Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய் – 8

என் சுவாசம் உன் வாசமாய் – 8

அத்தியாயம் – 8

இஷானுக்கு கயலின் செய்கைக்கான காரணம் எதுவும் புரியவில்லை. அவள் தான் வந்ததில் இருந்து தன்னைக் காணவுமில்லை. கூடவே இந்த ஒரு வாரமாக அவள் செய்த வேலைகளைத் தன் தோழிகளிடம் ஒப்படைத்து விட்டாள்.

அவர்களோ ஏதோ ஒரு காரணம் கூறி அவர்கள் செய்கின்றனர் வேலையை. இது எல்லாம் எதற்காக எனப் புரியாத குழப்பமும் வேலை செய்கிறேன் என ரேணுகா செய்யும் குளறுபடிகளும் சேர்ந்து அவனைக் கோபத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றது.

அதில் அவளும் அன்றைய பாடத்தின் குறிப்புகள் இருக்கும் நோட்ஸை எடுத்து வைக்கவில்லை என்ற எண்ணமும் சேரக் கத்தி விட்டான் அவளை.

“ஒண்ணு செஞ்சா கரெக்டா செய்யனும். இல்லையா அதை யாருமே செய்யாம விடணும். இப்படி நான் செய்யுறேன், கஷ்டமில்லன்னு சொல்லிட்டு ஏனோ தானோனு செய்யுறது தான் குருபக்தியா ரேணுகா? இந்த ஒரு வாரமா அவங்க செஞ்சதப் பார்த்து இருப்பீங்கல்ல, அப்போ கூடச் சரியா செய்யத் தெரியலையா உங்களுக்கு? தெரியலனா விட்டு இருக்கனும். நானும் செஞ்சேன்னு எல்லாம் நானே சொல்லிச் சொல்லிச் செய்யுறதுக்கு நானே செஞ்சுப்பேனே, நீங்க எதுக்கு?” என்று கத்த ரேணுவோ கண்கள் கலங்க எழுந்து நின்றவள்,

“ம..மன்னிச்சிடுங்க சார்… க..கயல்… உ..உடம்பு சரி இல்லனு” என்று இழுக்க அவளை அவன் முறைத்துப் பார்க்க அப்படியே நிறுத்தி விட்டாள். அவளது கைகள் வெளிப்படையாகவே நடுங்கியது. கீர்த்திக்கும், கயலுக்கும் உள்ளூற நடுங்க அவர்களும் எழுந்து நின்றனர். மற்ற அனைவரும் தலையும் புரியாமல், காலும் புரியாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டு இருக்க,

கயல் சட்டென அங்கிருந்த நோட்டுகளில் ஒரு நோட்டை உருவியவள் அதை ரேணுவிடம் திறந்து நீட்ட அதையும் இஷானையும் மாறி மாறிப் பார்த்தவள்,

“ம்ஹூம்” என்று கூற அவளது கையைப் பற்றி அதைத் திணித்தாள். பின் அவள் எங்கோ பார்க்க ஆரம்பிக்க,

ரேணுவோ நடுங்கியபடி அந்த நோட்டை அவனிடம் நீட்ட முறைத்துக் கொண்டே வாங்கியவன் அவர்களை உட்காரவே சொல்லவில்லை. மற்றவர்களும் அவர்களை ஒரு பார்வையும், இஷானை ஒரு பார்வையும் பார்த்தபடி பாடத்தில் கவனமானார்கள்.

மற்றவர்கள் இவர்கள் மூவரையும் பார்த்துக் கொண்டே கிளாஸை கவனிக்க இவர்கள் நின்று கொண்டே கிளாஸை கவனிக்க, முடிந்ததும் தன்விக் மூவரையும் பார்க்க அவர்களோ இஷானைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.

மற்றவர்கள் கிளம்பியதும் தன்விக் நிற்க அவனைப் பார்த்தவன் இவர்களைப் பார்த்து, “ரேணுகா, இனி எனக்கான வேலையை யார் செய்யுறதுனு கஷ்டம் யாருக்கும் வேணாம். நானே செஞ்சுக்குறேன். எனக்கு கஷ்டப்பட்டுப் பொய் சொல்லில்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. புரிஞ்சுதா?” என்று கோபமாய் கேட்க,

“ச..சார்… அது வந்து” என்று ரேணு ஆரம்பிக்க அவளது கையைப் பிடித்து அழுத்திய கீர்த்தி,

“ம..மன்னிச்சிடுங்க சார்.. கயல் உடம்பு முடியலனு சொன்னா, அதான் ரேணு செஞ்சா. நாளையில இருந்து கயலே எல்லாம் செய்வா சார்… இன்னைக்கு நடந்ததுக்கு சாரி சார்” என்று கூற, 

“வேணாம்மா, அவங்களுக்கு தான் செய்ய முடியலையே. அப்புறம் எதுக்கு அவங்களக் கஷ்டபடுத்தனும். நானே பார்த்துக்கறேன், நீங்க கிளம்புங்க” என்று கோபம் குறையாமல் கூற கீர்த்தியும், ரேணுவும் கயலைக் கெஞ்சல் பார்வை பார்த்து ‘ப்ளீஸ்டி சொல்லுடி சார்கிட்ட’ என்று கெஞ்ச,

“ச..சார்… தப்பாகிட்டு மன்னிச்சிடுங்க. நா..நான் கஷ்டம்லாம் படமாட்டேன். நானே இனி எல்லாம் செய்யறேன். ப்ளீஸ், கோச்சுக்காதீங்க” என்று கண்கள் கலங்கக் கேட்க அவளைப் பார்த்தவன் அவளது கலங்கிய கண்கள் ஏதோ செய்ய,

“கூட்டிட்டுக் கிளம்புங்க தன்விக்” என்று கூற அனைவரும் கிளம்ப கயல் மட்டும் அப்படியே நின்றாள்.

“கிளம்புங்க விழி… நாளைக்குப் பார்க்கலாம். சீக்கிரமே வாங்க” என்று கோபத்தை மறைத்துக் கூற நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் கண்கள் கலங்க, இதழ்கள் சிரிக்கச் சரியெனத் தலையை ஆட்டியவள் கிளம்பினாள்.

போகும் வழியெங்கும் கீர்த்தி மற்றும் ரேணுவின் புலம்பல்களே.

“ஏதோ பார்க்க அழகா இருக்காரேனு நம்பி அவருக்குப் போய் எல்லாம் செய்யனும்னு நினைச்சேன் பாரு, என்னைய அடிக்கனும்… எம்மா தாயே, அந்த துர்வாசருக்கு நீயே எல்லாம் செய்மா… எங்கள ஆளை விடு. இனி சத்தியமா உன்கிட்டக் கேட்க மாட்டோம், அவருக்குச் செய்யுறத எங்களுக்குக் கொடுக்கச் சொல்லி” என்று கூற அப்போது தான் நடந்த விஷயம் தன்விக்குப் புரிய அவனோ சிரித்துக் கொண்டான்.

“நீங்க தானடி என்ன என்னமோ பேசிக் கேட்டீங்க? அதனால தானே நீங்களே செய்யுங்கனு சொன்னேன். கடைசியில எனக்கு உடம்பு சரியில்லைனு சொல்றீங்க… இல்ல, நான் நல்லா தான் இருக்கேன்னு சொல்லி இருந்தா என்ன ஆகும்? எதையுமே பேசும் முன்ன யோசிக்க மாட்டீங்களா?” என்று கேட்க இருவரும் தலையைக் குனிந்தபடி,

“தப்பு தான்டி மன்னிச்சுக்க… இனி சத்தியமா நீ அந்தக் காரப்பொடி சாருக்குச் செய்யுறத நாங்க செய்யக் கேட்கவே மாட்டோம். அவரு கூடப் பரவாயில்லை. அந்த அம்மா… ஷ்ஷ்ஷப்ப்பாபா… முடியல. இப்பதான் தெரியுது, இந்திரா ஏன் எங்களைலாம் அவ்வளவா வீட்டுக்குக் கூப்பிட மாட்டேங்கிறான்னு” என்று கூற க்ளுக் எனச் சிரித்தான் தன்விக்.

“இதுக்கு தான் மூணு பேரும் இவ்வளவு அட்டகாசமா? இதை என்கிட்டக் கேட்டு இருந்தா நான் முதல்லயே சொல்லி உஷார் படுத்தி இருப்பேன்ல… லூசுங்களா… தேவையில்லாம அவளக் கஷ்டப்படுத்தி நீங்களும் சேர்ந்து ஃபனிஷ்மெண்ட் வாங்கினீங்களா?” என்று சிரித்தபடி கூற அவனை முறைத்த கயலும் சிரித்துவிட ரேணுவும், கீர்த்தியும் அவனை மொத்து மொத்தென மொத்தினர்.

“ஏன்டா எரும மாடே, இதெல்லாம் முதல்ல டியூஷன் சேரும்போதே சொல்லி இருந்தா இப்படி நாங்க அசிங்கப்பட வேண்டி வந்து இருக்காதுல” என்று கேட்டுக் கொண்டே அடிக்க,

“ஏன்டி எருமைங்களா, ஏதாவது என்கிட்டச் சொன்னாதானே எனக்கும் தெரியும்?” என்று கூற அன்றைய பொழுது சிரிப்பும் அடிதடியுமாய் போனது. மறுநாளில் இருந்து கயலே மீண்டும் காலையில் டீ வாங்கி வர அதற்குள் எழுந்து பாயை மடிக்க… அவள் வந்து டீயை வைத்துவிட்டுப் பாயை வாங்கக் கைநீட்ட,

“வேணாங்க விழி, நானே என் வேலையைப் பார்த்துக்கறேன்” என்றுவிட்டு அவனே வேலையைப் பார்க்கப் போக அவனை முறைத்தவள் அவனது கையிலிருந்த பாயைப் பிடுங்கிக் கொண்டு சென்றாள். அதிர்ச்சியாய் அவன் பார்க்க இருவரையும் யோசனையாய் பார்த்தான் இந்திரஜித்.

‘இதெல்லாம் என்ன? புதுப் பழக்கமா இருக்கே. இன்னைக்கே இது பத்திக் கயல்கிட்டப் பேசனும்’ என்று எண்ணியவன் கோச்சிங் கிளாஸிற்குக் கிளம்பி விட்டான். மீண்டும் கயலே அவனுக்குத் தேவையானதைச் செய்ய அவனும் மன நிறைவுடன் வேலைக்குச் சென்றான்.

இந்திரஜித்திற்கோ கயலிடம் தனியாகப் பேச சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. தயங்கித் தயங்கியே தள்ளிப் போட்டுக் கொண்டு இருந்தான். இஷான் இயற்கையிலேயே சற்று நிதானமானவன், இந்திரஜித்தோ துரு துருவென இருப்பான்.

இந்நிலையில் தான் அவர்களது படிப்பும் முடியும் நிலை வந்தது. தேர்வும் வர அனைவரும் நல்ல மதிப்பெண் எடுத்துத் தேர்வாகினர்.

அதன்பின் கயலை அவளது தந்தை என்ஜினீயரிங் படிப்பை படிக்கச் சொல்ல அவளோ நான் என் இஷ்டப்படிதான் எடுப்பேன் என்று கோபமாகச் சொல்லி விசாரிக்காமலே, business management with human resources management எடுத்து விட்டாள். அதிலும் chartered account வரும் என அறியாமல்.

அவள் அந்தக் கோர்ஸை படப்பை அருகில் இருந்த கல்லூரியிலேயே எடுக்க, அவளது தோழிகளான கீர்த்தியும், ரேணுவும் வேறு ஊரில் கல்லூரியில் சேர, அங்கேயே தங்கிப் படிக்க வேண்டிய சூழ்நிலை. அதனால் அவர்கள் அங்கேயே தங்கிவிட தன்விக்கும் இந்திரஜித்தும் போலீஸ் வேலைக்காக B.A(hons) எடுத்து அதில் சேர்ந்தனர் இருவரும். இதில் தனித்துச் சேர்ந்தது கயல் மட்டுமே.

அவளது தந்தையும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலே அவளது விருப்பப் பாடத்தைப் படிக்க அனுமதித்தார். அதுவும் சென்னை செல்லாமல் படப்பையிலேயே தொடர ஆரம்பித்தாள்.

படிப்பு சம்மந்தமாய் சில தமிழ் வார்த்தைகளின் விளக்கங்கள் அவளுக்குத் தேவைப்பட்டது. அதற்காக அவள் உதவி கேட்டு வந்து நின்றது மீண்டும் இஷானிடம் தான். 

இவர்களுக்குப் பரீட்சை முடியவும் கயலும், ரேணுவும், கீர்த்தியும் நான்கைந்து மாணவர்களை இஷானிடம் டியூஷன் சேர்த்து விட்டனர். காசும் கம்மி, நல்ல படிப்பு என்பதால் அந்த மாணவர்களின் பெற்றோர்களும் ஒத்துக் கொள்ள அவர்களுக்கு இப்போது பாடம் நடத்துகின்றனர் இஷானும், தண்டபாணியும். அதனால் இந்த வகையில் தனக்குச் சொல்லித் தருமாறு அவள் கேட்க,

தண்டபாணிக்கோ மகிழ்ச்சி. அவள் மீண்டும் இஷானிடம் வந்தது. அவளது மனம் அவனை நாடுகிறது என்பதைத் துல்லியமாக உணர்ந்திருந்தான் அவன். இவளைப் போன்ற அமைதியான, அழகான, பொறுப்புள்ள பெண் தன் நண்பனுக்குத் துணையாய் நின்றால் அவன் வாழ்க்கை அழகாய் மாறும் என எண்ணினான். 

அதனாலேயே இஷான் இல்லாத சமயம் கயல் உதவி கேட்டு இஷான் ஒத்துக் கொள்வானா மாட்டானா? என அறிந்து கொள்ள ஃபோன் செய்ய அதை எடுத்த தண்டபாணி அவளை இஷானின் அனுமதி இல்லாமலே வரச்சொல்லி விட்டான்.

இஷானின் எண்ணவோட்டம் அடிக்கடி கயலிடம் வந்து நிற்பதை அவனால் தடுக்கவே முடியவில்லை. அவனது ஒவ்வொரு செயலிலும் அவளே வந்து நினைவாகிப் போனாள். 

ஆனால், அந்த உணர்வு, அவனுக்கு ஏதோ ஒரு ஈர்ப்பு அவள்மேல் என்பதை மட்டுமே உணர்த்த காதல் என்ற உணர்வை அறியவில்லை. 

அதை அறியும் தருணம் அவனிடம் நிலைக்குமா நிம்மதி?

3 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய் – 8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *