Skip to content
Home » என் நேச அதிபதியே -40

என் நேச அதிபதியே -40

அத்தியாயம்-40

   விமானத்தில் ஏறியவன் இறுக்கமாய் திரிந்தான். சிற்பிகா ஆர்யனிடம் பேசுவதை கூட தவிர்த்து வந்தாள்.

   தன் காலில் நகப்பூச அலங்கரித்தவன் கைகளுக்கும் அலங்கரிப்பதாக கூறியிருக்க, கை விரல்கள் நெய்ல் ரிமூவரால் வழித்து விட்டதை கவலையாக ஏறிட்டாள்.

   நேசமும் பாசமும் எதிர்பார்த்திடாமல் வாழ வேண்டுமென்ற எண்ணத்தால் மணவாழ்வில் அடியெடுத்து வைத்தவளுக்கு, நேசத்தை அளவில்லாமல் கொடுத்தவனிடம் சர்வேஷால் மாற்றம் தென்பட, நேசங்களை தேடினாள்‌. முழுமையாக கிடைக்காத அளவிற்கு பாதியில் வர, தன்னை தானே உறவுக்களுக்காய் தேற்றிக் கொண்டாள். அவள் ஆர்யனை மட்டும் நம்பி அடியெடுத்து வைக்கவில்லை. அந்த வீட்டின் எல்லோரின் அன்பும் நல்வாழ்வும் விரும்புபவளாக இருப்பவள் ஆயிற்றே.

   திருநிறையகம் வந்து சேரவும், ராயல் ஆர்யனை காணாத பாசத்தை எம்பி குதித்து வரவேற்க, ராயலுக்கு எப்பொழுதும் அளிக்கும் சிறு வருடலும், முத்தமும் தராமல் விறுவிறுவென ஹாலுக்கு வந்து தம்பியை தேடினான்.

   மின்மினி தான் துளிரோடு வீற்றிருந்தாள். ஆர்யன் வந்ததும் எழுந்து, தங்களென்று ஒதுக்கப்பட்ட அறைப்பக்கம் பார்த்தாள். அக்கா தமிழ் தலை தென்படுகின்றதா என. அவள் அறைக்குள் அடைக்காத்திருந்தாள் எனலாம்.

   சிற்பிகாவோ தன்னை போலவே அன்பை நாடி வந்த ராயலிடம், மண்டியிட்டு பரிவை காட்டினாள்‌. எஜமானனிடம் எதிர்பார்த்த வருடல் எஜமானி தரவும் சிற்பிகாவிடம் விசுவாசத்தை காட்டியது. அதனிடம் முறுவல் தந்து, எழுந்து வீட்டுக்குள் வந்தாள்.

  சிற்பிகா ஹாலுக்குள் வர, மின்மினி தன் அக்காவை தேடி அறைக்கு சென்றிருந்தாள்.
   துளிரோ ‘என்னாச்சு அண்ணா இப்பவே வந்துட்டார்?’ என அதிர்ந்தாள்.

   ஆதிராவும் “என்னடா பேப்பர் பார்த்து உடனே கிளம்புன்னு சொல்லிட்டானா? எதுலயும் அவங்க ஐயாவை உரிச்சு வச்சிருக்கான்.

   பிரச்சனை என்றால் அடுத்த நிமிஷம் பிளைட்டு ஏறி வந்துடணும்னு.” என்று மருமகள் சிற்பிகாவை வரவேற்றார்.‌ பையன் தன் இளையவனிடம் பேச நுழைந்ததை அறிந்து மருமகளை அமர கூறினார்.

     “துளிர் உங்கப்பா மில்லுக்கு போயிருந்தார். போன்‌ போட்டு அண்ணா வந்ததை சொல்லு” என்று ஏவினார்.

  அவளும் தலையாட்டி போனை எடுத்தாள்.

   அறைக்குள் அண்ணன் தம்பி இருவரும் பேசிக்கொண்டார்கள்.

    “படிச்சி படிச்சி சொன்னேன். அவளோட டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணு, எங்கயாவது எவனாவது பிரச்சனையை கொளுத்தி போடுவாங்கன்னு சொன்னேன். கேட்டியா டா.” என்று அதட்டினான்‌ ஆர்யன்.

  அண்ணன் வந்து அதட்டுவாரென அறிந்தவனே சர்வேஷ். ஆனாலும் தன் தேன்நிலவு கூட தவிர்த்து வருவாரென நினைக்கவில்லை.

     “இல்லைன்னா அந்த பொண்ணு உதவி கேட்டுச்சு” என்று பதில் தந்தான் சர்வேஷ்.

   “உதவின்னு நின்றதும் வள்ளல் என்ன வேண்ணா வரம் கேளுனு நின்று, உன் வாழ்க்கையை அடமானம் வைச்சிட்டியோ?” என்று கடிந்தார்.

    அண்ணனுக்கு கோபம் வந்தால் விளைவு இப்படி தான் வார்த்தை வருமென்று “அதில்லை அண்ணா” என்று‌ விளக்க ஆரம்பிக்க, “நான் தான் அவரை வெளியே கூட்டிட்டு போக ஹெல்ப் கேட்டேன். கார்லயே பழகி போரடிச்சிடுச்சு‌. ஒரு சேஞ்சுக்கு பைக்ல கூட்டிட்டு போக ஆசைப்பட்டு  கேட்டேன். இப்படி பத்திரிக்கைகாரன் போட்டோ எடுப்பான்னு எங்களுக்கு தெரியாது‌. அவரை எதுக்கு திட்டறகங்க” என்று தமிழ் உதவிக்கு வந்திருந்தாள்.

  மின்மினி புண்ணியம் அழைத்து வந்திருப்பது புரிய, ”ஏய் உன் போதைக்கு என் தம்பி ஊறுகாய் இல்லை. நீ பிளான் பண்ணி தான் இங்க வந்த? உனக்கு பைக்ல போக ஆசையென்னா உங்கண்ணா கூட போ. ப்ருத்விராஜன் இருக்கான்ல. என் தம்பி எதுக்கு?” என்று கர்ஜித்தான்.

     “இங்க பாருங்க நீங்க என்னை இன்சல் பண்ணற மாதிரி பேசறிங்க. ஒரு பிரெண்ட்லி டிரைவிங் போறது தப்பா? உங்க தம்பி வாழ்க்கை பாழாகாது” என்று தமிழும் வீம்புடன் நின்றாள்.

   “நீ பேசாத, உன் கண்ணுல விஷமம் தான் இருக்கு. காரியம் இல்லாம நீ இங்க காலடி வைக்க மாட்ட. எனக்கு தெரியாதா?” என்று ஆர்யன் சண்டையிடவும், ஆதிராவோ, “ஆர்யன் அப்பாவோட நண்பர் பொண்ணு பார்த்து பேசு. வார்த்தையை விடாத. நம்மளை நம்பி இந்த வீட்டுக்கு அனுப்பியிருக்காங்க” என்று அறிவுறுத்தவும், ஆர்யனோ இமை மூடி தன்னை கட்டுப்படுத்தி, “நம்மளை பிரச்சனையில தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்க வந்தவளுக்கு நாம கரிசணையா இருக்கணுமா?” என்று வாதிட்டான்.

   “உங்க ஐயா வந்ததும் இதை கேளு” என்றதும் ஆர்யன் நிதானமாய் மூச்சை இழுத்து விட்டு, அன்னையிடம் திரும்பினான்.

  “அம்மா இது எல்லா விஷயம் போல கிடையாது. சர்வேஷோட வாழ்க்கை பிரச்சினை. முதலமைச்சர் ஒன்றுமாக இவளை சும்மா இங்க அனுப்பி இருக்க மாட்டார்.
    அதே மாதிரி இவளும் அவங்க அப்பா சொல்பேச்ச கேட்டு இங்க வர்ற ஆளும் கிடையாது. அவரும் அனுப்பிச்சி இருக்காரு, இவளும் வந்திருக்கா, அப்படின்னா, இவங்க பிளான் பண்ணி தான் வந்து இருக்காங்க.

என் தம்பி வாழ்க்கையை ஏதாவது செய்யணும்னு நினைச்சிருந்து காரணகாரியத்தோட இவ இங்க வந்திருந்தா அதோட விளைவு ரொம்ப மோசமா இருக்கும்.” என்று கூறினான்.

   “அம்மா அப்பாவுக்கு போன் பண்ணிட்டேன். அப்பா வந்துட்டு இருக்காராம். அதோட இவங்க அப்பாவும் இங்க தான் வர்றாராம். ராணியாச்சிகிட்ட அப்பா சமைக்க  சொல்லியிருக்கார்.” என்றதும் ஆர்யனுக்கு சினம் துளிர்த்தது.

  “பார்த்திங்களா அம்மா. முதலமைச்சருக்கு வேற வேலையில்லையா? தேர்தல் வச்சிட்டு இங்க எதுக்கு வர்றார். இது சரியில்லைம்மா.” என்று தமிழை கிளம்ப கூறினான்.

   ஆதிராவுக்கு தலைவலி வராத குறை. ஆர்யனுக்கும் அரவிந்திற்கும் முதலிலிருந்தே ஆகாது.

   என்ன மாப்பிள்ளை என்ற இந்த ஒரு வார்த்தை தான் ஆர்யனை பார்த்ததிலிருந்து அரவிந்த் உதிர்ப்பது. அந்த வார்த்தைக்கே ஆர்யனுக்கு அரவிந்தை பிடிக்காது.

   “டேய் அவர் வேற காரணத்துக்காக கூட வரலாம்‌” என்று ஆதிரா இப்படியா பொண் எதிர்லயே அப்பாவை பேசுவானென்று ஆர்யனை கட்டுப்படுத்துவதிலேயே இருந்தார் அன்னையாக.

  தமிழ் சும்மா இல்லாமல், “இல்லை ஆன்ட்டி அப்பா சர்வேஷுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தான் ஆசைப்படறார்.” என்றதும் சர்வேஷோ ‘சும்மாயிருக்க மாட்டா. இப்ப அண்ணன் விடாது’ என்று நின்றான்.

   “கேட்டிங்களா அம்மா. ஏய் உங்க அப்பா இங்க வர்றதுக்குள்ள நீயா இங்கிருந்து கிளம்பிடு‌. என் தம்பிக்கு நீ மனைவியாக முடியாது” என்று விரட்ட, அவ்விடம் விட்டு நகராமல் வீம்புடன் நின்றாள்.

   ஒரடியும் நகராமல் இருந்தவளை கைப்பற்றி இழுத்து வாசல்வரை வந்தான் ஆர்யன்.

    வீட்டுக்குளிருந்து வாசல் வரும் வரை, அவளது கையை பிடித்து வந்தவனுக்கு அவளது நாடித்துடிப்பு கர்ப்பவதியாக காட்டி கொடுத்தது.

   ஆர்யனோ கையை விடாமல் தமிழை திரும்பி பார்த்தான்.

   “ப்ளீஸ்… கையை விடுங்க வலிக்குது. சர்வேஷ் பார்த்திட்டு இருக்கியே” என்று உரிமையாக சர்வேஷ் கையை பற்றவும் ஆர்யன் தமிழின் கையை விடுவித்து, மருத்துவனாக அவளை  ஆராய்ந்தான்.

   முகம் தேஜஸோடு, அதே கணம் மசக்கை சோர்வோடும் கலந்திருந்தது. ஆர்யன் பார்வை அவளது வயிற்றில் நிலைக்க, சட்டென ஆர்யனின் பார்வை கண்டு வயிற்றை மூடினாள்.

   தமிழிற்கு இந்நாள் வரை யாரின் பார்வையும் வயிற்றில் தழைக்கவில்லை. ஆர்யன் கைப்பிடித்து சென்றவன், சட்டென நிதானமடைந்து பார்வை வயிற்றில் தழைத்திடவும், தமிழ் பதற, ஆர்யனோ அதிர்ச்சி அடைந்து தம்பியை ஏறிட்டான்.

  அடுத்த கணமே தம்பி இவ்வாறு செய்பவன் அல்ல என்று புத்தி உரைத்தது.

  ஆனாலும் தம்பியை எதற்கு பார்த்து தொலைக்கின்றாள்? அவனும் அவளுக்காக பேசுகின்றானே என்று தம்பியை பார்க்க, ஆர்யனோ முடிவெடுக்க இயலாமல் நின்றான்.

இதற்கிடையே நிபுணனும் வந்து சேர, “என்னங்கயா பொம்பள பிள்ளையை வெளியே நிறுத்தி அழவைச்சு, ம்ம்ம்… உள்ளாற கூட்டிட்டு போங்க” என்று வரவும், ஆர்யன் பிடி இளகியிருக்க, தமிழ் வீட்டுக்குள் செல்லும் கணம் சர்வேஷை தவிப்பாய் பார்த்தாள்.

சர்வேஷோ அவனுமே உள்ளப்போ என்பதாக நின்றான்.

 ஆர்யனுக்கு தம்பி வாழ்வில் என்னவோ பிரச்சனை சூழ்வது புரிந்திட, தந்தை வார்த்தையால் பின் தொடர்ந்தான். 

 வீட்டில் உள்ளவர்கள் சூழ்ந்திருக்க, ஆர்யன் பார்வை தமிழையும், அவள் வயிற்றையும் பார்த்து தம்பியை அழைத்து அறைக்கு தள்ளி சென்றான். 

“அண்ணா” என்று சர்வேஷ் தயங்கினான்.‌ “எதுக்கு அவளுக்கு உதவற? அவ நிலைமை தெரியுமா?” என்று கேட்டதும், சர்வேஷ் திடுக்கிட, “டேய் நான் டாக்டர். அவ கையை பிடிக்கறப்பவே தெரிந்தது. ஷீ இஸ் பிரகனென்ட். யார் டா காரணம்? நீ ஏன்டா உதவிட்டு இருக்க?” என்று சட்டை பிடிக்க, நிபுணன் வரவும் ஆர்யன் தம்பியை விடுவித்தான்.

“அண்ணன் நீங்க தம்பியை கவனிச்சிப்பிங்கன்னு பார்த்தா, நீங்களே தம்பி மேல் கை வைக்கறிங்க. ஆஹ்… பொண்ணை பெத்தவன் வரட்டும். என்னனு விசாரிக்கலாம். அதை விட்டு தம்பியை கேட்டா?” என்று நிபுணன் ஆர்யனிடம் கூறினார்.‌

ஆர்யனோ, “ஐயா, அவர் இருக்கற அரசியல் பலத்துக்கு இங்க வந்து தமிழை கட்டிக் கொடுக்க மாட்டார். அப்படி கட்டிக்கொடுத்தா சர்வேஷை நாம் அவங்களுக்கு மொத்தமா தாரை வார்க்கறதா போயிடும்.

அதோட தமிழுக்கு இந்த வீட்டு ஆட்களிடம் பழகவே தெரியாது‌. இதுல குடும்பத்துல ஒருத்தியா எப்படி?

உங்களை அரசியல்ல நிறுத்தறது, இந்த ஊர்ல உங்களுக்கான மதிப்பை தெரிந்து வச்சி ஏத்திவிடறார்.

ரீசண்டா அவர் கட்சில ஏற்பட்ட சறுக்கல் அதனால் அவர் கட்சி சார்பாக இந்த தொகுதியில யார் நின்றாலும் தோல்வினு தெரிந்து உங்களை நிறுத்தறார். அவருக்கு சரிசமமாக அரசியல் பின்புலம் அமைச்சி பொண்ணு கொடுத்து தான் உங்க நட்பை நிலைநாட்டணுமா?

இது சரியில்லையா.” என்றான். சர்வேஷை பார்த்து, இதுல கன்சீவா இருக்கா’ என்று முனங்கினான்.

நிபுணனோ “ஏன் ஐயா. என் இரத்தத்துல உதிச்ச உங்களுக்கே இது தோணுதே. எனக்கு புரியாதா.

அரவிந்த் வரட்டும் பேசுவோம். எதுனாலும் நமக்கு எங்க மோதணுமோ அங்க பேசணும். பொம்பள பிள்ளையை வதைக்க கூடாது. 

எந்த பிரச்சனையானாலும் நீங்க பேசி தெளிந்துக்கோங்க. கோச்சகட்டு சண்டை பிடிக்க கூடாது.

இந்த திருநிறையகத்துல வாரிசுங்க அடிச்சிக்கவோ, வருத்தப்பட்டுக்கவோ கூடாது.” என்றவன் இமை மூடி ‘தம்பியிடம் பதமா பேசுங்க” என்று அகன்றார்.

நிபுணன் தலை மறையவும், ஆர்யன் சர்வேஷிடம் “அவ கர்ப்பமா இருக்கா தெரியுமா தெரியாதா?” என்றான்.

“தெரியும் அண்ணா. நேத்து தான் சொன்னா” என்றான் சர்வேஷ்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
  

33 thoughts on “என் நேச அதிபதியே -40”

 1. Avatar

  Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 endha tamizh pregnant ah🙄 edhula sarvesh a en ezhuthu Vida parkudhu🧐

 2. Avatar

  அட பாவி தமிழு
  அம்மாக்கு தப்பாத புள்ளையா இருக்கே.
  சர்வேசா நீ நல்ல பையன் நிபுணரின் திரு நிறையக வாரிசு.
  இந்த தமிழ் தான் தில்லாலங்கடி வேலை பண்ணுறா.
  Aryan குடும்பத்துக்கு ஆகா துடிக்கிறார்
  என்ன ஆகும் waiting for next UD.
  Sema interesting.

 3. Avatar

  Indha twist ahbedhirpaakala ka….Vera edho onnu iruku nu nenaichen ana ipadi irukum nu nenaikala …..thamizh pregnant ah iruka sarvesh help ah yen iva kekura nu tan purila….ava pregnant ku yaar Karanam nu therila….perusa edho iruku nu mattum theriyudhu…. super super ka…. waiting for next ud

 4. Kalidevi

  Story interesting ah poguthu intha tamil plan panni vantha mariye paniduchi paru ithu pregnant ah irukuthu athula sarvesh ethuku kothu vidura therila apavi avan sonnathum help panran paru waiting for next ud sisy sikram

 5. Karthika R

  Sema sema aaryan pesurathu sema 👌🏻👌🏻👌🏻 nibunan nice move👌🏻👌🏻 adei sarvesh visayam therinje antha விஷ பாட்டில் ku ethuku help panra🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

 6. Avatar

  ரொம்பரொம்பசூப்பரா போகுது கதை தமிழின் ஆட்டம் வேற மாதிரிபோகுது சர்வேஷ்நல்லவனா கெட்டவனாசகி மா சீக்கிரம் அடுத்த பதிவுபோடுங்கரொம்ப எதிர்பார்க்க வைக்கிறிங்கமா வாழ்த்துகள்

 7. CRVS 2797

  அடப்பாவி சர்வேஷ் ! அப்ப நீ தான் காரணமா…? இந்த பூனையும் பால் குடிக்குமாங்கற ரேஞ்சுல இருந்துக்கிட்டு என்ன வேலையெல்லாம் பண்ணி இருக்கிற…? இதுல தங்கச்சிக்கு வேற காவக்காரன் வேலை பார்க்குற… அநியாயம் டா சாமி !
  😜😜😜

 8. Avatar

  Wow.suler. sema twist. Sirpu pavam. Honeymoon missed. Ariyan too good. Sarvesh something you know. Excellent narration sis. Eagerly waiting for next episode sis. Pls give daily updates sis.

 9. Avatar

  Wow.super. sema twist. Sirpu pavam. Honeymoon missed. Ariyan too good. Sarvesh something you know. Excellent narration sis. Eagerly waiting for next episode sis. Pls give daily updates sis.

 10. Avatar

  இந்த சிடுமூஞ்சி சர்வேஷ் நல்லா தானே இருந்தான் அவ கூட போயிட்டு வந்த ஒரு மணி நேரத்துக்குள்ள அப்படி என்ன மந்திரிச்சு விட்டாலோ தெரியல அவ சொல்ற எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போடுறான் .
  இதுல அந்த ஃப்ராட பெத்த அப்பங்காரன் வேற வரானாம் அவன் வந்து என்ன செய்யப் போறானோ

 11. Avatar

  Adei ennada nadakkudhu Inga adiye thamizh unakku vilayada sarvesh lifedhan kidaichudha👊👊👊👊👊👊👊👊dei loosu sarvesh unna Aaryan edhukku thatti vaikkuranu ippodhan puriyudhu ava enna sonnalum thalaiyatti vappiya🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄 aiyyayo enna nadakka pogudho theriyaliye😳😳😳😳😳😳😳

 12. Avatar

  அட கடவுளே…. இந்த சர்வேஷ் ஆர்யன் சொன்னது போல புதைகுழியில் தான் மாட்டி கொண்டு இருக்கிறான் போலயே…. இந்த தமிழ் வேறு கர்ப்பம் ஆக இருக்கிறாள்…. இதற்கு யார் காரணம்…. இனி என்ன ஆகுமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *