Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 19

என் சுவாசம் உன் வாசமாய் – 19

அத்தியாயம் 19

இராஜமாணிக்கம் மரகதத்தைப் புரியாமல் பார்க்க அவரோ இன்னும் கோபமாகி அவரைத் திட்ட,

“ஏன்டிமா, இப்போ என்ன சொன்னேன்னு நீ இப்படித் திட்டுற? பேத்திக்குக் கல்யாணம் பண்ணனும்னு தானே சொன்னேன்?” என்று அவர் கேட்க,

“வயசாச்சே தவிர உங்களுக்கு அறிவே இல்லை. அம்மா இல்லாம, அப்பானு ஒருத்தன் இருந்தும் ப்ரயோஜனம் இல்லாம இருக்கான்… அந்தப் புள்ள காதலிச்சவன் குடும்பமும் அவளை வெறுக்குது. அவங்களைச் சமாதானம் பண்ணி அவளைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுவீங்களா, அதை விட்டுட்டு நல்ல வரன் பார்க்கிறாராம்… அவளோட மனசை நாமளே காயப்படுத்தனுமா? என்ன பேசுறீங்க நீங்க?” என்று திட்ட அப்போது தான் அவர் சொன்ன வார்த்தைக்காக தான் தன் மனைவி திட்டுகிறாள் என்பதை உணர்ந்தவர்,

“அச்சோ மரகதம்… நான் நல்ல வரன்னு சொன்னது வேற ஒரு வரன் இல்ல… நானும் அந்தப் பையன் வீட்டுல போய் பேசி அவனையே கயலுக்குக் கல்யாணம் பண்ணனும்னுதான் சொல்ல வந்தேன்…” என்று விளக்கமாகக் கூற, 

“ஓஓஓ! அப்படிச் சொன்னீங்களா? அதைத் தெளிவாச் சொல்றதுக்கு என்னவாம் உங்களுக்கு? அறிவு கெட்ட மனுஷா?” என்று அப்போதும் அவரைத் திட்டிவிட்டு,

“சரி வாங்க, கிளம்பலாம்” என்று கூற,

“இல்ல மரகதம், நாமளா போய் பேசி தான் அவங்க கயல ஏத்துக்கிட்டாங்கனு பின்னாடி தெரிஞ்சா கயல் வருத்தப்படுவாமா… அதனால, அவகூட நீ இரு. நான் மட்டும் போறேன்… இல்லனா அவளுக்குச் சந்தேகம் வந்திடும்” என்று கூற,

“ஓஓ! சரி, நீங்க சொல்ற மாதிரியே செய்யலாம்… ஆனா அது என்ன நல்ல காரியம் பேசப் போகும்போது இப்படிப் பேசுறீங்க? எப்போ எங்கே கிளம்பினாலும் போயிட்டு வர்றேன்னு தானே சொல்லுவீங்க?” என்று கேட்க,

“ஏன்டி? ஏதோ அவசரத்துல சொல்லிட்டேன்… இப்போ அது ரொம்ப முக்கியமா? நான் போய் முதல்ல அந்தத் தம்பிகிட்டப் பேசுறேன்… அவங்க என்ன சொல்றாங்கனு பார்க்கலாம், மரகதம்… சரி நான் போறேன், நீ அவளைப் பார்த்துக்க” என்று திரும்பவும் கூற,

“என்னங்க இது? திரும்பத் திரும்ப? மனசுக்கு உளைச்சலா இருக்குதுங்க. அப்படிப் பேசாதீங்க?” என்று வருத்தமாய் கூற,

“அச்சோ மரகதம். நான் கிளம்புற அவசரத்துல பேசிட்டேன். மன்னிச்சிடுமா… நான் போய்ட்டு வர்றேன், போதுமா? இப்போ சந்தோஷமா? சிரிம்மா… சிரிச்சு என்னை அனுப்பி வை. போற வேலை நல்ல படியா முடியனும்” என்று கூற தன் கவலையை மறைத்துச் சிரித்தபடி அவரை வழியனுப்பினார்.

தன்னை ஓரளவுக்குச் சமாதானம் செய்து கொண்ட இஷானிடம் பேசிக் கொண்டு இருந்தான் தண்டபாணி.

“என்னடா நீ? சின்னப்பிள்ள மாதிரி. அவனே உன்ன விட மெச்சூர்டா இருக்கான், நீ ஏன்டா இப்படி இருக்க? அவன் ஏதோ இப்போ லவ்வுல அப்படிப் பேசுறான். நாளைக்கே அம்மா வேற பொண்ணு பார்த்தா அவன் கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பான்டா… நீ வேணால் பாருடா” என்று கூற,

“இல்லடா, உனக்கு அவனைப் பத்தித் தெரியாது. அவன் ஒரு முடிவு எடுக்கமாட்டான் அவ்ளோ சீக்கிரமா… எடுத்தா மாற மாட்டான். அதுல அம்மாவோட பேச்சுக்குக் கூட மதிப்பு இருக்காது. அவன் எனக்கு அப்படியே ஆப்போசிட் டா… அவன் கயல எந்த அளவுக்கு நேசிச்சு இருந்தா அவளை விட்டு வேற ஒரு வாழ்க்கை இல்லைனு முடிவு பண்ணி இருப்பான்…

நான் கயல விரும்பினது அவளோட அழகு, பழக்க வழக்கம் ஏதோ ஒண்ணு என்னை ஈர்த்ததால… ஆனா, அவன் அவகூடவே இருந்து இருக்கான். அவளை எவ்ளோ லவ் பண்ணி இருப்பான்? நான் அவள லவ் பண்றேன்னு அம்மா சொன்னப்போ எவ்ளோ மனசு உடைஞ்சு போய் இருப்பான்? அவன் மூஞ்சில நான் எப்படிடா முழிப்பேன்” என்று புலம்ப,

“டேய், இதை இப்போதைக்கு விடு… நீ ஒண்ணும் தெரிஞ்சே அவள லவ் பண்ணலையே. அவனும் தெரிஞ்சே எதுவும் செய்யலையே. அதனால இதுல வருத்தப்பட எதுவும் இல்லடா… நீ எப்படியும் கயலைக் கல்யாணம் பண்ணப் போறது இல்ல” என்று கூற அவனை ஒரு பார்வை பார்த்தான் இஷான்.

“என்னடா பார்க்குற? அப்போ நீ கயலைக் கல்யாணம் பண்ற ஐடியால இருக்கியா? அம்மா எப்படி ஏத்துப்பாங்க?” என்று கேட்டான் தண்டபாணி.

அவன் கேட்ட கேள்வியில் ஆழ்ந்து யோசிக்கத் துவங்கினான் இஷான்.

“என்னடா யோசிக்கிற? கயலை நீ மறந்துட்டன்னு தான் எனக்குத் தோணுது…” என்று கூற அவனை நிமிர்ந்து பார்த்தவன், 

“என்னடா சொல்ற? நான் எப்படிடா அவளை மறப்பேன்?” என்று கூற, லேசாகச் சிரித்த தண்டபாணி,

“நீ ஒரு விஷயம் யோசிக்கல இஷா… இவ்ளோ பிரச்சனை நடந்துச்சே, ஒரு முறையாவது நீ கயல்கிட்டப் பேசினியா? இல்ல, அவதான் உனக்குப் பேசினாளா? இல்ல அவளை நேர்ல போய் பார்த்தியா நீ? எதுவும் வேணாம், ஏற்கனவே அம்மா இல்லாத பொண்ணு, அதுவும் பெத்த தகப்பனே அவ அம்மாவைக் கொன்னுட்டான். அப்பாவும் கொலைகாரனாப் போயிட்டான். அவரும் இல்லைனு ஆகிடுச்சு. அப்பா, அம்மாவை இழந்து நிக்கிற பொண்ணுக்குத் துணையா நிக்கனும். அட்லீஸ்ட் அவ சைடு என்ன நடந்துச்சுனு ஆச்சும் கேட்டியா நீ? ” என்று கேட்க,

அவனது கேள்விகளில் அதிர்ந்தவன், “நான் இதெல்லாம் யோசிக்கவே இல்லையேடா?” என்று கூற,

“அதைத் தான்டா நானும் சொல்றேன். உங்க அம்மாக்காக நீ அவளை அப்படியே விட்டுட்டு வந்துட்ட. அவமேல உனக்குக் காதலும் இல்ல, கோபமும் இல்ல… உனக்கு இருந்தது வெறும் க்ரஷ்தான்… அவளுக்கும் அதுதான். ஆனா, அதை ரெண்டு பேருமே உணரல… ஆனா, இந்திரா அவளை உண்மையா காதலிச்சான். ஏன்னா, காதல் அன்புலாம் எங்க இருக்கோ அங்கதான் உரிமையான கோபம் இருக்கும். கோபத்துல கூட அவங்களையே நினைச்சுட்டு இருப்பாங்க. இந்திரா அவமேல கோபப்பட்டான். அவளோட அப்பனை உள்ள தள்ளி அவளோட அம்மா சாவுக்கு நியாயம் வாங்கிக் கொடுத்தான். கோபமாவாச்சும் அவளையே தான் நினைச்சுட்டு இருக்கான்… இப்போ புரியுதா? அதுவும் இல்லாம, கஷ்டப்படாமக் காதல் கிடைக்காதுடா… நீ அம்மா வேணாம்னு சொன்னதும் அமைதியா வந்துட்ட, அதுலயே உனக்குத் தெரியலையா? உன்னோட காதலுக்கு அர்த்தமே இல்லைனு புரியலையா?” என்று கூற இஷானின் சிந்தனை மேலும் அதிகமாகியது.

அதற்குள் அவனது சிந்தனையைக் கலைக்கும் வண்ணம் அவனது கம்பெனி ரிசப்ஷனிஸ்ட் ஃபோன் செய்தார். எடுத்தவனுக்கு மேலும் சிந்தனை. 

“சரி, நானே வர்றேன்” என்று விட்டுத் திரும்ப தண்டபாணி அவனைக் கேள்வியாய் பார்த்தான்.

“கயலோட தாத்தா வந்து இருக்காராம். என்னைப் பார்த்து ஏதோ பேசணுமாம்? நீ இரு, நான் போய் அவரைக் கூட்டிட்டு வர்றேன்” என்றுவிட்டு அவசரமாய் வெளியே போனான் இஷான்.

வீட்டிலிருந்து கிளம்பியவர் நேரே இஷானின் அலுவலகத்திற்குச் சென்றார்.

வந்தவருக்கு யோசனைதான். இஷானை எப்படி சம்மதிக்க வைப்பது என்பதுதான் அவரது யோசனையாக இருந்தது. இருந்தும், தங்கள் பேத்தியின் வாழ்க்கையைச் சரிசெய்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. அதனால்தான் துணிந்து வந்து விட்டார். 

வந்தவர் ரிசப்ஷனில் இஷானைச் சந்திக்க வேண்டும் என்று கூற அந்தப் பெண்ணோ அப்பாயின்ட்மெண்ட் கேட்க,

“அப்பாயின்ட்மெண்ட் வாங்கலைங்க. அவசரமாச் சந்திக்கனும். கயல்விழியோட தாத்தானு சொல்லுங்க, அவருக்குத் தெரியும்” என்று கூற, 

“அப்படிலாம் சொல்ல முடியாதுங்க. அப்பாயின்மெண்ட் இல்லனா பார்க்க விடமுடியாதுங்க சார்” என்று கூற,

“இல்லம்மா, ரொம்ப அவசரம். அவரு எங்க பேத்தியக் கல்யாணம் பண்ணிக்க இருக்காரு, அதுபத்திப் பேசணும் உடனே… நீங்க சொல்லுங்க, அவரு பார்க்க முடியாதுனா நான் போயிடுறேன்” என்று கூற அவரது பேச்சைத் தட்ட முடியாமல் இஷானுக்கு ஃபோன் செய்து விவரம் கூற அவனே வர்றேன் என்று கூறவும் அவரை அங்கிருந்த இருக்கையில் அமரச் சொன்னார் ரிசப்ஷனிஸ்ட்.

அவர் மறுத்துவிட்டு நிற்க வெளியே வந்த இஷான் அவர் நின்று கொண்டு இருப்பதைப் பார்த்து ஓடிவந்தான் அவரிடம்.

“வாட் ஈஸ் திஸ் மேம், அவர உட்கார வைக்காம விட்டு இருக்கீங்க?” என்று கேட்க ரிசப்ஷனிஸ்ட் பதில் கூறும் முன் ராஜமாணிக்கமே பேசினார்.

“இல்லீங்க தம்பி, அவங்க உட்காரச் சொன்னாங்க. நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன். உங்கள அவசரமாப் பார்த்துப் பேசனும், அதான் வந்தேன்” என்று கூற,

“சரி, வாங்க தாத்தா” என்று அவரை உள்ளே அழைத்துச் சென்றான்.

உள்ளே சென்றவரை அமர வைத்துவிட்டு அவரது அருகிலேயே அமர்ந்தான் இஷான். அவரோ தண்டபாணியைப் பார்க்க அவன், 

“நான் வெளியே வெயிட் பண்றேன் இஷா… நீங்க பேசுங்க” என்றுவிட்டுக் கிளம்ப,

“நீங்களும் இருங்க தம்பி, நீங்க அவருக்கு எவ்வளவு முக்கியம்னு சொல்லி இருக்கா கயல்… உங்களுக்குத் தெரியாத ரகசியம் எதுவும் இல்ல” என்று கூற இஷானும் தண்டபாணியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“சொல்லுங்க தாத்தா, என்ன பேசணும்?” என்று கேட்க, அவர் பேச ஆரம்பித்தார். அதைகேட்ட இருவருக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… ஆச்சரியமும் கூட.

2 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 19”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *