Skip to content
Home » என் வாசம் நீ உன் சுவாசம் நான் -12

என் வாசம் நீ உன் சுவாசம் நான் -12


பாகம்-12
ராகவ் சென்றதும் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள் சந்திரா. அவள் எதையும் எப்போதும் அவ்வளவு எளிதாக வாய் திறந்து சொல்பவள் இல்லை. இதைச் சொன்னால் அவர்களுக்கு மனச் சங்கடம் இவர்களுக்கு மனச் சங்கடம் என்று பலரையும் பற்றி யோசித்து யோசித்து தன் துன்பங்களை தனக்குள்ளேயே வைத்திருப்பவள். அவள் கன்னத்தில் ராகவ் அறைந்தது கன்னம் எரிந்தது. அவன் விரல்கள் பதிந்திருந்தது . சோர்வாக படுத்துக் கொண்டாள்.
வெளியில் அன்னைக்கும் தந்தைக்கும் சண்டை நடந்துக் கொண்டிருந்தது.
“என்ன?நீங்க உங்க இஷ்டத்துக்கு என்ன வேண்ணா செய்வீங்களா? அவரு யாரு? நம்ம வீட்டு மாப்பிளை. நம்ம வீட்டு பொண்ணு அவரு வீட்டுல இருக்கு. இவ புள்ளைக்கும் அப்பா அவருதான். நம்ம வீட்டுல இருக்கற ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கை அவரு கிட்டதான் இருக்கு. உங்களாலயோ, இல்ல அந்த ஓடுகாலியோட பொண்ணாலையோ என்னோட பொண்ணுக்கு ஏதாவது ஆச்சு உங்கள நான் சும்மா விட மாட்டேன். விரல் நீட்டி கணவனை மிரட்டிக் கொண்டிருந்தாள் மனைவி.
“என்னடி உன்னோட பொண்ணு உன்னோட பொண்ணு ? இவ நம்ம பொண்ணு இல்லையா ?
“இவ ஒன்னும் என்னோட பொண்ணு இல்ல. இவ உங்களோட ஓடுகாலி தங்கச்சியோட பொண்ணு”
“ஆமாண்டி! உனக்கு டாக்டர்ஸ் குழந்தை பொறக்காதுன்னு சொன்னப்போ அந்த ஓடுகாலியோட பொண்ணு தேவைப்பட்டா . உனக்குன்னு ஒன்னு வந்ததுக்கப்புறம் இவ யாரோ. இதுக்கு மேல என்ன பேச வைக்காத. போமா போ போய் சீரியல் பாரு,நானும் என் பொண்ணும் எக்கேடோ கெட்டு போறோம் ” கை எடுத்துக் கும்பிட்டவர் வெளியில் போகாமல் மனதை மாற்றிக் கொண்டு மகளின் அறைக்குச் சென்றார்.
சுந்தரியோ, காயத்ரிக்கு எந்த பாதிப்பும் வந்து விடக் கூடாதே என்று கடவுளிடம் பிரார்தனை செய்துக் கொண்டிருந்தார்.
அறையில்,கண்களில் வழிந்து கொண்டிருந்த நீரை துடைக்கக் கூடத் தோன்றாமல் படுத்திருந்த மகளின் தலையை மடியில் வைத்துக் கொண்டு அவளின் தலையைத் தடவினார்.
“உன்ன எப்படி கரையேத்தப் போறேன்” மனதில் என்னென்னவோ கவலைகளுடன் அவர் அமர்ந்திருந்தார். கூடவே சேர்ந்து பழைய நினைவுகளும். அவர் சந்திராவை முதன் முதலில் தூக்கி வந்த நாள்,
“யாரு கணேசா? யாரு இந்த குழந்தை? என்றார் கணேசனின் அன்னை.
“முதல்ல குழந்தைக்கு ஆர்த்தி எடுங்கம்மா “
“ம்! ஆர்த்தி காட்டியாச்சு, இப்போ சொல்லு இது யாரு குழந்தை?”
“இது நம்ம சாந்தியோட குழந்தம்மா”. முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் துடைக்கப் பட்டிருந்தது.
“ச்சே ! இதுக்கா ஆர்த்தி எடுத்த? போ! போ! குளி ! என்ன ஜாதியோ என்ன ****? கணேசனின் தந்தை மனைவியை அருவருப்புடன் அதட்டினார்.
“ஆமாம்பா! நாம் எல்லாருமே குளிக்கணும், தல முழுகணும்….நம்ம சாந்திக்காக”
“என்னடா சொல்லற?” கணேசனை பிடித்து உலுக்கினார் அன்னை.
“நம்ம சாந்தி நம்ம கிட்ட இல்லப்பா”வாயில் துணியை வைத்து மூடிக் கொண்டு கதறினார் கணேசன்.
“என்னடா சொல்லற ?” இப்போது அதிர்ச்சியில் உறைந்தார் தந்தை.
“ஆமாம் பா! ரெண்டு நாள் முன்ன ஒரே நேரத்துல கோயம்புத்தூர்ல பல இடங்கள்ல குண்டு வெடிச்சதில சாந்தியும் அவரு வீட்டுக்காரரும் இறந்து போய்ட்டாங்க. முகத்தை துடைத்துக் கொண்டேச் சொன்னார். ஆனால் அவரால் கட்டுப் படுத்த முடியவில்லை. உயிரினும் மேலாக வளர்ந்த உடன் பிறந்தவள் அல்லவா ?
அனைவரும் அதிர்ச்சியில் நிற்க இவர் மட்டும் குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தார்.
“அப்போ குழந்தை மட்டும் ?”
அவ குழந்தையை கிரீச்சுல விட்டுட்டு வேலைக்கு போவாளாம். இவளும் அவ புருசனும் வேலைய விட்டுட்டு வரும்போது பைக்கை நிறுத்திட்டு கடைல சாமான் வாங்க போய் இருக்காங்க. அதுக்குள்ள எவனோ ஒருத்தன் இவரோட பைக்குலதான் பாம் வச்சிருக்கான். இவரு வண்டிய ஸ்டார்ட் பண்ணவுடனே ………சொல்ல முடியாமல் குலுங்கி குலுங்கி அழுதார். சாந்தியோட போன்ல அண்ணன் அப்படின்னு முதல் பேரா என்னோட பேரு இருந்திருக்கு. அதனால் தான் போலீசு என்ன கூப்பிட்டுருக்காங்க. நான்தான் போய் உடம்ப அடையாளம் காண்பிச்சேன்.
யாருக்கும் எதுவும் சொல்ல தோன்றவில்லை. அனைவருக்குமே மூச்சு பேச்சு வராமல் அமர்ந்திருந்தனர்.
அப்போது சந்திராவுக்கு பசி வந்துவிட்டது போலும். சொல்லத் தெரியாமல் கண்ணை கசக்கி அழுக ஆரம்பித்தது. அப்போது முதலில் குழந்தையை எடுத்து கொஞ்சி பாலைக் குடுத்தது சுந்தரிதான். டம்ளரில் எடுத்து மெதுவாக ஹார்லிக்ஸை ஊட்டினாள்.
“வாங்க! வாங்க! என்னாச்சு பாப்பாக்கு? “ஆசையாக தூக்கிக் கொண்டாள் .
மிதமான சூட்டுடன் இருந்த இனிப்பான ஆர்லிக்ஸ் குழந்தையின் குட்டி வயிற்றை நிரப்பியது. அம்மா என்று சொல்லி அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவள் தோளிலேயே அடுத்த நிமிடம் தூங்கி விட்டது. வீட்டில் அனைவருக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.
“என் குழந்தை என்னால இப்படி செத்து போச்சே ? சாந்தியை காதலிச்சான்னு சொல்லி வேண்டான்னுட்டேனே? நானே என் குழந்தையை கொன்னுட்டேனே! அவளை நானு ஏத்துக்கிட்டிருந்தா இங்கையே இருந்திருப்பாளே?” என்று பெரியவர்கள் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டுக் கதறினர். கணேசன் பிரம்மை பிடித்தவர் போல அமர்ந்திருந்தார். சுந்தரிக்கு யாராலும் யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியாது என்பதுப் புரிந்தது. அவளுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. இருப்பினும் அந்த சாந்தியை இவள் பார்த்தது கூட கிடையாது என்பதால் மனதளவில் பெரியதாக ஒன்றும் இல்லை . சிறிதளவு வருத்தம் மட்டுமே. நாட்கள் செல்லச் செல்ல குழந்தைக்கு பால் குடுக்க, துணி மாட்ட என்று வித விதமாய் அலங்காரம் செய்வதும் பார்த்துப்பார்த்து சோறு ஊட்டுவதுமாக இருந்தாள் . அவளின் உண்மையான பாசம் கூட மற்றவர்களின் சூடு சொல்லால் மாறித்தான் போனதோ?
வீட்டிற்கு துக்கம் கேட்க வந்தவர்கள்,
“என்ன சுந்தரி? இதுதான் சாந்தி பொண்ணா ? என்று கேட்டு சந்திராவை கொஞ்சியவர்கள்
“நீதான் பாத்துக்கறியா ?”
“ஆமாம் மதனி! “
“பாவம் கடவுள் உனக்குன்னு ஒன்னு குடுக்கலனாலும் சாந்தியோட பொண்ண குடுத்துருக்காரு. கடவுள் ஒண்ண எடுத்தாலும் வேற ஒண்ண குடுப்பாருங்கறது உண்மைதான்” என்றார்.
மற்றொருவர், “ஏதோ கெட்டதுலையும் நல்லதா கடவுள் உனக்குன்னு இந்த குழந்தையை குடுத்துட்டாரு”
இப்படி ஆறுதல் சொல்ல வந்தவர்கள் தோன்றியதை எல்லாம் பேச ஆரம்பித்தார்கள். முதலில் அது எதுவும் சுந்தரியை பாதிக்கவில்லை. மனதில் இருந்த ரணம் , அவளுக்கு என்று ஒன்று வந்தபின் சுயநலமாய் மாறியது. என் குழந்தை என்குழந்தை என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்துவிட்டது. அது எப்படி வந்தது என்பது பாவம் சுந்தரிக்கே தெரியாது.
சுந்தரி, சந்திராவை தன் குழந்தை போலவே வளர்க்க ஆரம்பித்தாள். அன்னை தந்தை நினைவு வராத அளவுக்கு கணேசனும் சுந்தரியும் பாசம் காட்டினர் . தங்களையே அன்னை தந்தை என்று அவளுக்கு சொல்லியும் கொடுத்தார்கள். சிறு குழந்தை என்பதால் இவர்கள் சொன்ன பொய்களை எளியதாக நம்பியது. ஊருக்கு சென்ற அன்னை தந்தையைப் பற்றிய நினைவும் இல்லாமல் போனது.தன்னை அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை வராதா என்று ஏங்கிக் கொண்டிருந்த சுந்தரி நாத்தனாரின் மகளை தன் மகளாகவே ஏற்றுக் கொண்டார்.
சந்திரா வந்த அன்று சட்டென நினைவு வந்தவராக கணேசனின் தந்தை,
“ஏண்டா! போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சுருச்சா? எப்ப பாடிய தருவாங்க ?” அதுவரை அந்த நினைவுக் கூட இல்லாமல் இருந்தவர் அன்று மாலைதான் கேட்டார்.
“அப்பா எங்கிட்ட எதுவும் கேட்காதீங்க. ப்ளீஸ் பா !”
“என்னடா ஆச்சு சொல்லுடா! சொல்லுடா! அன்னையும் தந்தையும் எத்தனையோ கேட்டும் கணேசன் வாயைத் திறக்கவில்லை. ஆனால் அவர் பாரம் அவரால் தாங்க முடியவில்லை. நெஞ்சு வெடித்துவிடும்போல இருந்தது. மனது தாங்காதவர் அன்று இரவு மனைவி கேட்ட போது சொல்லி விட்டார். தலையில் அடித்துக் கொண்டு அழும் கணவனை தேற்றக் கூட முடியாமல் பிரமை பிடித்தது போல அமர்ந்திருந்தார் சுந்தரி.
பாவம் அதையே பெற்றோர்களும் கேட்டுவிட்டது கணேசனுக்குத் தெரியவில்லை. ஆம்! அவர் சொன்ன செய்திதான் அனைவரையும் உலுக்கி விட்டது.
“என்னங்க! போஸ்ட்மார்ட்டம் பண்ணியாச்சா ? எப்ப பாடி கிடைக்கும்? நாம அவங்களுக்கு பண்ண வேண்டிய சடங்கு பண்ணணுமில்ல ?”
“சடங்கு என்னடி சடங்கு? அவ உடம்பே இல்லாதப்போ ?”
“அப்படின்னா ?”சுந்தரிக்கு நெஞ்சுக் கூடு காலியானதுபோல இருந்தது.
“கை தனியா கால் தனியா எது யாரோடதுன்னே தெரியல. இவளோட முகம் மட்டும்தான் கிடைச்சுது. அதுவும் கோரமா” தேம்பித்தேம்பி அழுதார். “எவ்ளோ அழகா இருப்பா தெரியுமா ? பேரழகி சாந்தி. பாவம் மாப்பிளைக்கு அதுவும் சரியா கிடைக்கல. என்கிட்ட யாரும் எதுவும் கேட்காதீங்க” மனம் வெதும்பி கத்தினார்.
கணவனை தேற்றும் வழி தெரியாமல் சுந்தரி தவித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தூங்கிக் கொண்டிருந்த சந்திரா,” அப்பா! அப்பா!” என்று அழைத்தாள்.
“என்னம்மா?” அருகில் சென்று தலை கோதிய கணேசனை கையால் கட்டிக் கொண்டு காலை அவர் மீது போட்டுக் கொண்டு மீண்டும் தன் தூக்கத்தை தொடர்ந்தாள் சந்திரா. தந்தையின் கஷ்டங்களை எப்போதுமே தாங்குவதற்கு அதுதான் ஆரம்பமோ?
மகளை கட்டிக் கொண்டவருக்கு அந்த பூ ஸ்பரிசம் ஆறுதலாக இருந்தது போலும். தன்னை அறியாமல் அவருமே தூங்கித்தான் போனார்.
இப்போதும் அந்த சம்பவத்தை நினைத்தவருக்கு நெஞ்சு குலுங்கியது.
இரண்டு வயதுக்கு குழந்தையாக வந்த சந்திரா அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டாள் . மகளை கோரமான உரையில் இழந்திருந்த கணேசனின் பெற்றோர் மகளின் உயிராக சந்திராவை ஏற்றுக் கொண்டார்கள். பேத்திக்காக என்று அவர்கள் வாழ நினைத்தாலும் அவர்கள் நடை பிணங்களாகவே தான் வாழ்ந்துக் கொண்டிருந்தார்கள். குற்ற உணர்ச்சியில் விரைவாகவே இறந்தும் போனார்கள்.
“எல்லாரும் என்ன தனியா விட்டுட்டு போயிட்டிங்களே” என்று மனது வேதனைப் பட்டுக் கொண்டிருக்கும்போது சுந்தரி வயிற்றில் காயத்ரி உண்டானாள் . அது ஓரளவுக்கு அவருக்கு ஆறுதலாக இருந்தது. அப்போது தான் இவருக்கு சென்னையில் மாற்றம் கிடைத்தது.
இருப்பினும் இவர் மட்டும் அவ்வப்போது கேஸ் விஷயமாக கோயம்புத்தூருக்கு என்று வந்தார். மாப்பிள்ளையின் பெற்றோரும் வந்து கொண்டிருந்தனர். முதலில் கோபமாக பேசாமல் இருந்தவர்கள் பிறகு மெதுவாக பேச ஆரம்பித்தனர். சில வருடங்களுக்கு பிறகு அவர்களும் தன்னுடைய அடுத்த மகனுடன் வெளி நாட்டிற்கு சென்று தங்கி விட்டனர். ஆனால் கேஸ் மட்டும் முடியவில்லை. குற்றவாளியை பிடித்து விட்டோம் என்றார்கள். ஆனால் விசாரணைமட்டும் நடந்துக் கொண்டிருந்தது.
சந்திரா வந்த அடுத்த இரண்டு ஆண்டுகளில் காயத்ரி உண்டானாள் . ஏற்கனவே கர்ப்பபை மிகவும் பலவீனமாக இருந்த சுந்தரி ஆடாமல் அசையாமல் முழுக்க முழுக்க படுக்கையில் இருந்தபடியே பிள்ளை பெறும்படி ஆனது. அப்போதே ஓரளவு சந்திரா மீது பிடிப்பு விட ஆரம்பித்து விட்டதோ ? முதலில் பாப்பா! பாப்பா! என்று கொஞ்சிக் கொண்டிருந்தவர், பிறகு சில நாட்களில் சந்திரா என்று அழைக்க ஆரம்பித்தார். அதற்காக சந்திரா மீது வெறுப்பு என்று சொல்ல முடியாது. இருப்பினும் ஏனோ என் மகள் என் மகள் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்து விட்டது. அதுவே வார்த்தைகளிலும் வெளிப்பட ஆரம்பித்தது.
சந்திராவுக்கு ஆறு வயதாக இருக்கும்போது,
“அப்பா! அம்மா எப்பப்பாத்தாலும் பாப்பாவை என்னோட பொண்ணு, என்னோட பாப்பான்னு சொல்லறாங்களே. அப்போ நான் யாரு பாப்பா ?”
அந்த கேள்வி கணேசனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதை மறைத்து கொண்டவர்.
“அது அம்மா பாப்பா! நீ என்னோட பாப்பா! மகளை மடியில் எடுத்துக் கொஞ்சினார்”. அதில் மனம் மகிழ்ந்தவளுக்கு தான் அப்பா பெண் என்பது மட்டும் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
அவள் என்றுமே தன் மகள்தான் அதை என்றுமே அவளிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு அவள் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது,
குண்டு வெடிப்புக்குக் காரணமான குற்றவாளிகளில் ஒருவன் தப்பித்துவிட்டான், அவன் தப்பித்து ஓடும்போது அவனை போலீஸ் சுட்டுக் கொன்று விட்டனர். இன்னொருவன் மீது மட்டும் கேஸ் நிலுவையில் இருந்தது. குண்டு வெடிப்பு நடந்தபோது அவள் மிகவும் சிறு குழந்தையாக இருந்ததால் அவளிடம் எந்த விசாரணையும் இருக்காது. இருப்பினும் அவள் இப்போது இருக்கும் பெற்றோரிடம் சந்தோஷமாகத்தான் இருக்கிறாளா என்பதை நீதிபதி கேட்க வாய்ப்புகள் உண்டு என்று எச்சரித்தார். இல்லையெனில், அவளை வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவும் பரிந்துரைப்பார் என்று வக்கீல் சொன்னதால் வேறு வழி இல்லாமல் மகளிடம் அனைத்து உண்மைகளையும் சொல்ல வேண்டியதாயிற்று. அவர் சொன்னது போல நீதிபதி அவளிடம் விசாரித்தார் தான். அவர் ஒரு பெண் என்பதால், மிகவும் பாந்தமாக குழந்தைக்கு ஏற்றாற்போல் கேள்வியும் கேட்டார், சாமர்த்தியமாக அவருக்குத் தேவையான பதிலையும் வாங்கி கொண்டார். பல இடங்களில் குண்டு வெடித்ததில் பல குடும்பங்களின் வீட்டு மக்களைப் போலவே பலரின் குடும்பங்களும் சிதறித்தான் போயிற்று. பலரின் வாழ்வாதாரம் போனது. பலருக்கு கை கால், காது, விரல்கள் இன்னும் எத்தனையோ கொடுமைகள். அனைத்தையும் மனதில் வைத்த நீதிபதி அத்தனை மக்களுக்கும் நீதி கிடைக்க அவனுக்கு தூக்கு தண்டனை விதித்தார். அந்த தீர்ப்பினால் பலருக்கும் மகிழ்ச்சிதான்.
கணேசனுக்கும் மகிழ்ச்சிதான். இருப்பினும் அடுத்தவரின் இறப்பில் எப்படி மகிழ்ச்சிக் காண முடியும் எந்த காரணமாக இருந்தாலும்? மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத என்ன ஓட்டம் அவருக்கு இருந்தது. மகிழ்வதா? வேண்டாமா ? என்றுக் கூடத் தெரியவில்லை. தன்னுடைய சிந்தனையிலேயே இருந்தவர் கவனிக்கத் தவறியது மகளின் ஒதுக்கம். அன்றே அவர் கவனித்திருந்தால் ஒருவேளை சந்திராவுக்கு நல்ல வாழ்க்கை அமைந்திருக்குமோ ? அதை அவர் புரிந்துக் கொள்ளும்போது சந்திரா அவருக்கு ஆறுதல் சொல்லவாவது உயிருடன் இருக்க வேண்டும்….
தொடரும்….

5 thoughts on “என் வாசம் நீ உன் சுவாசம் நான் -12”

    1. Avatar

      புண்படுத்த வில்லை.. ஆனால் மனம் மிகவும் பாரமாக உள்ளது. கதை மிகவும் அருமையாக போகிறது. முடிச்சுகள் ஒவ்வொன்றாக எவ்வாறு அவிழப் போகின்றன என்ற ஆர்வத்துடன் தொடர்கிறேன். வாழ்த்துக்கள்

      1. பரணி உஷா

        மிக்க நன்றி, முடித்து விட்டு comments போடுங்க. கதை நிச்சயம் மனதிற்கு நிறைவாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *