அத்தியாயம்-9
Thank you for reading this post, don't forget to subscribe!முகத்தில் முத்தங்களை விதைத்து தன்னவளை தன்னோடு அணைக்க, கமலிக்கு விஷ்ணு செயல் அதிர்ச்சியை தர, அவனோ உதட்டில் சங்கமிக்க துவங்கினான்.
கமலி தன்னிலை மறந்து அவன் தோளை பற்றி பின்னங்கழுத்தை பற்றிக்கொள்ள, கதவு தட்டும் சத்தம் கேட்டது.
விஷ்ணுவோ ‘பச் இவங்களுக்கு வேற விளக்கம் சொல்லணும்.’ என்று தாமரை பெண்ணை விடுவித்தான்.
இரண்டு நிமிடங்கள் கடந்திருக்காது. காற்றுப் புகா அணைப்பு, தித்திக்கும் மூச்சுமுட்டும் முத்தங்கள், என்று அலைப்பறை செய்துவிட்டான்.
கமலி நாணி விஷ்ணுவை ஏறிட, அவனோ ”அம்மா சொன்னாங்க.. உனக்கு அந்த கார்காரன் ஈஸ்வரனை கட்டி வைக்க பேசியதா. ஐ ரியலி சாரி. நான் உன்னை இன்னொருத்தன் முன்ன பொம்மையா நிறுத்த வச்சிட்டேன். இனி அது நடக்காது. தெரியும்ல… எனக்கு சொந்தமானது யாருக்கும் தரமாட்டேன், விட்டு கொடுக்க மாட்டேன்.” என்றான் அழுத்தமாய்.
“அவர் கார்காரன் இல்லை. பேங்க்காரர். பேங்க்ல உத்தியோகம்” என்று தகவலை அள்ளி வழங்க, “லுக்… எனக்கு இந்த பயோடட்டா தேவையில்லை லோட்டஸ்.” என்று அதட்டிவிட்டு கதவை திறந்தான். கமலி பெயரை தான் லோட்டஸ் என்று உரைத்தான்.
கதவை திறந்ததும் ஆனந்தை பார்த்து, “ஏன்டா வெளக்கெண்ணெய், பதறிட்டு கதவை தட்டறாங்க. என்னன்னு சொல்லி தொலைக்க வேண்டியது தானே” என்றான்.
அதற்கு ஆனந்தோ “வேண்டாம் மச்சான். உன் லவ்வுல யார் தலையிட்டாலும் உனக்கு பிடிக்காது. நீயே உன் காதலியை அங்கிள் ஆன்ட்டிக்கு அறிமுகப்படுத்து.
அங்கிள் ஆன்ட்டி கொஞ்ச நாள் கழிச்சு வர்றேன். இவன் பிரச்சனையை இழுத்துட்டு வந்தா, சமாளியுங்க. நான் வர்றேன்டா” என்று விட்டால் போதுமென ஓடினான்.
இளங்கோவிற்கும் வசுந்தராவிற்கும் ஆனந்த் இப்படி பேசியதே பாதி விளங்கிவிட்டது. ஆனால் ஏன் கமலி மகனை கண்டும் தெரிந்தவளாக காட்டிக்கொள்ளவில்லையென பார்த்தார்.
விஷ்ணு கமலியின் தோளில் கையை போட்டு, “அம்மா… நான் அழைச்சிட்டு வந்து அறிமுகப்படுத்த நினைச்ச சர்பிரைஸ். என்னோட கமலி. நான் விரும்பற கமலி. இந்த வீட்டுக்கு மருமகளா வரப்போற கமலி. பச் இந்த வீட்டுக்கு மருமகளா இல்லை. உங்களுக்கு மருமகளா வரப்போற கமலி” என்று திருத்தினான்.
இந்த வீடு ஈஸ்வரனின் சொந்தவீடு அல்லவா.!
பெற்றவர்கள் அதிர்ச்சியில் திளைக்க, “கமலி அப்பா அம்மாவிடம் பிளசிங் வாங்கு” என்றதும் இருவரும் சேர்ந்தே காலில் விழுந்தனர்.
இளங்கோ வசுந்தரா இருவரும் அதிர்ச்சி களைந்து, “நீ ஈஸ்வரனை கட்டிக்க பார்த்த பொண்ணு தானே?” என்று என் மகனை விடுத்து வேறொருவரை கட்டிக்க சம்மதித்து நின்றவளென்ற குற்றம் சாட்டும் விதமாக கேட்டார்.
“இல்லைங்க ஆன்ட்டி. ஈஸ்வரிடம் பொண்ணு பார்க்க வந்தப்பவே நான் விஷ்ணுவை விரும்பறதை தெளிவா சொல்லிட்டேன். அவர் தான் உடனே மறுத்தா வீட்ல ஏற்க மாட்டாங்க. என் அண்ணன் மகளுக்கு கேர்டேக்கரா இருங்க. நானும் வெளியூர்ல இருப்பேன். கிடைக்கற நாட்களில் விஷ்ணு பற்றி தெரிய வந்தா நீங்க உங்க விஷ்ணுவோட கல்யாணம் பண்ணிங்கோங்கன்னு சொன்னார்.
அதனால் தான் தாராளமா, தைரியமா நந்தினியை பார்த்துக்க ஒரு ‘கேர்டேக்கரா’ வந்தேன். அந்த குழந்தையை பார்க்க பாவமா இருந்துச்சு.” என்று அப்பொழுதே விஷ்ணுவை விரும்பியதை கூறிவிட்டேன் என்று தெளிவாக்கினாள்.
வசுந்தராவோ “என்னம்மா இப்படி சொல்லற. உங்க அக்கா மாமியார் தெய்வானை என்னடான்னா, நீ ஈஸ்வரன் மணக்க போவதா ஊரெல்லாம் சொல்லி வச்சியிருக்காங்க.
அன்னைக்கு கல்யாண வீட்ல கூட, ஈஸ்வரனை கட்டிக்க போவதா பார்க்கறவங்ககிட்ட எல்லாம் சொன்னாங்க.
இப்ப போய்…” என்று தவித்தார்.
அன்று திருமணத்திற்கு வந்தவர்கள் சொந்தக்காரர்கள் கூட்டமல்லவா. நாளைக்கு ஈஸ்வரன் மணக்க போன பெண், விஷ்ணுவை கட்டிக்கொண்டதாக பேச்சு பரவுமே என்றார்.
“அப்ப விஷ்ணுவுக்கு ஆக்சிடென்ட் ஆனது தெரியாது ஆன்ட்டி. விஷ்ணு
என் மேல் கோபமாயிருக்கார்னு இருந்தேன். அதோட நான் அவரை நெருங்க பயமாயிருந்தது.
விஷ்ணு என்னை தெரியாதது போலவும் பார்த்தார். நான் ஈஸ்வரனை விரும்பி பொண்ணு பார்க்க நிற்கலை. திடுதிப்புன்னு என்கிட்ட கேட்காம வந்துட்டாங்க. அது அக்கா வீட்டு ஆட்களோட தப்பு. நான் யாரையும் பெண் பார்க்க வரச்சொல்லலை.
அதோட ஈஸ்வரனை கல்யாணம் செய்வேன்னு நம்பிக்கையும் தரலை. எனக்கு நந்தினி பாப்பாவை பார்த்துக்க பிடிச்சிருந்தது. குழந்தை முகத்துல விஷ்ணு கால் பண்ணலை, பேசலை என்ற கவலையை மறக்க முயன்றேன்.” என்று மீண்டும் தன்னிலை விளக்கம் கொடுக்க முனைத்தாள் கமலி.
விஷ்ணுவே நிறுத்த கூறி தடுத்து, “அம்மா… இந்த வீட்டை பொறுத்துவரை நான் கமலியை நேசிக்கிறேன். நீங்க உங்க அபிமானத்தை சொல்லுங்க. ஈஸ்வரன் குடும்பத்தை நான் பிறகு சரிக்கட்டறேன்” என்று வாக்கு தர, இளங்கோவோ, “என்னைக்கு உன் விருப்பத்துக்கு தடை விதிச்சிருக்கோம். யாரையும் கஷ்டப்படுத்தாம காயப்படுத்தாம நடந்துக்கோ விஷ்ணு. நீ மரணத்தை தொட்டுட்டு வந்திருக்க. உன் விருப்பம் தான் எங்க விருப்பம்” என்றார் இளங்கோ மகனிடம்.
முன்பு தந்தை சொன்ன வார்த்தைக்காக தான் படிப்பு பாதியில் நிறுத்தாமல் வேலைக்கு சென்று விட்டு கமலி வீட்டில் சந்திக்க எண்ணியது. இன்று தந்தையே இவ்வாறு உரைக்க இளரத்தம் விஷ்ணுவிற்கு ஜீவ்வென்று ஏறியது.
வசுந்தராவோ கமலியிடம், “அம்மா கமலி. நீ கிளப்பு.. திவ்யபாரதி வீட்ல உன்னை தேட போறாங்க” என்று அனுப்ப, கமலி விஷ்ணுவை ஏறிட்டாள்.
“நீ போ கமலி. ஈஸ்வரனிடம் நான் பேசறேன்.” என்று அனுப்பி வைத்தான்.
கமலி மெதுவாக படிகட்டில் அடியெடுத்து வைக்க, திவ்யபாரதி நந்தினி இருவரும் வாசலில் நின்றிருந்தனர்.
திவ்யபாரதி முகம் அஷ்டக்கோணலாக மாறி அதிருப்தியை காட்டியது.
நந்தினியோ ஐஸூவை அழைத்து விளையாட போவதாக சித்தியிடம் பர்மிஷன் கேட்டு நின்றாள்.
கமலி அனுப்பி வைக்கவும், அறைக்கு வர, ஈஸ்வரன் வரவேற்றான்.
“ஹாய் கமலி பேசிட்டு இருக்கறப்ப மொட்டை மாடிக்கு போனதா உங்க அக்கா மாமா சொன்னாங்க. மொட்டை மாடின்னா அவ்வளவு பிடிக்குமா?” என்று அமர கூறினான்.
கமலியோ அக்காவை பார்த்து, “ஈஸ்வரன் உங்களிடம் ஏற்கனவே சொல்லிட்டேன். நான் காதலிப்பதை” என்று கூறவும், சுதாவோ, “அவன் தான் செத்துட்டானே. ஏன் டி உயிரோட இருக்கற எங்களை சாகடிக்கற. உங்க மாமா நீ ஈஸ்வரனை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டா மட்டும் வீட்டுக்கு வான்னு என்னை சொல்லிட்டுயிருக்கார்.
பேசிட்டே இருக்கறப்ப ஓடினா என்ன அர்த்தம்? எங்கம்மா பார்த்த வரனை வேண்டாம்னா வேற என்ன தான் செய்யறதுனு கேட்கறார்.
அம்மா இல்லாத பொண்ணு படிக்க வச்சோம். இப்ப மட்டும் எங்க சொல்படி கேட்க கசக்குதா? எப்பவும் உன்னை கவனிக்க முடியுமா? எங்களுக்கும் குழந்தை, குடும்பம், குட்டினு பார்க்க வேண்டாம்?” என்று எரிந்து விழுந்தார் சுதா.
தன்தங்கை வாழ்வால் தன் வாழ்வும் சிக்கலாக மாறுவதை பிடிக்காமல் வார்த்தை வீசினார்.
கமலி கண்கள் கலங்கி, “என்னை படிக்க வச்சதுக்கு, என் உயிரையே தர்றேன் அக்கா. ஆனா அதே இதயத்துல விரும்பறவனை விடுத்து வேறொருவனை நினைக்க முடியாது.
எனக்கு என் காதல் முக்கியம். என் காதலன் ஒன்னும் சாகலை உயிரோட தான் இருக்கார். ” என்று நின்றாள்.
ஈஸ்வரனுக்கு பேரதிர்ச்சியாக கேட்கவே கடினமாக போனது.
கமலி என்பவளின் காதலன் இறந்துவிட்டான் அது அவளுக்கு தெரியாது. காதலன் அழைப்பு வருமென்று காத்திருந்து ஓய்ந்து. பின்னர் காதலனை தலைமுழ்கி, அவளது மனதிற்கு சில காலம் காயத்தை மறக்க வைத்து, மணக்க எண்ணினான்.
அதற்கேற்றது போல நந்தினியை கவனித்து கொள்வாளா என்று ஆராய்ந்து, கமலியை மனைவியாக பார்த்து வாழ ஆசைக்கொண்டவனிடம் கமலியே அவன் சாகவில்லை என்று அறிந்திட பேரதிர்ச்சி வராமல் போகுமா?!
“உயிரோட இருக்காரா?” என்று ஈஸ்வரன் சத்தமின்றி கேட்க “ஆமா இத்தனை நாள் கோமால இருந்திருக்கிறார்
இப்ப ரீசீண்டா நினைவு வந்துடுச்சு. காதலிச்சது நினைவு வரவும் அடுத்த நிமிடமே என்னை தேடி வந்துட்டார். என்னை இனி யாருக்கும் விட்டும் கொடுக்க மாட்டார்.
நானும் அவரை தவிர யாரையுமா மணக்க மாட்டேன்” என்று கூறவும், வீடே நிசப்தமானது.
சுதா தொப்பென்று அமரவும், உலகம் இருட்டியது போல மாறினார்கள்.
திவ்யபாரதிக்கு இதற்கு முன் செடிக்கு தண்ணீர் ஊற்ற செல்வாள். இன்று விஷ்ணுவிற்கு ஜாமூன் பிடிக்கும் என்று தெரிந்து அதை கமலி செய்து எடுத்து சென்றிருக்க லேசாக பிடித்தமின்மை வெளிப்பட்டது.
இப்பொழுது பேசிய பேச்சில் ஈஸ்வரனை மணக்க தயாராகி பேத்தியை பார்க்க வரவில்லையென்றதில் கோபம் சூழ்ந்தது.
யாரையோ காதலிக்கின்றாளே என்ற கோணம் அது விஷ்ணுவாக இருக்குமோயென கணிக்க, அப்பெயர் கொண்டவனோ திவ்ய தரிசனம் தந்து முன் வந்தான்.
அக்கா மகள் ஐஸூவோ “சித்தி ஏன் அழுவற?” என்று சுடிதாரை பிடித்து பிடித்து இழுக்க, விஷ்ணு வருவதை கண்டு கமலி கூடுதலாக தேம்பினாள்.
நந்தினியும் இம்முறை “சித்தி… அழாத சித்தி…” என்று கூற, இரு குழந்தைகளின் இழுப்பில் சுடிதாரின் ஷோல்டர் பகுதியில் துணி விலகியது.
“உங்க சித்தி அழவிடாம இனி நான் பார்த்துக்கறேன். நீங்க போய் எனக்கு பிடிச்ச குலோப் ஜாமூன் உங்க சித்தி செய்திருக்க, போய் காலி பண்ணுங்க, ஓடுங்க” என்று விஷ்ணு விரட்டி விட்டான்.
குழந்தைகளும் அவ்விடம் விட்டு அகல, “லோட்டஸ் பேபி, என்னோட சரிக்கு சமமா சண்டைப்போடுவ, கோபப்படுவ, இதென்னடி அழுகை. சின்ன பிள்ளை மாதிரி, நான் தான் கோமால இருந்து திரும்ப வந்துட்டேன். ம்ம்ம்.. எனக்கு எல்லா நினைவும் நல்லா ஞாபகமிருக்கு. கடைசியா சண்டைப் போட்டது வரை” என்று குழந்தையால் அவளது சுடிதார் இழுக்க, தோள்பட்டையில் உள்ளாடை ஸ்டாப் தெரிந்ததை பேசியபடி நாகரிகமாய் மறைத்து உள்ளே நகர்த்தி, தலையை பிடித்து நெற்றியில் முத்தமிட்டான்.
திவ்யபாரதிக்கு இதென்ன இத்தனை நெருக்கம் என்று முகம் சுழிக்க, ரங்கநாதன் மற்றும் சுதாவோ விஷ்ணு-கமலி காதலில் வாய்பிளந்து நின்றார்.
பக்கவாட்டில் ஈஸ்வரன் அறைக்கு செல்வதை கண்டு கமலியை விலகி நிறுத்தினான் விஷ்ணு.
கமலி சட்டென மிரள, “அவரிடம் பேசிட்டு வர்றேன் கமலி.” என்று கூறவும் ஈஸ்வரன் நல்ல மனிதனாக நடக்க கமலியும் சரியென்று தலையாட்டினாள்.
விஷ்ணு இரண்டெட்டு நடக்கவும், “விச்சு… கோபமா பேசாத. ஈஸ்வரன் ரொம்ப நல்லவர்.” என்று பேச, அதை காதில் ஏற்றானோ என்னவோ அறைக்கதவருகே சென்றிட, ஈஸ்வரன் விஷ்ணுவை ஏறிட்டான்.
விஷ்ணுவோ மெதுவாக, மெத்தையில் ஈஸ்வரன் எதிரேயிருந்த பட்டுபுடவை, மோதிரம், என்றிருக்க, அதனை வெறித்தான்.
ஈஸ்வரன் காணவும், தொண்டையை செருமி, “உங்ககிட்ட பெர்சனலா பேசணும். மொட்டை மாடிக்கு வர்றிங்களா?” என்று கேட்டான் விஷ்ணு.
மோதிர பாக்ஸ், புடவையை அப்படியே ஏக்கமாய் பார்த்து, சம்மதமாய் மேலும் கீழும் தலையாட்டி வர, விஷ்ணு ஈஸ்வரன் இருவரும் மாடிக்கு சென்றனர்.
சுதாவோ, விஷ்ணுவை கண்டு, “ஏன்டி நீ விரும்பியது இவரையா? கார்த்திகா இறந்துட்டதா சொன்னது இந்த தம்பியையா?” என்று கேட்க, கமலியும் மூக்குறிந்து, “ஆமா அக்கா. ஆக்சுவலி இவரை கூட்டிட்டு வந்து, உன்னிடம் மாமாவிடமும் காட்ட விருப்பப்பட்டேன். விஷ்ணு என்னடான்னா ஒரு வேலை கிடைச்ச பிறகு வர்றேன்னு மறுத்தார். நான் எவ்ளோ சொல்லியும் பிரேக்கப் பண்ணிக்கோ அப்படின்னு சொல்ல சண்டை போட்டுட்டு வந்தேன்.
நீ வந்ததும் வராததும் ஈஸ்வரனை அவரை பொண்ணு பார்க்க வரச்சொல்லிட்ட, என்னால உங்களிடம் விஷ்ணுவை விரும்பறதை சொல்ல முடியலை. ஈஸ்வரிடம் விஷ்ணு பத்தி சொன்னேன்.” என்று கூறினாள்.
சுதாவோ, ”மீதியெல்லாம் எனக்கு தெரியும்.
கார்த்திகா நீ விரும்பின பையன் ஆக்சிடென்டாகி கோமால போயிட்டார் உயிர் பிழைப்பது கஷ்டம்னு சொன்னா. அதனால தான் ஈஸ்வரனிடம் நீ உன் காதலனை மறக்க அவகாசம் கேட்டேன்.
இந்த இடைப்பட்ட நாள்ல மறந்துட்டன்னு நினைச்சேன். ஈஸ்வரன் மனசுல இப்ப காதலை விதைச்சிட்டியே. நந்தினி பாப்பா உன்னை சித்தியா குடும்பத்துல ஒருத்தியா பார்க்கறாளே. இனி என்ன முடிவோ ஆண்டவா.” என்று புலம்ப, நந்தினி பக்கம் பார்வை வீசி கலங்கினாள்.
பெற்றவர்கள் தூக்கில் தொங்கியதை பார்த்து யாரிடமும் பேசாமல் திக்கி திணறி ஒடுங்கியிருந்த குழந்தை சமீபகாலமாக தன்னிடம் அன்பாய் நேசத்தோடு பழகியவளை பிரிய நேருமோ என கவலை கொண்டாள் கமலி.
-தொடரும்
பிரவீணா தங்கராஜ்
Interesting
Super super super super super super
Super story
🌞🌟🌟🌟🌟
kamali ninaikurathu crt than ena pana vera vali illaye vishnu va vitu eppadi innoruthana mrg panika mudium . eswaran manasa mathi than aganum
எந்தன் உயிரமுதே…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 9)
அதுக்கு என்ன பண்றது..! முதல் கோணல் முற்றும் கோணல்ங்கிற மாதிரி, முதல்ல விஷ்ணு சண்டை போட்டு ப்ரேக்கப் சொல்லிட்டு போயிட்டான், அதற்கப்புறம் ஊருக்கு வந்நதவளை நல்லா இருக்கியான்னு ஒரு வார்த்தை
கூட கேட்காம, மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை உடனே வரவழைச்சாச்சு. இது இவ ஈஸ்வரன் கிட்ட மட்டும் உண்மையை சொல்லி வைச்சிருக்கா. அந்த ஈஸ்வரனும் சரி சரின்னு எல்லாத்துக்கும் சரி சொல்லிட்டு
தன்னோட அண்ணன் பொண்ணுக்கு கேர் டேக்கரா வேற கமலியையே நியமிச்சு
அந்த குழந்தை மனசுல மட்டும் இல்லாம அவனோட மனசுலேயும் ஆசையை வளர்த்துக்கிட்டான். எல்லாம் பெரியவங்களோட தப்பு, கடைசியில அந்த சின்ன குழந்தை பாதிக்கப்படுமோ என்னவோ தெரியலை.
😀😀😀
CRVS (or) CRVS 2797