Skip to content
Home » என் நேச அதிபதியே -53

என் நேச அதிபதியே -53

அத்தியாயம்-53

   தேர்தல் பிரச்சாரம் எல்லாம் தீயாய் பரவியது. சிற்பிகாவை வைத்தும் தேர்தல் பிரச்சாரம் நடந்தது.

   நாட்கள் அதற்குண்டான பணியில் கரைய, நிபுணன் தம்பியாக பாவிக்கும் பரதன் தான் “கண்ணு நீ வணக்கம் வச்சி நில்லு மீதி நான் பேசிக்கறேன்” என்று மைக்கில் ஏற்கனவே பேசியதை தட்டி விட்டு பாதுகாப்பிற்கு வந்தார்.

    ஒரு ஊரில் நான்கு பகுதிகள் இருக்கும்‌. அதில் முதலில் பரதன் இருக்கும் பகுதிக்கு தான் அழைத்து சென்றது.
  ஏற்கனவே பரதன் மூலமாக நிபுணரின் புகழ் களைகட்டும் இடமென்பதால், சுயேட்சையாக நிபுணன் மருமகள் நிற்பதாக ஒலிப்பெருக்கி சத்தம் வரவும் ஆளாளுக்கு எட்டி பார்த்து சூழ்ந்தார்கள்.

   சிலரோ ஏங்கண்ணு நான் தான் நிற்கிறேன் இந்த சின்னத்தில் வோட் போடுங்கன்னு பரதனிடம் சொன்னா போதாதா? நீயேன் கண்ணு வெயில்ல உலாத்துற” என்றனர் வயதில் மூத்தோர்கள்.

  எல்லோரும் அன்பானவர்களாக இருக்க முடியுமா? அதனால் தேர்ந்தெடுக்கும் பணியை பொருத்து பணிந்து வெளிவந்து கேட்க வேண்டுமே.

   பரதன் வீட்டில் நீர்மோர் குடித்து வணக்கம் வைத்து சில இடத்தில் பிரச்சாரம் முடித்து சென்றாள்.

  அதற்கே வேர்த்து விறுவிறுத்து போனாள்.

    “என்னம்மா ஊர்ஜனம் எப்படி?” என்று மாமனார் நிபுணன் கேட்க.

   “ஒரு குறையும் இல்லைங்க ஐயா. பெரியவங்க செய்யற பாவபுண்ணியம் பிள்ளைங்களை சேரும்னு சொல்வாங்க. நீங்க செய்த புண்ணியம் எங்க போனாலும் எங்களை வாழ வைக்கும்” என்று கூறவும் சின்ன சிரிப்பை உதிர்த்தார் நிபுணன்.

    நன்றாக தான் உள்ளதோ என்று தெம்படைந்தாள்.
   அடுத்த இரண்டாவது நாளில் பரதன் வீட்டில் மோர் பருகிய புகைப்படம் உள்ளூர் செய்தி தாளில் வெளிவந்திருந்தது.

   தொகுதி பெயரை போட்டு புதுகேன்டிட்டேடிற்கு பலத்த ஆதரவு என்று சிற்பிகாவிற்கு பக்கத்து பக்கம் புகழ்மாலை வந்திருந்தது.

  அரவிந்த் கட்சி ஆளான ஞானவேல் தன் கட்சி பெண்ணிடமே கைப்பிடித்து உரசி பாலியல் சீண்டலை செய்த வீடியோ வலைத்தளத்தில் டிரெண்ட் ஆனது.

  அதனால் ஊரில் பெரும்பாலும் ஆளுங்கட்சி எதிர்கட்சி என்றதை தாண்டி சுயேட்சை சிற்பிகாவின் ‘கொசுவலை’ சின்னத்தை பற்றி தான் பேச்சு இருந்தது.

  ஞானவேலுக்கு பாகற்காயாக நடக்கும் நிகழ்வு தோன்ற, அந்த பொண்ணை ஏதாவது பண்ணுங்கய்யா’ என்று கத்தினார்.‌

   ‘சி.எம் சம்பந்தியா வந்தாலும் வரலாம். எதுக்கு வம்பு? வேண்டுமின்னா அந்த பொண்ணோட பிறப்பு வளர்ப்பு, சாதி இதுல ஏதாவது கொளுத்தி போடலாம்’ என்று குள்ளநரி கூட்டம் அலசியது.

அதற்கேற்றது போல புகழ்மாலை சூடிய அடுத்த இரு வாரத்தில் அதே பத்திரிக்கையில்  ‘யார் இந்த பெண்? திருநெல்வேலியில் சுயேட்சையாக நிற்கும் பெண்ணின் தகுதி என்ன? இதற்கு முன் இவர் சென்று வந்த பாதைகள், அட சீர்த்திருத்த பள்ளிக்கு சென்று வந்த பெண் தொகுதியை சீர்ப்படுத்துவாரா?’ என்று சிற்பிகாவின் சீர்த்திருத்த பள்ளியில் சென்றதை கொட்டை எழுத்தால் எழுதியிருந்தனர்.

   பேப்பரை கண்டு கண்ணீரை மறைத்தாள், ஏற்கனவே நிபுணன் ஆதிரா தேற்றியும் மனமாறாது ஆர்யனுக்கு காபியை பருக நீட்டினாள்‌.

காபி பருகியவாறு ”இப்ப என்ன ஆச்சுன்னு அருவியை திறந்து விடற? அவன் உண்மை தானே எழுதினான். நீ சீர்த்திருத்த பள்ளியில போயிட்டு வந்தவ தானே?” என்றான் ஆர்யன்.

   மாமனார் மாமியாரே பரவாயில்லை போல கணவன் ஏன் தான் இப்படி வதைக்கின்றாரோ என்ற நிலையில் இருக்க, “ஒன்னை நல்லா புரிஞ்சிக்கோ இல்லாததை எழுதினா கண்டுக்க கூடாது. உண்மையை எழுதினா ஏற்றுக்கணும்.

  கொட்டை எழுத்தை வாசித்தவங்க உள்ள குட்டி குட்டியா இருக்கற எழுத்தை வாசிக்காம போவாங்க? எதுக்கு போனனு படிக்காமலா இருப்பாங்க? அடுத்தவங்க என்ன நினைப்பான்னு யோசிக்காம ஆக வேண்டியதை பாரு.” என்று கூறினான்.

சர்வேஷிற்குள் துளிருக்கும்  கவலையாக இருந்தது. அண்ணன் இன்னமும் அண்ணியை சமாதானம் செய்திருக்கலாமென்று‌.

  பாவம் ‘மிங்கிள் ஆகாத சிங்கிள் மேன்’ தம்பதியர் தனிபட்ட நேரத்தில் சமாதானத்தை துவங்குவார்களென்று அறியாது போனான்‌ சர்வேஷ்.

  துளிருக்கோ சர்வேஷ் அண்ணா வேற இந்த மின்மினி கூட மிங்கிள் ஆவாரா? இந்த விதார்த் வேற ஆதினியோட வீட்டில பேசிட்டேன். திடீர்னு தேர்தல் முடிஞ்சு சரண் சித்தப்பாவோட அப்பா வருவார்‌’ என்றானே. இதுவொரு பக்கம் விடை தெரியாமல் அல்லாடினாள்‌.

   ஆர்யனோ காபி பருகி ஆர்யன் மாடிக்கு விரைந்தான்‌. அவன் மருத்துவமனைக்கு செல்ல சிற்பிகாவும் உதவ போனாள்.

    அவள் அறைக்கு வந்ததும் ”சிற்பிகான்னு பெயரை வச்சிட்டு உன்னை நீயே செதுக்க வேண்டாமா? எல்லா இடங்களிலும் எல்லா தோழிலிலும் சேவையிலும் இடறல் வர தான் செய்யும்‌.
    நாம தான் வழியை மறைக்குற கல்லா பார்க்காம படிக்கல்லா மாத்தி முன்னேறணும். என் ‘knife’கு இது தெரியாதா? என்னை விட அனுபவம் ரணம் எல்லாம் தெரிந்த பிள்ளை தானே நீ. உனக்கு தோதாதானே பரதன் சித்தப்பு இருக்கு.
 
    சந்தோஷமா இருடி. எங்க ஐயா ஏன்டா இந்த பிள்ளையை நிறுத்தினோம். ‘இம்’னு சொல்ல கூட இல்லை அழுதேனு விசனப்படுவார்ல.

    எங்கூட்டு மருமகளா வந்தப்பின்னும் அச்சோ அய்யோனா யோசித்தா என்ன அர்த்தம் ‘knife'” என்று திட்டுவதையும் கொஞ்சியே ஆரம்பித்தான்.

   “உங்களுக்கு என்ன ‘Rock Eater’ ஆ இருக்கிங்க. எனக்கு பழக வேண்டாமா?” என்றாள்.

    அவளை தன்னருகே இழுத்து, ‘Rock Eater’ நானா? அதுசரி… உண்மை தான் சிற்பிகா என்றாலே கல்லு. இந்த கல்லையே முழுங்கினது நான் தான்” என்று கழுத்தில் இதழால் ஊர்வலம் நடத்தினான்.‌

     “அச்சோ… போங்க.” என்று சிணுங்கி விலக முற்பட, “உஸ்ஸ்ஸ்ஸ கல்லை முழுங்க வேண்டாமா? அப்ப தானே இந்த போட்டியாளருக்கு உதட்டுல சிரிப்பும் மலர்ச்சியும் வருது” என்று காதல் மொழியை பேசினான்.

    “போதும் போதும் இந்த டாக்டர் எனக்கு நைட் டூயூட்டி பார்த்தது.
   இப்ப ஹாஸ்பிடலுக்கு போக நேரமாகும். எனக்கும் பிரச்சாரம் பண்ண போகணும்” என்று பேசினாள்.

  “யாராவது ஏதாவது பழசை கேட்டு பேசினா?” என்று புருவமேற்றி கேட்டான்.‌

   ”நான் காரணத்தை பளிச் பளிச்சுன்னு சொல்வேன்‌. நான் தப்பு செய்யலையே‌. தப்பு செய்தவங்களை தண்டிக்க போனேன்.” என்றாள்.

   “தட்ஸ் குட் கிளம்பு” என்று ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் அணிந்தான்.‌

   நேரம் ஆவது புரிய, அவளும் மலர்ந்த முகமாக மாறி கீழே வந்தாள்.

    ஆர்யன் ஒருபக்கம் அரசாங்க மருத்துவமனைக்கு செல்ல, மறுபுறம் சிற்பிகாவோ, ”ராக் ஈட்டர்(Rock Eater) ராயலுக்கு மட்டும் தான் போகறச்ச கட்டிபிடி பைத்தியமா?” என்று கிசுகிசுத்தாள்.

    “ஏன்டி இவ்வளோ நேரம் உன்னை தானே கட்டி பிடிச்சேன்.‌” என்று பேச, கல்மிஷமாய் உதடு குவித்து முத்தத்தை வழங்கி புறப்பட்டான்.

  சிற்பிகா கணவனின் அன்பும் தெம்பான வார்த்தையும் ஏற்றவளாக சென்றாள்.

  முன்பு பரதன் இருக்கும் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு போனாள்‌. இன்று ரமேஷ் இருக்கும் ஊர் பகுதிக்கு சென்றிட, ஆளாளுக்கு ஜெயிலுக்கு போன் கதையை கிசுகிசுப்பது சிற்பிகா காதில் விழுந்தது.

   எதிர்மறையான ஆட்கள் இல்லாமல் போகுமா? தற்போது பிரச்சாரம் கொடுக்கும் துண்டு நோட்டிஸை நீட்டும் நேரம் போனில் வீடியோ எடுத்து ‘நாட்டுக்கு நீ என்ன செய்த? தொகுதிக்கு நீங்க என்ன செய்து கிழித்தீர்கள் என்று மக்களே கேள்வி கேட்டு அதை வலைதளத்தில் உலாவ விட்டு தேர்தல் போட்டிக்கு நிற்பவரை தெறிக்க விட, அவலாக மென்று திண்ண கிடைத்த சிற்பிகாவை கேட்க மாட்டாரா?

  ‘ஏம்மா நீ ஜெயிலுக்கு போய் வந்த பிள்ளை தானே?’ என்று கேட்க முகம் சுணங்காமல் ‘ஆமா ஆசிரியரே பாலியல் சீண்டல் செய்தா சும்மா இருப்பேனா? அதான் அந்த வயசில் பேனால குத்தினேன்‌. அவங்க உயிரோட தான் எங்கயாவது இருப்பாங்க.” என்றாள்.

  ஆனால் கேள்வி கேட்ட ஆளோ பின்னாடியே வந்து “நீங்க என்னத்த தொகுதியை உயர்த்துவிங்க? ஆளை பார்த்து பழகற கூட்டம்” என்றார்.

   “பெரியவரே என்ன வாய் நீளுது. எங்க ஐயா குடும்பமே ஆள் பார்த்தா பழகறவங்க. நெஞ்சுல கைவைத்து சொல்லுயா? நான் ஆசைப்பட்ட புள்ள உங்க இனம் தான். எங்கம்மா தான் எனக்கு அவர் தலைமையில் கல்யாணம் பண்ணி வச்சார்‌.

   எங்க அண்ணன் உசரத்துக்கு நான் நீ என்று பொண்ணு தர பணக்காரங்க இருந்தாங்க. எங்க அண்ணன் இந்தா இந்த புள்ளைய குணத்தை வச்சி அவர் புள்ளைக்கு கட்டிக் கொடுத்தார்.
அதே சாதியா அதே மதமா? பேசணும்னு காசு வாங்கிட்டு கேள்வி கேட்க கூடாது.” என்று பரதன் பதில் தந்தார்.‌

   இதற்கிடையே அங்கிருந்த ரமேஷோ, “தாத்தா நீ கேட்ட கேள்வி உன்கிட்ட பணத்தை தந்தவனிடம் கேளு. நம்ம ஊர்ல நம்ம நிபுணன் ஐயா மீறி எவனும் வரமுடியாது.

அவனவன் தேர்தல் வந்தா தான் நல்லது செய்வான். எங்க ஐயா தேர்தல்ல வர்றதுக்கு முன்னவே நல்லது செய்தவரு.
என்ன பழசு எல்லாம் மறந்துடுச்சா. இந்த ஊர்ல என் கல்யாணத்துக்கு அடியெடுத்து வச்சவரு, எனக்கு பரிசு கொடுத்தார்.‌
அந்த நேரம் தெருவிளக்கு எத்தனை ஒளிருச்சு. ஆனா அவர் வந்து போன இரண்டாவது வாரத்துல தெருவிளக்கு போட்டாங்க. நினைவிருக்கா? கம்பத்தை நட்டுவச்சவன் யார் ஏற்பாடு செய்ததா சொன்னான்.‌

 இந்தா இங்கயிருக்கற குளத்துல சாராய பாட்டிலா இருந்தது‌‌. கோவிலுக்கு தூர்வார வந்த ஜெசிபி வச்சி நம்மூர் குளத்தை க்ளீன் பண்ணி வச்சாரா இல்லையா? 

சாராயகடையையே ஊர்ல வேண்டாம். ஊரீக்கு வெளிய வைனு காட்டன் ரைட்டா பேசினவரு.

இதெல்லாம் செய்தது இப்ப இல்லை. இருபது வருஷத்துக்கு முன்ன இருக்கும். இப்ப வரை சாராய கடை இங்க இருக்கு?

இதுல ஐயா பையன் டாக்டர் படிச்சிட்டு அரசாங்க டாக்டரா இருக்கார். அவர் நினைச்சா ஹாஸ்பிடல் கட்ட முடியாதா நிறைய டாக்டரை அதுல வேலை பார்க்க வச்சி டீனாக முடியாதா. அரசாங்க மருத்துவமனையில் மக்கள் பிரச்சனை என்ன ஏதுனு கலந்து பழகறார்.

எங்க ஐயா இடத்துலே பையனை நிறுத்தாம அவரோட மருமக நிற்குது. ஏன்? நம்ம கஷ்டம் நம்மளை மாதிரி வளர்ந்த புள்ளைக்கு தானே தெரியும்.

குணம் குணத்தோட தான் ஒளிரும்‌.

தாராளமா நம்ம ஓட்டை போடலாம்.” என்றான் ரமேஷ்.

ரமேஷ் முன்பு நிபுணனிடம் வேலை பார்த்தது. பின் வேறு வேலையில் உயர்ந்து விட்டாலும் பழைய முதலாளி நல்லவராக இன்றும் நடைப்போட விசுவாசமான பேச்சு வார்த்தையாக வந்தது.

“அப்படி சொல்லுல” என்று பரதன் கூற அங்கே சாதி பிரச்சனையும் இழுக்க முடியவில்லை. காரணம் பரதன், ரமேஷ் வெவ்வேறு இன ஆட்கள். அதனால் அப்படி குழப்பவும் முடியாது பணத்தை வாங்கி குளறுபடி செய்ய நினைத்து பேசியவர் பின் நகர்ந்தார்.

இதையெல்லாம் வீடியோவாக பதிவாக அதனை அடுத்தடுத்த நொடியே வலைதளத்தில் இறக்கை கட்டி பறந்தது.

சிற்பிகா வீட்டுக்கு வரும் நேரம் குடும்பமே வீடியோவை கண்டிருந்தது.

”நல்லவேளை அண்ணா. நான் அசிங்கமா பேசி தொலைக்கலை‌. ரமேஷ் பேசவும் அடக்கிட்டேன். இல்லை நான் அசிங்கமா பேச, அப்படியே பிளேட்டை மாத்திருப்பானுங்க‌ விளங்காத பயலுங்க” என்று பரதன் அந்த வீடியோவை ஆராய, “ஏலேய் வளர்ந்தப்பிறகாவது சிந்திப்பது இடம் பொருளை பார்த்து பேசுல” என்று நிபுணன் கூறினாரே தவிர வேறெதும் கூறவில்லை.

”நீ என்ன செய்த தொகுதிக்கு? என்ற கேள்வியோ, நீ ரொம்ப யோக்கியமா? என்ற வார்த்தையோ இல்லாமல் எதிர்கட்சி ஆளும்கட்சி தேர்தலை கடத்தாது‌. ஆனால் பலரும் அவ்வாறு தான் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்கின்றனர். நாம் என்ன செய்தோம் என்றதை கூறி ஓட்டு கேட்பதில்லை. ஏனெனில் பெரும்பாலான கட்சிகள் நல்லதை செய்தால் தானே அதை பற்றி பேச?

செய்தவன் சொல்லிக் காட்டவும் மாட்டான். ஆனால் பயன் பெற்றவன் பேசி புரிய வைத்து தெளிவான முடிவெடுத்தால் ஓட்டு சரியானவருக்கு செவ்லும் என்பது போல இருந்தது அன்றைய நாள்.

இவ்வாறான பிரச்சாரங்கள் தூள் பறக்க, சிற்பிகாவுக்கு நேரம் கழிய, ஆர்யனோ மனைவியின் முன்னேற்றம் மாறுவதை கண்டு அகமகிழ்ந்தான்.

சர்வேஷோ பரீட்சை முடிய காத்திருக்க, விதார்த்தோ நண்பன் சரவணவேலனிடம் “சின்னவனுக்கு கொழுந்து கல்யாணம் முடிச்சி பண்ணுவாங்களோ?” என்று கேட்டான்.‌

”இல்லைடா எனக்கு முடிச்சி பண்ணுவாங்க. எனக்கு அர்ச்சனாவோட பேசியிருக்காங்க. ஏன் கேட்கற?” என்று கேட்க “சும்மா தான்” என்று கூறினான் விதார்த்.‌

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்

21 thoughts on “என் நேச அதிபதியே -53”

 1. Kalidevi

  Nibunan ah yar ena pesinalum ketutu summa irupangala barathan ramesh um athe mari sirpi thairiyathaium thembaium koduka namba aaryan irukan so sirpi munneruva

 2. Avatar

  அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
  உண்மையான அரசியல் கூட தோற்று போகும் நிபுணன் முன்பு சூப்பர் சூப்பர்

 3. Avatar

  “நாம தான் வழியை மறைக்குற கல்லா பார்க்காம, ஏறிப்போற படிக்கல்லா பார்க்கணும்” மிகவும் பாஸிடீவ்வான வரிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *