Skip to content
Home » என் சுவாசம் உன் வாசமாய்-2

என் சுவாசம் உன் வாசமாய்-2

அத்தியாயம் – 2

அனைவரையும் இந்திரஜித் முறைக்க எல்லோரும் சொல்லாமல் கொள்ளாமல் இடத்தைக் காலி செய்தனர்.

தன் தாயை முறைத்தவன், “ஒண்ணு சொல் புத்தி இருக்கனும். இல்ல சுயபுத்தியாச்சும் இருக்கனும். ரெண்டும் இல்லனா இப்படித்தான், எல்லாத்தையும் தப்பு தப்பாப் பண்ணத் தோணும். அவன் சொல்லச் சொல்லக் கேட்காம அவன்கிட்ட மிரட்டி பிடிக்காத பொண்ணக் கட்டி வெச்சுட்டு இப்போ அவனே போயிட்டான்னா?

போகாம இன்னும் இருந்து உங்களால வாழும் போதே நரகத்துல வாழணுமா அவன்? அவனோட சேர்ந்து அவனைப் பொண்டாட்டினு பேர்ல பிடிச்ச சனி தொலைஞ்சதுனு நினைச்சுத் தலை முழுகிடுங்க… சொல்லப் போனா இப்போ அவனோட உரிமையான பொண்டாட்டியா இருக்கிறது உள்ளே படுத்து இருக்காளே, அவதான்… 

அவனோட பிள்ளையையும் சுமக்கிறா, இப்போ அவனோட தாலியையும் சுமக்கிறா… ஒழுங்கா அவளைக் கவனிச்சுக்குற வழியைப் பாருங்க. கண்ட நாயைலாம் நினைச்சு என் அண்ணனோட வாழ்க்கையைக் கேவலப் படுத்தாதீங்க… அப்புறம், நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்றபடி உள்ளே அவளைக் காணப் போக,

“இந்திரா… ஒரு நிமிஷம்டா” என்று மீரா அழுதபடி கூற,

நின்றவன் தலையை மட்டும் திருப்பித் தன் தாயை அழுத்தமாகப் பார்க்க, கண்களை அவசரமாய் துடைத்துக் கொண்டவர்,

“சுடுகாட்டுக்குப் போயிட்டு வந்தவங்க முகத்துல, புள்ளத்தாச்சிப் பிள்ளை முழிச்சா நல்லது இல்லனு சொல்லுவாங்க. குளிச்சிட்டுத் திருநீறு போட்டுட்டுப் போய் பாருயா, இப்போ வேணாம்” என்று கூற,

கையை இறுக்கி மூடியவன் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு,

“அவள முதல்ல சாப்பிட வைங்க, ரெண்டு நாள் ஆச்சாம்” என்று விட்டு, நேரே தனது அறைக்குச் செல்லாமல் தன் தமையனின் அறைக்குச் சென்றான் குளிக்க. பின்ன அவனோட ரூமில் தானே கயல் இருக்கிறாள்.

டாக்டர் நன்றாக உறங்க ஊசி போட்டதால் இன்னமும் உறங்கிக் கொண்டு இருந்தவள் தன் தலையில் யாரோ தடவுவது போல் உணர மெல்ல உறக்கத்தில் இருந்து விழித்தாள். அவளது தலையை ஆதுரமாகத் தடவியபடி அவள் அருகில் அமர்ந்து இருந்த மீராவின் கண்கள் தன் மகன் இஷானை எண்ணிக் கண்ணீர் சிந்தியபடி இருந்தது.

கண் விழித்து அவரைப் பார்த்தவளுக்கு அப்போது தான், தான் எங்கே இருக்கிறோம் என்பதே உறைக்க நடந்த அனைத்தும் நியாபகம் வர, அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தவளுக்கு வேகமாக மூச்சு வாங்கியது. கண்கள் கலங்கி அழத் துடித்தது.

அவளது நிலையை உணர்ந்த மீராவிற்கும் அழுகைதான் வந்தது. ஆதரவாய் அவளது தலையைக் கோத அவரைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். அவளைப் பரிதாபமாகப் பார்த்த தாயின் உள்ளம் பதறியது. இருந்தாலும் சற்று முன் தன் இளையமகன் தான் கண்டிப்பாய் சொல்லி இருக்கானே.

“அவ அழுதானு நீங்களும் அழுதீங்க, அவ்ளோதான்… அவ அழுதா அவளுக்கும் நல்லது இல்ல, குழந்தைக்கும் நல்லது இல்ல… பேசி முதல்ல சாப்பிட வைங்க. இல்ல, என்னோட வழியில நான் சாப்பிட வைக்க வேண்டி வரும், புரிஞ்சுதா?” என்றவன் அவரை உள்ளே அனுப்பிவிட்டு அங்கேயே ஃசோபாவில் அமர்ந்து கொண்டான்.

“அழாதேமா… இதெல்லாம் நடக்கனும்னு நம்ம தலையில எழுதி இருக்கு. அதான், நான் உன்னை வேணாம்னு சொல்லிய பாவமோ என்னமோ, என் மகன் இப்போ எனக்கு இல்ல… அவனோட குழந்தையைப் பெத்ததோட கடமை முடிஞ்சதுனு போயிடாதேமா… நீதான் அந்தக் குழந்தைக்கு அம்மாவா இருந்து வளர்க்கனும்மா. இந்த வயசுல நான் உயிரோட இருக்கேன். எனக்கு கொள்ளி போட வேண்டியவன் இல்லையே, என் ஆண்டவா!” என்று அவர் புலம்ப அவள் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

இதையெல்லாம் வெளியே இருந்தபடி கேட்டவன், ‘ஏன்டா இப்படி ஒரு சிக்கல உருவாக்கி வெச்சுட்டுப் போன?’ என்று தன் அண்ணனிடம் மனதோடு வாதாடியவன், இதற்கு மேல் விட்டால் தாங்காது எனக் கோபமாய் எண்ணியபடி கண்கள் சிவக்க வேகமாய் உள்ளே வந்தவனைக் கண்டு அரண்டு போனவளுக்கு அழுகையும் சேர்ந்தே நின்றது.

“உங்களுக்கு என்ன சொன்னேன், என்ன செஞ்சுட்டு இருக்கீங்கமா?” என்று அன்னையை அதட்ட, பயந்தவர் சாப்பாட்டுத் தட்டை அவளிடம் நீட்ட, ‘வேணாம்’ என்பதாய் அவள் தலையசைக்க மீராவோ,

“கொஞ்சமா சாப்பிடுமா… ரெண்டு நாளாச் சாப்பிடாம இருக்கியே, உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்று அவர் கூற,

“வேண்டாம்மா பசிக்கலை” என்று அவள் கூற,

“ஓஓ! இஷான்தான் செத்துட்டானே, சாப்பிடாம இருந்து அவன் பிள்ளையையும் கொன்னுடலாம்னு ப்ளானா? யாரைப் பழிவாங்க இந்தத் திட்டம்?” என்று கோபமாய் வார்த்தையை வீச அதில் அதிர்ந்தவள், அவனிடம் கோபமாகப் பேச வாயெடுக்கப் போக சட்டென அவளது வாயில் இட்லியைத் திணித்தான் இந்திரஜித். 

வாயில் இட்லியோடு அவனைக் கோபமாய் பார்க்க, “ம்ம்” என்று அவன் கூற அப்படியே அதை முழுங்கினாள். ஒவ்வொரு வாயாக அவன் ஊட்ட, “கொடுங்க நானே சாப்பிடுறேன்” என்றாள் கண்ணீரோடு.

“தட்டு காலி ஆகுற வரை நானேதான் ஊட்டுவேன்” என்று அடம் பிடித்து அவளுக்கு ஊட்டியவன் மனதை யாரோ உள்ளே கத்தியை விட்டு இடவலமாக திருகுவதைப் போல உணர்ந்தான்.

அவனையே ஆஆவெனப் பார்த்துக் கொண்டிருந்த மீராவைப் பார்த்தவன் மனம் மேலும் வேதனை அடைந்தது. கயலோ அவன் ஊட்டிய இட்லியை கண்ணீரின் உப்போடு உள்ளே விழுங்கினாள். அவள் சாப்பிட்டு முடித்ததும் மாத்திரைகளை நீட்டினான் மறுக்காமல் வாங்கியவள் அதை உண்ண தொண்டையைச் செருமியபடி பேசினான்.

“போனவன் திரும்பி வரப்போறது இல்ல. அண்ணினு வந்த பிசாசும் ஓடிப்போச்சு. இனி இந்தக் குழந்தை என் குழந்தை… ஏன்னா, என்கிட்டதான் பொறுப்பை என் அண்ணன் கொடுத்து இருக்கான். அவனுக்கு வாக்குக் கொடுக்கலைனாலும் இது என் குழந்தைதான். அதை என்னோட குழந்தையா தான் வளர்க்கனும்… வளரனும்… அதனால நல்ல படியா குழந்தையைப் பெத்துக் கொடுக்கிற வரை நீ என் பொறுப்பு… குழந்தையைக் கொடுத்துட்டு நீ உன் வாழ்க்கையைப் பார்க்கப் போகலாம். அதுக்கு எங்க பக்கமிருந்து எந்தத் தடையும் வராது” என்று கூற,

“என்னப்பா இப்படிப் பேசுற? அந்தப் பொண்ண ரொம்பக் காயப்படுத்துற? நான் சொல்றதைக் கேளுடா” என்று கூற,

“போதும், உங்க பேச்சைக் கேட்டதெல்லாம்… அப்படிக் கேட்டவங்கள்ல இஷான் உயிரோட இல்ல, அடுத்து நான் தானா?” என்று கேட்க,

“இந்திரா…” என்று அவர் கோபமாய் கத்த,

“ஆமாம்மா, போதும் பட்டதுலாம்… நீங்க, நான், என் பிள்ள… இப்படியே இருந்துப்போம்” என்றான் அவளைத் துரத்தும் நோக்கிலேயே.

அதில் துடித்துப் போனவள்,

“இது என்னோட குழந்தை, நான் யார் கிட்டயும் விட்டுக் கொடுத்துட்டுப் போக மாட்டேன்.” என்று அவள் கண்களைத் துடைத்தபடி இறுக்கமாகக் கூறினாள்.

“என்ன? உன்னோட குழந்தையா? டாக்குமெண்ட்ஸ் காட்டவா இது உன் குழந்தை இல்ல, என் குழந்தைனு” என்று கேட்க முதலில் அதிர்ந்தவள் பின் ஒரு முடிவோடு,

“Agreement படி இந்தக் குழந்தை அம்மாகிட்டக் கொடுக்கனும். இல்ல அ..அப்பாகிட்டக் கொடுக்கனும். ரெண்டு பேரும் இல்லாத பட்சத்தில் இந்தக் குழந்தையோட முழு அதிகாரமும் எனக்குத்தான் வரும்னு சைன் பண்ணி இருக்காங்க. நீங்க வேணா டாக்குமெண்ட்ஸ்லாம் படிச்சுப் பாருங்க. நான் கிளம்புறேன்” என்று கூறி விட்டு வெளியே செல்லத் திரும்ப, அவளது கையைப் பிடித்துத் தடுத்தவன்,

“என்ன? சீன் கிரியேட் பண்றியா? தொலைச்சிடுவேன். இந்தா, இந்த டாக்குமெண்ட்ஸ் நீ படிச்சியா ஒழுங்கா… என் அண்ணனோ அண்ணியோ இல்லாத பட்சத்தில் குழந்தை என் குழந்தையாதான் வளரணும்னு என் அண்ணன் எழுதிய உயில் பத்திரம். படிச்சுப் பார்த்துட்டு அப்புறம் இங்கிருந்து போறதைப் பத்தி யோசி” என்று அவன் கூறிவிட்டு அவளது கையை உதறிவிட்டு உள்ளே சென்றான்.

ஆனால், அதில் தாயாக அவள்தான் இருக்க வேண்டும் என்ற வாக்கியத்தை அவளிடம் கூறாமல் விட்டு விட்டான்.

அவனுக்குத் தெரியும், அவள் அதை வாசிக்க மாட்டாள் என்று.

அதிர்ந்து நின்றவள் கண்ணில் தாரை தாரையாக நீர் வந்தது.

‘குழந்தையைச் சுமந்தவளுக்கு அதுமேல எந்த உரிமையையும் கொடுக்கலையா நீங்க? என்ன இஷான் இது? இன்னும் நான் எவ்ளோ படணும்?’ என்று மனதோடு இஷானிடம் பேசியவள்,

அந்தப் பத்திரத்தைப் பார்த்தவள் அதைப் படிக்க மனமில்லாமல் மீராவைப் பார்க்க, அவரோ பாவமாய் அவளைப் பார்க்க கண்ணில் கண்ணீரோடு அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலிக்கும் அர்த்தமில்லை. வயிற்றில் சுமக்கும் பிள்ளைக்கும் உரிமையில்லை. பிறகு ஏன் இங்கு இருக்க வேண்டும் என்று எண்ணியவள் மனசாட்சி அவளைக் குற்றம் சாட்டியது.

‘நீ வாடகைத்தாய் தான், உன் வேலையை முடிச்சுட்டுப் போ’ என்று.

காதலித்தவன் கருவை வாடகைத் தாயாய் சுமக்க வைத்தது விதி.

4 thoughts on “என் சுவாசம் உன் வாசமாய்-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *