Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 3

என் சுவாசம் உன் வாசமாய் – 3

அத்தியாயம் 3

அறைக்குள் நுழைந்தவனுக்கு அடக்க முடியாத கோபம். ‘எவ்வளவு திமிர் அவளுக்கு? பிள்ளையைத் தூக்கிட்டுப் போவாளாம்? யார் பிள்ளைய யார் தூக்கிட்டுப் போறது?’ என்று ஆத்திரமாய் எண்ணியவன் மனசாட்சி அவனைத் துப்பியது.

‘நீ ரொம்ப ஒழுங்கோ? உன் அம்மாகிட்ட ஒரு மாதிரிப் பேசுற. இப்படி மாத்தி மாத்திப் பேசுறவன நம்பி எப்படி அவ பிள்ளையக் கொடுப்பா?’ என்று அவன் மனசாட்சி கேட்க,

‘நான் அவளோட வாழ்க்கைக்காக தான் யோசிச்சுப் பேசினேன்… இந்தக் குழந்தையக் காரணமா வெச்சு அவ வாழ்க்கை பாழாகிடக் கூடாதுனு தான் மாத்திப் பேசிட்டு வந்தேன். எனக்கு மட்டும் அவள அனுப்பனும்னு ஆசையா என்ன? எல்லாம் அவ விதி!’ என்று மனசாட்சிக்கு விளக்கம் கொடுத்தவன் தனது யூனிஃபார்ம் அணிந்து கொண்டு வேலைக்குக் கிளம்பி விட்டான். போகும்முன் அவளை ஒரு பார்வை பார்த்தவன் அவளுக்குப் புது உடைகளை வாங்கித் தருமாறு தன் அன்னையிடம் கூறிவிட்டுக் கிளம்பி விட்டான்.

தி கிரேட் ஐபிஎஸ் ஆபீசர் இந்திரஜித்.

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிக்கான ஸ்பெஷல் ஆபீசர்.

அவளோ தன் வாழ்க்கையை எண்ணி அமர்ந்து அழுது கொண்டு இருந்தாள். இரவு ரோந்துப் பணிக்குக் கிளம்பியவன் மனம் கயலை எண்ணித் தவித்தது.

‘என்னையே என்னை வெறுக்க வெச்சுட்டியேடி’ என்று தன்னையே நொந்தவன் கடமையை ஆற்றினாலும், மனம் தங்களது பள்ளிக் காலத்திற்குச் சென்றது..

சென்னை படப்பையில் ஓர் அரசுக் கல்வி நிறுவனத்தின் உயர்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ படித்துக் கொண்டு இருந்தனர் கயல்விழி, இந்திரஜித், ரேணுகா, தன்விக், கீர்த்தி ஐவரும். இந்திரஜித் மட்டும் அவர்களில் நான்கு வயது பெரியவன். பத்தாம் வகுப்பில் சைக்கிளில் இருந்து விழுந்து கை உடைந்ததால் எக்ஸாம் எழுத முடியவில்லை. ஒரு வருடம் அதன்பின் உடல் தேறி வருவதற்குள் அப்பா வாங்கிய யமஹா 100சிசி ஸ்கூட்டரை நான்தான் ஓட்டுவேன் என்று கூறி மீண்டும் ஒரு ஆக்ஸிடென்ட். அதில் காலில் எலும்பு முறிவு, கையில் கட்டு என்று எழுந்து நடக்கவே வருடங்கள் ஆகியது. அதும் இல்லாமல் எல்.கே.ஜி படிக்காமலே இருந்ததால் அங்கேயே ஒரு வருடம் பின்தங்கிப் போனான். வயதில் பெரியவனாக இருந்தாலும் மற்ற நால்வருக்கும் அவன் சக நண்பன் தான்… கயலுக்கும் அதே நிலைதான், தன் தாயின் இறப்பால் அவள் முதல் இரண்டு வருடம் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் பெயில் ஆகிவிட்டாள். அதன்பின் தன் தாயை எண்ணியே அவள் வாழ்க்கை வீணாகுமோ என எண்ணிய அவர் தந்தை அவளை அவளது தாத்தா பாட்டியிடம் ஒப்படைத்துப் படிக்க வைத்தார். அவளது தந்தை சென்னையில் ஒரு பெயர் சொல்லும்படியான பிரபல ரெளடி. அதுவே அவளுக்குப் பிடிக்காமல் போனதால் அவளும் தாயின் இறப்புக்குப் பிறகு இங்கு வந்து விட்டாள்.

இதன் காரணமாகவே நண்பர்கள் அவர்களுக்குள் பாகுபாடே இல்லை.

ஆனால், இந்திரஜித் மட்டும் எப்போதும் கயலிடம் இடைவெளி விட்டே பழகுவான். இது தெரிந்தும் நண்பர்கள் அமைதியாக இருந்தனர். 

படிக்கும் வயதில் இருவரின் மனதையும் திசை திருப்ப வேண்டாம் என்ற எண்ணத்தில்… ஆனால், கயலுக்கு அவன்மேல் அப்படி ஒரு எண்ணமே வரவில்லை. அதை அவள் செயல்களே அவனுக்கு உணர்த்த அதன் காரணமாகவே அவன் விலகி நின்றான் அவளிடம்.

அவர்களின் ப்ளஸ் டூ துவக்கத்திலேயே அவர்களது கணிதவியல் ஆசிரியர் வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்றுவிட அரசுப் பள்ளியின் பொறுப்பின்மையால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியது.

அதனால், அப்போது இந்திரஜித்தின் அண்ணன் இஷானும், அவனது தோழன் தண்டபாணியும் இணைந்து நடத்தி வரும் ட்யூஷனில் அனைவரையும் சேர அழைத்தான் இந்திரஜித்.

இஷான் கணிதவியல் முடித்து ஆடிட்டர் ஆக சி.ஏவைத் தேந்தெடுத்து படித்துக் கொண்டு இருந்தான். கணிதம், இயற்பியல், கெமிஸ்ட்ரி போன்றவை மாணவர்களுக்குப் படிக்கச் சிரமம். அதனால், தன்னால் முடிந்தவரை சொல்லிக் கொடுக்கலாம் என்று அவன் வீட்டிலேயே பாதி இடத்தில் குடிசை மாதிரி அமைத்து அதில் டியூஷன் நடத்தி வருகிறான். அதிகபட்சமாக ஐந்து அல்லது ஆறு பேருக்குதான் சொல்லிக் கொடுப்பான். அதனால் அவனிடம்  வருபவர்கள் குறைவு.

பெரியதாக பிஸினஸ் மாதிரிச் செய்ய இஷ்டம் இல்லாததால் அவனது டியூஷன் இடமும் வீட்டிலேயே என்பதால் அங்கு டியூஷன் நடப்பதே நிறையப் பேருக்குத் தெரியாது.

அன்றைய தினம் வீட்டில் சொல்லிவிட்டுப் புதியதாக டியூஷன் சேரச் சென்றாள் கயல். ஸ்கூல் விட்டு வந்ததும் பாவாடை தாவணி தான் அணிய வேண்டும் என்று அவளது பாட்டியின் கட்டளை. அவளுக்கும் அது ரொம்பப் பிடிக்கும் என்பதால் அன்றும் டியூஷன் தானே என்று எண்ணியபடி தாவணியிலேயே கிளம்பிச் சென்றாள்.

அடர்பச்சை நிறப் பாவாடை, அதே துணியில் ப்ளவுஸ் அணிந்து வெள்ளை நிற தாவணி அணிந்து வர அவளது மாநிறத்தைவிடச் சற்று அதிகமான பூண்டு நிறத்தால் தேவதையாகத் தெரிந்தாள். கிளம்பும்போது தன் பாட்டி கொடுத்த குங்குமத்தை வைக்க அவளது அழகு முகம் மேலும் அழகானது. தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பியவள் இந்திரஜித்தின் வீட்டுக்குப் புறப்பட்டாள்.

இந்திரஜித் ஸ்போர்ட்ஸ் ப்ராக்டிஸ் செய்வதால் அவன் டியூஷன் வரமுடியாது என்று கூறியிருந்தான். ஏற்கெனவே அவனோடு முன்பு ஒருமுறை கயல், ரேணு, தன்விக், கீர்த்தி அனைவருமாக வந்து இருந்ததால் அவளுக்கு ஏற்கனவே வீடு தெரியும். அதனால், அவள் சொன்ன டைம்க்கு வந்து விட்டாள். முதல் ஆளாய் வந்து விட்டதால் அங்கேயே கேட் அருகில் நின்று விட்டாள். அதற்கு முதல் காரணம் அவர்கள் வீட்டில் இருந்த நாய்.

‘இது என்ன நம்ம உயரத்துக்கு இருக்கு? இருக்குறதே நாலு எலும்பு, அதையும் உருவிடுமோ?’ என்று எண்ணி பயத்தில் அங்கேயே நின்றவள் தன் நண்பர்களுக்கு ஃபோன் செய்ய அதில் அவர்கள் கூறியது.

“ரேணுவோட சைக்கிள் பங்சர்டி. நீ இந்திராவோட அம்மாகிட்டச் சொல்லிட்டு உள்ளே போ… அவன் அண்ணா சென்னையில க்ளாஸ் அட்டென்ட் பண்ணிட்டு வர லேட் ஆகும்னு சொன்னான்… இவளைத் தனியா விட்டுட்டு வர முடியாதுடி” என்று கூற,

“இல்லடி நீங்க வாங்க, நான் வெளியவே நிக்கிறேன். அந்த டாகை பார்த்தால் பயமா இருக்கு” என்று கூற அந்நேரம் அந்தக் குடிசையில் இருந்து வெளியே வந்த தண்டபாணி இவள் கேட் அருகிலேயே நிற்பதைக் கண்டு,

“யாருங்க வேணும்?” என்று கேட்க, பயத்தில் ஃபோனைக் கீழே விட்டாள். அவளைப் பார்த்த தண்டபாணி, 

‘என்ன அழகுடா! ம்ம்… யாருக்குக் கொடுத்து வெச்சு இருக்கோ?’ என்று எண்ணியவனை அவளது குரல் தடுத்தது.

“டியூஷன்க்கு வரச் சொன்னாங்க சார்” என்று அவள் கூற,

‘அய்யோ! படிக்கிற பொண்ணையா சைட் அடிச்சோம்… சாரி ஆண்டவா’ என்று அவசரமாக மனதில் மன்னிப்புக் கேட்டவன்,

“ஓஓ… வாங்க உள்ள…” என்றான்.

ஆனாலும் அவள் அங்கேயே நிற்க, “என்னம்மா? ஏன் அங்கேயே நிற்கறீங்க?” என்று கேட்க,

“இ..இல்ல சார்… நாய்… பயமா இருக்கு” என்று கூற அதில் லேசாகச் சிரித்தவன்,

“நான் கூட்டிட்டுப் போறேன், உள்ள வா மா” என்று விட்டு அவன் சென்று நாயை அழைத்துக் கொண்டு வேறு ஒரு அறைக்குச் சென்றுவிட அப்போதும் பயந்தபடியே தனது பேக் மற்றும் கீழே விழுந்த மொபைலை எடுத்துக் கொண்டு மெல்லமாக அவள் உள்ளே போக அடியெடுத்து வைக்க, 

ஒரு மணி நேரம் முன்பு…

அன்று ஏதோ தேர்வு இருந்ததால் சீக்கிரமே வந்தவனுக்கு இந்திரஜித் தன்னிடம் கூறாமல் தன் நண்பர்களை டியூஷன் வரச் சொல்லி இருந்தது கோபமாக உருவெடுக்க,

“ஏன்டா, டியூஷன் எடுக்குறது நானும், தண்டபாணியும். எங்ககிட்ட பர்மிஷன் கேட்காம உன் இஷ்டத்துக்கு ஆளுங்கள வர வைப்பியா? எங்களுக்கு டைம் இருக்கா இல்லையான்னுலாம் கேட்க மாட்டியா?” என்று இந்திராவிடம் கத்தினான் இஷான்.

இஷான் பொறுமையானவன். அன்பானவன். அம்மா சொல் பேச்சுத் தட்டாதவன். அதிகம் கோப்ம் வராது. வந்தால் அதை மனதில் வைத்துக் கொள்ளாமல் கொட்டி விடுவான்… அதில் அவனது நியாயமான பேச்சும் அடங்கி இருக்கும். அதனால், அந்த நேரம் அவனை எதிர்த்து யாரும் பேச மாட்டார்கள்.

அவனது கோபம் புரிந்த இந்திரஜித், “இல்லடா, அது… அவங்க என் ப்ரண்ட்ஸ் தான். உனக்கு ஏற்கனவே சொல்லிட்டேன்ல, எங்க ஸ்கூல் மேத்ஸ் டீச்சர் இல்லனு. அதான் உன்கிட்ட டியூஷன் வரச் சொன்னேன்… உனக்குதான் மேத்ஸ்னா உயிராச்சே, அதான் எப்படியும் நீ சொல்லித் தருவனு வரச் சொல்லிட்டேன்” என்று தன்மையாகக் கூற தண்டபாணியும்,

“சரி விடுடா, அதான் ரெண்டு பேரும் இருக்கோமே, பார்த்துக்கலாம் விடு… பழைய ஸ்டூடண்ஸ் ஒண்ணு ரெண்டு பேர்தான் இருக்காங்க. பார்த்துக்கலாம்டா” என்று கூற கோபமாய் இருவரையும் முறைத்தவன் டியூஷனுக்குள் சென்று அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டான்.

அவன் பின்னேயே இருவரும் செல்ல, “அண்ணா, நான் வேணா ஃபோன் பண்ணி அவங்கள வரவேணாம்னு சொல்லிடவா? என் ப்ரண்ட்ஸ்னா அண்ணா எதுவும் சொல்ல மாட்டான்னு நினைச்சேன்” என்று கேட்க,

“அறிவு கெட்டவனே, படிக்க வரச்சொல்லிட்டு வேணாம்னு சொன்னா அவங்க என்ன செய்வாங்க? விடு பார்த்துக்கலாம்” என்று அவனைச் சமாதானம் செய்த தண்டபாணி அவனை ப்ராக்டிஸ்க்கு போகச் சொல்லிவிட்டுக் கிளப்பி அனுப்பியபின் தன் நண்பனைத் தேடி அந்தக் குடிசைக்குள் சென்றான்.

“ஏன்டா இவ்வளவு கோபம்? அவன் நாம எடுப்போம்னு நம்பிதானே வரச் சொல்லி இருக்கான்… எனக்குத்தானே ஒரு மாசம் ட்ரெயினிங் இருக்கு, நீ மேனேஜ் பண்ண மாட்டியா? அதுவும் உனக்கு இஷ்டமான மேத்ஸ் சப்ஜெக்ட் தானே… அதுக்கு அவன இப்படித்தான் கத்துவியா?” என்று கேட்க,

“அவன் ஒண்ணும் சின்னப் பையன் இல்லடா, என் வயசு தானே? பொறுப்பு இல்லையாடா? நம்மகிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்னு தோணலையா? நான் ப்ரீயா இருக்கேன். ஓகே! ஆனா, ரெண்டு பேரும் பிஸியா இருந்தா என்னடா பன்றது?” என்று கூற அவனை ஏதேதோ சொல்லி சமாதானம் படுத்திவிட சிறிது நேரத்தில் அவனும் அமைதியானான். பின்பு அங்கே ஏதோ சைக்கிள் சத்தம் கேட்க,

“சரி, விடு மச்சி… ஓகே! எனக்கும் தலைவலிக்குது, நான் அம்மாகிட்ட டீ வாங்கிட்டு வர்றேன், ரெண்டு பேருக்கும்” என்றுவிட்டு கதவைச் சாத்திவிட்டு வெளியே சென்றவன் கயலிடம் பேசிவிட்டுச் செல்ல, 

‘என்ன? ஒரு டீ வாங்கிட்டு வர இவ்ளோ நேரமா? அப்படி என்ன பண்றான்?’ என்று எண்ணியபடி கதவை வேகமாகத் திறக்க அதேநேரம் கதவின் பிடியில் கையை வைத்தவள் அவன் கதவை இழுத்த வேகத்தில் அவன் மீது விழ,

அவளைக் கண்ட அதிர்ச்சியில் இஷானும் பின்னோக்கி அடியெடுக்க அதற்குள் அவள் அவன்மேல் விழ இருவரும் ஏடாகூடமாக விழுந்தனர்.

3 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 3”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *