Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 4

என் சுவாசம் உன் வாசமாய் – 4

அத்தியாயம் – 4

கதவை வேகமாக இழுத்த இஷான் கதவின் கைப்பிடியோடு சேர்ந்து ஒரு யுவதி வருவாள் என என்ன கனவா கண்டான்?

உள்ளே யாருமில்லை, இருந்த ஒருத்தனும் நாயைக் கூட்டிக் கொண்டு போய் விட்டான். அதனால் தனியாக உள்ளே செல்ல வேண்டுமா என எண்ணியபடி கதவின் கைப்பிடியில் கை வைத்த நேரம் உள்ளிருந்து ஒருவன் இப்படிக் கதவை இழுப்பான் என அவளும் கனவா கண்டாள்?

அவன் இழுத்த வேகத்தில் இவள் பிடிமானம் இல்லாமல் அவன்மீது விழ திடீரென விழுந்த பாரத்தால் அவனும் நிலையில்லாமல் சுதாரிப்பதற்குள் அவளைத் தாங்கியபடி இருவரும் அங்கிருந்த சேரில் விழுந்தனர்.

அவளைத் தாங்கிப் பிடித்ததில் இஷான் அவளது தாவணி மறைக்காத இடையில் கை வைத்திருக்க அவனது மூக்கோடு மூக்கு உரசியபடி விழுந்திருந்தாள் கயல்விழி.

என்னதான் ஆண் நண்பர்கள் இருந்தாலும், தொட்டுப் பேசினாலும், குட் டச் மட்டுமே பழகி இருந்தவளுக்கு முதன்முறை வேறு ஆண் கை, அதும் இடுப்பில் பட அவளுக்கு திக்பிரம்மை பிடித்தது போல் ஆனாள். முட்டைக் கண்கள் இரண்டையும் விரித்து அவள் அவனைப் பார்க்க அவளது அழகு விழிகள் ஆழியாய் அவனைச் சுருட்டிக் கொண்டது..

அவளுக்கோ அருகில் அவன் முகமும், இடுப்பில் அவன் கரமும் ஏதோ செய்ய அசைவின்றி இருந்தாள். அவனுக்கோ அருகில் மங்கையவள் மான்விழியும், அவளது ஸ்பரிசமும் ஏதோ செய்ய அவனும் உறைந்து போய் இருந்தான்.

டீயை எடுத்துக் கொண்டு வந்த தண்டபாணி இருவரின் கோலத்தையும் கண்டவன், 

“மச்சிசிசி… என்னடா இது?” என்று சற்று சத்தமாகக் கேட்க அவனது சத்தத்தில் அதிர்ந்து விலகினர் இருவரும். விலகியதில் அவனது கரம் பட்டு அவளது உடை சற்று விலகிவிட அவசரமாகக் கையை எடுத்துக் கொண்டான். அவளோ திரும்பாமல் அப்படியே நின்றாள் பதட்டத்தோடு கையைப் பிசைந்தபடி.

அவளது விலகி இருந்த உடையைப் பார்த்தவன் சட்டென அவளை மறைத்தவாறு அவளுக்குப் பின்னும் தண்டபாணிக்கு முன்னும் நிற்க நிலைமையை யூகித்த தண்டபாணி, 

“வெளியே வாடா, அந்தப் பொண்ணு உட்காரட்டும்…” என்று கூறிவிட்டு வெளியே செல்ல இஷானும் சங்கடமாய் நெளிந்தபடி அவன் பின்னே சென்றான்.

இங்கோ அவர்கள் வெளியே சென்ற அடுத்த நொடி தாவணியைச் சரி செய்தவள் தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள். 

‘லூசு, லூசு! எப்போவும் ஸ்கூல் விட்டுப் போனதும் போடுற மாதிரி தாவணி போட்டு வந்துட்டியே… ஐயோ! அவரு யாரோ என்னவோ? அசிங்கமாப் போச்சே’ என்று தனக்குள் புலம்பியவள் ஏகப்பட்ட சேஃப்டி பின் எடுத்து நினைத்த இடமெல்லாம் பின் செய்து விட்டாள் தாவணியை.

இஷானும், இந்திரஜித்தும் identical twins. உருவங்கள் வெவ்வேறாய் இருக்கும். உற்றுக் கவனித்தால் தான் ஒரு சில ஒற்றுமைகள் தெரியும்.

தண்டபாணியோ இஷானைப் பிடி பிடி என்று பிடித்துக் கொண்டான்.

“அறிவு கெட்டவனே! என்ன இதெல்லாம்? அந்தப் பொண்ணு படிக்க வந்து இருக்காடா, அவமேல போய் இப்படி விழுந்து இருக்க? யாராவது பார்த்தா என்ன ஆகுறது?” என்று கோபமாய் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க,

“டேய்… டேய்… நீ எங்கே இன்னும் காணோம்னு கூப்பிடத் தான்டா கதவைத் திறந்தேன். என்ன? கொஞ்சம் வேகமா இழுத்துட்டேன். அந்தப் பொண்ணு டோர் கூடவே சேர்ந்து வரவும் பேலன்ஸ் இல்லாம ரெண்டு பேரும் விழுந்துட்டோம். நீ என்னமோ நான் வேணும்னே அவமேல விழுந்த மாதிரிப் பேசுற? இதுவரைக்கும் எந்தப் பொண்ணடா நான் தப்பா பார்த்து இருக்கேன்?” என்று கேட்க,

“டேய்! நான் அந்த அர்த்தத்துல சொல்லலடா… வேற யாராவது நீங்க இருந்த கோலத்தையும், அந்தப் பொண்ணோட கோலத்தையும் பார்த்து இருந்தா கண்டிப்பாத் தப்பா தான் நினைப்பாங்க. ஏன்னா நீங்க அப்படிக் கட்டிப் பிடிச்சுட்டு இருந்தீங்க. இதுல அந்தப் பொண்ணு அப்படியே ஃப்ரீஸ் ஆகி நிக்குது” என்று அவளைப் பத்திக் கூறியதும்தான் அவளது விரிந்த விழிகளும், அவளது உடை கலைந்த நிலையும் அவனுக்கு நினைவு வர கூடவே வெட்கமும் வர, முகத்தை வேறு புறம் திருப்பியவனின் அழகு வெள்ளை முகம், சிவப்பாய் ஆனது.

“இல்லடா, அந்தப் பொண்ணு ரொம்ப பயந்துட்டா போல…” என்று கூறும் போதே அவனது கண்கள் மின்ன அதைக் கண்ட தண்டபாணி தலையிலடித்துக் கொண்டு,

“மச்சி… என்ன வண்டி வேற ரூட்ல திரும்புது? இந்தரோட ப்ரண்ட்டா, சின்னப் புள்ள. உனக்கு செட்டாவாது, விட்டுட்டு வேலைய மட்டும் பாரு” என்று கூற அவனது முகம் சுருங்கியது.

“மச்சான், இதுவே நீ அந்தப் பொண்ண விட ஒரு ரெண்டு வயசு பெரியவனா இருந்தால் கூடப் பரவாயில்லைடா. ஆனா, இந்தப் பொண்ணு சின்னப் பொண்ணா இருக்குடா… அதும் நீ பாடம் சொல்லிக் கொடுக்கப் போற. அதான்டா சொல்றேன்… அந்தப் பொண்ணுக்கும் ஒரு பேட் ஹோப் கொடுக்கிற மாதிரி இருக்கும். உனக்கும் கெட்ட பேராகிடும்டா” என்று கூற அப்போது தான் அவனுக்கு உண்மை உரைக்கச் சட்டென வாடிப் போனான்.

“இல்ல மச்சான், என்னால எந்தக் கெட்டப் பேரும் வராம பார்த்துப்பேன்டா” என்றுவிட்டுத் திரும்ப அப்போது தான் அவனது நெற்றியைப் பார்த்தான் தண்டபாணி.

“நீ எப்போ மச்சி, கோவிலுக்குப் போன?” என்று விஷமமாய் புன்னகைத்துக் கேட்க,

“என்னடா ஒளர்ற?” என்றவன் அவனது கிண்டலைக் கண்டு உடனடியாகத் தனது மொபைலை எடுத்து கேமிரா ஆன் செய்து பார்க்க அதில் அவளது நெற்றியில் இருந்த குங்குமம் அவனது நெற்றிக்கு இடம் மாறி இருந்ததைக் கவனித்தவன் தனக்குள் சிரித்துக் கொண்டான். ஆனால் அதை அவனுக்கு மறைத்தபடி.

“அது… அந்தப் பொண்ணு விழுந்ததுல ஒட்டி இருக்குடா அழிச்சுடறேன்” என்றபடி அதை அழிப்பதற்காக கையைக் கொண்டு போக அதைத் தடுத்தவன், 

“நல்லா இருக்குடா, இருக்கட்டும்…” என்றவன்,

“ஆமா, பொட்டு மட்டும் தானா? இல்ல டச்சிங், கிஸ்ஸிங்லாம் ஆச்சாடா?” என்று ஆச்சரியமாய் கேட்க அவளது இடை பற்றி அவளது உடை கலைத்த நியாபகம் வர அவன் முகம் மீண்டும் சிவந்தது.

“அடப்பாவி! கிஸ் வேறயா?” என்று தண்டபாணி அதிர்ச்சியாக,

“டேய்… ஏன்டா நீ வேற? அதெல்லாம் இல்லடா… அந்தப் பொண்ணு மேலே விழுந்துட்டா, அவ்ளோதான்” என்று கூற,

“உன்னலாம் நம்ப ஆகாதுடா ராசா… வா அந்தப் பொண்ணு அழ கிழப் போகுது” என்று கூறி அவனையும் இழுத்துக் கொண்டு உள்ளே செல்ல அவளோ தன் தலையில் தானே அடித்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தவர்களுக்குச் சிரிப்பு வர…

“ம்க்கும்” என்றபடி தொண்டையைச் சரி செய்தான் தண்டபாணி. அதில் பயத்துடன் திரும்பியவள் கண்கள் மீண்டும் இஷானைப் பார்க்க கையெல்லாம் உதற ஆரம்பித்தது. அவளது நடுக்கத்தைக் கண்டவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட,

“மச்சி, நீ பேசு நான் வெளியே இருக்கேன்” என்று தன் நண்பனிடம் ரகசியமாகக் கூறிவிட்டு வெளியே சென்றான். அவளைத் தொட்ட கைகளில் வேறு ஏதோ ஒரு உணர்வு. முதல்முறை ஒரு பெண்ணை இவ்வளவு அருகில் கண்டது, அவளை உரசியது என அனைத்தும் ஏதோ செய்ய அவன் வெளியே வந்து விட்டான்.

அவளைப் பரிதாபமாகப் பார்த்த தண்டபாணி, “பயப்படாதேமா, அவன் நீங்க இருந்ததைக் கவனிக்கல, நீங்க அவன் இருந்ததைக் கவனிக்கல. அதான் இடிச்சுட்டான். அவன் எந்தப் பொண்ணையும் நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டான். அதான் கில்ட்டியா ஃபீல் பண்றான். சோ, கவலப்படாதீங்க… இந்தாங்க தண்ணி குடிங்க” என்று தண்ணீர் பாட்டிலை நீட்ட அப்போது அவளுக்கும் அது தேவையாக இருந்ததால் மறுக்காமல் வாங்கிக் குடித்தாள்.

பின்பு சற்று அமைதியானவள் “தேங்க்ஸ் சார், அண்ட் சாரி… நா..நான் நிஜமாகவே நீங்க மட்டும்தான் இருந்தீங்கனு நினைச்சேன் சார்” என்று தயங்கியபடி கூற,

“என் மேலயும் தப்புதான் மா. உள்ளே ஆள் இருக்குனு நானும் சொல்லி இருக்கனும், சரி விடும்மா… அது ஜஸ்ட் ஆக்சிடெண்ட் தானே, அதை மறந்துட்டு படிக்கிற வேலையப் பாருமா… டீ ஏதாவது குடிக்கிறியாமா?” என்று கேட்க,

“இல்ல சார், வேணாம்…” என்று அவள் கூற,

“சரிம்மா… ஆமா, நீங்க மட்டுமா வந்தீங்க? இந்தர் நாலு பேர்னு சொன்னானே?” என்று பேச்சை மாற்றி அவளை இயல்பாய் பேச வைத்தான் தண்டபாணி. இதெல்லாம் வெளியே நின்று கேட்டுக் கொண்டு இருந்தவன் லேசாகச் சிரித்துக் கொண்டான்.

“இல்ல சார், ஃபோன் பண்ணேன் சைக்கிள் பஞ்ச்சர் ஆயிடுச்சு, அதான் அவங்க ஒருத்தரை மட்டும் விட்டுட்டு எப்படி வர்றதுனு வெயிட் பண்ணிக் கூட்டிட்டு வர்றோம்னு சொன்னாங்க சார்” என்று கூற,

“ஓஓ! சரி சரி வரட்டும், உங்க பேர் என்ன? டீடெய்ல்ஸ் சொல்லுங்க கேட்போம். அவங்க வர்ற வரை” என்று கூற தன்னைப் பற்றிக் கூறினாள் அவள். அதை உற்றுக் கேட்டான் இஷான்.

“என் பேர் கயல்விழி சார்… அப்பா மட்டும் தான், அம்மா இல்ல… வீட்டுக்கு ஒரே பொண்ணு, இங்க தாத்தா பாட்டி கூடத் தங்கிப் படிக்கிறேன்…” என்று கூறினாள்.

“ஓஓ! நைஸ் நேம்… உங்க அப்பா” என்று அவன் ஆரம்பிக்க,

அதற்குள் மற்ற மூவரும் வந்து சேர வெளியே நின்றிருந்த இஷான் அவர்களைப் புன்னகையுடன் தலையசைப்புக் கொடுத்து வரவேற்க,

தன்விக் தவிர மீதம் இருந்தவர்கள் இஷானைப் பார்த்தது இல்லை. அதனால் பெண்கள் இருவரும்,

‘வாட் எ ஹாண்ட்சம் ஃபிகர்’ என்று எண்ணியபடி பார்க்க அவனோ அதற்குள் ஃபோன் பேசிக்கொண்டு திரும்பி இருந்தான்.

அதனால் மூவரும் அவனைப் பார்ப்பதை விட்டு ரூமிற்குள் சென்றனர். உள்ளே தண்டபாணியிடம் பேசிக்கொண்டு இருந்தவளுக்கு அதுவரை இருந்த படபடப்பு நண்பர்களைப் பார்த்ததும் குறைந்தது.

ஒவ்வொருவரும் கயலைப் போலவே தங்களை அறிமுகம் செய்து கொள்ள அதற்குள் மேலும் இரண்டு மாணவர்கள் வர எல்லோரும் அறிமுகம் செய்து கொண்டனர்.

டைம் ஆவதை உணர்ந்த தண்டபாணி, “சரி மீதி எல்லாம் நாளைக்குப் பேசலாம், இப்போ பாடத்துக்குப் போவோமா?” என்று கேட்க,

“எஸ் சார்” என்று கூற புயலென உள்ளே நுழைந்தான் இஷான்.

“ஹாய் கைய்ஸ்” என்றபடி.

‘இவரா சார்?’ என்றுப் பெண்களுக்கு ஆச்சரியம் என்றால் கயலுக்கோ ‘அப்போ இவர்தான் மேத்ஸ் சாரா? அய்யோ நான் செத்தேன்’ என்று அதிர மற்ற இருவரும்,

‘வாவ் செம்ம! இப்படி ஒரு அழகான வாத்தி கிடைச்சா யாருக்குத்தான் கசக்கும்’ என்று எண்ணியபடி இருந்தனர். மீதம் இருந்த இருவருக்கும் ஏற்கனவே பரிச்சயம் என்பதால் அமைதியாக அவனுக்கு மாலை வணக்கம் வைத்தனர்.

கயலோ தண்டபாணியைத் தயக்கமாகத் திரும்பிப் பார்க்க, அதில் சிரித்தவன், ‘தைரியமா இருமா’ என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்.

அவள் தயக்கமாய் திரும்ப அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தனர் அனைவரும். அதில் தூக்கிவாரிப் போட அவளோ இஷானைப் பார்த்தாள்.

அவனது நெற்றியையும், கயலின் நெற்றியையும் மாற்றி மாற்றித் தோழிகள் பார்க்க அவர்கள் பார்வையில் அவனுக்கே வெட்கம் வர பார்வையை வேறு புறம் திருப்பியவன் பேச ஆரம்பித்தான்.

“ஹாய்! நான் இஷான்… இந்தரஜித்தோட அண்ணன். உங்களுக்கு மேத்ஸ் அண்ட் பிசிக்ஸ் நான் சொல்லிக் கொடுப்பேன். அண்ட் கெமிஸ்ட்ரி அவர் சொல்லிக் கொடுப்பார்” என்று தன் அழகான குரலில் கூற எல்லோரும் ஆவெனப் பார்த்தனர்.

3 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *