Skip to content
Home » என் வாசம் நீ உன் சுவாசம் நான் – 18

என் வாசம் நீ உன் சுவாசம் நான் – 18


சூர்யாவிடம் பேசிவிட்டு வரும்போது ராஜுவுக்கு மனம் முழுவதும் மாயாவை பற்றிய யோசனைதான். அவன் நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. ஏதோ சூர்யாவிடம் பேசிவிட்டு வந்து விட்டானே தவிர அவனால் மாயாவை அத்தனை சுலபத்தில் ஏற்றுக் கொள்ள முடியுமா ? இல்லை மாயா? அவளால் எப்படி தன்னை ஒரு கணவனாக ஏற்றுக் கொள்ள முடியும்? இது இதோடு முடியக் கூடிய விஷயமா ? எதிர்காலத்தில் பிள்ளைகள்? இவனுக்கு இப்போது மனதில் சிறு பயம் வர தொடங்கியது.
மாயாவுக்கு சம்மதம் என்று அவர்கள் சொல்லிவிட்டால் என்ன செய்வது? யோசித்தான். நிறைய யோசித்தான். பல கேள்விகளுக்கு நாம் யோசிக்கும்போது விடை கிடைப்பதில்லை. காலமே பதில் . நடப்பது நடக்கட்டும். அவன் துணிந்து முடிவெடுத்தான். ஆனால் தெளிவு இல்லை. அவனுக்கு தெளிவை உண்டாக்கியது ராணிதான்.

வீட்டில் தன் அன்னையிடம் இதை பற்றி பேசினான். முதலில் பளீரென்று கன்னத்தில் ஒரு அரை விழுந்தது. அதற்கு பிறகு துடப்பதால் அடி சரமாறியாக விழுந்தது. அதை ராணிதான் ஓடி வந்து தடுத்தாள் .
இவன் சொல்லறது கேளு! எவளோ ஒரு *கண்ணாலம் பண்ண போறானாம் . அடி செருப்பால. அவள் முகத்தில் அத்தனை ஆங்காரம்.
“முதல்ல நான் என்ன சொல்லறேன்னு கேளு. நீயே பேசற?”
“இன்னும் என்னடா பேசணும்? எத்தனை நாளாடா அவகிட்ட போற ? எச்சக்கலை நாயே!”
வார்த்தைகள் மிக மோசமாக வந்தன.
“ஆயா இரு ! மாமா என்னதான் சொல்லறாருன்னு கேட்போம்”
“இந்த அசிங்கம் புடிச்ச கதையை வேற கேட்கணுமா? சீ ! தூ” காரி துப்பினாள் . முகத்தை துடைத்துக் கொண்டான். அன்னை கோபத்தில் வெளியே சென்று அமர்ந்து கொண்டாள் . அவளுக்கு மூச்சிரைத்தது. ராஜுவுக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது.
“ராணி ஆயாக்கு கொஞ்சம் தண்ணி குடுத்து சமாதான படுத்து”.
“சரி மாமா ! ஆயாவுக்கு தண்ணீர் குடித்தபின் சிறிது சமாதானம் அடைந்தது. இரவு யாரும் உண்ணவில்லை. ராணிக்கு மட்டும் சாப்பாடு குடுத்தாள். அவளுக்கு இறங்கவில்லை. இருப்பினும் குழந்தைக்காக இரண்டு வாய் போட்டுக் கொண்டு தண்ணீர் குடித்தாள் .
மகனின் அருகில் வந்து படுத்துக் கொண்டாள் ஆயா . பேச இஷ்டம் இல்லை . முகம் பார்க்கவும் விருப்பம் இல்லை .
“ஏன் மாமா! ஆயாவுக்காக அந்த பொண்ண வேண்டான்னுதான் சொல்லேன்”
“எனக்கு என்ன வயசு ராணி? முப்பது மூணு வயசு. அவளுக்கு இருபத்தி ரெண்டு. உன்ன மாதிரி இருக்கற பொண்ண நான் கல்யாணம் பண்ண ஆசை படறேன்னா உடம்புக்காகவா? இது வரைக்கும் நான் யாரு கிட்டையும் அந்த மாதிரி போகல. சொல்லு உன் ஆயாகிட்ட . சூர்யா சார் வூட்டுல வேலை செய்யுதே அந்த பொண்ணு மாயாதான் அது.
“என்னடா சொல்லறே ? அந்த பொண்ணா ? என்னடா இது பெரிய இடத்துல போய் கைய வைக்கற? நான் எப்பிடிடா அந்த சாரு முகத்துல முழிப்பேன்? முடியுதோ முடியலையோ போய் நாலு காசு சம்பாதிக்கறேன். அதுவும் ஒனக்கு பொறுக்கலையா தலையில் அடித்துக் கொண்டாள் .
“ஆத்தா நிறுத்து நிறுத்து அவள் கையை பிடித்து நிறுத்தினான்”
“முதல்ல நான் சொல்லறதை கேளு. அப்புறமா நீ பேசு. மாயாவை பற்றி சுருக்கமாக சொன்னான்.
இப்ப நீ என்னா சொல்றியோ சொல்லு.
“அந்த பொண்ணு பாவந்தாண்டா நான் இல்லனு சொல்லல. ஊரு உலகத்துல வேற பொண்ணே இல்லையாடா? எதுக்குடா இப்படி ஒருத்திய”
” தெரியல ஆத்தா! ஏனோ அவங்களால்தான் என்னை சந்தோசமா வச்சுக்க முடியும்ன்னு தோணுது. அதோட மத்த பொண்ணுங்கள கட்டிக்க யாரு வேண்ணாலும் வருவாங்க. இவங்களுக்கு?
ராணிக்கு தன் கணவன் கூறிய அதே கரணம். விரக்தியாய் சிரிப்பு வந்தது. ஒவ்வொரு பொண்ணுக்கும் ஏதோ ஒரு காரணம். மனதில் இளக்காரமாக எண்ணம் வந்தது.
“உனக்கு நான் வேறு ஒரு நல்ல பொண்ணா பாக்கறேன் ராஸா. இது வேணாம். ஊரு உலகம் தப்பா பேசும் ராசா”, கெஞ்சலாய் கொஞ்சலாய் சொன்னாள் அவன் அன்னை.
“யாரு ஆத்தா நீ என்னையும் அக்காவையும் வச்சுக்கிட்டு தனியா நின்னபோது நமக்காக வந்து நின்னாங்களே அந்த ஊரா ? இல்ல வீட்டை காலி பண்ண சொல்லி சாமானை கடன்காரங்க வெளில போட்டாங்களே அந்த ஊரா ? போ ஆத்தா . நான் பழசை எதையும் நினைக்க விரும்பல. உனக்கு பிடிக்கலையா சொல்லு. எனக்கு வேணாம். அவங்க மட்டும் இல்ல. யாருமே வேணாம்”
“என்னடா இப்படி பேசற? ஏண்டா ஒரு உலகத்துல யாரு எப்படி போனா நமக்கு என்னடா வந்தது? அவ உனக்கு என்னத்த சொக்குபொடி போட்டாளோ ?”
“அன்னிக்கு சந்திரா அக்காவும் இதையே நினைச்சிருந்தா நானும் இன்னிக்கு ஏதோ ஒரு மாயாவாத்தானே இருந்துருப்பேன்? ராணியின் கேள்வி இருவருக்குமே சுரீரென்றது.
“போ!ராணி! இவங்க கிட்ட பேசறதே வேஸ்ட். தூங்கற மாதிரி நடிக்கறவங்கள எழுப்பவே முடியாது. சொல்லி விட்டு அனைவரும் படுக்க போனார்கள். ராணி மட்டும் அசதியில் உறங்கிவிட்டாள் . ராஜூவுக்கும் அவன் அன்னைக்கும் தூக்கம் தொலைந்தது.

இரவெல்லாம் ஆயா யோசித்தாள் . என்ன முடிவெடுத்திருப்பாள் ?

பொழுது விடியும் வரை காத்திருப்போம்.

மருத்துவரிடம் பேசியவனுக்கு மண்டை குழம்பியது. இவளுக்கு என்ன பிரச்சனை? ஏன் எதையும் வாய் விட்டு சொல்ல மாட்டேங்கறா? நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டான். அதற்குள் அலுவலகத்தில் இருந்து அழைப்புகள் வர ஆரம்பித்து விட்டன. அதனால் இவனால் எதை பற்றியும் யோசிக்க முடியவில்லை. சந்திரா தூங்கட்டும் என்று விட்டு விட்டான். செய்தியை கேள்வி பட்ட கணேசன் மருத்துவமனைக்கு ஓடி வந்தார். அவருடன் சேர்த்தே அவர்கள் வீட்டில் கொண்டு விட்டான்.
“நீங்க தான் என் பொண்ணை ஒவ்வொரு தடவையும் பெரிய பெரிய ஆபத்துலேர்ந்து காப்பாத்தறீங்க. உங்களுக்கு எப்படி நான் நன்றி சொல்லறதுன்னே தெரியல.”
அவரை பார்க்கவே அவனுக்கு பாவமாக இருந்தது. தன் அன்னையை உரிமையாகத் தங்கச்சி என்றுதான் அழைப்பார் . இன்று யாரோ போல நின்றுக் கொண்டிருக்கிறோம். அவனுக்கும் வேதனையாகத்தான் இருந்தது. அவர்கள் இருவரும் செல்லும் பாதையைப் பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டெனக் காரைக் கிளப்பினான். மனதில் ஒரு பக்கம் கோபம், வேதனை, வருத்தம் அதனுடன் இனம் புரியாத ஏதோ ஒரு மகிழ்ச்சி. புரியாத கலவையாக வீடு வந்து சேர்ந்தவனுக்கு தன் அன்னையிடம் நடந்ததை கூறாமல் இருக்க முடியவில்லை.

அனைத்து விஷயங்களையும் கேட்டவள் பெருமூச்சு விட்டாள் . அவளுக்கும் மனதில் ஏதோ ஒரு வித உணர்வு. அப்போதும் எப்போதும் அவளுக்குச் சந்திரா தான் தன்  மருமகள் என்று மட்டும் மனம் கூறிக் கொண்டே இருந்தது. அன்றிரவு சந்திராவை பற்றி அசை  போட்டவளுக்கு அவள் ஏதோ ஒரு கட்டாயத்தினால்தான் அவள் இந்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும் என்பது புரிந்தது. அவளிடம் எப்படி கேட்பது? தானாக எதுவாக இருந்தாலும் அவளாகவேச் சொல்லட்டும். எதையும் கேட்கவே கூடாது என்று முடிவெடுத்துவிட்டாள் . 

சூர்யாவால் இயல்பாகச் சிந்திக்க முடியவில்லை.ஒரு ஒரு புறம் அவள் தன்னுடனே இருக்கிறாள, வேறு ஒருவனின் துணையாக, அவன் குழந்தைக்கு அன்னையாக. அவனைத் தவிர்த்து தன்னுடன் காரி ஏறி அமர்ந்துக் கொள்கிறாள். அவள் வீட்டில் பிரச்சனை நடக்கும் என்று தெரிந்தே தான் வருகிறாள் அதற்காக கணவனிடம் அடி வாங்கி இருக்கிறாள். மறு நாளும் மறையாத விரல் தடங்கள் காட்டி விட்டதே!”ப்ளீடிங் ஆகற மாதிரி இருக்கு”எத்தனை உரிமையாய் என் காலரை பிடித்துச் சொன்னாள் ? ஆனால் கணவனிடம் சொல்லவில்லை. ஏன்இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாள்? ஒரு புறம் மனதை குழம்பியது. மறு புறம் அவனின் குழப்பங்கள், வருத்தம், வேதனை அவனை மூடனாகவும், ஆத்திரக்காரனாகவும் மாற்றிக் கொண்டிருந்தது. எதற்காகத் தன்னை சுற்றி இருப்பவர்கள் தன்னையும் தன் தாயையும் இப்படி காயப்படுத்த வேண்டும்? சந்திராவை அம்மா தனது வயிற்றில் பிறந்த மகளாகத்தான் பார்த்தார். இரண்டு கைகளாலும் மண்டையை இறுக்கி பிடித்துக் கொண்டான். மனதை சாந்தப்ப படுத்த ஏதாவது பாட்டு கேட்கலாம்.
பக்கத்தில் நீயும் இல்லை,பார்வையில் ஈரம் இல்லை சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்ல..வண்ணம் கொண்ட வெண்ணிலவே…. ஏனோ பாடலும் இவனை கிண்டல் செய்வது போலவே இருந்தது. பாடலை நிறுத்தி விட்டான். எண்ணங்களை நிறுத்த முடியவில்லை. எல்லாவற்றையும் சொல்லக் கூடியவள் சந்திராதான் . அவளும் சொல்ல மாட்டாள் . இவனும் கேட்கப் போவதில்லை. இப்படியே யோசித்துக் கொண்டிருக்கட்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கல்லூரியில் ஒன்றாகப் படித்த நெருங்கிய தோழன் மணிப்பூரிலிருந்து பார்க்க வந்திருந்தான். இப்போது அவன் சென்னையில்தான் பணிபுரிகிறான். அன்னைக்காக அங்கு மட்டுமே பிரத்தேயேகமாகத் தறிக்கப் (தயாரிக்க)படும் தாமரை பட்டில் அன்னைக்காக ஒரு ஷால் கொண்டு வரச் சொல்லி இருந்தான் சூர்யா. அது தயாரிப்பது அத்தனை எளிதல்ல. பிரதமருக்குக் கூடப் பரிசாகக் கொடுத்தார்களாம். கேட்டதிலிருந்தே அம்மாவுக்கு வாங்கித் தர வேண்டும் என்ற ஆசை இருந்தது சூர்யாவுக்கு.அதுவே தோழன் வாங்கி வந்ததும் சாரதா அதை எடுத்து அலமாரியில் வைத்தார். பின்னோடே கைக்கட்டி நின்றிருந்த மகனிடம் ,
“என்னடா இங்க நிக்கற?”
“அத எடுத்துப் போட்டுக் காட்டுங்க. அவனுக்கும் காட்டணும்”
“இல்லடா! அது அது வந்து சந்திராவுக்கு……..புள்ளத்தாச்சி பொண்ணாச்சே அவளுக்குக் குடுக்கலான்னு…..”
அவனின் முறைப்பில் ஆயிரம் கேள்விகள் இருந்தன. பதில் பேசாமல் அதை எடுத்து பிரித்து அன்னைக்கு போர்த்தி விட்டான். அப்படியே அவளை தோழன் முன்பு வந்து நிறுத்தினான். மூவரும் செல்பி எடுத்துக் கொண்டனர். இப்படி எதை எடுத்தாலும் இன்னுமும் அவருக்கு சந்திரா நினைவு போகவே இல்லையே ? எதையெதையோ யோசித்தவனுக்கு அந்த அரசியல்வாதி வந்ததை பற்றிய நினைவே இல்லாமல் போயிற்று. அடுத்த இரு தினங்களுக்கு மூச்சு விட முடியாமல் வேலை இருந்தது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து சான்றிதழ் கொடுக்க வந்திருந்தனர். மனைவிக்கு உடல் நலம் இல்லாததால் ஸ்ரீதரால் வர முடியவில்லை. அனைத்துமே நேர்மையாக சுத்தமாக தயாரிக்கப்பட்டது என்பதால் எந்த வித பிரச்சனையும் இருக்கவில்லை, என்றாலும் அவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு இவனிடம் இருக்கிறதே! இதெல்லாம் அவனுக்கு முதல் முறை என்பதாலும் மனதில் ஒரு சிறு பதட்டம் இருக்கத்தான் செய்தது. சந்திராவும் இப்போது வேலைக்கு வருவதில்லை.
அனைத்தையும் நல்ல விதமாக முடித்தவனுக்கு ஒரு சிறு பிரேக் தேவைப்பட்டது. அதனால் அனைத்து கவலைகளையும் மறந்து சிறிது நேரம் கடற்கரையில் அமர விரும்பினான். தன்னவளுக்கு மிகவும் பிடித்த இடம். அவள் தராத ஆறுதலை அந்த அலைகளாவது தருமா? அவள் மேனி படராத தன் உடலைக் கடல் அலைகளாவது சாந்தப்படுத்தட்டும். மனதில் அவனுக்கு அடங்காத கோபம் இருந்தாலும் அவனைச் சாந்தப்படுத்த கூடியவள், அவனைக் குளிர்விக்க கூடியவள் அந்தச் சந்திரா தானே? . மனமும் உடலும் அவளுக்காக ஏங்கியது. அவள் இன்னொருவர் மனைவி என்பதை அவனாலும் ஒத்துக் கொள்ள முடியவில்லை. அவளை பற்றிய அவன் எண்ண ஓட்டங்களால் இந்தச் சூரியன் அந்தச் சந்திரனை எரிக்கப்போவது எனக்கு மட்டுமே தெரியும்.

ஸ்ரீதரிடம் தொலைபேசியில் ,
“டே! மச்சான் எல்லாத்தையும் நேர்ல பேசறதை விட நீ ஹைதராபாத் வந்துடேன் , நானும் இங்க பேரெண்ட்ஸோட டைம் ஸ்பென்ட் பண்ண வந்துருக்கேன்..
” ஓ ! அவங்க இந்தியா வந்தாச்சா? பூரணிக்கு ஒடம்பு சரியில்லைன்னு சொன்ன? “
“நீ வாடா! எல்லாத்தையும் நேர்ல பேசிக்கலாம்”
மறுநாள் விமானம் .
இப்போது கடற்கரையில்……….
இதோ அவன் நின்றுக் கொண்டிருக்கிறான். அன்று அவளுடன் நின்றிருந்த இடத்தில் ………….. பழைய நினைவலைகளுடன்……..
“அம்மா! வாம்மா பீச்சுக்கு போகலாம்” என்று மகன் அழைத்தான் .
“போடா! இன்னிக்கு நான் வரல. எனக்கு இன்னிக்கு மூடு இல்ல. வேண்ணா அடுத்த வாரம் போகலாம்”
“சரிம்மா! நான் ஸ்ரீயோட போயிட்டு வரேன்” என்று கிளம்பினான் சூர்யா .
ஆனால் ஸ்ரீ அவன் தந்தையுடன் ஏதோ பிசினஸ் பார்டிக்குச் சென்று விட்டான். இந்த மாதிரி விஷயங்களை தவிர்க்காமல் கட்டாயம் செல்ல வேண்டும் என்பது ஸ்ரீயின் தந்தையின் கட்டளை. ஏனெனில் இதுபோலப் பார்ட்டிகளில் நிறைய பிசினெஸ் விஷயங்களும் நடக்கும். தொழில் செய்பவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தச் சந்தர்ப்பத்தையும் விட்டு விடக் கூடாது என்பதை ஒரு தொழில் அதிபராக மகனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தார்.
அதனால் தந்தை சொன்னதும் அவனும் சரி என்று கிளம்பி விட்டான். அவர்கள் இருவரும் காரில் செல்லும்போது யார் யார் வருகிறார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி எல்லாம் அவர் விளக்கிக் கொண்டே வருவார். அவர் சொல்லும் மனிதர்களைப் பற்றியும் அவர்களின் கம்பனியை பற்றியும் உடனே அவன் கூகிள் செய்து தெரிந்துக் கொண்டுவிடுவான். அப்படி அவன் தெரிந்துக் கொண்டவள்தான் பூர்ணிமா. அன்றைய தினமே அவளைப் பார்த்தவன் , எதிர்காலத்தில் அவளையே காதலித்து கைப்பிடித்தான்.
அவன் தந்தை அழைக்கிறார் என்றால் ஏதோ முக்கியமாகத்தான் இருக்கும் என்று சூர்யாவும் விட்டு விட்டான்.
“சரி! வந்ததற்கு சில நிமிடம் அலையில் நிற்கலாம்” என்று இவன் நின்றுக் கொண்டிருந்தபோதுதான் அவன் எதிர்பாராமல் சந்திராவைப் பார்த்தான்.
“என்னங்க! நீங்க இங்க ?” சூர்யாதான் முதலில் பேச்சுக்குக் கொடுத்தான் .
“பிரண்டோட வந்தேன்”
“ஓ ” அவனையும் அறியாமல் குரலில் ஏதோ ஒரு ஏமாற்றம் இருந்ததோ?
“அவங்க எங்க ?” அவனே கேட்டான்.
“அதோ” யாரோ ஒரு ஆண் மகனுடன் ஒரு பெண் நின்றிருந்தாள் நெருக்கமாக. அவன் கையைப் பிடித்துக் கொண்டு அலையில் ஓடி ஓடி விளையாடிக்கொண்டிருந்தாள்.
“மேடம் என்கூட வந்துட்டு பியான்சி கூப்பிட்டார்னு அவரோட போய்ட்டா. துரோகி”. வார்த்தைகள் திட்டினாலும் முகத்தில் தோழிக்கான மகிழ்ச்சி தெரிந்தது அவளின் புன்னகையில்.
இவனும் சிரித்தான். தன்னை அறியாமல் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்டதும் அவள் வெட்கப்பட்டு ஒன்றும் இல்லை என்று தலை ஆட்டினாள். அப்போது ஒரு பெண் வந்து,
” அய்யா! பூ வாங்கிக்கோங்க” என்றாள் . எவ்வளவு என்று அவன் கேட்டான். இவளோ இல்ல! வேணாம் வேற யாரையாவது பாருங்க என்று விட்டாள் .
“ஏன்! சந்திரா வாங்கி இருப்பேன்ல”
“நீங்க வாங்கினா அவங்க நம்மள தப்பா புரிஞ்சுக்குவாங்க”.
“என்ன தப்பு, நாம ப்ரண்ட்சு. இதுல என்ன தப்பு ?”
“தலையில் அடித்துக் கொண்டவள், இதுக்கு எப்படி பவர் சப்பளை குடுத்து பல்பு எரியவைக்கறது?”
“நம்மள புருஷன் பொண்டாட்டின்னு நினச்சுக்குவாங்க”
“ஓ ” அதுதான் அவன் வாயை மூடிக் கொண்டான்.
“நீங்க என்ன இங்க? ” அவள் தான் மௌனம் கலைத்தாள்.
“பிரண்டை பாக்கலான்னு வந்தேன். கடைசில அவன் அவங்க அப்பாவோட ஏதோ பிசினஸ் பார்ட்டிக்கு போய்ட்டான். அதான் தனிமைல இனிமை”
“ஓ நான்தான் கெடுதிட்டேனா ?”
“எதை?”
“உங்களோட இனிமை தனிமை” காற்றில் பறந்த முடியைக் கோதி விட்டாள் .
“அதெல்லாம் இல்ல. இதோ கிளம்பனும்”.
அடுத்து ஒரு சிறுவன் சுண்டல் கொண்டு வந்தான். இருவரும் அலையில் நின்றுக் கொண்டிருந்தனர். அப்போது சட்டென்று அங்கே ஒரு நாய் வந்தது. அப்போது பயந்தவள் இவன் கையைப் பிடித்து ஒட்டி நின்றாள். அதற்குப் பிறகு இருவரும் ஒட்டியே நின்றிருந்தனர் வெகுநேரம், கையைப் பிடித்துக் கொண்டு. அவள் முகம் முதல் அனைத்து உடல் பகுதியுமே அவனை உரசிக் கொண்டுதான் இருந்தது.அது அவர்களுக்குத் தெரிந்திருந்ததா? ஆனால் நேரம் போனது, தெரியவில்லை. மாலை மயங்கும் நேரம். அழகான சூரியன், கொதிக்காமல். அதே நேரம் மனதிற்கு இதமாய். சந்திராவுக்கு மனதில் ஏதேதோ எண்ணங்கள்.
சூர்யாவுக்கும் அதேதான். இத்தனை அருகில் தன் மனதை வருடியவள், வசப்படுத்தியவள், இதோ என்னை ஒட்டி நிற்கிறாள். அவளின் மேனி என்னைத் தழுவிக் கொண்டு என்ன ரம்யமான நேரம்? அப்போது அந்த இதமான மௌனத்தை அங்கே ஓடி வந்த குதிரை க(ணை)லைத்தது. இருவருமே சுய நிலை அடைந்தனர்.
“ச! மனசுக்கு கடிவாளம் போடணும்” சூர்யா நினைத்தான்.சந்திராவும் சட்டெனெ நகர்ந்து கொண்டாள் . அந்த ஒரு நொடி இருவருமே மனதில் நினைத்ததை சொல்லி இருந்தால் இப்போது அவர்கள் இப்படி யாரோ போல நின்றிருக்க தேவை இருந்திருக்காது. அப்போது சொல்லவில்லை என்றாலும் மனதில் இருப்பதை சூர்யா வேறொரு நாளில் சொல்லி விட்டான். ஆனால் சந்திரா அப்போதும் சொல்லவில்லை. இப்போதும் சொல்லவில்லை. எதிர்காலத்தில் ?
அந்த நொடி ஏன் அவள் தவிர்க்க வேண்டும்?
‘இல்ல! நான் ஏதாவது சொன்னா அவரோட படிப்புல கவனம் இருக்காது. நான் எதுவும் சொல்லக் கூடாது, அவரோட படிப்புதான் அவருக்கு வாழக்கை, வெற்றி எல்லாமே’ என்று அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் .
இப்போதும் அதேப் போல. அந்தச் சம்பவத்தையே நினைத்துக் கொண்டு அதே கடற்கரையில் நின்றுக் கொண்டிருந்தனர் இருவரும் வேறு வேறு இடத்தில் . அவள் இல்லாத கடல் அலையில் நிற்க அவனுக்கு விருப்பம் இல்லை . கேரளாவிலும் அவன் கடற்கரைக்குச் சென்றதில்லை.
சந்திராவும் அங்கே கடற்கரையில்,
அந்த மணலில் கால் புதைய நடக்க அவளுக்குத் தெம்பு இல்லை. அங்கிருந்த பலவிதமான மக்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பல காதலர்கள் உல்லாசமாக இருந்தனர். மனம் சூர்யாவுக்காக ஏங்கியது. அன்று விட்டது எல்லாம் இன்று பெற முடியுமா ? அவன் கைப்பிடித்து நடக்க ஆசையாக இருந்தது. அவன் கையால் பூ வாங்கிக் கொள்ள ஆசையாக இருந்தது. எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட ஆசையாக இருந்தது. ஏதேதோ எண்ணத்தில், ஏக்கத்தில் கண்ணீர் உடைத்து வெளியில் வரக் காத்திருந்தது. அவள் கண்ணைக் கண்ணீர் மறைத்தது. வழக்கம்போலக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள் நிமிர்ந்தால் அங்கே சூர்யா நின்றுக் கொண்டிருந்தான்.
தொடரும்…………..

4 thoughts on “என் வாசம் நீ உன் சுவாசம் நான் – 18”

  1. Kalidevi

    Ethukaga innoruthana mrg panikitta chandra apadi ena tha achi rendu perum love panringa inum manasula aasaiya vachitu irukinga thavichitu irukinga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *