அத்தியாயம் 2
சமர் இறந்து போய் ஒரு வாரம் ஆகி இருந்தது. அதே போல் வீரன் காஞ்சிபுரம் மாற்றலாகி வந்தும் ஒரு வாரம் ஆகி இருந்தது. தலையைச் சுற்றி இருக்கும் மத்த வேலைகளுக்கு நடுவில் அவர்கள் பார்க்க நினைத்த வேலைகளைப் பார்க்க முடியவில்லை இருவராலும்.
சமரின் இறுதிக்காரியங்கள் அனைத்தையும் குறையில்லாமல் செய்து முடித்த பொன்னன். ஜெட்லாக், தம்பியின் பிரிவால் வாடிக்கிடக்கும் மனம், சீதோஷ்ண மாற்றத்தால் ஏற்பட்ட உடல் உபாதைகள் என எதையும் பொருட்படுத்தாமல் தம்பியின் நண்பர்களைச் சந்தித்துப் பேசினான். அவர்கள் சொன்ன தகவல்களைக் கேட்டவனுக்கு தலையோடு சேர்த்து மனதும் வலித்தது.
“சமர் கொஞ்ச நாளா, சரியாச் சொல்லணும் னா ஒரு பதினைந்து, இருபது நாளா இப்படித்தான் டென்ஷனாவே இருந்தான். என்ன ஏதுன்னு கேட்டுப் பார்த்தோம் வாயைத் திறக்கல.
எங்க கூடவே இருப்பான். ஆனா எங்களை விட்டுத் தள்ளித்தான் இருப்பான். அதை எப்படிச் சொல்றது, எங்க பக்கத்தில் வரவே மாட்டான். நாங்களா போய் பேசினால் கூட எங்களைத் தொடவிட மாட்டான்.
எதையோ நினைச்சு ரொம்ப பயப்படுற மாதிரி அடிக்கடி அவனோட உடம்பு தூக்கிப்போடும். அவன் அப்பப்ப பீர் அடிப்பான் அது உங்களுக்கே நல்லாத் தெரியும். ஆனா இந்த இடைப்பட்ட நாளில் ஒரு சொட்டு கூட குடிக்கல. அதையும் மீறி நாங்க யாராவது கம்ப்பெல் பண்ணா, காரணமே இல்லாம சண்டை போட்டுட்டு கிளம்பிப் போயிடுவான்.
எனக்கென்னவோ அவன் யாரையோ இல்லை எதையோ நினைச்சு ரொம்ப பயத்தில் இருந்தான்னு தோணுது. அவனுக்கு உதவி தேவைப்பட்டிருக்கு. ஆனா அந்த உதவியை யார்கிட்ட கேட்கிறதுன்னு தெரியாம இப்படிப் பண்ணிக்கிட்டான் பைத்தியக்காரன்.” கவலையோடு சொல்லி இருந்தான் நண்பன் ஒருவன்.
அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட பொன்னனுக்கு மனம் கனத்துப் போனது. “என் தம்பி ஏதோ பெரிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறான். அதில் இருந்து தப்பிக்க யாரையும் நம்பாதவன் என்னை நம்பி, என்னை அவன்கிட்ட வரவழைக்க நினைச்சிருக்கான்.
நான் ஒரு பைத்தியம் அவன் கொஞ்சம் ஸ்ருதி குறைஞ்சு பேசம் போதே என்ன ஏதுன்னு விசாரிச்சு இருக்கணும். அப்படிச் செஞ்சிருந்தா என் தம்பி இன்னைக்கு என்னோட இருந்திருப்பான்.” உலகத்தின் ஒட்டுமொத்த விரக்தியையும் குத்தகைக்கு எடுத்தது போல் முகத்தை வைத்துக்கொண்டு தன் வீட்டு சோபாவில் பின்பக்கமாகத் தலையைச் சாய்த்துக் கிடந்தான்.
அவன் தாய், தந்தை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அவன் அருகே வரத்தயங்கினர். நீ சொல்லு, நீங்க சொல்லுங்க என்கிற முணுமுணுப்பான வார்த்தைகள் அவன் காதில் விழ, கண்ணைத் திறந்தவன் தயக்கத்தோடு நின்றிருந்த தாய், தந்தையைக் கண்டான்.
“என்னாச்சுப்பா?” என்றவன், தம்பியைப் பற்றி விசாரிக்கப் போன இடத்தில் என்ன நடந்தது என்று கேட்பதற்காக யோசிக்கிறார்கள் போல, என தனக்குத்தானே நினைத்துக்கொண்டு நடந்தைச் சொல்ல முயற்சிக்க, “சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத பொன்னா, உன் தம்பிக்கு என்ன அவசரமோ அவன் போய் சேர்ந்துட்டான். அவன் ஏன் செத்தான், எதுக்கு செத்தான்னு கண்டுபிடிக்கிறதால் மட்டும் என்ன மாறிடப் போகுது.
நீ இப்படி நிமிஷ நேரம் கூட ஓய்வில்லாமல் அலையுறதைப் பார்க்க எங்களுக்கு கஷ்டமா இருக்கு. இதெல்லாம் வேண்டாமே. ஒன்னு நீ திரும்ப கனடாவுக்குப் போயிடு. இல்லையா எந்தத் திட்டத்தில் இந்தியா வந்தியோ அதைச் செயல்படுத்தி, கவனம் மொத்தத்தையும் உன் முன்னேற்றத்தில் காட்டு.
எங்க கண் நிரந்தரமா மூடும் முன்னாடி நீ சந்தோஷமா வாழ்வதை நாங்க பார்க்கணும்.” தடுமாறினாலும் சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டார் வேலன்களின் தந்தை.
“உங்க கஷ்டம், வருத்தம், பயம் எல்லாமே நியாயமானது தான். நான் கண்டிப்பா நல்ல நிலைமைக்கு வருவேன். உங்க கண் முன்னாடி வாழையடி வாழையா வாழ்வேன்.” பொன்னன் சொல்ல கேட்டுக்கொண்டிருந்த தாய், தந்தைக்கு மனம் நிறைந்தது.
“அதே சமயத்தில் என் தம்பிங்கிற வாழைக்குருத்தை அடியோடு பொசுக்கியவங்களை நான் சும்மா விடப்போறதும் இல்லை. என் உடல்நிலை எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு என் மனநிலையும் முக்கியம் தான். அந்த மனநலம் என் தம்பி சாவுக்குக் காரணமானவங்களைக் கண்டுபிடிச்சா மட்டும் தான் சரிசமமா இருக்கும்.
என்னோட ஸ்பெஷாலிட்டி மல்டி டாஸ்கிங். என்னால் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் சிறப்பா செய்ய முடியும். செய்து காட்டுறேன்.” என்றுவிட்டுத் தம்பியின் அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டான் பொன்னன்.
தம்பியின் மரணத்திற்கு நியாயம் தேடும் தன் வேகம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக, சமர் இறந்து போன அதே அறையைத் தன்னுடைய அறையாகப் பயன்படுத்தத் துவங்கி இருந்தான். சரியான உறக்கம் இல்லாததால் பல நேரங்களில் தம்பியின் உடல் இன்னமும் அந்த அறையின் மின்விசிறியில் தொங்கிக் கொண்டிருப்பது போன்ற தோற்றம் தெரியும்.
“என்னை இப்படி விட்டுட்டியே அண்ணா” என தம்பி கத்திக் கதறுவது போல் தோன்றும். தம்பியிடம் பேசுவது போல் தனக்குத் தானே ஆறுதலும், தைரியமும், ஊக்கமும் கொடுத்துக்கொள்வான் பொன்னன். அவனுடைய இந்த அதீத ஆர்வம் தான் அவன் தாய், தந்தையரைப் பயமுறுத்தியது.
இங்கே தன் ஸ்டேஷன் காவலரைக் கூப்பிட்டுக்கொண்டு பவளத்தின் வாகனம் கிடந்த இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான் வீரன்.
நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் மண்பாதையை நோட்டம் பார்த்துக்கொண்டே முன்னேறினான் வீரன். அவன் சிந்தனை எல்லாம், இந்தக் காட்டுக்குள்ள எதைத் தேடி இல்லை யாரைத் தேடி பவளம் வந்திருப்பா என்பதில் தான் இருந்தது.
பவளத்தின் வாகனம் கடைசியாகக் கிடந்த இடத்தில் காவலர் தன் வாகனத்தை நிறுத்த, “பக்கத்தில் வித்தியாசமான இடம் ஏதாவது இருக்கா?” சிகரெட் புகைத்துக்கொண்டே கேட்டான் வீரன். அவன் கேள்விக்கு பதிலாகக் கிடைத்தது காட்டின் நடுவே இருக்கும் கல் மண்டபத்தைப் பற்றிய தகவலைச் சொன்னார் உடன் வந்தவர்.
கண்டிப்பாக அங்கே ஏதோ சட்டவிரோதச் செயல் நடந்திருக்கிறது, அதைக் குறி வைத்து தான் அவள் சென்றிருக்கக்கூடும் என்று கணித்தவன் தன் பாட்டிற்கு கானகத்திற்குள் இறங்கி நடக்கத் துவங்கினான்.
கிட்டத்தட்ட இருபது மாதங்களுக்கு முன்பு பவளம் நடந்து போன அதே பாதையில் நடந்து அந்தக் கல்மண்டபத்தையும் அடைந்தான். புராதனச் சின்னங்களின் எச்சம் என்று தெரிந்திருந்தும், தங்கள் வருகையின் அடையாளமாக, தங்கள் காதலின் ஆழத்தைக் காட்டவேண்டி கல்லில் ஆழமாகத் தங்கள் பெயரை கிறுக்கி வைத்திருந்தார்கள் மக்கள். அதைப் பார்த்து முகம் சுழித்தவாறு அந்த இடம் முழுவதும் சுற்றி சுற்றி வந்தான்.
சின்னச்சின்ன விஷப்பூச்சிகளைத் தவிர வேறு எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. இங்கே எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கடைசியாகப் பவளம் விசாரித்த தற்கொலை வழக்கை வைத்து தான் மேற்க்கொண்டு முன்னேற முடியும் என்று இல்லம் திரும்பினான் வீரன்.
அதே சமயம் பொன்னனும் கூட, நண்பர்கள் பக்கம் தம்பி சமருக்குப் பெரிதாகப் பிரச்சனை எதுவும் இல்லை என்றால், ஒருவேளை அவன் பணிபுரிந்த இடத்தில் ஏதும் பிரச்சனை இருக்குமோ என்று யோசித்தான். அந்த நினைப்பு வந்தவுடன் தம்பி வேலை செய்த கம்பெனி வந்தவன் மேமேஜனரை சந்தித்துப் பேசித் தம்பியைப் பற்றி சில தகவல்களைத் தெரிந்துகொண்டான்.
“சமர் ரொம்ப நல்ல டைப். நல்லா கலகலன்னு இருப்பார். பொண்ணுங்க கூட அவர்கிட்ட ரொம்ப ஜோவியலாப் பேசுவாங்க. நிறைய பேர் கூடப் பழகினாலும் பாக்கியராஜ் கூட தான் சமர் ரொம்ப க்ளோஸ்.
ஆனாப் பாருங்க ராஜ் ரொம்ப நாளா ஆபிஸ் வரல. போன் கால், மெயில் எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை. அவர் பேப்பர் போட்டதா கன்சிடர் பண்ணி அவர் வேலையை வேற ஆள் வைச்சு செஞ்சுக்கிட்டு இருக்கோம்.” என்று பேச்சோடு பேச்சாக தங்கள் கஷ்டத்தையும் சொன்னார் மனிதர்.
பட்டுக் கத்தரித்தது போல் நடுநடுவில் அவர் பேச்சைக் கத்தரித்து, தனக்குத் தேவையான தகவல்களை வாங்கிகொண்டு ராஜ் இல்லம் சென்றான் பொன்னன்.
அங்கே ராஜின் மனைவியோ, “கிட்டத்தட்ட பத்து நாளா வீட்டுக்கு வராம ஊர் சுத்தப்போயிட்டான் பைத்தியக்காரன். பொண்டாட்டி புள்ளையைப் பத்தி நினைப்பே கிடையாது. உங்களை அவன் கூட பார்த்ததே கிடையாதே. ஊர் முழுக்க கடன் வாங்கி வைச்சது பத்தாதுன்னு உங்கட்ட வேற வாங்கி இருக்கானா?” என்று கடிந்து கொள்ள ஆரம்பித்தார்.
விசாரிக்கச் சென்ற பொன்னன், “உங்க புருஷனைப் பத்தின தகவல் கிடைச்சா கண்டிப்பா உங்களுக்குச் சொல்றேன்.” என்று சமாதானம் சொல்லிவிட்டு வீடு திரும்பினான்.
இரண்டு நாள் கழித்து ராஜ் கிண்டி சுரங்கப்பாதை அருகில் இறந்து கிடந்ததாகவும், அவனைத் தேடி அலுவலகம் வீடு எனச் சுற்றியதால் பொன்னன் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு வரவேண்டும் என்று அழைப்பு வர அவனும் கிளம்பினான்.
“என்னங்க இவன் போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் போறான். இவனை இவன் போக்கில் விட்டது தப்பாப் போச்சோ. எனக்கு என்னவோ ரொம்பப் பயமா இருக்குங்க. நாம வேணும் னா சமரைப் பத்தி அவன்கிட்ட சொல்லிடுவோமா? அப்பவாச்சும் இப்படிப் பைத்தியக்காரன் மாதிரி ரோடு ரோடா சுத்தாம அடுத்த வேலையைப் பார்ப்பான் இல்ல.” தாய் மனம் பதறியது.
“அந்தத் தப்பை மட்டும் பண்ணாத. எவ்வளவு தூரம் போறான்னு பார்ப்போம். எப்படியும் ஒரு கட்டத்துக்கு மேல அவனால் போக முடியாது.” என்றபடி பெருமூச்சுவிட்டார் சமரின் தகப்பன்.
கிண்டி காவல்நிலையம் வந்து சேர்ந்த பொன்னனிடம் பரஸ்பர அறிமுகத்துக்குப் பின்னர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார் காவல் ஆய்வாளர்.
பொன்னன் எதையும் மறைக்க நினைக்காமல், தன் தம்பி தற்கொலை செய்துகொண்டது, அதைப் பற்றி விசாரிப்பதற்காக தம்பிக்கு நெருக்கமான ராஜைச் சந்திக்கச் சென்றது அனைத்தையும் சொல்ல, அந்த ஆய்வாளரோ நெற்றியை வருடினார். காரணம் பாக்கியராஜ் கூட விஷம் குடித்து தற்கொலை தான் செய்துகொண்டிருந்தான்.
இரண்டு நாள்களாக பிச்சைக்காரர்களோடு அங்கேயே தங்கி இருந்த ராஜ், நேற்று மாலை வித்தியாசமான பாட்டில் திரவத்தைக் குடிப்பதை நேரடியாகப் பார்த்திருக்கிறார் ஒருவர். அந்த வகையில் ராஜின் மரணம் தற்கொலை என்று முடித்து வைக்கப்பட்டிருந்தது.
இப்போது திடீர் திருப்பமாக ராஜ் உடன் வேலை செய்த ஒருவனும் தற்கொலை செய்துகொண்டான் என்பது சற்றே யோசிக்க வைத்தது அந்த ஆய்வாளரை. இருந்தாலும் இருக்கும் பல வேலைகளுக்கு நடுவில் இதைப் பெரிதாக யோசிக்க முடியாது என்று நினைத்தவர், பட்டும் படாமல் பேசி பொன்னனை அனுப்பிவைத்தார்.
இரண்டு தற்கொலைக்கு நடுவிலும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று யூகித்த பொன்னன், ராஜ் விஷம் குடித்ததை நேரில் பார்த்த பிச்சைக்காரர் புலம்பிக்கொண்டே காவல் நிலையத்தில் இருந்து வெளியே வருவதைக் கண்டதும், அவர் அருகே சென்று, “ஏதாவது சாப்பிடுறீங்களா?” மென்மையாகக் கேட்டான்.
அவரோ அவன் முகத்தைச் சில நொடிகள் உற்று நோக்கிவிட்டு, “கேமரா எங்க இருக்கு?” என்றார் பரிதாபமாக. நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று பரிதாபபட்டவன், அவரை அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கிக்கொடுத்தான்.
பெரியவர் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், இரவு சாப்பாடையும் கையில் வாங்கிக்கொடுத்துவிட்டு அதன் பிறகு ராஜைப் பற்றிய தகவல்களைக் கேட்டான்.
“அந்தப் பையனைப் பார்க்கும் போதே ராஜகளை தெரிஞ்சுச்சு தம்பி. இராத்திரி கொசுக்கடியிலும், எலி ஏறி விளையாடும் இடத்திலும் வாழனும் னு எங்களுக்குத் தான் தலையெழுத்து. உனக்கு என்னப்பா வந்துச்சுன்னு கேட்டேன். பதிலே சொல்லல. அடிக்கடி அழுவான், எதையோ நினைச்சு பயப்படுற மாதிரி உடம்பு தூக்கித் தூக்கி போடும். நல்லாத்தான் இருந்தான் என்னவோ திடீர்னு இப்படிப் பண்ணிக்கிட்டான்.” தன் மனத்தாங்கலை அவர் கொட்ட, பொன்னனின் புருவங்கள் முடிச்சிட்டது.
தன் தம்பிக்கு இருந்ததாக அவன் நண்பர்கள் சொன்ன அதே அறிகுறிகள் தம்பயின் நண்பனிடமும் இருந்திருக்கிறது. இருவரும் ஒரே போல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் இருவரின் பிரச்சனையும் ஒன்று தான் இல்லை ஒருவர் தான் என்கிற தீர்மானத்திற்கு வந்தான் பொன்னன்.
அதே சமயம் பவளம் விசாரித்த தற்கொலை வழக்கில் இறந்து போன கல்லூரி மாணவன் கணேஷின் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தான் வீரன்.
“எத்தனை முறை தான் சார் இப்படி வந்து தொல்லை பண்ணுவீங்க. அக்கம் பக்கம் தலைகாட்ட முடியல. என் பையன் செத்தது தான் செத்தான் எங்களைத் தினம்தினம் சாவடிக்கிறான்.” கடுமையாகக் காய்ந்தார் அவன் தந்தை.
“உங்க பையன் கேஸை விசாரிக்கிறேன்னு கிளம்பி தான் என் வருங்கால மனைவி இறந்து போய் இருக்காங்க. இதுக்கு என்ன சொல்லப் போறீங்க. உங்க பையன் சாவுக்குக் காரணமானவங்களை சும்மாவிட உங்களுக்கு வேண்ணா பெரிய மனசு இருக்கலாம். ஆனா என் வாழ்க்கையை அழிச்சவங்களை நான் சும்மாவிடப் போறது இல்லை.” வீரன் குரல் உயர்த்த, “உங்களுக்கு என்ன வேணும்.” என்று இறங்கி வந்தார் அந்தக் குடும்பத்தலைவர்.
“உங்க பையனுக்கு என்ன ஆச்சு” வீரன் விசாரணையைத் துவங்க, “என் பையன் கேளம்பாக்கத்தில் ஒரு தனியார் இன்ஞினியரிங் காலேஜில் இரண்டாவது வருஷம் படிச்சுக்கிட்டு இருந்தான். எப்ப பார் வீடு தங்க மாட்டான். ப்ரண்ஸ்ஸோட தியேட்டர், மால், ஹோட்டல் னு சுத்திக்கிட்டு இருப்பான்.
ஆனா அவன் செயல்களில் திடீர்னு ஒரு மாற்றம். ஊர் சுத்த மட்டும் இல்லை, காலேஜ் போகக் கூடப் பயந்து வீட்டுக்குள்ளேயே அடைஞ்சுகிடந்தான். என்ன ஏதுன்னு நாங்க எத்தனையோ முறை கேட்டுப் பார்த்தோம் பதில் சொல்லல. எப்பப் பார் விட்டத்தை வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருப்பான். சில நேரம் கத்திக் கதறி அழுவான், கோபத்தில் பொருளை எல்லாம் போட்டு உடைப்பான்.
என்ன பிரச்சனைன்னு சொல்லப்போறியா இல்லையான்னு அடிச்சுக் கூடக் கேட்டுப் பார்த்தோம், கடைசி வரைக்கும் வாயைத் திறக்கல. இவன் ப்ரண்ட்ஸ் எல்லாம் பணக்கார வீட்டுப்பசங்க. அவங்ககிட்ட விசாரிக்க முடியல. என்ன பண்ணி அவனைச் சரிபண்றதுன்னு நாங்க யோசனையில் இருந்த போது, அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம் னு ஒருநாள் எங்க கண்ணு முன்னாடியே மாடியில் இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டான்.” என்று முடித்தார்.
“தற்கொலைக் கடிதம் மாதிரி ஏதாவது?” வீரன் கேட்க, இல்லை என்று தலையாட்டினார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இரண்டாம் வருடம் என்றால், இப்போது நான்காம் வருடம். அவனின் நண்பர்களிடம் விசாரித்தால் ஏதாவது தகவல் கிடைக்கும் என்று நினைத்த வீரன் அவர் சொன்ன கல்லூரிக்குச் சென்று விசாரிக்க கிடைத்த தகவல் குழப்பத்தை அதிகரித்தது என்றே சொல்லவேண்டும்.
நான்கு பேர் கொண்ட அந்த நண்பர்கள் பட்டாளத்தில் கணேஷ் இறந்து போன ஒரே வாரத்தில், ஒருவன் தன் அறையில் தூக்குப் போட்டு இறந்திருக்கிறான். ஒருவன் வெளிநாடு சென்றுவிட இன்னொருவன் மட்டும் வேறு கல்லூரிக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு சென்று படித்து வருகிறான் என்று புரிந்து அவனை விசாரிக்கச் சென்றான் வீரன்.
👌🏻👌🏻👌🏻👌🏻 pls next ud seekiram podunga… Continuity miss aaguthu paa