Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 16

என் சுவாசம் உன் வாசமாய் – 16

அத்தியாயம் 16

இரண்டு நாட்கள் மருந்தின் வாசத்தில் இருந்தவளின் மயக்கம் அன்றுதான் சற்றுத் தெளிந்தது.

அவளது கழுத்தில் இருந்த தாலி இல்லாமல் இருந்தது. 

அவள் கண் விழித்துப் பார்த்தது என்னவோ அவளது பெரிய வயிற்றின்மேல் கை வைத்துக் குழந்தையின் ஸ்பரிசத்தைக் கண்மூடி அனுபவித்துக் கொண்டு இருந்த இந்திரஜித்தின் முகத்தில் தான்.

‘தன் தமையனே மீண்டும் பிறப்பான்… ஏன்டா இப்படி ஒரு சிக்கலை உருவாக்கிட்டுப் போன?’ என்று எண்ணியபடி அமர்ந்திருந்தவனைப் பார்த்த கயல், முதலில் கையை விலக்கிவிட எண்ணினாள். ஆனால், அவனது மூடிய விழிகளில் இருந்து வரும் கண்ணீரும் வேதனை சுமந்த அவனது முகமும் உள்ளுக்குள் என்னவோ செய்ய அப்படியே அமைதியாகி விட்டாள். அவனைப் பார்த்து அவளுக்கும் கண்கள் கலங்கியது ஏனென்றே தெரியாமல்.

சிறிது நேரம் கண்மூடிப் பிள்ளையின் அசைவை உணர்ந்தவன் கையை நினைவின்றி நகர்த்த அது அவளது ஆடை மூடாத இடுப்புப் பகுதியில் பட்டுவிட, அவனுக்கு அவளது உடலின் மென்மை பிறந்த குழந்தையைத் தொடுவது போல் ஏதோ உலகில் இருக்க மேலும் கையை நகர்த்தினான். உடனே பதறி அவனது கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

அதிர்ந்து கண் திறந்தவன் அவனது கை இருந்த இடத்தையும் அவள் கண் விழித்ததையும் மாறி மாறிப் பார்த்தவன் சுயநினைவு வரத் தன் கையை வேகமாக அவளது இடையிலிருந்து எடுத்துத் தன் பின் கழுத்தைத் தேய்த்தபடி அவளைச் சங்கடமாய் பார்த்து,

“ஐ..ஐயம் சாரி… நான் குழந்தை நி..நினைவுல… சாரி” என்று விட்டுத் திரும்ப அதுவரை அவனையே பார்த்திருந்தவள்,

“நா..நான் ஊருக்குப் போகணும்” என்று தலையைக் குனிந்து கொண்டு கூற அவளது ஒற்றை வார்த்தை அவனை ருத்ரமூர்த்தியாய் மாற்றி இருந்தது.

இருந்தும் அவளிடம் கோபத்தைக் காட்டக் கூடாது எனப் பொறுமையாய் பேசினான். ஆனாலும், அவனது குரலே அவனது கோபத்தைக் காட்டியது.

“எந்த ஊருக்கு?” 

“அது… அதுவந்து… நான் இருக்க ஊருக்கு… பா..பாட்டி ஹாஸ்பிடல்ல… த..தனியா” என்று தயங்கித் தயங்கிக் கூறி முடிக்க, கோபமாய் திரும்பியவன்,

“நான் என்ன? உன்கூட டூயட் பாடவா இங்க இருக்க வெச்சு இருக்கேன்? இல்ல, உன்னக் கடத்திகிட்டு வந்து வெச்சு இருக்கேனா? போறேன், போறேன்னு குதிக்கிற? வெளியே என்ன பிரச்சனை நடக்குதுனு தெரியுமா? இல்ல, தெரியுமானு கேட்கிறேன்?

உன் அப்பனுக்கு நீயே நீயும் உன் பாட்டியும் இருக்குற இடத்தைக் காட்டிக் கொடுக்கப் போறியா? உன்னையும், உன் பாட்டியையும் வலைவீசித் தேடிட்டு இருக்கான், உங்கப்பன்…” என்று கூறி அவளைப் பார்க்க அதிர்ந்து எழுந்து நின்றாள் அவள். மேலும் அவனோ, “இதுல நீ அங்க போனாச் செத்துடுவீங்க, நீயும் உன் பாட்டியும். கூடவே என் பிள்ளையும்…” என்று கூறி முடிக்க அதிர்ந்து கை கால் நடுங்கப் பார்த்தாள் அவனை.

“எ..என்ன சொல்ற இந்தர்? அ..அப்போ பா..பாட்டி?” என்று அழ,

“எதுக்கெடுத்தாலும் அழறத நிறுத்துடி. அது உனக்கும் நல்லது இல்ல, குழந்தைக்கும் நல்லது இல்ல… பயப்படாதே, முதல்ல உங்க பாட்டிய சேஃபான ஹாஸ்பிடலுக்கு என்னோட கஸ்டடில கொண்டு வந்துட்டேன். அவங்க நல்லா இருக்காங்க. நீ எங்கேயும் போக முடியாது, அதை முதல்ல புரிஞ்சுக்க… வெளிய போகக் கூட சேஃப் இல்லடி… உன் அப்பன் வெறியா இருக்கான்.

நம்ம குடும்பத்தையே அழிக்க அலையுறான். அதனால, நீ கவனமா இருக்க வேண்டியது அவசியம்” என்று கூற, 

மயக்கம் வருவது போல் இருக்க அவள் தடுமாற அவளைத் தன் பிடியில் தாங்கியவன் அப்படியே கட்டிலில் அமர வைத்தான். உடனடியாக ஜூஸ் வரவைத்து அவளைக் குடிக்க வைத்தவன் அவளது அருகிலேயே இருந்தான். அவள்தான் அவனது கையை விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருந்தாளே… ஆனால், அவளது பாட்டி ஹாஸ்பிடலில் இருப்பது அவனுக்கு எப்படித் தெரியும் என்று அவள் யோசிக்கவே இல்லையே…

“ரிலாக்ஸ் விழிமா… ரிலாக்ஸ்” என்று அவளைச் சாந்தப்படுத்த அவன் கூறிய விழி என்னும் வார்த்தை அவளை சுய உணர்வு பெறச் செய்ய தீ சுட்டது போல அவனை விட்டு விலகியவள்,

“என்னை அப்படிக் கூப்பிடாதே… அப்படிக் கூப்பிடாதே” என்று கத்தினாள்.

அதில் விரக்தியாகச் சிரித்தவன், “உனக்கு விழினு பேர் வெச்சதே நான் தாண்டி” என்று கூற,

“இருக்கலாம். ஆனா அது உனக்கு உரிமை இல்ல… இ..இஷானுக்கு தான் அந்த உரிமை. அவரோட பிள்ளை, அவரோட தாலி” என்று கழுத்தைத் தொட கழுத்தில் இருந்த தாலி இல்லாமல் இருந்தது. 

“என்ன தாலி?” என்று அவளைப் பார்த்த இந்தர் கேட்க,

“தா..தாலி… ச..சரண்யா கழற்றி வீசினது” என்று மீண்டும் அவள் திக்க, அவள் முகத்திற்கு அருகில் நேரே நின்றவன்,

“நான்தான் கழற்றினேன்” என்று கூற அதிர்ந்த கயல் அவனைப் பார்த்து,

“ஏன்டா… ஏன்.?” என்று கேட்க கண்களில் மீண்டும் கண்ணீர் வர ஆரம்பித்தது.

“ஏன்னா? அது என்ன முறைப்படி இஷான் அண்ணா கட்டினதா? இல்ல, அவன் உயிரோட இருக்கும் போது உன் கழுத்துல ஏறுச்சா? இல்லல… எவளோ கழற்றிப் போட்டது உன் கழுத்துல விழுந்தா அது உன்னோடது ஆகிடுமா? அதுக்குச் சொந்தமானவன் கட்டாம அதுக்கு மதிப்பே இல்ல, அதான் அதைக் கழற்றிட்டேன்” என்று கூற, 

“எனக்குனு எதுவுமே சொந்தமா இருக்கக் கூடாதுல இந்தர், அதானே உன் எண்ணம்… ஒரு கொலைகாரனுக்குப் பொண்ணாப் பொறந்த பாவத்துக்கு எந்தத் தப்புமே பண்ணாம தண்டனை கொடுக்கிறல?” என்று அவனைப் பார்த்துக் கேட்டவளுக்கு என்ன தோன்றியதோ…

“எதுவுமே எனக்குச் சொந்தமில்லனு சொல்ற, அப்புறம் இந்தக் குழந்தைக்கு மட்டும் நான் அம்மானு சொல்றியே, அது மட்டும் எப்படி? நா..நான் காசுக்காகத் தானே கு..குழந்தையைச் சுமக்கிறேன்” என்று அவள் கூற, 

“ஏய்ய்ய்!” என்று அவளது கழுத்தைப் பிடித்தவன்,

“என்னடி சொன்ன? நானா உன்னை எல்லா உறவுல இருந்தும் பிரிக்கிறேன்… அது உன் அப்பன் பண்ற வேலைடி… அவன்தான் நீ அநாதையாச் சாகனும்னு அலையுறான். உன்னைக் காப்பாத்த நான் படுற கஷ்டம் உனக்குத் தெரியுமாடி? அப்புறம் என்ன சொன்ன? குழந்தையைக் காசுக்குப் பெத்துக்க வந்தியா? என்னடி தெரியும் உனக்கு? நீதான்ங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் என் பிள்ளையைச் சுமக்குற உரிமையைக் கொடுத்தான் இஷான்.

பணத்துக்கு ஆள் பார்க்கிறதா இருந்தா உன்னை ஏன்டி தேடி வரப் போறோம். நீ என்ன வேணாப் பேசு. ஆனா, இந்தக் குழந்தைக்கு அப்பா நான்தான், அம்மா நீதான்… அதை உன் மனசுல பதிய வெச்சுக்க…

இதுக்கு உன் கழுத்துல புருஷன்னு சொல்லி உயிரோட இருக்குற நான் தாலி கட்டனும் புரிஞ்சுதா?” என்று கத்திவிட்டு அவள் மூச்சுக்குத் தவிக்கவும் அவளை விட்டவன் உடனே அமர வைத்துத் தண்ணீரை எடுத்து அவளைக் குடிக்க வைத்துவிட்டு,

“எனக்குத் தெரியாம வெளியே போகக் கூடாது புரிஞ்சுதா?” என்று அவளது கண்களைப் பார்த்துக் கேட்க, வேறு உலகில் இருப்பதைப் போலப் பார்த்தவள் சரியெனத் தலையாட்ட அவளது கன்னத்தை வருடியவன்,

“இன்னொரு இழப்பைத் தாங்குற அளவுக்கு எனக்குத் தெம்பு இல்லடி… புரிஞ்சுக்க” என்று விட்டுச் சென்றுவிட அவன் சொன்ன எதுவுமே அவளது மனதில் பதியவில்லை. கடைசியாக அவன் சொன்னது மட்டுமே மனதில் இருந்தது.

அதை அவளோ, ‘அண்ணனை இழந்தாச்சு, அண்ணன் குழந்தையை இழக்கக் கூடாதுனு நினைக்கிறான் போல… நாமளும் உஷாரா இருக்கனும்’ என்று எண்ணியவள்,

தன் குழந்தையை வருடியவள், ‘இவ்வளவு பிரச்சனையிலும் நீ மட்டும் தான் செல்லம் எனக்கு இருக்கும் ஒரே ஆறுதல்… உன்னை விட்டுப் போக மாட்டேன் எப்பவும்’ என்று பேசிக்கொண்டு இருந்தாள்.

அவளிடம் பேசிவிட்டு வெளியே வந்தவனைப் பார்த்த தன்விக் அமைதியாக இருக்க அவன் அருகில் வந்து “கிளம்பலாம்” என்றவன் அமைதியாகக் கிளம்ப,

“இந்திரா சாப்பாடு” என்று கேட்டார் மீரா.

“வேண்டாம்மா” என்று கூற, 

“அவனும் சாப்பிடலடா. உனக்காகத்தான் வெயிட் பண்றான்” என்று கூறத் தன் நண்பனைச் சட்டெனத் திரும்பிப் பார்த்தவன் ஒரு பெருமூச்சை விட்டு, “எடுத்து வைங்க” என்றுவிட்டு அவனுடன் அமர்ந்தான்.

நண்பனுக்காக அமைதியாகச் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினர் இருவரும். போகும் வழியில் அமைதியாக வந்தவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு வந்தான் தன்விக். அவனைப் பார்த்த இந்தர் ஆளில்லாச் சாலையில் வண்டியை நிறுத்தச் சொன்னான்.

வண்டியை நிறுத்திய தன்விக் அமைதியாக இருக்க, “இறங்குடா” என்று கூறினான் இந்தர்.

இறங்கியவன் அமைதியாகவே இருக்க, “உனக்கு என்னடா பிரச்சினை? எதுக்கு இப்படி முறைச்சுட்டு சுத்துற? என்ன கேட்கனுமோ கேளு” என்று விட்டுக் கையைப் பின்னே கட்டிக் கொண்டு அவனைப் பார்க்க,

“நீ ஏன்டா அவள இப்படிக் கொடுமைப் படுத்துற? அவ நம்ம ப்ரண்ட், இப்போ… உங்க வீட்டு வாரிசைச் சுமக்கிறா. அவ அப்பா பண்ண தப்புக்கு அவளை வதைக்கறியே, இது உனக்கே நல்லா இருக்கா? உனக்காவது சின்ன வயசுல அப்பாவை இழந்த. ஆனா, அவ பெத்த அப்பனே அம்மாவைக் கொன்னதை வளர்ந்த வயசுல பார்த்தவடா… உனக்கு அம்மா இருக்காங்க ஆறுதல் சொல்ல. அவளுக்கு யாருமே இல்லையேடா. அப்போ நாமதானே ஆறுதலா இருக்கனும்… நீயே அவளைக் கஷ்டப்படுத்துறியே?” என்று தன் ஆதங்கத்தைக் கோபமாக அதே நேரத்தில் நிதானமாகக் கேட்டான் தன்விக்.

அவனையே உற்றுப் பார்த்தவன்,

“சரி நீயே சொல்லு? நான் இப்படி நடந்துக்கலனா அவ இங்க இருப்பாளா? இல்ல போய்டுவாளா?” என்று கேட்க உடனே,

“அவதான் ரோஷக்காரி ஆச்சே, எப்படி இருப்பா?” என்றான் தன்விக்.

“இப்போ புரியுதா? நான் ஏன் அவள இப்படி நடத்துறேன்னு?” என்று கேட்க அதற்குப் பதில் சொல்ல முடியாமல் நின்றான் தன்விக். அவனைப் பார்த்து மூச்சை இழுத்து விட்டவன்,

“வலிக்குதுடா ரொம்பவே… பெத்த தகப்பனே அவளைக் கொல்லப் பேயா அலையுறான். அவள வேற எங்கயாவது விட்டுட்டு என்னால நிம்மதியா சாப்பிடக்கூட முடியாதுடா. அதனால தான் என்ன என்னவோ செஞ்சு அவள இங்கேயே தங்க வெச்சு இருக்கேன்டா

புரியுது, அவளை இந்த மாதிரி நிலமையில படுத்தி எடுக்கிறேன்னு நல்லாவே புரியுது… ஆனா இஷான் செஞ்சு வெச்சுட்டுப் போனதுலாம் தெரிஞ்சா அவ இன்னும் என்ன ஆவான்னு தெரியலடா, அதுலாம் அவளுக்குத் தெரியாம நான் பார்த்துக்கனும்டா. அதுக்குத்தான் என்னைக் கெட்டவனாவே காட்டிட்டு இருக்கேன். உண்மையெல்லாம் தெரிஞ்சா அவ உயிரையே விட்டாலும் விட்டுடுவாடா…

அதுலாம் தெரிய வரக்கூடாது. அவள சும்மா விட்டா எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சுடுவானு தான் அவள எதுவுமே யோசிக்க விடாம பண்ணிட்டு இருக்கேன். அவளோட கவனம் இப்போதைக்குக் குழந்தை மேல மட்டும் இருக்கட்டும். அதுதான் அவளுக்கு நல்லது. ஏதாவது தெரிஞ்சுட்டா அவள எப்படி ஹாண்டில் பண்ணுவேனே தெரியலடா… முடியல என்னால…” என்று அவன் புலம்ப அவனது தோளில் ஆறுதலாகத் தட்டியவன்,

“சாரிடா, நானும் உன்னைப் புரிஞ்சுக்காம அவளைப் பத்தி மட்டுமே யோசிச்சுட்டேன். சரி, அப்போ இஷான் அண்ணாவோட குழந்தையையும் அவங்களையும் கண்டு பிடிச்சுட்டியா?” என்று கேட்க,

“ம்ம்… கண்டு பிடிச்சுட்டேன். அவங்களுக்கு protection போட்டு இருக்கேன். இப்போ எல்லாம் தெரிஞ்சுச்சா? போலாமா?” என்று கேட்க,

“போலாம் ஆபீசர்” என்றபடி சிரித்துக் கொண்டு கூற அவனைத் தோளில் கைப்போட்டு அணைத்துச் சிரித்தபடி, “நண்பேன்டா” என்று விட்டுக் கிளம்பினர் இருவரும்.

1 thought on “என் சுவாசம் உன் வாசமாய் – 16”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *