Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 18

என் சுவாசம் உன் வாசமாய் – 18

அத்தியாயம் – 18

கோபத்தோடு வந்த இந்தர் ஹாலில் நின்றபடி “கயல்ல்ல்” என்று கத்தினான். அவனுடனே தன்விக்கையும் கூட்டி வந்து இருந்தான். அவனது கத்தலில் வீடே அதிர எல்லோரும் ஓடி வந்தனர். கயலும் அடித்துப் பிடித்து ஓடிவர கீழே விழப் போனாள். அதில் அதிர்ந்தவன் அவளை ஓடிவந்து தாங்கினான்.

“இடியட்! பார்த்து வரமாட்டியாடி? விழுந்து ஏதாவது ஆனா என்ன செய்வேன் நான்?” என்று அதற்கும் கத்த,

“நீதானே கத்தின இந்தர்… அது அவசரமா ஓடிவந்ததுல விழப் போயிட்டேன்… கவலைப்படாதே, நான் விழுந்து அடிப்பட்டாக் கூட உன் அண்ணா குழந்தைக்கு எந்த அடியும் படாமப் பார்த்துக்குவேன்” என்று கூறினாள். அவனது குழந்தைமேல் உள்ள அக்கறை மட்டுமே அவளுக்கு முன்தெரிய மற்ற அவனது பேச்சைக் காற்றில் விட்டாள்.

அவளது பேச்சில் கோபம் தலைக்கேற,

“என்னடி? அப்பனும் பொண்ணும் சேர்த்து வெச்சு இந்த வம்சத்தையே கொல்லலாம்னு ப்ளானா?” என்று கோபமாய் கேட்க,

“இந்தர்” என்று கத்தினாள் அவள்.

“டேய் என்னடா பேசுற?” என்று மீராவும் தன்விக்கும் கேட்க,

“அந்த ஆள் என் அப்பாங்குற ஒரே காரணத்துக்காக இன்னும் என் மேல எவ்ளோ பழி போடுவ இந்தர்? முதல்ல நடிச்சேன் சொன்ன. இப்போ வேற எதோ? ஏன் உன் அண்ணா இஷான் சாவுக்கும் நான்தான் காரணம்னு சொல்லேன்” என்று கண்ணீரோடு கேட்க,

“ஆமான்டி, இ..இஷானைக் கொன்னது உன்னோட அப்பன்தான்” என்று கத்த, அதிர்ந்து அவனைப் பார்த்தனர் அனைவரும்.

“எ..என்ன சொல்ற இந்தர்?” என்று அவள் அதிர்ந்து கேட்க,

“ஆமா, உன்னை எங்கன்னு கேட்டு இஷான்கிட்டச் சண்டை போட்டு இருக்கான், அவன் சொல்லலையாம். அதனால, அதனால… அவன் செத்துட்டா நீ அவனைத் தேடி வருவன்னு சொல்லி உங்க அப்பன் அவனைப் ப்ளான் பண்ணிக் கொன்னுட்டான்…” என்று கூற அவனது சட்டையைக் கோபமாய் பற்றியவள்,

“என்னைக் காப்பாத்தவா? என்ன சொல்ற?” என்று கேட்க,

“ஆமான்டி. உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சுனு உங்க அப்பனுக்குத் தெரிஞ்சு இருக்கு. அதை வெச்சுத்தான் அந்த ஆளு நீ இஷானைக் கல்யாணம் பண்ணினன்னு நினைச்சுத் தேடி அவனைக் கொன்னு இருக்கான்” என்று கோபத்தில் கத்த, அவனைப் புரியாமல் பார்த்தாள் கயல்.

அவனிடம் வந்த மீரா அவனைத் தன்புறம் திருப்பி, “என்னடா சொல்ற? எனக்கு ஒண்ணுமே புரியலடா? இந்த வீட்டுல என்ன தான்டா நடக்குது? சொல்லுடா? இவள… இவள யாருடா கல்யாணம் பண்ணது இஷானா? என்னடா சொல்ற?” என்று அவனை உலுக்க அவன் அமைதியாகவே இருந்தான்.

“எல்லாம் இவளாலதான். என் குடும்பத்தையே அழிக்க வந்து இருக்கா… இவ அப்பனால என் புருஷனை இழந்தேன். இப்போ இவளால என் புள்ளையை இழந்துட்டேனா? இவளையா கல்யாணம் பண்ணான் இஷான்? சொல்லுடா, சொல்லுடா?” என்று அவனை உலுக்கினார். இருவரையும் அதிர்ச்சியாய் பார்த்தபடி நின்றிருந்தாள் கயல். இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்று கூடத் தெரியாமல் நின்றிருந்தாள். கால்கள் தள்ளாடியது அவளுக்கு. மனசு படப்படப்பாய் இருந்தது.

“சொல்லித் தொலையேன்டா… இன்னும் ஏன்டா மறைச்சு வெச்சுட்டு இருக்க… எல்லாத்தையும் சொல்லிடு. உனக்குள்ளேயே வெச்சுகிட்டு ஏன்டா இப்படிப் புழுங்கிச் சாகுற? சொல்லுடா” என்று திட்டினான் தன்விக்.

“என்னடா, என்ன என்னமோ பேசுறீங்க? எவனாவது சொல்லுங்கடா? என்னதான் ஆச்சு?” என்று மீரா கேட்க,

“நான் சொல்றேன்மா… இதோ நிக்கிறாளே, இவளைக் கல்யாணம் பண்ணதும் இவன்தான். இவ சுமந்துட்டு இருக்குற குழந்தையும் இவனோடதுதான்” என்று சொல்லி விட்டான் தன்விக்.

மீராவும் கயலும் இருவரையும் அதிர்ந்து பார்க்க, 

“என்னடா சொல்ற?” என்று மீரா கேட்க,

“ஆமாம்மா, இந்தக் கல்யாணத்தைச் செஞ்சு வெச்சது இஷான் அண்ணாதான்.. இது கயலுக்கே தெரியாம நடந்த கல்யாணம்” என்று கூற கயலோ இந்தரையே அதிர்ச்சியாய் பார்த்தபடி நிற்க, அவனோ அவளைப் பார்க்க முடியாமல் வேறு புறம் முகத்தைத் திருப்பி நின்றிருந்தான். தன்விக்கே சொல்லத் துவங்கினான்.

அன்று…

இஷானிற்கு தன் உலகமே இருண்டது போல் இருந்தது. தம்பியின் மனதில் இருந்த காதலை எப்படி அறியாமல் போனோம் என்று…

‘அவனும் கயலையே விரும்பி தனக்காக அவளை விட்டுக் கொடுத்ததும் இல்லாமல் அவனுக்கு வேற வாழ்க்கையே வேண்டாம் என்று வேறு சொல்கிறானே… இதுக்கெல்லாம் காரணம் நான்தானே.. என்னால் தானே இவ்வளவும்… நான் மட்டும் இவங்க ரெண்டு பேர் வாழ்க்கையில வராம இருந்திருந்தா இந்நேரம் கயல் இந்தருக்குச் சொந்தமாகி இருப்பாளே… என்னால இவங்க வாழ்க்கை அழிஞ்சு போச்சா?’ என்று ஏதேதோ எண்ணியவன் அழைப்பைக் கட் செய்துவிட்டு அப்படியே ஓய்ந்து போய் அமர்ந்தான்.

தன் தம்பியின் மனதில் என்ன இருக்கிறது என்று கூடப் பார்க்காத அண்ணனாய் தான் மட்டும் காதல் உலகில் பறந்து கொண்டு இருந்ததை நினைத்து வெட்கித் தலை குனிந்தான்.

அப்போது தண்டபாணி வர அவனிடம் தம்பியைப் பற்றியும் அவனது காதலைப் பற்றியும் சொல்ல, 

“ஓஹோ” என்று அவன் கூற அவனைக் கோபமாய் பார்த்த இஷான்,

“ஏன்டா, நான் எவ்வளவு முக்கியமான விஷயம் பேசுறேன். நீ ஓஹோங்குற?” என்று கத்தியவன் பின் அமைதியாக அவனைப் பார்த்து, “அப்போ, இந்தர் கயலை லவ் பண்ணது உனக்கு முன்னமே தெரியுமா?” என்று கேட்க,

“எனக்கு ஒரு டவுட் இருந்துச்சுடா. ஆனா கன்ஃபார்மா தெரியல. ஆனா, உங்க லவ் மேட்டர் தெரிஞ்சதும் அவன் எதுவும் பெருசா அலட்டிக்கலை. அதனால நானும் விட்டுட்டேன்” என்று கூறி முடிக்கவில்லை இஷான் அவனை மொத்த ஆரம்பித்து இருந்தான்.

“ஏன்டா ஏன்டா? ஏன்டா முன்னமே சொல்றதுக்கு என்னடா உனக்கு? அவனோட வாழ்க்கையையே முடிச்சுக்கிட்டு நிக்கிறான்டா அவனோட காதலால… நான் எவ்ளோ பெரிய பாவி ஆயிட்டேன்டா” என்று அழ ஆரம்பித்து விட்டான் இஷான். அவனை எப்படிச் சமாதானம் செய்வது என்பதைப் புரியாமல் தவித்தான் தண்டபாணி.

இங்கு கயலுக்கோ மனம் ஒரு நிலையில் இல்லை.

அதனால் குட்டி போட்ட பூனை போல அலைந்து கொண்டு இருந்தாள். அவளது நிலையை பார்த்து அவளது பாட்டி மரகதம் என்னவென்று விசாரிக்க ஒன்றுமில்லை என்று மழுப்பியவள் அவரைக் கோவிலுக்கு அழைத்தாள். அவளது கலங்கிய முகத்தைப் பார்த்துத் தனக்கு இருந்த படபடப்பை மறைத்துக் கொண்டார் அவர். கிட்டத்தட்ட அவருக்கும் அவளது நிலைதான். அதனால் மறுக்காமல் கோவிலுக்குக் கிளம்பினார் அவளுடன்.

கோவிலுக்குச் சென்று தன் பிடித்த தெய்வமான பிள்ளையாரின் முன் நின்றவளுக்கு மனதின் குழப்பமும் படபடப்பும் இன்னும் அதிகமாகியதே தவிர குறையவில்லை.

‘கடவுளே! ஏதோ தப்பா நடக்குற மாதிரியே இருக்கே, நீதான் என்கூட இருக்கனும்… என்னை விட்டு எல்லாமே போற மாதிரி இருக்கு. நெஞ்சுல ஏதோ சொல்ல முடியாத வலி… எதுவா இருந்தாலும் எனக்கே கஷ்டத்தைக் கொடு, மத்தவங்கள விட்டுடு’ என்று வேண்டியவளின் கண்ணில் இருந்து கண்ணீராக வடிந்தது.

மரகதமும் தனது வேண்டுதலை இறைவனிடம் சொன்னவர் கண்களும் கலங்கி இருந்தது. 

தங்கள் பேத்தியின் வாழ்க்கையை எண்ணி… காலையில் கணவன் கூறியது அவரது நினைவில் வந்தது.

இரவு வெகு நேரம் தூங்காமல் விழித்து இருந்தார் ராஜமாணிக்கம். 

எப்படியாவது கயலை இஷானுக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. 

இப்படியே இருந்தால் தங்களது பேத்தியின் நிலை மோசமாகி விடும் என எண்ணியவர் இன்றே இஷானின் தாயாரைப் பார்த்து அவர் காலில் விழுந்தாவது தன் பேத்தியைத் திருமணம் செய்து கொள்ளும்படி வேண்ட வேண்டும் என முடிவு செய்தவர் அந்த முடிவை எடுத்து முடிக்கும் நேரம் எழுந்த மரகதம் முழித்திருந்த கணவனைப் பார்த்தவர் அவரது தோளில் கை வைக்க திரும்பி அவரைப் பார்த்துப் புன்னகைத்தார் ராஜமாணிக்கம்.

மாத்திரை போட்டதால் தூங்கிப் போன மரகதத்துக்கு தன் கணவன் இரவெல்லாம் உறங்காதது அவர் அமர்ந்திருந்த விதத்திலேயே புரிந்தது.

“ஏங்க, தூங்காம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகுறது? நாம நல்லா இருந்தாதானே நம்ம பேத்தியைப் பத்திரமா பார்த்துக்க முடியும்?” என்று கேட்க,

ஆதரவாய் அவரது மனைவியின் தலையைத் தடவியவர்,

“நான் முடிவு பண்ணிட்டேன் மரகதம். அந்தக் கேடு கெட்டவன் வெளியே வரதுக்குள்ள நம்ம பேத்திக்கு நல்ல வரனைப் பார்த்துக் கல்யாணம் செஞ்சு வெச்சுடனும்னு” என்று கூற அவரைப் பார்த்து அதிர்ந்தார் மரகதம்.

காதல் கொண்ட பெண்ணின் மனம் அதன் ஏமாற்றத்தை எவ்வளவு வேதனையுடன் சுமக்கும் என்று அறியாதவரா அவர்? 

தங்கள் பேத்தியின் நிலையைப் பார்த்தாலே தெரிய வேண்டாமா? என்று எண்ணியவருக்குக் கோபம் வரத் தன் கணவனைக் கண்டபடி திட்டி விட்டார்.

“உங்களுக்கு என்ன? பொண்ணுங்கனா அவ்வளவு எளக்காரமாப் போச்சா? அவளே பாவம், புயல் அடிச்சு ஓய்ஞ்சா மாதிரி வாடி வதங்கிப் போய் இருக்கா. உங்க பங்குக்கு நீங்களும் அவளை வேற எவனுக்கோ கட்டி வெச்சு அவ வாழ்க்கையை வீணாக்கப் பார்க்குறீங்களா? அவ ரொம்ப உடைஞ்சு போய் இருக்கா. பக்கபலமா இருக்க வேண்டிய நாமளே அவ வாழ்க்கையைக் கெடுக்கலாமா?” என்று கோபமாய் பேசியவரைக் குழப்பமாய் பார்த்தார் ராஜமாணிக்கம்.

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 18”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *