Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 7

என் சுவாசம் உன் வாசமாய் – 7

அத்தியாயம் – 7

அன்றைய தினம் மூன்று பேருக்கும் மூன்று விதமான யோசனையோடு கழிந்தது.

தன் அன்னை கயலை வழிநடத்தியது பிடித்துப் போக தான் நினைத்தது சீக்கிரமே நிறைவேறும் என்று எண்ணியபடி இந்திரஜித் கிளம்பிச் சென்றான். கயலுக்கோ இஷானின் தாய் மீரா நடந்து கொண்ட விதம் ஏதோ அவருக்குத் தோன்றியது போல இருந்தது. ஆனால் அவர் கூறிய வார்த்தை அவளுக்குச் சரியெனப்பட அமைதியாக யோசித்தாள்.

‘பாவம் வயசானவங்க, ஒரு நாளைக்கு எத்தனை முறை நடக்கிறாங்க. அதான், நம்மள நம்பி உள்ளே அனுமதிச்சாங்க போல… ஆனா, ஏன் கீர்த்தி ரேணுவ உள்ளே விடல” என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.

இஷானுக்கோ அன்றைய தினம் அவனைச் சிரித்த முகத்துடன் வழியனுப்பியவள் முகமே மனத்தில் வந்து சென்றது. தன் அன்னை தன்னிடம் ரகசியமாகச் சொன்ன செய்தியே அவனுக்கு யோசனையாய் இருந்தது.

“பாருப்பா, என்னால இங்க அங்கனு ஓட முடியல. அந்தப் பொண்ணு செய்வா. இனி உனக்கு டீ கொடுக்குறது, லன்ச் பாக்ஸ் கொடுக்குறது வழியனுப்புறதுனு…” என்று கூற,

“ம்மா, படிக்கிற பொண்ண வேலை வாங்கச் சொல்றீங்களா?” என்று இவன் கோபமாய் கேட்க,

“டேய், நான் என்ன வெயிட்டத் தூக்கு, இல்ல சமைச்சுக் கொடுனா சொல்றேன். நாலு வாட்டி நடக்க முடியலடா, இங்கிருந்து அங்கனு… கூட வேலைக்குக் கிளம்பும்போது மங்களகரமான முகத்தைப் பார்த்துட்டுப் போய்ப் பாரு. மனசு அவ்வளவு லேசாப் போகும். வேலையும் சந்தோஷமாப் போகும்… அம்மாக்கு எல்லாம் தெரியும்டா. போ… போய் வேலையப் பாரு” என்று கூற ஈஈ என இளித்தவன் கிளம்பி இருந்தான்.

அன்று முதல் காலையில் இஷானுக்கு டீ கொடுத்து, டிபன் பேக் கொடுத்து, அவனது பொருளை எடுத்துக் கொடுத்து வழியனுப்புவதும், மாலையில் அவன் வந்ததும் அவனிடம் பேக் வாங்கி வைத்துவிட்டு அவன் உடை மாற்றி வருவதற்குள் அவனுக்கு டீயைக் கொடுத்து அன்றைய பாடத்திற்கான புத்தகத்தை எடுத்து வைப்பது என்பது வாடிக்கையானது.

இதில் பொறாமைபட்ட கீர்த்தியும் ரேணுவும் போட்ட ப்ளான் இதுதான்…

அன்றைய தினம் இஷான் வர லேட் ஆகும் எனக் கூறியிருந்தான். தண்டபாணியும் வெளியூர் சென்று இருந்ததால் அவனும் இல்லை. அதனால், மூன்று பெண்களையும் அமர்ந்து படித்துக் கொண்டு இருக்குமாறு இந்திராவிடம் சொல்ல அவனும் சொல்லிவிட்டுக் கோச்சிங் கிளாஸ் போய்விட, தங்களது ப்ளானை செயல்படுத்தத் துவங்கினர் தோழியர் இருவரும்.

இருவரும் சேர்ந்து கயலிடம் டவுட் கேட்க அதை அவள் சொல்லிக் கொடுக்க, “நீயே சூப்பரா சொல்லித் தர, இதுல ஏன் சார்கிட்ட டவுட்டுனு ஒட்டிகிட்டே சுத்துற… என்ன ஆட்டிடியூட் காட்டறியா?” என்று கேட்டாள் ரேணு.

“என்னடி பேசுறீங்க? நான் எதுக்கு ஆட்டிடியூட் காட்டனும்? அதுக்கு என்ன அவசியம் இருக்கு? எனக்கு டவுட் சார்கிட்டக் கேட்டு அப்புறம் புரிஞ்சதை தான் நீங்க கேட்டீங்க, அதனால உங்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். இதுல என்ன இருக்கு, எனக்குப் புரியல?” என்றாள் கயல்..

“நடிக்காதடி… எங்களுக்குத் தெரியும். அவரு என்னமோ கயல்விழி கயல்விழினு சொல்றதும், நீ ஏங்க வாங்க போங்கனு சொல்றதும், காலையில வழியனுப்புறதுல இருந்து வேலைய விட்டு வந்தா பண்ற சேவகம் வரை எதோ கட்டின பொண்டாட்டி மாதிரி செய்யுற. அப்போ எங்ககிட்ட ஆட்டிடியூட் தானே காட்டுற?” என்று கேட்க அவர்களின் பேச்சில் அதிர்ந்தவள்,

“ஏய்… என்னடி இப்படிப் பேசுறீங்க? நா..நான் அந்த மாதிரிலாம் எதுவும் நினைக்கலபா… அவரு நம்ம சார், சொல்லிக் கொடுக்குறவங்க… அவங்க அம்மா உடம்பு முடியலனு கேட்டாங்க, அதான்பா நான் செஞ்சேன். மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரிலாம் இல்ல… இத்தனை நாளா உங்ககூட இருக்கேனே, நான் எப்படினு உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டவளின் கண்கள் கலங்கி முகம் சிவந்து விட்டது.

“இதெல்லாம் நம்புற மாதிரி இல்ல கயல்… நீ எங்களவிடப் பெரியவ. அதனால, எங்களுக்குத் தெரியாத விஷயம்லாம் கத்து வெச்சுகிட்டு நீ அந்த சாரை இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ற… எல்லாம் வசதி தான் காரணம். அதான் இப்படி எல்லாம் செய்யுற? ஏன் உனக்கு வேற ஆளே கிடைக்க மாட்டாங்களா என்ன? இவரை எங்க ரெண்டு பேருல ஒருத்தருக்கு விட்டுக் கொடேன்” என்று கீர்த்தி கூற அவமானமாய் ஆனது அவளுக்கு. அதில் கண்கள் கலங்கத் தன் தோழிகளைப் பார்த்தவள்,

“நா..நான் உங்கள விடப் பெரியவ மாதிரி என்னைக்காச்சும் நடந்து இருக்கேனா? இல்ல பணம் இருக்குற மாதிரி உங்களைத் தரம் தாழ்த்தி நடத்தி இருக்கேனா? என்னோட பெஸ்ட் ப்ரண்ட்ஸ் தானே நீங்க? இப்படியா என்னைக் கேவலமா யோசிப்பீங்க?” என்றவள் தன் கண்களை அழுத்தித் துடைத்துக் கொண்டு,

“நான் இல்ல, நீங்க போய் செஞ்சாலும் சார் ஒரே மாதிரி தான் ரியாக்ட் பண்ணுவார். ஏன்னா அவர் சொல்லிக் கொடுக்குறவர்… வேணும்னா இன்னைக்கு நீங்களே அவருக்குச் செய்யுங்க்” என்றுவிட்டு அமைதியாக அமர்ந்து விட்டாள்.

அவளது கோபமான அதே நேரம் அதை வெளியே காட்டாமல் பேசியதைக் கண்டு பயந்த தோழிகள் இருவரும், ‘ச்சே நாம நம்ம ப்ரண்ட்டையே கேவலமா நினைச்சுட்டோமே’ என்று தங்களையே கேவலமாக எண்ணியவர்கள் உடனடியாக அவளிடம் மன்னிப்புக் கேட்டனர்.

“ஏ..சாரி பா.. நாங்க ஏதோ தப்பா லூசு மாதிரி நினைச்சுட்டு உன்னையும் தப்பாப் பேசிட்டோம். மன்னிச்சுக்கோ… எங்களுக்கு அவர் மேல ஒரு க்ரஷ். அதுல நீ அவரோட க்ளோஸா இருக்குறது கொஞ்சம் பொறாமையா ஆகிடுச்சு. அந்தக் கோபத்துல பேசிட்டோம், நீ சொன்ன அப்புறம்தான் எங்களுக்கே எங்க தப்பு புரியுது… மன்னிச்சுடுடி” என்று வருந்த அவர்களைப் பாவமாய் பார்த்தவள்,

‘ச்சே, இவங்கள விடப் பெரியவ எனக்கே மனசு தடுமாறுது. ஏதேதோ தோணுது. இவங்க சின்னப் பசங்க தானே, அதான் ஏதோ தப்பாப் பேசிட்டாங்க. அவங்க வயசு அப்படி என்ன செய்ய’ என்று யோசித்தவள் அவர்களைப் பார்த்துப் புன்னகைக்க,

“எங்க மேல கோபம் இல்லல்ல” என்று கேட்க,

“கோபம்லாம் இல்லபா, வருத்தம்தான்… இன்னைல இருந்து ஒரு வாரம் சார்க்கு எல்லாம் நீங்களே செய்யுங்க. அப்புறம் உங்களுக்கே புரியும்” என்றுவிட இருவரும்,

“ஏ… இல்லப்பா, நீயே செய். அப்புறம் நாங்க சந்தேகப்பட்டது மாதிரி ஆகிடும். வேணாம் கயல்” என்று கூற,

“இல்லப்பா, என்னை ஏன் செய்யச் சொன்னாங்க அந்த ஆன்ட்டினு உங்களுக்கும் புரியனும். அப்புறம் நாங்க அப்படி நடந்துக்கலனும் புரியனும்னா நீங்க இதைச் செய்யுங்க” என்றுவிட அவர்களுக்கு பயமாகிப் போனது. பின்னே இஷானின் அம்மா பற்றி அவர்களுக்கு தான் ஓரளவுக்குத் தெரியுமே…

அவர்கள் பீதியுடன் அமர்ந்து இருக்க, சிறிது நேரத்தில் இஷானின் வாகனம் வந்து ஹார்ன் ஒலி கேட்க இருவரும் அதிர்ந்து கயலைப் பார்க்க அவளோ புக்கில் புதைந்து இருந்தாள்.

“கயல், சார் வந்துட்டாருடி போடி” என்று கீர்த்தி கூற,

“நீயே போ கீர்த்தி… நான் ஏற்கனவே சொன்னதுதான்” என்றுவிட்டு அமைதியாகிவிட அவன் ஹார்னை மீண்டும் அழுத்தத் தோழியர் இருவரும் மாறி மாறிப் பார்க்க ரேணுவைக் கண் காட்டினாள். அவளும் சரியென ஓடிச் சென்று அவனிடம் பேக்கை வாங்கக் கை நீட்ட அவளை விசித்திரமாகப் பார்த்தான் அவன்.

“ச..சார் அது… கயலுக்குத் தலவலினு உட்கார்ந்து இருக்கா. அதான், நான் வந்தேன்” என்று கூற சரியென அவளிடம் பையைக் கொடுத்தவன், அவள் திரும்ப…

“லன்ச் பேக் ரேணுமா” என்று கூற மீண்டும் அவன் அருகில் வந்தவள் லன்ச் பேகை வாங்கிக் கொண்டு மீண்டும் திரும்ப,

“வண்டி சாவி” என்றான்.

‘அய்யோ கடவுளே’ என்றபடி அவள் மீண்டும் கை நீட்ட சாவியை அவள் கையில் தொடாதவாறு வைத்தான்.

மீண்டும் திரும்பியவள் திரும்ப அவனிடம் திரும்பி, “சாரி சார், வேற ஏதாவது இருக்கா?” என்று கேட்க,

“ம்ம்ம்… ஹெல்மெட்” என்றபடி கொடுத்தான்.

‘இன்னைக்கு நான் செத்தேன்… ஆண்டவா காப்பாத்து’ என்று மனதில் எண்ணியவள், எல்லாவற்றையும் டியூஷன் ரூமிற்குக் கொண்டு செல்ல அதற்குள் ஷூவைக் கழற்றியவன்,

அவளை விசித்திரமாக மீண்டும் பார்த்து, “ரேணு, லன்ச் பேக் அம்மாகிட்டக் கொடுத்துட்டு டீ வாங்கிட்டு வாங்க. அப்படியே தண்ணி” என்று கூறிவிட்டுத் தனது அறைக்குள் சென்று விட்டான்.

அவனிடம் மண்டையை ஆட்டியவள், லன்ச் பேக்கை இஷானின் தாயாரை அழைத்தவள் நீட்ட அதை வாங்கியவர் “ஏன்? கயல் என்ன ஆனா?” என்று கேட்க,

“அ..அவ.. அவளுக்கு மென்சஸ்மா, அதான் என்னைப் போகச் சொன்னா” என்று சமாளிக்க,

“ஓஓ” என்றவர் முறைத்தவாறே “இங்கேயே நில்லு” என்றுவிட்டு உள்ளே சென்றார்.

ரூமை விட்டு வெளியில் வர கதவைத் திறந்தவனுக்கு காதில் விழுந்த விஷயம் அதிர்வாய் இருந்தது. யோசனையில் ஆழ்ந்தவன் மீண்டும் ரூமிற்குச் சென்று ப்ரஷ் ஆகி வந்தான்.

(பின்னே அவனுக்குத்தான் அவளது மென்ஸஸ் போன வாரமே முடிந்தது தெரியுமே)

இஷான் தன் எதிரில் நிற்கும் பெண்களின் கண்ணைப் பார்த்துப் பேசுவான். ஏனெனில் அவர்களது பீரியட்ஸ் டைமை அவன் அவர்கள் முகத்தைப் பார்த்தே அறிந்து கொள்வான். ரேணு, கீர்த்தி, கயல் மூவரும் குங்குமம், சந்தனம் என வைத்திருப்பர். பீரியட்ஸ் டைமில் அது அவர்களது நெற்றியில் இருக்காது. அந்த நேரத்தில் அவர்கள் சோர்வாக இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு அதிக சிரமம் இல்லாமல் சொல்லிக் கொடுத்து சீக்கிரமே அனுப்பி விடுவான். தன் தாய் தனக்காக வேலையெல்லாம் செய்யச் சொன்னதற்கு முன்தினம்தான் அவள் குங்குமம் வைக்காமல் வந்தாளே… அதான் இந்தக் குழப்பம்.

கயலின் எண்ணம் அறியாதவனாய் அவனும் டியூஷன் உள்ளே வர அவன் வருவதற்குள் தன்விக் மற்றும் மீதம் இருவர் வந்துவிட,

உள்ளே வந்தவன் கயலை யோசனையாய் பார்த்தான். அவளோ நிமிராமலேயே அவனுக்கு வணக்கம் வைத்துவிட்டு மேலும் குனிந்து கொண்டாள். அவளது பக்கத்திலேயே அமர்ந்து அவளது முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தது டைகரும். மென்ஸஸ் டைம்ல அவனைப் பக்கத்தில் விடமாட்டாள் அவன் குரைத்துக் கொண்டே இருப்பான் என…

அதனால் ரேணு சொல்லவும் யோசனையாய் வந்தவன் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். டீயை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்த ரேணு அமரப் போக, 

“இன்னைக்கு என்ன சப்ஜெக்ட்னு நோட்ஸ் யார் எடுத்து வைப்பாங்க ரேணுகா?” என்று கேட்க,

“ஐயோ! அதை மறந்தேனே” என்று சன்னமாய் முனகியபடி அவள் நோட்ஸைத் தேட அவனது பொறுமை பறக்க ஆரம்பித்தது.

3 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *