Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் -5

என் சுவாசம் உன் வாசமாய் -5

அத்தியாயம் – 5

எல்லோரும் இஷானை ஆவெனப் பார்க்க, அப்போது தான் அவனை முழுவதுமாய் கவனித்தாள் கயல்விழி. இஷானும் இவனும் ட்வின்ஸ் என்பதால் எல்லோரும் எதிர்பார்த்தது இருவரும் ஐடன்டிகல் பிரதர்ஸா இருப்பாங்க என…

இதில் இந்திரஜித் இஷானைவிடக் கலர் வேறு கொஞ்சம் குறைவு. இஷான் இந்தி ஹீரோ போல இருந்தால் இந்திரஜித் தமிழ்நாடு ஹீரோ மாதிரி இருப்பான். அதனால் இருவரையும் உற்றுப் பார்த்தால் மட்டுமே ட்வின்ஸ் எனக் கூற முடியும். அதனால் தான் இவனை எல்லோரும் வேறு யாரோ என எண்ணி இருக்க தன்விக் மட்டுமே இஷானைப் பார்த்து இருந்தான். உற்று கவனிக்கும்போது தான் இஷானின் அடையாளங்களும் இந்திரஜித்தின் அடையாளங்களும் ஒரே மாதிரி இருக்க, இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்து விட்டது அவளுக்கு. பின்னே, அவளோ தண்டபாணி தான் டீச்சர் என்று நினைச்சுட்டு இருந்தா இவன்தான்னு சொன்னால் பாவம் அவளும் என்ன செய்வா?

திருதிருவென முழித்தவளின் விழிகள் அங்கும் இங்கும் அலைபாய அதைப் பார்த்தவன் கண்கள் ரசனையாக விரிந்தது.

அதைக்கண்ட தண்டபாணி, “க்க்கும்” என்று தொண்டையைக் கனைக்க, வேகமாக வேறு பக்கம் பார்வையை மாற்றியவன் அன்றைய தினம் கணிதம் பற்றிய பொதுவான செய்திகளைக் கூறியவன், 

“நாளையில இருந்து கிளாஸ் ஸ்டார்ட் பண்றேன்… முடிஞ்சவரை சீக்கிரமா வாங்க. ஏன்னா, எங்களுக்கும் படிக்கிற வேலை இருக்கு” என்றவன் அவர்களைப் போகச் சொல்ல எல்லோரும் எழ, 

“அண்ட் சீக்கிரமா வர்றவங்க கிளாஸைக் கிளீன் பண்ணிடுங்க” என்று தண்டபாணி கூற அனைவரும் விடை பெற்றுச் சென்றனர். ரேணுவும் கீர்த்தியும் இப்படி ஒரு அழகான அண்ணனா இந்திரஜித்துக்கு என்றபடி பேசிக் கொண்டு செல்ல,

கயலும் தன்விக்கும் பாடத்தைப் பற்றிப் பேசியபடி திரும்ப அங்கே நின்றிருந்த இஷான், “தன்வி.. நாளைக்கு வரும்போது, போறதுக்கு முன்ன உங்க டீச்சர் நடத்தின மேத்ஸ் நோட்ஸ் எடுத்துட்டு வாங்க… நான் ஒன்ஸ் செக் பண்ணிக்கிறேன்” என்று கூற அவனோ முழிக்க,

“என்னடா? இப்படி முழிக்கிற?” என்று தண்டபாணி கேட்க,

“அது வந்து அண்ணா… சாரி சார், எங்க கேங்லயே கயலு மட்டும் தான் எல்லா நோட்ஸ்லாம் எழுதி வெச்சு இருப்பா… நீங்க என்கிட்ட நோட்ஸ் கேட்கவும்” என்று இளிக்க,

“கேவலமா இருக்குடா. சிரிக்காத… சரி அவங்களோடதே கொண்டு வரச் சொல்லு… அண்ட் நீ அண்ணானே கூப்பிடு, கன்ப்யூஸ் ஆகாதே” என்று இஷான் அவளைப் பார்த்தபடியே கூற அவளோ தலையை நிமிரவே இல்லை.

எல்லா பக்கமும் தலையாட்டியவன், “அண்ணா, ஒண்ணு சொன்னா அடிக்கக் கூடாது” என்று அவன் கேட்க,

“அப்படி என்னடா சொல்லப் போற?” என்று இஷான் கேட்க,

“இந்த டிரஸ்ஸும், பொட்டும் உங்களுக்கு சூப்பரா இருக்கு. பையன் எனக்கே பொறாமையா இருக்கு. உங்களைக் கட்டிக்கப் போற பொண்ணு அதிர்ஷ்டசாலி… வா, கயல் ஓடிடலாம்” என்று சொன்னவன் ஓடிவிட அவன் இழுத்ததில் பாவாடை தடுக்கி விழப் போனவளை முழங்கையைப் பிடித்து நிறுத்தியவன்,

“பார்த்து” என்று விட்டு அவளது கையை விட்டான்.

‘அய்யோ! ரெண்டாவது முறையா என்னை விழ வைக்கப் பார்க்கிறானே’ என்று  பல்லைக் கடித்தவள்,

“சா..சாரி சார்” என்றுவிட்டு செல்லத் திரும்பியவள் நின்று அவனது நெற்றியைப் பார்க்க, அது அவளது குங்குமம் என அறிந்த வேளை வெட்கம் வர ஓடிவிட்டாள்.

அவனுக்குமே தன்விக் சொன்னது வெட்கத்தை வரவழைக்க வெட்கப் புன்னகை பூத்தவனைக் கண்ட தண்டபாணி,

“இது ஆவறதில்ல… நீ அந்தப் பொண்ண லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட போல?”

“டேய் ஏன்டா, நீ வேற… அதெல்லாம் இல்ல, பட் லைட்டா அந்தப் பொண்ண புடிச்சு இருக்கு, அவ்ளோதான்…” என்று கூற, 

“இப்படித்தான் ஆரம்பிப்பீங்க மச்சி, அப்போ நாம கல்யாணமே பண்ணக் கூடாதுனு எடுத்த முடிவு ஸ்வாகாவா?” என்று பாவமாய் தண்டபாணி கேட்க,

“மச்சி, நீ கேட்டப்போலாம் நான் என்ன பதில் சொல்லி இருக்கேன்.”

“நாம கல்யாணம் பண்ணிக்கவே கூடாதுனு சொன்ன” என்று சொன்னவன் யோசனையாய் பார்க்க,

“மச்சான் நான் சொன்னதை நல்லா யோசி” என்றுவிட்டுக் குறும்பாய் பார்க்க, அவனது பதிலை நன்றாக யோசித்தவனுக்கு விடை கிடைக்க,

“அடக் கருமம் புடிச்சவனே… ச்சை, உன்கிட்டப் போய் கேட்டேன் பாரு என்னைய” என்று அவன் நிறுத்தி எதையோ தேட,

“மச்சி வெளியே இருக்குடா” என்றான் இஷான்.

“அடிங்க… உன்ன இன்னைக்குக் கொன்னுடுறேன். என்னையே கலாய்க்கிற” என்று துரத்த ஓடிவிட்டான் இஷான்.

துரத்தி டையர்ட் ஆனவர்கள் மூச்சு வாங்க உட்கார, “இஷா… எதுவா இருந்தாலும் நல்லா யோசிச்சு அம்மாகிட்ட டிஸ்கஸ் பண்ணிச் செய்டா” என்று கூற,

“பார்த்துக்கலாம் மச்சி, இப்போவே எதுவும் முடிவு பண்ண வேணாம்… அவ படிக்கிற பொண்ணுடா. எனக்கே எதுவும் கன்ஃபார்மா தெரியாதப்போ அவளோட மனசையும்  கெடுத்துடக் கூடாது…” என்று கூறி அப்போதைக்கு அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

ரேணுவும் கீர்த்தியும் இஷானின் அழகையே வர்ணித்துக் கொண்டு வர தன்விக் அவர்களைத் திட்டியபடி வர கயலோ அமைதியாக வந்தாள். அவளது எண்ணத்தின் நாயகனே அவர்களது பேச்சுப் பொருளாக இருக்க அவர்கள் அவளைவிடச் சிறியவர்கள், தனக்குப் பக்குவம் தேவை என்பதை உணர்ந்து எதுவும் பேசாமல் வந்தாள்.

என்ன தவிர்க்க முயன்றாலும் உடம்பெல்லாம் அவனது வாசம் இருப்பது போலவே உணர்ந்தாள். இடையில் அழுந்தப் பதிந்த அவனது கைகளினால் உண்டான கூச்சமும், மூக்கோடு மூக்கு உரசி தனது குங்குமத்தை அவன் களவாடிக் கொண்ட நிமிடங்களும் அவளது உடலில் புது உணர்வைக் கொடுக்க, வெட்கத்தில் மேலும் சிவந்தாள் அவள். அவளையே பார்த்துக் கொண்டு வந்த தன்விக் அவளது சிவந்த முகத்தைப் பார்த்து ‘என்னாச்சு இவளுக்கு? இப்படி வெட்கப்படுறா? அதை மறைச்சுக்கிட்டே வேற வர்றா? ஏதோ இருக்கு… ஆனா இவ அழுத்தக்காரி. எதையும் வாயத் தொறந்து பேச மாட்டா. பார்க்கலாம்’ என்று எண்ணியபடி வர அனைவரிடமும் விடைபெற்று வீட்டுக்குச் சென்றாள் அவள்.

இரவெல்லாம் உறக்கம் வரவில்லை. கண்ணை மூடினாலே அவள் முகத்தருகே அவன் முகம் வந்து நெற்றியோடு முட்டியதும் அவளது இடை வளைத்து அணைத்திருந்ததும் தான் நினைவில் வந்து படுத்தியது. அவன் விரல் பட்ட இடம் குறு குறுக்க அவளால் உறங்கவே முடியவில்லை. எழுந்து அமர்ந்தவள்,

“வேணாம் கயல், அவரு மாஸ்டர். நீ அவரைப் பத்தி இப்படி  நினைக்கிறதே தப்பு… தேவையில்லாத கற்பனையை வளர்க்காம இரு… நீ ஒழுங்காப் படிக்கிற வழியப் பாருடி” என்று தன் தலையில் தானே அடித்துக் கொண்டு பேசிவிட்டுப் படுத்தாள்.

அங்கோ அவனது நிலை இவளை விட மோசம். தன் அருகில் முதலில் ஒரு பெண்ணின் வாசம். அவளைத் தொட்ட கையில் ஏதோ ஒரு சிலிர்ப்பு. தன்மேல் விழுந்ததில் அவளது வாசமும், அவளது நெற்றியில் இருந்து ஒட்டிக் கொண்ட குங்குமமும், இறுதியாகக் கிளம்பும்போது அவள் விழப் போக மீண்டும் அவளைப் பிடித்ததும் ஏதேதோ செய்ய உறங்காமல் அவளையே எண்ணியபடி அமர்ந்திருந்தான்.

அவளது குடும்பம் பற்றி அறிந்தபின் இதே சிலிர்ப்பு நிலைக்குமா?

‘டேய் இஷா… அவ படிக்க வந்து இருக்கா, நீ சொல்லிக் கொடுக்குறவன். அந்த வேலைய மட்டும் பாரு. அவ படிக்கட்டும். அப்புறமாவும் இதே நிலமை இருந்தா அவகிட்டப் ப்ரபோஸ் பண்ணிக்கலாம்’ என்று தன் மனதிற்குக் கடிவாளம் இட்டு இழுத்துக் கட்டிப் போட்டு அந்த டியூஷன் அறையிலேயே படுத்தான்.

மறுநாள் காலை அவசரமாக எழுந்து குளித்து யூனிஃபார்ம் அணிந்து கொண்டு சாப்பாடு டிபன் எடுத்துக் கொண்டு கிளம்பினாள். காலை ஏழு மணிக்கே கிளாஸ் என்பதால்.

இன்றும் அவள்தான் முதலில் வந்திருந்தாள். கேட் அருகில் நின்று “சார்” என்று அழைத்தாள். அவளது குரல் கேட்டதும் யாரோ என்று திரும்பிப் படுத்தவன் மீண்டும் “சார்” என்ற அழைப்பில் எழுந்து அமர்ந்தான்.

“கேட் ஓபன்ல தான் இருக்கு, உள்ள வாங்க” என்று அழைத்தவன் வெற்று உடம்புடன் எழுந்து வந்து கதவைத் திறந்து தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்க்க, அவளது தரிசனம் தான் கிடைத்தது. மங்களகரமாக யூனிஃபார்ம் அணிந்து இரட்டை ஜடை போட்டு கையைப் பிசைந்து கொண்டே நின்றிருந்தாள்.

‘கன்ட்ரோல் இஷா கன்ட்ரோல்’ என்று தனக்குள் கூறியவன்,

“வாங்க உள்ள” என்று கூற அவனை சங்கடமாய் பார்த்தவள் நிமிராமலே, “நாய்… ப..பயமா இருக்கு சார்” என்று தயங்கியபடி கூற அப்போது தான் கேட் அருகிலேயே அமர்ந்து இருந்த நாயைப் பார்த்தான் சின்னச் சிரிப்புடன்.

“டைகர், கோ ஹோம்” என்று கூற அந்த நான்கடி கருப்பு நாய் குழந்தை போல அதனது கூண்டுக்குப் போகத் திரும்பியது. அவள் மெதுவாக உள்ளே வர அவனும் தலையணையை எடுத்து வைத்துவிட்டு வெளியே வர தனது வீட்டுக்குத் திரும்பிய நாய் அவனைக் கொஞ்ச ஓடிவர அது வந்த வேகத்தைப் பார்த்து பயந்தவள், “அய்யோ அம்மா..” என்றபடி ஓடிவர அவள் ஓடிவருவதைப் பார்த்த நாய் இன்னும் வேகமாக ஓடிவர,

“ஓடி வராதீங்க மெதுவா” என்று அவன் சொல்லுவதை அவள் எங்கே கவனித்தாள்.. அவளை நாய் கடித்து விடுமோ என எண்ணியவன் உடனே அவள் அருகில் செல்லப் போக நாய் அவள்மீது பாய பயத்தில் கத்தியபடி அவளோ அவன் மேல் சாய்ந்தாள்.

அவனது வெற்று மார்பில் தன் முகம் புதைத்து இறுக்கி அவனை அணைத்து கொள்ள அவளை அணைத்தபடியே அவனும் பின்னே விழுந்தான் அவளோடு.

அவள்மீது பாய்ந்த நாய் அவள் கத்திய கத்தில் தன் கூண்டுக்கு ஓடிவிட்டது வந்த வேகத்தில். பயத்தில் அவளது அணைப்பு இறுக அவளது முகமும், மூக்கும் வெற்று மார்பில் உரச அவனுக்கோ ஏதேதோ உணர்வுகள் வர உடனடியாக அவளை வலுக்கட்டாயமாக விலக்கினான்.

“நாய் போயிடுச்சு, எந்திரிங்க” என்று கூறி அவன் விலக்கவும் தான் அவளது நிலை உணர்ந்தவள் சட்டென அவனிடம் இருந்து விலகி எழுந்தாள். அவனது வெற்று மார்பில் மீண்டும் அவளது குங்குமம் ஒட்டி இருக்கச் சங்கடமாய் திரும்பி நின்று கொண்டாள். அவனும் சட்டெனக் கழற்றி வைத்திருந்த டீசர்ட்டை எடுத்து அணிந்து கொண்டான். 

அதற்குள் தெளிந்தவள், “சாரி சார்… நா..நாய்னா பயம்” என்று கூற,

“பரவாயில்லை. இனிமேல் கட்டிப் போடச் சொல்லிடுறேன்… நீங்க க்ளீன் பண்ணிட்டு வெயிட் பண்ணுங்க, நான் குளிச்சுட்டு வந்துடுறேன்” என்று விட்டுச் செல்ல தலையசைத்தவள் அவன் போனதை உறுதி படுத்திக் கொண்டு ரூமைக் க்ளீன் செய்து கொண்டு இருக்கும்போது அவளது நண்பர்கள் வந்து சேர்ந்தனர்.

அதோடு தனது மனதைப் படிப்பில் அவசரமாகத் திசை திருப்பினாள். 

உள்ளே குளிக்கச் சென்றவன் டீசர்ட்டை கழற்றும்போது தான் அவளது குங்குமம் நெஞ்சில் பூசி இருந்ததைக் கவனித்தவன் இதழில் புன்னகையோட, மனதைத் திசை திருப்பிக் குளித்து முடித்துக் கிளம்பி வந்தவன் தனது தமையனையும் எழுப்பி “நீயும் வாடா க்ளாஸ்க்கு” என்று கூற,

“அண்ணா எனக்குப் ப்ராக்டிஸ் இருக்குணா… நான்தான் நல்லாப் படிக்கிறேனே, நீங்க அவங்களுக்குச் சொல்லிக் கொடுங்க” என்றுவிட்டு நண்பர்களைப் பார்த்துப் புன்னகைத்து விட்டுக் கிளம்பி விட்டான்.

இஷான் வந்ததும் அனைவரும் வணக்கம் வைக்க வணக்கம் சொன்னவன் பாடம் நடத்த ஆரம்பித்து விட்டான். மிக எளிமையாகப் புரியும்படி விளக்கியவன், “ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?” எனக் கேட்க, “இல்ல சார்” என்று கூற,

“சந்தேகம் இருந்தா ஈவ்னிங் வந்து கேளுங்க” என்றவன் நேரம் ஆவதை உணர்ந்து அவர்களைக் கிளம்பச் சொல்ல அனைவரும் கிளம்பினர்.

ரேணுவும், கீர்த்தியும் அவனை நன்றாக சைட் அடிக்க ஆரம்பித்து விட்டனர். பாடத்தைவிட அவனை சைட் அடிக்கவே விரும்பினர்.

3 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் -5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *