Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-19

ஐயங்காரு வீட்டு அழகே-19

அத்தியாயம்-19

Thank you for reading this post, don't forget to subscribe!

    சற்று நேரத்தில் சிவராமன் ராவணனுக்கு போன் போடவும், எடுத்து காதில் ஒருபக்கம் வைத்து, “சொல்லுங்கப்பா” என்றான்.‌
 
  போன் ஸ்பீக்கரில் கைப்பட்டு இருக்க, “என்னடா… ரூம்மை அலங்காரம் பண்ணிட்டு இருக்கியா?” என்று கேட்டதும், “எதுக்கு?” என்று கேட்ட அடுத்த வினாடி அவனுக்கு விளங்கிவிட்டது.

  பைக்கை ஓரமாய் நிறுத்தி ”எதுக்கா… டேய் உனக்கும் காருண்யாவுக்கும் இன்னிக்கு பஸ்ட் நைட் டேட் பிக்ஸ் பண்ணி கொடுத்திருக்காராம் ஜோசியர்.” என்று சிரிக்க, ஸ்பீக்கரை அணைத்து விட்டு, “என்ன கிண்டலா..? நல்ல சிநேகிதர்களா சுத்திட்டு இருந்த எங்களை பிடிச்சி கல்யாணம் பண்ணி வச்சிட்டு இஷ்டத்துக்கு பேசறிங்க.
  கல்யாணம் பண்ணி வச்சிட்டிங்க… அவ்ளோ தான்.. அதை தவிர்த்து எங்க வாழ்க்கையை எப்ப ஆரம்பிக்கணும்னு எங்களுக்கு தெரியும்‌. சும்மா ஏதாவது பேசி டார்ச்சர் பண்ணாதிங்க. ஜென்ரலா எப்பவும் போன் போட்டா சாப்பிட்டியா, வேலைக்கு போனியா, தூங்கினியா, என்ன படத்துக்கு போன, ஆபிஸ்ல எப்படி வேலை ஓடுது, பிராஜெக்ட் எந்தளவு போகுது கேளுங்க. இல்லையா…. அம்மாவை பத்தி பேசுங்க. உங்க ஹெல்த் பத்தி சொல்லுங்க, நீங்க எங்கயாவது ஊருக்கு வர்றதாவோ போறதாவோ எதுனாலும் பேசுங்க. எனக்கும் காருண்யாவுக்கும் என்ன ஏது எதுவும் என்னிடம் கேட்காதிங்க. அவளிடமும் கேட்காதிங்க. இதான் லாஸ்ட்” என்று கடித்து குதறாத குறையாக கறாராக கத்தினான்.‌
  காருண்யாவுக்கு அவன் வண்டியை நிறுத்தி பேசவும், அதுவும் முதலிரவு பற்றி சிவராமன் கேட்டதும் இவன் என்ன பதில் தருகின்றான் என்று சங்கடமாய் ஒட்டு கேட்டதில், ராவணன் பேச்சில் நிம்மதியை உணர்ந்தாள்.

  “டேய் டேய்… இனி கேட்கலை… ரொம்ப பண்ணாத. ஏதோ… சின்ன பையனுக்கு சட்டுனு கல்யாணம் பண்ணி வச்சிட்டோம். பாவமேனு நினைச்சேன். சரி உங்க மாமானார் வீட்ல வேற ஜாதகம் பார்த்து இந்த நாள், இந்த நேரம்னு குறிச்சி கொடுத்ததால் கிண்டல் பண்ணி கேட்டுட்டேன். நான் அப்பாவாவே மெயின்டெயின் பண்ணிக்கறேன். சரி சாப்பிட்டிங்களா?” என்றார்.‌

  ”வீட்டுக்கு போனதும் காருண்யா உப்புமா பண்ணறதா சொன்னா.” என்று பைக்கை ஆன் செய்ய முனைய, ”உப்புமா உனக்கு பிடிக்காதேடா. சரி சரி எதுவும் கேட்க மாட்டேன். அப்பறம் என் வாழ்க்கை என் இஷ்டம்னு பஞ்ச் டயலாக் பேசுவ. நான் போன் பண்ணியதுக்கு முக்கிய காரணமே, அந்த பொண்ணுக்கிட்ட நட்புரீதியா முதல்ல பேசி பழகு பாவம் ஸ்பேஸ் கொடுக்காம விடாதேனு சொல்ல தான். நீயே ஒரு க்ளியர் மைண்ட்ல இருக்கறப்ப என் அட்வைஸ் உனக்கு தேவைப்படாது. அப்பறம் இனி செலவை குறைத்து வாழ பாரு. வைக்கிறேன்” என்று பேச ‘ம்ம்’ கொட்டினான்.

  எல்லாம் காருண்யாவும் கேட்க நேர்ந்தது. அமைதியாக கேட்டவளுக்கு ராவணன் மீது மரியாதை வந்தது.
  வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு அலங்காரம் எல்லாம் செய்ய தேவையிருக்காது என்ற எண்ணமே நிம்மதியாக பயணிக்க வைத்தது.

  வீட்டுக்கு வந்ததும் பைக்கை நிறுத்தியதும், தெளிவான காருண்யா முகத்தை கண்டான் ராவணன்.

  தன் பேச்சும் தந்தை பேச்சும் கேட்டிருப்பாளோ என்று நினைத்தான். ஆனாலும் ஏதோவொரு வகையில் தன்னால் அவளோடு கணவன் மனைவி பந்தத்தை உடனடியாக ஆரம்பிக்க முடியாதென்றதை அவளிடம் தந்தையிடம் போன் பேசுவது போல சொன்னதில் அவனுமே நிம்மதியடைந்து விட்டான்.

    எதுவும் பேசாமல் இருவருமே வீட்டுக்குள் நுழைந்தார்கள். பின்னாடியே டோர் டெலிவெரி வந்துவிட, இன்று சமைக்க வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டு சமையலறையில் நுழைந்தாள் காருண்யா.
   ராவணன் குளிக்க செல்ல, காருண்யா முகம் கை கழுவி, வாங்கி வந்த ரெடிமேட் கோதுமை பரோட்டாவை சுட்டு ஹாட்பாக்ஸில் போட்டுவிட்டு கையோடு கேரட் உருளை வைத்து வெஜ் குருமா செய்தாள்.
  உப்புமா என்றதால் ராவணன் பிடிக்கவில்லை என்றதையும் போனில் கேட்டதால், கோதுமை பரோட்டா குருமா செய்துவிட்டாள்.

  வாசம் மணக்கவும், குளித்து ஈரத்தலையுடன் வந்தவன், வாசம் பிடிக்க, “கோதுமை பரோட்டா சுட்டாச்சு. வெஜ் குருமா… இரண்டு விசில் வந்ததும் ஆப் பண்ணிடறேளா?” என்று கேட்க, “சூர்” என்று போனை வைத்து கொண்டு டீஷர்ட் ஷார்ட்ஸ் அணிந்தவன்
சோபாவில் அமர்ந்தான்.

  காருண்யா குளிக்க சென்று நைட் சூட் அணிந்து வந்தாள். டைனிங் டேபிளில் தண்ணீர் பாட்டில் இரண்டு தட்டு இரண்டு ஹாட்பாக்ஸ், குக்கர் என்று வந்து வைக்க, ஆசையாக சாப்பிட அமர்ந்தான்.

   “பிரெண்ட்ஸா இருந்தப்ப ஒரு நாள் சமைச்சி கொண்டுவான்னு சொன்னேன். இப்ப…” என்று நிறுத்தியவன் வார்த்தை ‘மனைவியா வந்து செய்து தர்ற’ என்ற பேச்சு எஞ்சியிருந்தது.

   காருண்யா மெதுவாக “தேங்க்ஸ்” என்றாள். ஏன் எதற்கு என்பது போல பார்வையிட்டான். அடுத்து போனில் வரும் போது பேசியதை கேட்டதால் இருக்குமோ என்று தோன்ற, “அப்பாவிடம் பேசியதை வச்சி தேங்க் பண்ணறியா?” என்று கேட்டான்.

  ஆமென்று தலையாட்டிய காருண்யாவிடம், “ரியலி நீ எப்படியோ… எனக்கு இந்த மேரேஜ் இன்னமும் ஏத்துக்க முடியலை. சிவனேன்னு வேலை பார்த்தவங்களை இணைச்சி பேசி கல்யாணத்துல கொண்டு வந்து விட்டதுல, நான் ரொம்ப அப்சட். நானே… இந்தளவு மவுளைச்சலில் இருக்கேன்னா… உனக்கு எப்படியிருக்கும்.. ஐ காண்ட் இமேஜின் காரு. பட் நமக்கு தேவை இப்ப ஸ்பேஸ்… அதை நாம எடுத்துப்போம்” என்றான்.

  “இதுக்கு தான் தேங்க்ஸ் சொன்னேன். நேக்கு இதை பத்தி உங்களாண்ட கலந்து பேச தயக்கமிருந்தது. இப்ப நீங்களே சொல்லறப்ப நேக்கு நன்றியை தவிர வார்த்தை தொண்டையில் வரலை.” என்றவள் தண்ணீரை குடித்து முடித்தாள்.

   “பைக் ஓட்டுறச்ச, போன் யூஸ் பண்ணக்கூடாதுன்பா. நீங்க ஒரு பக்கமா காதுல வச்சிட்டு ஓட்டினேள். இப்படி செய்தா ஏழு வருஷமில்லை… எத்தனை வருஷமென்றாலும் பைக் ஓட்டக்கூடாதுன்னு மாமி சொல்லலாம்.” என்றாள் இலவச இணைப்பாக.

“நீ வேற போட்டுக் கொடுத்துடாத தாயி. அப்பறம் புலம்பி தள்ளி காதுல ரத்தம் வர வச்சிடுவாங்க.” என்று தண்ணீர் பாட்டிலை எடுத்து வீடு என்பதால் பழக்க தோஷத்தில் வாய் வைத்து சப்பி குடித்தான்.

  அதை கண்ட காருண்யாவிற்கு, “என்னுடைய தண்ணி பாட்டிலை நீங்க எடுக்காதேள். உங்க தண்ணி பாட்டிலை நான் தொடமாட்டேன்.” என்று கூறவும், அவன் எச்சி வாய் வைத்து குடித்ததை கூறுகின்றாளென புரிந்து விட, சிரிப்புடன் அவள் செய்கையையும் அவள் சொன்ன விதமும் கண்டு பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தோளைக்குலுக்கினான்.

    “உனக்கு வீடு பிடிச்சிருக்கா?” என்றான். கண்ணை நாலு பக்கமும் பார்வையிட்டு, “நன்னா வச்சிருக்கேள்” என்று பாராட்டினாள்.

  “குட்.. நைட்.. ஆங் காரு… சோபாவுல படுக்காத. ரூம்ல தூங்கு. பக்கத்துல பக்கத்துல வேலை பார்க்கறப்ப நாள் முழுக்க இருக்கறோம். தூங்கப்போறதுல எந்த மாற்றமும் வந்துடாது. அதர்வைஸ் யுவர் சாய்ஸ்” என்று சென்றான்.

  ஏற்கனவே பேசிக்கொண்டே பாத்திரத்தை துலக்கியதால், கிச்சன் லைட் ஹால் லைட் அணைத்துவிட்டு அறைக்கு வந்தாள்.

ராவணன் கும்புற விழுந்து படுத்து போனை நோண்ட, மறுபுறம் காருண்யா ஒடுங்கி மடங்கி படுத்தாள்.

  நேற்றெல்லாம் சோபாவில் படுத்ததில் நீட்டி நிமிர கஷ்டமாக தான் இருந்தது. இன்று போர்வை போர்த்தி படுத்ததும், ராவணன் என்ன செய்கின்றானென பார்வையிட, அவன் போனை அணைத்தபடி உறங்கியிருந்தான்.

  நாளையிலிருந்து வேலைக்கு செல்ல வேண்டும். சமைக்க வேண்டுமென்று காருண்யாவும் நிறைவாய் உறங்கினாள்.

எப்பவும் போல சுப்ரபாதம் போட்ட அலாரம் அடிக்க, கண்ணை துடைத்து உடனே அணைத்தாள்.
  ராவணன் உறக்கம் களைந்திடாமல் எழுந்து, குளித்துவிட்டு விளக்கேற்றினாள்.
  முதல் முறையாக ஒரு பக்கம் ஓவன், ஒருபக்கம் அவள் கொண்டு வந்த இன்டெக்ஸ் ஸ்டவ், என்றிருக்க, சமைக்க முயன்றாள்.
   பருப்பு ரசமும், உருளைப் பொரியவும், சிறுபருப்பு பாயாசமும், செய்தவள் காபி குடித்தபடி, பேப்பரை வாசித்து நிமிர, ராவணன் கண்ணை கசக்கி எழுந்து வாய் பிளந்து காருண்யாவை பார்த்தான்.

   அதிகாலை குளித்து முடித்து தேவதை அம்சமாக இருப்பவளை ரசித்தான். ஒவ்வொரு கனவனுக்கும் காலையில் குளித்து கொண்டையிட்டு முகமலர்வாக காபி நீட்டும் பெண்ணை மனைவியாக அடைய கனவு காண்பான். அந்த மெட்டிரியலாக தான் காருண்யா இருந்தாள்.

“சாதம் வடிச்சிட்டேன்… பருப்பு ரசம் அப்பளம் உருளைப்பொரியல் செய்தாச்சு. முதல் முதல்ல நம்மாத்துல சமைக்கறதால பாயசம் பண்ணினேன். அப்பறம் காபி போட்டேன்… உங்களுக்கு பிடிச்சிருந்தா குடிங்கோ. இல்லை எப்பவும் போல செம்பருத்தி டீ கொதிக்க வைக்கறேன்.” என்றவளிடம், “காபி ஓகே.. இப்ப வந்துடறேன்” என்று ஓடினான்.

  வேகமாக பல்லை தேய்த்து குளித்து அலுவலக உடையுடன் வந்தவன், காபியை வாங்கி சுவைத்தான். இன்னும் சரியாக துவட்டாத தலைமுடியில் ஈரம் சொட்டியது.

  இதில் அவசரமாய் காபி குடிக்க வந்தவன் சட்டை பட்டனை முழுதாக போடாமல் இரண்டு மட்டும் போட்டு விட்டு வந்திருந்தான். அவசரத்தில் வந்திருப்பது அவனது ஆர்வகோளாறு நடவடிக்கையில் தெரிந்தாலும், மார்பின் சட்டையில் பட்டனின்றி காபியை ரசித்து குடிக்க, அவளுக்கு அவஸ்தை உண்டானது.

  “உங்களுக்கு இந்த பாக்ஸில் தனி தனியா பேக் பண்ணிட்டேன்.ஏதாவது விடுபட்டா சொல்லுக்கோ” என்று நின்றாள்.

  அவளை ஏறயிறங்க பார்த்து, “இதுவே சாட்டிஸ்பேக்ஸனா இருக்கு” என்றவன், அவளை பார்த்தவாறு சட்டை பட்டனை போட்டான்.

  அவனது நெஞ்சின் ரோமங்கள், அவளை சங்கடமாய் நிற்க வைக்க பார்வையை தவிர்த்தாள்.

  கைப்பட்டனை போட்டு, அவள் அறைக்கு செல்வதை கண்டவனின் மனதிற்குள் புன்னகை பூத்தது.

   தலையில் இருந்த டவலை கழட்டி துவட்டியவள், கண்ணாடியில் அவளை கண்டாள். நெற்றி வகிட்டில் உள்ள குங்குமம் அவளை இல்லத்தரசியாக காட்டியது.
  
  தலை மட்டும் வாறிவிட்டால் அலுவலகம் செல்ல தயாராகி விட்டாள் எனலாம்.

   கொஞ்சம் ஈரக்கூந்தலை உலர வைத்து, பின்னரே தலைவாறினாள். அவள் கைகளை தூக்கி தலைவாறும் நேரம் ராவணன் திரும்ப, எலுமிச்சை வண்ணத்தில் இடை அவன் மனதில் இடைஞ்சல் செய்தது. “ஆபிஸுக்கு சேலை எல்லாம் எதுக்கு” என்று கேட்டுவிட்டான்.‌ஆனால் உள்மனமோ இதுக்கு என்னடா குறையை கண்டுபிடிச்ச, என்று கூறாமல் இல்லை.

  “முதல் தடவை கல்யாணமாகி சேர்ந்து ஆபிஸ் போறோம் இல்லையா. சேலை இருப்பது பெட்டர். மறுபடியும் சுடிதார் மாத்திடுவேன்” என்றாள்.
  ஆக இந்த திவ்யதரிசனம் முதல் நாள் என்பதால்… என்று ராவணன் தலையாட்டி முடித்தான்.

   பைக் நான் வேண்டுமின்னா ஓட்டவா? உங்களுக்கு தான் ஏழரை இருக்குன்னேள்.” என்று சீண்ட, “நீ உட்கார்ந்து நான் பின்னாடி வந்தாலும் ஏழரை வரும். தள்ளு.” என்றான்.‌

   வழவழப்பான இடை எங்கே கைகள் தன்னால் அவளிடை பற்றிடுமோயென்ற பயம் கூடுதலாகவே இருந்தது.
  அவன் ஸ்கூட்டி ஓட்டவும் ஒருபக்கமாய் அமர்ந்தவள், கைப்பையையும் லேப்டாப் பேகையும் மடியில் வைத்துக் கொண்டாள்.  அவனின் தோளை பிடிமானம் பிடிக்க, தயங்கினாள். ஆனால் சேலையும் முதுகுப்பை கைப்பை என்று வைத்திருக்க, வேறுவழியின்றி ராவணன் தோளை பற்றினாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

12 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-19”

  1. M. Sarathi

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 19)

    அம்புட்டு தான், இதுக்குப் போய் அம்புட்டு கத்து கத்தினான். இப்பவே சைக்கிள் கேப்ல இடையை எல்லாம் கவனிக்குறானா இல்லையா, அதெல்லாம் தாலி கயிறு கட்டிட்டாலே அது தன்னால மேஜிக் பண்ணிப்பூடும். நீங்க வேணா பாருங்க எண்ணி ஒரே வாரத்துல ரெண்டு பேரோட பிரம்மச்சரியம் உடையுதா இல்லையான்னு.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Dharshini

    Super sis semma epi 👌😍❤️ eppo dhan thol mela kaiya podreenga edhu endha alavuku munnerum nu parpom 🧐 en ma avan kudicha bottle la thanni kudika maatiya ethellam kadaisila enga poi mudium nu therium😂😂😂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *