Skip to content
Home » என் சுஎன் சுவாசம் உன் வாசமாய்…-1

என் சுஎன் சுவாசம் உன் வாசமாய்…-1

என் சுவாசம் உன் வாசமாய்…

அத்தியாயம் 1

  பெங்களூர் கோவா ஹைவேயில், பெங்களூரின் அருகே நள்ளிரவு இரண்டு முப்பது மணியளவில் பெரும் சப்தத்துடன் எதிரில் வந்த காரின் மீது மோதிக் கவிழ்ந்தது அந்த சொகுசுப் பேருந்து. இடது புறமாகக் கவிழ்ந்த கார் கட்டுப்பாட்டில் இல்லாததால் கிட்டத்தட்ட 50 மீட்டர் தொலைவு வரை இழுத்துக் கொண்டு சென்றது அச்சாலையில்.

பேருந்தில் இருந்த அத்தனை பேரும் உறக்கத்தில் இருந்ததால் ஆபத்தை அறிய முடியாமல் மூச்சை நிறுத்தி இருந்தனர் ஒருசிலர்.

திரு.இஷான், சென்னையின் முக்கியமான ஆடிட்டரில் ஒருவன். அவனும் இறந்தவர்களின் பட்டியலில் இடம் பெற்று இருந்தான்.

ஏனென்றால், காரில் பயணம் செய்தது அவனே.

உண்மை அறிந்து ஓடிவரத் துடித்த இதயம் தன் ஓட்டத்தை அங்கேயே நிறுத்தி விட்டது, தன்னவளைத் தனியே தவிக்கவிட்டு. இழுபட்டுச் சென்றதில் ஒரு பக்க முகமே சிதைந்து இருந்தது.

“விழி” என்றபடி இறுதி யாத்திரையைத் துவக்கினான் இஷான்.

விவரம் அறிந்து வந்த பெங்களூர் போலீசார், ஆம்புலன்ஸில் ஏற்றி அவனது இல்லத்திற்குத் தகவல் சொல்ல, அவனைக் காண ஓடிவந்த தன் தமையனின் தோளில் பாரமெல்லாம் இறக்கி வைத்தவன் மீளாத்துயிலில் இறங்கி விட்டான். அங்கே ஆரம்பம் ஆனது அழுகை அனைவருக்கும்.

அதன்பின் யாருக்கு யார் ஆறுதல் சொன்னார் என்பதைக் கூட கவனிக்காமல் இருந்தனர். சுழலில் சிக்கித் தவித்தனர். 

சென்னை படப்பையின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் தியாகராயர் சாலையில் இருந்த அந்த வீட்டின் முன் பந்தலிட்டு பெண்டால் அமைத்து வீட்டின் முன் ஒரு ஓரத்தில் கட்டையைக் கொளுத்தி வைத்து இருந்தனர். ஆங்காங்கே டீசண்ட்டாக உடை அணிந்து இருந்த ஆண்களும் பெண்களும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

அதில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி மட்டும் கண்களில் கண்ணீர் வழிய ஓரிடத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவர் பார்த்திருந்த இடத்தில் தான் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டு இருந்தது அவனது உடல்..

முகம் லேசாகச் சிதைந்திருந்தது. ஃபோஸ்ட் மார்ட்டம் செய்யப் பட்டதால் உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டு முகம் மட்டும் மற்றவர் காணும்படி இருந்தது.

‘நானே உன் வாழ்க்கைய அழிச்சுட்டேனேடா… நான் மட்டும் உன்கிட்டச் சத்தியம் வாங்காம இருந்திருந்தா இந்நேரம் நீ எனக்கு உயிரோடவாவது இருந்து இருப்பியேடா’ என்று எண்ணியபடி கண்ணீர் வழியப் பார்த்திருந்தார்.

அவர்தான் இஷானின் தாய் மீரா.

அவரோ அப்படிப் புலம்ப அங்கு ‘யாருக்கோ’ என்றபடி அமர்ந்திருந்த ஒரு பெண் தன் மொபைலை எடுத்து ஒரு ரிங் அழைத்துக் கட் செய்தாள். உடனடியாக அங்கு வந்தனர் அவளது பெற்றோர்.

“நாங்க எங்க பொண்ணை அழைச்சிட்டுப் போறோம். அவளுக்கு இந்தச் சடங்குலாம் எதுவும் தேவை இல்லை. நாங்க அவளுக்கு வேற கல்யாணம் செய்யப் போறோம்… நீ வா சரண்யா” என்று உரக்கக் கத்தினார், அந்த சரண்யாவின் தந்தை. எல்லோரும் அழுவதை நிறுத்தி அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்தனர்.

“கிளம்பிட்டேன்பா” என்றபடி தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் சரண்யா. அவளை ஓடிவந்து தடுத்த மீரா சரண்யாவின் தந்தையைப் பார்த்து,

“என்னங்க இது… உங்க பொண்ணுக்கு நீங்க இன்னொரு கல்யாணம் செய்யுங்க, நான் வேணாம் சொல்லல. ஆனா என் மகனோட வாரிசு அந்தப் புள்ள வயித்துல இருக்கே, அதை இவ கையெழுத்துப் போட்டா தானே வாங்கித் தர முடியும். அதை மட்டும் செஞ்சுட்டுப் போகச் சொல்லுங்க… என் புள்ளதான் இல்லனு ஆகிட்டான், அவன் வாரிசாவது எங்களுக்கு இருக்கட்டுமே” என்று கெஞ்ச,

“புருஷனே இல்லையாம், இதுல புள்ள ஒண்ணுதான் எனக்குக் கேடா? உங்க புள்ள வாழும் போதும் எனக்குப் பிடிக்காததை தான் செஞ்சார். சாகும் போதும் எனக்குப் பிடிக்காததை தான் செஞ்சார். 

தாலி கட்டினதோட சரி, அவரு என்கிட்டப் பேசினது கூட இல்ல. இதுல இந்தக் குழந்தைக்கு நான் அம்மாவா கையெழுத்துப் போட்டு என் வாழ்க்கையைப் பாழாக்கிக்கனுமா? உங்க புள்ளையோட வாழ்க்கையே தேவையில்லன்னும் போது அந்தக் குழந்தை இருந்தா எனக்கென்ன? செத்தா எனக்கென்ன?” என்று கூறி முடிக்கும் முன், 

“சரண்யா” என்று கத்தினார் மீரா.

“என்கிட்டக் கத்தாதீங்க. உண்மைய தானே சொல்றேன்… பொண்டாட்டியா என்னை யோசிக்கக் கூட இல்லாத மனுஷனை நான் மட்டும் எப்படிப் புருஷனா யோசிப்பேன். எனக்கு உங்க புள்ள யாரோ தான். இந்தாங்க, உங்க வீட்டுச் சொத்து, இந்தத் தாலி! இதுக்குக் கொஞ்சம் கூட மதிப்பு இல்ல, இதை வேற வேஸ்ட்டா சுமக்கனுமா?” என்று கழற்றி வீச அது அவள் வீசியெறிந்த வேகத்தில் அங்கு சிலையாக நின்றிருந்த கயல்விழியின் கழுத்தில் விழுந்தது. 

வயிற்றில் ஆறுமாதக் கருவைச் சுமந்தபடி தன்னவனின் பிரிவைக் காணச் சகிக்காது ஓரமாய் நின்று மெளனமாய் கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தவளின் கழுத்தில் தாலிக்கொடி விழ, அதிர்ந்து நோக்கியவள் அங்கேயே மயங்கி சரிய… அவளைச் சரியாக வந்து தாங்கினான் இஷானின் இரட்டைப் பிறவியான இந்திரஜித்.

மயங்கியவளைத் தன் கையில் தாங்கியவன் அதுவரை இருந்த இறுக்கத்தில், சரண்யாவைச் சுட்டு விடுவதைப் போல முறைத்தவன்,

“இனி ஒரு நிமிஷம் நீ இங்க நின்ன, நானே உன்னக் கொன்னுடுவேன். வெளிய போடி… என் அண்ணன் பிள்ளைய எப்படி எங்க வீட்டு வாரிசா மாத்தனும்னு எனக்குத் தெரியும்” என்று கத்த பயத்தில் நடுங்கியவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, 

“யாருக்குத் தெரியும்? நீயே கூடத்தான் உன் அண்ணாவைக் கொன்னு இருப்ப. உங்க குடும்ப ஆளுங்க முகத்துல முழிக்கிறதே பாவம்” என்றுவிட்டு அங்கிருந்து ஓடியே விட்டாள்.

பின்னே? அவள் ஒரு நிமிடம் தாமதித்தாலும் அவளைக் கொன்னாலும் கொன்னு இருப்பான். 

கட்டியவன் அருமையும் தெரியாது, அதைச் சொல்லித் தரவேண்டிய பெற்றோர் அவளுக்குச் சாதகமாகப் பேச, முறையற்ற வளர்ப்பால் ஒரு அரியவனை அமரர் ஊர்தியில் ஏற்றிச் சென்று விட்டாள் அவனது முன்னாள் மனைவி. 

தாய்க்குச் செய்த சத்தியத்தால் சொந்த மாமன் மகளைத் திருமணம் செய்தவன், விரல் நுனி கூட அவளைத் தீண்டாமல் தன் கண்ணியம் காத்தவன், அவளுக்கு ஒரு நல்ல வாழ்வு அமைத்துத் தரவேண்டும் என எண்ணியவன் இன்று உயிரோடே இல்லை.

அதையெல்லாம் யோசிக்காமல் அவனது இறுதிச் சடங்கில் அகற்ற வேண்டிய மாங்கல்யத்தைக் கழற்றி வீசி, அவனது உயிரற்ற உடல் இல்லம் வந்த அடுத்த நொடி, எல்லா வகையான அனர்த்தமும் புரிந்துவிட்டு ஓடினாள்.

தமையன் தன்னைத் தாங்கினான். இனி அவனது உயிரைத் தான் தாங்க வேண்டும் என்று முடிவு செய்தவன், தன் வீட்டு வேலைக்கார அம்மாவைப் பார்க்க அவர் ஓடிச்சென்று நீரும், ஜூஸ்ஸும் எடுத்து வந்து அவனிடம் நீட்ட நீரை வாங்கி அவளது முகத்தில் அடிக்க லேசாக மயக்கம் தெளிய எழுந்தவள், தன்னவன் உருவம் தன் கண்முன் தெரிய,

“இஷா… என்னையும் உன் கூடவே கூட்டிட்டுப் போயிடு” என்று ஈனஸ்வரத்தில் முனகியவள் மீண்டும் மயங்கிவிட, இந்திரஜித் தன் தோழனைப் பார்க்க அவன் உடனடியாக டாக்டருக்கு அழைத்தான். 

அவளை அள்ளிக் கொண்டு சென்றவன் அங்கிருந்த கட்டிலில் கிடத்த அதற்குள் அங்கு வந்த டாக்டர் பரிசோதித்துவிட்டு, நேற்றிலிருந்து எதுவும் உண்ணாமல் அழுது கொண்டே இருந்ததால் மயக்கம் எனக்கூறி ட்ரிப்ஸ் போட்டு விட்டார்.

“ரொம்ப வீக்கா இருக்காங்க. இப்படியே இருந்தா அவங்க, குழந்தை ரெண்டு பேருக்கும் ஆபத்து. ஜாக்கிரதையாப் பார்த்துக்கோங்க” என்று விட்டுக் கிளம்ப அவளையே சிறிது நேரம் பார்த்தவன், விதி வலியது என்று எண்ணினான்.

மேற்கொண்டு ஆகவேண்டிய நிகழ்வுகளைக் காணச் சென்றான். அதுவரை கடுகு விழுந்தால் கூட சத்தம் கேட்கும் என அமைதியாக இருந்த இல்லம் அதன்பின் இழவு வீட்டிற்கே உரிய சப்தத்தைத் தத்தெடுக்க தடபுடலாக இஷானின் இறுதி ஊர்வலத்தைக் கடமையே கண்ணாக நின்று நிறைவேற்றினான் இந்திரஜித்.

தமையனாய் தோழனாய் நின்று அவனது அனைத்துச் சடங்குகளும் செய்து முடித்தவன், வீட்டுக்கு வர அவனது தாய் ஒருபுறம் உட்கார்ந்து அழுது கொண்டே இருக்க அவரைச் சுற்றி அமர்ந்து இருந்த சொந்தங்கள் தங்களது வேலையைச் சிறப்பாகச் செய்தனர்.

“ஆனாலும், உன் மருமகளுக்கு இவ்வளவு திமிரு ஆகாது மீராம்மா… செத்தது புருஷன், அத்தை பிள்ளனு கூடப் பார்க்காமப் போயிட்டா?” என்று ஒருவர் கூற,

“நீ சரி இல்ல மீராம்மா… வந்தவள அடக்கி ஆளாம அண்ணன் பொண்ணுனு செல்லம் கொடுத்து நீயே கெடுத்து வெச்சுட்ட. அவள நீ தடுத்து இருக்கனும்மா” என்று இன்னொருவர் கூற,

“சரி, போனவ போய்த் தொலைஞ்சா… இப்போ அவன் புள்ளையச் சுமந்துட்டு தாலியும் சுமக்குற புள்ளைய என்ன பண்ணப் போற?” என்று இன்னொரு பெண் கேட்க,

“சொந்தத் தம்பி பொண்ணுனு அவனை வற்புறுத்திக் கல்யாணம் செஞ்சு வெச்சா, அவ இப்படி என் புள்ள உயிரையே பறிப்பானு நான் கனவா கண்டேன்… என் பையன் அப்போவே வேணாம்னு தலபாடா அடிச்சுகிட்டான். நான் கேட்கலையே… இப்போ என் பிள்ள எனக்கில்லையே… அவன் பிள்ளை, அப்பா அம்மா ரெண்டு பேரும் இல்லாம வளரப் போகுதோ? ஐயோ கடவுளே!” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ அதுவரை எல்லா உரையாடலையும் கேட்டுக் கொண்டே இருந்தவன் உள்ளே முறைத்தபடி வர அனைவரும் கப்சிப்பென வாயை மூடிக்கொண்டு கிளம்பினர்.

எப்படி இஷான் இறந்தான்? 

அவன் மனைவி சரண்யா என்றால் கயல்விழி யார்? அவள் எப்படிக் கர்ப்பம்?

இந்திரஜித்! இவன் யாரு புதுசா?

இதுக்குலாம் பதில் கதையோட போக்கில் தெரிஞ்சுக்கலாம்.

11 thoughts on “என் சுஎன் சுவாசம் உன் வாசமாய்…-1”

  1. Avatar

    எடுத்த உடனே ஒரு ஆளை போட்டு தள்ளியாச்சா 🤦🏼‍♀️🤦🏼‍♀️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *