Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 15

என் சுவாசம் உன் வாசமாய் – 15

அத்தியாயம் 15

இஷானின் நிலை அப்படி இருக்க கயலின் நிலையோ அதைவிட மோசமாக இருந்தது. இஷானின் நினைவை விட இந்திரஜித்தின் கோபம் தான் அவளை மிகவும் பாதித்தது. தன்னை இந்திரஜித் தப்பாக எண்ணி விடுவானோ என ஒருபுறம் தவித்தாள். தன் தந்தையின் இழிசெயல்கள் ஒருபுறம் என அவளை வாட்டி வதக்கியது. அதில் அவள் மிகவும் தளர்ந்து போனாள்.

‘இந்தரைப் போலவே இஷானும் தன்னை வேஷம் போட்டவள் என்று நம்பி விட்டானோ? நம்பி இருப்பான். அதனால தானே அன்னைக்குத் திரும்பிக் கூடப் பார்க்காமப் போனான். அப்புறமும் என்கிட்ட ஒரு வார்த்தை பேசலையே? இந்தர் ஏன் என்னைக் கோபமாகவே பார்க்கிறான். அவனுக்கு என்மேல கோபம்தான், அதுக்கான காரணம் சொல்லிட்டா சந்தோஷமா இருக்கும்’ என்று ஏதேதோ எண்ணியவள் மிகவும் களைத்துப் போனாள்.

அவளது நிலையைக் கண்டு பெரியவர்கள் இருவரும் வருந்தினர். அதனால், ராஜமாணிக்கம் இஷானின் வீட்டுக்குச் சென்று பேசுவதாகச் சொல்ல,

“வேண்டாம் தாத்தா… இக்கட்டான சூழ்நிலையில கூட நிக்க வேண்டியவர் அப்படியே விட்டுட்டுப் போயிட்டாரே. அப்போவே நான் அவர் மனசுல இல்ல தாத்தா. அவரோட அப்பாவைக் கொன்னவனோட பொண்ணாத்தான் என்னைப் பார்க்கிறாங்க அவங்க. இதோட இந்தப் பேச்சை விட்டுடுங்க தாத்தா. நான் கடைசி வரைக்கும் உங்க கூடவே இருந்துக்கிறேன் தாத்தா. நீங்களும் என்னை வெறுத்துடாதீங்க” என்று அழ பதறிப் போய் அவளை அணைத்துக் கொண்டனர் பெரியவர்கள்.

“அம்மாடி, என்னப் பேச்சு பேசுற நீ? நீ எங்க பேத்திடா… இப்படி ஒரு கேடு கெட்ட பிள்ளையப் பெத்ததுக்கு நீ எங்களை வெறுக்காம இருந்தா அதுவே போதும்மா” என்று கூற “தாத்தா” என்றபடி அவரை அணைத்துக் கொண்டவள்,

“எனக்கு நீங்க ரெண்டு பேரும் போதும் தாத்தா… வேற யாரும் என் வாழ்க்கையில வேணாம். என்னை வற்புறுத்தாதீங்க தாத்தா. என்னை நம்பாதவங்க கிட்ட என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி நிரூபிச்சு வர்ற வாழ்க்கையும் வேணாம். நாம வேற எங்கனா போயிடலாம் தாத்தா” என்றாள் தேம்பியபடி.

அன்று கயல்விழிக்கு மனமே சரியில்லை. மிகவும் படபடப்பாக இருந்தது. ஏதோ தவறு நடப்பதாகவே உணர்ந்தவளுக்கு ஒரு கட்டத்தில் கையெல்லாம் நடுங்க ஆரம்பித்து இருந்தது.

‘என்ன இது? ஏதோ மாதிரி இருக்கே… தாத்தா பாட்டிக்கு ஏதாவது ஆகிடுமா?’ என்ற எண்ணம் வரத் திடுக்கிட்டவள்,

‘ச்சே… என்ன இது? இப்படியெல்லாம் யோசிக்கிறேன்… அவங்களுக்குலாம் எதுவும் ஆக விடமாட்டேன்’ என்று உறுதி எடுத்தாள் மனதில். உடனே தன் தாத்தா, பாட்டியைப் பார்த்தாள். அவர்கள் நன்றாக இருக்கச் சற்று தெளிந்தவள் முகம் மீண்டும் யோசனையானது.

‘யாருக்கு என்ன ஆகி இருக்கும்? ஒண்ணும் புரியலையே? ஒரு வேளை இஷானுக்கு ஏதாவது? அவரு இன்னைக்கு லீவு தானே, வீட்டுல தான் இருப்பாரு… அப்போ இந்தர், இந்தர்தானே வெளியூர்ல இருக்கான். அவனுக்கு ஏதாவது ஆகி இருக்குமா?’ என்று யோசித்தவள் சட்டென ஃபோனை எடுத்துத் தன்விக்கிற்கு அழைத்தாள்.

அப்போது தான் டீ இடைவேளை வர தன் நண்பனுடன் வந்து அமர்ந்தவன் கயலிடமிருந்து ஃபோன் வரவும் எழுந்து தூரப்போய் பேசினான். இந்தரும் இஷானின் ஃபோனில் தாய் அழைக்க எடுத்துப் பேசிக்கொண்டு இருந்தான்.

“சொல்லு கயல், எப்படி இருக்க? விஷயம் கேள்விப்பட்டேன். ஆனா, உடனே உன்னை வந்து பார்க்க முடியல, சாரிமா” என்றான் தன் தோழியிடம்.

“ஹேய்! என்ன புதுசா சாரிலாம்… அதெல்லாம் நான் பார்த்துக்குவேன். நீ என்னைப் பத்திலாம் கவலைப்படாதே… ஆனா இந்தர் என்மேல கோபமாக இருக்கானா இன்னும்?” என்று வருத்தமாய் கேட்க,

“அவன் கோபம் உனக்குத் தெரியாதா? அவன்தான் எரிமலை ஆச்சே… இன்னும் லார்வாவைத் தூவிக்கிட்டேதான் இருக்கான். சீக்கிரமே உன்னைப் புரிஞ்சுப்பான், நோ வொர்ரீஸ்டா” என்று கூற அவளிடம் மெளனம் மட்டுமே.

“கயல்” என்று தன்விக் அழைக்க,

“ஹாங்… ஒண்ணும் இல்லடா, அவனை நல்லாப் பார்த்துக்கோ… ரெண்டு பேரும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்கடா… ஏதோ தப்பா நடக்கப் போற மாதிரி இருக்கு, அதான் பேசினேன். சரி நீ வேலையப் பாரு, நான் வெச்சுடறேன்” என்றுவிட்டு உடனே வைத்து விட்டாள். 

ஃபோனையே யோசனையோடு பார்த்தபடி இந்தரின் அருகில் அமர, அவன் தாயிடம் பேசிவிட்டு அணைக்காமலே தன்விக்கிடம் திரும்பிப் பேச ஆரம்பித்து விட இஷானிடம் ஃபோன் மாறியது அறியாமல் பேசினர் இருவரும்.

“என்னடா, எழுந்து போய்லாம் பேசுற, யாருடா அது உன் ஆளா?” என்று இந்தர் கேட்க, தோழர்கள் உரையாடலை நாம் என்ன கேட்க என்று எண்ணியபடி கட் செய்யப் போனவனைத் தடுத்தது தன்விக்கின் வார்த்தை.

“ச்சீ… கயல்டா… அவ உனக்குதான் ஆளு, எனக்கு எப்பவுமே ப்ரண்ட் தான்டா, தப்பாப் பேசாத” என்று கூற கோபமாய் ஆனான் இந்தர். இஷானுக்கோ, தலையே வெடித்துவிடும் அளவிற்கு அதிர்ச்சியானது.

“அவளைக் காதலிச்ச இந்தர் இப்போ இல்லடா. அவ அந்தக் கொலைகாரனோட பொண்ணுடா. எங்க குடும்பத்தைக் கெடுக்கவே நல்லவ மாதிரி நாடகம் போட்டுத் திட்டம் போட்டு என் அண்ணனையும் லவ்வுனு சொல்லி அழிக்க வந்தவடா… அவகிட்ட என்ன பேச்சு உனக்கு?” என்று கோபமாய் கத்த இஷானுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

‘இந்தரும் கயலை விரும்பினானா?’ என்று தனக்குள் பேசியவன் அவனது பேச்சில் கவனமானான்.

“இந்தர், அவ அப்பா பண்ண தப்புக்கு அவ என்னடா பண்ணுவா? அவளுக்கு இப்படிலாம் நடந்தது தெரியுமோ தெரியாதோ? நீ அவள உண்மையா லவ் பண்ணலன்னு தோணுதுடா?” என்றான் தன்விக் தன் தோழியை பற்றிப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறானே என்ற கோபத்தில்.

“என்னடா சொன்ன? நான் அவள உண்மையா லவ் பண்ணலையா? அவமேல உயிரையே வெச்சதால தான்டா அண்ணன் அவளை விரும்புறாங்கனு தெரிஞ்சதும் என் மனசைக் கல்லாக்கிட்டு அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழணும்னு ஒதுங்கி வந்தேன். ஆனா, அவ அந்தக் கேடு கெட்டவனோட பொண்ணுனு மறைச்சுப் பழகி ஏமாத்தி இருக்கா” என்று கத்த,

இஷானின் இதயம் ஈட்டியால் குத்தியதைப் போல வலித்தது.

“இல்லடா, நான் சொல்ல வர்றது அவ பக்க நியாயம் என்னன்னு கூடக் கேட்காம அவளை வெறுக்குறியே, அதான்டா அப்படிக் கேட்டேன். எனக்குத் தெரியாதாடா உன் லவ்… மனசு உடைஞ்சு நீ சுத்துறதை நான்தான் கூட இருந்து பார்த்தேனேடா… ஆனா, அவளும் பாவம்ல” என்று அவனைச் சமாதானம் செய்ய மேலும் மேலும் அவனுக்கு அவள் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றிய கோபமே அதிகமாக,

“வேணாம் தன்விக், அவளப் பத்திப் பேசாதே… அவ அவ்ளோ நல்லவன்னா, ஏன் அவ அம்மா இறந்தப்பவே கம்ப்ளைன்ட் கொடுக்கல அந்த ஆள் மேல. ஏன் இப்போ மட்டும் இந்த வேஷம்? இதுல அவ பக்கம் என்ன நியாயம் இருக்குனு பேசுற நீ? அவள என் வாழ்க்கையில பார்க்கவே கூடாதுனு இருக்கேன்டா” என்று கூற, 

“ஒருவேளை, அண்ணா அவளை ஏத்துக்கிட்டா என்னடா செய்வ? உனக்கும் வேற ஒரு லைஃப் அமையும்ல, அப்போ அண்ணியா அவ வந்துதானே எல்லாம் செய்யனும்? அப்போ அண்ணாவையும் தூக்கிப் போட்டுடுவியா?” என்று தன்விக் கேட்கச் சற்று அமைதியானவன் கண்கள் கலங்கியது. இருந்தும் அவள் மேலான கோபத்தை முன்நிறுத்தி,

“அவதான் வேணும்னு அண்ணா ஆசைப்பட்டா கண்டிப்பா நானே ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைப்பேன். ஆனா, எனக்குனு ஒரு வாழ்க்கை இனி இல்லடா” என்று வருத்தமாய்க் கூற அதிர்ந்தனர் இருவரும்.

தன்விக்கோ “டேய்! என்னடா சொல்ற? உனக்குனு ஒருத்தி இல்லாமலா போயிடுவா? கயலும் உன்ன விரும்பி இருந்தாக் கூடப் பரவாயில்லை, அவள நினைச்சு உன் வாழ்க்கையை இழப்பியா?” என்று கேட்க,

விரக்தியாகச் சிரித்தவன், “உனக்குத் தெரியாது மச்சி… நான் அவள எந்த அளவுக்கு லவ் பண்ணி இருக்கேன்னு. எல்லார் கிட்டயும் க்ளோஸா இருக்குற நான் அவகிட்ட மட்டும் விலகி நின்னேனே, ஏன்? அவதான் எனக்கு எல்லாம்னு நான் அவளை ஸ்கூல்ல பார்த்தப்போல இருந்து முடிவு பண்ணி அவளோடயே கற்பனையில வாழ்ந்து குழந்தை பெத்துனு இருந்தேன்டா… அதனாலதான் என்னை மீறி அவளைக் கஷ்டப் படுத்திடுவேனோனு ஒதுங்கி நின்னேன்… ஆனா, அண்ணா அவள லவ் பண்ணுவாருனு நான் கனவுல கூட நினைக்கல…

அதைக் கேள்விப்பட்டப்போ செத்துடலாம் போல இருந்துச்சுடா… சொல்லாத காதலுக்கு ஆயுசு முடிஞ்சு போச்சுனு நினைச்சு மனசார அண்ணா நல்லா வாழணும்னு நான் என் வருத்தத்தைக் கூடச் சொல்லி அழ முடியாம உள்ளேயே வெச்சு வெந்து நொந்துட்டேன்டா… நான் மனைவியா நினைச்சுக் கற்பனையில வாழ்ந்தவ அண்ணனுக்கு மனைவியா வரப் போறானு தெரிஞ்சா அந்த வேதனை, வலி சொல்ல முடியலடா.. செத்துட்டேன் அப்போவே. என் கற்பனை வாழ்க்கை என்னோட போகட்டும்னு தான் வலுக்கட்டாயமா போலீஸ் வேலைக்கு வந்தேன். அண்ணனுக்கு நல்லபடியாக கல்யாணம் ஆகட்டும்னு நான் எல்லாத்தையும் எனக்குள்ளேயே போட்டுப் புழுங்கி அவங்க முன்னாடி சிரிச்சுட்டு வந்தேன்டா… இனி எனக்கு வேற ஒரு வாழ்க்கை இல்லைனு அப்போவே முடிவு பண்ணிட்டேன். நீ கேட்கலாம், அப்போ கயல மனசுல வெச்சுக்கிட்டு நீ அண்ணனுக்கு துரோகம் பண்ணப் போறியானு…

அது தப்புடா.. அண்ணன் மனைவினு ஆகிட்டா கயல் எனக்கு அம்மா மாதிரி… அப்படித்தான் பார்ப்பேன். நான் காதலிச்ச கயல் என்னோடவே செத்துட்டா… எங்க வாழ்க்கை முடிஞ்சு போச்சு. அதனால, என் அண்ணா வாழ்க்கை கெடுற அளவுக்குக் கேடு கெட்ட எண்ணம்லாம் என் மனசுல வெச்சுக்க மாட்டேன்டா… நான் காதலிச்சவ வேற, என் அண்ணன் மனைவியா வர்ற கயல் வேற… அப்போ நான் நல்ல நண்பனா தான் இருப்பேனே தவிர கயலோட இந்தரா இருக்க மாட்டேன்டா… என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு, என் கற்பனையோடவே. அதுல வேற ஒருத்தியக் கொண்டு வந்து அவளோட வாழ்க்கையைப் பாழாக்க நான் விரும்பலடா…

என் கோபம்லாம் அந்த ஈஸ்வரன் பொண்ணு கயல் மேலதான், என் அண்ணனுக்குப் பொண்டாட்டியா வரப் போற கயல் மேல இல்ல… நாளைக்கே அண்ணன் கயலைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் கயல்கிட்ட நல்ல விதமா தான் பேசுவேன், அண்ணிங்கிற முறையில. வேற எதுவும் வெச்சுக்க மாட்டேன். ரொம்ப நொந்துட்டேன்டா. வேணாம் விட்டுடு, அவளப் பத்தின பேச்சை. அண்ணனா அவளப் பத்திப் பேசினா அப்போ பார்க்கலாம், வா டைம் ஆச்சு” என்றபடி அவனை அழைத்துக் கொண்டு சென்றான், மொபைலைப் பார்க்காமலே லாக்கரில் வைத்துவிட்டு. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, அடிமேல் அடி விழ நொறுங்கிப் போனான் இஷான்.

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *