Skip to content
Home » எழுத்து உலகம் தனி உலகம்

எழுத்து உலகம் தனி உலகம்

     
          எழுத்து உலகம் தனி உலகம்

இலக்கிய அமுதன் , இசை செல்வன் , கலைச்சிற்பி மூன்று பேரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். அவர்கள் பெயர்களை போலவே தம்தமது கலையில் லயிக்க பெற்றவர்கள். படித்து முடித்து வேலை செய்ய ஊர் விட்டு ஊர் வந்து ஒரு வீட்டை வாடகை எடுத்து தங்கியிருக்கிறார்கள். பக்கத்தில் உள்ள அனைவரிடமும் நல்விதமாக பழகுகிறார்கள்.

பக்கத்து வீட்டில் காலேஜ் மூன்றாம் வருடம் பயிலும் தமிழ் என்பவன் இருந்தான். அவ்வப்போது இவர்களிடம் வந்து கதைப்பது கலாய்ப்பது சகலமும் பேசுவது என்று விடுமுறை நாட்களில் வந்து போவான். அன்று ஞாயிற்றுக்கிழமை.

“அண்ணே … அண்ணே … யாராவது இருக்கீங்களா ? ” தமிழ்

” வாடா என்ன விஷயம் காலாங்காத்தால வந்துருக்க? காபி குடிக்கியா? ” கலை

“அதலாம் அப்புறம் பாத்துகலாம்ணே நான் இப்ப ஒரு முக்கியமான விஷயம் கேக்க வந்திருக்கேன் ” தமிழ்

“அப்படி என்னடா தலைபோற விஷயம் இவ்வளவு காலையில” கலை

“அண்ணே நா இப்ப தேர்ட் யேர் லாஸ்ட் செம். காலேஜ்ல ப்ரோக்ராம் கண்டெக்ட் பண்ணீருக்காங்க. எவனோ என் பேரையும் சேத்து குடுத்துருக்கான். அதுவும் முத்தமிழ் கலையில் சிறந்தது இயலா இசையா நாடகமான்ற தலைப்புல பேசனுமாம் . இன்னும் ரெண்டு நாள்ல ப்ரோக்ராம் எப்படியாவது ஹெல்ப் பண்ணுணே “

“ஹா ஹா அடேய் இவ்வளவு தான் விஷயமா ? இந்த கலை இருக்கும் போது கலை மீது ஐயமா? நீ போயிட்டு பொறுமையா சாப்ட்டு வாடா . நான் உனக்கு நாடககூத்து பத்தி சொல்லி தாரேன்” கலை.

“ஹப்பாடி என் நெஞ்சில பால வார்த்தீங்க அண்ணே . நான் போய்ட்டு அப்புறம் வாரேன்.”

“ஹா ஹா ஹா சரிடா” கலை.

மணி பத்து.

“அண்ணே.. “தமிழ்

“வாடா .. சாப்டியா ?” இலக்கியன்

“சாப்டேன்ணா .. கலை அண்ணே இல்லை?” தமிழ்

“குளிக்க போய்ருக்கான்டா . என்ன சொல்லு காலேஜ் ப்ரோக்ராம் பத்தியா?” இலக்கியன்

“ஆமாண்ணே ” தமிழ்

“இங்க வா வந்து உட்காரு. இங்க பாருடா முத்தமிழ் கலைகள்ல இயல் தான்டா சிறப்பு வாய்ந்தது…சரி உன்ட்ட ஒன்னு கேக்ரேன். ஒருவரோடு பேசுவதிலோ ஒரு காட்சியை பார்ப்பதிலோ இல்லாத திருப்தி நீ எழுதும் போது உனக்கு கிடைக்குமா ?” இலக்கியன்

“என்ன அண்ணே கேள்விலா கேக்ரீங்க எனக்கு அதலாம் தெரியாதே ” தமிழ்

“சரி சரி சொல்றேன் கேளு. அதுக்கு பதில் கிடைக்கும். ஓகேவா. எழுத்து தலைமுறை தலைமுறையா கடந்து வரும். நம்ம தமிழ் மொழியை உலகிற்கு அறிய செய்ய உதவும். சந்ததிகளை வழிநடத்தும். ” இலக்கியன்

“அண்ணே எழுத்து எப்படி வழிநடத்தும்னு சொல்றீங்க ? ” தமிழ்

“எழுத்துங்கறது ஒரு மொழியின் அடிப்படைக்கூறு. மொழிக்கு நிலைபேறு தருவதே எழுத்து தான். ஒலி வடிவத்திற்கு வரி வடிவம் தருவது எழுத்து. எழுதரதாலதான் எழுத்துனு பெயர் வந்ததுச்சி. நீ படிச்சி இவ்வளவு தூரம் வர எது காரணம்? எழுத்து. நீ படிக்கிறது எதை பார்த்து எழுதி இருக்கும் புத்தகங்கள் பார்த்துதானே? ” இலக்கியன்

“ஆமாங்கண்ணா ” தமிழ்

“சரி மொதல்ல எழுத்து பிறந்த கதையை சொல்றேன் நல்லா அப்சர்வ் பண்ணிக்க. ஆதிகாலத்தில் மனுஷன் சக மனுஷங்க கூட பேச இயலாதவனா தான் இருந்தான். அதாவது முதல்ல தான் கண்ட ஒரு பொருளுக்கு பெயர் வைக்க கூட தெரியாத அறியாத விலங்கு நிலையில் தான் இருந்தான். அப்புறம் நாளாக நாளாக அவனுக்கு கிடைச்ச அனுபவத்தையும் அறிவையும் வைத்து பொருள்களோட உருவத்தை சித்தரித்து மத்தவங்க கிட்ட காட்டினான். அடுத்ததா அந்த பொருள்களின் பண்புகளை செய்கையால் சொல்ல ஆரம்பிச்சான். அடுத்ததா குறுக்கெழுத்து போல ஒரு பொருளுக்கு ஒரு எழுத்து இட்டு எழுத்து வடிவம் கொடுத்தான். அடுத்ததா எழுத தெரியாமல் பேச்சு மூலமா சொற்றொடர் அடையாளத்தை பழக்கினான்.

இந்த எழுத்தின் வளர்ச்சி நிலைகள் படிப்படியாக வளர்ந்தது. முதலில் சித்திர எழுத்து, இதை எகிப்தியரும் பாபிலோனியரும் ஆரம்ப காலத்தில் உபயோகிச்சிருக்காங்க. அடுத்து தன்மை எழுத்து, உணர்வு எழுத்து , ஒலி எழுத்து இது ஒலிக்கு வடிவம் தந்து எழுதப்படுவது.”

“இவ்வளவு வரலாறு இருக்குதா இதுல” வியந்தான் தமிழ்

“ஆமா. எழுதுதல் என்பதற்கு சித்தரித்தல்னு பொருள் வரும். சித்திர எழுத்துக்கள் கண்ணெழுத்துக்கள்னு சொல்லப்படுது. சங்க காலத்தில் கண்ணுள் வினைஞர் அதாவது சித்திரகாரர்கள் இருந்தனர். அரசாங்கத்துக்கு திருமுகம் எழுதுபவர்களை கண்ணெழுத்தாளர்னு சொன்னாங்க.

அசோகர் காலத்தில் பிராமி எழுத்துக்கள் பிரசத்திப்பெற்றன. கிரந்த எழுத்துக்கள் (ஷ ஜ ஹ) வடமொழிகாரர்களால் உருவாகின. சங்கேத எழுத்துக்களும் தோன்றின. ” இலக்கியன்

“வாவ் சூப்பர்ணா நிறைய விஷயங்கள் கத்து வச்சிருக்கீங்க ” தமிழ்

“என்ன வாவ் .. ஏண்டா அவன் சொன்னது ஏதாவது புரிஞ்சிதா உனக்கு. இசைக்கு நிகரா இந்த உலகில் ஏதாவது உண்டாடா ” இசைசெல்வன்

“புரிஞ்சிதுணா மெய்யாலுமே மெய்சிலிர்த்துட்டேன். சரி நீங்களும் சொல்லுங்க இசையை பத்தி. காசா பணமா சொல்லுங்க சொல்லுங்க தெரிஞ்சிக்கிறேன் ” தமிழ்

“அடேய் கொழுப்ப பாத்தியா இரு இரு சொல்லி குடுத்து பரிசு வாங்கிட்டு வா லம்பமா உன்கிட்ட ஒரு அமௌண்ட்ட ஆட்டைய போடுரேனா இல்லையா பாரு” இசை

“அதுக்கு என்னனே குடுத்துட்டா போச்சு சொல்லுங்க”  தமிழ்

“ம்ம்ம் எல்லாத்துக்கும் ரெடியா தான் இருக்க போல. சரி கேளு. இசையிடம் இல்லாத தீர்வு வேறெங்குமே கிடைக்காது . அழுத்தத்தில் ஆழ்ந்திருக்கும் மனசுக்கு நல்ல இசை கண்டிப்பா அந்த அழுத்தத்திலிருந்து விடுவிச்சி அகச்சூழலை மாற்றும்.
இசை என்பது தமிழிசையாகும். பாத்தியா உன் பேர்லயே தமிழ்னு இருக்கு ஆனா இசையை பத்தி தெரியாம இருந்துருக்க” இசை

“ஆமாண்ணே அப்புறம் சொல்லுங்க” தமிழ்

“இசை என்னும் சொல்லுக்கு இசைவிப்பது, ஆட்கொள்வதுனு பொருள் உண்டு. இசை மக்கள் மனதை வயப்படுத்தும். இசையில் வரும் இனிய ஒலிகள் நம் செவி வழியே புகுந்து, இதயத்தை வருடி மனதை மயக்கும் வல்லமை வாய்ந்தது. இசை வழியா நம் பண்பாடு கலாச்சாரம் வாழ்க்கை முறைகளை சங்க காலந்தொட்டே இசையால் சொல்லப்பட்டு வந்திருக்கு.

தமிழிசை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செவ்விய கலையா இருந்திருக்கு. இன்னைக்கு தழைந்தோங்கி இருக்கும் கர்நாட்டிக் மியூசிக்கே தமிழிசையின் மறுவடிவம் தான்.

இசைக்கருவிகள்னு பாத்தனா அப்ப பறை
யாழ் தான் இருந்திருக்கு. யாழ் என்பது பண்ணிசையை குறிக்கும். இது மிடற்றிசை, நரம்பு கருவியிசை , காற்று கருவியிசைகளை உள்ளடக்கியதாகும். இதுல மிடற்றிசைனா குரலிசை. நரம்பு கருவியிசைனா யாழ் போன்ற தந்தி கருவியை இசைப்பது. காற்று கருவியிசைனா புல்லாங்குழல் போன்ற கருவிசையை இசைப்பது.

பண் வகைகள் ‘யாழின் பகுதி’ யாகவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ யாகவும் சொல்லியிருக்காங்க.

பறை என்பது தாளம். தாளத்தை கொட்டி கொடுக்கும் பல்வேறு தாளகருவிகளை உள்ளடக்கியது. பண்டைய தமிழ் மக்கள் ஆலயங்களில் தமிழிசையின் மகத்துவம் நிலைபெறனும்னு இசைத்தூண்கள் அமைச்சாங்க. அது இன்னைக்கும் இருக்குது அந்த தூண்கள தட்டினால் இனிமையான இசை ஒலிக்கும். ” இசை

“வாவ் அண்ணா இசையோட வரலாறு ஆஸம் “தமிழ்

” என்னடா ஆஸம் பாசம்னுட்டு . மொதல்ல யார்ட்ட வந்து நீ ஹெல்ப் கேட்ட ? ” கலை

“உங்ககிட்ட தான் அண்ணே ” தமிழ்

“அப்புறம் என்ன வெண்ணைக்குடா என்ன விட்டு அவன்க கிட்ட கேட்ட? இப்ப நான் சொல்லனுமா வேண்டாமா ? ” கலை

“அண்ணே மன்னிச்சிருங்க அண்ணே நாமலாம் அப்படியா பழகிக்கிருக்கோம்? சரி இப்ப உங்க டர்ன் சொல்லுங்க அண்ணே” தமிழ்.

“சரிடா சொல்றேன் கேளு. நாடக கலைன்றது நாடகம் நாட்டியம் ஆடல்களை குறிக்கும். நாடககலைய தான் கூத்துனு சொல்றாங்க. இசையும் கூத்தும் ஒன்றொடன்று கலைகள். இத அவன் சொன்னானா ? இசையை மட்டும் சொல்லிட்டு விட்டுடான்ல” கலை

“ஆமாண்ணே மறந்துருப்பாரா இருக்கும்” தமிழ்

“நல்லா பேசுரடா அவனா மறப்பான் அவனுக்கு மியூசிக் தவிர ஒன்னும் பெருசு இல்லைனு மமதை” கலை

“ஆமாடா ஆல் இஸ் மியூசிக். மியூசிக் இல்லாமல் இங்கு ஒன்னுமே இல்லை” இசை

“சரி சரி விடுங்கண்ணே . கலை அண்ணே நீங்க சொல்லுங்க ஏன் ஆர்க்யூ பண்ணிகிட்டு?”தமிழ்

“சரிடா கேளு. தொல்காப்பியர் காலத்துல இருந்து வள்ளி நாடகங்கள் நடந்ததா வரலாறு சொல்லுது. இன்னைக்கும் நம்ம கிராமத்து சைடுல தெருக்கூத்து நடக்குது.

தம் எண்ணங்கள் தமது உடம்பில் காணப்படும் மெய்ப்பாடில் வெளிப்பட்டு புறத்தார்க்கு புலனாக நடந்து காட்டுவதற்கு ஏதுவாக அமைந்த மொழிநடையே நாடகத்தமிழ்.

நாம சொல்ற விஷயங்களை நடிப்பு, வசனத்தோட நாடகம் மூலமா நம்ம சொல்ல வர விஷயங்களை ஈஸியா மக்களை ரீச் செய்ய வைக்க முடியும்.

நாடககலை ரிக் வேதம் ஆரம்பித்த காலத்தில் தொடங்குது. இதுல கேட்டு ஆனந்தபடக்கூடியவை, பார்த்து ரசிக்க கூடியவைனு இருக்குது.

ஒரு நாடகத்துல கவிதை இருக்கனும் இசை இருக்கனும் வசனம் இருக்கனும் அபிநயம் இருக்கனும் அப்போதான் அது முழுமையடையும்” கலை

“அபிநயம்னா ? ” தமிழ்

” உடல் அசைவுகளால உணர்வுகளை உணர்த்துரது தான் அபிநயம்.

இசையும் கவிதையும் மட்டும் உள்ள நாடகம் நாட்டியம். இதன் கூடே வசனங்கள் இருப்பின் நாடகம்.
நாடக கலையை ரூபகம்னும் சொல்லலாம். இதுல பத்து வகை இருக்கு தெரியுமா?”  கலை

“என்ன பத்து வெரைட்டிஸா சொல்லுங்கண்ணா ” தமிழ்

“இத தசரூபகம்னு சொல்வாங்க.

1. நாடக ரூபகம் ~ புராணங்கள் இதிகாச அமைப்பை கொண்ட முழுமையான அமைப்பு நாடகம்

2. ப்ரகரண ரூபகம் ~ புராண இதிகாச கதை அல்லாமல் சமூக விமர்சனத்தை கொண்ட அமைப்பு நாடகம்

3. பாண ரூபகம்~ ஒரேயொரு கதாபாத்திரம் தனியாக பேசும் அமைப்பு நாடகம்

4. வ்யாயோகம் ~ ராணுவ, போர் சம்பந்தமான அமைப்பு நாடகம்

5. சமவகார ~ நாடகம் மாதிரியே இருக்கும் ஆனால் குறைந்த காட்சி அமைப்பு நாடகம்

6.டிம ரூபகம் ~ போராட்டம், வலி கொண்ட கதைகளை உடைய அமைப்பு நாடகம்

7. இஹாம்ருக ரூபகம் ~ ஏமாற்றத்தினால் மிருகம் போல அலையும் நாயகனின் கதையை உடைய அமைப்பு நாடகம்

8. உத்ஸ்ருதாங்க ரூபகம் ~ போருக்கு பின்னான பேரழிவையும் அதனால் பெண்கள் புலம்பும் காட்சிகள் கொண்ட நாடகம்

9. வீதீ ரூபகம் ~ ஓரங்க நாடகம்

10. பிரஹசன ~ சமூக விமர்சனத்தை கேலியாக காட்சிபடுத்தும் கேலி நாடகம் ” கலை

“ரியலி அண்ணா சூப்பர். இப்ப நான் எந்த டாபிக் எடுக்கனே குழப்பமா இருக்குதே” தமிழ்

“அதில என்னடா உனக்கு குழப்பம். இயற்றமிழ் தான் பெஸ்ட். இயல்பாக பேசவும் எழுதவும் கூடிய கலை. காதல் போர் சமூகம் வாழ்க்கை முறைனு பல விஷயங்களை சங்க காலத்திலேயே எழுத்து வடிவில் எழுதிருக்காங்கனா பாத்துக்கோயேன்.

காட்சி வடிவத்தை விட ஒளி வடிவத்தை விட எழுத்து வடிவம் தான் பெஸ்ட் தம்பி. காட்சி அமைப்ப விட எழுத்து தான் மனசுல நிக்கும்.

இப்ப நீ பாட்டு கேக்ரனு வச்சிக்க கேக்ர மறந்துர ஏனா அது காதுக்கு மட்டும் தான் வேலை. அடுத்து சினிமா பாக்ர மறந்துர்ர. ஏன்னா இங்க கண்ணோட தொடர்பு படுத்துரதும் காதோட தொடர்பு படுத்துரதும் பெரிய அளவில் சக்ஸஸ் ஆகாது.

ஆனால் எழுத்து வெற்றி பெறும் ஏன்னு கேட்டனா அது பீலிங்ஸ அப்படியே கன்வெர்ட் பண்ணும். என்ன எழுதிருக்கோமோ அத வாசிக்கும் போது உணர்ச்சியாவே உணர முடியும். வாசிக்கும் போது இட வல மூளை இரண்டுமே வேலை செய்யும்.

இதுவும் கண்ணாலதான் பாக்ரோம். ஆனால் ஒளிநாடகம் பார்ப்பது போல் இல்லை. கண்ணால பாத்து தான் வாசிக்கிறோம். பார்த்து உணர்தல் என்பது எழுத்தில் சாத்தியம்.

எழுதுரதால நம்மோட கற்பனைத்திறன் விரிவடையும். எழுதும் போது ஒருத்தர்ட்ட இருந்து ஒருத்தர்ட்ட உணர்ச்சிகளை அப்படியே கடத்தும். ” இலக்கியன்

“நிஜமாவா அண்ணா ?” தமிழ்

“ஆமாடா அதா இயலோட மேஜிக். எழுத்துக்கு எப்பயும் பவர் ஜாஸ்திடா. சொல்வாங்களே கத்தி முனையை விட பேனா முனையே கூர்மையானதுனு கேள்விபட்டதுல்ல?” இலக்கியன்

“ஆமாண்ணே கேள்வி பட்ருக்கேன் ” தமிழ்

” ஆங் அதே தான். இப்ப நீ டைரி எழுதுரனே வை, உன் சந்தோஷத்தை எழுதினனா அது இரட்டிப்பாகும் சோகத்தை எழுதினா பாதியா குறையும்.

ஸ்கூலுல எழுதி படினு சொல்றாங்களே ஏன் ? எழுத எழுத தான் மனசுல பதியும் அதான்” இலக்கியன்

” சரிங்க அண்ணே” தமிழ்

“என்ன சரிங்கண்ணே டேய் இசைக்கு நிகரா எதுவுமே இல்லைடா. இன்னைக்கு பாரீன் கண்ட்ரீஸ்ல கூட்டு வாத்திய இசை அமைப்பு நடக்குதே இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்ம சங்க காலத்தில இசைக்கருவிகளின் கூட்டு இசை அமைப்பு நடந்திருக்கு. அதை ஆமந்திரிகை பல்லியம்னு சொல்வாங்க.

தமிழிசையில் ஏழு ராகங்கள் ஏழு சுரங்கள் பல்வேறு இசைகருவிகள்னு எத்தனை எத்தனை சிறப்புகள் இருக்குமா?

இசையை மனசில கட்டாயபடுத்திலாம் வைக்க வேண்டாம் . இசைக்கு மயங்காத ஜூவன் இந்த உலகத்தில உண்டா?

இசையை இனிக்க இனிக்க கேட்பதில் கிடைக்கும் சந்தோஷம் எழுதுவதிலோ பார்ப்பதிலோ கிடைக்குமா? நெவர்.

இசையோட மேஜிக்கே தனி. மியூசிக் பிளே ஆனதும் மனசு எவ்வளவு லேசா ஆகும். அப்படியே இசையிலே மனசு லயித்து போகும்”இசை

” ஆமாண்ணே எனக்கும் பாட்டு கேக்ரது ரொம்ப பிடிக்கும். நான் சோகமா இருந்தாலே பாடல் தான் கேப்பேன்” தமிழ்

“டேய் என்னடா ஆமாஞ்சாமி போடவா வந்த இங்க? என்ன மேஜிக் லாஜிக்னு சொல்றானுவ. நாடக கலையும் எதுக்குமே சளைச்சது இல்லை சரியா.
நாடகம் அமைக்கிறதுனா ஈஸியான வேலையா? ஒரு நல்ல நாடகத்துக்கு துவக்கம் சரியா இருக்கனும் அதாவது ‘முதல் திருப்பம்’ எப்படி கொண்டு வரது , அந்த குறிக்கோளை அடைய ஏற்படும் சிக்கல்களை சொல்றது . அடுத்து ‘முயற்சி’ ~ குறிக்கோள் அடைய முயற்சி செய்ரது. அடுத்ததா முக்கிய பிரச்சினைக்கு காரணமா சின்ன சின்ன சம்பவங்கள், அடுத்தபடியா முயற்சி பண்ணும் போது வெற்றி தோல்வி பற்றிய சிந்தனை, அதுக்கு அடுத்ததா இறுதி நிலையா எல்லா இடர்களையும் களைந்து வெற்றியை நெருங்கும் நிலை வெற்றி அதோடு நிறைவு.

இத்தனை பிராசஸ் இருக்கு தெரியுமா ? சினிமாவ பாத்து சிரிக்காதவன் உண்டா? அழாதவன் உண்டா? உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாதவர்கள் உண்டா? தியேட்டர் விட்டு வெளியே வந்து மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திச்சினு சொல்லாதவங்க உண்டா?”  கலை

“என்ன அண்ணே இப்படி கேட்டுடீங்க. நானும் தியேட்டர் போய் படம் பாப்பேன் சிரிப்பேன் என்ஜாய் பண்ணிருக்கேன்.” தமிழ்

“என்ஜாய் பண்ணதுலாம் இருக்கட்டும். நான் சொல்றத மொத கேளு. தமிழ் காலம் கடந்தும் தன் மதிப்பை இழக்காத ஒரே பொக்கிஷம் எழுத்து தான்டா.

உன் வழிக்கே வரேன் இப்ப ஒரு சினிமா பாக்கிறோம்னு வை. கதையோட ஹீரோ ஹீரோயின் மட்டும் தான் பாக்ரோம் சில சமயம் நல்ல கதையா இருந்தா கதைகளையும் ரசிக்கிறோம் தான். ஆனால் எழுத்து வடிவ கதை அப்படி அல்ல. அதில் உள்ள எல்லா கதாபாத்திரமா நாம மாறிரோம். இப்ப நீ எழுதும் போது ஒரு வில்லனோட பார்ட் எழுதரனு வச்சிக்கயேன் அவனோட தகுதி என்ன அவன் எப்படி இருக்கனும் அவன் சிந்தனை எப்படி இருக்கனும்னு யோசித்து நாமே ஒரு வில்லனா மாறிடுரோம்.

வில்லன் என்று இல்லை அனைத்து கேரக்டர்லயும் நாம நம்மள உட்புகுத்திப்போம். அதில் கிடைக்கும் இன்பம் ஒலிக்கும் ஒளிக்கும் உண்டா?

இதுல ஹீரோ ஹீரோயின் மற்ற கேரக்டர்ஸ் கூட எழுதிடலாம் ஆனால் வில்லனுக்கு உள்ள பார்ட்க்கு ரொம்ப மெனகெடனும். அவன் யாரும் திங்க் பண்ணாத ஒரு விஷயத்தை செய்யனும் அதையும் ஹீரோ கண்டுபிடிக்கர மாதிரி வழி பண்ணணும். சொல்ல போனால் மூளையை கசக்கி பிழியுறதுக்கு சமம்.” இலக்கியன்

“டேய் அவன் கிடக்கிறான் விடு நான் சொல்றத கேளு. எங்கும் இசை தான்டா பெஸ்ட்.
குழந்தையின் முதல் அழுகுரல் இசை…
தாய்மையின் பிரசவ வலி இசை…
மூச்சுகாற்றின் ஓயாத அலையோசை இசை…
இமை விழிகளை தழுவும் சத்தம் இசை…
இதழ்கள் பிரிந்து சேரும் கானம் இசை…
கைகளை தட்டும் ஓசை இசை…
காதல் மொழிதல் பரிமாறும் தருணத்தில் இசை…
பறவைகளின் கீச்சுகுரல் இசை…
மரங்கள் அசைந்தாடும் ஆடல் இசை…
இசைஞானிகளின் இசை…
எங்கும் எதிலும் இசையே…!
இத மறுக்க முடியுமா?” இசைசெல்வன்

“அவன்க அப்படி தான் பிதற்றுவான்க நான் சொல்றத கேளு. ஒலிப்பெருக்கிலாம் இல்லாத காலகட்டத்திலே நாடககலை அவ்வளவு சிறப்பு பெற்றிருந்தது. நிறைய கேரக்டர்ஸ் சேர்ந்து ஒருங்கே சந்திக்கும் போது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். அக உணர்ச்சி புற உணர்ச்சி. அக உணர்ச்சி தான் நவரசம். அழகு, நகைச்சுவை, இரக்கம், கோபம் , வீரம், கொடூரம், வெறுப்பு, வியப்பு, அமைதி இவ்வளவும். புற உணர்ச்சிகள்னா காதல் , சிரிப்பு, வருத்தம், கோபம், மகிழ்ச்சி, பயம், வெறுப்பு, திகைப்பு, அமைதி இப்படி இவ்வளவும்

நாடக மேடையில் மக்கள் வெறுக்கத்தக்க காட்சிகளோ சண்டைகளோ மரணமோ காட்சிபடுத்துவது இல்லை. திட்டுதலோ பழித்தலோ வன்முறையோ காட்சிபடுத்தபடுவதில்லை. சமூக நலத்தை மட்டுமே கொண்டதா இருக்கும். இதற்கு மேல் என்ன வேண்டும்?” கலைச்சிற்பி

“என்ன வேண்டுமா? ஓகோ அப்ப நீங்க சும்மா வாய மட்டும் அசைத்து பேசிட்டு வந்தா போதுமா? பேக்ரவுண்ட் மியூசிக் இல்லனா சினிமா ஒன்னுமே இல்லை” இசை

“அந்த காலத்திலேயே பேசும் படம் மட்டும் இருந்திருக்கு. தெரியுமா? ” கலை

” இசை கலைஞர்கள் இல்லனா இசைகருவிகள் இல்லனா நாடக கலை முழுமை அடையாது. அந்த காலத்து இசை கலைஞர்கள பாணர் பொருணர் கூத்தர் னு சொல்வாங்க. பாணர்கள் இசைக்கருவியை இசைத்து வாய்ப்பாட்டு பாடுவதில் திறமையானவங்களா இருந்தாங்க. பொருணர்கள் பரணி பாடுரதிலும் டான்ஸ் ஆடுரதிலும் திறமைசாலியா இருந்தாங்க. கூத்தர்கள் பாடிகிட்டே ஆடுரவங்க தான்.

இலங்கைல யாழ்ப்பாணம்னு ஒரு இடம் இருக்கே எப்படி இந்த பேர் வந்துச்சு ? பாணர்களின் பெருமையை பறைசாற்றும் விதமா வச்சிருக்காங்க.” இசை

“எழுத்துங்கறது ஒரு வடிகால். எழுத எழுத தான் மனசு பக்குவப்படும். அது ஒரு வரம்டா. நம்ம உணர்வுகளை கட்டுப்படுத்தும். மன அமைதி தரும். ஆரோக்கியமான மனநிலையை தரும். மன அழுத்தம் குறையும் ”  இலக்கியன்

“இசையும் வரம்தான்டா. இசையை கேக்கும் போதும் மன அழுத்தம் குறையும் நிம்மதி கிடைக்கும். இசையில் எங்கோ வானத்தில் மிதக்குற மாதிரி இருக்கும் ” இசை

“நாடக கலையோட நோக்கமே மக்களுக்கு நவரசங்களையும் அனுபவபடுத்தவும், மக்களின் மனசாட்சியை தர்மத்தின் வழி கொண்டு செல்லவும், குழப்ப நிலை மற்றும் சிக்கலிலிருந்து விடுவிப்பதே நோக்கமாக இருந்தது இருக்கிறது இருக்கும்.” கலை

“டேய் நீயே சொல்லுடா . எங்கடா தமிழ காணும் எங்க போனான் அதுக்குள்ள? ” இசை

” வீட்டுக்கு போய்ட்டானா? ” இலக்கியன்

“வாங்கடா போய் பாப்போம் ” இசை

தமிழ் வீட்டில்,
“டேய் ஏன்டா சொல்லாமல் கொள்ளாமல் உன்பாட்டுக்கு வந்துட்ட ? எந்த டாபிக் எடுக்க போற? சொல்லு ” கலை

“அண்ணே … அது ” தமிழ்

“சொல்லுடா ” இலக்கியன்

” அண்ணே நீங்க சொன்னத வச்சு நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் என்னனா, இசையும் நாடகமும் ஒன்றொடன்று பிண்ணி பிணைந்தது அதை பிரிக்க முடியாது. ஆனால் இதற்கு முன் எழுத்து இல்லை என்றால் எப்படி இசை இசைக்கபடும்? நாடகம் நடிக்க முடியும்? கவிதை இல்லாமல் இசை இல்லை. கவிதை வரி வடிவத்தில் எழுதினால் தான் இசைகருவிகள் கொண்டு இசைக்கபட்டு முழுமை அடையும்.

அது போல வசனம் கவிதை இல்லாமல் நாடகம் நடிக்க முடியுமா? அதற்கும் வரி வடிவிலான கதையை எழுத்தில் எழுதினால் தான் நாடகம் அமைக்க முடியும்.

நவரசங்களையும் எழுத்தில் உணர்ந்து எழுதினால் தானே அது நாடகம் நடிக்கபெற அடுத்த நிலைக்கு வரும்?

எழுத்து உலகம் தனி உலகம். அது எழுத்தாளரின் உலகம். எழுத்தாளரின் கதைமாந்தர்களை அவர்கள் தான் வடிக்கிறார்கள் அவர்களுக்கு உணர்வை கொடுக்கிறாங்க. அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளை கதை வழியா மக்களுக்கு சொல்றாங்க.

நினைச்ச மாதிரியான வாழ்க்கையை கற்பனை உலகில் வாழலாம் எழுத்து வடிவில்.

கவிதை சரியாக எழுதப்படவில்லையெனில் நல்ல இசை இருந்தும் பயனில்லை.

கதையை சரியாக அமைக்கவில்லை எனில் காதலோ நகைச்சுவையோ பாடலோ இருந்தும் பயனில்லை.

இசை நாடக கலைகளின் முன்னோடி எழுத்து தான். எழுத்து இல்லையேல் எதுவும் இல்லை. இசையும் நாடகமும் முக்கியம்தான் அதை விட முக்கியம் இயல் தான் அண்ணா சோ இயல் டாபிக் சூஸ் பண்ணிருக்கேன்.

மட்டுமல்ல நான் படித்து முடித்து ரைட்டரா தான் ஆக போறேன். தேங்க்யூ சோ மச் அண்ணா. “

” நீ சொல்வதும் சரிதான்டா. வாழ்த்துக்கள். ப்ரோக்ராம் முடிஞ்சதும் பார்ட்டி வைக்கிற ” என்று கோரசாக இலக்கியனும் இசைசெல்வனும் கலைச்சிற்பியும் சொல்ல தமிழ் மகிழ்ச்சியுடன் விடைபெற்றான்.

   முற்றும்.

                              ✍அனுஷா டேவிட்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *