Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 12

என் சுவாசம் உன் வாசமாய் – 12

அத்தியாயம் 12

அன்று பதினோறாம் வகுப்பு கிளாஸ் முடித்து வழக்கம் போலத் தன் தாயிடம் தனக்கு ஒரு புதுத் தோழி கிடைத்த செய்தியைப் பகிர்ந்து கொள்ள ஆவலோடு ஓடி வந்தவள் உள்ளே தன் தந்தை ஆக்ரோஷமாகக் கத்தும் சத்தம் கேட்டு அப்படியே சடன் ப்ரேக் போட்டு நின்றாள்.

“என்னடி? வாய் ரொம்ப நீளுது… யாருமில்லாத அநாதை நாயி உனக்கு இவ்வளவு கொழுப்பா?

யாரைக் கேட்டு என் பணத்தை எடுத்துச் செலவு செஞ்ச? உனக்கும் அந்தப் பொண்ணுக்கும் அப்படி என்ன சம்பந்தம்? யாரோட குழந்தை அது? அப்படி என்ன பாசம் பொங்குது உனக்கு அந்தக் குழந்தை மேல? நீயே ஒரு அநாதை… இதுல இன்னொரு அநாதையைக் கூட்டி  வந்திருக்க? எவனுக்குப் பெத்த இதை?” என்று ஆக்ரோஷமாகக் கேட்க கூனிக் குறுகி நின்றார் வேதவள்ளி.

அவர் பேசியதைக் கேட்ட கயல்விழிக்கு கோபத்தில் அவரை நாலு கேள்வி கேட்க வேண்டும் என்று எழுந்த எண்ணம் தன் தாயைதான் அதற்கும் அடிப்பார் என்று எண்ணியபடி அமைதியாக நடப்பதைக் கவனிக்கலானாள்.

வேதவள்ளி, ஏழைக் குடும்பத்தில் பிறந்த அழகான பெண். ஒரு கடனை வசூலிக்கக் கட்டப் பஞ்சாயத்துக்குச் சென்ற ஈஸ்வரன் இவரின் அழகில் மயங்கி பணத்தைக் கொடு. இல்லையெனில், அவரது மகளை விட முடியாது எனக் கூறி வேதவள்ளியைத் தூக்கிச் சென்று ஒருநாள் தங்க வைத்தும் பணம் வராததால் பணத்துக்குப் பதிலா இந்தப் பொண்ணு என்றுவிட்டு இவரை அழைத்து வரக் கேட்க, வேதவள்ளியோ வர மறுக்க, அடித்துத் துன்புறுத்தி அவரை இழுத்து வந்தார் ஈஸ்வரன்.

அதனால் பயந்துபோன வேதவள்ளி மயங்கி விழுந்தவர் இரண்டு நாட்கள் எழவில்லை. இதையெல்லாம் பார்த்துக் கோபப்பட்ட ராஜமாணிக்கம் ஈஸ்வரனை வேதவள்ளியின் கழுத்தில் தாலி கட்டச் சொல்லி சண்டையிட வேதவள்ளியின் பயந்த முகம் ஏதோ செய்ய தாலியைக் கட்டித் தனது மனைவி ஆக்கிக் கொண்டார். அவருடன் மனம் ஒத்து வாழ மட்டும் அவரால் முடியவே இல்லை. தன்னைக் கண்டாலே பயந்து நடுங்கும் வேதவள்ளியை மிரட்டி மிரட்டியே அவரது வேலைகளை முடித்துக் கொள்வார். அதனால் அவரிடமிருந்து ஒதுங்கியே இருப்பார் வேதவள்ளி. இவரது கவலையால் வேதவள்ளியின் தந்தையும் இறந்துவிட யாருமற்ற ஆள் ஆனார். அவரது அமைதியான குணத்தைப் புரிந்த மரகதமும், ராஜமாணிக்கமும் அவரிடம் பரிவு காட்ட அவர்களிடம் ஒட்டிக் கொண்டார் அவர். ஆனாலும் கணவன்மேல் பயம் குறையவில்லை.

அப்படி பயத்திலேயே குழந்தை உண்டாக அவரை கவனித்துக் கொள்ள வந்தனர் பெரியவர்கள் இருவரும். அதில் மேலும், அவர் ஈஸ்வரனை விட்டு ஒதுங்கிச் செல்ல மரகதம் மட்டும் வேதவள்ளியின் அழகையே பெருமையாகப் பேசுவார். அதனால் ஈஸ்வரனுக்குக் கோபம் வரும்.. அந்தக் கோபத்தில் பெரியவர்களைச் சண்டை போட்டு அவர்களை ஊருக்கு அனுப்பிவிட நிறைமாதமாய் இருந்தார் வேதவள்ளி. அப்போதும் கணவனை ஒரு மனம் தேடினாலும், இன்னொரு மனம் ஒதுக்கத்தையே காட்ட அதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஈஸ்வரன் அவர் அழகாக இருப்பதால் தான் தன்மேல் ப்ரியம் வர மறுக்கிறது எனத் தவறாக எண்ணி அவர் மேல் சந்தேகப்பட ஆரம்பித்துக் கோபமாகத் தள்ளி விட்டதில் கீழே விழுந்த நிறைமாத கர்ப்பிணியான வேதவள்ளிக்கு வயிற்றில் அடிப்பட்டு பிரசவ வலி வந்துவிட ஆபரேஷன் செய்துதான் பிறந்தாள் கயல்விழி.

அப்போது அடிபட்டதில் அவரது கர்ப்பப்பை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது, இனி அவரால் வேறு ஒரு குழந்தையைச் சுமக்க முடியாது என்று டாக்டர்கள் கூறியதால் அன்று முதல் ஈஸ்வரனின் வெறுப்புக்கு ஆளானார். 

தன் சுகத்துக்கு இல்லாத அழகு தேவையற்றது என எண்ணிய ஈஸ்வரன் அவரைப் பிள்ளை பெற்ற உடம்புக்காரி என்றும் பாராமல் வேலைகளை ஏவிக் கஷ்டப் படுத்துவார். அவரால் முடிந்த வரை செய்தவர் முடியாத பட்சத்தில் அவரிடம் கடும் சொற்களைக் கேட்க வேண்டி வரும்.

“என்னைவிட நீ அழகா இருக்கேங்கிற திமிர்ல தானே என்னை டாக்டர் கிட்டச் சொல்லி ஒதுக்கி வெச்சுட்டு, வேற எவன் கூடவோ கம்பி நீட்டப் பார்க்கிறியா? செத்தாலும் அது நடக்காதுடி” என்று கொச்சையாக அவரைப் பேசுவார். 

அவரது பேச்சு முதலில் அழுகையைத் தந்தாலும் போகப் போக அதைப் பழகிக் கொண்டார் வேதவள்ளி. ராஜமாணிக்கமும் மரகதமும் அவருக்கு ஆறுதலாக இருக்க அவரும் தன் உலகத்தை மகளளவில் சுருக்கிக் கொண்டார். ஆனால், ஈஸ்வரன் மகளைத் தன்வசம் வைத்துக் கொள்ளவே பார்ப்பார். 

ஆனால் கயலுக்கோ அமைதியான அம்மாவின் குணம் அழகு எல்லாம் போல, அப்பாவைப் பிடிக்காத அம்மாவின் நிலைமை தான் அவளுக்கும். அதனால், தாயிடம் பற்றுக் கொண்டவள் ஈஸ்வரன் தாயைத் தப்பாகப் பேசும் சமயங்களில் அவரைக் கோவில் அல்லது அநாதை இல்லம் அப்படி அழைத்துச் சென்று விடுவாள். தாயின் நிலையினை எண்ணும்போது அவளுக்குத் தந்தையின் மேல் ஆத்திரம் பொங்கும். ஆனால், தாய்க்காகத்தான் அமைதி காப்பாள். இல்லையெனில், அவர் கேவலமாகப் பேசும் சமயம் எதையாவது தூக்கிப் போட்டு உடைத்து தன் கோபத்தைக் காட்டுவாள். உடனே தந்தையைப் பார்த்து விட்டால் பயம் வந்துவிடும்.

தன் தாயுடன் சென்ற அநாதை இல்லத்தில் வந்து சேர்ந்த ஒரு பெண் அப்போது குழந்தை பெற்று இருந்தாள். ஏனோ தெரியவில்லை, வேதவள்ளிக்கு அந்தக் குழந்தை மேல் தனிப் ப்ரியம்.

அதனால், அந்தக் குழந்தைமேல் தனியாகப் பாசம் காட்டுவார். அந்தக் குழந்தைக்கு இதயநோய் இருப்பதைக் கண்டு பிடித்த மருத்துவர்கள் அதற்கு வைத்தியம் பார்க்கப் பணம் அதிகமாகச் செலவாகும் என்று கூற, அவள் நாடி வந்தது வேதவள்ளியிடம். ஆனால், அவளுக்கு வேதவள்ளியின் உண்மை நிலை தெரியாதே. அதனால் வந்து விட்டாள். தெரிந்து இருந்தால் வேதவள்ளி காப்பாற்றப்பட்டு இருப்பாரோ? என்னவோ?

தன் கணவன் வெளியே முரட்டுத்தனமாக இருந்தாலும் நாம் கேட்டால் உதவுவார் என நம்பிய வேதவள்ளி அந்தப் பெண்ணை வெளியே அமர வைத்துவிட்டு தன் கணவனிடம் உதவி கேட்க,

அவர் கத்திய கத்திலும், பேச்சிலும் அந்தப் பெண் மனம் நொந்து உதவியே வேண்டாம் என்று அமைதியாகச் சென்றுவிட, அவள் சென்ற சமயம் உள்ளே நுழைந்தாள் கயல்.

அப்போது தான் தனது தாயைத் தந்தை கேட்ட வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்து நின்றாள்.

“இல்லீங்க… அந்தக் கு..குழந்தைக்கு உடம்பு சரியில்லைனு உதவி கேட்டாங்க… அ..அதான், உ..உங்ககிட்ட கே..கேட்கலாம்னு வ..வரச் சொன்னேன்” என்று திக்கித் திணறிக் கூற, அவரது பின்னங்கழுத்து முடியைக் கொத்தாகப் பிடித்தவர்,

“ஏன்டி… நீ எவனுக்கோ பெத்துட்டு அந்தக் குழந்தைய என் காசுல வளர்க்கப் பார்க்கறியா? ஆமா, உன்னால தான் பெத்துக்க முடியாதுல… ஓஓ! உன் ஆசை நாயகனோட புள்ளையா இது? அதான், அதுமேல அம்புட்டுப் பாசம் பொழியுறியோ? எவன்டி அவன்? எங்க இருக்கான்? அடிக்கடி அவனைப் போய் பார்ப்பியோ? இந்த அநாதை ஆசிரமம்னு போறியே, அது அவனைப் பார்க்கத் தானா? இதுக்கு என் பொண்ணையும் உடந்தையா இருக்க வெச்சு இருக்கியா? இவன் ஒருத்தன் தானா? இல்ல இன்னும் இருக்கானுங்களா?” என்று ஆக்ரோஷமாகக் கேட்க,

இத்தனை நாள் பொறுமையாய் போன வேதவள்ளிக்குத் தன் விதியின் விளையாட்டோ, என்னவோ? கோபம் வர,

“ஆமா… நான் அந்தக் குழந்தையோட அப்பனை வெச்சு இருக்கேன். உங்கள மாதிரி கேடுகெட்ட ஆள் கூட இருந்து ஒரு புள்ளையைப் பெத்தனேனு அருவருப்பா இருக்கு. அதான், நான் அவனைத் தேடிப் போனேன்” என்று அவரும் கத்தச் சட்டென அவரது கழுத்தை நெறித்தவர்,

“ஏன்டி, ஓடுகாலி நாயே… எனக்கு புள்ளையப் பெத்தது உனக்கு அருவருப்பா இருக்கா? எவ்வளவு ஏத்தம் இருந்தா நீ என்னையே எதிர்த்துப் பேசுவ? சாவுடி சாவு… இந்த அழகு இருக்குறனாலதானே நீ கண்டவனையும் தேடிப் போற? இனி நீ இருந்தா தானேடி. என்னை எதிர்த்துப் பேசினா என்ன ஆகும்னு உன் பொண்ணுக்கும் காட்டுறேன்டி வரட்டும் அவளும். உயிரோட சமாதி கட்டுறேன்” என்று அவரது தலையை அங்கிருந்த சுவற்றில் இடிக்க அங்கே அடிக்கப்பட்டு இருந்த ஆணி நெற்றியில் பதம் பார்க்க,

“ஆ” என்று லேசாக அலறியவர் அவரது கையிலேயே சரிய அதைக் கண்ட கயல் ஓடிவரப் பார்க்கத் தனது தந்தையின் செயலில் அப்படியே ஒளிந்து நின்றாள். அப்போது தான் அங்கே ஆணி இருந்ததைக் கவனித்த ஈஸ்வரன் அப்போது தான் சுயம் பெற்றார்.

உடனே அவரைப் படுக்க வைத்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தவர், இரத்தம் வழிய மயங்கிய மனைவியைக் கன்னத்தில் தட்ட அவரோ அந்த மயக்கத்திலும்,

“என் பொண்ண விட்டுடுங்க” என்று கேட்டவரின் வாயைப் பொத்த மூச்சு மொத்தமாக நின்றது வேதவள்ளிக்கு. தன் தாயை நெருங்காமல் ஒளிந்து நின்று இதையெல்லாம் பார்த்த கயலுக்குத் தந்தையின் மீது கொலை வெறியே வந்தது. இப்போது இதைக் கேட்டால் தன்னையும் கொன்று விடுவார். அதன்பின் அவரது அட்டூழியங்களுக்கு முடிவில்லாமல் போய்விடும் என்று எண்ணியவள் ஊமையாக வாய்பொத்தி அழுதபடி நின்றாள்.

உடனே தனது வலது கைக்கு ஃபோன் செய்த ஈஸ்வரன் தனது மனைவியின் சடலத்தை வண்டியில் எடுத்துச் சென்று காரில் குண்டு வெடிப்பு போல செட் செய்து அப்போதைய எதிரியின் மேல் பழியைப் போட்டுத் தன்னை நல்லவராகத் திரித்துக் கொண்டார். சொல்லி விட்டு ஓஓவென அழுதவளை ஓடிவந்து அணைத்துக் கொண்டார் மரகதம்.

தன் மகனுக்குள் இப்படி ஒரு வக்கிர புத்தியா? என்று திகைத்த ராஜமாணிக்கம் கோபமாக ஈஸ்வரனைப் பார்த்து, “என் வீட்டைவிட்டு வெளியே போடா கொலைகார நாயே” என்று கத்தினார்.

1 thought on “என் சுவாசம் உன் வாசமாய் – 12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *