Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 13

என் சுவாசம் உன் வாசமாய் – 13

அத்தியாயம் 13

ராஜமாணிக்கம் கத்த அவரைக் கோபமாய் பார்த்த ஈஸ்வரன், “அவளை அனுப்புங்க, நான் போய்கிட்டே இருக்கேன்.” என்று அசால்ட்டாகக் கூற,

‘இவளை அழைத்துச் செல்வதில் இவ்வளவு முனைப்போடு இருக்கிறானே ஏதோ தப்பாத் தெரியுதே’ என்று யோசித்த ராஜமாணிக்கம், 

“அவ அம்மாவோட ஆசைப்படி நாங்க அவளுக்கு நல்லவனாப் பார்த்துக் கல்யாணம் செஞ்சு வைப்போம். நீ இனி ஒரு நிமிஷம் என் வீட்டுல நிக்கக்கூடாது. கட்டின பொண்டாட்டிய சந்தேகப்பட்டு அவளைக் கொன்னுட்டு என்னமோ பொண்டாட்டி மேல பாசமா இருந்தவன் மாதிரி நடிக்கிறியே, உனக்குலாம் வெட்கமா இல்லையாடா? கேடு கெட்டவனே? போடா வெளியே” என்று கத்த,

“நான் ஏன் வெட்கப்படனும்? அவ விதி இப்படித்தான் சாகனும்னு இருக்கு. போய்ச் சேர்ந்துட்டா… அதுக்கு நான் என்ன செய்ய? இங்க பாருங்க, உங்ககிட்ட எனக்கென்ன பேச்சு? ஏதோ பெத்தவங்களாச்சேனு மரியாதை கொடுத்தா ரொம்பத் துள்ளுறீங்க? இவளை நான் என் ஆப்போசிட் குரூப் தலைவன் பையனுக்குப் பேசி முடிச்சு இருக்கேன். அடுத்த மாசம் கல்யாணத் தேதி முடிவு பண்ணி இருக்கேன். போதும் இவளை உங்கள நம்பி விட்டது. இனி இவ எவனை இழுத்துட்டு ஓடுவாளோனு என்னால காவல் காத்துட்டு அலைய முடியாது. அவ என் கண் பார்வையிலேயே இருக்கட்டும்” என்று கூற அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அனைவருக்கும்.

அதில் மேலும் கோபப்பட்ட ராஜமாணிக்கம், “ஏன்டா கொலைகாரப் பயலே… தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணாலும் உன்னைக் கட்டிகிட்ட பாவத்துக்கு அந்தப் பொண்ணு நீயே கதினு உனக்கு உண்மையா இருந்து எங்களையும் நல்லபடியா பார்த்துக் கிட்டவளைக் கொன்னதும் இல்லாம வியாக்கியானம் பேசுற நீ? இதுல எந்த நம்பிக்கையில நீ இந்தப் பிள்ளைக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுத் தருவனு அனுப்பச் சொல்லுற? வெட்கமா இல்ல உனக்கு. கண்ணு முன்னாடியே அவ அம்மாவக் கொன்னு இருக்க, இதுல எப்படிடா அவ உன்கூட வருவானு கூப்பிடுற மானங்கெட்டவனே. போய்டு இங்க இருந்து, இல்ல, நானே உன்னக் கொன்னுடுவேன். இனி எங்க மூஞ்சியிலேயே முழிக்காதடா” என்றபடி அவரைத் தள்ளி விடப் போக சட்டென நழுவிய ஈஸ்வரன் தனது இடது கையால் தந்தையைத் தடுத்து நிறுத்த அவரது கையை உதறி விட்டார் ராஜமாணிக்கம்.

“இங்க பாருங்க… எனக்கு ஒண்ணும் உங்ககூட உறவாட விருப்பம் இல்ல. ஏதோ பெத்த கடமைக்காக தான் உங்களுக்குக் கொஞ்சம் மரியாதை கொடுத்துட்டு இருந்தேன். அதும் என்னைப் பத்தி முழுசாத் தெரியாததால தான் அதுகூடக் கொடுத்துட்டு இருந்தேன். இனிமேல் உங்களுக்கு அதெல்லாம் இல்ல. நான் இவள ஒரு பிஸினஸ்மேனோட பையனுக்கு முடிவு பன்னிட்டேன். அவன் தயவுலதான் நான் அரசியல்ல இறங்கப் போறேன். அதுக்கான எல்லாப் பணமும் அவன்தான் தர்றான். ஒழுங்கா அவள என்கூட அனுப்புங்க, இல்ல உங்களக் கொல்லக்கூடத் தயங்க மாட்டேன்” என்று கத்த மூவருக்கும் மூச்சே நின்றுவிடும் போல இருந்தது.

“அடப்பாவி! நீயெல்லாம் மனுஷனா? உன்னை நம்பி வந்தவளைக்  கொன்னுட்டு பெத்த புள்ளையையும் இப்படி பணம், பதவிக்குனு விக்கப் பார்க்கிறியே? நாங்க உயிரோட இருக்குறவரை உன்னால அவகிட்ட நெருங்க முடியாதுடா?” என்று மரகதமும் கத்தினார்.

“உங்களைக் கொன்னுட்டுதான் இந்தக் கல்யாணம் செய்யனும்னா அதையும் செய்வேன். எனக்கு என் மேல பயம் இருக்கனும் ஜனங்களுக்கு. ஈஸ்வரன்னாலே ஈரக்குலை நடுங்கனும். அதுக்காக என்ன வேணா செய்வேன்…” என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே அவர்கள் வீட்டின் முன் போலீஸ் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய போலீஸுடன் கூடவே இறங்கிய இந்திரஜித்தைப் பார்த்ததும்தான் உயிர் வந்தது கயலுக்கு.

வேகமாக “இந்தர்” என்றபடி அவனிடம் ஓட அவனோ முகத்தைத் திருப்பியபடி,

“போதும் நடிப்புலாம்… நான் வந்தது என் அப்பாவைக் கொன்னவனை அரெஸ்ட் பண்ணச் சொல்லி… உங்கிட்டப் பேச எதுவும் இல்ல. அந்தக் கொலைகாரன் பொண்ணுதானே நீ” என்று கூற விக்கித்து நின்றாள் கயல். கண்களில் கண்ணீரோடு அவனைப் பார்க்க அவனோ வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

அதில் மனம் வலித்தாலும் சரிசெய்து கொண்டு போலீஸிடம் ஓடியவள், “சார்..சார்… இந்த ஆளைப் புடிச்சுட்டு போங்க சார்… எங்க எல்லாரையும் கொல்லுவேன்னு சொல்றாரு” என்று கூற,

“இரும்மா பேசலாம்” என்று கூறிய இன்ஸ்பெக்டர், ஈஸ்வரனைப் பார்த்து,

“உங்களக் கைது பண்ண வந்து இருக்கோம் சார். இவங்க அப்பாவைக் கொன்னதா உங்கமேல இருந்த பழைய கேசை திரும்பவும் ரீஓபன் பண்ணி இருக்கு. நீங்களா வந்தா நல்லது. இல்லனா நாங்க இழுத்துட்டுப் போக வேண்டி வரும்” என்று கூற,

“எங்க வந்து யார்கிட்டப் பேசுறனு தெரியுதா இன்ஸு? நான் ஈஸ்வரன்டா” என்று கர்ஜிக்க,

தன் காதைக் குடைந்தபடி ஈஸ்வரனைத் திரும்பிப் பார்த்தான் இந்திரஜித்.

“சார், நீங்களா வந்துட்டா பிரச்சனை பெருசா ஆகாது. உங்களுக்குத் தெரிஞ்ச ஆளுங்கள வெச்சு வெளியே வந்துடலாம். அப்புறம், இதெல்லாம் பார்த்துக்கோங்க. இப்போ நீங்க வரலைன்னா ரொம்பக் கஷ்டம்… புரிஞ்சுக்கோங்க சார்” என்று அவரது காதில் ரகசியமாக இன்ஸ்பெக்டர் பேச சிறிது யோசித்தவர்,

“ம்ம்… வர்றேன்” என்றபடி திரும்பியவர்,

“எவனையும் உயிரோட விடமாட்டேன்” என்று விட்டுத் திரும்பி நடந்தார். ஆனால், அவரால் வெளியே வரமுடியவில்லை. காரணம்…

இந்திரஜித்தும், இஷானும் கொடுத்த கம்ப்ளைன்ட் மட்டும் இல்லாமல், கயலும் அவளது தாத்தாவும் பாட்டியும் சேர்ந்து கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தனர்.

அதுவும் தன் மனைவியையே கொன்றதாகவும் அதைக் கயல் நேரில் கண்டதாகவும் சொல்லி கம்ப்ளைன்ட் பதிவு செய்ய அதில் வசமாக சிக்கிக் கொண்டார். அதனால் அவரால் வெளியே வரமுடியாத நிலை.

குற்றமும் நிரூபிக்கபட்டது. கோர்ட்டில் ஜட்ஜ் அவருக்கு இரண்டு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தார்.

அந்தப் பெரிய பிஸினஸ்மேனும், “இந்தப் பிரச்சினை பெரிய இடம் வரை சென்றுள்ளது. அதனால் இப்போதைக்கு வெளிவருவது கஷ்டம். ஜட்ஜும் கொஞ்சம் கெடுபிடியான ஆள். அடுத்த மாதம் தான் வெளியே எடுக்க முடியும், அதனால் அட்லீஸ்ட் ஒரு மாசமாவது ஈஸ்வரன் ஜெயிலில் இருக்க வேண்டும், இதைச் சற்று ஆறப் போட்டுத்தான் செய்ய முடியும்” என்று கூறிவிட அதற்குள் தன் தாய், தந்தையைக் கொன்னாவது தனது மகளை அங்கிருந்து தூக்கும்படி கூறினார் ஈஸ்வரன்.

சரியெனக் கூறியவன் தனது அடியாட்களை அனுப்பிக் கயல்விழியை தூக்கிவர முடிவு செய்த வேளை,

கயலின் வாழ்வையே புரட்டிப் போடும் நிலை நேர்ந்தது.

ஈஸ்வரனைப் போலீஸில் பிடித்துக் கொடுத்த கையோடு இந்திரஜித் கயல்மேல் இருந்த கோபம் மறையாமலே தனது ஐ.பி.எஸ் டிரெயினிங்கிற்காகக் கிளம்பி விட்டான். இஷானோ தன்னவளை மறக்கவும் முடியாமல் தன் துயரத்தை யாரிடமும் சொல்லவும் முடியாமல் தன் தந்தையைக் கொன்றவனின் மகளாக அவளை வெறுத்து ஒதுக்கவும் முடியாமல் தத்தளித்தான்.

அதே சமயம் கயலோ தன் நிலையை நொந்தபடி வீட்டில் வளைய வந்தாள். அவளது நிலை கண்ட முதியவர்கள் இருவருக்கும் மனம் வெந்தது.

தங்கள் மகன் எவ்வளவு கொடூரமானவன் என எண்ணி எண்ணி அவர்களது இதயம் புண்ணானது. கயலின் நிலையைப் பார்க்கப் பார்க்க மனம் மேலும் மேலும் ரணமானது.

இவளுக்கு ஒரு நல்வாழ்வு அமைய வேண்டும் என எண்ணியவர்கள், தங்கள் பேத்தியிடம் “மனசு சரியில்லை, கோயிலுக்குப் போயிட்டு வர்றோம்” என்று கூறிவிட்டு இஷானின் வீட்டுக்கு வந்து இறங்கினர்.

1 thought on “என் சுவாசம் உன் வாசமாய் – 13”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *