Skip to content
Home » ஒரு தென்றல் புயலானால்-1

ஒரு தென்றல் புயலானால்-1

தென்றல் புயலானால்….

அத்தியாயம்-1

இரு நாட்களுக்குப் பிறகு வெய்யோன் வெளியே வந்திருக்க, மெல்ல வெளிச்சம் பரவி, பின் பிரகாசமாக விடிந்தது அந்தக் காலைப் பொழுது.

ஒற்றை கையில் தேநீர் கோப்பையைப் பிடித்திருந்தவள், மற்றொரு கையில் புத்தகத்தை வைத்து ஏதோ குறிப்பெழுதிக் கொண்டிருந்தாள்.

“மீனு இந்த அவரைக்காய கொஞ்சம் நறுக்கி குடும்மா” என்று அடுப்பங்கரையிலிருந்த அவள் அன்னை பாரிஜாதத்தின் குரல் கேட்டது.

உடனே புத்தகத்தை மூடியவள், உள்ளே சென்று காய்கறிகளை நறுக்கத் துவங்கினாள். சிறிது நேரம் சமையலில் அன்னைக்கு ஒத்தாசை செய்து விட்டு, பள்ளிக்குக் கிளம்ப தயாரானாள் மீனாட்சி.

மீனாட்சி ஒரு இளங்கலை ஆங்கில பட்டதாரி. கல்வியியல் கல்லூரியில் படித்து முடித்த வருடமே அருகிலிருந்த பள்ளியில் வேலையும் கிடைத்துவிட்டது. தந்தை இல்லா அந்தக் குடும்பத்தில், தன் தாய் பாரிஜாதம், அக்கா கீதா, தங்கை ரேணுகாவுடன் வசித்து வந்தவளுக்கு, குடும்ப பாரத்தை சுமப்பதென்பது எழுதபடாத விதி.

ஆம்! தன் தந்தை சோமசுந்தரம் வீட்டினை விடுத்து பரதேசம் சென்று விடவே, ஒன்றுமறியாத தாயையும் சகோதிரிகளையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பைத் தானாக ஏற்றுக் கொண்டாள்.

தனியார் பள்ளி தான், சொற்ப வருமானம் தான், அதில் கடனுக்கும் குடும்ப செலவுக்கும் போகக் கையில் எதுவும் மிஞ்சினால் ஆச்சிரியம் தான். அமைதியான பெண், எந்தச் செயலிலும் அதிரடியை எதிர்பார்க்க முடியாது. அவ்வளவு நிதானமான பெண்.

அழகான மஞ்சள் நிற புடவையை நேர்த்தியாகக் கட்டியிருந்தாள் மீனு. அவள் புடவை அணியும் பாணிக்குத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தன் உடலை எங்கும் வெளிக்காட்டதவாறு கச்சிதமாக உடுத்துவாள். அதனால் அவளுக்கு மாணவர்களிடமும் சக ஆசிரியர்களிடமும் தனி மரியாதை உண்டு.

அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்ளும் அவள்மீது மாணவ மாணவிகளுக்குத் தனி பிரியம் உண்டு.அதனால் அவள்மேல் பொறாமை கொள்பவர்களும் அதில் சரிபாதி உண்டு.

தினசரி இரண்டு பேருந்துக்கள் மாறித் தான் பள்ளிக்கு வருவாள். அலைச்சல் தான் இருந்தும் தன் குடும்பத்தை நினைக்கையில், அந்தச் சிரமங்கள் எல்லாம் தூர ஓடிவிடும்.

இன்றும் அதுப்போலத் தான் அவசர அவசரமாக முதல் பேருந்திலிருந்து இறங்கி அடுத்த பேருந்துக்காக ஓடினாள்.

அவள் ஏறும் முன் மெல்ல பேருந்து நகர தொடங்கியிருந்தது. மூச்சு வாங்க ஓடி வந்தவளை கண்ணாடி வழியாகப் பார்த்தவுடன் பேருந்தை நிறுத்தினார் அந்த வயதான பேருந்து ஓட்டுனர் கணேசன்.

வேகமாக அவள் ஏறியவுடன் பேருந்தைக் கிளப்பினார்.

கூட்டம் நிரம்பி வழிய, தனக்காகப் பேருந்தை நிறுத்திய கணேசனை ஒரு புன்னகையோடு பார்த்துக் கொண்டே வழக்கம்போல இஞ்சின் ஓரமாக அமர்ந்தாள் மீனு.

“ ஏம்மா இன்னைக்கு லேட்டா?” என்றார் அந்த ஓட்டுநர்.

“ஆமா தாத்தா, ஊருல இருந்து வரும் பஸ் இன்னைக்கு பத்து நிமிஷம் கழிச்சு தான் வந்துச்சு, அதான் அடிச்சு பிடிச்சு ஓடி வரேன்” என்றாள் மூச்சு வாங்கிக் கொண்டே.

“சரிம்மா தண்ணிய குடி, மூச்சு வாங்குதுப் பாரு” என்றபடி பேருந்தை இயக்குவதில் கவனத்தை திருப்பினார்.

பேருந்து முழுக்க கூட்டம் நிரம்பி வழிய, மூச்சு விடுவதே அவ்வளவு சிரமமாக இருந்தது மீனுவுக்கு.

மீனுவிற்க்கு மட்டுமல்ல, அதில் பயணித்த பெரும்பாலனவர்களின் நிலை அதுதான்.

தினம்தினம் அந்த வியர்வை குளியலிலும், காதடைக்கும் ஹாரன் சப்தத்திலும், ஒருவர் மீது ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ ஒட்டி ஒரசியபடியே தங்களின் பயணத்தைக் கடந்தனர்.

தன் குஞ்சுகளுக்கு இரை தேடி பறந்துத் திரியும் தாய் பறவையைப் போல, தத்தம் குடும்பத்திற்காக ஓடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு இந்த அசௌகரியங்கள் ஒன்றும் பெரிதில்லை.

முகத்தில் வழிந்த வியர்வையை தன் கைக்குட்டையில் துடைத்துத் கொண்டே வந்தவளுக்கு நேற்று நடந்த விஷயங்கள் மனத்திரையில் வந்து போயின.

“ ஹே வாழாவெட்டி! நீ எப்படி நிம்மதியா இருக்கன்னு பாத்திடுறேன்டி, என்னைக்கா இருந்தாலும் நீ என் காலுல்ல வந்து விழுந்தே தான் ஆகனும். அப்போ உன்ன என்ன செய்யுறேன் பார்” என்று தெருவில் நின்று கத்தினான் மோகன், கீதாவின் கணவன்.

வீதியில் இருந்தோர் வேடிக்கை பார்க்கக் கூனிகுறுகி போனது மீனுவின் குடும்பத்தாருக்கு.

“மாமா ப்ளீஸ்! உள்ள வந்து பேசுங்க, தெருவுல எல்லாரும் பாக்குறாங்க” என்றாள் மீனு கெஞ்சலாக.

“ அப்படிங்களா மேடம்! உங்க குடும்பத்துக்கு மான ரோஷம்லாம் இருக்கா?, எனக்கொன்னும் அப்படி தெரியலயே” என்றான் நக்கலாக.

அவன் பேச்சில் இன்னும் இன்னுமே சிறுத்து போனார்கள்.

கீதாவின் கண்களின் நிற்காமல் நீர் வழிந்தது. பாரிஜாதமோ நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டார்.

கடைக்குட்டி ரேணுகா பதிலுக்குச் சீற, அவளை அடக்கி வைத்திருந்தாள் மீனு.

அரை மணி நேரம் தெருவில் நின்று பேயாட்டம் ஆடிவிட்டுதான் சென்றான் மோகன். கீதா இளங்கலை கணினி அறிவியல் படித்து முடித்திருந்த சமயம் அது. அருகிலிருந்த நிறுவனமொன்றில் வேலை கிடைத்துவிட, வேலைக்குச் செல்ல முயன்றவளை தடுத்திருந்தார் அவர்களின் சித்தப்பாவாகிய மூர்த்தி.

“ நீ வேலைக்குப் போனா மட்டும் இந்தக் குடும்ப கஷ்டம் தீர்ந்திடுமா என்ன. இல்ல உனக்கு லட்ச கணக்குல சம்பளம் குடுக்க போறானுவளா?. நாலாயிரமோ அஞ்சாயிரமோ வாங்க போற, அதுக்கு இதுவே மேல்” என்றார் எரிச்சலாக.

“ இல்ல … அவ வேலை பார்த்துகிட்டே மேல படிக்கனும்னு ஆசபடுறா” என்ற பாரிஜாதத்தை அலட்சியமாகப் பார்த்த மூர்த்தியோ,

“நல்ல பையன். கவர்மண்ட் உத்தியோகம், நல்ல வசதி, அப்புறம் என்ன?” என்றார் எரிச்சலாக.

“இ… இல்ல… சித்த…ப்பா, வ… வயசு அதிகம்ன்னு…” என்று பேசி முடிக்கும் முன்னரே பட்டாசாய் வெடித்தார் மூர்த்தி.

“ என்ன அப்படியே இது ஜமீன்தார் குடும்பன்னு நினைப்பா?, இந்தக் குடும்பத்துக்கு இதுவே அதிகம். ஏதோ பையன் வீட்டுல வந்து கேட்டதால தான் இங்க வந்து  உங்கிட்ட பேச வேண்டியதாயிருக்கு. இல்லைனா எங்கண்ணன் இல்லாத வீட்டுக்கு நான் ஏன் வரப்போறேன். எனக்கிருந்த மரியாதையெல்லாம் என் அண்ணனோடவே முடிஞ்சுப்போச்சு” என்றார் கோபமாக.

“அச்சச்சோ! எங்க சித்தப்பாவுக்கு எவ்வுளோ பாசம் எங்க மேல” என்றாள் ரேணுகா நக்கலாக.

அவளின் பேச்சில் கோபமாகி வெளியேறச் சென்றவரைத் தடுத்தாள் மீனு.

“சித்த….” என்று எதோ பேச வந்த மீனுவை தடுத்த பாரிஜாதமோ, “நீங்கச் சொன்ன சரியாதான் இருக்கும். அடுத்து ஆக வேண்டியத பாருங்க. நீங்க யார காட்டினாலும் கீதா கட்டிக்குவா” என்றார் உறுதியாக.

தாயின் பேச்சில் மகள்கள் மூவரும் திகைத்துப் போய் நின்றிருக்க, அவர்களை ஏளனமாகப் பார்த்தபடி வெற்றிச் சிரிப்புடன் வெளியேறியிருந்தார் மூர்த்தி.

அதன் பின்பு நடந்து முடிந்த அனர்த்தங்கள் ஏராளம்.

கீதாவிற்கும் அவளின் கணவன் மோகனுக்கும் ஏறத்தாள பதிமூன்று வருட வயது வித்தியாசம். அரசு பணியிலிருந்தும், அவனுடைய தீய பழக்கத்தால் யாரும் அவனுக்குப் பெண் தர முன்வரவில்லை.

மூர்த்தி அவனிடம் வட்டிக்கு பணம் வாங்கியிருக்க, அவரிடம் பிடிவாதம் செய்து கடனைத் தர வேண்டாமென்றும் அதற்குப் பதில் கீதாவை திருமணம் செய்து வைக்குமாறும் கிட்டத்தட்ட மிரட்டியே இந்தத் திருமணத்தை நடத்தியிருந்தான் மோகன்.

மூர்த்திக்கோ இந்தச் சந்தர்பத்தை நினைத்து உள்ளம் மகிழ்ந்தது. ஒரு ரூபாய் கடன் கூடத் தான் திருப்பிச் செலுத்த தேவையில்லை என்பதால், நயமாகப் பேசிப் பாரிஜாத்தை சம்மதிக்க வைத்து, திருமணத்தையும் நடத்திவிட்டதால் ஆனந்த கூத்தாடினார்.

இந்த விஷயம் எதுவும் அறியாத பாரிஜாதமோ, மூர்த்தியின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு தன் அருமை மகளைத் தாரை வார்த்துக் கொடுத்தார்.

ஒன்றும் அறியாத கீதாவோ அந்தக் கணவன் எனப்படும் கொடியவனிடம் பட்ட துன்பங்கள் ஏராளம்.

சந்தேக பிசாசு அவன். ஆறு வயது சிறுவன் முதல் அறுவது வயது முதியோர் வரை அனைவருடனும் அவளை இணைத்துப் பேசி, ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து, உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் அவளை வதைத்தான். 

குடும்ப சூழல் கருதி அதீத பொறுமை கடைப்பிடித்த கீதாவால் ஒரு கட்டத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் போகவே தாய்வீடு திரும்பினாள்.

இங்கு வந்தும் அவளை விடாமல் வந்து தொந்தரவு செய்துக் கொண்டிருந்தான் மோகன்.

குடும்பமே நிம்மதியின்றி தவித்தது.

நடந்ததையே எண்ணிக் கொண்டிருந்தவள், நடத்துனரின் வீசில் சத்ததில் நிகழ்வுக்குத் திரும்பினாள்.

பேருந்திலிருந்து இறங்கி ஒட்டமும் நடையுமாகப் பள்ளிக்கு விரைந்தாள்.

மூச்சிரைக்க பள்ளி வளாகத்துக்குள் நுழைத்தவளை பரிதாபமாகப் பார்த்தார் பள்ளியின் காவலாளி முருகேசன்.

அவர் அந்தப் பள்ளியில் கடந்த பதினான்கு ஆண்டுகளாக வேலை செய்து கொண்டிருக்க, அங்கிருக்கும்  ஒவ்வொரு நபரைப் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருந்தார்.

அனைவரிடமும் அன்பாகவும் அனுசரனையாகவும் நடந்து கொள்ளும் மீனுவின் மீது அவருக்குத் தனி மரியாதை உண்டு.

தினமும் இப்படி அடித்துப் பிடித்து ஓடிவரும் தன் மகள் வயதை ஒத்த மீனுவை பார்க்கும்போது வருத்தப்படுவார்.

இந்த ஒரு ஜான் வயிற்றிற்காகக் கடவுள் நடத்தும் நாடகங்கள் தான் எத்தனை எத்தனை … அதில் மனிதன் போடும் வேஷம் தான் எத்தனை எத்தனை…

மூச்சிரைக்க வியர்வையில் குளித்தபடி அலுவலக அறையை நோக்கி விரைந்தாள். அங்கிருந்த பதிவேட்டில் கையெழுத்திட முனைகையில் அவள் கையிலிருந்த பேனாவை பறித்திருந்தான் கண்ணன்.

அதிர்ந்தபடி அவனை நோக்கினாள் மீனு. அவன் பேச ஆரம்பிக்க, அதைக் கேட்ட மீனுவின் கண்கள் கலங்கிப் போனது.

2 thoughts on “ஒரு தென்றல் புயலானால்-1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *