Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 11

என் சுவாசம் உன் வாசமாய் – 11

அத்தியாயம் – 11

அனைவரும் சென்றபின் தம்பியின் முகம் நியாபகம் வந்ததும் இஷானுக்குத் தன் தம்பி அவளைக் காதலித்து இருப்பான் என்ற எண்ணம் வரவே இல்லை. ஒருவேளை, அவனுக்கு அவளைப் பிடிக்கவில்லையோ என்றே எண்ணினான். இதைப்பற்றி அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். ஆனால், அதைப் பேசுவதற்குச் சந்தர்ப்பம் அமையாமலே கடைசிch சுவாசத்திற்கே அவனிடம் இதைப்பற்றிப் பேசுவோம் என்று அறிந்திருந்தால்?

மூன்று வருடப் படிப்பை வெற்றிகரமாக முடித்தவள் பர்ஸ்ட் கிளாஸில்  ரிசல்ட் வாங்கி இருந்தாள். அடுத்து ஒரு வேலைக்கு அப்ளை செய்து இருக்க அவர்கள் அடுத்த வாரம் வரச்சொல்லி இருந்தனர். அதே அடுத்த வாரம் நல்ல நாளாக இருப்பதால் அவளைப் பெண் கேட்டு வருவதாய் சொல்லி இருந்தான் இஷான். ஆனால், படிப்பை முடித்து ரிசல்ட் வந்ததுமே அவளது தந்தை வந்து விட்டார் அவளைப் பார்க்க. பார்த்துத் தன்னோடு அவளை அழைத்துச் செல்ல… ஆனால், அவளோ அவரைத் தவிர்ப்பதிலேயே குறியாக இருந்தாள். 

“ஏன்டா, அவளுக்குத்தான் உன்னக் கண்டாலே ஆக மாட்டேங்குதே. அப்புறமும் ஏன்டா அவளை அங்க கூட்டிட்டுப் போகனும்னு இப்படி அடம் பண்ற?” என்று தன் மகனைத் திட்டிக் கொண்டு இருந்தார். கயல்விழியின் தாத்தா ராஜமாணிக்கம்.

“அவளுக்குப் பிடிக்காதுனு நானும் எவ்ளோ வருஷம் விலகி நிக்கிறதாம்… என் பொண்ணுக்கு நல்லது பண்ணிப் பார்க்கனும்னு எனக்கும் ஆசை இருக்காதா?” என்று கேட்டார் ஈஸ்வரன் (சென்னை ராயபுரம் பகுதியின் பிரபல ரெளடி)

“உங்க சங்காத்தமே வேணாம்னு தானே இங்கே இருக்கேன். என்னை என் இஷ்டத்துக்கு விட்டாலே அதுவே நீங்க எனக்குச் செய்யுற பெரிய நல்லது” என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள் கயல்.

“என்ன? படிச்சோம்னு திமிரா? நான் உன் அப்பன், அந்த நியாபகம் இருக்கா உனக்கு? நீ என்கிட்ட வரலனாகூட நான் அப்பப்போ வந்து உன்னைப் பார்த்துட்டு தானே போயிட்டு இருக்கேன்… நீ செய்யுறதுலாம் எனக்குத் தெரியாதுனு நினைச்சுட்டியா என்ன?” என்று சற்றுக் காட்டமாகக் கேட்ட ஈஸ்வரனை அதட்டிய அவரது தாய் மரகதம்,

“டேய்… என்னடா பண்ணிட்டா அப்படி அவ… நல்லாப் படிச்சு நல்ல மார்க் எடுத்து இருக்கா… வேலைக்கும் போகப் போறா. இன்னும் என்னடா செய்யச் சொல்ற அவளை… அப்படி என்னடா பண்ணக் கூடாதது பண்ணிட்டா அவ…” என்று கேட்க,

“ஹான்ன்… லவ் பண்ணி இருக்கா… உங்க கண்ணுல என் கண்ணுல மண்ணத் தூவிட்டு ஒருத்தனைக் காதல் பண்றா, அது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்க இருவரும் அதிர்ந்தனர். அதே நேரம் வீட்டின் அழைப்பு மணி அடிக்க, கயலின் பதட்டம் அதிகமாகியது. வாசலுக்கு முதுகு காட்டி நின்றிருந்தார் ஈஸ்வரன். அதனால் மரகதம் சென்று கதவைத் திறக்க அங்கே தன் இரு மகன்களுடன் நின்றிருந்தார் மீரா.

அவர்களைக் கண்டதும் யூகித்தவர் அவர்களிடம், “யாருங்க?” என்று கேட்க மீராவோ,

“கயல்விழி வீடு இதுதானே?” என்று கேட்க,

“ஆமா…நீங்க?” என்று அவர் இழுக்க,

“நான் கயல் டியூஷன் படிச்ச சாரோட அம்மா… அந்த சார் என் பையன் இஷான்தான்… உள்ள போய் பேசலாமா?” என்று கேட்க அவர்களை உள்ளே வருமாறு அழைத்தார்.

“வாங்க, உள்ள வாங்க” என்று அழைத்து வர அவர்களைப் பார்த்ததும் கயலுக்குக் கை காலெல்லாம் உதற ஆரம்பித்தது.

உள்ளே வந்தவர்கள் நிற்க, இப்போது பார்க்க இந்திரஜித் கம்பீரமாய் இருந்தான். அவனுக்கு ஒரு வருடம் போலீஸ் ட்ரெயினிங். அடுத்த வாரம் போக இருப்பதால் பெண் கேட்டுப் போகலாம் என்று அழைக்க, மனதை ஓரளவு சமன் செய்து கொண்டு வந்தான். இஷானோ மனம் முழுவதும் தன்னவளைத் தனக்கு மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணமே விரவி இருக்க அவ்வளவு அழகாய் இருந்தான் அவனும்… இப்போது சென்னையின் முக்கியமான கம்பெனிகளுக்கு ஆடிட்டராக ஆகி இருந்தான்.

கயலோ அன்று தந்தை வருவதைச் சொன்னதில் இருந்தே எதுவோ தப்பாக நடக்கப் போகிறது என்பதை உணர்ந்தே இருந்தாள். ஆனால் என்ன என்பதை தான் அறியாமல் பதட்டமாய் இருந்தாள். செம்மண் நிறச் சுடிதாரில் பிஸ்தா கலர் பார்டர் வைத்த சுடிதாரில் கூட அவ்வளவு அழகாக இருந்தாள். தந்தைக்குத் தன் காதல் விஷயம் தெரிந்ததும் அதிர்ச்சியில் உறைந்து நின்றவள் உள்ளே வந்தவர்களைக் கண்டதும் பதட்டம் அதிகமாக நின்றிருந்தாள்.

அவளைக் கண்ட இந்திரஜித்திற்கோ மனதில் பாரம் ஏறிக் கொண்டே போனது.

இஷானுக்கோ காதல் பெருக்கெடுத்தது. உள்ளே வந்தவர்களைப் பெரியவர்கள் மட்டுமே வரவேற்றனர். ஈஸ்வரனோ முதுகு காட்டியே நின்றிருந்தார். அவர்களைத் திரும்பியும் பாராமல் நின்றிருந்தார். அவரது தோரணையே கயலுக்கு பயத்தைக் கொடுக்க தன்னால் மீராவிற்கும், இஷானுக்கும் எந்தவித அவமானமும் செய்துவிடக் கூடாதே என்று பயத்தில் கையைப் பிசைந்து கொண்டே நின்றாள்.

அவளைப் பார்த்த மரகதம், “கயல், அவங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வாம்மா” என்று கூற தலையசைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

“உட்காருங்க” என்று ராஜமாணிக்கம் கூற,

தங்களுக்கு முதுகு காட்டி நின்றவரைப் பார்த்த மீரா அவஸ்தையாய் நெளிந்தபடி,

“இருக்கட்டும் ஐயா… நாங்க பேச வந்ததைப் பேசிடுறோம். உங்க சம்மதம் கிடைச்சா உட்கார்ந்து பேசலாம்” என்று கூற அவரும் சங்கடமாய் புன்னகைத்தார்.

“இவங்க ரெண்டு பேரும் என் பசங்க… இவங்க ட்வின்ஸ், இஷான் இவன் பெரியவன்” என்று கூற இஷான் பெரியவர்களைப் பார்த்து புன்னகைத்துக் கை கூப்பினான். தலையசைத்து அவன் வணக்கத்தை ஏற்றனர் அம்முதியவர்கள்.

அப்போதும் திரும்பவில்லை ஈஸ்வரன்.

அதில் சங்கடமாய் உணர்ந்தவர்கள் இருவரும் தன் தாயைத் திரும்பிப் பார்க்கக் கண்ணசைத்து அமைதியாக இருக்கும்படி சொன்னார் அவர்.

இந்திரஜித்திற்கோ முள் மேல் நிற்பது போலிருந்தது.

“இஷான்… மெட்ராஸ்ல ஆடிட்டரா வேலை செய்யுறான். பார்ட் டைம்மா டியூஷன் எடுக்கிறான். அடுத்து இவன் சின்னவன் இந்திரஜித். ஐபிஎஸ்ஸா ஆகப்போறான். அடுத்த வாரம் ட்ரெயினிங் போகப் போறான். இவனும் கயலும் ப்ளஸ்டூ ஒண்ணாத்தான் படிச்சாங்க…” என்று கூற அவனும் வணக்கம் வைத்தான்.

“அவ்வளவுதான் எங்க குடும்பம், என் பெரிய பையன் இஷான் உங்க வீட்டுப் பொண்ணு கயலை விரும்புறான். கயலுக்கும் விருப்பம்தான்… அதான் பொண்ணு கேட்டு வரலாம்னு வந்தோம்” என்று அவர் கூறி முடிக்கவும் கயல் டீ போட்டு எடுத்து வரவும் சரியாக இருந்தது. ஈஸ்வரன் அருகில் அவள் டீ கப்புகள் அடங்கிய தட்டை நீட்ட சட்டெனத் தட்டி விட்டார் ஈஸ்வரன். அதில் கயலோ பயந்து ஒரு அடி பின் நகர்ந்தாள்.

“டேய் ஈஸ்வரா, என்ன பண்ற நீ?” என்று ராஜமாணிக்கம் கேட்க,

சட்டெனத் திரும்பிய ஈஸ்வரனைப் பார்த்து மூவரும் அதிர்ந்தனர்.

“எவ்வளவு திமிர் இருந்தா என் வீட்டுக்கே வந்து என் பொண்ணையே பொண்ணு கேட்பீங்க? உனக்கு உன் புருஷனைக் கொன்னது பத்தலையா? உன் புள்ளைங்களும் சேர்ந்து சாகணுமா? ஈஸ்வரன்மேல பயம் விட்டுப் போச்சா?” என்று கத்த மீராவிற்கோ கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது. கோபம் தலைக்கு ஏறியது.

“ச்சை… இது உன் குடும்பமா? முன்னமே தெரிஞ்சு இருந்தா உன் வீட்டு வாசப்படியைக் கூட மிதிச்சு இருக்க மாட்டேனே. பாவம் பண்ணவன் பொண்ணு என் மகனுக்கா? த்தூ…” என்று மீரா கோபமாய் கத்த அனைவரும் அதிர்ந்து பார்க்க ஈஸ்வரன் மட்டும் குரோதத்தோடு பார்த்தார். அதில் ஒரு ஏளனப் புன்னகையோடு இருந்தவர் மீரா த்தூ என்று சொல்லவும் கோபம் பொங்கியது அவருக்கு.

“ஏய்ய்ய்! எங்க வந்து யாரைத் தப்பாப் பேசுற… உன் பிச்சைக்காரக் குடும்பத்துல பொண்ணு குடுக்க நானா அலைஞ்சேன். என் பொண்ணு பின்னாடி உன் பையன்தான் அலைஞ்சு இருக்கான். மானங்கெட்ட குடும்பத்துக்குப் பேச்சு வேற. உன்னைலாம் அன்னைக்கே மும்பை ஏரியாவுல வித்து அசிங்கப்படுத்தி இருக்கனும்” என்று கூற, அதைக் கேட்ட மீராவோ கூனிக் குறுகிப் போனார். உடல் தளர்ந்து கைகால் எல்லாம் உதறியது அவருக்கு.

“டேய்ய்…” என்றபடி பாய்ந்து அவரது சட்டையைப் பிடித்தனர் மகன்கள் இருவரும்.

“டேய்! என் மேலயே கையை வைக்கறீங்களா? உங்களையும் உங்க அப்பன மாதிரி நடுரோட்டுல வெட்டித் துண்டு துண்டா ஆக்குறேன்டா…” என்று அவர் திமிர வலிமையான இரு வாலிபர்களால் கூட அந்த ஐம்பது வயது ஈஸ்வரனை அடக்க முடியவில்லை.

அவ்வளவு திடமாக இருந்தார் இருவரையும் தன் கையில் அடக்கியபடி. இருவரும் திமிர,

“ச்சீ விடு, என் பசங்கள… இவ்வளவு கேவலமாப் பேசுற உன் வீட்டுலதான் சம்பந்தம் பண்ண வர்றேன்னு தெரிஞ்சு இருந்தா நான் வந்தே இருக்க மாட்டேன். போயும் போயும் உன் பொண்ணையா என் பையனுக்கு எடுப்பேன். கொலைகாரக் குடும்பத்துல எனக்கு என்ன வேலை? வாங்கடா போலாம்” என்று மீரா கத்த அவர்கள் இருவரையும் விட்டவர் ஏளனச் சிரிப்பு சிரிக்க, மீராவின் பேச்சைக் கேட்ட கயலுக்கோ அவமானத்தில் முகம் கறுத்தது.

கண்கள் கலங்கி இஷானைப் பார்க்க அவனோ அவளது முகத்தைப் பார்த்து வேறுபுறம் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றே விட்டான். அவளைக் கோபமாய் முறைத்த இந்திரஜித்,

“நீ இந்தாளோட பொண்ணுனு மறைச்சுத்தான் எங்க குடும்பத்தோட பழகினியா? உறவாடிக் கெடுக்க நினைச்சியா? இதுக்கு இந்த ஆள் மாதிரி நடுரோட்டுல வெட்டிப் போட்டுப் போய் இருக்கலாம். ச்சீ… வாங்கமா போலாம்” என்று கூறிவிட்டு தன் தாயை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். அப்படியே இடிந்து போய் பொத்தெனத் தரையில் அமர்ந்தாள் கயல். அவளை வந்து தாங்கினர் பெரியவர்கள் இருவரும்..

கலகலவென்று சிரித்த ஈஸ்வரன், “பார்த்தியா? பெருசாப் பண்ணியே லவ்வு… அந்த லவ்வு எப்படி புட்டுக்கிச்சுனு பார்த்தியா? நான் யாருனு தெரிஞ்சதும் துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடிட்டாங்க பார்த்தியா? இப்படி ஒரு கோழையைப் போய் நீ லவ் பண்ணி இருக்க? இதுக்கு நீங்க வேற சப்போர்ட். போதும், அவள இங்க விட்டதுக்கு அவ என்ன பண்ணி வெச்சு இருக்கா பாருங்க. கிளம்பு முதல்ல…” என்று கத்த அசையாமல் இருந்தவள் தன்னவன் தன்னை உதறிவிட்டுச் சென்றதை எண்ணி இதயம் கசங்க அமர்ந்திருந்தாள்.

“டேய்… நீயெல்லாம் மனுஷனாடா? அவங்கள எவ்ளோ கேவலமாப் பேசின நீ… உன்னை நாங்க தானா பெத்தோம். ச்சீ… எங்க முகத்துலயே முழிக்காத, போடா வெளியே… என் பேத்திய உன்னை நம்பி நாங்க அனுப்ப மாட்டோம், போடா வெளியே…” என்றார் ராஜமாணிக்கம்.

“அப்பா… நான் கொலைகாரன்தான், இல்லனு சொல்லல… அதுக்காக என் பொண்ணுக்கு கண்டவனையும் கட்டி வைக்க விடமாட்டேன். அவளைக் கொன்னு புதைச்சாலும் புதைப்பேனே தவிர அந்தக் குடும்பத்துக்கு கொடுக்கவே மாட்டேன். அவ அம்மா ஆசைப்படி அவளுக்கு நல்ல வசதியான பையனாப் பார்த்துக் கல்யாணம் செய்வேன்” என்று கூற இடைமறித்த கயல்,

“எப்படி? என் அம்மாவை நீங்க கொன்னீங்களே? அதேமாதிரி என்னையும் கொல்லத் தானே கல்யாணம்னு சொல்லிக் கூட்டிட்டுப் போகப் பார்க்கறீங்க?” என்று அழுதபடி கேட்டுக் கொண்டே தன் அழுத கண்களை அழுத்தித் துடைத்தபடி கேட்டாள். அதில் ஈஸ்வரன் சற்று அதிர்ந்தாலும் சுதாரித்துக் கொண்டார்.

பெரியவர்கள் இருவருக்கும் பயங்கர அதிர்ச்சி.

“என்னம்மா சொல்ற?” என்று அவளை மரகதம் கேட்க, நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள் கயல்.

3 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *