Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 14

என் சுவாசம் உன் வாசமாய் – 14

அத்தியாயம் 14

அன்று வேலையே ஓடவில்லை இஷானுக்கு. சென்னையின் ஆடிட்டர்களில் முக்கியமான ஆடிட்டராக வளர்ந்து வருபவர்களில் இஷானும் ஒருவன். எந்த வேலையை எடுத்தாலும் தன்னவள் நினைவே அவனை அலைக்கழித்தது.

கூடவே அவளது தந்தையின் நினைவும் அனுமதியில்லாமல் வந்தது. கூடவே தனது தந்தையின் இறப்பும் அவனைக் கேட்காமலே வந்தது.

இஷானும், இந்திரஜித்தும் அப்போது எட்டு வயதுச் சிறுவர்கள். இஷானின் தந்தை டெல்லியில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்த புதுக் காவல் அதிகாரி. தனது மனைவி மக்களுடன் நல்ல முறையில் கனிவுடன் இருப்பவர் வேலை என்று வந்துவிட்டால் இரும்பு மனிதனாக மாறி விடுவார்.

மிகவும் கண்டிப்பானவர். நேர்மையான அதிகாரி. அதனால், அவர் மாற்றல் வாங்கி வந்த முதலே அவர் ஒரு தொல்லையாக மாறியது ஈஸ்வரனுக்கு தான்.

ஈஸ்வரன் அப்போது தான் சென்னையின் வளர்ந்து வரும் ரெளடியாக உருமாறிக் கொண்டு இருந்தார். பாதி வடசென்னையே அவரின் பேரைக் கேட்டாலே நடுங்க ஆரம்பித்து இருந்தது.

அதனால் அவரது கேடுகெட்ட செயல்களைத் தடுத்தபடி இருந்தார் இஷானின் தந்தை. அதில் இவர்மேல் கோபம் கொண்ட ஈஸ்வரன் முதலில் வாய்வழியே மிரட்டிப் பார்த்தார், அவர் பணியவில்லை. ஒரு போதை மருந்துக் கடத்தலில் கையும் களவுமாகச் சிக்கிக் கொண்டனர் ஈஸ்வரனின் அடியாட்கள். அவர்களை அடித்துத் துன்புறுத்தி ஈஸ்வரன்தான் காரணம் என்று வாக்குமூலம் வாங்கியவர், ஈஸ்வரனைக் கைது செய்து விட்டார். இரண்டே நாளில் வெளியே வந்த ஈஸ்வரன் கொலை வெறியோடு இஷானின் அன்னை மீராவை முதலில் கடத்தினார்.

அவரைக் கடத்தி வைத்துக் கொண்டு இஷானின் தந்தைக்கு ஃபோன் செய்தார்.

“யோவ் போலீஸு… உன் பொண்டாட்டி உனக்கு பத்திரமா வேணும்னா நீ உடனே ராயபுரம் மார்க்கெட் ஏரியாக்கு வர்ற… இல்ல, உன் பொண்டாட்டிய ரெட் லைட் ஏரியாக்கு வித்துடுவேன்” என்று மிரட்டல் விட,

அப்போதைய சூழ்நிலையில் ஈஸ்வரனுக்கு ஒரு பெரிய அரசியல்வாதி சப்போர்ட் இருந்ததால் அவனை எதுவும் செய்ய முடியாமல் தன் மனைவியைக் காப்பாற்ற வேண்டும் என எண்ணி அவன் சொன்ன இடத்திற்குச் சென்றார் அவர், தனது மகன்களுடன். ஏனெனில், அவர்களும் வருவேன் என்று அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்ததால்…

ஆனால், மகன்களைக் காரிலேயே இருக்கப் பணிந்தவர், காரை டிரைவர் ஓட்டி வந்ததால் அவரை வெளியே போகச் சொல்லி லாக் செய்து விட்டே இறங்கினார். அதனால், அவர்களால் இறங்க முடியவில்லை. அவர் மட்டும் இறங்கி முன்னே செல்ல இந்தர் தனது தந்தையை அழைத்தான். அது எதையும் காதில் வாங்காமல் சென்றவர் தன் மனைவியைக் காக்க ஈஸ்வரன் முன் நின்றார்.

அவரை ஏளனமாகப் பார்த்த ஈஸ்வரன், 

“என்னா போலீஸு… அம்புட்டு தைரியமாப் பேசின? இப்போ எங்க போச்சு உன் தைரியம்லாம்… உன் பொண்டாட்டினு வந்த உடனே உனக்கு பயம் வந்துடுச்சா. ஒழுங்கா என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேளு, உன்னை விட்டுடறேன்… இல்ல, உன் பொண்டாட்டியால நீ அசிங்கப்படுவ” என்று கூற, 

அவனது பேச்சில் கோபம் கொண்டவர் அவனைத் தாக்க வர அதற்குள் ஏழு எட்டுப் பேர் அவரை ஒரே நேரத்தில் பல இடங்களில் வெட்டினர். அதில் அவர் நிலைகுலைய தன் மனைவியின் கண் முன்னே தாக்கப்பட்டார். இதைக் காரிலிருந்து பார்த்த இஷானும் இந்தரும் அலறிக் கத்த, மீரா பதறித் துடிக்க, அவரை அடித்துக் கீழே தள்ளிய ஈஸ்வரன் தன் ஆத்திரம் தீரும் வரை தன் கைகளாலேயே பல இடங்களில் அவரை வெட்டினான். அதில் அவர் அங்கேயே சரிய ஆக்ரோஷமாகச் சிரித்த ஈஸ்வரன்,

“என்னைப் பகைச்சுகிட்டா என்ன நடக்கும்னு எல்லாருக்கும் இது பாடமா இருக்கனும்டா” என்றுவிட்டு அங்கிருந்து சென்று விட கீழே விழுந்த மீராவின் கண்கள் அதிர்ச்சியில் அப்படியே நின்றது. பயத்தில் உடலெல்லாம் நடுங்கியது.

ஈஸ்வரனின் ஆட்கள் சென்ற பின்னும் அங்கே மக்கள் ஒதுங்கியே நின்றனர். யாருமே அவர்கள் அருகில் செல்லவில்லை. இஷானும், இந்தரும் காரிலிருந்தே கத்தியபடி இருக்க லேசாக உயிர் ஒட்டியிருந்த இஷானின் தந்தையின் உடல் தூக்கிப் போட்டது. உடனடியாக மீராவை உலுக்கிய மக்கள் அவருக்கு இன்னும் உயிர் இருப்பதாகக் கூற என்ன செய்வதெனத் தெரியாமல் மலங்க மலங்க விழித்த மீராவையும் அழைத்துக் கொண்டு அவரையும் தூக்கிக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு ஓடினர் மக்கள். அதற்குள் காரின் டிரைவர் சாவியைத் தேடி பசங்களை அழைத்துக் கொண்டு செல்ல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுத்தும் அவர் இறந்து விட்டார், என்று கைவிடத் தன் பிள்ளைகளோடு தனித்து நின்றார் மீரா. காவல் துறை தங்களது மன்னிப்பைக் கேட்டுவிட்டுச் சென்று விட்டது.

இதையெல்லாம் நேரில் பார்த்ததால் இஷானுக்கும், இந்தருக்கும் பயமும் கோபமும் அதிகமானது. மீராவோ மயக்கத்தில் ஆழ்ந்து விட்டார். இரண்டு நாட்கள் கழித்து தான் கண் திறந்தார். அவரது நிலையால் பிள்ளைகள் மேலும் அரண்டு விட்டனர்.

நடந்தது அனைத்தும் கண்முன் வர அலறி அடித்து எழுந்த மீரா தன் கணவன் உலகில் இல்லை என்ற நிதர்சனம் புரிய அவருக்குச் செய்ய வேண்டியவற்றை தன் மகன்களை முன்நிறுத்திச் செய்ய வைத்தவர், சென்னையின் அருகில் படப்பையில் நிலம் வாங்கி வீடு கட்டிக் குறியேறினார். தன் கணவனின் மரணத்திற்கு அரசாங்கம் இழப்பீடாகக் கொடுத்த பணத்தை பேங்கில் போட்டு தனது மகன்களின் படிப்புக்கு வழி செய்தார்.

ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்தார். அயராது உழைத்துத் தன் மகன்களை ஆளாக்கினார். அதன்பின் தலையெடுத்த மகன்கள் அவருக்கு ஓய்வு கொடுத்து வீட்டில் இருக்க வைத்தனர்.

தன் கணவனுக்கு நேர்ந்தது தன் மகன்களுக்கும் நேரக்கூடாது என நல்லதையே போதித்து வளர்த்தார். அதையே வேதமாகப் பின்பற்றிய இஷான் அமைதியே உருவாகவும் தன் தாயை மதிப்பவனாகவும், இந்திரஜித் கோபமானவனாகவும், பிடிவாதக்காரனாகவும் ஆனாலும் பாசம் உள்ளவனாகவும், தன் தமையன் பேச்சைத் தட்டாத தனயனாகவும் வளர்ந்தனர்.

சிறு வயதிலேயே ஈஸ்வரன் மீது கொலைவெறியில் இருந்த இந்திரஜித் அதன் காரணமாகவே போலீஸ் படிப்பைத் தேர்ந்தெடுத்தான். முதலில் தடுக்க எண்ணிய மீரா அவனது பிடிவாதத்தால் விட்டுக் கொடுத்தார். தம்பியின் எண்ணம், அவனது கோபத்தின் நோக்கம் புரிந்தாலும் அவனுக்கு அறிவுரை வழங்காத தன் மடத்தனம் தன் உயிரையே பலியாய் கொடுக்கும், தன் தமையன் வாழ்வையும் சூரையாடும் எனக் கனவா கண்டான்.

பழைய நினைவுகளில் உழன்ற இஷானுக்குக் கயல் ஈஸ்வரனின் மகள் என்ற உண்மை முள்ளாய் குத்த மனம் நொந்து போனான்.

“நீ ஏன்டி அவனுக்குப் பொண்ணா பொறந்த?” என்று நூறாவது முறையாக மனம் நொறுங்கினான். இருப்பினும், அவள்மேல் அவனுக்குக் கோபம் இல்லை. அவளது தந்தை செய்த தவறுக்கு அவள் என்ன செய்வாள் என்றே எண்ணினான். அதிலும், அவள் தன் தந்தை மேலேயே கேஸ் கொடுக்க அவளது உள்ளம் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அதனால், அவள்மேல் கோபம் இல்லாது இருந்தது. அதைக் கண்டு கோபம் கொண்ட இந்திரஜித் இவன்மீதும் கோவித்துக் கொண்டு ஹைதராபாத் சென்று விட்டான் போலீஸ் டிரெயினிங்க்காக. அவன் ஐ.பி.எஸ்ஸாக மாறி வருவதற்குள் தன் வாழ்வும் தன் தமையன் வாழ்வும் புயல் வீசிச் சென்று இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை அவன்.

அங்குத் தன் மகளையே கடத்தச் சொல்லி இருந்த ஈஸ்வரனை அப்போது அமைதியாக இருக்கும்படி சொன்ன அந்தத் தொழிலதிபர், கயலை எப்படியாவது கடத்தித் தன் மகனுக்கு மனைவியாக்கி விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அவளைக் கடத்துவதற்குத் திட்டம் தீட்டிக் கொண்டு இருந்தார்.

கயலின் தாத்தா ராஜமாணிக்கம் ஈஸ்வரன் எப்படியும் தங்களுக்கு இடையூறு செய்வான் என்று அறிந்தவர் தன் பேத்தியை அவளுக்குப் பிடித்தவனுடன் மணம் முடித்து அவளைப் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று எண்ணியபடி மீராவிடம் பேசச் சென்றார்.

அதன் விளைவை யார் அறிவாரோ?

1 thought on “என் சுவாசம் உன் வாசமாய் – 14”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *