வாழ்க்கையில் சந்திச்சா தான் அவன் திமிர் அடங்கும். நீ கிடைக்காம போனா தான், அவனுக்கு உன் பெருமை புரியும்” என்று ஏற்றிவிட்டாள்.

கமலியோ “கார்த்தி ப்ளீஸ். என் விச்சுவை சபிக்காத. அவனுக்கு ட்ரை பண்ணி பாரு. போனை அட்டன் செய்தா நிலவரத்தை சொல்லு.” என்றதும் கார்த்திகா சரியென்று கூறினாள்.

    கமலிக்காக விஷ்ணுவின் நண்பர்கள் நம்பர் கிடைக்குமா என்று சிந்தித்தாள்.
 
   விஷ்ணு கமலி சந்திக்க நேரிட்ட தோழனின் எண் மனக்கண்ணில் வந்தது. கூடயிருந்த தோழனை அடித்து நெற்றியில் தையலிட வந்தப்போது தானே கமலியை சந்தித்தான்.‌

  அதனால் தாங்கள் நர்ஸ் பயிற்சிக்கு சென்ற மருத்துவமனைக்கு போன் போட்டு ரிசப்ஷனில் தேதி வாரியாக நினைவா கூர்ந்து கேட்டாள்.

வருடம் மற்றும் தேதியை வைத்து கணினியில் நம்பரை எடுக்க நேரம் எடுத்தது.

  அதுவரை கார்த்திகா காத்திருந்தாள். இரண்டு மணி நேரம் கழித்து, விஷ்ணுவின் நண்பன் ஆனந்த் நம்பர் கிடைக்க, அவனுக்கு அழைத்து விஷ்ணுவை பற்றி கேட்டாள்.

   ஆனந்த்தோ தேம்பி தேம்பி அழுது, “கார்த்திகா… அவன் கமலியிடம் பேசிட்டு வண்டியை வேகமா ஓட்டிட்டு வந்தான். எதிரே பஸ் வரவும் சடனா திருப்ப, கார்ல மோதி தூக்கி எறிந்து விபத்து நடந்துடுச்சு.

  அவன் போன் எங்கயோ மிஸ்ஸாகிடுச்சு. இப்ப வரை ஆஸ்பிட்டல்ல க்ரிட்டிக்கல் நிலையில் இருக்கறான்.

   இதுல கோமாவுல போக வாய்ப்புண்டு என்று பேசிக்கறாங்க.

  நானே கமலியிடம் எப்படி இதை சொல்லறதுன்னு தவிச்சிட்டு இருக்கேன்.” என்றுரைத்தான்.‌

   கார்த்திகாவோ “எ..என்ன அண்ணா சொல்றிங்க?” என்று பதறினாள்.

   “ஆமா அம்மா… இங்க அவனோட அப்பா அம்மா இருக்காங்க.

   அவன் காதலிச்சது தெரியாது. கமலியிடம் நீ பதமா சொல்லி அழைச்சிட்டு வர்றியா?” என்று கேட்டான் ஆனந்த்.

  “அண்ணா அவளுக்கு பொண்ணு பார்த்துட்டு போயிருக்காங்க. விஷ்ணுவுக்கு பொண்ணு பார்க்க போற விஷயம் முன்னவே தெரியும். இப்பவும் பலதடவை அதை சொல்ல ட்ரை பண்ணினா.

   இப்ப வந்து இப்படி சொல்றிங்க. நான் எப்படி கமலியிடம் விஷ்ணுவுக்கு அடிப்பட்டதை சொல்வேன். அதுவும் கோமால போக இருப்பதா சொல்லறிங்க?” என்றாள். அவளுக்கு கைகள் சில்லிட்டது.

ஆனந்த்தோ “நான் என்ன செய்யறது? நாளைக்கு கண் திறந்து ஏன்டா என் கமலிக்கு சொல்லலைனு என்னை முன்ன மாதிரி அடிப்பானே” என்று கலங்கினான்.

  விஷ்ணு இன்னமும் அபாய கட்டத்திலிருந்து தாண்டவில்லை என்பது வேறு விஷயம்.

  கார்த்திகா நீண்டு மூச்சை இழுத்து விட்டு, “அண்ணா… கமலியிடம் இப்ப நான் எதுவும் சொல்லலை. நீங்க விஷ்ணு அண்ணாவுக்கு என்ன நிலைனு அடிக்கடி சொல்லுங்க. அவர் உடல்நிலை முன்னேற்றம் வச்சி கமலியிடம் எதுனாலும் சொல்லறேன். எனக்கு என் பிரெண்ட் கமலி முக்கியம்” என்றாள்.

   ஆனந்த் இரண்டு நொடி அமைதியாகி, “சரி கார்த்திகா, அவன் உடல்நிலை எப்படின்னு சொல்லறேன் வைக்கிறேன்.” என்று துண்டித்து கொண்டான்.‌

   கமலியின் எண் ஆனந்த்திடம் இல்லை. விஷ்ணு தான் தன் காதலி கமலி எண்ணை பகிர்ந்தது இல்லை‌. கமலிக்கு ஏற்கனவே அடிதடி ரகளை என்றிருக்கும் விஷ்ணுவை பார்த்ததும் பிடித்தாலும், ஒரு கட்டத்தில் ‘நீயும் உன்‌ பிரெண்டும்’ ‘முட்டாள் பிரெண்ட்ஸ்’ என்பாள். அதனால் தோழன்களிடம் கமலி எண்ணை கூறியது கிடையாது. கமலியும் ‘உன் பிரெண்ட்ஸ் எவன் நம்பரும் எனக்கு தேவையில்லை’ என்று  முறுக்கியிருப்பாள்.

     இன்று விஷ்ணுவின் நிலை கமலி அறியாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்‌.

  கார்த்திகா விஷ்ணுவின் நிலையை கமலியிடம் தெரிவிக்கலாமா வேண்டாமா என்று ஆழ்ந்து சிந்தித்து கமலியிடம் தெரிவிக்க வேண்டாமென முடிவெடுத்தாள்.

  அபாயகர கட்டத்தில் இருக்கும் விஷ்ணுவை பற்றி கூறி, தற்போது கமலியை கலங்க வைக்க விருப்பமின்றி, விஷ்ணு கோபத்தில் போனை எடுக்காமல் சுற்றுவதாக, கூறிவிட்டு பெண் பார்த்து சென்ற ஈஸ்வரனை மணந்து கொள்ள அறிவுறுத்துவோமென முடிவெடுத்தாள்.

   விஷ்ணு நிலையறியாது அவன் தன்னை இந்தளவு புறக்கணிக்கின்றானா என்று கமலி துடித்தாள்.

   ஆனந்த் விஷ்ணுவை பற்றி கார்த்திகாவிடம் அப்டேட் செய்ய உடல்நிலை மோசமாக தான் உள்ளதென்று விளித்திட, கமலியிடம் ஈஸ்வரனை மணக்க மீண்டும் வலியுறுத்தினாள்.

   கமலி தினமும் நூறு முறைக்கு மேலாக விஷ்ணு எண்ணை அழைத்து விட்டு வாடி நின்றாள்.

   வீட்டு அட்ரஸ் தெரிந்தாலாவது சென்று காணலாமென வாடினாள்.

    விஷ்ணு பெற்றோர் இளங்கோ தாய் வசுந்தரா இருவரும் மகனின் உயிர் மீண்டு வர கண் இமைக்காமல் பார்த்தனர்.

   லட்சத்தில் மருத்துவம் பார்க்க நேரிட தன் வீட்டை, பூர்வீக நிலத்தை என்று விற்று பார்த்தார்கள். கோமா நிலையிலிருந்து விழி திறந்தான் விஷ்ணு.

  ஆனால் அவன் நினைவுகள்  கல்லூரியில் இளங்கலை படித்து ஆறு மாதம் வீட்டிலிருந்த காலத்தில் அப்படியே தங்கியது‌‌.

  ஆனந்த் என்பவன் கூட யாரென்று அறியாது தன் இளங்கலை பயின்ற நண்பர்கள் பெயரை உச்சரித்தான்.

    மருத்துவர்கள் விஷ்ணுவை ஆராய்ந்து, நினைவுகளை கட்டாயப்படுத்தி திரட்ட வேண்டாம். மெதுமெதுவாய் நினைவு வருவது வரட்டுமென்று உரைத்திட, ஆனந்த் அவசரம் காட்டாமல் முதுகலை பயின்ற தோழன் என்று அறிமுகமாகி எட்டி நின்றான்.

ஆனந்திற்கு நண்பன் உயிர் திரும்பியது மட்டும் ஆனந்தம். மற்றபடி சில நினைவுகள் மறந்து போனது பரவாயில்லை என்று நின்று கொண்டான்.

   ஏற்கனவே இந்த இரண்டு மாத காலத்தில் கார்த்திகா ஆனந்திடம் ‘விஷ்ணு பற்றி கமலியிடம் சொல்லலை ஆனந்த். என் தோழியாவது நல்லா வாழட்டும் அவளுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகுது.’ என்றதில் குணமாகும் விஷ்ணுவிற்கு கமலி பற்றி கூறாது தவிர்க்க முடிவுக் கொண்டான்.

  ஆனந்த் மற்றும் கார்த்திகா இருவருமே அவரவர் நட்புக்காக சிலதை மறைத்து கொண்டனர்.

  கமலிக்கு ஒருபக்கம் ஈஸ்வரனோடு திருமண பேச்சும், விஷ்ணுவிற்கு தாய் தந்தை அரவணைப்பும், மருத்துவமும் என்று காலம் விரைந்து சென்றது.

-தொடரும்.

-பிரவீணா தங்கராஜ்.

5 thoughts on “எந்தன் உயிரமுதே-3”

  1. M. Sarathi Rio

    எந்தன் உயிரமுதே…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 3)

    ஆக மொத்தம், ஏற்கனவே இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இருந்த உறவில ரெண்டு சைட் ஃப்ரெண்ட்ஸூம் சேர்ந்து கும்மிடிச்சிட்டாங்கன்னு
    சொல்லுங்க. நைஸ், வெரி நைஸ்.

    ஆனா, அந்த விஷ்ணுவை விட, இந்த ஈஸ்வரனே நல்லவன்னு நினைக்க வைக்குறான். ஏன்னா, அந்த விஷ்ணு சும்மா சும்மா அழ வைக்குறான், ஆனா இந்த ஈஸ்வரன் சந்தோஷமா வாழ நினைக்கிறதோட, அவளுக்கான ஸ்பேசையும் கொடுக்கிறான். அப்ப இவன் தானே நல்லவன்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. M. Sarathi

    எந்தன் உயிரமுதே…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 3)

    ஆக மொத்தம், ஏற்கனவே இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இருந்த உறவில ரெண்டு சைட் ஃப்ரெண்ட்ஸூம் சேர்ந்து கும்மிடிச்சிட்டாங்கன்னு
    சொல்லுங்க. நைஸ், வெரி நைஸ்.

    ஆனா, அந்த விஷ்ணுவை விட, இந்த ஈஸ்வரனே நல்லவன்னு நினைக்க வைக்குறான். ஏன்னா, அந்த விஷ்ணு சும்மா சும்மா அழ வைக்குறான், ஆனா இந்த ஈஸ்வரன் சந்தோஷமா வாழ நினைக்கிறதோட, அவளுக்கான ஸ்பேசையும் கொடுக்கிறான். அப்ப இவன் தானே நல்லவன்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Kalidevi

    pavam vishnu ku intha nelamai vanthu iruka kudathu athuku ena kovam irunthalum atha driving la kamika kudathu ipo paru vishnu un kamali kud yarnu theriyatha nelamaila iruka nee avalum vera vali illama ipo mrg ku samathika pora

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *